அத்தியாயம் 11

Loading

தாரகேஷைப் பார்த்த செங்காந்தள் கதறித் தீர்த்தாள். பின் ஒருவாறாகச் சுயநினைவு வந்தவள், தன் தம்பியைக் குடிசைக்குள் அழைத்துச் சென்றாள். அவன் கீழே அமரப் பாய் விரித்தவள், குடிக்க நீரைக் கொண்டு வந்து கொடுத்தாள். பின் அவனைப் பற்றி விசாரித்தாள்.

 

செங்காந்தள், “நீ ஊரை விட்டுப் போய் 20 வருஷத்துக்கு மேல இருக்கும்லடா. நல்லா இருக்கியா? நிறையப் படிக்கணும்னு ஆசைப்பட்டல்ல, படிச்சியா? டவுன் வாழ்க்கை உனக்கு புடிச்சிருக்கா? கல்யாணம் கட்டிக்கிட்டியா?” என அடுக்கடுக்காகக் கேள்விகளை அக்கறையுடன் கேட்டாள்.

 

தாரகேஷ், “உன்னை அந்த நிலைமையில பார்த்தும் நான் இன்னொரு பூவை கஷ்டப்படுத்துவேன்னு நீ எப்படித்தா நினைச்ச?” என்றான் வலியுடன்.

 

தாரகேஷ் சொன்ன பதிலில் அதிர்ந்தாள் செங்காந்தள். “நீ.. நீ.. இன்னும் அதை மறக்கலையா?” என்றாள் தவிப்புடன். அக்கா தம்பி இருவரின் கண்களும் கலங்கியிருந்தன.

 

இருவரின் நினைவுகளும் பின்னோக்கிச் சென்றன.

 

சுப்பையா – கோதை தம்பதிக்குச் செங்காந்தள், தாரகேஷ்வரன் தான் உலகம். என்னதான் பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் சென்றாலும், பிள்ளைகளை எதாவது படிக்க வைத்துவிட வேண்டும் எனக் கூறிக்கொண்டே இருப்பார் கோதை.

 

செங்காந்தளுக்குப் படிப்பதில் பெரிய நாட்டம் இல்லை. ஆனால் தாரகேஷ்வரனுக்குப் படிக்க மிகவும் பிடிக்கும். சிறு வயது முதலே அவனுக்கு எதையாவது படித்துக்கொண்டே இருக்க வேண்டும். தான் கண்டிப்பாக ஒருநாள் மிகப்பெரிய படிப்பு படித்து, பெரிய ஆளாக வருவேன் என்று கூறிக்கொண்டே இருப்பான்.

 

பதிமூன்று வயது செங்காந்தளுக்கு, ஐந்து வயது தாரகேஷ் தான் காவலன். ‘ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை’ என்று கோதை எப்பொழுதும் செங்காந்தளுடன் துணைக்கு இருக்கும் பொறுப்பைத் தாரகேஷிடம் தான் கொடுப்பார்.

 

மழலை மொழி பேசும் போது அக்காவை ‘அத்தா’ எனக் கூப்பிட ஆரம்பித்த தாரகேஷ், வளர ஆரம்பித்த பின்பும் ஏனோ மீண்டும் செங்காந்தளை மட்டும் அக்கா எனக் கூப்பிடவே இல்லை. அவனுக்கு அக்காவை விட ‘அத்தா’ என கூப்பிடத்தான் அதிக பிரியம்.

 

வறுமை இருந்தாலும், பிள்ளைகளின் ஆசைகளில் பாதியாவது நிறைவேற்றத் துடிக்கும் பெற்றோர், பெற்றோர் நிலை அறிந்து நடக்கும் பிள்ளைகள் என மகிழ்ச்சிக்குக் குறைவில்லாத குடும்பம்.

 

செங்காந்தளுக்குப் பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் தம்பியின் பள்ளி நோட்டுகளில் ஒன்றை அடம்பிடித்து வாங்கி, அந்த நோட்டு முழுவதும் விதவிதமான பூக்களை வரைந்து கொண்டே இருப்பாள். வெளியே எங்காவது பூக்களைப் பார்த்தால் மெய்மறந்து நின்றுவிடுவாள்.

 

தாரகேஷிற்கு பத்து வயதிருக்கும் போது ஒருநாள், செங்காந்தள், தாரகேஷ் இருவரும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். செங்காந்தள், அங்கிருந்த செம்பருத்திச் செடியைப் பார்த்தவள், அங்கேயே அதன் அழகில் நின்றுவிட்டாள். சற்று முன் நின்றிருந்த மழையில் நனைந்து புதுப்பெண்ணாய், இளம் சிவப்பு நிறத்தில் பெரிய இதழ்களை விரித்து, நடுவில் குட்டித் தண்டில் மஞ்சள் மகரந்தத்தைத் தாங்கிப் பிடித்திருந்த அழகைக் கண் எடுக்காமல் ரசித்துக்கொண்டிருந்தாள்.

 

செங்காந்தள், “தம்பி இங்கே பாரேன், எவ்வளவு அழகா சிவப்பு கலர்ல இருக்கு. செடி முழுக்கப் பூத்திருக்கு. பார்க்கவே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எவ்வளவு மெதுவா இருக்கு..” என மெதுவாகக் கைகளில் தொட்டு ரசித்தாள்.

 

“உனக்குத் தான் அந்தப் பூவை ரொம்பப் பிடிச்சிருக்குல்ல. பறிக்க வேண்டியதுதான. இங்கேயே இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே நிக்கிறது? பசிக்குதுல்ல.. வீட்டுக்கு போகணும்..” எனச் சிணுங்கத் தொடங்கினான் தாரகேஷ்.

 

“உனக்குச் சோறு தான் முக்கியம். போடா..” என்றவள், தம்பியுடன் நடந்து கொண்டே, “இங்க பாரு தம்பி. நல்லா கவனி. நாம எப்பவும் பூக்களைக் கஷ்டப்படுத்தவே கூடாது. அது செடியில எவ்வளவு அழகா இருக்கு. நீ பூவைப் பறிச்சுட்டா அது வாடிப் போயிடும்ல. அது பாவம் தானே. அதுக்கு நீ பறிச்சுக் கஷ்டப்படுத்துறன்னு கூடத் தெரியாது. நாம எப்படி நம்ம வீட்டுல ஜாலியா இருக்கோமோ அப்படித் தானே அதுவும் அதோட செடியில ஜாலியா இருக்கு” என்றாள்.

 

செங்காந்தள் பேசியதை அரைகுறையாகக் கேட்ட தாரகேஷ் மனதில், “நாம எப்படி நம்ம வீட்டுல ஜாலியா இருக்கோமோ அப்படித் தானே அதுவும் அதோட செடியில ஜாலியா இருக்கு” என்பது மட்டும் பதிந்து போனது.

 

இருவரும் பேசியபடியே வீட்டிற்கு வர, வீட்டிற்குள் பேச்சுச் சத்தம் கேட்டது.

 

“இன்னும் எத்தனை தடவை சுப்பையா நான் அலையறது? ஒண்ணு வட்டியைக் கொடு, இல்ல உன் பொண்ணை எனக்குக் கட்டி வை” என கந்துவட்டி ரத்தினம் கத்திக்கொண்டிருந்தான்.

 

“கொஞ்சம் பொறுத்துக்கோங்கையா… எப்படியாவது சீக்கிரம் கடனை அடைச்சிடுறேன்” சுப்பையா கெஞ்ச, “அதெல்லாம் நிறைய டைம் கொடுத்தாச்சு. இன்னும் ஒரு வாரம்தான்… வட்டியும் அசலும் முழுசா வரணும்” என்று சுப்பையாவை மிரட்டிவிட்டு வெளியே வந்த ரத்தினம், எதிரில் வந்து கொண்டிருந்த செங்காந்தளை அழுத்தமாகப் பார்த்துச் சென்றான்.

 

ரத்தினத்தின் பார்வையில் செங்காந்தளுக்கு அச்சம் வர, சிறுவன் தாரகேஷிற்கு கோபம் வந்தது. நேரே வீட்டிற்குள் வந்தவன், “அந்த ரத்தினம் ஏன்ப்பா எப்போ பார்த்தாலும் நம்ம வீட்டுக்கு வர்றான்? அவன் வந்தாலே அத்தா பயப்படுது. இனி அவனை வர வேண்டாம்னு சொல்லுங்க” எனத் தன் தந்தையிடம் பாய்ந்துவிட்டு குடுகுடுவென வெளியே விளையாட ஓடிவிட்டான்.

 

சுப்பையா எவ்வளவோ முயற்சி செய்தும் கடனை அடைக்க முடியாததால், வேறு வழியின்றி ரத்தினத்திற்குச் செங்காந்தளைக் கட்டி வைக்கும் சூழல் ஏற்பட்டது.

 

”இங்கே பாரு சுப்பையா… போன வாரமே இந்த வாரத்துக்குள்ள கடனை அடைக்கலைன்னா உன் பொண்ணைக் கொடுன்னு சொல்லிட்டுத் தானே போனேன். மரியாதையா இன்னும் ரெண்டு நாள்ல உன் பொண்ணை எனக்குக் கட்டி வைக்கிற” என மிரட்டிவிட்டுச் சென்றான் ரத்தினம்.

 

இதைக் கேட்ட செங்காந்தள் அதிர்ந்தாள். விடிந்தால் திருமணம் என்னும் நிலையில், அன்று நாள் முழுவதும் சுப்பையா, கோதை, செங்காந்தள் என மூவரும் உணவு கூட உண்ணவில்லை. தாய் தந்தையிடம் இந்தத் திருமணம் வேண்டாம் என மன்றாடினாள். தாரகேஷிற்கு ரத்தினத்தினால் தன் வீட்டில் எல்லோரும் சோகமாக இருக்கிறார்கள் என உணர முடிந்தது.

 

இரவு மெதுவாகச் செங்காந்தள் அருகில் வந்து அமர்ந்தவன், “அத்தா… அந்த எதிர் வீட்டுப் பொண்ணம்மா, நீ நாளைக்கு அந்த ரத்தினம் கூடப் போய்டுவேன்னு சொல்லி என்னை வெறுப்பேத்துது. அது பொய் தானே சொல்லுது? நீதானே அடிக்கடி சொல்லுவ பொண்ணுங்க எல்லாம் பூ மாதிரி… பூ எல்லாம் செடியில இருந்தா தான் அதுங்களுக்கு ஜாலின்னு. நீ அவன் கூடப் போக மாட்ட தானே?” என கண்ணில் நீருடன் கேட்டான்.

 

தாரகேஷ் பேசப் பேசச் செங்காந்தளுக்கு அழுகை அதிகமானது. அதைத் தம்பிக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டவள், தாரகேஷிடம் பதில் கூறாமல் தன் விதியை எண்ணி நொந்து போய் படுத்துக்கொண்டாள்.

 

மறுநாள் யாருக்கும் காத்திராமல் விடிந்தது. செங்காந்தளுக்கும் ரத்தினத்திற்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் திருமணம் முடிந்தது. தனது அத்தா தான் சொல்லியும் கேட்காமல் ரத்தினத்தின் பின் சென்றது சிறுவனாக இருந்த தாரகேஷிற்கு கோபத்தை வரவழைத்தது.

 

அவன் தன் அம்மாவிடம், “இனி அத்தா கூடப் பேசவே மாட்டேன். நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் அந்த ரத்தினம் கூடப் போயிட்டா” என கண்ணீருடன் கூறினான். தாரகேஷ் சிறுவனாகக் கண்ணீர் வடிக்க, மகளைக் காப்பாற்ற முடியாத பெற்றோர்களாய் சுப்பையாவும் கோதையும் மௌனமாகப் கண்ணீர் விட்டனர்.

 

செங்காந்தள் திருமணம் முடிந்த பத்தாவது நாள் கோதையைச் சந்தையில் வைத்துப் பார்த்தாள். மகளைப் பார்த்த கோதைக்கும் கண்ணீர். செங்காந்தள் சரியாக உண்ணாமல் உடல் இளைத்து, முகம் வாடி, கண்களில் உயிரே இல்லாமல் இருந்தாள். தாயைப் பார்த்த செங்காந்தள், முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் யாரோ போல் கடந்து செல்ல, கோதை முற்றிலும் உடைந்தார்.

 

வீட்டிற்கு வந்த கோதை சுப்பையாவிடம் செங்காந்தளைப் பற்றி, அவளின் நிலையைப் பற்றி, தங்களின் நிலையைப் பற்றி, பெற்றவர்களே அவளைக் காப்பாற்ற முடியாத வறுமையைப் பற்றி என மாறி மாறிப் புலம்பினார். கோதையின் புலம்பலைக் கேட்ட சுப்பையாவிற்கு குற்றவுணர்ச்சி வந்ததென்றால், தாரகேஷிற்கோ ரத்தினத்தின் மீது கோபமாக வந்தது.

 

நாளாக நாளாக வீட்டின் நிலைமை மோசமானது. வீட்டில் எப்பொழுதும் கோதையின் புலம்பலும், அதற்கு எதிர்வினையாகச் சுப்பையாவின் வெறித்தப் பார்வையுமாக இருக்க, தாரகேஷிற்கு வீட்டிற்கு வரவே பிடிக்காமல் போனது. சில நல்ல ஆசிரியர்களின் உதவியால் அவனது படிப்பு மட்டுமே மிச்சம் இருக்க, ஏற்கனவே வறுமையில் இருந்த குடும்பம் செங்காந்தள் திருமணத்தால் மொத்தமாக நிலைகுலைந்து ஒருநாள் ஒட்டுமொத்தமாக இல்லாமல் போனது.

 

ஆம்… வேலைக்கும் செல்லாமல், வீட்டில் உணவும் இல்லாமல், மகளை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த தம்பதியினர் தாரகேஷை மறக்க, ஒருநாள் உயிரைத் துறந்தனர். சுப்பையா – கோதை இறந்த செய்தி கேட்டும் செங்காந்தள் வராதது இன்னுமே தாரகேஷிற்கு கோபமாக மாற, இறந்த வீட்டின் கூட்டத்தில் யாரோ பேசியது காதில் கேட்டது. “இருந்தாலும் அந்த ரத்தினத்துக்கு இவ்வளவு அதப்பு ஆகாது. பெத்தவங்க செத்ததுக்குக் கூட அந்தப் பொண்ணை அனுப்பாம வச்சிருக்கான். அதுக்கும் அம்மா அப்பாவை கடைசியா பார்க்கணும்னு ஆசை இருக்கும் தானே..” எனக் கூற, இப்போது தாரகேஷின் கோபம் ரத்தினத்தின் மீது பாய்ந்தது.

யார் யாரோ உதவி செய்ய, சுப்பையா – கோதையின் கடைசி காரியமும் முடிந்தது. உதவியவர்கள் தாரகேஷின் பொறுப்பும் தங்கள் மீது விழுமோ என அஞ்சி உடனே இடத்தைக் காலி பண்ண, வீட்டில் தனியாக அமர்ந்திருந்தான் தாரகேஷ்.

 

இரவு தனியே இருக்கப் பயந்து, செய்வதறியாமல் ரோட்டில் இறங்கிக் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான். வழியில் அல்லிக்கொடியைப் பார்த்தவன், அதில் மலர்ந்திருந்த பூக்களைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டான். “உன்னை அத்தாவுக்கு ரொம்பப் பிடிக்கும். உன்னைப் பார்த்தா அத்தா ரொம்பச் சந்தோஷப்படுவா..” என அந்த அல்லிப்பூவிடம் கூறியவன், செங்காந்தளை அழைத்து வர நேராக ரத்தினத்தின் வீட்டிற்கு ஓடினான்.

 

வீட்டு வாசலில் நின்று “அத்தா.. நீ இருக்கியா? வெளிய வாயேன்.. அங்கே உனக்கு பிடிச்ச அல்லி இருக்கு.. பார்க்கப் போலாம்” என கூப்பிட, வீட்டினுள் இருந்து எந்தப் பதிலும் இல்லை. ‘என்ன வீட்டுல யாரும் இல்லையா?’ என மனதினுள் நினைத்துக்கொண்டு, “அத்தா.. அத்தா.. எங்க இருக்க நீ?” எனக் கூப்பிட்டுக்கொண்டே வீட்டின் பின்புறம் சென்றவன் அங்கிருந்த ஜன்னலின் அருகே கேட்ட சத்தத்தில் நின்றுவிட்டான்.

 

”ஏய் என்னடி ரொம்பப் பண்ற? முறையா தானே கட்டிக்கிட்டேன். அப்புறமும் என்கூடப் படுக்க உனக்கு என்ன செய்யுது?” என்ற ரத்தினம் மேலும் அசிங்கமாகவும் அந்தரங்கமாகவும் பேச, தாரகேஷ் காதை மூடிக்கொண்டான்.

 

பின் சிறிது நேரத்தில் செங்காந்தளின் அழுகையும், அலறல் சத்தமும் மாறி மாறி கேட்க, தாரகேஷ் வேகமாகச் சென்று ஜன்னல் கதவைத் தட்டினான்.

 

”டேய் என் அத்தாவை என்னடா பண்ற? அவ ஏண்டா அழறா? உன்னைக் கொல்லாம விடமாட்டேண்டா.. டேய்.. ரத்தினம் கதவைத் திறடா” என தாரகேஷ் கத்த, ரத்தினமும் யார் இந்நேரத்தில் ஜன்னலைத் தட்டியது என்ற கடுப்பில் உடையை அரைகுறையாக உடுத்திக்கொண்டு ஜன்னலைத் திறந்தவன், நிச்சயமாக அங்கே தாரகேஷை எதிர்பார்க்கவில்லை.

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்