Loading

கடிதத்தைப் படித்தவுடன் தன் மகள் உயிரோடுதான் இருக்கிறாள் என்ற சந்தோஷம் சிவனுக்கு. அவள் என்ன ஆனாளோ என்ற பதைபதைப்பு மட்டுப்பட்டது. அவர் கடிதத்தில் இருக்கும் உண்மைகள் அவரை சுட்டது. ஆனாலும்கூட அவரைப் பொறுத்தவரை மூன்று பெண்களுக்கும் அவர் செய்ய நினைத்தது சரிதான்.

யாருக்கும் தெரியாமல் தானே தன் மகளை தேடுவதற்கு முனைந்தார் சிவம். இன்று அவருக்கு இருக்கும் பணத்திற்கும், செல்வாக்கிற்கும் இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. அவளைத் தேடி கண்டுபிடித்தாலும் இனி அவள் வாழ்வில் எந்த தொந்தரவும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று யோசித்து வைத்தார். என்ன ஆனாலும் குருவுக்கும் தெரியாமல் காப்பாற்ற வேண்டிய கடமை  அவருக்கு உண்டு.

 

 இரண்டு வருடங்கள் கழித்து :

 

 மதிய நேரத்தில் தனது அலமாரியில் இருக்கும் பழைய துணிகளை எல்லாம் கழித்துவிட்டு மீண்டும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்  உமா. அவள் எண்ண அலைகள் முழுவதும் தனது இரண்டு தங்கைகளை நோக்கியே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. சமீபத்தில்தான் சாந்தாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாய் ஆஷிதோஷ் குழந்தைகள் புகைப்படத்துடன் மெயில் அனுப்பி இருந்தான். சாந்தாவும் வாட்ஸ் அப்பில் தனது எல்லையில்லா மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாள். தாய்மையின் பூரிப்பு அவள் குரலில் தெளிவாக தெரிந்தது. சிவமும் கூட இந்த முறை மூன்று முழு மாதங்களுக்கு கனடா சென்று வந்துள்ளார்.

அருணாச்சலம் அவரது ஆசையை மறுக்கவில்லை. உமாவுக்குள் சலிப்பு… இரண்டு தங்கைகள் தனக்கு இருந்தும்

ஸ்கந்தனுக்கு இவர்கள்தான் உமது சித்திமார்கள் என்று அவர்களது குடும்பத்தை அறிமுகம் செய்வித்து தானும் உறவாடி மகிழ முடியவில்லை. சாந்தா இன்றுவரை நேரில் ஸ்கந்தனை பார்த்ததே இல்லை. இது என்ன வாழ்க்கை… யாருக்காக இப்படி பயப்பட வேண்டும்… ஏன் தனது கணவன் இன்னும்  ஒரு சராசரி ஆணாக இல்லாமல் இவ்வளவு மோசமாக இருக்கிறான்… எனக்கு இதிலிருந்தெல்லாம் எப்பொழுது விடுதலை  என்றெல்லாம் அவள் மனம் முட்டி மோதியது. தன் தங்கைக்கு பிறந்திருக்கும் குழந்தைகளை பார்ப்பதற்கு அவள் நெஞ்சு முழுவதும் ஆசைகள் உண்டு. ரத்னா இப்பொழுது எப்படி இருக்கிறாள் என்று அறிந்து கொள்ளவும் உமாவிற்கு பேராசை. ஆனால் இவையெல்லாம் எவ்வாறு நிறைவேறும். இப்பொழுதெல்லாம் அருணாசலமும் உமாவிடம் அதிக நேரம் பேசிக் கொண்டு நிற்பதில்லை. என்று தன் மகன் தன்னையும் தன்

மறு மகளையும் இணைத்து வைத்து பேசினாலும் அன்றே அந்த பெரியவர் மனதளவில் ஒதுங்கிவிட்டார்.

ஸ்கந்தனை பார்க்கும்போதெல்லாம் அவர் மனதில் ஒரு பாரம் அழுத்துகிறது. இவ்வளவு நல்ல பிள்ளை…இவன் ஏன் போயும் போயும் குருவுக்கு மகனாய் என்ற கேள்வி அவரை கிழித்தது. எத்தனைதான் மனதுக்குள் நினைத்தாலும் எல்லாவற்றையும்  வெளியே காட்டிவிட முடியாது. பெரும்பாலும் குருவின் அடாவடிகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் காபந்து பண்ணுவது வேறு அவருக்கு பெரிய தலைவலி ஆகிவிட்டது. சில சமயங்களில் வீட்டில் பிரச்சனைகள் நடந்தால் தனது ஆட்களை வைத்து யார் என்று தெரியாத அளவிற்கு கட்சி அலுவலகத்தில் கல் விட்டு  எறிவதும், அருணாச்சலம் எங்காவது பொது மேடையில் பேசுவதற்கு சென்றால் அங்கு  தன் ஆட்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதுமாக படுத்தி எடுத்தான் குரு.

 

பெரும்பாலும் அவன் வீட்டிற்கு இப்பொழுதெல்லாம் அதிகம் வருவதில்லை. வியாபாரமும் எல்லை கடந்து விட்டது. இரண்டு மூன்று முறை அவன் ஆட்கள் ஆட்கடத்தல் கேஸ்களில், போதை மருந்து விற்பனை தொடர்பான விஷயங்களில் கைதான பிறகும்  குரு தன்னை மாற்றிக் கொள்வதாக இல்லை. அவனுக்கு என்று உண்மை விசுவாசிகளும் அதிகமாக இருக்கிறார்கள். அவனுக்காக உயிரையும் கொடுப்பதற்கும் எடுப்பதற்கும் அவர்கள் தயார். அவனை திருத்தவே முடியாத நிலைக்கு அவன் சென்று என்று பல வருடங்கள் முடிந்துவிட்டது.

ஸ்கந்தனுக்கு பதிமூன்று வயதாகிவிட்டது. ஓரளவுக்கு வெளி விபரங்கள் புரியத் தொடங்கி விட்டது. அரும்பு மீசை வேறு… அத்துடன் டீன் ஏஜ். அப்பாவைப் பற்றி அவன் கேள்விப்படும் விவரங்கள் எதுவுமே சரியாக இல்லை. ஏற்கனவே அப்பா என்றால் அவனுக்கு பிடிக்காது. இப்பொழுது எல்லாம் அவன் என்றாவது தன் அப்பா வந்தால் கூட மரியாதையாக என்ன என்று கேட்க கூட தயாராக இல்லை. இவ்வாறான தனது மகனின் நடவடிக்கைகள் குருபரனை வெகுவாக சீண்டி விடும் விஷயங்கள். எல்லாவற்றுக்கும் அவன் உமாவும் அப்பாவும் தான் காரணம் என்று நினைத்தான். மகன் வேறு தன் குணங்களையும் சாயலையும் கொண்டிராமல் வேறு மாதிரி இருப்பது அவனுக்கு பெருத்த சந்தேகம். பல சமயங்களில் வார்த்தை வடிவங்களில் வெளிவரக்கூடிய திராவகம்.

 

எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள் உமா. ஆனால் துணி அடுக்குகளில் கடைசியில் கிடைக்கப்பெற்ற தனது தங்கை ரத்னாவின் கடிதம் உமாவை கூறு போட்டது.

தான் இங்கிருந்து கண் காணாமல் செல்வதற்கு காரணம் குருபரனே என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தாள் ரத்னா. உள்ளூர உமாவிற்கு இந்த விஷயம் கனன்று கொண்டிருந்தது. குருவின் ஆட்கள் இந்தமுறை பெண் கடத்தல் விவகாரத்தில் சிக்கி இருந்ததும் குருபரனுக்கு அளவுகடந்த ஆத்திரம். அதை செலுத்தும் இடம் தெரியாமல் அவனும் வீட்டுக்கு வர அதேசமயம் உமாவும் கொந்தளிப்பில் தனது தங்கையின் கடிதத்தை காண்பித்து ஞாயம் கேட்க என்று முதலில் வாக்குவாதத்தில் ஆரம்பித்த சண்டை பின்பு நேரம் ஆக ஆக ரத்னாவின் நடத்தை மோசம் என்று குரு பேச அதற்கு உமா இவனின் கடந்த கால கசப்புகள் முதல் தற்போது இவன் நடத்தை முதற்கொண்டு திருப்பிக் கொடுத்தாள். வீட்டில் அருணாச்சலம் இல்லாத நிலையில் மாடிப் படிக்கட்டுகளில் கீழே உள்ள தனது அறையில் இருந்தான் ஸ்கந்தன். இவர்களது சண்டையை நிகழும் போது பெரும்பாலும் அவன் வெளியே வருவதில்லை. ஆனால் இந்த முறை அவ்வாறு தனது அறையிலேயே இருக்க முடியாமல் வெளியே வந்தான் அவன். அதற்குள் உமாவின் தலைமுடியின் கற்றையாக பிடித்த குருபரன் அவளை சுவற்றில் மோதி ரத்தம் வழிய வழிய மாடிப்படிகளில் உருளும் வகையில் வேகமாக அவள் வயிற்றில் எட்டி உதைத்தான். அவன் குறி தப்பாமல் வேகமாக மாடிப்படிகளில் உருண்டு கீழே விழுவதற்குள் உமாவின் உயிர்ப் பறவை கூட்டை விட்டு பறந்து விட்டது. தன் கண் முன்னே நடக்கப் பெற்ற இந்த கொடூரம் ஸ்கந்தனை உள்ளுர இறுக செய்ததுடன் குருவின் கொல்லும் ஆத்திரத்தையும் அவனுள் விதைத்தது.

குரு கொஞ்சமும் பதராமல் தன் காரில் ஏறி சென்றுவிட்டான் 

வீட்டில் நடந்தவை எல்லாவற்றுக்கும் ஒரே சாட்சி ஸ்கந்தன் தான். அம்மாவின் நிலையைப் பார்த்து அழவேண்டும் என்று கூட தோன்றாமல் கற்பாறை போல நின்று இருந்தவனை வெளியே சென்றுவிட்டு வந்த அருணாச்சலம் சிவமும் பார்த்துவிட்டு சுற்றி முற்றி பார்க்க கீழே உயிர் அற்ற ஓவியமாய் உமா. சிவம் தனது மகளின் சடலத்தை பார்த்து கொதி நிலைக்குச் செல்ல , அருணாச்சலம் உறை நிலைக்குச் சென்றார். உமாவின் நெற்றியிலிருந்து

வழிந்திருந்த ரத்தம்  அவள் உயிர் போய் வெகுநேரம் ஆகவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தியது.

 சிவம் தனது பேரனை உலுக்கி நடந்தது என்ன என்று விசாரிக்க, அவனும் ஒரு ரோபோ போல அனைத்தையும் சொல்லி முடித்தான். இவற்றைக் கேட்ட பெரியவர்கள் இருவருக்கும் குருபரன் மீது கொலைவெறி. ஆனால் இப்போது குருபரனே காட்டிக் கொடுத்தால் ஊடகங்களில் இவற்றை இன்னும் பெரிதுபடுத்தி அருணாச்சலத்தின் கட்சிக்கும் அருணாசலத்திற்கும் எதிர்காலம் இல்லாமல் செய்து விடுவார்கள். இதனால் மட்டுமே அருணாச்சலம் தன்னை கட்டு படுத்திக் கொண்டார். அவர் செய்வது சரியா தவறா என்றால் அரசியலில் இவையெல்லாம் சகஜம் என்று தான் சொல்ல வேண்டும்.

சிவம் அருணாசலத்தின் திட்டத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தாலும், அருணாச்சலத்தின் பலத்திற்கு முன்னால் சிவம் ஒன்றுமே இல்லை. ஒருவேளை இந்த கொலையை செய்ததே சிவம் தான் என்று மாற்றிப் போட்டு கூட அருணாச்சலம் பேசக்கூடும். எனவே இந்த நேரத்தில் சிவன் மௌனி ஆனார். அவர் மனசு அடிபட்ட நாகம் போல சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது. அப்படி ஒன்று கிடைக்கும் போது ஒருவேளை அருணாச்சலம் கூட தனது மகன் செய்த கொலையை மறைப்பதற்காக தண்டனை பெறக் கூடும். உமா மாடிப்படியிலிருந்து இறங்கும் போது புடவை தடுக்கி உருண்டு கீழே விழுந்து விட்டதாக பதியப்பட்டது. சிறுவனிடம் எதை பற்றியும் தோண்டித் துருவவும் அருணாச்சலம் யாரையும் அனுமதிக்கவில்லை. உடற்கூறு விசாரணைக்கும் வழி இல்லாதபடி  வியூகம் அமைத்தார் அருணாச்சலம். வீட்டில் உமா கீழே விழும்போது அந்த சிறுவனை தவிர வேறு யாருமில்லை. எல்லோருமே ஸ்கந்தனை தேற்றும் வழி தெரியாமல் திகைத்து இருந்தார்களே தவிர  அவனிடம் ஏதும் கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை.

பாறுவும், தகவல் கிடைத்தவுடன் வந்து விட்டாள். சாந்தா ஒரே அழுகை. இரண்டு குழந்தைகள் அதுவும் புதிதாய் பிறந்து இருக்கும் இரண்டையும் கூட்டி கொண்டு வருவதற்கு சாத்தியப்படாமல் அக்காவின் முகத்தை கடைசியாக கூட பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் சாந்தாவுக்குள்.

 

 இப்படிப்பட்ட குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்து என் பெண் இறந்துவிட்டாள் என்று பாறுவின் கதறலை ஊடகங்கள் படம் பிடிக்காமல் ஏற்பாடு செய்திருந்தார் அருணாச்சலம். சிவம் யாரிடமும் எந்த விளக்கமும் சொல்லவில்லை. என்ன நடந்தது என்பது நேரில் அவர் பார்க்காவிட்டாலும் அவருக்குள் ஊகம் உண்டு.

ஸ்கந்தன் ஒரு வழியாக தனது அம்மாவிற்கு கொள்ளியிட்டுவிட்டு வீடும் வந்தாயிற்று. அப்பொழுதும் அவன் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. குருபரன் விட்டுக்கொடுக்காமல் பத்து நாட்களும் வீட்டிலேயே இருந்தான். அவன் தைரியமாக இங்கு வருவான் என்று அருணாசலம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், சிவம் தன்னால் முடிந்திருந்தால் தனது நெற்றிக்கண் திறந்து குருபரனை பஸ்பமாக்கி இருப்பார்.

 

————————————————–

 

சாதுர்யா ஏறக்குறைய நான்கு நாட்களுக்கு தனக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் போதை ஊசி செலுத்தப்பட்ட நிலையில் தன்னை மறந்து,தன்னிலை இழந்து, தன்னிடம் இருக்கும் ஏதோ ஒன்று யாராலோ, புணரப்பட்டு தனக்கு நடப்பதை உணர்ந்தும் உணராமலும் தடுக்கவும் முடியாமல் அழவும் கூட தெரியாமல் … பிறகு பெங்களூர் சென்னை ஹைவேயில் ஒரு சிறு கிராமத்திற்கு அருகில் ஆடைகள் கிழிவுற்று மயக்க நிலையில் முட் புதரின் அருகில். அருகில் இருக்கும் கிராம வாசிகள் ஒருசிலர் காலை பணிக்கு செல்லும் வழியில் பெண்ணை பார்த்து நடந்தவை புரிந்து அவளை ஊருக்குள் தூக்கி வந்து அங்கிருக்கும் நாட்டு வைத்திய சாலையில் சேர்த்து சிகிச்சை அளிக்க பெண் தெளிவானாள். மீண்டும் மீண்டும் அந்த கயவனின் முகம் மட்டும் அவளுள் வந்து செல்ல நடந்தவை சொல்லப்படாமலே அவளுக்கு புரிந்து போயிற்று. உடல் இருந்த நிலையில் அவளால் எழுந்து கூட உட்கார முடியவில்லை. இரண்டு நாள் சிகிச்சையில் எழுந்து அமர்ந்தவள் தனது ஸ்ரீரங்கம் வீட்டு முகவரியை கொடுத்து தன்னை யாரேனும் கூட வந்து அங்கு விட்டுவிட்டு வந்தால் தேவலை என்னும் விண்ணப்பத்தை முன் வைத்தாள். அங்கு இருப்போருக்கும் அவளின் அவலநிலை அச்சத்தை தர ஊர் பஞ்சாயத்து போர்டு பிரஸிடெண்டும் அவரது மனைவியுமாக தங்களது சொந்த காரில் அவளை கொண்டு போய் ஸ்ரீரங்கத்தில் விட்டார்கள். அவர்களுக்கு தெரிந்த வரை அவளது பாட்டி தாத்தாவிடம் விவரிக்க மேற்கொண்டு எதுவும் விசாரணை செய்யாமல் வந்தவர்களை உபசரித்து உட்கார வைத்துவிட்டு பெண்ணை கொண்டுபோய் பாட்டி தனது அறையில் வைத்துக் கொண்டாள். பெண் இருக்கும் நிலையில்  அவளை தனியே விடுவதற்கு வீட்டுப் பெரியவர்கள் இருவருக்கும் பயம். வந்தவர்கள் இருவரும் கிளம்ப, ரேணுகாவிற்கு போன் செய்து வரச்சொல்லி நடந்தவற்றை விவரிக்க வீட்டிலிருந்த மூவருக்கும் அடுத்தது என்ன என்பது சுத்தமாக புரியவில்லை. இந்த விஷயத்தை மாலதியிடமும் வெங்கடேசனிடமும் எப்படி சொல்ல முடியும்? யார் இந்த கொடுமையை செய்தது என்று வேறு சாதுர்யாவுக்கே தெரியாத நிலை. அவன் யார் எவர் என்றெல்லாம் தெரியாது, அந்த முகம் மட்டும் தான் அவள் அறிந்தது.

 

 இரண்டு நாட்களுக்கு ஒன்றுமே சாப்பிடாமல், லேசான காய்ச்சலுடன் விட்டத்தை வெறித்துக் கொண்டு படுத்திருந்தாள் சாதுர்யா. யாராவது ஒருவர் அவளுடன் இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

 

ரேணுகா மூலம் விஷயத்தை அறிந்து கொண்ட ரங்கன் ஸ்பெயினிலிருந்து விரைவாகவே கிளம்பி இங்கு வந்து விட்டான். அவனைப் பொறுத்தவரை இதில் அவன் காதலியின் தவறு எதுவுமில்லை எனும்போது இதற்கெல்லாம் எதற்காக வருத்தப்பட வேண்டும்? அவள் எந்த நிலையில் இருந்தாலும் அவளை அப்படியே திருமணம் செய்து கொள்ள அவன் தயார். ஆனால் இதை எப்படி அவளிடம் புரியவைப்பது என்றுதான் அவனுக்கு புரியவில்லை. அவனின் இந்த முடிவை வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் அதை பற்றி எல்லாம் அவனுக்கு அக்கறை இல்லை. ரங்கனை கண்டவுடன்  மெல்ல தன் பார்வையை நிமிர்த்தி தன் அத்தானை பார்த்தவள்  பார்வையில் ஆயிரம் கேள்விகள். அத்தனையையும் தாங்கி நின்றான் ரங்கன்.

 ஆனால் அவனிடம் கூட சரியாக முதலில் பேசவில்லை அவள்.

 

 இரவில் லட்சுமி பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டிருந்தாள் சாதுர்யா. அவள் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டே ‘ஏண்டி, உன்னோட கற்பு போயிடுச்சின்னு நினைக்கிறியா… என்றாள். பெண்ணிடம் பதில் இல்லை. கற்பு பெண்ணோட யோனில இருக்குன்னு யாரு சொன்னா… கற்புன்னு எதை சொல்லுறோம் தெரிமா.. தனி மனுஷனோட ஒழுக்கத்தை,’ என்று பாட்டி சொல்ல அத்தனை நேரம் மௌனமாய் இருந்த பெண் விலுக்கென நிமிர்ந்து அமர்ந்துகொண்டாள். உலகம் முழுவதும் ஒரு விதமாக கற்புக்கு இலக்கணம் சொல்ல தனது சொந்த பாட்டி சொல்வது அவளுக்குள் ஆச்சரியத்தையும் பாட்டி மீதான மரியாதையும் கூட்டியது.

‘ நிச்சயமா நான் அந்த மாதிரி நினைக்கல பாட்டி… ஆனா என் உடம்பு முழுக்க அருவருப்பு. எனக்கு என்ன நடந்தது, பண்ணவன் உடைய முகம் எல்லாமே ஞாபகம் இருக்கு… ஒரு கனவு போல.

ஆனா என்னால அந்த சமயத்துல ஒண்ணுமே பண்ண முடியல. போதை மருந்து கொடுத்து…’ அவள் சொல்ல முடியாமல் தவிக்கும் விஷயங்கள் மொத்தமும் பாட்டிக்கு புரியாமல் இல்லை.

 இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு முறை  சாதுர்யாவை பார்த்து செல்லலாம் என்று வந்த ரங்கன் இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலை அறையின் கதவின் அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்தான். ஒரு ஆணாக  அவன் மிகவும் அவமானமாக உணர்ந்தான். பெண்ணைப் பலாத்காரம் செய்வது என்பது ஒட்டுமொத்த ஆண் இனத்துக்கே அவமானம். அந்த அவமானத்தில் தனக்கும் கூட பங்கு உண்டு என்று  உடைந்து போனான். அவன் மனதிற்குள் அடுத்தது அந்த பெண்ணை பற்றியும் செய்யவேண்டியவை பற்றியும் யோசனைகள் வரிசை கட்டி நின்றன.  சாதுர்யாவின் உடல் காயங்கள் ஆறத் தொடங்கிவிட்டது. மனக் காயம் இந்த ஜன்மத்தில் ஆறுமா என்று தெரியவில்லை.

 

 மாலதி தன் கணவனை விஷயம் கேள்விப்பட்ட திலிருந்து ஒரு வயசு செய்து கொண்டிருக்கிறாள். பட்டப் படிப்பு முடிந்தவுடனாவது பெண்ணை இங்கே கூட்டி வந்து இருக்க வேண்டும். ஆனால் அவள் ஆட்சி பணி துறைக்கு தேர்வு எழுத வேண்டும் என்றவுடன் சம்மதித்த வெங்கடேசனுக்கு மனம் முழுதும் குற்ற உணர்ச்சி வியாபித்தது. மனைவி கேட்கும் கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. உடனேயே ஸ்ரீரங்கம் போகவேண்டும் என்று துடித்தாள் மாலதி. வெங்கடேசனுக்கு கூட அதே நிலைதான். ஆனால், அங்கு ஏற்பட்டிருந்த சிறு கலவரத்தால்  அவர்களது பயணம் பத்து நாட்களுக்கு தள்ளிப் போய்விட்டது. அழுது தீர்த்தாள் மாலதி. என்னதான் ஆண்கள் அழக்கூடாது என்று சொன்னாலும்கூட தன் ஒரே மகளின் நிலை வெங்கடேசனை உடைத்து வீசியது.

 

“ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு எனும் ஒழுக்கத்தை சமமாய் வைக்க சொன்னான் முண்டாசுக்கவி” ஆனால் எத்தனை பெண்கள் சந்திக்கும் சோதனை இது. 

அந்த பிரமாண்ட மாளிகையில் கூட யாரும் துணைக்கு கூட இல்லாமல் தனியாக அறையில் கட்டிலில் அமர்ந்திருந்தாள் சாதுர்யா. அவள் இங்கு வந்து மூன்று நாட்கள் ஆகிறது. அவளால் இந்த வீட்டில் பொருந்திக் கொள்ள முடியவில்லை. வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பது கூட சரியாக அவளுக்கு தெரியாது.

இந்த நிமிடம் வரை அவளால் நம்ப முடியவில்லை தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று. தன் திருமண வாழ்க்கை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று நினைத்தாளோ அதற்கு எதிர்ப்பதமாக மனிதனை திருமணம் செய்து கொண்டு இங்கு வந்திருக்கிறாள். கழுத்தில் தாலி கட்டி காலில் மெட்டி போட்டு செய்யப்படும் திருமணத்தில் தனக்கு உடன்பாடில்லை என்றுவிட்டாள் அவள். இரு மனங்கள் இணைந்திருந்த ரங்கன் உடனான திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தவளுக்கு மற்றொருவனை மனதால் நினைக்க கூட முடியவில்லை. ஆனால் நடந்துவிட்டது. ரங்கன் ஸ்பெயினுக்கு சென்று இன்றுடன் நான்கு நாட்கள். இனி இந்தியாவிற்கு வருவதற்கு எனக்கு வேலை இல்லை என்று  விட்டான் அவன்.

 ரேணுகாவும் அவனுடன் சென்றிருக்கிறாள். மனதளவில் மிகவும் காயப்பட்டு விட்டான் ரங்கன். சாதுர்யா பெண் அவளுக்கு இழப்பாய் தெரிந்த ஒன்று அவனைப் பொருத்தவரை ஒன்றுமே இல்லை, உடல் அளவில் நிகழும் திருமண பந்தத்தில் உனக்கு உடன்பாடு இல்லை என்றெல்லாம் சொல்லிப் பார்த்தும் கூட சாதுர்யாவால் அவனது வாதங்களை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

தனது கட்டிலில் அமர்ந்திருந்தவளுக்கு இங்கு வந்ததிலிருந்து அனேகமாய் ஒரே வேலைதான்.  நடந்தவற்றை மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்ப்பது. அன்று லக்ஷ்மி பாட்டியுடன் பேசிவிட்டு இரவு மனபாரம் அழுத்திய போதும் இரவு உறக்கத்தை பிடிவாதமாய் தந்து கொண்டிருந்தது அவள் எடுத்துக் கொண்டிருந்த மருந்துகள்.

 அடுத்த நாள் காலையில், வழக்கம் போல் தான் விடிந்தது. ஆனால் இவளுக்கு மட்டும் ஏதோ வித்யாசமாய். தாமோதரனிடமும் லக்ஷ்மி அம்மாளிடமும் சொல்லிவிட்டு நேராக அவள் சென்றது அம்மா மண்டபத்திற்கு தான். அமைதியாக அங்கே உட்கார்ந்திருந்தவளுக்கு யாரோ தன் அருகே வந்து உட்காருவது போல் இருக்க திரும்பி பார்த்தால் அது யார் என்று அவளுக்கு புரியவில்லை. இன்று வரை அவள் அந்த நபரை பார்த்தது கூட இல்லை. ஆனால் வந்திருந்த நபரோ மிக உரிமையுடன் அவளிடம் பேசினார். நிகழ்ந்தது பெரிய விஷயம் என்றாலும் திருமணத்தின் மூலம் அதை சரி கட்டிவிட முடியும்.இந்த திருமணத்திற்கு நீ ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும் என்றெல்லாம் அழுத்தம் கொடுத்து பேசியவருக்கு எப்படிப்பார்த்தாலும் வயது அறுபது இருக்கும். ஆனால் அவர் பேசிய பேச்சுகள் கொஞ்சம் கூட எதிரில் அமர்ந்திருக்கும் பெண்ணின் மனதை பற்றி யோசிக்காமல் அவரது மனதில் உள்ளவற்றை மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். எத்தனை வருடங்கள் ஆனாலும் இதுபோன்ற ஒரு விஷயத்திற்கு தான் ஒப்புக் கொள்ள முடியாது என்று  சாதுர்யா சொல்ல, அடுத்த கட்டம் வெளிநாட்டில் இருக்கும் உனது பெற்றோரை நீ இழக்க நேரிடலாம் என்ற மிரட்டலோடு முடிந்தது. எந்த வார்த்தை சரியாக பெண்ணை தாக்கக்கூடும் என்று உணர்ந்து அந்த வார்த்தையை பிரயோகப்படுத்தி இருந்தார் அந்த மனிதர். அவளால் அந்த நொடி ஒன்றுமே சிந்திக்க முடியாமல் போயிற்று. உனக்கு ஒரு வாரம் தான் நேரம். அதற்குள் மணப்பெண்ணாக இருக்க தயாராக இரு. இன்னும் இரண்டொரு நாட்களில் உன்னை பெண் கேட்டு வீட்டுக்கு வருவோம். நீ இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவேண்டும் என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார் அவர். அந்த நேரத்திற்கு அவர் யார் அவர் எதற்காக இதுபோல் எல்லாம் பேசுகிறார் என்று ஒன்றுமே புரியாமல் திக்பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள்  சாதுர்யா.

 

 வீட்டிலோ ரங்கன் வயலூர் சென்று தனது தாத்தா பாட்டியை பார்த்துவிட்டு இங்கு வரவும் வீட்டில் அவன் மாமன் மகள் இல்லை.அவனுக்கு உடம்பும் மனதும் பதற தொடங்கிவிட்டது. வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு அவனும் அம்மா மண்டபத்திற்கு சென்றான். அங்கு தன்னந்தனியே அமர்ந்திருந்த உருவத்தைப் பார்த்து அவன் முகத்தில் ஒரு சோகப் புன்னகை. அவள் இருக்கும் மனநிலையில் அவளை தனியாக அனுப்புவது எவ்வளவு தூரம் சரியாக வரும் என்ற வீட்டிலுள்ளோர் அனைவருக்குமே ஒரு யோசனை உண்டு.

ஆனாலும் பாதிக்கப்பட்டவளை இப்படியே வீட்டிற்குள்ளேயே அடைந்து வைப்பதனால் இன்னும் அவள் மனப்போக்கு அதன் காரணமாக மன நோயாளியாக்கி விடக்கூடும் என்ற பயத்தினால் மட்டுமே அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவளும் நிகழ்ந்தவை அனைத் திலிருந்தும் வெளீயே வந்தாக வேணும்.தாமோதரன் தானும் கூட வருகிறேன் என்று சொல்லிப் பார்த்தும் கூட பெண் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நீங்கள் யாராவது கூட வருவதாக இருந்தால் நான் வெளியே செல்லவில்லை என்று உட்கார்ந்து விட்டாள். அவளது பெற்றோர்  வருவதற்கும் எப்படியும் இன்னும் ஒரு வாரமாகக்கூடும். இந்தப் பெண்  வேறு ஏதாவது முடிவு எடுத்துவிட்டால் என்ற பயம் வீட்டு பெரியவர்களுக்கு… அவர்களை வீட்டில் நன்றாக கடிந்து கொண்டு,ரங்கன் கிளம்பி வந்திருந்தான் . இன்னும்கூட அவளைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்து அவன் பின் வைக்கவில்லை.

அவள் பிறந்த அன்றிலிருந்து அவளைப் பார்த்து வருகிறான். அவள் பள்ளி போகும் சமயத்திலேயே அவன் மனதிற்குள் மனைவியாக சிம்மாசனமிட்டு அமர்ந்தவள் அவள். உடல் அளவில் ஏற்பட்ட சிறு பாதிப்பிற்கான அவளை ஒதுக்கித் தள்ளுவது எவ்வளவு சரியானதாக இருக்கும் என்பதுஅவனது வாதம். 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்