Loading

 

​மரம் தேடும் மழைத்துளி — அத்தியாயம் 20

​சமையலறையில் நின்றுகொண்டே தாய், மகனின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ருக்மணி, உண்மையிலேயே நெகிழ்ந்து போனாள். ‘ச்சே… இப்படிப் பக்குவமா ஆரம்பத்துல இருந்தே எடுத்துச் சொல்லாததாலதான், மனுஷன் பதராகிப் போயிட்டாரு. இனிமேலாவது அவருக்கு உண்மையான அன்புன்னா என்ன, உண்மையான மனுஷங்க யாருன்னு கூடவே இருந்து புரிய வைக்கணும். இன்னமும் வீம்பு பண்ணிக்கிட்டு இருக்கக் கூடாது,’ என்று தனக்குத்தானே திட்டம் வகுத்துக் கொண்டாள்.

​இரவில் மாடியறையில் முருகன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். ருக்மணி இரவு உணவை முடித்துவிட்டு மாடிக்கு வந்தாள். எப்போதும் அடைத்தே கிடக்கும் அந்த அறையின் கதவு, இன்று விசாலமாகத் திறந்திருந்தது. அறைக்குள் ருக்மணி காலடி எடுத்து வைத்தபோதே, உள்ளிருந்த முருகன், “வா… ருக்கு!” என்று இன்முகத்தோடு வரவேற்றான்.

​‘இப்போது பார்ப்பது இன்னொரு மாற்றம்!’ என்று தன் மனதிற்குள் எண்ணிக்கொண்டாள் ருக்மணி.

​அவள் அருகில் சென்றதும், கைபிடித்துத் தன் பக்கத்தில் அமரச் சொன்னான் முருகன். ருக்மணியும் மறுப்பு சொல்லாமல் அமர்ந்துகொண்டாள்.

​“இன்னைக்கு என் மனசு ரொம்ப லேசா இருக்கு ருக்கு…” என்று முருகன் சொல்லும்போது, ருக்மணி அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

​“ஏன்னு கேட்க மாட்டியா?” என்றான் முருகன்.

​‘அதற்கான காரணம் எனக்குத் தெரியுமே!’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே, பார்வையைத் திசை திருப்பாமல் அவனைக் கனிவோடு பார்த்தாள்.

​“நானே சொல்றேன், அதுக்குக் காரணம் நீதான். எங்க அம்மா கூடவே இத்தனை வருஷம் இருந்திருக்கேன்; அவ கையாலயே சாப்பிட்டு வளர்ந்திருக்கேன். அப்படி இருந்தும் அவ மேல துளியும் நம்பிக்கை இல்லாம, ‘இவ வயித்துல பிறந்துட்டோமே’ன்னு என்னை நானே கேவலமா நினைச்சுக்கிட்டு இருந்தேன். நேத்து என்கிட்ட அவளைப் பத்தி நீ சொல்லாமலிருந்திருந்தா, இன்னமும் நான் தப்பாவேதான் நினைச்சிருப்பேன். எங்க அம்மா நல்லவன்னு நீ சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டியதாப் போச்சேன்னு ஒரு சின்ன வருத்தம்தான். இருந்தாலும், இப்பவாவது உன் மூலமா தெரிஞ்சுக்கிட்டேனே… அது போதும். எங்க அம்மா ஆம்பளைக்கு ஆம்பளையா இந்த குடும்பத்துக்காக உழைச்சுக் கொட்டியிருக்கா. பொம்பளைக்கு பொம்பளையா இருந்து பொறுப்பா எங்களை வளர்த்து, குடும்பக் கௌரவம் குறையாமப் பார்த்துக்கிட்டிருக்கா. அப்படிப்பட்டவளை நான் எவ்வளவு கேவலமா நினைச்சிருக்கேன் பார்த்தியா?

