
திமிர்-9
“ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசந்தனை
நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசந்தனை
காதல் என்று பேர் சூட்டியே
காலம் தந்த சொந்தம் இது
என்னைப்போலே பெண் குழந்தை
உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றானது
இன்னொரு உயிர்தானடி..!
நீ…ல வானம்
நீ…யும் நானும்..!”
வாகனத்திற்குள் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை இதழ்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்க, மிதமான வேகத்தில் மகிழுந்தை செலுத்திக் கொண்டிருந்தான் துடிவேல் அழகர்.
‘இந்தக் கிறுக்கச்சி மாதிரியே பொம்பளப் பிள்ளைதேன் வேணும். நானும் என் மவளும் சேர்ந்து கருகருவை இம்சை பண்ணனும்!’ என மனதில் நினைத்தவனின் இமைகளுக்கு மகவைத் தாங்கிய வயிற்றுடன் இருக்கும், மனைவி கருவிழிதான் வந்து போனாள்.
“சூதானம் அழகரு!”
“நானும் புள்ளையும் உனக்காக காத்திருப்போம். உன் புள்ளை நீ இல்லைன்னா, வயிற்றுக்குள்ளே ஓடிக்கிட்டே கிடக்கும். சீக்கிரம் வந்து சேரு!”
“அப்பறம், அத்தையும் மாமாவும், அங்கண போய், ஒரண்டை இழுத்து வச்சிடாம பார்த்துக்கோ! அத்தை அமைதியாய் இருந்தாலும், என் தாய் மாமன் அதேன் உங்க அப்பன் வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டார். பத்தாக் குறைக்கு, இந்த பதிற்றுப்பத்து வேற, அங்கண போய் கிடக்கான். என்ன நடக்கப் போகுதோன்னு மனசு அடிச்சுக்கிது.!”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் டி, ஆள் மயக்கி. சீக்கிரம் வந்துருவேன். நீ பதறாமல் சூதானமா இரு! நேரத்துக்கு சாப்பிடுடி கரு கரு!” எனத் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு வந்தது மனதிற்குள் வந்து போக, அவன் இதழ்களில் புன்னகை வந்தமர்ந்தது.
அதே நேரம்,
“என்னத்துக்கு இப்படி மூஞ்சியை எட்டு முழத்துக்கு தூக்கி வச்சிட்டு வாரீக? நல்ல விஷயத்துக்குப் போறோம், இப்படியா மூஞ்சியை வச்சிட்டு வருவீக?” பின் இருக்கையில் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த கணவனைப் பார்த்துக் கேட்டார் அரசி.
“என் மூஞ்சியைப் பார்க்கப் பிடிக்கலைன்னா பார்க்காதே! சும்மா நொய் நொய்ன்னு என்னத்தையாவது சொன்னேன்னு வையி, இப்படி காரிலிருந்து இறங்கி போயிருவேன். எங்க ஆத்தா சொல்லிச்சேன்னு உன் கூட வாரேன். இல்லைன்னா, உன் கூடப் பொறக்காத தொம்பியை வெற்றிலை, பாக்கு வச்சு அழைக்கணும்ன்னு எனக்கென்ன தலை விதியா? என் கால் தூசிக்குப் சமமாவானா அவனும் அவன் குடும்பமும்?”
“இந்த பூமியில் எல்லாருமே சமம்தேன். சொல்லப் போனால் நாமளே இந்த பிரபஞ்சத்தில் ஒரு சின்ன தூசிதேன். நீ மேலே, நான் கீழேன்னு எங்கேயும் இல்லை. எல்லாரும் மனுஷங்க தான். அவங்க அவங்க இடத்தில் அவங்க பெரியவங்தேன்.!” எனச் சொல்லி கணவனின் முறைப்பைப் பரிசாய்ப் பெற்றுக் கொண்டார் அரசி.
“நீங்க முறைச்சீங்கன்னா நான் சொன்னது உண்மை இல்லைன்னு ஆகிடுமா? நான் சொன்னதுக்கு உங்களுக்கு பதிலே சொல்ல முடியலையே, அப்போ நான் சொன்னது உண்மைன்னு தானே அர்த்தம்.? அப்பறம் என்ன சொன்னீங்க?, பார்க்கப் பிடிக்கலைன்னா பார்க்கக் கூடாதா? இதெல்லாம் கல்யாணம் ஆகறதுக்கு முன்னால் சொல்லியிருந்தால், உங்களை பார்க்காமலே இருந்திருப்பேன். நீங்க தானே நான்தேன் வேணும்ன்னு ஆசைப்பட்டு கட்டுனீக?” எனக் கேட்டார் அரசி.
