Loading

அத்தியாயம் 12

வெய்யோன், இருளைத் தின்று தன் கதிர்களால் ஒளியைப் பரப்பி உலகை விடியச் செய்து கொண்டிருந்த அதிகாலை நேரம்.

என்றும் இல்லாத அதிசயமாய் தூக்கம் வராமல் அதிகாலையிலே எழுந்து கொண்டாள் மதி. தன் அருகில் இருந்தவனைப் பார்க்க உருளாமல் பிரளாமல் தன் கைகளை தலைக்குக் கொடுத்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனையே ரசித்துக் கொண்டிருந்தவள் அதற்கு மேல் சும்மா தூக்கம் வராமல் புரள முடியாது என்று எழுந்து காலைக்கடன்களை முடித்து கீழே சென்றாள். கீழே அவள் அத்தை அப்போது தான் கறந்து வந்த பாலில் டீ போடுவதற்காக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

அவளைப் பார்த்து விட்டு ” என்னடா மதி சீக்கிரமே எழுந்துட்ட. தூக்கம் வரலயா?” என்றார் கனிமொழி.

” ம் ஆமா அத்தை. நான் வேனா ஏதாவது உங்களுக்கு உதவி பண்ணட்டா?” என்றாள் ‘முதல்ல உனக்கு சமையலறைனா என்னனு தெரியுமா?’ என்று மனசாட்சி காரித்துப்பியதை எல்லாம் துடைத்து விட்டு.

” இப்போ வேண்டாம். டீ குடிச்சுட்டு அப்புறமா சமையல் பண்ணும் போது ஏதாவது பண்ணு”.

” சரிங்க அத்தை” என்று சரி வெளியில் சென்று ” ஹாய் பாட்டி” என்று முத்தம்மாள் பாட்டியுடன் அமர்ந்து கொண்டாள்.

” ஏன்டி டீயைப் போட்டு உன் புருஷனுக்கு எழுப்பிக் குடுக்காம இங்க வந்து உட்கார்ந்துட்ட”.

” வெற்றி இன்னும் தூங்குறான் பாட்டி”.

” அடி இவளே… புருஷனை ஏலம் விடுறாப்புல பேர் சொல்லி கூப்டுட்டு இருக்குற. மாமானு கூப்டுடி” என்று அவள்‌ விரலை மடக்கி குமட்டில் குத்தினார்.

“ஸ்ஆஆ” என்று‌ கன்னத்தைத் தேய்த்தபடி பாவமாக அமர்ந்திருந்தாள் மதி.

தூக்கம் கலைந்து எழுந்தவன் தன் அருகில் படுத்து இருந்தவளை ‘ இவ எங்க போயிட்டா கானும்’ என்று அவளைத் தேடிக்கொண்டு கீழே வந்தவன் வெளியில் தன் அப்பத்தாவுடன் நடந்த சம்பாஷனைகளைக் கேட்டு ‘உனக்கு அப்பத்தா ஒரு ஆளு போதும்டி அல்லிராணி’ என்று சிரித்துக் கொண்டே வந்தான்.

கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே திரும்பியவள் அவன் சிரிப்பதைப் பார்த்து விட்டு ‘ சிரிக்கவா செய்ற. இருடா உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்’ என்று‌ நினைத்துக் கொண்டாள்.

அதன்பிறகு கனிமொழி கொண்டு வந்த டீயைக் குடித்துக் கொண்டு, “உன் மாமியா கிச்சன்ல வேலையா இருக்கால‌. நீ போய் மாட்டுத் தொழுவத்தை பெருக்கி சுத்தம் செய்டி” என்றார் பாட்டி மதியிடம்.

அதைக் கேட்டு டீ அருந்திக் கொண்டிருந்த வெற்றிக்கு புரையேறியது. ‘இந்த பாட்டி இன்னைக்கு சம்பவம் பண்ணாம விட மாட்டாங்க போலயே’ என்று நினைத்துக் கொண்டு ‘அல்லிராணி இன்னைக்கு ஒரு நாள்லே உன் கொழுப்பு குறைஞ்சுடும்டி’ என்று அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தான்.

“என்னாது!! நானா! எனக்கு பழக்கமில்லை பாட்டி” என்றாள் மதி பாவமாக.

“பழக்கமில்லாம என்ன?… வீட்டை பெருக்குற மாதிரி தான். மாடுலாம் சாதுவானது தான். நீ பயப்படாம போய் சுத்தம் செய். பின்னால தான் மாட்டுத் தொழுவு இருக்கு ” என்றார்.

