
திமிர்-12
மறுநாள் விடியலிலேயே அம்மாப்பட்டியிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்தார் அரசி. தனக்கென மீதமிருக்கும், ஒற்றைச் சொந்தத்தைப் பார்த்ததில் அவருக்கு மனம் நிறைந்திருந்தது. கதிர்வேல் மட்டும்தான் இன்னும், முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தார்.
“வெரசா கிளம்பு அரசி! வெயிலுக்கு முன்னே போய் சேரணும்!” என அவர் சொல்லிக் கொண்டிருக்க,
“இருங்க! தம்பி வரட்டும், அவன்கிட்டே சொல்லிட்டு கிளம்புவோம்!” எனப் பதில் தந்தார் அரசி.
“நாமதேன் வெள்ளனவே கிளம்புறோம்ன்னு சொன்னோம் தானே? இந்நேரத்தில் உன் தம்பி எங்கிட்டுப் போய்த் தொலைஞ்சான்?!”
“என்னமாவது சோலி இருந்திருக்கும் போயிருப்பான். இப்போ என்னத்துக்கு குதிக்கிறீக?”
“உன் தொம்பிக்கு மட்டுந்தேன் சோலியெல்லாம் இருக்கும். நாங்க என்ன வேலைக் கழுதையில்லாமல் வெட்டியாய் இங்கண வந்து உட்கார்ந்திருக்கோமா?”
“எப்பா சாமி! உங்களுக்கு வேலை இல்லைன்னு நான் எப்போ சொன்னேன்? உலகமே உங்களால் தான் சுத்துதுன்னு எனக்குத் தெரியாதா என்ன? அடேய், நாச்சியப்பா! எங்கேடா போய்த் தொலைஞ்சே? உனக்கு சோலி இல்லாமல் இருக்கும், இவருக்கு அப்படியா? உலகமே இவரு தலைமேலத்தானே சுத்துது!” தனக்குத் தானே பேசுவதைப் போல் அரசி நக்கலாய் சொல்ல, மனைவியை வெளிப்படையாய் முறைத்தார் கதிர்வேல்.
“கொழுப்புத்தான்டி உனக்கு!”
“ஆமாங்க எனக்கு கொழுப்புத்தேன்! நீங்க வகை தொகையா ஆக்கிப் போட, நான் உட்கர்ந்து சோறு திங்கிறேன்ல்ல? அந்தக் கொழுப்புத்தேன்.!” அதற்கும் அரசி பதில் பேச, கோபத்தோடு, வாகனத்தின் முன் இருக்கையில் ஏறி அமர்ந்துக் கொண்டவர், மகிழுந்தின் கதவை ஓங்கி அடித்துச் சாற்றியதிலேயே அவர் கோபத்தின் அளவு புரிந்தது.
“நீங்க வேற ஏம்மா அவருக்கிட்டே ஒரண்டை இழுக்கீறீங்க? நாளைப் பின்னே இந்தப் பக்கமே வர மாட்டாரும்மா! எதுவும் தெரியும் முன்னமே இம்புட்டு அக்கப்போரா இருக்கு. நம்ம வீராவுக்கும், இந்தப் பிள்ளைக்கும் கல்யாணம் முடிக்கும் முன்னே ஒருவழி ஆகிருவோம் போல.!” என அழகர் அன்னையிடம் சொல்ல,
“பிறகு என்னடா, ஒரு இடத்துக்கு வந்தால், முன்னே பின்னே ஆகும்ன்னு தெரியாதா இவருக்கு? கொஞ்சமும் பொறுமையே இல்லை. உன் கல்யாணத்திற்கு அழைக்க வந்ததுக்கு பிறகு இப்போத்தேன் வந்திருக்கேன். அப்போ வந்தப்போவும், உட்கார்ந்து ஒழுங்கா ரெண்டு வார்த்தை பேச விடவே இல்லை. பேச ஆரம்பிச்சதுமே, மல்லுக் கட்டினாய்ங்க! சண்டையைப் போட்டாய்ங்க அம்புட்டுதேன் முடிஞ்சுது. அப்படி என்ன என் தம்பி கேட்டுட்டான்? என் உடம் பொந்தவனா நின்னு என் புள்ளைகளுக்கு,தாய்மாமனா சீர் செனத்தி சிறப்பா செய்யணும்ன்னு நினைச்சது தப்பா? ஒரே தாய் வயிற்றில் பொறந்தேன் உடம் பொறப்பா? அவன் என்னைப் பெத்தவ வயிற்றில் பிறக்கலைன்னாலும், உணர்வால், அவன் எனக்கு உடம் பொறந்தவன்தேன்.”