“அம்மா தாயே.. தெரியாமல் கட்டிட்டேன். சும்மா நசநசன்னு பேசி உசிரை எடுக்காதே! இப்போ உன் தொம்பியைப் பார்க்கத்தானே போறோம்! அங்கணையே உன்னை விட்டுட்டு வந்துடுறேன். நீ உன் இஷ்டம் போல இரும்மா! என்னை ஆளை விடு!”
“இது நல்ல கதையா இருக்கே? முப்பத்தி அஞ்சு வருஷம் குடும்பம் நடத்தி, பிள்ளையை பெத்து பேரு வச்சு, பேரன் பேத்தி எடுக்கப் போற நேரத்தில், என்னை பத்தி விடலாம்ன்னு பாக்குறீகளா.? என்னை பழைய மாதிரி வயசுப் புள்ளையா மாத்திவிடுங்க! நான் எங்க அப்பன் ஆத்தாக்கிட்டேயே இருந்துக்கிறேன். நீங்கதேன் ஆம்பிள்ளை, என்னிலும் உசந்தவங்க தானே நீங்க? முடிஞ்சா என்னை பழையபடி மாத்திவிடுங்க பார்ப்போம்!”
“ஏன்டி பைத்தியக்காரியா நீ? உன்னை வயசுப் புள்ளையா மாத்தறதுக்கு நான் என்ன மந்திரவாதியா? மந்திரவாதியால் கூட இதையெல்லாம் பண்ண முடியாது. வர வர உன்னோட திமிருத்தனமும் தெனாவட்டும் கூடிக்கிட்டே போகுது டி! இத்தனை வருஷத்தில், ஒத்தைச் சொட்டு கண்ணீர் விடாதவ, அன்னைக்கு பேசும் போது, கண்ணீர் விட்டுத் தொலைச்சியேன்னு வந்து தொலைச்சேன் பாரு என்னைச் சொல்லணும்!” எனப் பேச்சுவாக்கில் கதிர்வேல் நொந்துக் கொள்ள,
‘தனக்காகத்தான் தான் சிந்திய ஒற்றைத் துளி கண்ணீருக்காகத்தான் இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கிறார்!’ என்பது புரியவும், இரகசியமாய் புன்னகைத்துக் கொண்டார் அரசி.
“அடேயப்பா! கட்டுன பொண்டாட்டிக்காக இறங்கி வர ஆளுதேன் நீங்க? அத்தை சொன்னாகன்னு வந்தீக! இல்லைன்னா நீங்களாவது வர்ரதாவது..?” எனப் போலியாய் சலித்துக் கொண்டார் அரசி.
“இந்தாரு அரசி! நான் வாரது உனக்காக மட்டுந்தேன். அங்கே உங்க தம்பி மயனுங்க என்னமாவது பேசினாய்ங்க.. அப்பறம் பார்த்துக்க..!” முறைத்தபடி நிறுத்தினார் கதிர்வேல்.
“நம்ம புள்ளைகளுக்கு தாய்மாமன் முறைக்கு அவிங்கதேன் வந்து நின்னுருக்கணும்? சீரும் சிறப்புமா வந்து வாசலில் நின்னவிங்களை உருத்து இல்லை உரிமை இல்லைன்னு விரட்டி விட்டது நம்ம தப்பு தானே? நம்ம அழகருக்கு மொட்டை போடும் போது, நீங்களும் உங்க அப்பாரும் சும்மாவா இருந்தீக? நீ என்ன ஒட்டிப் பொறந்த உடம் பொறப்பான்னு கேட்டு என் தம்பியை விரட்டி விடலை? எனக்குத்தேன் கூடப் பொறந்த பொறப்புன்னு ஒண்ணும் கொடுத்து வைக்கலையே? வந்தவிங்களையும் வாசலோட வச்சு விரட்டி விட்டாச்சு. இப்படி உரிமையும், உருத்தும் பார்க்கிற நீங்க, வீட்டுக்கு ஒத்தைப் பொண்ணா பிறந்த என்னை ஏன் கட்டினீங்க? நாலு அண்ணன் தம்பியோட பொறந்த பொண்ணைக் கட்டியிருக்க வேண்டியது தானே?”
“இப்போ என்னதேன் செய்யணும்ங்கிற?” சலிப்போடு கேட்டார் கதிர்வேல்.
“நீங்களும் உங்க அப்பாரும் செஞ்சது தப்புதானே.? என் தம்பி மயனுங்க என்ன பேசினாலும் எனக்காக பொறுத்துக்கிடுங்க! எனக்காக தானே வர்ரீங்க? அப்போ எனக்காக எதையும் ஏடாகூடமாய் பேசாதீங்க!”
“அது அவிங்க பேசுறதைப் பொறுத்துதேன் இருக்கு!” எனக் கதிர்வேல் உறுதியாய் சொல்லிவிட, அரசிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
“போகும் முன்னமே இம்புட்டு விவகாரமா இருக்கு. அங்கே போய் இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ?” முணுமுணுப்பாய் சொல்லிக் கொண்டான் அழகர்.
மதுரையிலிருந்து பாதி தொலைவு கடந்திருக்கும்,
“அழகரு! எங்கணையாவது டீ கடையா பார்த்து நிறுத்துய்யா! உட்கார்ந்தே வாரது ஒரு மாதிரி இருக்கு. உங்க அப்பாருக்கு இந்நேரத்திற்கு நாலு டீ உள்ளே போயிருக்கும். நான் எடக்கு மடக்கா பேசுவேன்னு சத்தம் காட்டாமல் வாராக!” எனக் கணவனுக்கும் சேர்த்தே சொன்னார் அரசி.
“நான் உன்கிட்டே, டீ வேணும், காப்பி வேணும்ன்னு கேட்டேனா? உனக்கு வேணும்ன்னு சொல்ல வேண்டியது தானே? ரெண்டுங்கட்டா நேரத்தில் கிளம்பி வந்துபுட்டு இம்சையா கிடக்கு. ” எனக் கேட்டாலும், வாகனத்தை நிறுத்தியதும் முதல் ஆளாய் இறங்கிய கணவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார் அரசி.
கதிர்வேல் முதல் ஆளாய் இறங்கி தேநீர் கடையை நோக்கி சென்றதும்,
“எம்மா நம்ம வீரா, அங்கண தானே இருக்கான்.? இவரு பார்த்தாருன்னா அம்புட்டுதேன்.! நீங்க என்னடான்னா இம்புட்டு தைரியமா இருக்கீங்க?”
“எம் மருமவ கருவிழி இருக்கும் போது, நான் என்னத்துக்கு பயப்படணும் அழகரு?”
“அவ என்ன செஞ்சா? இந்தக் கிறுக்கச்சி என்கிட்டே கூட ஒண்ணும் சொல்லலை?”
“இதெல்லாம் மாமியாருக்கும் மருமகளுக்குமான இரகசியம். நாங்க. வாரோம்ங்கிற தகவலு உன் தம்பி காதுக்கு போயிருக்கும். அவன் கோளாறா எங்கணயாச்சும் பதுங்கியிருப்பான் நீ வேணும்ன்னா பாரு!”
“நான் ஃபோன் போட்டப்போவும் உன் மயன் எடுக்கலை. என் பொண்டாட்டி ஃபோன் போட்டப்போவும் உன் மயன் எடுக்கலை? அப்பறம் எப்படி உன் தங்க மயன் காதுக்கு நாம வர்ர சங்கதி போயிருக்கும்?”
“எப்படியோ போச்சு விடேன் டா!”
“எம்மா! எனக்கு தெரியாமல் நீயும் உன் மருமவளும் அப்படி என்ன செய்றீங்க?”
“என்னமோ செஞ்சுட்டு போறோம்! எப்படியும் உனக்கு தெரியத்தேன் போகுது. அங்கண போனதும் உனக்கு தெரிஞ்சுரும் பாரு! இங்கணையே பேசிக்கிட்டே நிற்கப் போறியா? உங்க அப்பாவைப் பாரு, காப்பி கடையில் நின்னுகிட்டு பராக்கு பார்த்துட்டு நிற்கிறாரு. நாம இம்புட்டு நேரமா நின்னு கதையளக்கிறோம்ன்னு வையப் போறாரு! வா போவோம்!”
“அப்படியே நேக்கா சீனையே மாத்திட்டம்மா நீயி.. இப்போ என்ன நான் கேட்கக் கூடாது அம்புட்டு தானே?” எனச் சொல்லிவிட்டு தன் அன்னையுடன் நடந்தான் துடிவேல் அழகர்.
********
பெரிய அம்மாபட்டியின் எல்லையை நெருங்கும் போதே, மாலை மங்கத் தொடங்கியிருந்தது.
“இப்படி மொட்டைப் பட்டிக்காட்டில் என்னத்தை சாதிக்கப் போறேன்னு உன் தொம்பியும், தொம்பி மயனுங்களும் இருக்காய்ங்க?”
“ஏன் நீங்களும் உங்க அண்ணனும் நெடுமாறன் சென்னைக்கு போறான்னு வானதுக்கும், பூமிக்கும் குதிச்சீங்களே என்னத்துக்கு? சொந்த மண்ணு, பழகின இடம்ங்கிறது தானே காரணம்? என் தம்பியும் அப்படித்தேன்.!” என அரசி பதில் சொல்ல,
“என்னமோ உனக்கு ஆரத்தி சுத்தி வீட்டுக்குள்ளே அழைக்கப் போற மாதிரிதேன், அவிங்களுக்கு சப்போர்ட் பண்ணுற? வீட்டுக்குள்ளே கூட காலை எடுத்து வைக்க விடாமல் விரட்டி விடப் போறாய்ங்களா.. இல்லையான்னு பாரு!” எனச் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், வாகனத்தின் முன்னால் நின்று ஒரு பெண் கையசைப்பது தெரிந்தது.
கருவிழி காட்டிய புகைப்படத்தில் மேகவர்ணாவைப் பார்த்திருந்த அரசிக்கு, யாரும் சொல்லாமலே தன் தம்பி மகளை அடையாளம் காண முடிந்தது. கண்களைச் சுருக்கிப் பார்த்து, அவளை அடையாளம் கண்டு கொண்டவரின் மனதிற்குள் இனம் புரியா ஓருணர்வு. சிறுவயதில் இரண்டு மூன்று முறைகள் பார்த்தது. ஆசை தீர தூக்கி கொஞ்சியதுக் கூட கிடையாது.
குடும்பங்கள் ஒற்றுமையாய் இருந்திருந்தால், முகப்புத்தகத்தில் பார்த்து, இவளை அடையாளம் காண வேண்டிய அவசியம் இருந்திருக்காதே? மனம் மருகித் தவித்தது. இதுவரை எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இனிமேல் இரு குடும்பங்களுக்கு நடுவே இந்த இடைவெளி இருக்கக் கூடாதென மனதில் உறுதியாய் நினைத்துக் கொண்டார் அரசி.
‘நம்ம வீராவுக்கும் இவளுக்கும் ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்குமோ?’ அவரை அறியாமலே அவர் மனம் கணக்கு போட்டது.
“அழகரு! காருக்கு முன்னே நின்னு அந்தப் பிள்ளை கை அசைக்குது பாரு.. கிட்டக்க போய் வண்டியை நிறுத்துய்யா!” என அரசி சொல்ல,
“யாரு அந்தப் புள்ளை? என்னத்துக்கு வண்டியை நிறுத்தச் சொல்லுற?” என்ற கணவனின் கேள்வியைக் கண்டுக் கொள்ளாமல், வாகனம் நின்றதும், கதவைத் திறந்துக் கொண்டு வேகமாய் இறங்கினார் அரசி.
“அம்மாடி! வர்ணா! எப்படி இருக்க ராசாத்தி? கருவிழிதேன் சொன்னாள். நீயும் அவளும் சினேகிதிங்கன்னு சொன்னா. உங்க அப்பன் எப்படி இருக்கான்? இன்னும் கோபமாகத்தேன் இருக்கானா?” என ஆற்றாமையோடு கேட்டார் அரசி.
“இருக்கோம் அத்தே! அவருக்கு கூட கோவம் இல்லைத்தே! அண்ணேங்கதேன்.. அய்யனாரு கணக்கா துடியா நிற்கிறாய்ங்க! இம்புட்டு வருஷஞ்செண்டுதேன் இந்த ஊருக்கு உங்களுக்கு பாதை தெரியுதா? உங்க வீட்டில் யாரும் பேசாட்டியும், நீங்களாச்சும் பேசுவீங்கன்னு அப்பா எதிர்பார்த்தாரு!”
“நேரமும் காலமும் இப்படித்தேன்னு இருந்திருக்கு! என்னத்தை சொல்ல? சின்ன பிள்ளையா உன்னைய ஏதோ விசேசத்தில் பார்த்தது. எம்புட்டு வளர்ந்துட்ட ராசாத்தி!”
“ஏன் உங்க மயன் பனை மரத்தில் பாதி வளரும் போது, நாங்க வளர மாட்டோமாக்கும்?” என வர்ணா சொல்ல,
“ஆமா, அந்தக் கிறுக்குப் பய எங்கண இருக்கான். உங்க மாமனுக்கு அவன் இங்கணதேன் திரியறான்னு தெரியாது. தெரிஞ்சுச்சு அம்புட்டுதேன். மனுஷன் சலங்கைக் கட்டாத குறையாய் ஆடி தீர்த்துடுவாரு!” எனக் கேட்டார் அரசி.
“எங்கணன்னு தெரியலை அத்தை! நீங்க வாரீங்கன்னு நேத்தே சொல்லிட்டேன். விடியலிலிருந்து உங்க மயனை நான் கண்ணில் பார்க்கலை!” என வர்ணா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மகிழுந்திலிருந்து இறங்கி வந்து, தொண்டையைச் செருமியபடி அரசியின் அருகில் நின்றார் கதிர்வேல்.
“வாங்க மாமா! எப்படி இருக்கீக? வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காகளா?” என கதிர்வேலிடம் மேகவர்ணா கேட்க,
“ம்ம்ம்!”
முறைப்பாய் தலையசைத்தார்.
“ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்துக்கிட்டு உன் தம்பி மவளோட, ஒட்டி உறவாடிக்கிட்டுதேன் இருந்தியாக்கும்?” மனைவியின் காதுக்குள் கோபமாய் உறுமினார் கதிர்வேல்.
“நான் என்னமோ கள்ளக் காதலன் கூட பேசின மாதிரி என் காதுக்குள்ளே உறுமுறீக? என் தம்பி மவகிட்டே பேசினது கூட குத்தமா?!”
“குத்தம்தேன்.. எங்க குடும்பத்தை விரோதியாய் நினைக்கிறவிக்க கூட, நீ சொந்தம் கொண்டாடிட்டு திரியற? இது நல்லாவா இருக்கு. எங்க அப்பன் இருந்திருந்தாருன்னா இதெல்லாம் நடந்திருக்குமா?”
“பொழுதுக்கும் அவரு இருந்திருந்தால் நடந்துருக்குமா? அவரு இருந்தால் நடந்திருக்குமான்னு பிணாத்திக்கிட்டே திரிய வேண்டியது. எனக்கும்தேன் அப்துல்கலாம் இருந்திருந்தால் நல்லா இருக்கும்ன்னு தோணுது. அதுக்குன்னு அவருதேன் உடனே வந்துருவாரா? நாம நினைக்கிறதெல்லாம் நடந்துருமா?!” நக்கலாய் அரசி சொல்ல,
“உனக்கு ஏத்தம் தான்டி! நீ மிதிச்சு நிற்கிற இந்த ஊரு மண்ணும், இந்த ஊரு காத்தும், எகத்தாளமாய் பேச வைக்குதாக்கும்?!” என மனைவியிடம் முணுமுணுத்தவர்,
“ஏம்மா! வீட்டுக்குத் தானே வாரோம்.. அப்பறம் என்னத்துக்கு இந்த இரகசிய சந்திப்பு?” மிரட்டலாய் மேகவர்ணாவிடம் கேட்டார் கதிர்வேல்.
“உங்களுக்கு வழி தெரியாதே மாமா! வழி தெரியாமல் பழநிமலைப் பக்கமா போய்ட்டீகன்னா..? அதுக்குத்தேன் நான் வந்தேன்.!” நக்கலாய் மேகவர்ணா சொல்ல,
“கோளாறு புடிச்ச குடும்பம். வாய் மட்டும் வடமதுரை வரை நீளுது.!” எனப் புலம்பியபடியே அங்கிருந்து நகர்ந்தவர், வாகனத்தின் முன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு, கதவை அடித்துச் சாற்றினார் கதிர்வேல்.
“என்ன ஆச்சுப்பா? அம்மா இன்னும் பேசிட்டு இருக்காங்க, நீங்க வந்துட்டீங்களே..?” என துடிவேல் அழகர் கேட்க,
“உங்க அம்மா வர்ராளா இல்லையான்னு கேளு! வரலைன்னா சொல்ல சொல்லு, பேசாமல் வண்டியைத் திருப்பிட்டு மருதைக்குப் போயிருவோம்!” எனக் கோபமாய் அவர் பேசியதிலேயே, அம்மாப்பட்டியிலிருந்து மதுரைக்கு தூது சொல்லும் புறா, கண்ணெதிரில் தாயுடன் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பெண் தான் என்பது புரிந்தது.
‘ஊருக்குள்ளே நுழையும் முன்னமே இம்புட்டு பஞ்சாயத்தா இருக்கு, இவரு அங்கண போய் என்ன செய்யப் போறாரோ? அடேய் வீரபத்ரா.. எங்கணையாவது ஓடிப் போய் ஒளிஞ்சுக்கடா! இவரு கண்ணுல மாட்டினே அம்புட்டுதேன்.’ என யோசித்தபடியே வாகனத்தைக் கிளப்பினான் துடிவேல் அழகர்.
********
நிசப்தமான மிகவும் அந்தகாரமான இரவுப் பொழுதில். அந்த சிறைச்சாலை வளாகம் முழுதும், அசாத்திய நிசப்தத்தத்தை சுமந்திருந்தது. இரவு உணவுவேளை முடிந்து, அட்டெணென்ஸ் எனப்படும், சிறைச்சாலை கைதிகளின் இருப்பை சரி பார்த்து முடித்த பின்னர், அனைவரும் உறங்கச் சென்றிருந்தனர். இரவு நேரப் பணியிலிருக்கும் காவலர்கள் மட்டும், அங்கும் இங்குமாய் நடந்துக் கொண்டிருந்தனர்.
கைதிகள் தங்களுக்கான அறைகளில் இருக்கிறார்களா? என சோதனை செய்த படியே, காவலர்கள் சிலர், சிறைக்குள்ளேயே இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
“யோவ்! அந்த டேஞ்ஜர் செல்லுக்கு இந்த வாரம் யாருய்யா?”
“நம்ம மணிமாறன் தான் சார்.!”
“யோவ்! ஏற்கனவே அந்த மொட்டை ரொம்ப பயங்கரமான ஆளு. இந்த மணிமாறன் தொடைநடுங்கிப்பய சரியா வருவானா?”
“சார், இந்த வாரம், நம்ம ரஞ்சித் சார் தான் அந்த செல்லுக்கு. அவர் லீவில் இருக்காரு சார்!” எனக் கேட்ட இரு காவலர்களின் உரையாடலைத் தொடர்ந்தது,
“சார்!” என சல்யூட் வைத்தபடியே வந்து நின்றார் மணிமாறன்.
“சல்யூட் வைக்கிறதெல்லாம் சரிதான்ய்யா! அந்த மொட்டையோட செல்லுக்கு நீதான் இன்றைக்கு காவல். ரொம்ப கவனமா இருக்கணும்ய்யா! இதுவரை நாலு தடவை தற்கொலை முயற்சி பண்ணிருக்கான். சில முறை தப்பிச்சு போகவும் முயற்சி பண்ணியிருக்கான். உன்கிட்டே பேச்சுக்கொடுத்து, உன்னை ஏமாத்த முயற்சி பண்ணுவான். கவனமா இருய்யா!” என மேலதிகாரி எச்சரித்ததை கேட்டு பயந்து உடல் நடுங்க, அந்த அறையின் முன் வந்து சுவற்றோடு சாய்ந்து நின்றார்.
வழக்கமான கம்பிக் கதவு போல் அல்லாமல், முழுதாய் மூடப்பட்ட, இரும்புக் கதவும், உள்ளிருக்கும் கைதியைப் பார்ப்பதற்கு வசதியாய், சிறிய திறப்பு ஒன்று மட்டும் அமைந்திருந்தது.
மணிமாறனுக்கு உடல், கை, கால் எல்லாம் வெடவெடவென நடுங்கியது. இந்த அறையைப் பற்றியும், உள்ளிருக்கும் கைதியைப் பற்றியும் அவர் கேள்விப்பட்டிருக்கிறார் தான். இதுவரை அவனின் தோற்றத்தையோ முகத்தையோ பார்த்தது இல்லை. ஆனாலும், பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டது.
அடுத்த ஒரு வாரத்திற்கு இந்த கதவின் அருகிலேயே காவலுக்கு நிற்க வேண்டுமென நினைத்தாலே நெஞ்சு நடுங்கியது.
உடல் வெடவெடத்து நடுங்கிப் போய் அவர் வெளியே நின்றிருக்க, அவர் செவிகளுக்கு அருகினில் அனத்தல் சத்தம் கேட்டது. நடுங்கி திடுக்கிட்டு திரும்பி, பார்த்தார். யாருமே அவர் பக்கத்தில் இல்லை. தலையை அங்கும் இங்கும் அசைத்து திருப்பி பார்த்துவிட்டு, மீண்டும் சுவற்றில் சாய்ந்து நின்றார். மீண்டும் அவர் செவிகளுக்குள் யைரோ மூச்சுவிட தவிப்பது போன்ற அனத்தல் சத்தம் கேட்டு, திடுக்கிட்டு நிமிர்ந்தார்.
“யாரையும் பக்கத்திலேயே காணோம்! எங்கிருந்து சத்தம் கேட்குது?” முணுமுணுத்தபடியே, நன்றாக ஊன்றிக் கவனித்தார். தன் அருகிலேயே தான் சத்தம் கேட்கிறது. ஆனால், வெளியில் யாரும் இல்லை என்பது புரிய, சிறையின் அறைக்குள்ளிருந்து தான் சத்தம் வர வேண்டும் என யூகித்து, குற்றவாளியைக் காண்பதற்காய் அமைத்திருந்த திறப்பை திறந்து உள்ளே எட்டிப் பார்த்தவர் மறு நிமிடமே,
“சார்! சார்! இங்கே வாங்க!” என அலறத் துவங்கினார்.
“என்னைய்யா? என்ன ஆச்சு?”
“ப.. ப.. பசுபதி மூச்சு விட முடியாமல் கிடக்குறான் சார். மூச்சு மேலேயும் கீழேயும் இழுக்குது!” எனச் சொன்ன மணிமாறனின் உடல் வெளிப்படையாய் நடுங்கத் துவங்கியிருந்தது.
“யோவ்! உனக்கு அவனைப் பத்தி தெரியாது. எத்தனை தடவை தப்பிச்சு ஓட ட்ரை பண்ணியிருக்கான்னு தெரியுமா? அவன் நடிப்பான்ய்யா!” என அந்த மேலதிகாரி சொன்னாலும், அவர் முகத்தில் பதற்றம் நிறைந்திருந்தது. அவனுக்கு என்ன நிகழ்ந்தாலும், அவர் தானே மேலதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அந்தப் பதற்றம் தான் அவர் முகத்தில் விரவிக் கிடந்தது.
“நீ போய்! டாக்டருக்கு ஃபோன் பண்ணுய்யா!”
“சார்! நீங்க போய் கதவைத் திறக்க சாவியை எடுத்துட்டு வாங்க!” என ஒவ்வொருவரையும் பணித்தவர், அந்த திறப்பின் வழியாய் உள்ளே எட்டிப் பார்க்க, மொட்டைத் தலை தரயில் மோத, பசுபதி சரிந்து விழுவது தெரிந்தது.
“யோவ்! சாவியை சீக்கிரம் கொண்டாங்கய்யா!” எனப் பதற்றத்துடன், சிறையின் கதவைத் திறந்த அதே நேரம், அந்த அறையின் வெளியே ஒளிர்ந்துக் கொண்டிருந்த மின்விளக்கின் வெளிச்சக்கீற்று, பசுபதியின் முகத்தில் விழுந்தது. வெளிச்சம் தன் முகத்தை ஸ்பரிசித்த அந்த நொடியில், அவன் உதடுகள் லேசாய், விரிந்து புன்னகைத்தது அங்கிருந்த ஒருவர் பார்வையில் கூட, விழாமல் போனது பசுபதியின் அதிர்ஷ்டமாகத்தான் இருக்கும்.
“என்னய்யா ! சுத்தமா மூச்சே இல்லை?”
“செத்து கித்து போய்ட்டானா சார்?”
“ஐயோ! லாக்-அப்பில் செத்துப் போய்ட்டான்னு தெரிஞ்சால் வச்சு செஞ்சுடுவானுங்கய்யா!”
என ஆளுக்கொன்றாய் சொன்னபடியே அவனை வெளியே தூக்கிவர, அறைக்குள்ளேயே இத்தனை நாளாய் அடைந்துக் கிடந்தவனுடைய உடலைத் தீண்டிய காற்றும் கூட, அவனைப் பார்த்து பயந்து பின்வாங்கியது.
தித்திக்கும் 🔥