“ம் சரி” என்று விட்டு ‘இந்தக் கிழவி தான் இங்க எனக்கு மாமியார் போலயே!’ என்று நினைத்துக் கொண்டு வெற்றி நக்கலாக சிரித்து கொண்டிருப்பதைக் பார்த்து விட்டு அவனை முறைத்து விட்டுச் சென்றாள்.

பின்னால் மாட்டுத் தொழுவில் மாடுகள் வரிசையாக கட்டப்பட்டிருக்க அவள் ஒரு கையில் விளக்கமாரை வைத்துக் கொண்டு ‘இதை எப்படி சுத்தம் செய்யுறது?’ என்று இன்னொரு கையில் மூக்கைப் பொத்தியபடி நின்று கொண்டிருந்தாள்.

அப்பத்தா சென்றவுடன் வெற்றி மெதுவாக பின்னால் வந்தவன் அவள் நிற்கும் நிலையைப் பார்த்து வாய் விட்டே சிரித்தான்.

அவன் சிரிப்பு சத்தத்தில் திரும்பியவள் கடுப்பாகி ” உனக்கு சிரிப்பா இருக்கா என்னைப் பார்த்தா?. இதை எப்பிடி நான் பண்ணுவேன். இதுல உன் அப்பத்தாக் கிழவி வேற இதை கிளீன் பண்ணாம போனா என் உசுர வாங்கிடும்” என்று ஏகத்துக்கும் கோவமானாள்.

” ஏன்? மாட்டுச்சாணம் அப்டித்தான் இருக்கும். இதுக்கே மூக்கை மூடிக்கிட்டா… ஆர்கானிக் வெஜிடேபிள், தானியங்கள், பயறு பச்சைனு எப்படி வரும்?. ஆர்கானிக்னு சொன்னவுடனே என்ன ஏதுன்னு அது ஒரிஜினலானு தெரியாம கூட உங்க சிட்டில வாங்க போறேங்கல?. இதை அசிங்கமா நினைச்சா அது எப்படி வரும்?” என்று பெரிய சொற்பொழிவே நடத்தினான்.

ஆனால் அவளுக்குத் தான் புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை.

” அய்யய்ய…. காலங்காத்தால உன் லெக்சரை ஆரம்பிச்சுடாத. ஆ ஊனா உங்க சிட்டி சிட்டினு சொல்லி உயிரை வாங்கிட்டு. தெரியாம கிராமத்துல வாழுறதுக் கஷ்டம்னு சொல்லிட்டேன்பா சாமி” என்று கையை தலைக்கு மேலே வைத்துக் கும்பிட்டாள்.

“சரி‌ சரி குடு நான் பெருக்குறேன். நீ தள்ளி நில்லு” என்று அவன் விளக்குமாரை வாங்கி பெருக்க ஆரம்பித்தான்.

அவனிடம் குடுத்து விட்டாளேயொழிய அவன் வேலை செய்யும் போது அவள் நிற்பது அவளுக்கு சங்கடமாக இருந்தது. மடித்துக் கட்டிய லுங்கி, வேலை செய்து உரமேறிய புஜங்கள் வெளியில் தெரிய போட்டிருந்த உள்பனியன் என வேகமாக பெருக்கி சுத்தம் செய்யும் வேலையில் கவனமாக இருந்தவனை ரசித்துக் கொண்டு ‘நல்லவன் தான்’ என்று நினைத்துக் கொண்டாள்.

“அப்பா காலையிலே தோட்டத்துக்கு போனாரு வெற்றி. நான் போய் காலைச் சாப்பாடு குடுத்துட்டு வந்துடுறேன்‌. நீயும் மதியும் சாப்பிடுங்க. அவ கூட சேர்ந்து சாப்புட்டு மெதுவா காட்டுக்கு வா போதும்” என்று கனிமொழி தன் கணவருக்கு சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குப் புறப்பட்டார்.

காலைச் சூரியன் தன் ஒளிக்கதிர்களை பயிர்களுக்குள் புகுத்தி பச்சையத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது…

தன் தோட்டத்திற்கு செல்லும் வழியில் தமிழைப் பார்த்து விட்டு அவனிடம் சென்றார் கனிமொழி.
“ஏய்யா தமிழு.. உங்க அண்ணன் கல்யாணத்துக்கு கூட வரல. உன்னை எதிர்பாத்துட்டு இருந்தோம் நானும் உங்க பெரியப்பாவும். சரி வா பெரியம்மா சாப்பாடு சேர்த்து தான் எடுத்துட்டு வந்துருக்கேன். சாப்ட வா” என்று அன்பாக உரிமையாக அழைத்தார்.

