Loading

அத்தியாயம் 35

“மோளே…” அன்விதா தனது பையில் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, கல்யாணியின் குரல் கேட்டுத் திரும்பினாள்.

அவரைக் கண்டதும் நெஞ்சம் குமுறியது.

“முத்தச்சி…” என்றவள், பின் நினைவு வந்தவளாக “நேத்தே வாங்கிட்டேன். குடுக்க மறந்துட்டேன்.” என ஒரு கவரைக் கொடுத்தாள்.

அதில் கல்யாணி தினம் எடுத்துக் கொள்ளும் மாத்திரை, மருந்துகள் இருந்தது.

மாதா மாதம், அவருக்காக நினைவு வைத்து வாங்கி விடுவாள். அதனை விழி கலங்க வாங்கிய கல்யாணி, “புறப்பட்டோ? (கிளம்பிட்டியா?) எனத் தவிப்பாகக் கேட்க, அவள் கீழுதட்டைக் கடித்து நின்றாள்.

அமையாவைப் பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு, அகமொழியின் வீட்டிற்குச் செல்லும்படி உத்தரவிட்டிருந்தான் அர்ஜித்.

“ஒரு வாக்கு (வார்த்தை) முன்னே பரஞ்சிரிக்காயிருந்தில்லே…” கல்யாணி கேட்டதில் அவள் கண்ணில் நீர் பெருக அவரைப் பார்க்க, “ஞங்களைக் கஷ்டப்படுத்தான் பாடில்லாந்தானோ பரயாதிருந்தது?(எங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு சொல்லலையா)” எனக் கேட்டவரின் குரல் உடைந்தது.

“நான் உண்மையா பாசம் வச்சவரு என்னைக் காயப்படுத்தின மாதிரி, என்மேல பாசம் வச்சவங்களைக் காயப்படுத்தக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா இப்ப என்னால எல்லாருமே காயப்பட்டு தான் நிக்கிறீங்க…” அழுகை பொங்கியது அவளுக்கு.

“நின்னை இவிடே ஞங்கள் மருமகளாய் நோக்கியில்லா மோளே… ஞங்களுட மகளாய் தன்னே கண்டது.

நீ சாந்தமாய் (அமைதியா) சிரிக்கனதினு பின்னில் உள்ள வேதனை எந்தானெந்து இப்ப மனசிலாவுந்து(இப்ப புரியுது). நீயும் அமையாவும் இல்லெங்கில் ஈ வீடு வீடாய் இரிக்கில்லா மோளே.

நிங்கள் இல்லாத்த வெற்றிடம் வளரே வேதனிக்கும். பட்சே, நின்னை இழுத்துப் பிடிச்சு நிக்கான் வைக்கினதில் எனிக்கு இஷ்டம் இல்லா.(நீங்கள் இல்லாத வெற்றிடம் ரொம்ப வேதனைக் கொடுக்கும். ஆனா, உன்னை இழுத்துப் பிடிச்சு நிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்ல)

இப்போ வரை தன்டே தெற்றை (தப்பை) சம்மதிக்காத விஷ்ணுவுடே காரியம் என்னைப் பேடிப்பிக்குந்து.(பயமுறுத்துது)”

கசந்த முறுவல் பூத்தவள், “எனக்குப் பயம் எதுவும் இல்ல முத்தச்சி. மிஞ்சிப் போனா டைவர்ஸ் கிடைக்க விடாம செய்வாரு, அவ்ளோ தான. இல்ல அமையாவை என்கிட்ட இருந்து பிரிச்சிடுவாரா? ம்ம்ஹும், அவரை நம்பி எல்லாம் அமையா தனியா போக மாட்டா. அவளுக்குப் பேச்சு தான் சரியா வராது. ஆனால், நல்லாவே கவனிப்பா… அப்பான்ற அன்பை இந்த ரூமுக்குள்ள ஒரு நாளும் அவர் அவளுக்குக் கொடுத்தது இல்ல முத்தச்சி. அதுக்கும் என்னை மட்டும் தான் காரணமா சொல்லுவாரு. சரி அதுக்கான காரணம் நானாவே இருந்துக்குறேன். ஆனா என்னால இங்க இருக்க முடியல முத்தச்சி… மூச்சு முட்டுது…” எனக் கலங்கினாள்.

“நீ இவிடே இரிக்கான் பாடில்லாந்து, நீ ஆ பெண் குட்டியோடு எல்லாற்றையும் பரயும்போதே முடிவு செய்து மோளே…(நீ இங்க இருக்கக் கூடாதுன்னு நீ அந்தப் பொண்ணுகிட்ட எல்லாத்தையும் சொல்லும்போதே முடிவு செஞ்சுட்டேன்)” கல்யாணி தீர்க்கமாகக் கூற, அன்விதா திகைத்து நிமிர்ந்தாள்.

“முத்தச்சி?”

“நீ அகமொழியோடு அந்து (அன்னைக்கு) ராத்திரி பேசியது எல்லாம் ஞானும் கேட்டு…” வலி நிறைந்த வதனம் அப்பட்டமாகத் தெரிந்தது, அந்தச் சுருங்கிய சருமத்தில்.

அன்விதா கன்னத்தில் வழிந்த நீருடன் அவரைப் பார்க்க,

“கவலைப்படாதே மோளே. எல்லாம் நல்லபடியா நடக்கும்! இவிடே நிங்களுக்கு எதிராய் யார் இருந்தாலும், ஞான் இரிக்கும் மோளே.

தைரியத்தை விடாதே. எவிடே போயாலும் நீயும் அமையாவும் என்னை மறக்கில்லா அல்லே?” பெரியவரின் கண்கள் யாசகமாய் தவிக்க, அவரைக் கட்டிக் கொண்டவள் கேவி அழுதாள்.

“விஷ்ணு புறத்து போயிரிக்கினு.. அவன் வந்ததும் இதினும் பிரஸ்னம் உண்டாக்கும். வேகம் கிளம்பு அன்வி…(விஷ்ணு வெளில போயிருக்கான். அவன் வந்ததும் இதுலயும் பிரச்சினை செய்வான். வேகமா கிளம்பு)” என்றதில், கண்களைத் துடைத்துக் கொண்டவள்,

“முத்தச்சி… எல்லா தப்பும் விஷ்ணு தான பண்ணாரு. அகா திரும்பவும் இந்த வீட்டுக்கு வரணும்.” என்றாள் ஆதங்கமாக.

அதில் சட்டென அவர் முகம் இறுக, “வாய் ஒக்கே (எல்லாம்) நந்தாய் தன்னே சம்சாரிக்குந்து அவளு.

பட்சே அவள் பரஞ்ச நுணயே (பொய்ய) எங்கனே ஏல்க்கான் பற்றும் (ஏத்துக்க முடியும்) மோளே.

அவள் பேச்சை விஸ்வசிச்சது (நம்புனது? எத்தர பெரிய முட்டாள்தனம்… என்டே மருமகளை மனசளவிலு கஷ்டப்படுத்தியால், ஞான் எங்கனே மிண்டாதிரிக்கான் (அமைதியா இருக்க) பற்றும்.

ப்ச், எந்தோ… ஒருத்தன் அவன்டே தலையில் அவன் தன்னே மண்ணள்ளி இட்டிரிக்குனு(போட்டுக்கிட்டான்).

இன்னொருத்தனு ஞங்களே மண்ணள்ளி இட்டு வச்சு… (இன்னொருத்தனுக்கு நாங்களே மண்ணை போட்டாச்சு)

நிங்கள்டே ஜீவிதம் நந்தாயிரிக்கணம்னு விசாரிச்சால் இங்கனே… இங்கனே விஷ்ணு ஒரு பக்கம் ஏமாற்றி வேதன கொடுத்தால், அவள் ஒரு பக்கம் நந்தாயி செய்து… (உங்களோட வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு நினைச்சா, இப்படி விஷ்ணு ஒரு பக்கம் ஏமாற்றி வேதனை கொடுத்தால், அவள் ஒரு பக்கம் நல்லா செஞ்சுட்டா)

காசுக்காக தன்னே கல்யாணம் செய்தேன்னு திமிரா பரயனவளை எனிக்குப் பிடிச்சில்லா மோளே. இதை விடு…” எனப் பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தவரை வருத்தமாகப் பார்த்தாள் அன்விதா.

கேசவ நாயர் தனது அறையில், சாய்வு நாற்காலியில் முகம் முழுக்க வேதனை சுமந்து அமர்ந்திருந்தார்.

“அன்வி புறப்பட்டோ?”

அக்கேள்வியில் குபுக்கெனக் கண்ணீர் வழிந்தது கல்யாணிக்கு.

“எனிக்கே தாங்கான் பற்றுனில்லா(தாங்க முடியல)… சுஜாதா எங்கனே? மனசினு வளரே கஷ்டமாய் இரிக்குனு.”

“கைக்கு கிட்டிய வைரத்தை விஷ்ணு நஷ்டப்படுத்தி (தொலைச்சுட்டான்) கல்யாணி… நம்மளும் தன்னே!” கேசவ நாயரின் முகம் கசங்கிப் போனது.

———–

அர்ஜித் அகன், அன்விதாவை அழைக்க வீட்டிற்கு வந்தான். கோபால கிருஷ்ணன், ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவருக்கு, அவளை அனுப்பவும் மனமில்லை. இங்கு இருக்கச் சொல்லவும் விருப்பமில்லை. விஷ்ணு, இந்த அளவு தரம் தாழ்ந்திருப்பதை எண்ணித் தந்தை உள்ளம் பரிதவித்தது.

“அர்ஜி… அன்விய சென்னைக்கு அயிக்கான் போகுவானோ? (அனுப்ப போறியா?)” தயக்கமாகக் கேட்டார்.

“இல்லச்சா… அவள் வீட்டில் இருந்து எப்ப வேணங்கிலும் பிரஸ்னம் (பிரச்சினை) செய்யான் வரும்.”

“ம்ம் சமாளிக்காம். வேற வழி இல்லா… யார் சப்போர்ட் செய்தாலும் செய்தில்லெங்கிலும், விஷ்ணு செய்த காரியத்தினு ஞான் அவளை தீர்ச்சயாயும் (கண்டிப்பா) சப்போர்ட் செய்யும்.

அச்சன் தன்னே எந்தா விசாரிக்கனதெந்து அறியுனில்லா. ராவிலே தொட்டு ரூமை விட்டே வந்தில்லா…(அப்பா தான் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியல. காலைல இருந்து ரூம் விட்டே வரல)”

அர்ஜித் அனைத்தையும் காதில் கேட்டு விட்டு, “ம்ம்” என்றவன், “அமையாவை பிக்கப் செய்யான் லேட் ஆயி அச்சா… அன்வி ரெடி அல்லே?” எனக் குரல் கொடுத்ததும் அவளும் தனது உடைமைகளுடன் வெளியில் வந்தாள்.

