Loading

திமிர்-14

 

 

வீட்டின் பின்புறத்தில் இருந்த கிணற்றின் மீது ஏறி நின்று, தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கேமிராவைத் தூக்கிப் பிடித்து, கேமிராவின் கண்கள் வழியாய் எதையோ படம் பிடித்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன்.

 

 

 

 ஒரு குறிப்பிட்டக் கோணத்தில், கேமிராவைப் பிடித்து, தான் கண்களால் கண்ட காட்சியைக் கருவிக்குள் சிறைப்பிடிக்க முயன்றுக் கொண்டிருந்தான். நெடுநேரமாய், ஒரே இடத்தில், அதுவும் அந்தப் பெரிய வட்டக் கிணற்றின் விளிம்பில் நின்றுக் கொண்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

 

 

 அவனின் முன் நெற்றியில் வியர்வை அரும்பியிருக்க, நெற்றி தழுவி மறைத்திருந்த கேசம், வியர்வையின் பிசுபிசுப்பில் நெற்றியோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தது. மரங்களின் இடைவெளிகளில் விழுந்த சூரியஒளி, நம் நாயகனின் சிவந்த நிற மேனியில் பட்டுத் தெறித்து பளபளத்து. 

 

 

 

ஆனால் எதையுமே கருத்தில் கொள்ளாமல், கருமமே கண்ணாக அவன் அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்த அதே நேரம், மென்கொலுசு சப்தமிட, மெதுவாய் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது.

 

 

 

புகைப்படமெடுக்கும் தீவிரத்தில், செவிக்குள் கேட்ட கொலுசொலியை அலட்சியம் செய்து, தன் காரியத்திலேயே கண்ணாக இருந்தான் வீரபத்ரன்.

 

 

 

“உனக்கெல்லாம் அறிவு இருக்கா? நிஜமாவே லூசுதான்டா நீ..!” என திடீரென சத்தமாய் கேட்டக் குரலில், கவனம் சிதறி தடுமாறி, கீழே குதித்து, தரையில் காலூன்றி நின்றான் வீரபத்ரன். கொஞ்சம் சுதாரிக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் கிணற்றுக்குள் விழுந்திருப்பான். நினைக்கும் போதே, அவன் நெஞ்சு திக் திக்கென அடித்துக் கொண்டது.

 

 

 

 

“பைத்தியக்காரி! பைத்தியக்காரி! லூசாடி நீ?” என எதிரில் நின்றிருந்த மேகவர்ணாவைப் பார்த்துக் கேட்டான் வீரபத்ரன்.

 

 

 

 

“யோவ்! டென் ருப்பீசு! என்ன நான் கேட்ட கேள்வியையே என்கிட்டேயே திருப்பி கேட்கிறே?”

 

 

 

“இந்தாரு ஒழுங்கா ஓடிப் போயிரு! நீ ஊரைக் கூட்டுற மாதிரி போட்ட சத்தத்தில், அந்தக் குருவி ஓடியே போயிருச்சு.!”

 

 

 

 

“அந்தக் குருவி அங்கணயயேதான் திரியும். முதலில் நான் கேட்டதுக்கு பதில் சொல்லு!”

 

 

 

“சொல்ல முடியாது மயிலம்மா! என்ன பண்ணுவ?”

 

 

 

 

“நானே பிடிச்சு கிணற்றுக்குள் தள்ளி விட்டுடுவேன். வெர்ரி சிம்பிள்!” கைக்கட்டி நின்றபடி சாதாரணமாய் சொன்னாள் அவள்.

 

 

 

 

“ஒட்டுமொத்த குடும்பமும் கொலைகாரக் குடும்பமா இருக்கு. உனக்கு என்னதான்டி பிரச்சனை? சும்மா சோலியைப் பார்த்துக்கிட்டு இருந்தவனை கிணத்துக்குள்ளே தள்ளி விடப் பார்க்கிறே? புள்ளையைப் பெத்து வைக்கச் சொன்னால், பைத்தியக்காரியைப் பெத்து வச்சிருக்காரு என் மாமன்.!”

 

 

 

 

“இந்தாரு பத்துரூவா! ரொம்ப ஓவரா பேசினேன்னு வையி அம்புட்டுதேன் சொல்லிட்டேன். பத்துரூவா நோட்டை செல்லாக்காசாய் மாத்தி விட்டுப்புடுவேன் பார்த்துக்கோ!”

 

 

 

 

“எல்லாம் இந்த அஞ்சு ரூபாய் மைடப்பியால் வந்தது! டென்ரூப்பீஸ்ன்னு இவ கிட்டே சொல்லலைன்னு யார் அழுதா? அண்ணின்னு அணு ஆயுதத்தைக் கூட்டிட்டு வந்து வீட்டில் உட்கார வச்சிருக்கிறான் எங்கண்ணே. அழகரு! உன்னை நினைச்சால் எனக்கு பாவமா இருக்குடா!”எனத் தனக்குத்தானே வீரபத்ரன் புலம்பிக் கொண்டிருக்க,

 

 

 

 

“ஹலோ மிஸ்டர்.வீரம்! கேள்வி கேட்ட நான் கண்ணு முன்னே நிற்கிறேன். அண்ணாந்து பார்த்து பேசிட்டு இருந்தால் என்ன அர்த்தம்?” எனக் கேள்வி கேட்டபடி எதிரில் வந்து அவன் கண்பார்த்து நின்றாள் மேகவர்ணா.

 

 

 

“என்னமோ அர்த்தம். நீ முதலில் அங்கிட்டு போடி!”

 

 

 

“வாடி! போடின்னு சொன்னே.. அய்த்த மயன்னு கூடப் பார்க்க மாட்டேன் வாயை உடைச்சுருவேன்.!”

 

 

 

“சொல்றதுக்கு எல்லா உரிமையும் எனக்கு இருக்குடி..! எல்லா ரைட்ஸுமே எனக்கு மட்டும் தான்டி என் மாமன் மவளே..!”

 

 

 

“ஆமா! ஆல் ரைட்ஸ் ரிஸர்வ்டுன்னு இவுகளுக்கு எழுதிக் கொடுத்துடுக்கோமாக்கும்? மிஸ்டர்.வீரம்! இன்னும் நான்தேன் அரசி மயன்னு சொல்லக் கூட தைரியமில்லாத சின்னப்புள்ளையா இருந்துக்கிட்டு, என்னத்துக்கு இந்தப் பேச்சு? அப்படியே உங்கப் பேச்சைக் கேட்டு நாங்க மயங்கி விழுந்துருவோமாக்கும்?”

 

 

 

“நீ என்கிட்டே மயங்கி, நாளாகிப் போச்ச மயிலம்மா! இல்லைன்னு என் கண்ணைப் பார்த்து சொல்லு!”

 

 

 

“இல்லை! சொல்லிட்டேனே..!” அவன் விழி பார்க்காமல் எங்கோ பார்த்துச் சொல்லிவிட்டு, அவன் முகத்தில் பார்வையை நிலைக்கவிட்டாள் மேகவர்ணா.

 

 

 

 

“மேகவர்ணான்னு பேரை வச்சிக்கிட்டு, மெகா சீரியல் ஹீரோயின் மாதிரி நடிக்காதே டி! அடியேய் என் மாமன் மவளே.. என்னைப் பாரு!” என அவன் அவளைப் பார்க்க,

 

 

 

“நான்தேன் இல்லைன்னு சொல்லிட்டேனே? ஓயாமல் ஒரண்டை இழுத்துக்கிட்டு திரிஞ்ச, எங்க அண்ணேங்கக் கிட்டே சொல்லிக் கொடுத்துப்புடுவேன் பர்த்துக்கோ!”

 

 

“தாராளமாய் போய் சொல்லு டி! போய் உன் உடம் பொறந்த அந்த மலைமாடுகளைக் கூட்டிட்டு வா!” வீரபத்ரன் சாதாரணமாய் சொல்ல, அசையாமல் ஆணியடித்தாற் போல் அதே இடத்தில் நின்றாள் மேகவர்ணா.

 

 

“போடி! போய் கூட்டிட்டு வா!” என அவன் அழுத்தமாய் சொன்ன போதும் கூட, அவளிடம் அசைவில்லை.

 

 

 

“என்னாச்சு மயிலம்மா? நான் அகப்பட்டுருவேன்னு பயமா? என்றைக்கோ ஒருநாள் மாட்டத்தானே போறேன். அது இன்றைக்கா இருந்துட்டுப் போகட்டும்!”

 

 

 

“வேணாம்! என் அண்ணேங்க உன்னை அடிச்சுப்புடுவாங்க! என் கண்கொண்டு அதையெல்லாம் பார்க்க முடியாது!”

 

 

 

“ஏன்..?” கேள்வியோடு சேர்ந்து அவன் விழிகள் எதிரில் நின்ற பெண்ணவளை ஆழமாய்த் துளைத்தது.

 

 

 

“அது அப்படித்தேன்!” மேம்போக்கான பதில் அவளிடமிருந்து.

 

 

 

தட்டுத் தடுமாறி, திணறலாய் வெளிவந்த அவள் பதிலில், அவன் உதடுகள் அனிச்சையாய் புன்னகைக்க, எட்ட நின்றவளின் கரம் பிடித்து இழுத்தான் வீரபத்ரன். மல்லிகைப் பூவாய் மன்னவனின் மார்பில் மோதி, நாணத்தோடு நின்றாள் பெண்.

 

 

 

 

“விடு வீரா! கத்தி ஊரைக் கூட்டிப்புடுவேன்.! இப்போ விடப் போறியா? இல்லையா?” என்ற அவளின் செல்ல மிரட்டிலில், சத்தமாய் புன்னகைத்தவன், 

 

 

 

“நான் அங்கண வந்து நின்னதும், மாட்டிப்பேனோன்னு பயந்து மிரண்ட இந்த முட்டைக் கண்ணும், படபடத்த மனசும், பயத்தில் வெளிறிப் போன உன் முகரையும், உன் மனசை எனக்கு சொல்லாமல் சொல்லிடுச்சு மேகா! என்னத்துக்கு அங்கண வந்து நின்னேன்னு சண்டைப் போடத்தானே இங்கண வநேதே?” அவள் மனமறிந்து அவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறி, அவன் பிடியிலிருந்து விலகி தள்ளி நின்றாள் மேகவர்ணா.

 

 

 

 

“ம்க்கும்! ஆசைதேன்.. அய்த்த மயனே..நீ மாட்டினால் எனக்கென்ன வந்துச்சு? உன் கற்பனைக் குதிரையைக் கடிவாளம் போட்டு இழுத்து நிறுத்து. அதுபாட்டுக்கு தவ்விக்கிட்டு திரியுது. என் கண்ணைப் பார்த்தே மனசைப் படிக்கிறதுக்கு, நீ என்ன மந்திரவாதியா?” நக்கலாய் கேட்டாள் மேகவர்ணா.

 

 

 

 

“ஆமாடி என் அழகு மாமன் மவளே.. காதல் மந்திரவாதி..! உன்னை இங்கிருந்து கடத்திட்டுப் போகப் போற மந்திரவாதி.!” என அவன் சொன்ன அதே நேரம்,

 

 

 

 

“அடேய்! பக்கிங்களா! நான் ஒருத்தன் இங்கே மேலே உட்கார்ந்திருக்கேன் டா! கொஞ்சம் கூடப் பயம் இல்லாமல் ரொமான்ஸ் பண்ணுறிகளாக்கும்? ரொமான்சு.. கீழே இறங்கி வந்தேன் அம்புட்டுதேன் சொல்லிப்புட்டேன்.” என்ற காத்தவராயனின் குரல் மரத்தின் மேலாருந்து கேட்டது.

 

 

 

 

“ஆத்தீ! இது என்ன இந்த அண்ணே மரத்து மேலே உட்கார்ந்திருக்காக? முன்னமே சொல்லித் தொலைச்சிருக்கலாம் தானே?!” சங்கடமானப் புன்னகையுடன் கேட்டாள் மேகவர்ணா.

 

 

 

 

“சொன்னால், இங்கண நின்னு என்கிட்டே பேசிருப்பியாக்கும்? காக்காவிரட்டி, மரத்து மேலே உட்கார்ந்து காக்கா விரட்டட்டும். வா, நாம போவோம்!” என மேகவர்ணாவை அவன் இழுத்துக் கொண்டு நடக்க,

 

 

 

 

“அடேய்! அரசி மயனே..! கீழே இறந்ங்கி வந்தேன்னு வையி.. நானே போய், அந்த மூணு அணகோண்டா ப்ரதர்ஸ்கிட்டேயும் சொல்லிடுவேன். இவன்தான் அரசி மயன்னு!” என அந்தப் பெரிய மாமரத்திலிருந்து இறங்க வழி தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தான் காத்தவராயன்.

 

 

 

 

“அதுக்கு முதலில் நீ இறங்கி வரணுமே ராசா!”

 

 

 

 

“அடேய் அரசி பெத்த அழகு வீரபத்ரா! ஏணியை எடுத்துப் போடுடா! நான் இறங்கிடுறேன்.!”

 

 

 

“முடியாது.. முடியாது..!”

 

 

 

 

“அடேய் லூசுப் பயலே.. குருவிக் கூட்டில் கேமிராவை செட் பண்ணச் சொல்லி, என்னைய மேலே ஏத்தி விட்டுப்புட்டு, இப்போ விளையாட்டு காட்டுறியா? ஒழுங்கா ஏணியைக் கொண்டு வந்து வச்சிரு! இல்லைன்னா சத்தம் போட்டு உன் மச்சான்காரனுங்களைக் கூப்பிடுவேன்.!” என காத்தவராயன் மிரட்டிய போதும் கூட, வீரபத்ரன் மசியவே இல்லை.

 

 

 

 

“ஏணியைப் போட்டு மரத்து மேலே ஏறின ஒரேஆள் நீதான்ய்யா! வீட்டில் ஒருத்தனும் இல்லை! நீ என்ன கத்திக் கூப்பாடு போட்டாலும் ஒருத்தரும் வர மாட்டாய்ங்க!” என தெனாவெட்டாய் வீரபத்ரன் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், வீட்டு வாசலில் மகிழுந்து வந்து உறுமலுடன் நிற்கும் சத்தம் கேட்டது.

 

 

 

 

“ஆத்தீ! அண்ணே வந்துருச்சு போல.. நான் தொலைஞ்சேன். அதுவும் உன் கூட என்னைய பார்த்துச்சுன்னா அம்புட்டுதேன். நிக்கிற இடத்திலேயே குழி தோண்டி புதைச்சுப்புடும். எல்லாம் உன்னால் தான் பத்துரூவா.. பேரைப் பாரு பத்துரூவா, பத்தாத ரூபாய்ன்னு! யோவ்! கல்லு மாதிரி நிற்கிறியே எதாச்சும் வழி சொல்லுய்யா!” பயத்தில் வீரபத்ரனின் சட்டையைப் பிடித்து உலுக்கினாள் மேகவர்ணா.

 

 

 

 

“வண்டிச் சத்தம் கேட்டாலே உங்க நொண்ணன் தானா? வேற வண்டியா இருக்கும். பயந்து சாகாதே பக்கி!”

 

 

 

“பொலேரோ வண்டிச் சத்தம்தேன் கேட்குது. போஸ் அண்ணேந்தேன் வந்துருக்குன்னு நினைக்கிறேன்.!” பயமும் பதற்றமுமாய் வெளியே எட்டிப் பார்த்தாள் மேகவர்ணா. அவள் நினைத்தது போலவே.. வெள்ளை நிற பொலீரோ வாகனம் தான் வாசலில் வந்து நின்றது.

 

 

 

 

“பார்த்தியா! பாத்தியா! சொன்னேனே? அண்ணே வண்டிதேன். இங்கண என்னத்துக்கு வந்தேன்னு வையப் போவுது!”

 

 

 

 

“என்னைப் பார்க்க வந்தேன்னு சொல்லு மயில்லம்மா! அதுக்கு தானே வந்த? உன்னை ரொம்பவும் தைரியசாலின்னு நினைச்சேனே? உன் வீர தீரமெல்லாம் என்கிட்டே மட்டுந்தானா? உன் அண்ணேங்க என்ன அரசியல்வாதி மாதிரி, பொலிரோ, ஸ்கார்ப்பியோ, தார்ன்னு ஆளுக்கொரு காரை வச்சிக்கிட்டு ஷோ காட்டிட்டு திரியுறானுங்களா? வா! நாம ரெண்டு பேரும் போய் உண்மையைச் சொல்லிடுவோம். உங்க தங்கச்சிக்கு என்னையத்தேன் பிடிச்சிருக்கு. எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் கட்டி வைங்கன்னு மூஞ்சிக்கு நேராவே கேட்டுருவோம்.!” என மேகவர்ணாவின் கரம் பிடித்து வீரபத்ரன் இழுக்க,

 

 

 

 

“ஆத்தே! வேற வினையே வேணாஞ்சாமி. இதெல்லாம் செய்றதுக்கு, அந்தக் கிணற்றிலேயே போய் குதிச்சுடலாம். எங்க அண்ணேங்க வீம்பைப் பத்தி உனக்குத் தெரியாது! பேசாமல் வா, எங்கேயாவது போய் ஒளிஞ்சுக்குவோம்.!” அவன் கரம் பிடித்து இன்னொரு பக்கமாய் இழுத்துக் கொண்டு ஓடினாள் மேகவர்ணா.

 

 

 

 

“அடேய்! லூசு பக்கிங்களா! இங்கே ஒருத்தன் மரத்து மேலே உட்கார்ந்திருக்கேன்டா! என்னை இறக்கி விடுங்கடா! எம்புட்டு நேரம் இங்கணையே உட்காருவது பயந்து வருதுடா!” என்ற காத்தவராயனின் குரலில்,

 

 

 

 

“கொஞ்ச நேரம், சத்தம் காட்டாமல் அங்கணையே உட்காரு காக்கா விரட்டி, அப்பறமா வந்து இறக்கி விடுறேன்.!” எனச் சத்தமாய் பதில் சொன்னபடியே மேகவர்ணாவோடு ஓடிய வீரபத்ரன், சட்டெனக் கையை உதறிவிட்டு அப்படியே நின்றான்.

 

 

 

“ஏய்! பத்துரூவா.. என்னை மாட்டிவிடப் பார்க்கிறியா? ஒழுங்கா என்னோட வந்து ஒளிஞ்சுக்கோ! உன்னால் மட்டும், நான் என் அண்ணேங்கிட்டே மாட்டினேன். உன்னைத் தொலைச்சுப்புடுவேன் சொல்லிப்புட்டேன்.!”

 

 

 

 

“அடியேய் அரைகிறுக்கி! நான் என்னத்துக்கு ஒளியனும்? நான் இங்கண தானே குடி இருக்கிறோம். நீதேன் ஓடிப்போய் ஒளிஞ்சுக்கணும். உங்க நொண்ணன் உன்னையத்தேன் தேடி வருவியான். நான் என் வீட்டில் தான் இருக்கிறேன். நீதேன் வீடு மாறி வந்திருக்கிற!”

 

 

 

 

“ஹலோ! இதுவும் எங்க வீடுதேன். நீங்க வாடகைக்குதேன் இருக்குறீக! இந்த வீட்டுக்குள்ளே எப்போ வேணும்னாலும் வந்துட்டுப் போற உரிமை எனக்கு இருக்கு.!”

 

 

 

 

“ஹான்.. சரித்தேன்.. இதை அப்படியே மீசையை முறுக்கிட்டு வர்ர உங்க அண்ணேகிட்டே சொல்லு பார்ப்போம்!” என வீரபத்ரன் சொல்ல,

 

 

 

 

“இந்தாரு பத்துரூவா.. காலடிச் சத்தம் கேட்குதேன்னு போய் ஒளிஞ்சுக்கிறேன். இல்லைன்னு மட்டும் வையி.. உன்னை அம்புட்டுதேன் சொல்லிப்புட்டேன்.!” எனச் சொல்லிவிட்டு, அவள் வீட்டிற்குள் மறைவான இடத்தைத் தேடி ஓடிப் போக,

 

 

 

 

“அடேய்! அரசி மயனே.. அந்தப்புள்ளை போயி அஞ்சு நிமிஷமாச்சு. வந்து இறக்கி விடுடடா! உங்க காதல் விளையாட்டில் என்னைய அடிக்கடி டீலில் விட்டுப்புடுறீங்க டா! ஒவ்வொரு நிமிஷமும் உசிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு அலைய வேண்டியிருக்கு முடியலைடா சாமி.!” என்றபடியே வீரபத்ரன் நகர்த்திப் போட்ட ஏணியின் உதவியுடன் மரத்திலிருந்து இறங்கி வந்தான் காத்தவராயன்.

 

 

 

 

“நண்பன் என்றால் அப்படித்தான் காக்காவிரட்டி! மரத்தில் ஏறணும், கிணற்றிலும் குதிக்கணும்!”

 

 

 

“அடேய்.. நான் உன் அண்ணனுக்குத்தேன் நண்பன். உனக்கு இல்லை. உங்க ஆத்தா போகச் சொன்னிச்சுன்னு வந்தேன் பாரு என்னைய சொல்லணும். என் பொண்டாடிக்கு நான் ஒரேஒரு புருஷன் டா. என்னை விட்டுருங்கடா சாமி!” என காத்தவராயன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, யாரோ வீட்டிற்குள் வரும் காலடிச் சத்தம் கேட்டது.

 

 

 

 

“வீரா! அடேய் வீரா! தங்கச்சி, அவங்க அண்ணே போஸ்பாண்டி வாரான்னு தானே சொன்னிச்சு. வேற யாரோ வர்ராங்கடா!” என வாசலைப் பார்த்தபடியே காத்தவராயன் முணுமுணுக்க,

 

 

 

 

“இங்கண நம்மளைத் தேடி யாரு வரப் போறாங்க? யாராச்சும் முகவரி தெரியாமல் வருவாங்களா இருக்கும்.!” எனச் சொன்னபடியே வாசலைப் பார்த்தான் வீரபத்ரன்.

 

 

 

 

அங்கே மல்யுத்த வீரனின் தோரணையோடு, அந்த வீட்டின் வாசலையே சின்னதாக்கியபடி, அசுர உடல்வாகோடு உள்ளே நுழைந்தான் அவன். அவனின் பார்வையும், நடையும், மொட்டைத் தலையும் பார்க்கவே ஒருமாதிரியாய் இருந்தது.

 

 

 

 

“இந்த மொழு மொழு கொழு கொழு மொட்டை யாரு காக்காவிரட்டி? இவனை இதுக்கு முன்னே நீ பார்த்திருக்கே?” என வீரபத்ரன் கேட்க,

 

 

 

 

“ம்க்கும்! ஏலியனுக்கு எதிர் வீட்டுக்காரன் மாதிரி இருக்கியான். இவனை எனக்கு தெரியுமான்னு கேட்கிறே? இவன் என்னமோ நம்ம ஊருக்கு சம்மந்தமில்லாத மாதிரி இருக்கிறான்!” எனக் காத்தவராயன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவன் அருகில் வந்திருந்தான் மொட்டைத் தலையனான பசுபதி.

 

 

 

“ஹலோ! யாருங்க நீங்க? உள்ளே வரலாமான்னு கூட கேட்காமல், எங்க வீட்டுக்குள்ளே நுழையறீங்க?” என்ற வீரபத்ரனின் கேள்வி அவன் செவிகளைக் கூட எட்டவில்லை. அவனின் லேசர் விழிகள் சுற்றிலும், அலைந்து எதையோ தேடி தேடிக் களைத்து, பின் தன் முன் நின்ற வீரபத்ரனின் மீது நிலைத்தது.

 

 

 

 

தனக்கு முன் எரிச்சல் சுமந்த முகத்துடன் நின்ற வீரபத்ரனை, அலட்சியமாய், பார்த்தான் பசுபதி.

 

 

 

 

“வர்ணா!” முரட்டுக் குரலில் அவன் உச்சரிக்க, ஒருநொடி வீரபத்ரனுக்கு தூக்கிவாரிப் போட்டது.

 

 

 

 

‘இவன் யாரு? இவன் என்னத்துக்கு மயிலம்மாவைத் தேடி வந்திருக்கான்? ஆளும் தோரணையும் ஒண்ணும் சரியில்லையே?’ என மனதிற்குள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,

 

 

 

“அது வந்து..!” எனக் காத்தவராயன் ஏதோ சொல்ல வர,

 

 

 

“இங்கே வர்ணாவும் இல்லை! சொர்ணாவும் இல்லை! முதலில் வெளியே போங்க சார். அந்த எதிர் வீட்டில், மூணு எருமை மாடுகள் திரிவானுங்க அங்கே போய் கேளுங்க! நாங்க புதுசாதேன் குடி வந்திருக்கோம்! எங்களுக்கு யாரையும் தெரியாது!” என இடைநிறுத்திப் பேசியிருந்தான் வீரபத்ரன்.

ஒருநிமிடம் நிதானமாய் நின்று, வீரபத்ரனையும், காத்தவராயனையும் மாறி மாறிப் பார்த்த பசுபதி, எதுவுமே பேசாமல் வித்தியாசமான கோணல் சிரிப்போடு வெளியேறியிருந்தான்.

 

 

 

*******

 

 

 

“யாருடா இவன்? மொட்டைத் தலையும் மூஞ்சியும்! ஆளே ஒரு மார்க்கமா இருக்கிறான்.!”

 

 

 

 

“தெரியலை காக்காவிரட்டி! ஆனால், இவன் என்னத்துக்கு மயிலம்மாவைத் தேடி வந்தான். இந்த நேரம்ன்னு பார்த்து மூணு மலைமாடுகளையும் காணோம். அதைப் பெத்த என் மாமனையும் காணோம். ஒருவேளை சொந்தக்காரங்களா இருப்பாய்ங்ளோ?”

 

 

 

 

“தங்கச்சியைக் கூப்பிட்டு முன்னே நிறுத்தி கேட்டிருந்தால் தெரியப் போவுது. நீதேன் வர்ணா யாருன்னு தெரியாதுன்னு சொல்லிட்ட!”

 

 

 

“அந்த மொட்டைத் தலையன் மொகரையைப் பார்த்தால், என்னமோ சரியா படலை காக்காவிரட்டி! அதேன் உண்மையைச் சொல்லலை. எப்படியும், ஒளிஞ்சிருந்து மயிலமம்மா பார்த்துட்டு தானே இருந்திருப்பா! ஒருவேளை அவளுக்கு வேண்டப்பட்டவனா இருந்தால், குரலைக் கேட்டு என்ன ஏதுன்னு ஓடி வந்திருப்பாள் தானே?” சரியாய்க் கணித்துக் கேட்டான் வீரபத்ரன்.

 

 

 

 

“நீ சொல்றதும் சரித்தேன். இரு தங்கச்சியையே கூப்பிட்டு கேட்டுருவோம்.! எம்மா தங்கச்சி வெளியே வா! வந்தவன் இந்நேரம் ஏழு தெரு தாண்டி போயிருப்பான். நீ இன்னும் குகைக்குள்ளே பதுங்கின மாதிரி, நெல்லு மூட்டைக்குப் பின்னால் பதுங்கிக் கிடக்கிறே?!” என்ற காத்தவராயனின் குரலில், வியர்க்க விறுவிறுக்க வெளியே வந்தாள் மேகவர்ணா.

 

 

 

“ஏய், மயிலம்மா! என்னத்துக்கு இப்படி வியர்த்து விறுவிறுத்து நிற்கிறே? என்ன ஆச்சு? மேலுக்கு எதுவும் முடியலையா?!” பதற்றமாய் வீரபத்ரன் வினவ, 

 

 

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஆமா, வந்தது யாரு? உனக்கு தெரிஞ்சவிங்களா?” எனக் கேட்டாள் அவள்.

 

 

 

 

“ம்க்கும்! இந்த ஊரில் எனக்கு தெரிஞ்சவிங்கன்னா அது நீங்க மட்டுந்தேன். இப்போ வந்தவன் யாருன்னு எனக்கு தெரியாதும்மா! உனக்கும் தெரியாதுன்னு சொல்ற? அப்பறம் எப்படி, அவன் வர்ணான்னு உன் பேரைச் சரியா சொன்னான்?” யோசனையோடு மாமன் மகளின் முகம் பார்த்தான் வீரபத்ரன்.

 

 

 

 

“இந்த ஊரில் நான் மட்டுந்தேன் வர்ணாவா? பஞ்சவர்ணத்தைக் கூட, இந்த ஊரில் வர்ணான்னுதேன் கூப்பிடுவாய்ங்க!” என அவள் சாதாரணமாய் சொல்ல முயன்றாலும், அவள் கண்களுக்குள் ஒளிந்திருந்த கலக்கம், வீரபத்ரனுக்கு நன்றாகவே தெரிந்தது.

 

 

 

 

“அதுக்கு இல்லை. உங்க அம்மா, அதேன் எங்க அய்த்த பேரும் பஞ்சவர்ணம் தானே?” என அவன் கேட்டு முடிக்கும் முன்னே, வீரபத்ரனின் அலைபேசி இடையூறாய் அலறியது. நிஜமாகவே இடையூறுதான். ஒருவேளை மேகவர்ணாவிடம், பசுபதியைப் பற்றி, முழுதாய்க் கேட்டுத் தெரிந்திருந்தால், பின் நிகழவிருக்கும் விபரீதங்களை வீரபத்ரன் தடுத்திருப்பானோ என்னவோ?

 

 

 

 

வாழ்க்கை எனும் ஆற்றில் மிதக்கும் படகுகள் தான் நாம். படகு எந்தத் திசையில் செல்ல வேண்டுமென்பதை படகு ஒருநாளும் தீர்மானிப்பதில்லை. ஆற்றின் நீரோட்டமும், இதர சூழ்நிலைகளுமே, படகு போய்ச் சேரவேண்டிய இடத்தைத் தீர்மானிக்கின்றன. காலத்தின் கையில் மரப்பாச்சி பொம்மைகளாய் ஒவ்வாரு படகும், தள்ளாடி, தள்ளாடி வழி தவறி, இலக்கு மாறி ஒருவழியாய் கரை சேருகிறது. இன்னும் சில, காலப் பயணத்தில் கரைசேராமல் பாதியிலேயே காணாமல் போகவும் செய்கிறது. மேகவர்ணா மற்றும் வீரபத்ரனின் வாழ்க்கை கரைசேருமா? இல்லை காணாமல் போகுமா? என்பது காலத்தின் கரங்களிலே..!

 

 

 

 

“என்ன மைடப்பி! இந்நேரத்தில் அழைச்சிருக்கிறே?” அழைப்பை எற்று காதில் வைத்து கருவிழியிடம் வினவினான் வீரபத்ரன். ஆம், கருவிழி தான் இடையூறாய் அழைத்திருந்தாள்.

 

 

 

“பார்ரா! எங்களையெல்லாம் ஞாபகத்தில் இருக்குதா டென் ருப்பீஸ்? உன் மாமன் மவளோட, ரொம்ப ஜாலியா இருக்க போல?”

 

 

 

 

“ம்க்கும்! என்னத்தை ஜாலியா இருக்கிறது, அய்த்த மவதேன் அரைலூசுன்னு நினைச்சால், இந்த மாமன் மவ, முழு லூசா இருக்குறா! ரெண்டு பைத்தியங்களுக்கும் ஊடால நான் மாட்டிக்கிட்டு முழிச்சுட்டு கிடக்கேன்.!”

 

 

 

 

“அடேங்கப்பா! இவரு பெரிய ஐன்ஸ்டின்.. எங்களை லூசுன்னு சொல்லுறாரு? இரு.. இரு.. வர்ணாகிட்டே உன்னைச் சொல்லித் தர்ரேன்.!” 

 

 

 

 

“இந்தாரு மைடப்பி! அண்ணின்னு ரொம்பப் பொறுமையாய் பேசிட்டு இருக்கேன். நீ என் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறே! நீ இவள்கிட்டே சொன்ன டென்ருப்பிஸுக்கே.. ஓயாமல் பத்துரூவா, பத்துரூவாய்ன்னு ஏலம் போடுறா! நீ முடிஞ்சவரை வர்ணாகிட்டே பேசுறதை அவாய்ட் பண்ணு மைடப்பி! இங்கே என் இமேஜ் அநியாயத்துக்கு டேமேஜ் ஆகுது. நான்தேன் இந்தக் கதைக்கு ஹீரோ! நீயும் உன் புருஷன் அழகரும் இல்லை நல்லா ஞாபகம் வச்சுக்கோ!”

 

 

 

 

“உனக்கு இமேஜுன்னு ஒண்ணு இருக்கா டா? பார்ரா இந்த விஷயம் எனக்கு தெரியாமல் போச்சு. விடு.. விடு.. பார்த்து பதமாய் செஞ்சு விட்டுருவோம்!” எனக் கருவிழி சொல்ல,

 

 

 

“எம்மா ராசாத்தி! நீ ஆணியே புடுங்க வேணாம்!” எனச் சத்தமாய் சொல்லியிருந்தான் வீரபத்ரன்.

 

 

 

 

“அடேய்! அரசி மயனே..! ஃபோனில் பேசுறதுக்கு என்னத்துக்கு இம்புட்டு அலப்பறை? அப்படி யாருக்கிட்டே பேசுறே?” என காத்தவராயன் கேட்க,

 

 

 

 

“ம்ம்.. உன் பழைய தங்கச்சியாம்! இந்தா பேசு!” எனக் காத்தவராயனிடம் அலைபேசியைக் கொடுத்துவிட்டு நகர்ந்திருந்தான் வீரபத்ரன்.

 

 

 

“ஹலோ..! யாரு அது எனக்கு தங்கச்சி?” என காத்தவராயன் கேட்டுக் கொண்டே காதில் வைக்க,

 

 

 

“புது தங்கச்சி கிடைக்கவும் என்னய மறந்துட்டல்ல அண்ணே?” என்ற கருவிழியின் குரலில்,

 

 

 

“அட, நம்ம அழகரு பொண்டாட்டி! எப்படி தங்கச்சி இருக்கே?” எனக் கேட்டான் காத்தவராயன்.

 

 

 

“எனக்கு என்ன? ரொம்ப நல்லா இருக்கேண்ணே.. நல்லா வகை வகையா, வாய்க்கு ருசியா ஆக்கிப் போட கயலு இருக்கும் போது, எனக்கு என்ன கவலை? நல்லா இருக்கேன்!” வேண்டுமென்றே காத்தவராயனை வெறுப்பேற்றுவதற்காய் சொன்னாள் கருவிழி.

 

 

 

 

“எம்மா தங்கச்சி! உனக்கும் உன் குடும்பத்துக்கும் நான் என்ன பாவம் பண்ணினேன்? ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒட்டுக்கா சேர்ந்து என்னை வெறுப்பேத்துறீகளே? ஒழுங்கா, என் பொண்டாட்டியை இங்கண அனுப்பி வச்சிருங்க! உன் கொழுந்தன் ஆக்கிப் போடுற சோத்தைத் தின்னு நாக்கு செத்துப் போனதுதேன் மிச்சம்.! முடியலைம்மா தங்கச்சி! இந்த அண்ணனுக்காக எதாவாது பார்த்து பண்ணு தாயி!”

 

 

 

“அது கஷ்டம்தான்! ஏன்னா, நம்ம வீரா அங்கணதேன் இருக்கான்னு தெரிஞ்சதிலிருந்து சின்ன மாமா, இங்கண குதியாய் குதிச்சுட்டு இருக்காரு! நீ வளைகாப்புக்கு வருவன்னுதேன் காத்துட்டு இருக்காரு! எப்படியும் வீரா கல்யாணப் பஞ்சாயத்து முடியும் வரை நீ அங்கணதான்னு நினைக்கிறேண்ணே!”

 

 

 

 

“ஆத்தீ! எங்கிட்டு போனாலும் ரவுண்டு கட்டுறாய்ங்களே? இந்த ஒத்தை உசிரைப் பிடிச்சு வைக்கிறதுக்குள்ளே பெரும்பாடா இருக்கே.? ஏம்மா தங்கச்சி, அம்மாப்பட்டிக்குதேன் போவேன்னு அடம் பிடிச்சு வந்தவன் உன் மாமன் மயன்தேன். அதுக்கு எதுக்கு உன் குடும்பத்தில் இருக்கவிங்க என்னை ரவுண்ட் கட்டுறாய்ங்க?!”

 

 

 

“நீதேன் வீராவை அங்கண திட்டம் போட்டுக் கூட்டிப் போனியாம்! சின்ன மாமா சொன்னாரு!”

 

 

 

“உன் தாத்தனிலிருந்து, இப்போ உன் சின்ன மாமன் வரை, எல்லாத்துக்கும் நான்தேன் காரணம்ன்னு சொல்லி வச்சாப்ல முடிவு எடுக்குறாய்ங்களே எப்படி? உங்க குடும்பத்தில் யாருக்குமே அறிவே இருக்காதா? எல்லாமே நான் சொல்லிதேன் செய்றாய்ங்களா? ஒரு குடும்பத்தில், ஒருத்தர் ரெண்டு பேர் முட்டாளாய் இருந்தால் பரவாயில்லை. அது எப்படிடா, முழுக் குடும்பமும் ஒண்ணு போல இருக்கீங்க? அடேய் அரசி மயனே.. முடியலடா உங்க அக்கப்போரு!” எனப் புலம்பியபடியே, வீரபத்ரனைக் காத்தவராயன் பார்க்க, வீரபத்ரனோ, மேகவர்ணாவையே கண்ணெடுக்காமல் பார்த்திருக்க,

 

 

 

 

“இந்தா இவன் ஆரம்பிச்சி ட்டான்ல்ல? இனி இவன் கண்ணால் பேசுறதுக்கும் நான்தேன் காரணம்ன்னு சொல்லுவாய்ங்க! ஆத்தா மீனாட்சி இவிங்கக் கிட்டே இருந்து என்னை மட்டும் காப்பாத்தி விடுத்தா! எப்போவும் அந்த முழியாங்கண்ணி கிழவிதேன் மீனாட்சியைக் கூப்பிடும். இப்போ ஓயாமல் நான் கூப்பிட்டுக்கிட்டு திரியறேன். என்னைக் கூப்பிட வச்சுட்டாய்ங்க! காலக் கொடுமைடா காக்காவிரட்டி!” எனக் காத்தவராயன் தன்னால் புலம்புவதைக் கேட்டு, அலைபேசியின் அந்தப்பக்கம் கலகலத்துச் சிரித்துக் கொண்டிருந்தாள் கருவிழி.

 

 

தித்திக்கும் 🔥

 

 

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்