Loading

 

அத்தியாயம் 22

 

வீட்டிற்குள் நுழைந்ததுமே, “கனி, பிளேட் எடுத்துட்டு வா!” என மனைவிக்குக் கட்டளை இட்டான் நவன்.

 

அவள் எதுவும் பேச இயலாமல் கணவனைப் பார்க்க, நண்பனின் குரலைக் கேட்டதுமே அறைக்குள் இருந்து வெளியே ஓடி வந்து விட்டாள் ரம்யா.

 

இளையவளிற்காக காத்திருக்காது அவளே சமையல் அறைக்குச் சென்று தட்டு மற்றும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வைத்துவிட்டு, உணவு மேஜையில் அமர்ந்தாள்.

 

“டேய்.. சீக்கிரம்டா..”

 

கைகளைச் சுத்தம் செய்து கொண்டு வந்த நவன், “அட இம்சை! எதுக்கு இப்படிப் பறக்குற? பிரியாணியை என்ன காக்காவா தூக்கிட்டுப் போயிடும்?”

 

“காக்கா எதுவும் தூக்கிட்டுப் போகாது தான். ஆனா, நீ பொறுமையா எடுத்து வைக்கிற வரைக்கும் என்னோட வயிறு தாங்காதுப்பா.”

 

சின்னதாய்ச் சிரித்தவன் அவளிற்கு உணவைப் பரிமாறி, “இந்தா, நீ கேட்ட சிக்கன்!” என்று தட்டில் எடுத்து வைக்க, உண்ணத் துவங்கினாள் அவள்.

 

“ஓகே, சாப்டுட்டு இருக்கியா? நான் டிரஸ் சேஞ்ச் பண்ணீட்டு வந்துடுறேன்?”

 

“போ.. போ.. சாப்பிடுறப்ப டிஸ்டப் பண்ணாத!”

 

“உனக்கு காரியம் ஆகுற வரை ப்ளீஸ் ப்ளீஸ்னு பச்ச பிள்ள மாதிரி கெஞ்ச வேண்டியது. வேலை முடிஞ்சிட்டா போனு துரத்தி விட்டுடுவ, என்ன? நீ எல்லாம் என்ன ஜென்மமோ?”

 

“ஈஈஈ..” எனப் பல்லைக் காட்டிச் சிரித்தவள், “நீ இன்னைக்கு என்ன சொன்னாலும் எனக்குக் கோபமே வராது. பிரியாணி வாங்கிட்டு வந்திருக்க இல்ல? அதுனால பிழைச்சுப் போ!” என்றுவிட்டு உணவை வாய்க்குள் அடைத்தாள்.

 

பேச்சு மற்றும் உண்ணும் பணி இரண்டையும் ஒருசேர செய்ததால் மூச்சு மற்றும் உணவுக் குழல் இரண்டும் ஒரே நேரத்தில் திறந்து, உண்டதின் காரம் மூக்கிற்குள் நுழைந்து புரையேறியது ரம்யாவிற்கு.

 

“லூசு.. மெதுவா சாப்பிடு. பேசிக்கிட்டே இப்படியா கை நிறைய அள்ளி முழுங்குவ?” என தோழியின் தலையிலும் முதுகிலும் தட்டி வருடிக் கொடுக்க, “தேங்க்ஸ்டா..” என்றவளின் கண்களில் மெலிதான நீர்படலம்.

 

“வளர்ந்து இருக்கியே தவிர, இன்னும் எதைச் செய்யணும் எதைச் செய்யக் கூடாதுனு ஒன்னும் தெரியல. இப்ப எல்லாம் சின்னப் பிள்ளைக கூட மெச்சூர்டா நடந்துக்குதுக. ஆனா நீ.? உன்னை எல்லாம் வச்சு, கதிர் எப்படித்தான் சமாளிக்கிறாரோ தெரியல!” எனப் பேசியபடியே அவன் அறைக்குள் செல்ல, “அவன் அதெல்லாம் செய்யிறது இல்ல. என்னைத் திருத்த முடியாதுனு புரிஞ்சுக்கிட்டு அப்படியே விட்டுட்டான்!” என்று பதில் உரைத்தாள் அவள்.