​ஆனா, அது என் மேல தப்பில்லை ருக்கு. எங்க அப்பா என் மனசுல விதைச்ச விஷ விதை அது! அவர் சொன்ன வார்த்தைங்க இன்னும் என் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு. ‘எல்லாருக்கும் அம்மா எப்படிப் பாசமா இருக்கா… உங்க அம்மாவைப் பாரு, பேய் மாதிரி விழுவா’ன்னு அவர் சொல்லி வாயை மூடுறதுக்குள்ள, எங்க அம்மா ஆக்ரோஷமா கத்தி அவர் கூட சண்டை போடுவா. அப்போதெல்லாம் அப்பா சொல்றது உண்மையோன்னு யோசிப்பேன். அவர் அவளை வம்புக்கு இழுத்துச் சீண்டுறதும், அதுக்காகத்தான் அவ கத்துறாங்கிறதும் அப்போ எனக்குத் தெரியாது.

​ஒரு நாள் எங்க அப்பா, ‘நான் உன்னை விட்டுட்டுப் போகப்போறேன். நீ என்னோட புள்ள, உன்னைப் பிரிஞ்சு போறது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. இருந்தாலும் உங்க அம்மா கூட என்னால வாழ முடியாது. இனிமேல் உனக்கு நான் அப்பா கிடையாது. உங்க அம்மா கூட வேலை பார்க்கிறானே மேஸ்திரி, அவன்தான் உன்னோட புது அப்பா. அவனுக்கும் உங்க அம்மாவுக்கும் குழந்தை பிறக்கப் போகுது, அவன்தான் உன்னோட தம்பி. நீ என்னோட பிள்ளைங்கிறதால அவன் உன்னைக் கொலை பண்ணிடுவான், எச்சரிக்கையா இருந்துக்கோ’ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

​அவர் சொன்னபடியே எங்க அம்மாவுக்குக் கோமதி பிறந்தா. சின்னப் பிள்ளையில இருந்தே கோமதியை எனக்குச் சுத்தமா பிடிக்காது. அவ எங்க அம்மாவோட பிள்ளை, எனக்குத் தங்கச்சி இல்லைன்னே நினைப்பேன். அவ வயசுக்கு வந்ததுக்கு அப்புறம், இந்த அவமானத்தை வீட்டை விட்டு வெளியேத்தணும்னா யாருக்காவது கட்டிக் கொடுத்து அனுப்பிவிடணும்னு ஒரு வைராக்கியம் வந்துச்சு. அதனாலயே சம்பாதிச்சு, நகை நட்டுப் போட்டு, அவளுக்கு 17 வயசுல கல்யாணத்தை முடிச்சு வச்சேன். அதை ஊருக்குள்ள ஒவ்வொருத்தரும் பெருமையா சொல்லுவாங்க. ஆனா, என் மனசுக்குள்ள எவ்வளவு சிறுமையான, வஞ்சகமான எண்ணம் இருந்திருக்குன்னு இப்பதான் ருக்கு எனக்குப் புரியுது,” என்று கொட்டித் தீர்த்தான்.

​ருக்மணி கனிவோடு, “எனக்கு உங்களைப் பார்த்துப் பெருமையா இருக்கு மாமா…” என்றாள்.

​“நான் கோவிச்சுப்பேன்னு எனக்காகப் பொய் சொல்றியா?”

​“இல்லை மாமா… கோமதி உங்களோட தங்கச்சிங்கிற நினைப்பே இல்லாத சமயத்துல, ‘யாரோட பிள்ளையோதானே’ன்னு அவளுக்கு எந்த வஞ்சனையும் செஞ்சிடாம, நல்லபடியா கரையேத்தணும்னு நினைச்சீங்களே! ‘யாரோட பிள்ளையோ எதுக்கு நம்ம கூட இருக்கணும்’னு ஏதும் தப்பான முடிவு எடுக்காம, அவளைப் பாதுகாப்பா வாழ வைக்கக் கட்டிக் கொடுக்கலாம்னு யோசிச்சீங்களே… அந்த எண்ணத்துலயும் ஒரு நியாயமும் நன்மையும் இருந்திருக்கு பாத்தீங்களா, அதுதான் நீங்க பெருமைப்பட வேண்டிய விஷயம்.”

