Loading

  அத்தியாயம்-2

சிவந்த வானத்தில் தன் புஜங்களை சுருக்கி தனக்குள் புதைத்து வைத்திருந்த ஒளிக்கதிர்களை ஆகாயத்தில் படர விட, காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்த கதிரவனின் கடைக்கண் பார்வையில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் மந்திர தாரகை அகப்பட்டாள். 

இருள் முழுவதும் தன்னுள் எழுந்த பாசமும் ஏக்கமும் முற்றிலும் போய், கோபமும் ஏமாற்றமும் அவள்  முகத்தில் பிரதிபலித்தது. ஏன் இப்படி ஒரு மாற்றம், இந்த இருபத்தி ஒரு ஆண்டுகளாக தான் அனுபவிக்கும் இந்த நிலை தனக்கு வரமா? சாபமா? என்று தன்னுள் எழும் கேள்விக்கு பதில் தெரியாது தகிக்கும் தேகத்தை தாளாது, நீராட அவளுக்கென பிரத்யேகமான அமைத்திருந்த அந்த மாய நீராவி ஊற்றுக்கு வெண்பாதம் நோகாமல் மின்னல் வெட்டும் நொடியில்  அவ்விடத்தை அடைந்தாள். 

அவள் ஊற்றை அடைய சந்திரவாசி பறவை ஒன்று அவள் தோளில் உரிமையாக தவிழ்ந்தது. தன் பொன்னிற மேனியை கண்ணிமைக்கும் நேரத்தில் சந்திரவாசி பறவையாக உருமாற்றி அந்த பறவையை தொடர்ந்தாள் மந்திர தாரகை. சிறிது நேரம் ஜோடியாக விளையாண்ட அவ்விரு சந்திரவாசி பறவைகள் இறுதியில் தங்களது உண்மையான உருவத்திற்கு உருமாறினர்.

“மந்திரா உனை வெல்ல யான் எடுக்கும் முயற்சி எல்லாம் வீணாய் போனாலும். என் மனம் ஏனோ உனை என்றாவது ஒரு நாள் வென்றே தீருவேன் என்று முட்டி மோதுகிறது என் மனம்” என்று அங்கதன் மொழிந்தான். 

“தங்களை தவிர என்னை சீண்டவோ தீண்டவோ இப்பவளக்கரையில் யாரேனும் உண்டோ?” என்று முத்துபல் தெரிய சிரித்தாள் மந்திர தாரகை. 

“மந்திர தந்திரங்களின் முடிச்சூடா அரசியை நெருங்க இம்மாய நகரத்தில் எவருக்கு துணிச்சல் இருக்கும் மந்திரா” என்று தன் காதலின் முழுத்தொகுப்பை கண்ணில் தேக்கி நின்றான் அங்கதன்.  

“தங்களது மையலுக்கு சொந்தகாரியாக பெருமை கொண்டாலும் இந்த இருபத்தியொரு வருடங்களாக என் சாபத்தால் தங்களை நெருங்க முடியாத பாவியாக நிற்கும் எனக்கு எப்போது தான் விமோச்சனம் கிடைக்கும் மன்னா?” என்று பரிதவித்தாள் மந்திர தாரகை.

“காலம் கரைந்துவிட்டது மந்திரா இன்னும் மூன்று நாளில் மாயக் கதவு தன் சக்தியை இழந்து இருபத்தி ஒரு நிமிடம் அவர்களுக்காக திறக்கவிருக்கிறது. அனைத்தும் நன்மைக்கே என்னவளின் இளமை கண்டு குளிர்ந்த என் கண்களுக்கு சில காலம் முதுமையின் பேரழகை தரிசிக்க காரணமான மாயலோக தேவி காலராட்ரிக்கு தான் நன்றி கூற வேண்டும்” என்று மையலுடன் கூறினான். 

“அரியாசனம் மேல் கொண்ட மோகத்தை விட என்மேல் கொண்ட மையல் பெரியது என்று ஒவ்வொரு முறையும் தாங்கள் என்னிடம் நிரூபித்து, தங்களது காதல் நான் கொண்டதை விட ஆழமானது என்று சுட்டி காட்டி தங்கள் மேல் என்னை இறுமாப்பு அடைய வைக்கிறீர்கள்” என்று பதில் பேசினாள் தாரகை. 