 

இத்தனை நேரத்திற்கும் நவனின் பார்வை மனைவியின் பக்கம் ஒருமுறைக் கூட திரும்பாது இருக்க, நடக்கும் நிகழ்வுகளிற்குப் பார்வையாளினியாய் மட்டும் நின்றிருந்தாள் கனி.

 

அவளைக் கவனித்த ரம்யா, “ஏன் அப்படியே நிக்கிற? வா, வந்து சாப்பிடு!” என்று அழைக்க, உடை மாற்றி வந்த ஆடவன், “சாப்பிடலயா கனி?” என வினவியபடி உண்பதற்காக இருக்கையில் சென்று அமர்ந்தான்.

 

“எனக்கும் வாங்கிட்டு வந்திருக்கீங்களா என்ன?”

 

மனைவியின் வினாவில் அவள் பக்கம் திரும்பியவன், “அதெப்படி, உனக்கு வாங்காம வருவேன்?”

 

“ரம்யா அக்கா அவங்களுக்கு மட்டும் தான கேட்டாங்க?”

 

“ஏன் அவளுக்கு மட்டும் தான் வயிறு இருக்கா? உனக்கு எனக்கு எல்லாம் இல்லையா?”

 

“ஓ..”

 

மனைவியின் மாறுபாடான பேச்சு, ஆடவனின் மனதை லேசாய் நெருடியது.

 

“என்னாச்சு உனக்கு? ஏன் இன்னைக்கு இப்படி வித்தியாசமா பேசுற?” என்று வினவ, “நவன் சாப்பிட வாங்கிட்டு வருவான்னு, நான்தான் உன்கிட்ட சொன்னேனே கனி?” என நண்பனிற்காக பரிந்து பேசினாள் ரம்யா.

 

“ஒருவேளை நீங்க சொல்லலேனா அக்கா.?”

 

சின்னதாய் சிரித்தவள், “சரிதான்! பதில் சொல்லுடா, உன்னோட பொண்டாட்டிக்கு!” என்று உரைத்து, எதிரே இருந்த நண்பனைப் பார்த்தாள்.

 

“டைம் பார்த்துக் கோர்த்து விடுறியா, இம்சை? என்னை போட்டு கொடுத்த உனக்கு, நான் வாங்கிட்டு வந்த சாப்பாடு வேணுமா? நீ ஒன்னும் இதைச் சாப்பிட வேணாம்!” என அவளின் உணவுத் தட்டை நவன் தன்பக்கமாய் இழுக்க, 

 

“புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல மூனாவது ஆள் பேசுனா நல்லா இருக்காது. அதுனால தான், நீயே பதில் சொல்லுனு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கம்பிளைண்ட் பண்ண மாதிரி இல்லாம எவ்வளவு மெச்சூர்டா நடந்துக்கிட்டேன்? அதுக்குப் பாராட்டலனாலும் பரவாயில்ல, கோர்த்து விடுறேன்னு என் மேலயே பழியைப் போடுற? உனக்கு எல்லாம் மனசாட்சி இருக்குதாடா.?” என்று எழுந்து நின்று தட்டைக் கையோடு தூக்கிக் கொண்டாள் ரம்யா.

 

“மனசாட்சிப் பத்திப் பேசுற மூஞ்சியைப் பாரு? சரியான இம்சை. குரங்கு மாதிரி அங்கேயும் இங்கேயும் தாவாம, மனுசனை போல ஒரு இடத்துல உட்கார்ந்து சாப்பிடு. என் பொண்டாட்டிக்கு நானே பதில் சொல்லிக்கிறேன்!” என மொழிந்தவன் கனியின் புறம் திரும்பிப் பார்த்தான்.