“உன் கல்யாணத்திற்கு செய்யாமல் விட்ட அம்புட்டையும், வீரா கல்யாணத்தில் அவன் முன்னே நின்னு செய்வியான். அதை நான் பார்ப்பேன். நானும் முன்னே நினைச்சிருக்கேன் அழகரு, வலியப் போய் பேசி, என்னத்துக்கு வம்பை விலைக்கு வாங்கணும்ன்னு நினைச்சிருக்கேன். அதனால்தேன் நாச்சியப்பன் கூட நான் பேச முயற்சிக்கவே இல்லை. இப்போ ரோசணை பண்ணி பார்த்தால் அம்புட்டு தம்பும் எம்மேலதான்னு தோணுது. உங்க தாத்தனும், உங்க அப்பனும் சொன்னாய்ங்கன்னு என் தம்பியை விட்டுக் கொடுத்தது என் தப்புத்தேன். இத்தனை நாள் இப்படி ஒரு சொந்தம் இருக்குன்னு மறந்து போய் திரிஞ்ச எனக்கு, பொட்டில் அடிச்ச மாதிரி, ஞாபகப் படுத்தினவன் நம்ம வீராதேன். வெளிய பார்க்க கோமாளித் தனமாதேன் தெரியுறான். ஆனாலும் அவனுக்குள்ளே என்னமோ இருக்கு அழகரு!” என அரசி உணர்ச்சி வசப்பட்டு பேச,
“ம்ப்ச்! ம்மா! என்னத்துக்கு சங்கடப்படுறீக? ஏதோவொரு சூழ்நிலை இப்படியெல்லாம் நடந்துப் போச்சு. விடுங்கம்மா! நம்ம வீரா கல்யாணத்தால் தான் இந்த உறவு சேரணும்ன்னு இருக்கு போல!”
“இல்லை அழகரு! தப்பு எம் மேலதேன். உங்க தாத்தன் என் தம்பியை செய்முறை செய்யக் கூடாதுன்னு விரட்டின போது, நான் சொல்லியிருக்கணும்! என் கூடப் பொறக்காட்டியும், என் தம்பி அவன்தேன். என் புள்ளைகளுக்கு செய்முறை செய்யற உருத்தும், உரிமையும் அவனுக்கு இருக்குன்னு சொல்லியிருக்கணும். தலைக் குனிஞ்சு அவன் வெளியே போறதை, ஒத்தை வார்த்தைப் பேசாமல் வேடிக்கைப் பார்த்துட்டு நின்னேனே எம்மேல் தான் எல்லா தப்பும்!” எனப் பேசிய அரசியின் குரல், தடுமாறியது.
“ம்மா!” என ஆதரவாய் அழகர் அரசியின் கரத்தினைப் பிடித்துக் கொள்ள,
“அம்புட்டுச் சீக்கிரம் அழ மாட்டேன் டா அழகரு! உன்னைப் பெத்தவ உனக்கு மேல வைராக்கியாக்காரி டா!” என தொண்டைக்குள் துடித்த அழுகையை விழுங்கிவிட்டு புன்னகைத்தார் அரசி.
அதே நேரம்,
“மயிலு! மயிலு!” என அழைத்தபடியே வீட்டிலிருந்து வெளியே வந்தான் போஸ்பாண்டி. கூடவே முத்துப்பாண்டியும், இராஜபாண்டியும்.
“என்ன அண்ணே? எதாச்சும் மறந்துட்டியா?” எனக் கேட்டபடி உள்ளிருந்து வெளியே வந்தாள் மேகவர்ணா.
போஸ்பாண்டிக்கோ, திடீரென சொந்தமென்று வந்து ஒட்டிக் கொள்ள நினைக்கும் அரசியையும், அவர் குடும்பத்தையும் சுத்தமாய் பிடிக்கவே இல்லை. தன் தந்தை என்ன கேட்டார், கூடப் பிறந்த தமக்கையாய் பாவித்த, அரசியின் பிள்ளைகளுக்கு மாமனாய் செய்முறை செய்யத்தானே கேட்டார். அதற்கு அன்று சொக்கேசன் அவமானப் படுத்தியதாய் வீட்டில் வந்து கண்ணீர் சிந்திய தந்தையின் முகம், இன்று நடந்தது போல் அவனுக்கு நினைவு இருக்கிறது. அப்போது மற்ற தம்பிகள் சிறியவர்கள் என்பதால், அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
‘செய்முறை செய்ய என்ன தகுதி இருக்குன்னு கேட்டுட்டாங்க போஸூ!’ என அவர் அடிக்கடி வாய்விட்டுப் புலம்பியதையும் போஸ்பாண்டி கவனித்திருக்கிறான்.