அவள் கண்ணோடு கண்ணை கலந்தவர், “மந்திரா விரைவாக நீராடி வா பூஜைக்கு நேரம் நெருங்கி விட்டது. நாம் மக்கள் அனைவரும் நமக்காக காத்திருப்பார்கள்” என்று கூறி செல்ல அவளும் அதை ஏற்று நீராட ஆரம்பித்தாள் அந்த மாய ஊற்றில். 

சூரியன் அஸ்தமித்து சில மணி நேரத்தில், சுயமாக ஒலி எழுப்பும் அந்த மாய மண்டபம் தன் பணியை செய்ய தயாரானது. சரியாக அவர்கள் அதை  நெருங்க அது ஏழு சுவரங்களை அங்கிருப்பவர்களின்  செவிக்கு விருந்தாய் ஒரு இனிய ஓசையை கொடுத்தது. அதை ரசித்தவாறு பறக்கும் குதிரையில்  மாய நகரத்தின் சேனையின் பாதுகாப்பில் வந்து இறங்கினர் அங்கதனும் மந்திர தாரகையும். 

இருவரும் இறங்கிய மறுநொடி பூஜைக்கு தேவையான அலறி மலர்கள் காற்றில் பறந்து வந்தது அவர்களை நோக்கி. அங்கிருந்த மக்கள் தங்கள் கையில் இருந்த கூடையை அப்பூவை நோக்கி காட்ட, அது பாந்தமாக அவ்விடத்தை அடைந்தது. 

சரியாக மண்டபத்தில் பொழிந்த இசை நிற்க, வியன்சினையா அங்குமிங்கும் தன் இறக்கையால் பறக்க, அதை கண்ட மந்திரா, “கற்கி உன்னை ஆள பிறந்தவள் இன்னும்  சொற்ப காலத்தில் உன்னை அடக்கி பவளக்கரையை அரசாள வரவிருக்கிறாள்” என்றதும். 

தன் ஒற்றை கொம்பால் மிதந்து கொண்டிருந்த கார்முகிலை குத்தி கிழிக்க, கனப்பொழுதில் மாரி பொழிய அதன் நடுவே நின்று ஆதவனின் ஒளி தன் கொம்பில் படற விட, அங்கு அழகாய் இந்திரவில் ஒன்று உருவானது. 

அதை கண்ட மக்கள் அனைவரும் “இளவரசி மைவிழி வாழ்க! வாழ்க! மாய நகரத்தின் காவல் தேவி வாழ்க! வாழ்க!

பவளக்கரையின் முடிசூடா அரசி மைவிழி வாழ்க! வாழ்க!” என்று முழக்கமிட்டனர். 

இவை அனைத்தையும் ஒரு பார்வையாளராக மட்டும் கண்டு கழித்த தாரகை, தன் வழமையான பூஜையை மாயலோக தேவி காலராட்ரிக்கு செய்ய ஆரம்பித்தாள். 

இதே போல் இருபத்தி ஒரு ஆண்டிற்கு முன் தன் தங்கையுடன் கலந்து கொண்ட பூஜை நினைவிற்கு வர அதை புறம் தள்ளி முழுமையாக பூஜையை முடித்து வந்தாள் மந்திர தாரகை. 

தன் மக்களுடன் இன்று பேச வேண்டும் என்று முடிவு செய்தவள் கண்ணை மூடி திறக்க அனைவரும் பவளக்கரையின் ஆலோசனை கூடத்தில் இருந்தனர். கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கூட தான் கடந்த வந்த நாட்களை நினைத்து பார்த்தாள்.  இம்மாய நகரத்திற்கு மன்னன் என்று பெயரளவில் மட்டுமே அங்கதன் பொறுப்பு வகித்தான்.

ஆறு தலைமுறையாக பெண்கள் ஆட்சி செய்யும் நகரம் இது. தனக்கு பின் இங்கு பொறுப்பேற்கும் உரிமை அவளை தவிர வேறு யாருமில்லை. தனது பதவியை இருபத்தியொரு ஆண்டுகளுக்கு பின்பு அவள் தான் வகிக்க போகிறாள் என்று அன்றே அறிவித்திருந்தாள். அதை அவர்களுக்கு நினைவு படுத்தும் விதமாக தான் அவர்களை இங்கு அழைத்து வந்திருந்தாள்.