அவன் அதை எல்லாம் பொருட்டாக நினைக்காமல் ” யாருக்கு யாரு அண்ணன்.. அவன் என்ன என் கூட பொறந்தானா?.. நீங்களும் உங்க வீட்டுக்காரரும் ரொம்ப பாசம் ஒழுக பேசுற மாதிரி நடிக்காதிங்க. ஏன் நான் என்ன சாப்பாட்டுக்குத் தின்டாடிட்டு இருக்கேனா? ” என்று வார்த்தை எனும் சாட்டையால் அவர் மனதில் அடித்துக் கொண்டிருந்தான்.

தூரத்தில் இவர்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த சிவகுருவும் அங்கு வந்து விட்டார்.
” ஏலே என்னது இது. பெரிம்மாட்ட இப்படியா பேசுவ?” என்று அவனிடம் சொல்லி விட்டு “அவன் ரெண்டு நாளாக ஊர்ல இல்லை கனி. அதான் கல்யாணத்துக்கு வரமுடியாம இருந்துருக்கும்” என்று‌ தன் மனைவியை சமாதானம் செய்தார்.

“உனக்கு சாப்பாட்டுக்கு இல்லனு கூப்டல. தனியா ஆம்பளைப் புள்ளை நீயே சமைச்சு சாப்டுக்கிட்டு இருக்கியேனு தான் பாசத்துல கூப்டுதோம். உனக்கு சொந்த பந்தத்தோட ஒன்ட என்ன பிரச்சனை. ஏதோ அந்தக் காலத்துல ஊர்க்கட்டுப்பாடு அப்படி. வேத்து ஜாதி பொண்ணைக் கல்யாணம் பண்ணா ஊரை விட்டுத் தள்ளி வச்சுருந்தாங்க. ஊர் விதிமுறைக்கு நானும் உங்கப்பன் எல்லாரும் கட்டுப்பட்டவங்க தான்‌. அப்பல்லாம் நாங்க யாரும் குடும்பத்தை மீறி எதிர்த்து நிக்கல. ஊருக்குள்ள வந்து உன் குடும்பத்தை என்னைக்காவது நாங்க தரக்குறைவா நடத்தியோ இல்லை ஒதுக்கி வச்சோ பாத்துருக்கியா?. சரி மனக்கஷ்டம் இருக்க தான் செய்யும். அதுக்காக இப்டியேவா ஒதுங்கி இருக்கப் போற?. எப்பவும் முறைச்சுட்டு வெறச்சுக்கிட்டு எதுக்கு அலையுற?” என்றார் சிவம் கண்டிப்பு கலந்த பாசத்துடன்.

அவனுக்கு அதுவே அதிகாரமாய்த் தெரிந்தது.  ” நான் கஷ்டப்படுறேன் எப்டியோப் போறேன். உங்களுக்கு என்ன?. இனிமேல் என்‌ விஷயத்துல தலையிடாதிங்க” என்றான் கோவத்தோடு.

அப்போது வேகமாய் ஓடி வந்த வெற்றி, தமிழின் சட்டையைப் பிடித்து “ஏன்டா இப்படி பண்ண?.  எப்பயோ கோவத்துல சண்டையானதுக்கு இப்போ பழி தீத்துக்குறியா?. இதுனால பாதிக்கப்பட போறது நீயும் தான். என்ன காரியம் பண்ணி வச்சிருக்க” என்று அவனை அடிக்க ஆரம்பித்து விட்டான்.

வெற்றி வந்து அவன் சட்டையைப் பிடித்ததிலே அதிர்ந்திருந்தவர்கள் அவனை விலக்கி ” அய்யா வெற்றி… அம்மாவும் நானும் சும்மா தான் பேசிட்டு இருந்தோம். ஒரு பிரச்சனையும் இல்லை. விடுங்க… விடுங்க டா ரெண்டு பேரும் என்று கனிமொழியும் அவரும் விலக்கி விட போராடிக் கொண்டிருந்தனர்.

இரத்தம் சுண்டிப்போன வயதானவர்களால் இரத்தம் சூடாகக் கொதித்துக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டுக் காளை போல் முட்டி மோதிக் கொண்டிருக்கும் இரு காளையவர்களைப் பிரிக்க முடியாமல் திணறினர். பிறகு அக்கம் பக்கத்து தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருப்பவர்களும் வந்து இருவரையும் பிரித்தனர்.

“என் மேலயே கையை வச்சுட்டேல. இனி நீ எப்படி அந்த நிலத்துல வேலை செய்யுறனு நானும் பாக்குறேன்டா. என் மொத்த சொத்தும் போனாலும் பரவாயில்லை. உன்னை நான் ஜெயிக்க விடமாட்டேன்” என்று அவனைப் பிடித்திருந்த எல்லாரையும் உதறித் தள்ளி விட்டுக் கோவமாக அங்கிருந்து சென்றான் தமிழ்.

” உன் கண்ணு முன்னாடியே அந்த நிலத்துல வெள்ளாமை போட்டு நல்ல விளைச்சல் எடுக்கல என் பேரு வெற்றி இல்லடா” என்று இவனும் சவால் விடுத்தான்.

அதன் பிறகே, பிரச்சனை இப்போது நடந்த சம்பாஷனைக்கு இல்லை. வேறு ஏதோ பெரிய விஷயம் நடந்திருக்கிறது என்று புரிந்தது கனிமொழிக்கும் சிவகுருவுக்கும்‌. வெற்றியைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்திருந்தனர். அவனுக்கு இன்னமும் நடந்ததைக் கேட்டதை மறக்க முடியவில்லை‌. உள்ளம் உலைகனலெனக் கொதித்துக் கொண்டிருந்தது.

” வெற்றி என்னது இது கை ஓங்குற பழக்கம்?. எதுலயும் நிதானம் வேனும். ஏற்கனவே வெறச்சுக்கிட்டு அலையுறவனை நீயே கொம்பு சீவி விடுற மாதிரி பண்ணா என்ன பண்றது?” என்றார் சிவகுரு. இதற்கு முன் மனதை அமைதிப்படுத்த முடியாத அளவுக்கு இத்தனை கோவத்துடன் கண்டிராததால். ஆனால் விஷயம் பெரிதாக இல்லாமல் இவ்வாறு கோவப்பட மாட்டான் என்றும் நம்பிக்கை இருந்தது மகன் மேல்.

“அப்பா அவன் என்ன பண்ணி வச்சுருக்கானு தெரியுமா உங்களுக்கு. சும்மா எதுவும் தெரியாம அவனுக்கு சப்போர்ட் பண்ணாதிங்க. நம்ம மேலக்காடு பக்கத்துல இருக்குற அவன் நிலத்தை ஏதோ அட்டை தயாரிக்கிற கம்பெனிக்கு விலை பேசிட்டு வந்துருக்கான். அங்கே அட்டைக் கம்பெனி வந்தா அதோட கழிவு நிலத்தையே பாழாக்கிடும்பா. அந்த நிலத்தை இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா தரத்தை உயர்த்திட்டு இருக்கேன். இப்போ போய் இப்படி பண்ணிட்டான்பா. அது நம்ம நிலத்துக்காக மட்டும் சொல்லல. அந்தக் கம்பெனியோட கழிவுகள் நிலத்துல இறங்கி சுத்தி இருக்குற எல்லா விவசாய நிலத்தையும் பாழாக்கிடும். அவன் என் நிலத்தை பாழாக்கனும்னு நினைச்சு அவனோட விவசாயத்தையும் தான்பா பாழாக்கப் போறான். யானை தன் தலைல தானே மண்ணை அள்ளிப் போட்டுக்குற மாதிரி இவன் அவன் பொழப்புலே மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டான். விவசாயத்தைத் தவிர இவனுக்கு என்னப்பா தெரியும் ” என்றான் வருத்தமாய் ஒன்றும் செய்ய முடியாத இயலாமையில்.

” என்னய்யா சொல்ற வெற்றி!” என்று இருவரும் திகைத்தனர்.

“அவன் ஏதோ புரியாம செய்றான். உன் மேல உள்ள கோவத்துல பண்ணிருப்பான். நான் வேனா அவன் கிட்ட பேசுறேன்” என்றார் சிவகுரு. அவர் குரலில் வருத்தம் மேலோங்கியிருந்தது.

” அவனுக்கு என் மேல என்னப்பா கோவம். அவன் கிட்ட இதுவரைக்கும் நானா எந்த வம்புக்கும் போனதில்லை. உங்களுக்காக அவன் என்ன மொறச்சுட்டு அலையும் போதும் அமைதியா தான் இருந்துருக்கேன். ஒரு தடவை கோவத்துல கை வச்சதே போதும்னு” என்று அவன் நினைவுகள் தமிழுக்கும் அவனுக்கும் பிரச்சனை ஆரம்பித்த தினத்திற்குச் சென்றது.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  5 Comments

  1. வீட்டில் அடங்காத அல்லிராணியையும், வெளியில் தமிழையும் சமாளித்து தனக்குள் இருக்கும் காதலையும், தன் கனவு நிலத்தையும் மீட்பானா வெற்றி எதிர்பார்ப்புடன்…

  2. வெற்றிக்கும், தமிழுக்கும் ஆகாது, எல்லாரும் தமிழையே சைட் அடிச்சா குழலி மனசு நோகாது?

  3. Yen darlu ipdi pannuna rmba naal kaluchu unna pakuren disappoint pannitiye ma… Poma

  4. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.