“அன்றைக்கு எங்களை வேணாம்ன்னு விரட்டுவங்க, என்ன தகுதி இருக்குன்னு இங்கண வந்து உட்கார்ந்திருக்காங்க?” என திண்ணையில் அமர்ந்திருந்த அரசியைப் பார்த்து முணுமுணுத்தவன், கோப மிகுதியில்..
“இன்னும் இந்தக் காக்கா கூட்டம் கிளம்பலையா? எங்கே சோறு போட்டாலும் போயிருவாய்ங்க போல!” என போஸ்பாண்டி வார்த்தையை விட,
“போஸ் அண்ணே! இதெல்லாம் ரொம்பத் தப்பு!” என மேகவர்ண தன் தமயனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மின்னல் வேகத்தில் வந்து போஸ்பாண்டியின் சட்டையைப் பிடித்திருந்தான் துடிவேல் அழகர்.
“என் தாத்தனும், அப்பனும், மரியாதைக் குறைவா பேசினாய்ங்க! தப்பு எங்கப் பக்கம்ங்கிற ஒரே காரணத்திற்காக மட்டுந்தேன், கை நீட்டாமல் வாயில் பேசிட்டு இருக்கேன். இல்லைன்னு மட்டும் வையி, நீ பேசின ஒத்தை வார்த்தைக்கே தலையை சீவிப் போட்டுட்டு போய்ட்டே இருந்திருப்பேன்.!” என அழகர் போஸ்பாண்டியின் சட்டையைப் பிடித்து உலுக்க,
“ஏய்! சட்டையிலிருந்து முதலில் கையை எடுடடா! யார் வீட்டில் வந்து யார் சட்டையை யார் பிடிக்கிறது? இத்தனை வருஷம் எட்டிக் கூடப் பார்க்காதவிங்க, சொந்தம் சுரைக்காய்ன்னு வந்து நின்னதும், நாங்க தூக்கி தலையில் வச்சுக் கொண்டாடணுமா?!” என முத்துப்பாண்டி சூழல் அதிரக் கத்த,
“இந்தாரு அழகரு! மரியாதையாய் எங்க அண்ணே சட்டையில் இருந்து கையை எடு! இல்லைன்னு வையி, கையை வெட்டிப்புட்டுதேன் மறுவேலை பார்ப்போம். சொந்தக்காரய்ங்களா இருக்கப் போய் கையைக் கட்டிட்டு வேடிக்கைப் பார்த்துட்டு நிற்க வேண்டியிருக்கு!” என இராஜபாண்டி சலித்துக் கொண்டான்.
“அழகரு! சட்டையில் இருந்து கையை எடுய்யா! வந்த இடத்தில் வம்பு தும்பெல்லாம் நம்ம வேணாம்ய்யா!” என மகனை விலக்கி நிறுத்தினார் அரசி.
“என்னத்துக்குடி அழகரை விலக்குற? உன் தம்பி மயனுங்க வாய்க்கு வந்ததைப் பேசுவானுங்க! என் புள்ளை பார்த்துட்டு நிற்கணுமா? இதுக்குதேன் இங்கண வர வேணாம்ன்னு சொன்னேன். பொறந்த வீடு, சொந்தம், சுண்டைக்காய்ன்னு வந்துப்புட்டு ஏழரையை இழுத்து வச்சிட்டு திரியற?” புகைந்தபடியே அரசியின் அருகில் வந்து நின்றார் கதிர்வேல்.
“இந்தா வந்துட்டார். எப்போடா வாய்ப்புக் கிடைக்கும்ன்னு இந்த மனுஷன் காத்துட்டு கிடப்பாரு. என் தம்பி பெத்த தலைச்சன் புள்ளை, நேரம் காலம் தெரியாமல், ஒரண்டையை இழுத்துக்கிட்டு நிற்கிறான்.!” என முணுமுணுத்தவர்,
“இப்போ என்ன செய்யணும்ங்கிறீக? அடிச்சு மல்லுக்கட்டிக்கிட்டு சாவட்டும்ன்னு விடச் சொல்றீகளா? எல்லாத்துக்கும் காரணம், நீங்களும், உங்களைப் பெத்தவரும்தேன். பெரியவங்க செய்ற தப்பு, எப்படி அடுத்தத் தலைமுறையைப் பாதிக்குதுன்னு உங்க கண்ணு முன்னாடியே பார்க்குறீகளே? நமக்கு பின்னால் வர்ர தலைமுறை நல்லபடியா இருக்கணும்ன்னு நினைச்சால், நாம அவங்களுக்கு எடுத்துக்காட்டா இருக்கணும். நீங்க இழுத்து விட்ட பஞ்சாயத்து எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தீங்களா?” எனக் கணவனைப் பார்த்துக் கேட்டார்.
“உனக்கு எப்போவும் நாங்க செஞ்சது தப்பாகத்தேன் தெரியும். என்னையும் என் குடும்பத்தையும், எதாச்சும் சொல்லலைன்னா உன் கண்ணு உறங்காதே! உன் தம்பி மயன் காக்கா கூட்டம்ன்னு சொல்லுவான். நீ கேட்டுக்கிட்டு கல்லு மாதிரி நில்லு. உன்கிட்டே போய் பேச வந்தேன் பாரு என்னைச் சொல்லணும்!” எனச் சொல்லிவிட்டு அமைதியாய் நின்றுவிட்டார் கதிர்வேல்.
அதே நேரம்,
“அடேய் அரசி மயனே! ஃபோனை மேய்ச்சது போதும் டா! அங்கே அழகரும், அந்த மூணு தடிமாடுகளும் அடிச்சு மல்லுக் கட்டுறாய்ங்கடா” என வீட்டின் பின்னே அமர்ந்திருந்த வீரபத்ரனை எழுப்பினான் காத்தவராயன்.
“நெசமாவா? சத்தம் காட்டாமல் ஊருக்குக் கிளம்பி போக வேண்டியது தானே? ஐயோ, அவிங்களே எப்போ எப்போன்னு காத்துட்டு இருப்பானுங்களே? இப்போ என்ன ஒரண்டை இழுக்குறானுங்கன்னு தெரியலையே? காக்காவிரட்டி! என்னய்யா பண்ணுறது?”
“என்னைக் கேட்டால்.. நான் என்ன செய்யட்டும்?”
“எதாச்சும் ஐடியா கொடு காக்காவிரட்டி!”
“இது உன் குடும்பப் பஞ்சாயத்து ராசா! இதில் என்னை இழுக்காதே! நீயாச்சு, உன் குடும்பமாச்சு. குறுக்கால நான் வந்து அடிபட்டு சாக விரும்பலைடா ராசா!”
“இப்படியெல்லாம் பிரிச்சு பேசுறே? நீயும் நானும் அப்படியா பழகியிருக்கோம்!”
“நாம எப்படி பழகியிருந்தாலும் சரித்தேன். நான் இந்த ஆட்டைக்கு வரலைடா சாமி.!”
“இது அநியாயம் காக்காவிரட்டி!”
“அநியாயம்தேன்.. எனக்கு என் பொண்டாட்டி கயலு முக்கியம். என் கயலுக்கு என் உசிரு ரொம்ப முக்கியம். சேதாரமில்லாமல் மருதைக்குப் போய்ச் சேரணும்.!”
“அதேன் அம்மா, மைடப்பி வளைகாப்பு முடிஞ்சதும், கயலை இங்கே அனுப்புறேன்னு சொல்லிருக்காகளே.. அப்பறம் என்ன? இப்போ துணைக்கு வா!”
“ஹான்.. அதுக்கு..? என் பொண்டாட்டி இங்கே வர்ர வரைக்கும் நான் உசுரோட இருக்க வேணாமா? என் உசிரு எனக்கு வெல்லம்தேன்..! என்கிட்டே பேசுறதை விட்டுட்டு, அங்கண போய் என்ன ஏதுன்னு பாரு! ஏழரையைக் கூட்டி எருமை மேல ஏத்தப் போறாய்ங்க!” என காத்தவராயன் சொல்ல, தான் இன்னாரின் மகன் எனத் தெரிந்துவிடக் கூடாதென்பதில் சிறு தயக்கம் இருந்தாலும்,
‘என்றாவது ஒருநாள் தெரியத்தானே போகிறது.? இன்று தெரிந்தால் என்ன? அரசியின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக நிராகரிக்கப்படும் உறவு தேவையே இல்லை. பொய்யை அடித்தளமாய் வைத்து இழுத்துப் பிடிக்க நினைக்கும், எந்த உறவும், நீண்ட நாள் நிலைப்பதில்லை! பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள் சங்கடத்தில் நிற்கையில், உதவாமல் நிற்பது தான் தவறு!’ என முதன்முறையாய் சரியாய் யோசித்தவன், வேகமாய் வீட்டை நோக்கிச் சென்றான்.
“அடேய் என் தம்பி மயனுங்களா! இந்த வீட்டில் உசுரு உள்ள வரைக்கும், உட்கார்ந்து சோறு திங்கிற உரிமையும், உருத்தும் எனக்கு இருக்குடா! நெல்லுக்கு நடுவில் முளைக்கிற புல்லாட்டம், நேத்து மொளைச்ச சின்னப் பயலுக.. நீங்க சொல்லுறதுக்கெல்லாம் நான் அசருவேனா? என்னை யாருன்னு நினைச்சீங்க? நான் அரசி டா. என் தம்பி நாச்சியப்பன் வந்து போகச் சொல்லட்டும் நான் போறேன்.!”
“ஆமா! இவங்க அரசின்னு பேரு வச்சுக்கிட்டா மதுரைக்கே அரசின்னு நினைப்பு! எங்க அப்பன் ஒரு சொரணை கெட்ட மனுஷன். அந்த ஆளுக்கு எம்புட்டு பட்டாலும் புத்தி வராது. அதேன் நாங்க சொல்றோம். பொறந்த வீடுன்னு வந்து சீராடினதெல்லாம் போதும், முதலில் இடத்தைக் காலி பண்ணுங்க!”
“ஆமாடா! நான் இந்த மருதைக்கே அரசிதேன். அதுக்கு இப்போ என்னாங்கிற? என் தம்பி வந்து சொல்லட்டும் நான் போறேன். அதுக்கு முன்னே எவனாவது ஒத்தை வார்த்தை பேசுனீங்க, தம்பி மயனுங்கன்னு கூடப் பார்க்க மாட்டேன், சென்னியைச் சேர்த்து இறுக்கிப்புடுவேன் சொல்லிப்புட்டேன்.!” உறவாய் நினைத்து வந்த தம்பி மகன்களின் பேச்சைப் பொறுக்க முடியாத ஆற்றாமையில், அரசி பேசிய அதே நேரம், முகத்தில் அவசரமும் பதற்றமுமாய், வியர்க்க விறுவிறுக்க அவர்கள் முன் வந்து நின்றான் வீரபத்ரன்.
அத்தனை நேரமாய், சண்டையிடும் சுவாரஸ்யத்தில் இருந்த அனைவரின் தலைகளும், மெல்லமாய் வீரபத்ரனை நோக்கித் திரும்ப, எல்லோரின் பார்வை போகும் இடம் நோக்கிய அரசி, தன் இளைய மகனைப் பார்த்து வெளிப்படையாகவே அதிர்ந்தார்.
“இவன் என்னத்துக்கு இங்கண வந்தான்?! கிறுக்குப் பய! இந்த மனுஷன் மயன் மண்ணாங்கட்டின்னு என்னத்தையாவது சொல்லாமல் இருக்கணுமே?” என வாய்க்குள் முணுமுணுத்தபடி, தன் கணவரை நோக்கி, அவர் பார்வையைத் திருப்ப, கதிர்வேலோ, விழிகள் தெறித்து விழுந்துவிடும் அதிர்வுடன் வீரபத்ரனைத் தான் பார்த்திருந்தார்.
“அடேய்! அரசி மயனே! உங்க அப்பன் பார்க்கிற தோரணையே சரியில்லையே? கண்ணில் அனல் பறக்குது! விட்டால் கண்ணில் ஃபயர் விட்டே உன்னைப் பொசுக்கிருவாரு போல? ஆனால் நீ வந்ததில் ஒரு நல்லது நடந்துருக்கு டா வீரா! அம்புட்டு பேரும் சட்டுன்னு அமைதியாகிட்டாய்ங்க பாரேன். பஞ்சாயத்து ஓவர் வா போவோம்!” என வீரபத்ரனின் அருகில் வந்து நின்ற காத்தவராயன் வீரபத்ரனின் காதுக்குள் முணுமுணுக்க,
“கொன்டேபுடுவேன் காக்காவிரட்டி ஓடிரு!” என பற்களுக்கிடையே வார்த்தைகளை நறநறத்தான் வீரபத்ரன்.
“முறைக்காதேடா! எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. அதுவும் இந்த சுச்சுவேஷனைப் பார்த்தது ஒரு டயலாக் மண்டைக்குள்ளே ஓடிக்கிட்டே இருக்கு என்னன்னு கேளேன்.!” என காத்தவராயன் சொன்ன அதே நேரம், கதிர்வேலின் பார்வை உக்கிரமாய் வீரபத்ரனை நோக்கித் திரும்பியிருந்தது.
“இவரு வேற முறைக்கிறாரு! நீ வேற டயலாக், மண்ணாங்கட்டின்னு உசிரை எடுக்காதே டா!” என வீரபத்ரன் சொல்ல,
“நீ கேட்கலைன்னாலும் நான் சொல்லியே தீருவேன்..!” எனச் சொன்ன காத்தவராயன்,
“மாட்டிக்கிட்டான்! மாட்டிக்கிட்டான்! காட்டெருமை மாட்டிக்கிட்டான்!” என சிரித்தபடியே சொல்ல, கத்தவராயனை எரிச்சலுடன் வீரபத்ரன் முறைக்கவும்,
“நீ எங்கே இங்கே வந்தே? ஒத்தை வார்த்தை கூடச் சொல்லவே இல்லை?!” எனக் கதிர்வேல் கேட்கவும் சரியாக இருந்தது.
“என்னத்துக்குடா இங்கண வந்தே? இவரு உன்னைக் கையோட இழுத்துக்கிட்டேதேன் போகணும்ன்னு நிப்பாரு!” என அரசி புலம்ப,
“ஏன்டா, நான்தேன் காலையில் கிளம்பிருவோம், இந்தப்பக்கம் வராதேன்னு சொன்னேனே? லூசுப் பயலே!” என அழகர் தன் தம்பியிடம், சைகையால் கேட்க,
‘இந்த வீரமில்லாத பத்ரனுக்கு வேற வேலையே இல்லை! என்னத்துக்கு இங்கண வரணும்? இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கணும்? மாமா மூஞ்சியைப் பார்த்தால், ரொம்ப உக்கிரமா இருக்கிற மாதிரி தெரியுதே? அண்ணேங்களுக்கு தெரிஞ்சால் என்ன நடக்குமோன்னு தெரியலையே?’ என மனதிற்குள்ளேயே புலம்பியபடியே திருதிருவென விழித்துக் கொண்டு நிற்கும், வீரபத்ரனைப் பார்த்திருந்தாள் மேகவர்ணா.
******.
பாளையங்கோட்டையின் தனியார் மருத்துவமனை..
அந்த தீவிர சிகிச்சைப் பிரிவின் வெளியே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருவர், சீருடை அல்லாத வண்ண உடையில், காவலுக்கு நிற்க, உள்ளே உறக்கத்தின் பிடியில் இருந்தான் பசுபதி.
“யோவ்! கவனமா பார்த்துக்கிடுங்கய்யா! சின்ன கேப் கிடைச்சாலும் எஸ்கேப் ஆகிடுவான்.!” என அந்த காவல்துறை உயர் அதிகாரி கண்டிப்பான குரலில் அறையின் வாசலில் நின்றிருந்த காவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“சார்! என்னதான் சார் ஆச்சு? இந்த மொட்டைத் தலையனுக்கு?”
“யாருக்குய்யா தெரியும்? நேத்து இராத்திரி அட்மிட் பண்ணினது, இவனுக்கு என் மூச்சு திணறல் வந்துச்சுன்னு டாக்டர்ஸ்க்கே தெரியலை. இந்த பசுபதிக்கு சாதாரண சளி கூட இல்லைய்யா! எப்படி மூச்சு அடைச்சுச்சுன்னு தெரியலை. இன்னைக்கு மத்தியானம் வரை வச்சு பார்த்துட்டு, டிஸ்சார்ஜ் பண்ணி, மறுபடியும் செல்லில் அடைக்கிற வரை கவனமா இருக்கணும்ய்யா! இப்படி அப்படி கூடத் திரும்பிடாதீங்க!” என கொஞ்சம் பயத்துடனே எச்சரித்தார் அந்த அதிகாரி.
“எஸ் சார்!” என அந்த இரு காவலர்களும் ஒருமித்த குரலில் சொல்ல தலையை ஆட்டி விடை பெற்றார் அந்த அதிகாரி. ஆனால் சற்று நேரத்தில் நடக்கப் போகும் விபரீதத்தை அவர் அப்போதைக்கு அறிந்திருக்கவில்லை.
“என்னய்யா ஏ.சி நம்மளை இப்படி பயமுறுத்துறாரு? என்னைக்கும் இல்லாத திருநாளா மஃப்டியில் வேற காவலுக்கு நிக்க சொல்றாங்க! ஒண்ணும் புரியலையேய்யா”
“உள்ளே இருக்கவன் அம்புட்டு லேசுப்பட்டவன் இல்லைய்யா! அஞ்சாறு கொலை பண்ணினவனாம்.! ரொம்ப மோசமானவன், சைக்கோன்னு பேச்சு!”
“என்னய்யா நீயும் பயமுறுத்துற? ப்ரைம் மினிஸ்டருக்குக் கூட இவ்வளவு பில்ட்-அப் கொடுக்க மாட்ட போல.. போயும் போயும் ஒரு கைதிக்கு, இவ்வளவு பில்ட்அப்-ஆ இப்படியே பேசிப் பேசி அவனை ஹீரோவாக்கிடுவீங்க போல..?”
“உண்மையைத்தான்ய்யா சொல்றேன். உள்ளே இருக்கிறவன் பேரு பசுபதி. ரொம்ப டேஞ்சரான ஆளுன்னு பேசிக்கிறாங்க! அதை விட, உனக்கு இன்னொரு பெரிய விஷயம் சொல்லவா? இங்கே இவனை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கிறதே அன்-அபீஷியல் தான். இன்னும் கொஞ்ச நாளில், இவனுக்கு தூக்குன்னு முடிவு பண்ணிட்டாங்க! இந்த நேரத்தில் செல்லுக்குள்ளே செத்து எதுவும் போய்ட்டான்னா, லாக்-அப் மர்டர்ன்னு கேஸ் திரும்பிரும். உடம்பு சரியில்லைன்னு கோர்ட் அனுமதி கேட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தால், இவனுக்கு தூக்கு தள்ளிப் போக வாய்ப்பு இருக்கு. இவன் ரொம்ப ஆபத்தானவன், உள்ளே வச்சு பாதுகாக்க முடியாது. அதனால்தேன், யாருக்கும் தெரியாமல், தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க! நம்மளை யூனிஃபார்ம் இல்லாமல் மஃப்டியில் வரச் சொன்னதிலேயே உனக்குத் தெரியலையா?” என அந்தக் காவலர் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், அவர்கள் காவலுக்கு நின்றிருந்த அறையின் உள்ளே ஏதோ விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டது.
“என்னய்யா, உள்ளே என்னமோ சத்தம் கேட்குது?” என பதற்றத்துடன் கேட்க, இன்னொரு காவலரின் முகத்திலும், பயமும் பதற்றமும் நிரம்பி வழிந்தது.
“உள்ளே போய் என்னன்னு பார்க்கணுமாய்யா?”
“பின்னே, அவன் தற்கொலைக்கு எதுவும் முயற்சி பண்ணிருந்தான்னா, நம்ம தலையைத்தான் உருட்டுவானுங்க! நாம செத்தாலும், ட்யூட்டியைப் பார்த்து தானே ஆகணும்! வா, உள்ளே போகலாம்!” என இன்னொரு காவலர் சொல்ல, நடுங்கிய கரங்களில் துப்பாக்கியைப் பிடித்தபடியே, இருவரும் அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைய, மேஜையில் வைத்திருந்த மருந்து மாத்திரைகள் அத்தனையும் கீழே விழுந்து சிதறியிருக்க, பசுபதியின் கை நரம்பில் குத்தப்பட்டிருந்த ஊசி, அநாமத்தாய் தனியாய் தொங்கிக் கொண்டிருந்தது.