​முருகன் லேசான புன்னகையோடு, “அப்போ எங்க அப்பாவும் நல்லவர்தானே?” என்றான் நகைச்சுவையாக.

​‘என்னடா இது, திரும்பவும் வேதாளம் முருங்கை மரத்துல ஏறிடுச்சா?’ என்று எண்ணியபடி விழி விரித்தாள் ருக்மணி.

​முருகன் தொடர்ந்தான், “பிடிக்காத பொண்டாட்டி இனிமேலாவது நிம்மதியா இருக்கட்டுமேன்னு, அவளை விட்டுட்டு அவர் ஓடிப் போயிட்டாரே… அதைச் சொன்னேன்!”

​அவனது இந்த மாற்றத்தைக் கண்டு வியப்பின் எல்லைக்கே சென்ற ருக்மணி, கண்கள் அகலா வியப்போடு முருகனை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டாள்.

​சரவணன் குடும்பத்தில் இருந்து கிருஷ்ணனும் லட்சுமியும் ஜோதிடரைச் சந்தித்து, திருமணத்திற்கு நாள் குறிக்கச் சென்றிருந்தார்கள்.

​ஜோதிடர் சரவணனின் ஜாதகத்தை ஆழமாக ஆராய்ந்து பார்த்துவிட்டு, “இந்த ஜாதகருக்கு ஆவணி மாசத்துக்கு மேலதான் குரு பார்வை படுது. அதனால ஆவணி மாசத்துல கல்யாணத்தை நடத்தினால் ரொம்பச் சிறப்பா இருக்கும்,” என்றார்.

​“சாமி, வைகாசி மாசத்துல நாள் எதுவும் நல்லா இல்லையா?” என்று லட்சுமி தயக்கத்துடன் கேட்டாள்.

​“வைகாசி மாசம் இவருக்கு வேண்டாம்னுதான் சொல்றேன். அதையும் மீறி வைகாசியில கல்யாணம் முடிச்சா பின்னாடி ரொம்பக் கஷ்டப்படுவாங்க. குரு பார்வை ஆவணிக்கு மேலதான் ஆரம்பிக்குது. அதனால அடுத்த வருஷம்தான் கல்யாணம் நடத்தணும், ஜாதகப்படி அப்படித்தான் வாய்ப்பு இருக்கு. இப்போ நீங்க நினைக்கிறபடி வைகாசியில நடத்தணும்னா ரொம்பச் சிரமப்பட்டுப் போராட வேண்டியிருக்கும்.”

​கிருஷ்ணன் உடனே, “சரிங்க சாமி, நீங்க ஆவணி மாசத்துலயே நல்ல நாளா குறிச்சுக் கொடுங்க. என்ன நடக்கணும்னு விதி இருக்கோ, அதுபடி நடக்கட்டும்,” என்று கூறி நாளைக் குறித்துக் வாங்கிக் கொண்டார்.

​அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையன்று அனைவரும் ஒன்றாகச் சுபத்ராவின் வீட்டிற்குச் சென்றார்கள். சுபத்ராவுக்குப் பூ வைத்து, ‘சரவணனின் மனைவி சுபத்ராதான்’ என்று முறைப்படி உறுதி செய்துவிட்டு வந்தார்கள். ‘ஆவணி மாசத்தில் திருமணமா… இன்னும் ஆறு மாத காலம் இருக்கிறதே!’ என்று சுபத்ராவின் குடும்பத்தார் முதலில் சற்றே தயங்கினாலும், மாப்பிள்ளை சரவணன் தங்கமான குணமுள்ளவர் என்பதால் மனமுவந்து சம்மதித்தார்கள்.

​இதற்கிடையில், முருகனுக்கு வலது கை கட்டை விரலில் லேசாக வலி தொடங்க ஆரம்பித்திருந்தது. அதற்கு விக்ஸ், அமிர்தாஞ்சன் போன்ற வலி நிவாரணிக் களிம்புகளைத் தடவிக் கொண்டு சமாளித்து வந்தான்.