அவளைக் கண்டு வேதனையில் கலங்கிய கோபால கிருஷ்ணனுக்கு வார்த்தைகள் வரவில்லை.

“போறேன் அச்சா…” குரல் கம்மக் கூறியவள் சுஜாதாவைத் தேடினாள்.

அவர் வெளியிலேயே வரவில்லை.

“அம்மே…” அவள் ஆரம்பிக்கும்போதே “டிவோர்ஸ் கிட்டியதும் நீ ஆற அமர எல்லாரோடும் பரஞ்சோ அன்வி.” எனத் திட்டவட்டமாக உரைத்த அர்ஜித் அகன், தாயின் அறைக்கதவை ஒரு முறை ஏறிட்டான்.

சுஜாதா கதவில் சாய்ந்து கண்ணை மூடி நின்றிருந்தார். பெற்ற மகளைப் போல அல்லவா அவள் மீது பாசம் வைத்தார். அன்று அகமொழியிடம், அன்விதா பேசியதைக் கேட்டதில் இருந்தே அவருக்கு இதயம் நச்சு நச்செனக் குத்திக் கொண்டிருந்தது.

அன்று இரவு, நீர் எடுப்பதற்காக வெளியில் வந்த கல்யாணி தோட்டக் கதவு திறந்திருப்பதைக் கண்டு அருகில் வர, வந்தவர் அன்விதாவின் பேச்சில் சிலையாகி விட்டார். அந்நேரம் சுஜாதாவும், வாசற்கதவை மூடிய நினைவில்லாது ஒருமுறை அதனைச் சோதிக்க வந்தவர், பின் கார் பார்க்கிங்கில் விளக்கு எரிவதைக் கண்டு அதனை அணைக்க கதவைத் திறந்தார். கார் பார்க்கிங்கின் பக்கவாட்டு வழியாகவும், அடுக்களைப் பக்கம் இருக்கும் தோட்டத்தை எளிதில் அணுக இயலும்.

குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அமைதியில், அன்விதா பேசியதை எல்லாம் சுஜாதாவும் கேட்டிருந்தார்.

ஆனால், சுஜாதா கேட்டதைக் கல்யாணி பார்க்கவில்லை. சுஜாதாவும் கல்யாணியைப் பார்க்கவில்லை.

இரவு முழுதும் உறங்காமல், தத்தம் துணையிடம் புலம்பித் தீர்த்தனர் பெரியவர்கள்.

அதற்கு அடுத்த நாள் அன்விதாவிடம் இதனை எப்படிக் கேட்பது என்ற குழப்பத்திலேயே மனம் சரி இல்லாது கோவிலுக்குச் சென்று விட்டனர். அன்று தான் விஷ்ணு அன்விதாவை அடித்ததும். அமையாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும்.

பின், அகமொழியின் கிளாம்பிங்கை இடித்த அன்று காலையில், இதே நினைவில் இருந்த சுஜாதாவிற்கு இரத்த அழுத்தம் அதிகமாக, நெஞ்சம் படபடவெனத் துடிக்க அடுக்களையில் சரிந்து அமர்ந்து விட்டார்.

அர்ஜித் சீக்கிரமாகவே வேலைக்குக் கிளம்பி இருந்தவன், சுஜாதா அடுக்களையில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டு பதறி அருகில் சென்றான்.

“எந்து பற்றி மா? ஏன் இங்கனே வியர்த்து போயிரிக்கின? எனிக்கு… எந்து செய்யுந்து. ஹாஸ்பிடல் போகாமோ?(என்ன ஆச்சுமா? ஏன் இப்படி வேர்த்து போயிருக்கு)” எனப் படபடப்பாகக் கேட்க, அவரோ மகனின் முகம் பாராது கண்ணீரில் நனைந்தார்.

“ம்மா, எந்து பற்றியெந்து பரயூ? நிங்கள்டே தேஷ்யத்தை பின்னே காட்டலாம்.(என்ன ஆச்சுன்னு சொல்லுங்க. உங்க கோபத்தை அப்பறம் காட்டுங்க)” அர்ஜித் கண்டித்ததில்,

“விஷ்ணு… விஷ்ணு எந்தினு இங்கனே இரிக்கனது? தன்னை விஸ்வசிச்சு (நம்பி) வந்த பெண்ணைக் கஷ்டப்படுத்தனது வெளிய பாவமல்லே…” எனத் தன்போக்கில் புலம்பியதில்,

“பாவம் தன்னே! ஆ பாவத்தை எங்கனே சரி செய்யும்?” என்றான் இறுக்கத்துடன்.

“நினக்கு அறியிமோ?(உனக்குத் தெரியுமா)
” சுஜாதா திகைப்பாகக் கேட்க,

“ம்ம், மொழி பரஞ்சு…” என்றவன்,

“அம்மே… நிங்கள் அவனோடு அறஞ்ச (தெரிஞ்ச) மாதிரி காட்டிக் கொள்ளண்டா.

இன்னும் ரெண்டு பேருக்குள்ளும் எந்தொக்கே (என்னன்ன) புரிதலின்மை உண்டோ? விஷ்ணு ஏடத்தியை அடிச்சிரிக்குனு.

ஞான் ஆத்யம் ஏடத்தியோடு இதைப் பற்றி சம்சாரிக்கணம். அதினு முன்னாடி எனிக்கு சில சம்சயம் (சந்தேகம்) உண்டு. அதெல்லாம் சரி செய்ததும், இதினு (என்னன்னு) முடிவு எடுக்காம்.

ஏது முடிவாய் இருந்தாலும் ஓகே அல்லே?(என்ன முடிவா இருந்தாலும் ஓகே தானே)” அவன் கூர்மையாக வினவியதில்,

“எ..எந்து முடிவு?” எனக் கேட்கும்போதே சுஜாதாவிற்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

“ஒருசமயம், ஏடத்திக்கு அவனோடு இதினு மேலயும் வாழான் பற்றில்லாந்து தோணியால், அவரைப் பறக்கான் விடுனது தான் வழி…(ஒருவேளை அவனோட வாழ இதுக்கு மேலயும் வாழ பிடிக்கலன்னா, அவங்களைப் பறக்க விடுறது தான் வழி)”

“எந்தா அர்ஜி இது?” சுஜாதா தளர்ந்ததில்,

“இப்போ இது யாருக்கும் அறயேண்ட ம்மா… நிங்கள் எந்து நடந்தாலும் அவன்டெ பாகமே சம்சாரிக்கு. ஞான் பரயன வரை…(இப்ப இது யாருக்கும் தெரிய வேணாம். நீங்க என்ன நடந்தாலும் அவன் பக்கமே பேசுங்க)” என்றிருந்தான்.

அப்போதே அவனுக்கு ரிசார்ட்டைப் பற்றி அகமொழி பரப்பிய ரிவியூ, உண்மையாக இருக்குமோ என்ற சிறு சந்தேகம் நெஞ்சை உலுக்கிக் கொண்டிருந்தது.

சுஜாதாவும் விஷ்ணுவுக்கு ஏதுவாக, அவன் அகமொழியைக் கண்டபடி பேசிய போதும் பொறுத்தவர், வேண்டுமென்றே தான் அகமொழியிடம் அன்விதாவின் விஷயத்தில் தலையிட வேண்டாம் எனச் சொன்னது.

ஆனால் அவரே எதிர்பாராதது, அவளே ஒரு பொய்யால் தான் இந்தப் பந்தத்தைத் தொடங்கி இருந்தாள் என்பது…

அந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. ‘மகன் ஒரு புறம் தன்னை உயிருடன் வதம் செய்கிறானென்றால், இவளும் இப்படிப் பொய்யாகி விட்டாளே’ என்ற சிறு வெறுப்புப் பரவியது உண்மை. அவளை அடித்ததும் கோபத்தில் தான்.

அவள் வீட்டை விட்டுச் சென்ற போதும் கோபம் குறைந்த பாடில்லை சுஜாதாவிற்கு.

அமையாவைப் பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்ட அர்ஜித் அகன், நேராக இருவரையும் அழைத்துக் கொண்டு அகமொழியின் வீட்டிற்குத் தான் சென்றிருந்தான்.

அவள் வருவதாகச் சொன்னதுமே, தனது அறையிலேயே தன் கட்டிலை ஓரமாகப் போட்டு விட்டு, மற்றொரு கட்டில் மெத்தையை உடனடியாக வாங்கி எதிர் சுவருக்கு அருகில் போட்டவள், அன்விதாவும் அமையாவும் தங்க ஏதுவாக மாற்றி இருந்தாள்.

பாஸ்கர் தான், “அந்தப் பொண்ணு ஏன் இங்க வர்றா? அவன் விஷயத்துல தலையிட வேண்டாம்னு விஷ்ணு சொல்லிருந்தானே. இப்ப நீ ஏன் பிரச்சினையை இழுத்துக்குற அகா?” என்றிட,

“அவன் ஒரு ஆளு… அவன் சொன்னான்னு நான் கேட்கணுமா? காசை சும்மாவா தூக்கிக் குடுத்தான். இடத்தை வாங்கிட்டுக் குடுத்தான். அவ்ளோ தான். அதுக்கு மேல அந்தப் பரதேசி பேச்சை நான் ஏன் கேட்கணும்?” எனத் தோளைக் குலுக்கியவள், “அன்விக்கு நான் வாக்குக் குடுத்திருக்கேன்பா. அவளோட பிரச்சினை சரி ஆகுற வரை, அவளுக்குத் துணையா நான் எப்பவும் இருப்பேன்…” என்றாள் உறுதியாக.

வசந்தி, “ஆனா அவ்ளோ பெரிய வீட்ல இருந்துட்டு, இந்த வீடு எப்படி அவளுக்கும் பொண்ணுக்கும் பத்தும் அகா?” என வினவ,

“அதை யோசிக்காம அகன் சொல்லிருக்க மாட்டாரு. அவளைத் தனியா விடுறதும் சேஃப் இல்ல. அவள் வீட்ல இருந்து ஆளுங்க பிரச்சினைக்கு வந்தா, நான் மேனேஜ் பண்ணிப்பேன். நீங்களும் அமையாவைப் பார்த்துப்பீங்கன்னு நம்பிக்கைல தான் இந்த முடிவுக்கு வந்திருப்பாரு. என்ன இருந்தாலும் தாத்தா பாட்டியோட இருந்த பொண்ணு. திடீர்னு அவளை ஹாஸ்டல்லயோ, தனி வீட்லயோ தங்க வச்சா பயந்துடுவா. இங்க இருந்தா பேமிலி என்விரான்மெண்ட், அவளுக்கு மாறாம இருக்கும். என்கிட்ட ஆல்ரெடி நல்லா பழகிட்டதுனால, அவளுக்கு வித்தியாசமாவும் தெரியாது. ப்ரோ இங்க வந்து அன்வியைப் பார்த்தாலும் பிரச்சினை ஆகாது. டைவர்ஸ் கிடைக்குறவரை. அப்புறம் அவள் இஷ்டம்…” என்று அர்ஜித் என்னவோ பக்கம் பக்கமாக விளக்கம் சொன்ன ரீதியில், அவனது முடிவிற்கான காரணத்தைக் கணித்துக் கூறியவளைத் தாயும் தந்தையும் வித்தியாசமாகப் பார்த்தனர்.