“யோவ்! ட்ரிப்ஸ் போட்ட வயர் இங்கே தொங்குதுய்யா! ஆளைக் காணோம்! பூட்டின ரூமுக்குள்ளே இருந்து எப்படிய்யா போனான்?” என ஒருவர் சொல்ல,
“தெரியலையே! எங்கே போய்த் தொலைஞ்சான்னு தெரியலையே? வேலையை விட்டுத் தூக்கிருவானுங்க..!” எனச் சொல்லிக் கொண்டிருந்தவரின் பேச்சு பாதியில் தடைபட்டு நிற்க, எதிரில் நின்ற காவலரின் பின்னால் இருந்த ஜன்னல் திரையிலேயே பதில் சொன்னவரின் பார்வை நிலைக்குத்தி நின்றது.
“என்னய்யா! எனக்குப் பின்னால் என்னத்தைப் பார்க்கிறே? ப.. ப.. பசுபதியா?” எனக் குரல் நடுங்கக் கேட்டவரின் தோள்ப்பட்டையில் ஏதோ ஊசி குத்தியது போன்ற உணர்வில் “ஆ..ஆ..!” எனத் தன்னையும் அறியாமல் கத்தியபடியே அனிச்சையாய், திரும்ப முயன்றவர், அப்படியே நிலை குலைந்து கீழே சரிய, அவர் பின்னால், ஒருவிதக் கொடூரப் புன்னகையும், மொட்டைத் தலையுமாய் நின்றிருந்தான் பசுபதி.
அவன் புன்னகையைப் பார்த்ததுமே, இவருக்கு வியர்த்து வழிய, கைகள் துப்பாக்கியைப் பிடிக்க முடியாது தடுமாறியது. பசுபதி ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து முன்னால் வர, அந்தக் காவலரோ ஒவ்வொரு அடியாய் வைத்துப் பின்னால் நகர்ந்தார்.
“சுடுடா! ட்ரிகரை அழுத்தி என்னைச் சுடு டா! ஷூட் மீ இஃப் யூ டேர்.. இந்த அறையிலிருந்து, நாம ரெண்டு பேரில் யாரோ ஒருத்தர் தான் வெளியே போகப் போறோம்! நீ உயிரோட போகணும்ன்னா என்னை சுட்டுடு!” எனச் சொல்லிக் கொண்டே பசுபதி முன்னால் வர, அவனைப் பார்த்துப் பயந்து நடுங்கி, துப்பாக்கியை கரத்திலிருந்து தவறவிட்டிருந்தார் அந்தக் காவலர்.
ஆனால், அந்தத் துப்பாக்கி தரையைத் தொடும் முன்னரே, பசுபதியின் கரம் இடை புகுந்து, அந்தத் துப்பாக்கியை லாவகமாய் கையில் ஏந்தியிருந்தது. லோட் செய்யப்பட்டு சுடுவதற்கு தயாராய் இருந்த அந்த ரீஃபில் வகை துப்பாக்கியின் விசையை பசுபதி அழுத்தியிருக்க, எதிரில் நின்றிருந்த காவலரின் கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது.
இரத்த வெள்ளத்தில் அந்தக் காவலர் கீழே சரிந்துக் கிடக்க, கொஞ்சமும் பயமோ, பதற்றமோ, குற்றவுணர்வோ, எதுவுமே இல்லாமல், துப்பாக்கியைத் தூக்கி மூலையில் வீசியவன், உதிரம் தெறித்து அழுக்காகியிருந்த, தன் உடைகளைக் களைந்து வீசிவிட்டு, கீழே விழுந்துக் கிடந்த காவலர் ஒருவரின் உடையை அணிந்துக் கொண்டான்.
உடலில் உடையில்லாமல், அரை நிர்வாணமாய், பசுபதியால் முதலில் தாக்கப் பட்டு, மூச்சு இழுத்துக் கொண்டிருக்க, தன் இறுதி மூச்சிற்கு தவித்து பசுபதியையே பார்த்துக் கொண்டிருந்த அந்தக் காவலரின் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மூடத் துவங்கியிருந்தது. மெது மெதுவாய் மூடத் துவங்கிய அந்தக் காவலரின் விழிகளுக்குள், சிரிப்புடன் தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றிருந்த பசுபதியின் பிம்பம் விழுந்தது.
ஒருவித பயமுறுத்தும்படியான, உடல் நடுங்கி, முதுகுத் தண்டை சில்லிட வைக்கும்படியான அந்த சிரிப்பு, பசுபதியின் கொடூரமான அந்தச் சிரிப்பு, சாகும் தருவாயிலும் கூட, அந்தக் காவலரின் உயிருக்குள் நடுக்கத்தைக் கொடுத்திருந்தது.
தித்திக்கும் 🔥