​முருகன் – ருக்மணி தம்பதியருக்கு அந்த மாதத்தின் அனைத்து நாட்களுமே அளவற்ற மகிழ்ச்சியோடு கழிந்தன. சித்திரை மாதம் பிறந்தது. மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கான காப்பு கட்டுதல் வைபவமும் தொடங்கி, பத்து நாட்கள் திருவிழா ஊரே மெச்சும் படி கோலாகலமாகத் துவங்கியது.

​திருவிழா தொடங்கிய முதல் நாளில் இருந்தே, பத்து நாட்களும் முருகனும் ருக்மணியும் ஒன்றாகக் கோவிலுக்குச் சென்று முறைப்படி வழிபாடு செய்துவிட்டு வந்தார்கள். பதினோராவது நாள் மஞ்சள் நீராட்டு விழாவோடு சித்திரைத் திருவிழா நிறைவு பெறவிருந்தது.

​மஞ்சள் நீராட்டு விழாவைப் பற்றி யோசித்தபோதுதான், ருக்மணிக்கு ஒரு விஷயம் சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது. தான் இன்னும் தலைமுழுகாமல் (மாதவிடாய் தள்ளிப் போயிருப்பது) இருப்பது அவளுக்கு அப்போதுதான் உறைத்தது!

​மனதிற்குள் நாட்களை எண்ணிப் பார்த்துக் கணக்கிட்டாள். மொத்தம் 35 நாட்கள் கடந்திருந்தன. அதை உணர்ந்ததும் அவளுக்குள் சந்தோஷம் அலைமோதியது.

​மறுநாள் நடக்கவிருக்கும் மஞ்சள் நீராட்டு வைபவத்தை எவ்வாறெல்லாம் கொண்டாடி மகிழலாம் என்று முருகன் உற்சாகத்தோடு திட்டம் வகுத்துக் கொண்டிருந்தான்.

​மறுநாள் காலையில் மஞ்சள் நீராட்டு விழா மங்களகரமாகத் தொடங்கியது. ருக்மணி இறுதி நாள் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்யப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். மஞ்சள் தண்ணீர் தெளித்தாலும் கறை தெரியாத வண்ணம், ஒரு அழகான மஞ்சள் நிறப் புடவையைத் தேர்ந்தெடுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். முந்தானையை மடிப்பு வைத்து இடுப்பில் செருகும்போது, தன் வயிற்றைத் தானே மென்மையாகத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தாள்.

​‘தன் வயிற்றில் வளர்வது இந்த குடும்பத்தின் வாரிசுதான்’ என்பதை மருத்துவ ரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தவள், ‘கோவிலுக்குப் போயிட்டு வந்ததும் மாமாகிட்ட சொல்லி, ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லணும்,’ என்று எண்ணினாள்.

​அப்போது, குழைத்த மஞ்சளைக் கையில் அள்ளிக் கொண்டு, ருக்மணியின் பின்புறமாக வந்து ரகசியமாய் நின்றான் முருகன். அவனது அருகாமையைத் தன் உணர்வால் அறிந்த ருக்மணி, “மாமா, கோயிலுக்குப் போகணும்… முதல்ல கிளம்புங்க. போயிட்டு வந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் ஆஸ்பத்திரி வரைக்கும் போயிட்டு வரணும்,” என்றாள்.

​“என்னடி சொல்ற ருக்கு? உடம்புக்கு ஏதும் முடியலையா?” என்று பதறினான்.

​“நாள் தள்ளிப் போயிருக்கு மாமா… ஏதும் பிரச்சனையா என்னன்னு டாக்டரைப் பார்த்து உறுதி பண்ணிக்கணும்,” என்று எதுவும் அறியாதவள் போலச் சொல்லிவிட்டு முருகன் புறம் திரும்பினாள்.

​முருகன் தன் கையில் இருந்த மஞ்சளை அவளது கன்னத்தில் மென்மையாகத் தடவிவிட்டான். “என்னடி சொன்ன… நாள் தள்ளிப் போயிருக்கா?!” என்று பேரானந்த அதிர்ச்சியோடு கேட்டான். அதீத சந்தோஷத்தைத் தாங்க முடியாமல், “அம்மா! அம்மா!” என்று உரக்கப் பார்வதியை அழைத்தவன், அடுத்த கணமே கண்கள் சொருக, மல்லாந்த நிலையில் அப்படியே தரையில் சுருண்டு விழுந்தான்.

​முருகன் அழைத்த சத்தம் கேட்டு ஓடிவந்த பார்வதியும், அவனுக்கு முன்பே நின்று கொண்டிருந்த ருக்மணியும், திடீரெனக் கீழே விழுந்த முருகனைப் பார்த்துப் பதறித்துடித்தனர்.

​“மாமா…” என்று ருக்மணியும், “முருகா…” என்று பார்வதியும் அலறினர்.

​பாவம், முருகனால் தன் நிலையை அவர்களுக்குத் தெரிவிக்கக் கூட முடியாமல், திணறலோடு படுத்துக் கிடந்தான்.

​அவனை எழுப்ப முயன்றார்கள். கண்கள் திறந்தே இருந்தன; அதிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. ஆனால், வார்த்தைகள் வர மறுத்து வாய் தவித்தது. வாயோரம் லேசாக நுரை தள்ளியது. அவனது உடலின் வலது புறக் கை மற்றும் கால்கள் மிகவும் கனத்து, ஏதோ பெரும் பாரத்தைக் கட்டி இழுப்பது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அந்தப் பக்கவாதத் துயரத்தைச் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டு கிடந்தான்.

​பார்வதி பதற்றத்துடன், “ருக்கு… ஓடிப் போய் பக்கத்து வீட்டு மாமாவையும் அத்தையும் கூட்டிட்டு வாடி!” என்று லட்சுமியையும் கிருஷ்ணனையும் அழைத்து வர அனுப்பினாள்.

​விரைந்து ஓடிச் சென்ற ருக்மணி, கிருஷ்ணனின் வீட்டு வாசலில் நின்று, “மாமா… அத்தை… கொஞ்சம் சீக்கிரம் வெளிய வாங்க! முருகன் மாமா திடுதிப்புன்னு தரையில மயங்கி விழுந்துட்டாரு. வாயில நுரை தள்ளுது மாமா…” என்று கதறி அழுதுகொண்டே சொன்னாள்.

​அதிர்ச்சியடைந்த லட்சுமியும் கிருஷ்ணனும், “சரவணா… முருகனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலடா, கீழ விழுந்து கிடக்கிறானாம்… சீக்கிரம் ஓடி வா!” என்று குரல் கொடுத்துக்கொண்டே முருகனின் வீட்டை நோக்கிக் ஓடினார்கள்.

​இறுதியாக ஓடிவந்த சரவணன், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, அண்ணனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காகத் தெருமுனைக்கு ஓடிச் சென்று ஒரு ஆட்டோவை அவசரமாக அழைத்து வந்தான்.

​அங்கே முருகனைச் சூழ்ந்து நின்ற நால்வரும் அவனது கன்னத்தையும், கை, கால்களையும் தட்டி, “உனக்கு ஒன்னும் இல்லடா… நாங்க ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறோம், பயப்படாதே!” என்று அவனுக்கு தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், முருகனால் ஒரு சிறு அசைவைக் கூடக் கொடுக்க இயலவில்லை. தன்னுடைய இந்த திடீர் இயலாமையை வெளிப்படுத்தக் கூட முடியாமல் அவன் கண்கள் மௌனமாகத் கண்ணீரைச் சொரிந்தன.

​சரவணன் மூச்சிரைக்க ஓடிவந்து, “அப்பா, ஆட்டோ வந்துருச்சு! அப்படியே எல்லாரும் சேர்ந்து அண்ணனைத் தூக்குங்க. ஆட்டோல உட்கார வச்சு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிருவோம்,” என்று சொல்ல, அனைவரும் பதற்றத்துடன் முருகனைத் தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தனர்.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply