
அத்தியாயம் 25
அனைவரிடமும் விடை பெற்று விமான நிலையத்தை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள் சஞ்சையும், வசுந்தராவும்.
கணவனுடனான முதல் பயணம். அது மட்டும் அல்லாமல் அனைத்துமே முதல்தான் அவளுக்கு. முதல் வெளியூர் பயணம், முதல் விமான பயணம். ஆர்வத்துடனும், பூரிப்புடனும் தன் பயணத்தை மேற்கொண்டாள்.
டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளிவருவதற்கு மணி நான்கை கடந்திருந்தது. ஏதேனும் ஹோட்டல் ரூமிற்கு அழைத்துச் செல்வானென இவள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க நேராக ரயில் நிலையத்திற்கு செல்லுமாறு கூறிவிட்டு அவளோடு வாடகை காரில் அமர்ந்தான். டெல்லி போக்குவரத்தில் நீந்தி இவர்கள் ரயில் நிலையத்தைச் சென்றடையவே ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. ரயில் நிலையத்திலேயே இருந்த உயர் ரக ஓய்வறையை பதிவு செய்து மனைவியோடு உள்ளே நுழைந்தவன்.
“போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா நமக்கு இன்னும் ரெண்டு மணி நேரத்துல ட்ரெயின்.” என்ற கணவனை யோசனையாகப் பார்த்தவள். அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். அவள் வெளிவந்ததும் இவனும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அந்த அறையை மூடிவிட்டு, அவளை அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்தின் உள்ளேயே இருந்த ஓர் உயர்ரக உணவகத்தில் மாலை சிற்றுண்டி உடன் காப்பியையும் அருந்திவிட்டு அறைக்குத் திரும்பச் சென்று உடைமைகளை எடுத்துக் கொண்டு கால்க்கா என்ற ஊருக்குச் செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தான்.
எங்குச் செல்கிறோம் என்பது தெரியாமல் கணவனைப் பின்பற்றி அவன் செல்லும் வழியில் சென்றாள் வசுந்தரா. ஸ்லீப்பர் ஏசி கோச்சில் தனக்கான இடத்தில் படுத்தவன்.
“தூங்கு நாம ரீச்சாகக் காலையில அஞ்சு மணி ஆயிடும்.” எனத் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம் கூறிவிட்டு கண்களை மூடியவன் இருந்த அலுப்பில் உடனே தூக்கத்தை தழுவினான். ஒன்றும் புரியாமல் தன் இடத்தில் படுத்தவளும் ரயிலின் சுகமான தாலாட்டில் லயித்து அதன் சுகத்திலேயே கண்ணயர்ந்தாள்.
சுகமான தூக்கமாக இருந்தாலும் ரயிலில் தாலாட்டில் அவ்வப்போது முழிப்பு வரப்பெற்றவளாக வெளிச்சத்துடன் தாண்டிச் செல்லும் சிறு சிறு ரயில் நிலையங்களைப் பார்த்த படியே உறக்கமும், விழிப்புமாகப் பயணப்பட்டாள். யாரோ தன்னை வேகமாக உலுக்க பதறிக் கொண்டு எழுந்தவளை பார்த்தவன்,
“ஈஸி, ஈஸி ஸ்டேஷன் வந்துருச்சு. நாம இப்ப இறங்கனும். ரெஸ்ட் ரூம் யூஸ் பண்றியா.?” எனக் கேட்கச் சரி என்பதாகத் தலையசைத்தது வேகமாகச் சென்று அவசரத் தேவையை முடித்துவிட்டு வந்தாள். இவள் வருவதற்கும் ரயில் நிற்பதற்கும் சரியாக இருந்தது. பயணப் பொதிகளை எடுத்துக்கொண்டு இறங்கினார்கள். இருவரும்.
அங்கிருந்து சிறிது தூரம் சென்று, ரயில்கள் வந்து போகும் ஷார்டை ஓடவிட்டுக் கொண்டிருந்த பெரிய எல்ஈடி டிவியின் முன் வந்து நின்றவன். எதையோ உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான். சஞ்சய். அவனின் அருகில் நின்றவள், சுற்றி முற்றி புது ஊரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். தாங்கள் எங்கு வந்திருக்கிறோம் என்பது தெரியாமல்.
அவன் தேடியது தெரிந்ததும், வசுந்தராவை திரும்பிப் பார்த்தவன்.
“போலாம்.” என்றபடி அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு மற்றும் ஒரு பிளாட்பார்ம்க்கு அழைத்துச் சென்றான். அவன் எதிர்பார்த்த ரயில் நிற்பதை பார்த்தவன் அதன் அருகே நடந்து செல்ல இவன் பின்னோடு வந்தவளுக்குத்தான் ஆச்சரியத்தில் கண்கள் விரிந்து பார்த்தது பார்த்தபடியே அவன் பின்னே வந்துகொண்டிருந்தாள்.
பாதி அளவுக்குக் கண்ணாடிகள் அமைக்கப்பட்டு முழுவதும் குளிர்சாதன பெட்டியாக வெகு அழகாகக் காட்சி தந்தது அந்த ரயில். அதன் உள்ளே ஏற முற்பட்டவனை பார்த்தவள்,
“இதுலயா போறோம்.? பொம்மை டிரெயின் மாதிரி ரொம்ப அழகா இருக்கு. எங்க தான் போறோம்.?” எனத் தன் ஆச்சரியத்தையும், தயக்கத்தையும் மீறிக் குதுகளித்தபடி கேள்வி கேட்டவளை திரும்பிப் பார்த்துச் சிரித்தவன்
“இதுக்கு பெயரே டாய் ட்ரைன் தான்.” என்றவன்.
“ஏறு, சொல்றேன்.”என்றபடி அவளோடு ஏறினான். ஜன்னல் என்ற பெயரில் பாதி அளவுக்கு முழுவதுமாகக் கண்ணாடியால் அமைக்கப்பட்டு அதற்குத் திரை சிலைகளும் போடப்பட்டிருந்தன. மெத் இருக்கைகளும் பெரியதாகவும் விஸ்தாரமானதாகவும் இருந்தது. கண்ணாடி ஒர சீட்டில் அவளை அமர வைத்துவிட்டு, அவள் பக்கத்தில் அமர்ந்தவன் அவளின் கேள்விக்குப் பதிலாக
“சிம்லாக்கு போறோம்.” என்றான் புன்னகையுடன்.
“டெல்லின்னு தானே சொன்னீங்க.”
“ஆமா டெல்லி, அங்க இருந்து சிம்லா.” என்றான் கண்களைச் சிமிட்டி.
சிறிது நேரத்தில் ரயிலும் கிளம்ப, 360 கோணத்தில் மலைகளைச் சுற்றிக்கொண்டு ஏற ஆரம்பித்தது அந்தக் கண்ணாடி ரயில். அழகான, ரம்யமான காட்சிகளை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே ஆனந்தத்துடன் பயணப்பட்டாள் வசுந்தரா.
கண்களைக் கூடச் சிமிட்டாமல் இயற்கையின் கொள்ளை அழகில் மதி மயங்கிப் பயணப்பட்டாள் வசுந்தரா. பார்க்கும் அனைத்தும் அவளுக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் சேர்த்தே கொடுத்தது. ஒரு மலையை மட்டும் சுற்றி செல்லாமல் கிட்டதட்ட ஐந்து ஆறு மலைகளைச் சுற்றி செல்வது போல் தோன்றியது அவளுக்கு. சிறிதும் பெரிதுமான குகைகளைக் கடந்து வருவதும் கடந்து வந்த குகையை எதிரில் பார்ப்பதும் இனி வரப் போகும் குகையை மேலே மற்றொருபுறம் இருப்பதையும் பார்த்தவளுக்கு வியப்பு தாங்கவே முடியவில்லை. பல ஆச்சரியத்தோடும் மகிழ்வோடும் வந்து இறங்கினார்கள் சிம்லாவிற்கு.
குல்மார்க் ரெசிடென்சியில் அவர்களுக்கென அறையைப் பதிவு செய்திருந்தான் சஞ்சய். ஹோட்டல் ரூமிலிருந்து இவர்களை அழைத்துச் செல்லக் கார் வந்திருந்தது அதில் ஏறிப் பயணப்பட்டார்கள் இருவரும். வழிநெடுகிலும் பூக்களையும் மலைகளையும் பார்த்து ரசித்துக்கொண்டே வந்தாள் வசுந்தரா. அறைக்குச் சென்று தங்களை சுத்தப்படுத்திக் கொண்டவர்கள் ஹோட்டலிலேயே இருந்த உணவு விடுதிக்குச் சென்று மதிய உணவை முடித்துவிட்டு அவளைப் பக்கத்தில் இருக்கும் இடங்களுக்குச் சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றான் சஞ்சய். குளிர் பிரதேசம் என்பதால் விரைவிலேயே குளிரும் இருட்டும் படர்ந்து விடும். அதைக் கொண்டு இரவு உணவையும் வெளியே முடித்துவிட்டு அறைக்குள் வந்தவர்கள் சூடான வெந்நீரில் இரண்டு நாள் பயன அழுப்பை தீர்க்கும் வகையில் குளித்துவிட்டு வர அடுத்து என்ன என்பதுதான் பெண் அவளுக்குப் பெரும் தயக்கத்தை கொடுத்தது. ஆனால் அப்படி ஒன்று சஞ்சய்க்கு இல்லை போல.
“ரெண்டு நாள் டிராவல் பண்ணி செம டையர்ட். வா, வந்து தூங்கு. நாளைக்கு காலைல கைடு வந்துருவாங்க நமக்குச் சுத்தி காட்ட. எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி கீழ இருக்க லாபிக்கு போகணும். நம்மைப் போல டூரிஸ்டா வந்து இருக்குறவங்கள சேர்த்து ஒன்ன கூட்டிட்டு போவாங்க. சுத்தி காட்ட. நாம லேட் செய்தோம்னா மற்றவங்களுக்கும் அது சிரமம் ஆயிடும். அதனால அவங்க சொன்ன நேரத்துக்கு நாம தயாராகி போயிடனும்.” என்று மனைவிக்குக் கூறியவன் அலைபேசியில் அலாரத்திற்கு செட் பண்ணி விட்டு ஒரு பக்கமாகப் படுத்து மனைவியைப் பார்க்க. அவன் பார்வை உணர்ந்து அவளும் அவன் அருகில் வந்து படுத்துக்கொண்டாள். பக்கத்தில் வந்து படுத்த மனைவியின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
இருந்த அலுப்பில் விரைவிலேயே உறக்கம் அவர்களைத் தழுவியது.
அலாரம் அடிப்பதற்கு முன்பாகவே விழித்து எழுந்தவள் கிளம்பி தயாராக அலாரம் அடிக்கும் சத்தத்தில் முடித்த சஞ்சய் மனைவி எழுந்து தயாராக இருப்பதை பார்த்தவன்,
“ரெடி ஆயிட்டியா.? குட்.” என்று கூறியபடியே குளியலறை நோக்கிச் சென்றான்.
இருவரும் ஹோட்டலிலேயே இருந்த ரெஸ்டாரண்டில் காலை உணவை முடித்து விட்டு லாபிக்கு வந்தார்கள். குறிப்பிட்ட நேரத்தில் கைடுடன் இவர்களின் பயணமும் இனிதாகத் தொடங்கியது. அங்குப் பிரசித்தி பெற்ற கோயில்களையும் முக்கியமான சுற்றுலா தளங்களையும் சுற்றி காட்டிய பின் மாலை ஐந்து மணி அளவில் அனைவரும் ரிசார்டிற்கு திரும்பினார்கள்.
வசுந்தராவுடன் அறைக்குள் நுழைந்த சஞ்சய்.
“ரெப்ரெஷ் ஆகிட்டு வா. நம்ம பக்கத்துல ஒரு வாக் போயிட்டு வரலாம்.” என்றவன் பத்து நிமிடத்தில். அவளுடன் வெளியேறினான். ரிசப்ஷனுக்கு சென்று அவர்கள் அறையின் சாவியை கொடுத்துவிட்டு வர “எதுக்கு அவங்க கிட்ட சாவி கொடுத்துட்டீங்க.?” என்ற மனைவியின் கேள்வியில், “சும்மாதான். போற இடத்தில் எங்கேயாவது தொலைந்து விடக் கூடாது இல்ல. அதனால தான்.”
“நான் தான் ஹேண்ட் பேக் வச்சிருக்கேனே, என்கிட்ட கொடுத்தா அதுல வச்சிருப்பேன் இல்ல.”
“சரி, பரவால்ல இருக்கட்டும். அது வேற வெயிட் ஆயிடும்.”என்றவனை ‘சாவி வெயிட் ஆகிடுமா.?’ என்ற கேள்வியுடன் நெற்றி சுருக்கி அவனைப் பார்த்தவளை, புன்னகையுடன் ஏறிட்டு, அவள் தோள்களில் கைப்போட்டு அழைத்துச் சென்றான்.
இவர்கள் சென்ற பாதையில் இரு பக்கங்களிலும் கடைகள் நிறைந்திருந்தன அவற்றைப் பார்த்த படியே கைகோர்த்து நடப்பது குளிரில் சுகமாக இருந்தது. குளிர் உடலை ஊடுருவ அவனோடு நெருங்கி நடந்தாள் தன்னையும் அறியாமல். சுற்றி சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டே. அவனோடு ஒட்டி நடப்பது குளிருக்கு இதமாக அவளுக்குச் சுகத்தை கொடுக்க. இவனுக்கோ போதையை கொடுத்தது.
அருகில் இருந்த உணவு விடுதியைப் பார்த்தவன்
“வா, சாப்பிட்டு கிளம்பலாம்.” என அவளை அழைக்க
“அதுக்குள்ளேயே வா, இன்னும் பாக்குறதுக்கு நிறைய இருக்கே.”
“அதெல்லாம் மறுபடியும் அப்புறமா வந்து பாத்துக்கலாம். இப்ப சாப்பிட்டு கிளம்பலாம். வேலை இருக்கு.” என்றவனிடம்
“என்ன வேலை.” என்றாள் கேள்வியுடன்.
“போனபிறகு, நீயே தெரிஞ்சிக்குவ என்ன வேலைன்னு.” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து.
அதைக் கவனிக்காதவள் அவனுடன் உண்டு விட்டு, ரிசப்ஷனில் சாவியை வாங்கிக்கொண்டு அறைக்குள் வந்த வசுந்தரா அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள் சில நொடிகள்.
பிறகே கணவன் கூறிய வேலை என்ன என்பது உரைத்தது. அவளைப் பின்னின்று அணைத்தவன்
“என்ன வேலைன்னு தெரிஞ்சிருச்சு போல.” என்றான் காதின் ஓரம் இருந்த மச்சத்தின் மீது முத்தமிட்டவாரு. அதில் கூசி சிலிர்த்து, நெளிந்தவளை தன்னை நோக்கித் திருப்பியவன்.
“ஓகே தானே.” என்று கேட்டவனிடம்,
சம்மதமாகத் தலையசைக்க. இவன் சொன்னபடி மலர்கள் மற்றும் பலூன் கொண்டு ஏற்பாடு செய்திருந்த அறையின் லாவண்டர் மணத்துடனான அலங்காரங்கள் வீணாகாமல் மஞ்சத்திலிருந்து மலர்கள் கலைந்து, காற்றில் கலந்த மணமாய் இரு உள்ளங்கள் ஒன்றாகி, அவர்களும் ஒருவருடன் ஒருவர் கலந்தார்கள் காதலுடன்.
குளிர் உடலை நடுங்க செய்யக் கதகதப்பாகத் தன் அருகில் தன்னை அணைத்தபடி படுத்திருந்த சஞ்சய் முகத்தைப் பார்த்தபடியே விழித்தெழுந்தாள் வசந்தரா. இரவு நடந்தவைகள் ஞாபகம் வர மெலிதாகச் சிரித்தவள்.
“பாக்க தான் சாப்ட்டா தெரியிறாங்க.”என நினைத்தபடியே குளியல் அறைக்குச் சென்றவள் தன்னை சுத்தப்படுத்தி குளித்துக் கணவன் எழும் முன்பே தயாராக அமர்ந்திருந்தாள். இவர்கள் அறையின் பெரிய ஜன்னலின் திரைசீலையை அகற்றினால் பனி படர்ந்த மலைகள் அழகாகக் காட்சியளித்தன. தன்னை மறந்து அதன் அழகில் லயித்திருந்தவளைவளை
“குட் மார்னிங்.” என்ற குரல் கலைத்தது. திரும்பிப் பார்த்தவளுக்கு ஆச்சரியம்தான்.
சஞ்சய் எழுந்து குளித்துவிட்டு வந்து இடுப்பில் டவளுடன் தலையைக் கைகளால் துவட்டியபடியே கண்ணாடி முன் நின்றபடி இவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் எழுந்து சென்றது கூடத் தெரியாமல் இயற்கை அழகில் தன்னை மறந்து நின்றிருந்தாள். பெண்.
“காபி, டீ ஏதாவது குடிச்சியா.?” என்றவனின் கேள்விக்கு. இல்லை என்பதாகத் தலையை அசைக்க “கெட்டில் இருக்கே.” என்றபடி அதன் அருகில் சென்றவன் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை கெட்டிலில் ஊற்றி, அதைக் கொதிக்க வைத்தவன். அருகில் இருந்த சர்க்கரை, காபித்தூள், பால் பவுடர் கொண்டு இன்ஸ்டன்ட் காபி தயாரித்தவன் தனக்காக ஒன்றை எடுத்துக்கொண்டு மனைவியிடம் ஒன்றை கொடுத்தான்.
அவன் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள் அதன் செயல் முறையைத் தெரிந்து கொண்டாள். இதற்கு முன் இதுபோல இடங்களில் தங்கி இராதவளுக்கு இவை அனைத்துமே புதுமையாக இருந்தது.
அவளைப் பார்த்துக் கொண்டே காப்பியை அருந்தி முடித்தவன். அடர் நீல நிற சல்வார் அணிந்து, ஈர கூந்தலை தளர்வாகப் பின்னலிட்டு, தயாராக அமர்ந்திருந்தவளை பார்த்தவன்,
“எங்க போகக் கிளம்பி இருக்க.?” எனக் கேட்டான். கடைசி மிடறு காபியை அருந்திவிட்டு.
“நேத்து மாதிரி இன்னைக்கும் போகணும் போலன்னு நினைச்சேன். அதான் தயாராகி உட்கார்ந்து இருந்தேன்.”
“எங்க போகணும்.?”
“சுத்தி பார்க்க.” என்றவளின் அருகில் வந்தவன். இடையோடு அவளை இறுக்கி பிடித்து, காதின் ஓரம் குனிந்தவன் அங்கிருந்த மச்சத்திற்கு மென் முத்தத்தைக் கொடுத்தவன்.
“சுத்தி தான் பார்க்கப் போறோம். வெளியே போய் இல்ல. உள்ளேயே. என்னை நீயும். உன்னை நானும்.” என்றவன், செயலில் இறங்கி நன்றாகச் சுற்றி பார்க்க முயல, அவனுக்கு வழி விட்டவள், அவள் சுற்றி பார்த்தாளா என்பது சந்தேகம்தான். அவன், இவளைச் சுற்ற ஆரம்பிக்கும்போதே மயக்கத்தில் விழிகளை முடியாவள் தான், பின் திறக்கவே இல்லை. அவன் திறக்க விடவும் இல்லை.
தொடரும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1