அங்கு வந்ததும், “கால காலமாக ஆண்டு வரும் தாரகை தேவி வாழ்க! வாழ்க!” என்று முழக்கமிட்டனர். 

அனைவரையும் இருக்கையில் அமர கூறி பேசினாள், “இன்னும் மூன்று நாட்களில் தங்களது அடுத்த அரசி உங்களை ஆள நம் பவளக்கரைக்கு தரிசனம் தரவிருக்கிறாள். மூவேழு வருடங்களாக நம்மை காக்க வைத்தவளை, இதற்கு மேலும் நாம் இழந்து விடக்கூடாது” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போது அசரீரி ஒன்று ஒலித்தது.  

“மூவேழு நிமிடங்கள் 

மூவேழு வாயில்கள் 

மந்திர தந்திர சாஸ்திரத்தின் 

கட்டுப்பாடின்றி தன் 

சுயத்தில் கழிக்க!

மூவேழு வயதொத்த 

மாயநகர மாயோள் 

தன் மாறனின் பிடியில் 

ஈர் மென்னுயிருடன் 

மாய நகரத்திற்குள் 

பிரவேசிப்பர்!” என்று ஒலித்து அடங்கியது. 

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மக்கள் கூட்டம் ஆரவாரம் செய்ய தொடங்கியது.

“அவை கலையட்டும், மூன்றாம் நாள்   ஏழு பிரதான வாயில்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போட ஏற்பாடு செய்துள்ளேன். மாயகன்னிகள் வரும் வேளையில் எவரும் வெளியே வர வேண்டாம். அன்று முழுவதும் மாய நகர மக்கள் வாசஸ்தலம் விட்டு வெளியேற வேண்டாம். தற்போது அனைவரும் அவர் அவர் உறைவிடம் நோக்கி செல்லலாம்” என்று அங்கதன் பேச அதுவே சரி என்பது போல அமர்ந்திருந்தாள் மந்திர தாரகை. 

“மந்திரா பவளக்கரை விட்டு செல்ல நேரம் வந்து விட்டது. நமது மாயபுரி வம்சத்தை காக்க மைவிழி வந்து விட்டாள். அவளிடம் நடந்ததை கூறி பொறுப்பை கொடுத்து விட்டு, நாமும் நமது ககனம் தேசம் சென்று நம் மூதாதையருடன் நமது மீதி வாழ்வைக் கழிக்கலாம்” என்று அவளை பார்த்தான். 

“எமது இக்கட்டான நேரத்தில் என்மேல் துளியளவு காதல் குறையாது மையல் கொள்ளும் தம்மை தவிர வேறேதும் இனி எமக்கு பெரியதாக தெரியவில்லை. மாயதேவியின் கூற்று படி நம் கடமை முடிந்ததும் ககனம் தேசம் சென்று வாழ்வோம் நாதா” என்று பேசினாள். 

“என்ன! நீ தனியாக உன் மரணத்தை தேடி வரவில்லையா? துணையுடன் வந்து கூட்டமாக செல்லவிருக்கிறாயா?  நடக்கவிருப்பதை காண எமது மனம் கூக்குரலிடுகிறது. விரைவில் பவளக்கரையின் ஆட்சியை கைப்பற்றி மாயவிளாம் வம்சத்தை நிலை நாட்ட இந்த வாதவேகன் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வேன்” என்று மாயக்கோட்டையே அதிரும் படி கத்தியவன், “இன்னும் மூன்று நாட்கள் தான் சரியாக மாயவாயில் திறக்கும் நேரம் இந்த மாயசிறையில் இருந்து எனக்கு விடுதலை கிடைத்து விடும் எல்லாவற்றிற்கும் சேர்த்து அன்று எமது வன்மத்தின் வேகத்தையும் எனது விவேகத்தையும் தாளாது மாயபுரி வம்சம் அழிவதை என் கண் குளிர காண தவமிருக்கின்றேன்” என்று தானாக பேசிக் கொண்டிருந்தவனிடன் எங்கிருந்தோ பறந்து வந்த பைரி  மாயக்கயிறை போட்டு, நிற்காது பறந்து விட்டது. 

