
பிரணீத் ரிசார்ட்டில் இருக்கும் தனது அலுவல் அறைக்குச் சென்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.
செய்து வைத்த காரியத்தின் வீரியம் நேரம் செல்லச் செல்லத் தான் அதிகம் உறைத்தது.
பள்ளிக் காலத்தில் இருந்து ஆசையாகக் காதலித்தவள்.
ஒவ்வொரு காதலர் தினத்திற்கும் அவளுக்காக வாங்கி வைத்த வாழ்த்து அட்டைகள் (Greeting Cards) ஏராளம். ஆனால் அதைச் சொல்ல மட்டும் தைரியம் வந்ததே இல்லை.
முதலில் வயது காரணமாகத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தான். பின் பள்ளி முடிந்ததும் அவள் வேறு கல்லூரியில் சேர்ந்து விட்டதில், அவனுக்குச் சற்று வருத்தம் தான்.
அவளும் எதிர்பார்க்கவில்லை.
“அப்பா தான்டா இந்த காலேஜ்ல அட்மிஷன் வாங்கிட்டாரு. எனக்குப் பிடிக்கவே இல்லை உன்னை விட்டுப் போக” என்று அதிகம் வருந்தியதும் அவள் தான்.
பிரணீத் என்றால் அன்விதாவிற்கு உயிர். ஆகினும் நண்பன் என்ற உறவைத் தாண்டி வேறு எதுவும் யோசித்ததில்லை.
அன்விதாவின் வீட்டில் வசதிக்கொன்றும் குறைவில்லை. ஆனால், அவன் குடும்பம் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தது. அதனாலேயே அன்விதாவின் வீட்டில் அவனது நட்பு அத்தனை உவர்ப்பாக இல்லை.
அவளது நட்பைப் பெற்றோரிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே போராடும்போது, அதனை அடுத்த கட்டத்தில் சிந்திக்கவெல்லாம் அவளுக்கு வாய்ப்பே இல்லை.
“டேய் காலேஜ் செம்ம போர். நீ இல்லாம சுத்தமா முடியல” – புதுக் கல்லூரியில் இணைந்தபிறகு அன்விதாவிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி கண்டு பிரணீத்தின் இதழ்களில் புன்னகை பரவியது.
“எனக்கும் நீ இல்லாம கஷ்டமா இருக்கு அனு. பேசாம நான் அங்க வந்து ஜாயின் பண்ணிக்கவா?”
“அச்சோ அதெல்லாம் வேணாம். கட் ஆஃப்ல மார்க் எடுத்து கஷ்டப்பட்டு ஜாயின் பண்ணிருக்க. நல்லா படி. ஒரு பெரிய பிசினஸ் மேக்னட்டா வரணும் சரியா?” என்று கூறியதில்,
“ஆமா, மேக்னட் ஆகுறாங்க. வேலை கிடைக்குறதே குதிரைக்கொம்பாம். பிசினஸ்க்கு எல்லாம் இன்வெஸ்ட்மென்ட் பண்ணவே நான் காலம் முழுக்க சம்பாதிக்கணும்…” என்றான் கிண்டலாக.
“ப்ச், உனக்கு இருக்குற டாலண்ட்க்கு நீ பெரிய ஆளா வருவடா. நீ வேணும்னா பாரு. எனக்கு கருநாக்கு. அப்படியே பலிக்கும்.”
அதில் தலையாட்டிப் புன்னகைத்தவன், “என்னையும் ஒரு ஆளா நம்புற ஒரே ஆளு நீ தான் சிட்டு. என் அப்பா அவரோட கடையைப் பார்த்துக்கச் சொல்லிட்டு இருந்தாரு. தப்பிச்சு தான் காலேஜ்ல சேர்ந்தேன்” எனப் புலம்பிட, அப்போது தான் அவனுக்கு அறிமுகம் ஆனான் அர்ஜித் அகன்.
அவனது மலையாள மொழியும், சிவந்த நிறமும் பிரணீத்திற்கு முதலில் பயத்தைத் தான் கொடுத்தது. ஒரே பெஞ்சில் அமர்ந்திருந்தாலும், அவனிடம் முதல் சில நாள்கள் பெரியதாகப் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளவில்லை.
கல்லூரிக்குச் சைக்கிளில் வருவது தான் அவனது வழக்கம். கல்லூரிக்குள் நுழையும்போது அப்போது தான் கார் ஓட்டிப் பழகி இருந்த மாணவன், சடாரென ஸ்டியரிங்கை ஒடிக்க, அவனுக்குப் பக்கவாட்டில் வந்து கொண்டிருந்த பிரணீத்தின் சைக்கிளில் இடித்து விட்டான்.
பிரணீத் இதனை எதிர்பாராது விழுந்து விட்டான்.
“என்ன ப்ரோ பார்த்துப் போக மாட்டீங்களா?” எரிச்சலுடன் திட்டியபடி எழுந்திட, அந்த மாணவன் பிரணீத்தை அடித்து விட்டான்.
“என்னடா பண்ணிருக்க? உன் டிஸ்கஸ்டிங் சைக்கிளை வச்சு கார்ல கோடு போட்டுருக்க… இடியட்!” எனக் கத்தினான் அந்த மாணவன்.
அதில் அதிர்ந்தவன், “நானா வந்து இடிக்கல… நீங்க தான்…” என்றவனைப் பேச விடவில்லை.
“உன்னால தான் என் புதுக் கார் ஸ்கிராட்ச் ஆச்சு. ஒழுங்கா சரி செஞ்சு குடு…” என்று அவன் பிரச்சினை செய்ய, பிரணீத் நொந்து விட்டான்.
விலையுயர்ந்த காராம். ஸ்கிராட்ச்சை சரி செய்யவே ஆயிரக்கணக்கில் செலவாகுமாம்.
அப்போது தான் தனது காரைப் பார்க்கிங்கில் நிறுத்திய அர்ஜித், நடப்பதைக் கவனித்துக் கொண்டு இருந்தான்.
விறுவிறுவென அங்கு வந்தவன், “நினக்கு எந்தா வேணும்? பணமல்லே?” என்றவன் பணத்தை அந்த மாணவன் கையில் கொடுத்து விட்டு, பிரணீத்தை அழைத்துக்கொண்டு வந்து விட்டான்.
பிரணீத்திற்கு இன்னும் அதிர்ச்சி மாறவில்லை.
“என்மேல தப்பு இல்ல சேட்டா. ஆனா நீங்க ஏன் பணம் குடுத்தீங்க?” எனத் தயங்கினான்.
“ஆ இடியட் நின்னை அடிக்குறான்… திருப்பி அடிக்க கை அல்லே?”
“அவன் பாடி பில்டர் மாதிரி இருக்கான். சின்ன ஸ்கிராட்ச் பிரச்சினையைக் கொலை பிரச்சினையா மாத்த பாக்குறீங்களா? என்னை கொலை பண்ணுன பாவம் அவனுக்கு எதுக்கு?” எனப் பரிதாபமாகக் கூறிய பிரணீத்தைப் பார்வையால் ஊடுருவியவன், சிரித்து விட்டான்.
“யூ ஆர் சோ இன்னசென்ட்!” என அவன் முதுகில் தட்டி விட்டு வகுப்பறைக்குச் சென்றான் அர்ஜித்.
“ஆத்தாடி… இவன் செல்லமா அடிக்கறதே வலிக்குதே” என முதுகை நெளித்துத் தேய்த்துக்கொண்டான்.
மாலை கல்லூரி முடிந்து வரும்போது தனது சைக்கிளை எடுக்கப்போன பிரணீத்தின் முன் காரை நிறுத்திய அர்ஜித் அகன், “காரில் கேறு! (ஏறு)” என்றான்.
பிரணீத் தயங்கி, “இல்ல வீடு பக்கம் தான்… போய்டுவேன்…” என்றதில், அவன் அசையாது நிற்க, சங்கடத்துடனே காரில் ஏறினான்.
கல்லூரி சாலையைத் தாண்டும் வரை மெதுவாகச் சென்றவன், அதனைத் தாண்டியதும் சீறிப்பாய்ந்தான்.
சீட் பெல்ட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த பிரணீத் தான், “சேட்டா பாய்… உங்களுக்கு நான் என்ன பாவம் பண்ணேன்? கார்ல என்னோட ஃபர்ஸ்ட் ரைடை லாஸ்ட் ஆக்கிடாதீங்க…” எனப் பயத்தில் உளறினான்.
காலையில் சண்டையிட்ட மாணவனின் காரைச் சேஸ் செய்து, அவனை இடிக்க வருவது போல வந்ததில் அவன் பயந்து காரை சாலை ஓரம் ஒடிக்க, மரத்தில் இடித்து நின்றான்.
கார் முன் பக்கம் முழுதும் சேதாரம் அதிகமாக இருக்க, பிரணீத் அரண்டு விட்டான்.
“ஐயோ அர்ஜித்… பிரச்சினையாகிட போகுது.”
“ஆத்யம் அவண்டே காரிலுள்ள பிரச்சனை சரி ஆக்கிட்டு வரட்டே… அதுக்கப்புறம் பிரச்சன ஆயால் நோக்காம்!”(முதல்ல அவனோட கார்ல இருக்குற பிரச்சினையை சரி பண்ணிட்டு வரட்டும். அப்புறம் பிரச்சினையானா பார்த்துக்கலாம்…)” என அசட்டையாகக் கூறி விட்டு பிரணீத்தை அவன் வீட்டில் இறக்கி விட்டான்.
அவன் காலையில் கொடுத்த பணத்தை விடப் பலமடங்கு சேதாரம் கொடுத்திருந்தான்.
பிரணீத்திற்கு பயத்தில் நெஞ்சம் அதிகம் துடித்தது.
“இனி ஆருடே கையிலும் அடி வாங்காதே…” என்று எச்சரித்து விட்டுச் சென்றவனை வியப்பாக ஏறிட்டான்.
அதன்பிறகு அவனிடம் பழகப் பழகவே, பிரணீத்திற்கு புது நட்பு உலகமே கிடைத்தது.
தனக்கு ஒன்றென்றாலும் எங்கிருந்தாலும் வந்து விடும் அவனது அன்பு அவனை அதிகம் நெகிழ்த்தியது.
அதற்குத் தோதாய் அர்ஜித்தின் மீது தனது ஒட்டுமொத்த அன்பையும் காட்டினான்.
சென்னையில் விடுதியில் தங்கிப் படித்த அர்ஜித் அகனுக்கு, உடல்நிலை சரியில்லையென்றால் இரவு எத்தனை மணியானாலும் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடன் இருந்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எல்லாம் பிரணீத்துடையது தான்.
பிரணீத்தின் சிறிய வீட்டிலும் சகஜமாக வந்து அவனுடன் உறவாடி, அமுதினி கொடுக்கும் உணவை ரசித்து உண்பவனையும், வேணியைத் தனது சொந்தத் தங்கையாகப் பார்ப்பவனையும் அதிகம் பிடிக்கும் பிரணீத்தின் வீட்டினருக்கு.
வேணிக்கு அவனது வார்த்தை தான் வேதவாக்கு.
அர்ஜித் கல்லூரிக்காகச் சென்னைக்கு வந்திருக்க, விஷ்ணு திருவனந்தபுரத்தில் தான் மேற்படிப்பைத் தொடர்ந்தான். அங்கு தான் அன்விதாவையும் சேர்த்திருந்தனர்.
அனகா, தானும் அர்ஜியுடன் சென்னை செல்வதாக அவன் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்தே அடம்பிடித்துக் கொண்டிருந்தாள்.
அதில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து சென்னையிலேயே சேர்த்திருந்தனர். சுஜாதா முதலில் மறுத்தாலும் அர்ஜித்தும் வற்புறுத்தியதால் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார். பின், அரசுப் பள்ளியில் பயின்று கொண்டிருந்த வேணியையும் அனகாவின் பள்ளியிலேயே சேர்த்து விட்டதன் பெரும் பங்கு அர்ஜித்தையே சாரும்.
அதில் தான் அனகாவும் வேணியும் நெருங்கிய தோழிகளானது.
அனகாவிற்கு பிரணீத் என்றால் அத்தனை உயிர். “டார்லிங் டார்லிங்” என அவன் கையைப் பிடித்துக்கொண்டு அலைவாள்.
பிரணீத்திற்கும் அனகா ஒரு குட்டிச் சாத்தான் தான்; செல்லத் தங்கச்சியும் கூட.
பிரணீத்தை விடுமுறை நாள்களில் எல்லாம் அடிமாலிக்குக் கடத்தி விடுவர் அர்ஜித்தும் அனகாவும்.
அர்ஜித் அனகாவை “அனு” என அழைப்பைக் கேட்கும்போதெல்லாம் அவனுக்கு அன்விதாவின் எண்ணமே வாட்டும்.
“எனக்கும் அனு’ன்னு ஒரு பெஸ்டி இருக்கா குட்டிச் சாத்தான்” அனகாவிடம் கூறும்போதே, வேணி அனகாவிடம் கிசுகிசுப்பாள்.
“உனக்கு தெரியுமா? அண்ணா அன்வி அக்காவை லவ் பண்றான்” எனச் சொல்லி விட்டு வாயைப் பொத்தி சிரிப்பாள்.
“லவ்வா?” அனகாவிற்கு அப்பெயரே அப்போது தான் கேள்விப்பட்டது போல ஒரே குதூகலமாக இருக்கும்.
இருவரும் அந்த வயதிற்கே உரிய குறும்பும் கிண்டலுமாக பிரணீத்தை அவ்வப்பொழுது கிண்டல் செய்வர்.
“ஹே உஷ்… சேட்டா பாய்ட்ட நான் இன்னும் சொல்லவே இல்ல. காலேஜ் முடிச்சு அன்விட்ட சொன்னதும் தான் சொல்லணும். அதுக்குள்ள உங்க திருவாயைத் திறந்து வைக்காதீங்க…” என்று இரு தங்கைகளையும் அதட்டுவான்.
விடுமுறைக்குச் சென்னைக்கு வரும் அன்விதா பிரணீத்திடம் தான் குறைபடுவாள், “என்னடா நீ… உன்னைப் பார்க்க நான் இங்க வந்தா நீ அங்க போய் உக்காந்துக்குற…”
“இல்ல சிட்டு. இதுங்க என்னை விட மாட்டேங்குதுங்க. ரெண்டு நாள் தான் இருப்பேன். அப்புறம் வந்துடுவேன் அங்க… டீலா?” என விடுமுறையில் பாதி நாள்கள் அர்ஜித்துடனும் பாதி நாள்கள் அன்விதாவுடனுமே கழிப்பான்.
அவனுக்கு ஒரு தோழி இருக்கிறாள் என்பது வரை அர்ஜித்திற்குத் தெரியும். அது எந்த அளவு ஆழமென்று அன்விதாவின் திருமணத்திற்கு முன் தான் தெரியும்.
அடிமாலிக்குச் செல்லும் சமயம், விஷ்ணுவிடமும் நன்கு பழகி விட்டான். அர்ஜித்தின் குடும்பமே பிரணீத்தை வீட்டில் ஒருவனாகப் பார்க்கத் தொடங்கினர்.
அன்விதாவின் பெற்றோர் அவனைத் துச்சமாகக் கூட மதிக்க மாட்டார்கள். அதனாலேயே இவர்களின் அன்பு அவனை அதிகம் நெகிழ்த்தியது.
கல்லூரி முடிந்ததும், “நாம் இருவரும் இணைந்து தொழில் செய்யலாம்” என்று கூறிய அர்ஜித்திடம் மையமாகத் தலையாட்டி வைத்தான், இதெல்லாம் நடக்குற காரியமா என்று.
ஒரு முறை விடுமுறைக்கு அடிமாலிக்குச் சென்ற போது தான், விஷ்ணுவும் பிரணீத்தும் செஸ் விளையாடிக் கொண்டிருந்த சமயம்.
“நீங்க எந்த காலேஜ் அண்ணா?” என வினவினான்.
அவன் கல்லூரி பெயரைச் சொன்னதும், “நீங்களும் அங்க தான் படிக்கிறீங்களா? அங்க தான் என் ஆளும் படிக்கிறா” என வாய் தவறிச் சொல்லி விட்டுத் திருதிருவென விழித்தான்.
அவன் விழியைக் கண்டு சிரித்த விஷ்ணு, “உன் ஆளா? ஆருடா அது?” என விசாரிக்க, “பிபிஏ – டூரிசம் அண்ட் ஹாஸ்பிடலிட்டி மேனேஜ்மென்ட் படிக்கிறா” என்றதும் புருவம் சுருக்கினான்.
“ஞானும் எம்பிஏ டூரிசம் தான் படிக்குன்னது… எனிக்கு ஜூனியரானோ அப்போ?”
“பாருடா… அங்க ஹெல்ப்புக்கு யாருமே இல்லைன்னு புலம்பிட்டு இருந்தா. உங்களுக்கு ஃப்ரீ டைம் இருந்தா அப்போ அப்போ பார்த்துக்கோங்க அண்ணா…” என்றதில், அவனும் இயல்பாக “நோக்கிக்கிட்டா போயீ!”என்றபடி பிரணீத்திற்கு செக் வைத்தான்.
முந்தைய இரு ஆட்டமும் விஷ்ணுவைத் தோற்கடித்தவன், இப்போது அன்விதாவைப் பற்றி பேசியதும் ஒரு ஆட்டத்தை இழந்திருந்தான்.
“உன்டே ஆளைப் பற்றி சம்சாரிச்சப்போ தன்னே புத்தி வொர்க் செய்யா தாயோ? (உன் ஆளைப் பத்தி பேசுனதும் மூளை வேலை செய்றதை நிறுத்திடுச்சோ?)” விஷ்ணு கண் சிமிட்ட, அசடு வழிந்தான் பிரணீத்.
பிரணீத்திற்குப் பிரியமானவள் என்ற எண்ணத்தில் தான் அன்விதாவைப் பார்க்க அவளது வகுப்பிற்குச் சென்றான் விஷ்ணு வர்தன்.
ஆனால், அவனுக்கும் அவளைப் பிடித்துத் தொலைந்ததே இத்தனை பிரச்சினைக்கும் காரணமானது.
விஷ்ணுவைக் கண்டதும் அன்விதாவின் விழிகள் மிளிர, “நீங்க விஷ்ணு தான? பிரணீ உங்க போட்டோ அனுப்புனான்…” என இயல்பாக வந்து பேசியவளையும், அவளது வெகுளிச் சிரிப்பையும் முதல் பார்வையிலேயே கொள்ளையடித்துச் சென்றான் விஷ்ணு.
அதன்பிறகு அவ்வப்பொழுது பார்த்துக்கொள்வது அல்லாது, தினம் ஏதேனும் காரணம் சொல்லி இருவரும் கேன்டீனில் சந்திப்பது வழக்கமானது.
அவனே திட்டமிட்டு ஏற்படுத்திய சந்திப்பு எனப் புரியாதவளாக, அன்விதாவும் அவனுடன் நட்பு பாராட்டினாள்.
அவனது அன்பும், கரிசனையும் நட்பைத் தாண்டி அவன் மீது ஈர்ப்பைக் கொடுத்திருந்தது. அந்த வயதிற்கே உரிய காதலையும் கொடுத்திருந்தது.
விஷ்ணுவாலும் அவளை விட்டுக்கொடுக்க இயலவில்லை.
பிரணீத்திற்குத் துரோகம் செய்வது உறுத்தினாலும், அன்விதாவும் அவனையே விரும்புவதை உறுதி செய்த பிறகு அந்த உணர்வும் இல்லை.
‘அவளே தன்னை காதலிக்கும்போது, வெறும் ஒருதலைக் காதலுக்காக நான் என்ன செய்ய முடியும்?’ அதுவே விஷ்ணுவின் வாதம்.
விஷ்ணு முதுகலையும் அன்விதா இளங்கலைம் முடித்து வரும்போதே விஷ்ணு வீட்டில் காதலை உரைத்தவன், அது யாரென்று சொல்லாமல் மறைத்து விட்டான்.
அன்விதாவிற்கும் பிரணீத்திடம் இவ்விஷயத்தைப் பகிர வேண்டும் என மனம் துடித்தது. ஆனால் அவன் இறுதி வருட ப்ராஜெக்ட், மேற்படிப்பிற்காக வெளிநாட்டில் அவனும் அர்ஜித்துமாக விண்ணப்பம் செய்ததற்காக நேரமின்றி ஓடிக்கொண்டிருந்தான்.
“ஃபாரின்ல படிக்கிறது எல்லாம் செட் ஆகாது சேட்டா” என்றவனை எல்லாம் அர்ஜித் கண்டுகொள்ளவில்லை.
“காலேஜ் டாப்பராணடா நீ! மற்றொருத்தன்டே முன்னில் கை கட்டி வேலை செய்யான் போகுன்னோ? நீ என்டே கூூட வருன்னு… பிஜி செய்யுன்னு, பிசினஸ் செய்யுன்னு… தட்ஸ் ஆல்! (காலேஜ் டாப்பர்டா நீ. இன்னொருத்தன்கிட்ட கை கட்டி வேலை பார்க்கப் போறியா? என் கூட வர்ற… பிஜி பண்றோம், பிசினஸ் பண்றோம்… டாட்!)” அர்ஜித் முடிவாகக் கூறி விட்டான். அன்விதாவைப் போல அவனும் தனது முன்னேற்றத்திற்காக இத்தனை மெனக்கெடுவதில் பிரணீத்திற்கு விழி கலங்கியது.
நல்ல நட்புகளைப் பெற்றதே அவனுக்குச் சாபமும் ஆனதை அறியாதவனாக!
இதனைக் கேள்விப்பட்டு முதலில் மகிழ்ந்தது அன்விதா தான்.
“வாவ்டா… ஃபாரின்ல படிக்கப் போறியா? ஹையோ செம்ம ஹேப்பியா இருக்குடா. அர்ஜிக்கு என் சார்பா பெரிய தேங்க்ஸ் சொல்லிடு. என்கிட்ட நீ இன்ட்ரோவே குடுக்கல பார்த்தியா? எப்படா குடுப்ப?” எனக் குறைபட்டாள்.
“ஆமா அவன் ஊருக்கு வர்ற நேரம் நீ இருக்க மாட்டுற, நீ ஊர்ல இருக்குற நேரம் அவன் இருக்க மாட்டுறான். சீக்கிரமே இன்ட்ரோ குடுத்துடுறேன் சிட்டு. உன்னை மாதிரி அவனும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப க்ளோஸ் ஆகிட்டான்…”
“ம்ம் தெரியுது… சார் இப்பலாம் எங்களை டீல்ல விடுறதைப் பார்த்தாலே!” என்றவளுக்கு பொறாமை எல்லாம் இல்லை. உண்மையில் அவனுக்கு அழகான நட்பு கிடைத்ததில், மிக்க மகிழ்ச்சியே.
இளங்கலையை முடித்து விட்டு, ஒரு வருட கோர்ஸ்காக கோயம்பத்தூரில் பயின்று கொண்டிருந்தாள் அன்விதா.
பிரணீத்திற்கும் வெளிநாட்டிற்குச் செல்லும் முன் அவளிடம் காதலைப் பகிர்ந்தே விட வேண்டுமென்ற ஆர்வம் இருக்க, இறுதித் தேர்வு முடிந்து அவளைக் காண விழைந்தான்.
ஆனால், அவனே எதிர்பாராது விஷ்ணுவின் மீது அவளுக்கு இருந்த காதலைப் பற்றி கூறியவளை அதிர்ந்து பார்த்தான்.
“அனு… நீ… வந்து… விஷ்ணு அண்ணா உன்னை விரும்புறாரா?” எனக் கேட்டான் அடக்கப்பட்ட கண்ணீருடன்.
“அவர் வந்து சொல்லாம நானா எப்படிடா சொல்லுவேன்… அவரும் தான் விரும்புறாரு. வீட்ல கூட சொல்லிட்டாராம். சீக்கிரமே மேரேஜ் பண்ணலாம்னு வீட்ல சொல்றாங்க…” என்று வெட்கம் நிரம்ப விரல்களை ஆராய்ந்தபடி கூறியவள், நிமிர்ந்து நண்பனின் முகத்தை ஆராய்ந்திருந்தால் பல கதைகளைத் தெரிந்திருக்கலாம்.
விதி அவளையும் விட்டு வைக்கவில்லை.
விஷ்ணு ஏமாற்றி விட்டது அப்போது தான் உறைத்தது பிரணீத்திற்கு. அண்ணனை போல எண்ணினானே! தான் விரும்புவது தெரிந்தும்… தொண்டையை அடைத்தது.
“நீ… நீ விளையாடலையே?” குரல் நடுங்கக் கேட்டவனை அப்போதும் பார்க்கத் தயக்கம் கொண்டு, “போடா… விளையாடுறாங்க! நிஜமா தான் சொல்றேன்” என்று இதழ் விரித்தாள்.
அவனுக்கு இதயமே வெடித்த நிலை. என்ன செய்வது ஏது செய்வதென்று ஒன்றும் தெரியவில்லை.
“காங்கிரேட்ஸ்” என்றவன் அவளைப் பாராமல் திடுதிடுவென வீட்டிற்கு ஓடி விட்டான்.
மூச்சிரைத்தது. மூச்சே அடைத்துச் செத்து விடக்கூடாதா என்பதே அவனது பேராசையும்.
மூச்சு முட்டும் காதலில் திணறினான். நட்பைத் தாண்டி தன்னிடம் எவ்வித உணர்வும் அவளுக்கு வரவில்லை என்பதே அவனுக்குப் பெரும் அடியாக!
தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தவனைக் கண்டு பதறிய வேணி தான், “டேய் டேய்… என்னடா ஆச்சு? ஏன்டா அழுகுற?” என பயந்து கேட்டதும்,
“வேணி… அவ போய்ட்டா… அவ… அவ… என் காதலை சொல்லவே முடியாம… வலிக்குதுடி…” என்றவனின் கூற்றை ஏற்றுக்கொள்ளவே கடினமாக இருந்தது.
“என்னடா பேசுற?” எனக் கேட்ட பிறகே அவளுக்கு விஷயம் புரிந்தது.
“நீ கவலைப்படாத. எப்டியா இருந்தாலும் அண்ணியை யாருக்கும் என்னால தார வார்க்க முடியாது…” என்ற முடிவுடன் வேணி அனகாவின் விடுதிக்குச் சென்றாள்.
அங்கு விவரத்தைக் கூறியதும், “ஹே வேணி… விஷ்ணு சேட்டன் யாரையோ விரும்புறதா பரஞ்ஞு தான்! ஆனா அது உன்டே ஏடத்தி ஆயிருக்க மாட்டா… ஞான் ரெண்டு நாளில் ஊருக்குப் போகுன்னல்லோ? அப்படி விஷ்ணு சேட்டன் லவ் பண்றது உன்டே ஏடத்தி ஆனெங்கில்… ஞான் கண்டிப்பாயி டார்லிங் லவ் பத்தி பரஞ்சிடும்! சரியா…”(ஹே வேணி… விஷ்ணு சேட்டா யாரையோ விரும்புறதா சொன்னாரு தான். ஆனா அது உன் அண்ணியா இருக்காது. நான் ரெண்டு நாள்ல ஊருக்குப் போறேன்ல… அப்படி விஷ்ணு சேட்டா லவ் பண்றது உன் அண்ணின்னா, நான் கண்டிப்பா டார்லிங் லவ் பத்தி சொல்லிடுவேன். சரியா…)” என்று சமாதானம் செய்து விட்டே அடிமாலிக்குச் சென்றாள்.
தோழியின் மீதிருந்த நம்பிக்கையில் வேணியும் அமைதி காக்க, இதை எல்லாம் உணராத பிரணீத் உலகமே இருண்டது போல, எதிலும் நாட்டமின்றி எங்கோ வெறித்துக்கொண்டிருந்தான்.
அர்ஜித், வெளிநாட்டிற்குச் செல்ல தேவையான டாக்குமெண்ட்களை எல்லாம் தயார் செய்ய அடிமாலிக்குத் தான் சென்றிருந்தான்.
அவனுக்கும் நடக்கும் உள்நாட்டுப் போர்கள் அறியவில்லை.
இதற்கிடையில் இரு வீட்டாரும் பேசி விஷ்ணு, அன்விதாவின் திருமண தேதியைக் குறித்து விட்டனர்.
அனகா அடிமாலிக்குச் சென்று வேகமாக விஷ்ணுவைப் பார்க்கச் செல்ல, அவன் முகம் மலர்ந்து அன்விதாவிடம் பேசிக்கொண்டிருந்தான் அலைபேசியில்.
“சேட்டா…” அனகா பேச வர, “ஒன் செகண்ட் அன்வி” என்ற விஷ்ணு, “இவிட வா அனு. ஹே அன்வி… “என்டே குட்டித் தங்கச்சியோடு சம்சாரிக்குன்னோ?” எனக் கொடுத்ததில், அவளுக்கும் சங்கடமாக இருந்தது.
அனகா இரு வார்த்தை பேசிவிட்டு, மீண்டும் விஷ்ணுவிடமே கொடுக்க, அவனோ “நாளைக்கு வீட்டிலேயே எங்கேஜ்மெண்ட் இருக்கு அனு! நினக்கு ஸ்கூல் லீவ் தானே? இல்லெங்கிலும் லீவ் போட்டுடு…” என்றவன் மீண்டும் அன்விதாவிடம், “ஹனிமூன் எவிடே பிளான் செய்யாம்?” என்று ஆசையுடன் பேசிக்கொண்டிருக்க, அனகாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அழுகையாக வந்தது.
தமையனின் கண்ணில் மின்னும் கனவும் ஆசையும் அவளுக்குப் பெரும் சங்கடத்தைக் கொடுக்க, அவனிடம் பேச வந்தும் பேச இயலவில்லை.
அர்ஜித்திடம் சொல்லி விடலாம் என்றால், அவனிடம் சொல்லவும் தைரியமில்லை.
பிரணீத்தைத் தவறாக எண்ணி விட்டால்?
இப்படியே பயந்து பயந்து நாள்களை ஓட்டும்போதே அன்விதா, விஷ்ணுவிற்குச் சென்னையிலேயே வீட்டளவில் நிச்சயம் நிகழ்ந்தது.
அப்போது தான் அர்ஜித்திற்கு இவர்களின் நட்பைப் பற்றியே தெரியும்.
“பரஞ்ஞதே இல்லடா… ஏடத்தி தான் உன்டே பெஸ்ட் ஃபிரெண்டோ?” கேட்டவனிடம் முயன்று முறுவலித்தான்.
அன்விதாவோ, “தேங்க்ஸ் அர்ஜி. அவனை ஃபாரின் கூட்டிட்டுப் போய் பெரிய ஆள் ஆக்கிடுங்க” என்று ஆர்வமாகக் கூறினாள்.
தனது வீட்டினர் அவனைப் புழுவை விடக் கேவலமாகப் பார்ப்பது அவளும் அறிந்ததே. அவளையே சில நேரம் அப்படி தான் பார்ப்பார்கள். அவர்களை எதிர்ப்பதெல்லாம் வேலைக்காகாது எனப் புரிந்தவளுக்கு, பிரணீத் பெரிய அளவில் வரவேண்டுமென்ற பேராசை இருந்தது.
மதிப்பெண்கள் சற்று குறைந்தாலும் கூட, அவள் பேச மாட்டாள்; கோபப்படுவாள். அவள் கோபப்படும் ஒரே விஷயம் அவனது படிப்பு மட்டுமே!
கட் ஆஃப் மதிப்பெண்கள் எடுத்தும், நல்ல கல்லூரி கிடைத்தும் கூட ஸ்காலர்ஷிப் போக, கட்ட வேண்டிய தொகை அதிகம் இருந்ததில் முதலில் கல்லூரியில் சேர மறுத்தவனை வீட்டிற்குத் தெரியாமல் தனது சேமிப்பைக் கொடுத்துக் கல்லூரியில் சேரச் சொன்னவள். அவன் எப்படியேனும் மற்றவர்கள் மதிக்கும் அளவு பணத்திலும் பதவியிலும் உயர்ந்து வந்திட வேண்டும் என்பதே அவளது ஒரே வேண்டுதல். அவளது அப்பழுக்கற்ற அன்பிற்குச் சொந்தக்காரன்.
அவள் ஒரு வாழ்க்கையை விரும்பியதன் பிறகு, அதனைத் தடுத்து நிறுத்துவது முட்டாள்தனம் என உணர்ந்தவன், மொத்த வலிகளையும் தனக்குள் புதைத்துக் கொண்டு அவளது நிச்சயத்தில் கலந்து கொண்டான்.
விஷ்ணுவிடம் சிறிதேனும் குற்ற உணர்வை எதிர்பார்த்தான். ஆனால் அவனோ பிரணீத்தை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. அவனது செயலில் கோபம் எழுந்தது தான். ஆனால், அர்ஜித்?
தனது தமையனின் திருமணத்தை எண்ணி குதூகலித்து இருந்தவனிடம் என்ன சொல்ல? ‘உன் தமையனால் எனது வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது’ என்றா? ஒருதலைக்காதலை வைத்துக்கொண்டு நியாயம் கேட்கச் சென்றால், அவன் தனது நட்பைத் துண்டித்து விட்டால்?
அவன் அன்பையும் இழந்து விட்டால், இனி அவனுக்கென்ன இருக்கிறது? அன்விதாவைப் போல அர்ஜித்தையும் இழந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
முகம் இறுக, இதயம் வலிக்க அதில் கலந்து கொண்ட பிரணீத்தைக் கண்கொண்டு காண இயலவில்லை வேணிக்கு.
மொத்தக் கோபமும் அனகாவின் மீது திரும்பியது. பள்ளிக்குச் சென்றதும் அனகாவைக் கன்னத்தில் அறைந்தாள் வேணி.
“துரோகி… எனக்கும் என் அண்ணனுக்கும் துரோகம் பண்ணிட்டல்ல? உன்னை நம்புனேன்… என் நம்பிக்கையைப் பாழாக்கிட்டீல!” வேணி தேம்பினாள்.
அனகா அவளது அடியை வாங்கிக்கொண்டு, “என்னால முடியலடி… சேட்டாவோட சந்தோஷத்தை என்னால…” எனச் சொல்லி முடிக்கும் முன், “அப்போ என் அண்ணன் எக்கேடு கேட்டாலும் பரவாயில்ல… அதுசரி! நீ என்ன அவன் கூடவா பிறந்த? உங்கிட்ட நான் உண்மையை எதிர்பார்த்தது என் தப்பு தான். நானே அர்ஜி அண்ணாட்ட சொல்லிருக்கணும்… தப்பு பண்ணிட்டேன், ரொம்ப தப்பு பண்ணிட்டேன்! இப்ப என் அண்ணன் என் அண்ணனா இல்ல… இப்ப சந்தோஷமா உனக்கு?” எனக் கத்திட,
“அங்ஙனெ ஒன்னும் பரயாதே வேணி…(அப்டிலாம் பேசாத வேணி)” என்றவளுக்கும் அந்த பிரச்சினையைச் சரி செய்ய போதிய முதிர்ச்சி இல்லை.
“இனி என் மூஞ்சிலயே முழிக்காத…” என்றவள் தான், அதன்பிறகு அவளது நிச்சயம் வரைக்கும் அனகாவிடம் பேசவே இல்லையே!
அன்விதாவின் திருமணத்தில் கண்டிப்பாக பிரணீத்தால் இருக்க இயலாது என உணர்ந்தவன், வெளிநாட்டில் விண்ணப்பித்திருந்த கல்லூரியில் இருந்து உடனே வரும்படி தகவல் வந்ததாகச் சொல்லிக்கொண்டு, அங்கு பறந்தே விட்டான்.
அர்ஜித் ஏற்கனவே திருமணத்தைக் கணக்கிட்டுச் சேரும் நாளைச் சொல்லி இருந்தான். ஆனால் பிரணீத்தின் நல்ல நேரமோ என்னவோ அவன் தேதியைக் குறிப்பிட மறந்திருக்க, அவனை உடனே வரச் சொல்லியதைப் பயன்படுத்திக் கொண்டான்.
ஆனால் அன்விதாவிற்கு வெகு மன வருத்தம்.
திருமணத்திற்கு முந்தைய நாள் கேவி கேவி அழுது விட்டாள்.
“ஏன் அர்ஜி அவனை அனுப்புனீங்க? என் கல்யாணம் முடிஞ்சதும் போயிருக்கலாம்ல…” என்றவளின் கண்ணீரைக் கண்ட பிறகே, அவனுக்கும் அவர்களது நட்பின் ஆழம் புரிந்தது.
“ஞான் பரஞ்ஞேன் ஏடத்தி! அவன் கேட்டதே இல்ல… அவன் போக வேண்டிய சூழ்நிலை, அதனால தான்…” என்றவனுக்கும் வருத்தமாக இருந்தது.
அவளோ இன்னும் தேம்பியதில், “வேணுமெங்கில் நம்ம கல்யாணத்தை அவன் வருன்னது வரை போஸ்ட்போன் செய்யாமோ?” எனக் கிண்டலாகக் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள். அதற்கும் வழி இருக்கிறதா என்பது போலான பார்வை அவளிடம்.
அந்நேரம் அங்கு வந்த விஷ்ணு, “இப்போ எந்தா… அவன் படிக்க தான போயிருக்கான்? வந்துடுவான்…” என்று அன்விதாவைச் சமாதானம் செய்தான். ஆனாலும் எரிச்சல் சூழ்ந்தது. அவன் சென்றதில் விஷ்ணு நிம்மதியில் இருக்க, இவளோ இப்படி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறாளே!
மறுநாள் முதல் வேலையாக, பிரணீத்திற்கு வீடியோ கால் செய்து விட்டான் அர்ஜித்.
“டா… ஏடத்தி நீ இல்லன்னு ரொம்ப ஃபீல் செய்யுறாங்க… முதல்ல சம்சாரி!” என அவள் அறைக்கே சென்று கொடுக்க, அவன் விழிகள் கலங்கியது, அவளை மணக்கோலத்தில் கண்டு.
“பிரணீ…” அவளுக்கும் கண்கள் கலங்கி இருக்க, “நீ இருந்துருக்கலாம்ல?” என மீண்டும் கண் மையைக் கரைக்க ஆயத்தமானாள்.
டா… நீ இருந்தா தான் ஏடத்தி கல்யாணம் செய்யுவாங்களாம். ரெண்டு வருஷம் வெயிட் செய்ய பரஞ்சிடலாமோ?” அர்ஜித் குறும்பாகக் கேட்க, பிரணீத் வலியை விழுங்கிக்கொண்டு,
“அவள் தான் லூசு மாதிரி கல்யாணத்து அன்னைக்கு அழுதுட்டு இருக்கான்னா நீயும் ஏத்தி விடாதடா.
சிட்டு… சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கோ. நான் படிக்கணும்னு தான ஆசைப்பட்ட? இப்ப படிக்க தான் வந்துருக்கேன். நீ நினைச்ச மாதிரி நான் ஆகணும்ல…” என்று சமன் செய்திட,
“எனக்கு இருக்குற ஒரே ஃப்ரெண்ட் நீ தான். எனக்கு ஒரு நல்லது நடக்கும்போது நீ இருக்கணும்னு நான் ஆசைப்படுறது தப்பா?” என்றாள் வேதனையாக.
“சாரி சிட்டு… சீக்கிரமே வந்து உன்னைப் பார்க்குறேன்… ப்ளீஸ்…” என்றவன், “டேய் சேட்டா பாய்… என் அருமை நண்பியை உன்னை நம்பி மட்டும் தான் உன் வீட்டுக்கு அனுப்புறேன். அவள் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் உன்னை தான் கேட்பேன்…” என்று மிரட்டலாகச் சொன்னாலும் அதில் இருந்த அழுத்தம் அர்ஜித்திற்கும் புரிந்தது.
“கவலையே படாதே… ஏடத்தியை ஞான் வெங்காயம் கூட உறிக்க விட மாட்டேன்…” என்றான் நக்கலாக.
அன்விதா சமாதானம் ஆகி விட்டாளா? திருமணத்திற்குப் பிரச்சினை செய்யாமல் தயார் ஆகுவாளா? என்பதே விஷ்ணுவிற்குச் சற்று பயமாக இருக்க, மணப்பெண்ணைப் பார்க்கக் கூடாது என்ற தடையை மீறி அவள் அறைக்கு வந்தவன், அவள் அப்போதும் பிரணீத்திடம் வீடியோ கால் பேசுவதில் கோபமடைந்து விட்டான்.
‘ஃப்ரெண்டாம்… ஈ லோகத்துல அல்லாத ஃப்ரெண்டு…’ எனப் பல்லைக் கடித்தவன், அப்போதைக்குக் கோபத்தை மறைத்துக்கொண்டான்.
திருமணம் முடியும் வரைக்கும் அர்ஜித் அன்விதாவிடம் நன்றாகத் தான் பேசிக்கொண்டிருந்தான்.
ஆனால் விஷ்ணு, “அவள் ரொம்ப சென்சிடிவ்… நீங்க விளையாட்டுக்கு ஏதாச்சும் பேசுனா கூட சீரியஸ் ஆகிடுவா…” என்று அர்ஜித்தையும் இயல்பாகப் பேச முயன்ற அனகாவையும் முதன்முறை அடக்கிட, இருவருக்கும் சற்று சங்கடமானது உண்மை தான்.
அந்த உறவிற்கு மரியாதை கொடுக்க வேண்டியும், தனது மனைவியைக் கிண்டல் செய்வது அவனுக்குப் பிடிக்கவில்லை என்றும் உணர்ந்து அனகாவும் மரியாதையைக் கொடுத்திட, அர்ஜித்தும் அதன்பிறகு அவளிடம் பெரியதாகப் பேச்சு வைத்துக்கொள்ளவில்லை.
அவனுக்கு அவளுடன் உரையாட நேரமும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். வீட்டிலும் அவளை நன்முறையில் பார்த்துக்கொள்வதால் அவளைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவை இல்லை என்ற எண்ணம் தான். ஆனால் இத்தனை காயப்பட்டிருப்பாள் என அவனுக்கும் தெரியவில்லை.
இப்போது நினைத்துப் பார்க்கையில் தான், பிரணீத் திடீரென வெளிநாட்டிற்குச் சென்றதும், அவன் கலங்கிய கண்களும் வலி நிறைந்த பார்வையும் புரிந்தது அர்ஜித் அகனுக்கு. அவன் நேசத்தை எண்ணிக் கலங்குவதா அல்லது, தன்னால் கலைந்த நண்பனின் நேசத்தை எண்ணிக் கலங்குவதா அவனுக்கே புரியவில்லை.
“ஐ நீட் யூ மொழி! அழுத்தம் தாங்க முடியல…” என்று அவள் தலையணையில் நெற்றி வைத்து அழுத்தினான் ஆடவன்.
அங்கோ குளியலறையில் வெகு நேரம் இருந்தவளைக் காணாது ரூஹி தான் கதவைத் தட்டினாள்.
“அகா… என்ன பண்ற? வெளில வா…” அவள் சத்தம் கேட்டதும், உடை மாற்றக் கூடத் தோன்றாது அப்படியே ஈரத்துடன் வெளியில் வந்தவளை இருவரும் விசித்திரமாகப் பார்த்தனர்.
ரிஷான் அவளது விழியில் கண்ட வெறுமையில் சிந்தனையுடன் வெளியில் செல்ல, “ஏய்… என்னடி இப்படி நனைஞ்சு போய் வர்ற? லூசு…” என்று அவள் தலையை துவட்டி விட்ட ரூஹி, மாற்று உடையையும் வலுக்கட்டாயமாக மாற்றச் சொன்னாள்.
அன்விதாவும் அழுது ஓய்ந்து விட்டு, பயந்திருந்த அமையாவைச் சமன்படுத்தி வெளியில் வந்து பார்க்க, அங்கு பிரணீத் இல்லை.
மீண்டும் துளிர்த்த கண்ணீரை உள்ளிழுத்துக்கொள்ள, அப்போது விஷ்ணு அங்கு வந்தான்.
அவனை நிமிர்ந்து பாராது அடுக்களைக்குச் சென்றவள், அங்கு சுஜாதா இருந்ததைப் பார்த்து விட்டு அமையாவிற்கு உணவை எடுக்க, சுஜாதா அவளை ஆராய்ந்தார்.
“எப்போ வந்தே அன்வி?” அவர் வினவ,
அவள் கார் பிரேக் டவுன் ஆனதை கூறி விட்டு, அகமொழிக்கு அழைத்ததாகக் கூறியதில் அவர் பொங்கி விட்டார். நடந்ததைக் கூறியதும் அன்விதா உணவுத் தட்டை அப்படியே கீழே போட்டு விட்டாள்.
“என்ன அம்மே சொல்றீங்க? அவள் வீட்டை விட்டு போய்ட்டாளா? ஏன்…” என மீண்டும் கலங்கினாள்.
தன் மீது அன்பு காட்டுபவர்களுக்கும் கூட ஏன் தான் தண்டனை கொடுத்து வலிக்க வைக்கிறாரோ இந்தக் கடவுள் என்ற விரக்தி அதிகரித்தது.
“அவள் செய்த காரியத்துக்கு வேற எந்தா செய்யான் பரயுன்னு?” என எரிச்சலுற்றவர், “எந்த பிரச்சினையா இருந்தாலும் என்டே கிட்ட பரயு அன்வி… நினக்கும் விஷ்ணுவிற்கும் எந்தா ஆயி?” எனக் கேட்க, கசந்த முறுவல் அவளிடம்.
“சொன்னா புரிஞ்சுக்குற வயசு உங்களுக்கும் இல்ல, நீங்க சொல்ற அறிவுரையைக் கேட்குற மனநிலைல நானும் இல்ல.”
மருமகளின் வார்த்தையில் சற்றே திகைத்தார்.
அவரை கண்டுகொள்ளாது வேகமாக மாடிக்குச் சென்றாள் அர்ஜித் அகனைத் தேடி.
கதவைத் தட்ட வந்தவள், பின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
தலையணையில் முகம் புதைத்து அர்ஜித் படுத்திருந்த கோலம் வேதனை கொடுத்தது.
“அர்ஜி…”
அன்விதாவின் குரல் கேட்டதும் நிமிர்ந்து அமர்ந்தவனுக்கு அவளைக் காணவே குற்ற உணர்வாக இருந்தது.
“உங்களுக்கும் அகாக்கும் இருக்குற பிரச்சினையை நீங்க சண்டை போட்டுனாலும் சரி பண்ணிடுங்க. அவள் ரொம்ப நல்ல பொண்ணு அர்ஜி. வீடியோ போட்டது தப்பு தான்… ஆனா, அதுக்காக அவளை விலக்கி வச்சுடாதீங்க. ப்ளீஸ்… அவளுக்கும் உங்களைப் பிடிக்கும் அர்ஜி…” என்றாள் தவிப்பாக.
“அறியாம்!”(தெரியும்)
“அப்போ கூட்டிட்டு வாங்க. ஏதோ கோபத்துல போயிருப்பா… ப்ளீஸ்!”
“கூட்டிட்டு வந்து? மறுபடியும் என்னால அவ எந்தா எல்லாம் இழந்தான்னு லிஸ்ட் போடவா? இப்போ இல்லைன்னாலும் என்னைக்கு இருந்தாலும் அவளுக்கு அது உறுத்தல் தானே…” எங்கோ பார்த்தபடி பேசியவனிடம்,
“எல்லா பிரச்சினைக்கும் காரணம் விஷ்ணு தான் அர்ஜி!” என்றாள் கோபத்துடன்.
“அறியாம்…”
அதில் புருவம் சுருக்கியவள், “அப்போ ஏன் அவளைக் கூப்பிடல…” என ஆதங்கத்துடன் கேட்க,
“சிறகைப் பிய்ச்சு காதலைக் கொடுக்குறதில் எனக்கு உடன்பாடில்லை… என்டே சேட்டன் மாதிரி…” என ஒற்றை வரியில் அவனது மனதையும் அவளது நிலையையும் ஒன்றாய் காட்ட, அன்விதா திகைத்து நின்றாள்.
அகன் வசப்படுவாள் (வான்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
87
+1
1
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அகன் வாவ்.