 

எதைப் பேசும் மனநிலையிலும் அவள் இல்லை. எது சொல்ல முயன்றாலும்.. அந்த உரையாடலானது நண்பர்களான அவர்களிற்கு இடையே இடம்மாறி, தனது இருப்பே பொருள் அற்றதாகிப் போவது போல் சமீப காலமாய் கனியின் மனம் எண்ணத் துவங்கி இருந்தது.

 

அதனால் இன்றைய தினம் எதுவும் பேச முற்படாது, அமைதியாய் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

அவளின் நடவடிக்கையில் குழம்பிப் போன நவன், “ஹேய்..” என்றபடி பின் தொடர்ந்து சென்றான்.

 

அறைக்குள் அவர்கள் இருவரும் இருக்க, கதவு தாழிடப்படாமல் மூடி இருந்தது.

 

“என்னாச்சு? ஏன் சாப்பிடாம வந்துட்ட.?”

 

“எனக்குப் பசியில்ல.”

 

“டைம் ஆனதுனால சாப்பிட்டியா.?”

 

திருமணம் ஆன தினத்தில் இருந்து ஒரு பொழுது கூட, கனி கணவனிற்கு முன்னர் உணவு உட்கொண்டது இல்லை. 

 

மதிய உணவு இடைவெளியின் தருணத்தில் நாள்தோறும் மனைவிக்கு அழைத்துப் பேசுவதை வழக்கமாய் கொண்டிருந்தான் நவன். அதன் மூலமாய் அவன் உண்டு விட்டதை உறுதி செய்த பின்னர் தான், இவள் சாப்பிட அமர்வாள்.

 

இது சிற்றன்னை காளீஸ்வரியிடம் இருந்து கற்ற பாடம். திருப்பதி வெளியூரில் வேலைப் பார்ப்பதால், மூன்று வேளையும் கைப்பேசியில் அழைப்பு விடுத்து, அவர் நேரத்துக்கு உணவு உட்கொண்டதை உறுதி செய்து கொள்வார், இது மனைவியின் தலையாய கடமை என்பது போல்.

 

ஆனால் இவர்களின் உறவில் கனி அழைக்க மாட்டாள். அவன் தான் பேசுவான்.

 

நவனுமே, துணைவியின் இப்பழக்கத்தை அறிவான் தான். 

 

“உனக்குப் பசிக்கும் போது சாப்பிட்டுக்கோ. நான் கால் பண்ணுறதுக்காக எல்லாம், வெயிட் பண்ணாத!” என சில முறை உரைத்தும் இருக்கிறான்.

 

அவற்றை எல்லாம் மறந்து விட்டு இன்று, “டைம் ஆனதுனால சாப்பிட்டியா?” என்று அவன் எழுப்பிய வினா, பாவையின் மனதை வதைத்தது.

 

உள்ளிருக்கும் உணர்வுகளை வெளியே காட்டிடாமல், “பசிக்கலனா, முன்னாடியே சாப்டதா அர்த்தமா?” என நிதானமாய் வினா எழுப்பினாள் கனி.

 

“அப்புறம்? மதியம் ரெண்டு மணிக்கு நான் கால் பண்ணும் போது, சாப்பிட்டு இருப்ப. இப்ப பதினொன்னு ஆச்சு. இவ்வளவு நேரத்துக்கு பசிக்காம இருக்குமா என்ன?”

 

“அம்மாடி! பொண்டாட்டி வயித்து மேல ரொம்ப தான் அக்கறை?”

 

“கனி, என்ன தாண்டி ஆச்சு உனக்கு? இன்னைக்கு, ஏன் இப்படி ஏடா கூடமா பேசிக்கிட்டு இருக்க நீ.?”

 

“எனக்கு ஒன்னும் ஆகல. போங்க, உங்க ஃப்ரெண்ட் கூட போய் சேர்ந்து சாப்பிடுங்க நீங்க!”

 

“அப்படி எல்லாம் போக முடியாது. உன்னோட மாமனாருக்கு விஷயம் தெரிஞ்சா, கட்டுன பொண்டாட்டியை ஒழுங்கா கவனிக்காம, நீ என்னடா  அங்க கிழிக்கிறனு என்னைக் கேள்விக் கேட்டுப் பேசியே கொன்னுடுவாரு மனுஷன்! அதுனால வந்து, நல்ல பிள்ளையா சாப்பிடுமா ப்ளீஸ்..”

 

“ஹோ.. அப்ப என்னை சாப்பிட கூப்பிடுறது பொண்டாட்டி மேல அக்கறையால இல்ல. மாமாக்குப் பதில் சொல்லணுமே தான், என்ன?”

 

“ஏய் கனி, என்ன இது? அதெப்படி உன்மேல அக்கறை இல்லாம போகும் எனக்கு?”

 

“எப்பவும் வேலை முடிஞ்சு கிளம்பும் போது எனக்கு ஃபோன் போடுவீங்க தான? இன்னைக்கு ஏன் கூப்பிடல.?”

 

“இதெல்லாம் ஒரு விஷயமா? அதான் ரமிக்கிட்டச் சொல்லி இருந்தேனா?”

 

“உங்களுக்கு நான்தான் பொண்டாட்டி. அப்ப என்கிட்ட தான சொல்லி இருக்கணும்?”

 

“ஹோ.. நான் இதை இப்படி யோசிக்கல. அவ நம்ம வீட்டுல இருக்கிறது தெரியும். அதுனால ஒருத்தர்கிட்ட சொன்னா போதும்னு நினைச்சிட்டேன்.”

 

கனி பதில் பேசாமல் அமைதியாய் இருக்க, “சரி? வா. நீ இப்ப சொன்னதை இனிமேல் நான் ஞாபகத்துல வச்சுக்கிறேன்!” என்று அவளின் கைப்பற்றி அழைத்துச் சென்றான்.

 

சம்மதம் இல்லாது, அரை மனதுடன் அவனுடன் வெளியே வந்தாள். 

 

கனிக்கு உண்பதில் விருப்பம் இல்லை. இத்தோடு நவன் ரம்யாவிற்காக என்று வாங்கி வந்த உணவிலும் பிடித்தம் இல்லை. எனினும் கணவனுடன் வாதம் செய்ய விரும்பாது, இரண்டு வாய் மட்டும் உண்டாள்.

 

வெளிப்படுத்தாத அவளின் இந்த உணர்வுகளை அறியாது போனான் ஆடவன். இதுவே இருவருக்கும் இடையே, பார்வைக்குப் புலப்படாத ஒரு இடைவெளியை உருவாக்கி விட்டிருந்தது. கனி அதனை உணர்ந்து கொண்ட அளவிற்கு, அவன் இன்னும் உணரவில்லை என்பதே தற்போதைய அவர்களது உறவின் நிலை.

 

*

 

வாயிலில் வந்து நின்ற மகளை அதிர்ச்சியுடன் பார்த்தார் கல்யாணி. 

 

“என்ன சஞ்சு?” எனப் பதற்றத்துடன் வினவிட, எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள். 

 

அவரின் குரல் கேட்டு உள்ளே இருந்து வெளியே வந்த நடராஜனும் நடந்ததைப் பார்த்துவிட்டு, ‘என்ன?’ என்பது போல் கண்களால் வினவ, மறுப்பாய் தலை அசைத்தார் கல்யாணி. 

 

இருவரும் அவளிடம் மாறி மாறிப் பேசிப் பார்த்தும் எந்த பயனும் இல்லை. மௌனம் சாதித்தாள் பாவை. அதனால் அவளின் துணைவனிடம் பேசுவது என்று முடிவெடுத்தனர். 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்