யார் அந்த பைரி உருவத்தில் இங்கு வந்தது என்று தெரியாது அது போட்டு சென்ற கயிறை கையில் எடுக்க, அதன் சக்தி தாங்காது பத்தடி தூரம் தூக்கி அடிக்கப் பட்டான் வாதவேகன்.

“என்ன இது யாரு என்னை தாக்க என் கோட்டைக்கே வந்தது, தாரா உம்மை தவிர வேறாரும் வந்திருக்க முடியாது. இந்த கயிறு இங்கிருக்கும் வரை என்னால் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்து தவறிழைத்து விட்டாய். இதற்கு நிச்சயம் நீ பதில் சொல்லியே ஆகவேண்டும்” என்று கத்தியவன் கண்ணை மூடி மந்திரங்களை கூற ஆரம்பித்தான். 

மந்திரத்தை அவன் கூறி முடிக்க, அந்த கயிறு ஆந்திரத்தில் மிதந்து அவன் கைகளில் தானே வந்து சரணடைய, கோட்டையே இடியும் அளவிற்கு சிரித்தான் வாதவேகன்.

“அன்றிருந்த அதே வாதவேகன் அல்ல நான், விரைவில் எனது விஸ்வரூப வளர்ச்சியை கண்டு நீ அடைய போகும் அதிர்ச்சியை நினைக்க நினைக்க மனதிற்கு இனிமையாக இருக்கிறது தாரா” என்று மாயக் கண்ணாடியில் தன்னை பார்க்க, உரமேறிய தேகம் முழுவதும் தகிக்க ஆரம்பிக்க மார்பின் இடது புறம் அக்னி கொழுந்துவிட்டு எரிவது போல மாயமாக தோன்ற, “என்னை வேண்டாம் என்று சொல்லி தவறிழைத்துவிட்டாய் தாரா? உன் வாரிசை அழித்து ஆட்சி பிடிப்பேன் அல்ல அவளை அடைந்து சிம்மாசனத்தை பிடிப்பேன் தாரா” என்று கண்ணில் குரோதத்துடன் அவ்வறைக்குள் உழன்றான்.

நித்திரையில் இருந்து விழித்த ஆழினி யோசனையில் உழன்றாள். ‘யாரோ என்னை அழைத்தது போல் இருந்ததே யாராக இருக்கும் அதுவும். கனாக்கண்டு விழித்திருப்போம்’ என்று அதிகம் யோசிக்காது தன் காலைக் கடனை முடித்து, நீராடி பட்டுடுத்தி, இடைவரை நீண்ட கார்குழலை மாடத்தில் நின்று உலர்த்த, பதுங்கி பதுங்கி குதிரையில் திருட்டு விழிகளை உருட்டி முன்னேறிய வாலிபனை கண்டாள். 

யாரிவன் இவ்வாறு ஒளிந்து செல்ல காரணம் என்ன என்று அவன் செய்கையை அங்கிருந்து கண்காணித்தாள் ஆழினி மைவிழி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  6 Comments

  1. சூப்பர் அக்கா😍😍😍😍 இந்த வாதவேகன் ஏன் இப்படி சிரிக்குறான் இவன் சிரிக்குற சிரிப்புக்கு ரெண்டு காதும் வெடிச்சு ரத்தம் வந்திடும் போலையே🤕😑 அங்க ஊரே இந்த பொண்ணுக்காக வெயிட் பண்ணுது இப்போ தான் இவளுக்கு கனவா நினைவான்னு டவுட்டு வருது🤭🤭.

   1. Author

    அவன் வில்லனாம் அது தான் இப்படி சிரிக்கிறான். அந்த பொண்ணே பாவம் confuse ஆகிருச்சு 🤣🤣🤣🤣🤣🤣

  2. சூப்பர் சூப்பர் அப்டேட் சுபா பேபி. பெயர் செலக்ஷ்ன் செம 🤩🤩🤩 இந்த வாதவேகன் தான் வில்லனா!! கண்டிப்பா உன்னால எதுவும் பண்ண முடியாது. மந்திரா ஓட தங்கையா ஆழினி!!! பார்க்கலாம். அந்த பையன் ஒரு வேளை நம் கதாநாயகனாக இருக்குமோ??😉😉

   1. Author

    நனி நன்றி செல்லக்குட்டி.