“நீ அந்தக் கேரளாக்காரன்கிட்ட பேசுனியா?” ரிஷான் அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்துக் கேட்க,

“ம்ம். அவன் சொல்லித் தான அன்வி, அமையா வர்றதே தெரியும்.” அவள் இயல்பாகக் கூறியதில், “நீ எதுக்கு அவன்கிட்ட பேசுன?” என்றான் கோபமாக.

அவளோ புருவம் சுருக்கி வெட்டும் பார்வை பார்த்ததில், “இன்னொருத்தி கூட இருந்தேன்னு வாய் கூசாம சொல்லிருக்கான். நீ ஏன் அகா இந்த வாழ்க்கையை அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். அந்தப் பொறுக்கி, எல்லா அசிங்கமும் பண்ணிட்டு வீட்டுக்கு வருவான், நீ அவனுக்குச் சேவை செய்வியா?” எனக் குரலை உயர்த்தியதில், அகமொழியின் ஐந்து விரல்களும் ரிஷானின் கன்னத்தில் பதிந்தது.

ரிஷான் அதிர்ந்து நிற்க, ரூஹி அவனைப் பிடித்துக் கொண்டாள்.

“ஏய் அறிவு கெட்டவளே… இப்ப எதுக்குடி இவனை அடிச்ச? உன்னைக் கல்யாணம் செஞ்சவன் தான இன்னொருத்தி கூட இருந்ததா சொன்னான்…” எனக் கத்தி விட, அவளை விடப் பல மடங்காகக் கர்ஜித்தாள் அகமொழி.

“அவன் சொல்லுவான். அவன் ஆயிரம் கூடச் சொல்லுவான். அவன் சொன்னா? எதைப் பொய்யா சொல்றான், எதைக் கோபமா சொல்றான். எதை ஈகோக்குச் சொல்றான்னு எனக்குத் தெரியும். நீங்க யாரும் உங்க தராசைத் தூக்கிட்டு அவனை நிறுத்திப் பார்க்க வரத் தேவை இல்லை. அவனைப் பத்தி யார் சொன்னாலும், அகனே சொன்னாலும் எனக்குத் தெரியும்… எதை நம்பனும், எதை நம்பக் கூடாதுன்னு… இன்னொரு தடவை பொறுக்கின்ற வார்த்தை உங்க வாயில இருந்து வந்துச்சு… வாயை உடைச்சுடுவேன்!” காளி அவதாரமாக நண்பர்களைத் தீயாகச் சுட்டவள், அதே பார்வையைப் பெற்றோரிடமும் வீசி விட்டு அறைக்குச் சென்றாள்.

அவர்களைப் போல லூஸ் டாக் விடக் கூடாதென்ற எச்சரிக்கையே அந்தப் பார்வை என பாஸ்கருக்கும் வசந்திக்கும் புரிந்தது.

வசந்திக்கு, அவளது வாழ்க்கை என்னாகுமோ எனப் பயம் உள்ளுக்குள் இருந்திட, இப்போதே இவள் அர்ஜித்தின் மீது இத்தனைத் தீவிரமாக இருப்பது இன்னும் பயத்தையே கொடுத்தது.

ரிஷான் தான், கன்னத்தைத் தேய்த்தபடி நின்றான்.

“அவனுக்காக என்னையே அடிச்சுட்டா பாருடி…” ரூஹியிடம் கோபமாக முறையிட,

“சத்தமா பேசாதடா! திரும்பி வந்து அடிக்கப் போறா…” என்றவளும் தோழியின் கோபம் கண்டு பீதியில் தான் இருந்தாள்.

“எனக்கு ஒண்ணுமே புரியல. இவள் எதுக்கு அவனுக்கு இவ்ளோ கூஜா தூக்குறா…” என்றவன் பயத்தில் மெல்லமாகவே பேசினான்.

“மஞ்சக்கயிறு மேஜிக் போல…”

“ம்ம்க்கும்!”

“அதெப்படி அவனைப் பார்த்தாலே கன்னா பின்னான்னு சண்டை போடுறவ, ரெண்டே வார கேப்ல அவன்கிட்ட மயங்கிப் போறாளாக்கும். ஒருவேளை இவளுக்கு மை தடவி வசியம் பண்ணிருப்பானோ… கேரளால இதெல்லாம் ரொம்ப சகஜமாமே…” என எச்சிலை விழுங்கினான் ரிஷான்.

“என்னடா சொல்ற?” ரூஹி மிரண்டாள்.

“ஆமாடி. இவள் இவ்ளோ பேசுறாள்ல… அவன் ஒரு தடவையாவது இவளை வந்து பார்த்தானா? அப்ப என்ன அர்த்தம்?”

“என்ன அர்த்தம்?”

“மை தடவிட்டான்டி! அதான்… அவனே தான் ஒரு வுமனைசர்னு சொன்னா கூட இவளுக்கு அது பெருசா தெரிய மாட்டேங்குது. வசியம் பண்ணிட்டான்…”

இருவரும் மெதுவாகப் பேசினாலும், கோபத்துடன் அறைக்குச் சென்ற அகமொழிக்கு இருவரது உரையாடலும் காதில் விழுக, சட்டெனச் சிரித்து விட்டாள்.

‘ஆமா, அவர் பெரிய மன்மதரு, அப்படியே வசியம் பண்ணதும் நாங்க பின்னாடியே போறோம்…’ எப்போதும் போல ஈகோ தலைதூக்க நொடித்துக் கொண்டாலும், அவனது பிரிவு வாட்டியது.

‘ரிஷான் சொன்னது போல, அவன் ஏன் தன்னைப் பார்க்க வரவில்லை?’ தொழில் முறையில் பிரச்சினை என்று தான் இருவரும் தொழில் ரீதியாகப் பேசிக் கொள்வதைத் தவிர்த்தனர். இப்போதோ, சொந்த வாழ்க்கையிலும் பிரச்சினை என்று அதைப் பற்றிப் பேசினால் வெறுப்பு தோன்றி விடுமோ என்ற பயத்தில் அதைத் தவிர்த்து மற்றவற்றைப் பேசுகின்றனர்.

இதே யோசனையில் இருக்கும்போதே அர்ஜித் அகனின் கார் சத்தம் கேட்டது.

எழுந்து ஓடத் துணிந்த கால்கள் ஏனோ செயலிழந்திருக்க, பாஸ்கரும் வசந்தியும் அன்விதாவை இன்முகத்துடனே வரவேற்றனர்.

அவளது உடைமைகளையும் வெளியில் வைத்தவனின் விழிகள், வாசற்படியை ஒரு முறை நின்று ஆராய்ந்தது.

அவள் வரவில்லை. சின்னதொரு ஏமாற்றம் அவனிடம்.

“சித்தி…” என்று அமையா தானாக உள்ளே ஓட, அன்விதா வரும் நேரம் அறைக்குள் இருந்தால் நன்றாக இராது என்றெண்ணி, அகமொழி அமையாவையும் தூக்கி முத்தம் கொடுத்தபடி வெளியில் செல்ல, அர்ஜித் அந்நேரம் காரைக் கிளப்பிச் சென்று விட்டான்.

‘நின்று முகம் பார்க்கக் கூட மனமில்லையோ?’ இதயம் பலமாய் அடிவாங்கியது அவளுக்கு.

அன்விதா, கண்ணை விட்டு மறைந்த காரின் திசையையே பார்த்துக் கொண்டிருந்த அகமொழியை வருத்தமாகப் பார்த்தாள்.

“அகா…”

சட்டென நிகழ்வுணர்ந்தவள், “வெல்கம் ஹோம் அன்வி…” என்று முக பாவனைகளை மாற்றி விட்டு அவளை உள்ளே அழைத்துச் செல்ல, “அர்ஜிட்ட பேசிருக்கலாமே?” என்றாள்.

“காத்துலயா பேச முடியும்?” வலியை மறைத்துப் புன்னகைத்தவளிடம், “உனக்குக் கஷ்டமா இருந்தா அதை முகத்துல காட்டிடு அகா… இப்படி சிரிக்காத. ரொம்ப வலிக்குது. வலிய மறைச்சு ஸ்மைல் பண்றதை விடப் பெரிய கொடுமை எதுவும் இல்ல. எனக்காக நீ நடிச்சுக்காத…” என்றவளைத் திகைத்துப் பார்த்தாள்.

ரூஹிக்கும், ரிஷானுக்கும் அகமொழி மூலமாக அன்விதாவின் நிலை தெரிந்திருந்தது. அவர்களும் அவளைப் பாவமாகப் பார்த்திருக்க, அன்விதா பையை எடுக்கும் முன்பே ரிஷானும், ரூஹியும் எடுத்துக் கொண்டனர்.

“இல்ல பரவாயில்ல…” அன்விதா தயங்கியதைக் காதில் வாங்கவே இல்லை இருவரும்.

ஹால் சோபாவில் தயக்கத்துடனே அமர்ந்திருந்தாள்.

“அர்ஜி சொன்னப்ப மறுக்க முடியல. உங்களுக்குத் தான் கஷ்டம் அகா…” அன்வியின் கூற்றில்,

“ஆமா அன்வி. நீ நைட்டு தூங்கும்போது என் தலை மேல ஏறி உக்காந்து தூங்கப் போறல்ல. அமையா வேற ஒரு அறுபது கிலோ இருப்பா. அவளை நான் தூக்கித் தோள்ல வச்சுத் தூங்க வைக்கணும். ப்ச், எவ்ளோ கஷ்டம்ல.” எனப் பரிதாபப்பட, அன்விதா சிரிப்பை அடக்கிக் கொண்டு முறைத்தாள்.

பாஸ்கரின் மடியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த அமையா, “சித்தி… அமையா 15 கேஜி…” என்றாள் உதடு குவித்து.

அதில் மற்றவர்களும் சிரித்து விட்டனர். அன்றைய நாளிலேயே ரிஷானும் ரூஹியும், அன்விதா அமையாவிடம் நன்கு பழகி விட்டனர்.

அன்விதாவிற்குக் கூட ரிஷானின் மீது கோபம் இருந்தது. அவளை நம்பாமல் நிச்சயத்தை நிறுத்தியதற்கு… ஆனால் அவனிடம் பேசும்போது, அவன் ஒரு வளர்ந்த குழந்தை எனவும் புரிந்தது.

“உன் கன்னத்துல என்ன ரிஷு, சிவப்பா இருக்கு?”

“ம்ம், ஒரு நாய் பிராண்டிருச்சுக்கா…” என்றான் அகமொழியை முறைத்தபடி.

“என்ன, அந்த நாய்க்கு ரெண்டு கையும், ரெண்டு காலும் இருக்கும்… இல்லடா!” என ரூஹி வார, “என்னை அசிங்கப்படுத்துறதுல உனக்கு ஆத்ம திருப்தில!” என அங்கிருந்த துவாலையை அவள் மீது விட்டெறிந்தான்.

உண்மையில் இங்கு வரும்போது இருந்த குழப்பமும், தயக்கமும், வேதனையும் அன்விதாவிற்கு இப்போது முற்றிலும் இல்லை. அமையாவும் பாஸ்கர் வசந்தியிடம் ஒட்டிக் கொண்டதில் நிம்மதி பிறந்தது.

‘அந்தப் பொண்ணை ஏன் இங்க வரச் சொன்ன?’ எனக் கேள்வி கேட்ட பாஸ்கருக்கு, அதெல்லாம் நினைவிலேயே இல்லை. அமையாவிடமே விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.

தற்போது இரண்டு மூன்று வார்த்தைகளைச் சேர்த்துப் பதில் கூறப் பழகி இருந்தாள் அமையா.

விஷ்ணு மீண்டும் பிரச்சினைக்கு வராமல் இருக்க வேண்டும் என்ற பயம் மட்டுமே அவரிடம்.

இரு நாள்கள் அமைதியாகவே கழிந்தது.

ரிஷானும், ரூஹியும் விடிந்ததும் அகமொழியின் வீட்டை முற்றுகை இட, அவர்களும் கலகலப்பாகி அன்விதாவையும் கலகலப்பாகவே வைத்திருந்தனர்.

இதில் முயன்று கலந்து கொண்ட அகமொழி, மீண்டும் வேலை தேடுதல் பணியைத் தொடங்க ரிஷான், “என்னால எல்லாம் வேலைக்குப் போக முடியாது.” என்றதில், “மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத ரிஷு…” என்று எரிச்சலை அடக்கிக்கொண்டு மடிக்கணினியைத் தட்டினாள்.

வசந்திக்கு சமையலில் உதவி செய்துவிட்டு வந்த அன்விதா விஷயத்தை அறிந்து கொண்டு,

“ஏன் வேணாம்னு சொல்ற அகா?” என வினவ, “ப்ச்…” என மடிக்கணினியை மூடி வைத்தவள், “மறுபடியும் முதல்ல இருந்து எல்லாம் ஆரம்பிக்கணும் அன்வி…” என்றாள் தொண்டை கமற.

“நீயே இப்படி சலிச்சுக்கிட்டா… நானும் எல்லாத்தையும் முதல்ல இருந்து தான ஆரம்பிக்கணும்…” எனும்போதே பிரணீத் அங்கு வந்தான்.

அவனைக் கண்டதும் நிமிர்ந்து பாராத அன்விதா, “லைஃப் எல்லாருக்கும் செகண்ட் சான்ஸ் குடுக்கும் அகா… இல்லைன்னாலும் நாமளே உருவாக்கிக்கணும்…” என்றிட, அகமொழி நிமிர்ந்து முறைத்தாள்.

பிரணீத்தோ காதைக் குடைந்தபடி, “இதோ பாரு அகா… யார் இருந்தாலும் இல்லைன்னாலும் நம்ம லைஃப் ஓடிட்டே தான் இருக்கும். வாழ்க்கைல எல்லாத்தையும் கடந்து போயிட்டே இருக்கணும். இவங்க இருந்தா வாழ முடியாது, அவங்க இருந்தா வாழ முடியாதுன்னு ஒரு வட்டத்துக்குள்ள எந்தத் தனி மனுஷனாலும் வாழ முடியாது. நாம, நமக்காக நம்மளோட கனவுக்காக வாழ்ந்தே ஆகணும். நீயும் அதே வட்டத்துக்குள்ள அடையாத. இந்த உலகம் பறந்து விரிஞ்சிருக்கு சிஸ்டர்…” அவளைப் போலவே ஏற்ற இறக்கத்துடன் கூறியவனைக் கொலை வெறியுடன் பார்த்தாள் அகமொழி.

“ராஸ்கல்ஸ், நான் சொன்ன டயலாகை எல்லாம் எனக்கே திருப்பி ரிட்டர்ன் தர்றீங்களா?” மூச்சிரைத்தவள், “இப்ப என்ன, திரும்பி அந்த வீட்டுக்கு நான் வரணும் அதான?” எனக் கொந்தளித்தாள்.

அகமொழியின் கேள்விக்கு இருவரும் ஒன்றாக, “இல்ல!” எனப் பதில் அளிக்க, பிரணீத் அன்விதாவை ஓரக்கண்ணில் பார்த்தான்.

அன்விதா அவனது பார்வையைத் தவிர்க்க, பிரணீத் தான் அகமொழியிடம் கவனத்தைத் திருப்பி, “நீ அவ்ளோ அவசரமா அங்க வந்து ஒரு ஆணியும் ப்ளக் பண்ண வேணாம் சிஸ்டர். நீ உன் கேரியரைப் பாரு.” என்றான் அசட்டையாக.

அகமொழி தான் பேந்தப் பேந்த விழித்தாள்.

“அப்போ நீங்க சேர்த்து வைக்க வரலையா?”

“சேர்த்து வைக்கிற அளவு அறிவு இருந்தா, நானே எப்பவோ ஜோடி சேர்ந்திருப்பேனே அகா…” என சிவாஜி தோரணையில் பேசியதில், “யோவ்…” என நாயாகக் குரைத்தாள் அகமொழி.

அன்விதா பொங்கிய சிரிப்பை அடக்கியதில், “இவளுக்கு டைவர்ஸ் வாங்க நான் பிளான் பண்ணுனா, இதுங்க எனக்கு டைவர்ஸ் வாங்கிக் குடுத்துடுங்க போல.” என வாய்க்குள் முணுமுணுத்தது அவளையே வீடியோ காலில் பார்வையால் ஊடுருவிக் கொண்டிருந்த அர்ஜித் அகனுக்கும் புரிந்திட, அவன் இதழ்களில் சிறு புன்னகை அரும்பியது.

பிரணீத் அவளைக் கனிவுடன் பார்த்து, “ஆக்சுவலி நீ சொன்னதெல்லாம் சரி தான் அகா… எந்த ரிலேஷன்ஷிப்பா இருந்தாலும் நம்ம கையை மீறிப் போகும்போது கடந்து போகத் தான் வேணும். ஆனா நம்ம கடக்க முயற்சி செய்யற நபர் நமக்கு எவ்ளோ முக்கியம்ன்றது தான் இங்க மேட்டர்… எல்லாரையுமே ஈஸியா கடக்க முடியாதுல்ல…” என்று விட்டு அன்விதாவைப் பார்க்க, அவளும் அவனை ஒரு நொடி ஆழமாகப் பார்த்து விட்டுத் திரும்பினாள்.

அகமொழியின் முகம் சுண்டிப் போனது.

ரிஷான் தான், “ஒருவேளை, உங்க பிரெண்டு இவளை வந்து பார்த்துச் சமாதானம் பண்ணணும்னு எதிர்பார்க்கிறா போல.” எனத் தோளைக் குலுக்க அகமொழி அவனைப் பார்வையால் எரித்து விட்டு,

“நான் யாரையும் எதிர்பார்க்கல. யாரும் இங்க வந்து சமாதானம் பண்ணனும்னு அவசியமும் இல்ல. யாருக்காகவும் என் கேரியரை நான் கிவ் அப் பண்ணவும் இல்ல…” என்றாள் பல்லைக் கடித்து.

ரூஹியோ, ‘இவள் இப்ப தான் அந்த ஆட்டம் ஆடுனா… இப்ப இப்படிப் பேசுறா!’ எனக் குழப்பத்தின் உச்சியில் மண்டை சூடாகிப் போனாள்.

‘நல்லவேளை, கொஞ்ச நாளா நான் இங்க இல்ல. இருந்திருந்தா கிறுக்குப் பிடிச்சுருக்கு போல…” தனக்குளேயே புலம்பிட, அர்ஜித் அகன் தான் ஒற்றைப் புருவம் உயர்த்தி அகமொழியைப் பார்த்தான்.

“கிவ் அப் பண்ண வேணாம் தான. அப்போ பிசினஸ் ஸ்டார்ட் பண்ணு!” அன்விதாவின் கூற்றில் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவளுக்கு, அவன் வீடு வரைக்கும் வந்தும் தன்னைப் பாராது சென்றதில் ஆதங்கம் எழ, “ஓகே… நான் பண்றேன்.” என்றாள் அழுத்தமாக.

பிரணீத்தும், அன்விதாவும் ஒருவரை ஒருவர் சிறு திருப்தியுடன் பார்த்துக் கொண்டனர்.

பிரணீத், “கிளாம்பிங் கட்ட ஆள் வேணும்னா…” என ஆரம்பிக்க அவனை நிமிர்ந்து முறைத்தவள், “எனக்கு யாரோட உதவியும் தேவை இல்ல ப்ரோ… நாங்க பார்த்துப்போம்.” எனத் திட்டவட்டமாகக் கூறியதில், பிரணீத் ஒரு முறை மறைத்து வைத்திருந்த அலைபேசியைப் பார்த்தான்.

சுழல் நாற்காலியில் சுழன்றபடி, ரெட்டை விரலை நெற்றியில் தேய்த்தவாறு அகமொழியையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த அர்ஜித் அகனுக்கு இன்னுமாக இதழ்கள் விரிந்தது.

‘ஈகோ பிடிச்சவ…’ என மனத்தினுள் திட்டிவிட்டு, ஒரு கணம் அவள் முகத்தை ஆழ் மனத்தில் பதிய வைத்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

நாற்காலியின் பின்னால் தலையைச் சாய்த்தவனுக்கு, மூடிய விழிகளுக்குள்ளும் அந்தக் காந்தாரியின் வதனமே நிறைந்தது.

“உன்னால என் பேரண்ட்ஸ் என்கிட்ட பேசுறது இல்ல. என் லவ் போச்சு, என் ப்ரெண்ட்ஷிப் போச்சு… இப்ப என் கேரியரும் போச்சு… பழி வாங்கிட்டீல? அதுக்கு விஷ்ணு மாதிரி நீயும்…” அவளது வார்த்தைகளை முழுதாய் நினைக்கக் கூடத் தோன்றாது, சட்டென நிமிர்ந்து மேஜையில் நங்கெனக் குத்தினான்.

கோபம் மீறுவதற்குப் பதிலாய், காதலும் பெருகுவதும் ஏனோ?

அகன் வசமாவாள்(வான்)
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 120

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
125
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment