Loading

சலனம்-2
ஒரு வளர்ந்த ஆண்மகனாய், அவள் லஸ்ட் என்றதன் கோபம் என் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. அதெப்படி அவள் சொல்லலாம்? நான் தான் சொல்ல வேண்டும்! ஒரு பெண்ணாய் இருந்துக் கொண்டு, அவள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது மகா அபத்தமாய் இருந்தது.

‘நீயெல்லாம் டைரக்டர்ன்னு வெளியே போய் சொல்லிக்காதே! அந்தப் பொண்ணு லஸ்ட்ன்னு ஒருவார்த்தை சொன்னதுக்கு ஏதோ பைத்தியக்காரன் மாதிரி யோசிக்கிறே? உன் பிரச்சனை என்ன தெரியுமா? அந்தப் பொண்ணு, அவளா வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக்க கேட்கணும். நீ அப்படியே பெரிய இவனாட்டம் பாவம் பார்த்து சம்மதிக்கிற மாதிரி சீன் போடணும்! இதானே உன் எண்ணம்?’

என் மனசாட்சியே என்னைக் கேள்வி கேட்டு காறி உமிழ்ந்தது.

சொல்லப் போனால் அது உண்மை தான். என் மனம் எதிர்பார்ப்பது அவள் என்னிடம் மண்டியிடுவதைத்தான். ஆனால் எனக்கு அந்த நொடி வரை தெரியாது, நான் தான் அவளிடம் மண்டியிடப் போகிறேனென்று.

என் திருமணச் செய்தி, அவளிடம் எந்த பாதிப்பையுமே ஏற்படுத்தவில்லை என்ற கோபத்தை மனதில் நிரப்பிக் கொண்டு, ஷுட்டிங் எனப் பொய் சொல்லிவிட்டு, அவள் கண்ணில் சிக்காமல் ஆட்டம் காட்டினேன்.

“எனக்கு நேரமில்லை சம்யூ! என் ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிடேன் ப்ளீஸ்..!” வேண்டுமென்றே அவளை வருத்த வேண்டுமென்று திட்டமிட்டே அவளைச் செய்யச் சொன்னேன்.

“நீ ஒண்ணும் குழந்தை இல்லை விக்ரம்! நீயே எடுத்து வச்சிக்கோ! உனக்கு எது தேவைன்னு உனக்கு தானே தெரியும்?” எளிதாய் சொல்லி நகர்ந்துவிட்டாள்.

“இராட்சசி எனக்கு நீதான்டி வேணும்!” அறையதிரக் கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் நான் கத்தவில்லை. நிதானமாய் யோசித்தேன். எப்படியும் நான் இன்னொரு பெண்ணின் கழுத்தில் தாலிகட்டும் போது அவளுக்கு வலிக்குமே..? என என் மனம் குரூரமாய் சிந்தித்தது.

“சம்யூ! நீயும் கல்யாணத்திற்கு வர்ரியா?” பூனை போல் அவள் தோளில் நாடி பதித்து, மெதுவாய் கேட்டேன்.

“நான் எப்படிடா? என்ன சொல்லிட்டு வர்ரது?”

“என் ஃப்ரெண்டா வா!”

“நமக்குள்ளே இருக்கிறதுக்கு பேரு ஃப்ரெண்ட்ஷிப்பா? உன்னை மாதிரி பசங்களுக்கு என்ஜாய் பண்ண மட்டும் தான் நாங்க வேணும். கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அடக்கம் ஒடுக்கமா, குனிஞ்ச தலை நிமிராத ஃப்ரெஷ்ஷான பொண்ணா வேணும்ன்னு எதிர்பார்ப்பீங்க! பொண்டாட்டி வந்ததும் ஃப்ரெண்ட்டுன்னு ஈஸியாய் கழட்டி விட்டுடுவீங்க! என்னால் அப்படியெல்லாம் நடிக்கக் கூட முடியாது. என்னையெல்லாம் கூப்பிடாதே..! ஹேப்பி மேரீட் லைஃப்.. இங்கேயே விஷ் பண்ணிடுறேன்.!” எல்லா கேள்விக்கும் நாக்கு நுனியில் அவள் பதில் வைத்திருந்தது என்னிடம் எரிச்லைக் கிளப்பியது.

“ம்ப்ச்..! சம்யூ.. ப்ளீஸ் டி..!” கடைசி ஆயுதமாய் கெஞ்சிப் பார்த்தேன்.

“இப்போ நீ என்ன நினைக்கிறே? நான் நீ தான் வேணும்ன்னு சொல்லணும்ன்னு நினைக்கிறியா?” சரியாய் என் மனதைக் கணித்து மிஞ்சித் தொலைத்தாள் இராட்சசி.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது.. எனக்காக வா! அப்பறம் உன் இஷ்டம்.!” எனச் சொல்லிவிட்டு நான் வெளியேற முயல, என் கரம் பிடித்துத் தடுத்தாள் சம்யுக்தா. இது தான் வேண்டும். நான் இதைத்தான் எதிர்பார்த்தேன். நான் இன்னொரு பெண்ணை மணக்கச் சம்மதித்திருந்தாலும் கூட, சம்யூ ‘உனக்காக வர்ரேன் டா..’ எனச் சொல்லும் ஒருவார்த்தைக்காக என் ஆண் மனம் கர்வத்துடன் காத்திருந்தது.

“நீ என்ன ப்ளான் பண்ணுறேன்னு எனக்கு தெரியும் டா! என்னால் வர முடியாது. அப்படியே வந்தேன்னா வீ ஆர் இன் அ ரிலேஷன்ஷிப்ன்னு உண்மையை உன் ஃபேமிலி கிட்டே சொல்லிடுவேன். இஸ் தேட் ஓகே?” நிமிர்வாய் தைரியமாய் சொன்னாள் சம்யுக்தா. என்னைப் பழி வாங்குகிறாளோ? என்று கூடத் தோன்றியது எனக்கு.

“ரிவென்ஞ் எடுக்கிறியா சம்யூ? நீ என் கூட ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் தான் பட வாய்ப்பு தர்ரேன்னு சொன்னதுக்காக பழி வாங்க நினைக்கிறியா? உனக்கே தெரியும், நான் உன்னைத் தவிர எந்தப் பெண்ணையும் என் அந்தரங்க எல்லைக்குள் அனுமதிச்சதே இல்லை.” என நான் சொன்னதைக் கேட்டு சத்தமாக சிரித்தாள் சம்யுக்தா.

“என்னடா பெரிய தியாகி மாதிரியெல்லாம் பேசறே? எனக்கு உன்கிட்டே தேவை இருந்தது. உனக்கு என்கிட்டே தேவை இருந்தது. அதைவிட இன்னொரு விஷயமும் எனக்குத் தெரியும். ஏற்கனவே வேற நபர்களோட ரிலேஷன்ஷிப்பில் இருக்கிற எந்தப் பொண்ணையும் உனக்கு பிடிக்கலை! ஸோ, நீ என்னை யூஸ் பண்ணிக்கிட்டே! நல்லா யோசிச்சு பாரு, இப்போ கல்யாணம் பண்ணப் போற பொண்ணை நீ ஏமாத்த தானே செய்ற? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா?” என அவள் திருப்பிக் கேட்டதில், கோபம் என் உச்சந்தலைக்கு ஏறியது.

“என்ன இருந்தாலும் நான் ஒரு ஆண்? நான் எப்படி வேணும்னாலும் இருக்கலாம். ஆனால் ஒரு பெண் இப்படி பேசுவதே தப்புத்தான்!” நேரடியாகவே அவளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினேன் நான்.

“வாவ் வெர்ரி குட் மூவ்! என் சூழ்நிலையைப் பயன்படுத்தி, என்னோட கொஞ்சிக் குலாவும் போது, நான் பொண்ணுன்னு தெரியலையா டைரக்டர் சார்.? நீங்க நிர்பந்திக்கிறது தப்பு இல்லை! நான் சம்மதம் சொன்னது தான் தப்பா? நீங்க நினைச்சிருந்தால் ஹோட்டல் ரூமுக்கு வரச் சொல்லாமலே வாய்ப்பு கொடுத்திருக்கலாமே டைரக்டர் சார். ஈஸியாய் எதிரில் இருக்கிறவங்களை குற்றம் சொல்லிட்டு நீங்க தப்பிச்சுடுவீங்க! நான் ஆண்ங்கிற ஆணவமே ரொம்ப ஆபத்தான மனநிலை.. முடிஞ்சால் மாத்திக்கோங்க!” என அவள் சொன்னதும் இதுவரை நான் இழுத்துப் பிடித்து வைத்திருந்தக் கோபம் எல்லையைக் கடந்திருந்தது.

“என்னடி பெரிய யோக்கியம் மாதிரி பேசுறே? இப்படிப் பட்டவள், என்னத்துக்கு நடிக்க வரணும்?! நடிக்க வரும்போது இதெல்லாம் தெரிஞ்சு தானே வந்தே? உன்னை கட்டாயப்படுத்தின மாதிரி பேசறே? ஊரு பார்க்க, உடம்பைக் காட்டறவளுக்கெல்லாம் பேசுறதுக்கு தகுதியே இல்லை.” இப்படிக் கேட்டால் அவளுக்கு வலிக்குமென்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவளுக்கு வலிக்க வேண்டுமென்பதற்காகவே கேட்டேன் என்பது தான் நிஜம்.

“ஓ.. எல்லா துறைகளிலும் நீங்க மட்டுமே முன்னாடி இருக்கணுமா? பெண்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்க டைரக்டர் சார்! ஹீரோயினை மையப்படுத்திய கதைகளோ, ஹீரோயின் இல்லாத கதைகளோ வெற்றி பெறுவதே இல்லையே? உங்களை மாதிரி இயக்குநர்களின் பணப்பை நிறையணும்ன்னா என்னை மாதிரி நடிகைகள் இருக்கணும்ங்கிறது கட்டாயம் சார். சினிமா என்னோட தொழில், சினிமாவுக்காக நான் உடை உடுத்தறதை வைத்து என் தனிப்பட்ட வாழ்க்கையை முடிவு செய்யாதீங்க! தயவு செய்து ஆள் பாதி ஆடை பாதின்னு தத்துவம் பேசிடாதீங்க! அப்படி நியாயம் பேசற ஆளாய் இருந்தால், க்ளிவேஜ் தெரியாமல் ஹீரோயினுக்கு காஸ்ட்யூம் டிஸைன் பண்ண சொல்லலாமே.?! உங்களால் முடியாது. செய்யவும் மாட்டீங்க! அப்படிச் செய்றதுக்கு தைரியம் வேணுமே? அதுக்கு நீங்க எங்கே போவீங்க?”

துளி பதற்றமில்லாமல் எதிர்கேள்வி கேட்டவளைப் பார்க்கக் கோபமாய் வந்தது. கடவுள் இவளை ஊமையாய் படைத்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் தயாராய் பதில் வைத்திருக்கிறாள். இவள் பதில் பேசவே முடியாத அளவிற்கு ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும். என என் மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். அவள் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு பதில் எதுவுமே தெரியாததால், முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு கோபமாய் வெளியேறியிருந்தேன். நான் இதுவரை இயக்கிய படங்களில், மூன்று படங்கள் சம்யூவை வைத்துதான் இயக்கியிருந்தேன்.

மூன்றுமே மெகா ஹிட் திரைப்படங்கள். அவளுக்கு நல்ல நடிகை என்ற அடையாளத்தைப் பெற்றுத் தந்ததும் நான் இயக்கியப் படங்கள் தான்.

‘கொஞ்சமும் நன்றி இல்லாமல் பேசுகிறாளே இராட்சசி!’ மனதில் நினைத்துக் கொண்டு, இன்னும் கொஞ்சம் அவள் மீதான கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டேன்.

******

நான் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, தன் உடமைகளை மூட்டைக்கட்டி கிளம்புவதற்குத் தயாராய் இருந்தாள் சம்யுக்தா.

“சம்யூ! எங்கே கிளம்புறே?” நான் தான் கோபம் கொண்டு வெளியே கிளம்பினேன் என்பதையும் மறந்து மீண்டும் அவளிடமே போய் நின்றேன் நான். என்னைத் திட்டமிட்டே அவள் முன்னால் நிறுத்தினாள் இராட்சசி.

“சம்யூ! கேட்கிறேன்ல்ல? பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தால் என்ன அர்த்தம்?” அவளின் அமைதி என் மனதைக் கொஞ்சம் ஆட்டிப் பார்த்தது.

“பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னு அர்த்தம் விக்ரம்!” என்ற அவள் பதிலில்,

‘யாரிடமிருந்து இவள் பதில் சொல்லப் பழகுகிறாள்? நொடிக்கு நொடி ஊசியால் குத்திக் கொண்டே இருக்கிறாள்?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

“எங்கேன்னு கேட்கிறேன்ல்ல?” உடைகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தவளை என்னை நோக்கித் திருப்பி அவள் கழுத்தில் முகம் புதைத்தேன்.

“தள்ளி நில்லுடா! உன் பார்வை என்னைத் தொடராத இடத்திற்குப் போகலாம்ன்னு இருக்கேன்!” என்னைத் தள்ளிவிட்டு மீண்டும் தன் பணியைச் செய்துக் கொண்டிருந்தாள். முதன் முறையாய் அவளின் அலட்சியம் என்னைக் கொஞ்சம் அதிகமாகவே பாதித்தது.

“அப்போ இது ரிவென்ஞ் தான் இல்ல?”

“ஹேய்.. நான் உன்னைப் பழி வாங்கறேன்னு நினைக்கிறியா? உனக்குக் கல்யாணம் ஆகப் போகுது டா! இதுவரை எப்படியோ, இனியாவது உன் வொய்ஃப்க்கு உண்மையாய் இரு.”

“ம்ப்ச்.. சம்யூ! எனக்கு நீ தான் வேணும்! உனக்கே அது நல்லா தெரியும்!”

“நான் தான் வேணும்ன்னா என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா? உன்னால் அது முடியுமா? என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் கௌரவம் என்ன ஆகும்? நாம லிவ்-இன்னில் இருக்கிறது அரசல் புரசலா வெளியே தெரிஞ்சாலும், ஆமா! வீ ஆர் இன் அ ரிலேஷன்ஷிப்ன்னு உன்னால் தைரியமாய் சொல்ல முடிஞ்சுதா? நம்மளைப் பத்தி வந்த எல்லா செய்தியும் உன்னைப் பொருத்தவரை வெறும் வதந்தி தானே? ஜஸ்ட் காஸிப்! நானும் வெறும் வதந்தியா இருந்துட்டு போறேன் விக்ரம்.!”

“என்னைப் பகைச்சுக்கிட்டு இந்த சினிமாவில் உன்னால் சர்வைவ் பண்ண முடியாது சம்யூ! என் ஒருத்தன் கிட்டேயே உன்னால் அட்ஜஸ்ட் பண்ண முடியலையே.. ஊரில் இருக்கிற அத்தனை பேரும் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பான். உனக்குப் பரவாயில்லையா?!” அவளை நிறுத்தி வைப்பதற்காகத்தான் சொன்னேன்.

“நீ கத்துக் கொடுத்தப் பாடங்கள் இன்னும் ஞாபகம் இருக்கு விக்ரம்! சமாளிச்சுடுவேன். நீ கவலைப் படாதே!” என்னை அழுத்தமாய் பார்த்தபடி அவள் சொன்னாள். அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் என்பது எனக்குப் புரியவே இல்லை.

“சம்யூ! நான் சொல்றதைக் கேளு!” மீண்டும் அவளை இழுத்து நிறுத்த முயன்றேன்.

“எனக்கு எந்த விளக்கமும் வேணாம் விக்ரம்! ஐ அம் லீவிங்!”
எனச் சொல்லிவிட்டு, பெட்டியை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

ஆம் சென்றுவிட்டாள் தான். அவள் சென்றதும் என் வீடு வெறிச்சோடிப் போனது. ஏதோ இருள் சூழ்ந்ததைப் போன்ற பிரம்மை என் மனதை ஆட்கொண்டது. அவளால் எப்படி என்னை விட்டுப் போக முடிந்தது? நான் அவளுக்கு முக்கியமில்லையா.? தீவைச் சூழ்ந்த கடல் போல் என் இதயப் பரப்பு முழுதும் அவள் மீதான கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் சூழத் துவங்கியது.

“என்னையே விட்டுட்டு போய்ட்டல்ல? நீ எப்படி நடிக்கிறேன்னு பார்க்கிறேன் டி! என்னை மீறி உன்னால் நடிச்சுட முடியுமா? ஒரேயொரு வதந்தியைக் கிளப்பி விட்டால் போதும், உன் கெரியர் க்ளோஸ்.! உனக்கு நான் யாருன்னு காட்டுறேன்டி! இந்த விக்ரம் யாருன்னு காட்டறேன்!” வீர ஆவேசமாய் எனக்கு நானே பேசியபடி, அலைபேசியைக் கரத்தில் எடுத்த நேரம், என் நண்பன் சித்தார்த் என்னை அழைத்தான்.

“விக்ரம்.! லொக்கேஷன் பார்க்க வர்ரியா இல்லையா? ரொம்ப நேரமா ப்ரடியூஸர் வெய்ட் பண்ணுறார்.!”

“லொக்கேஷன் நாளைக்கு தானே டா? இப்போ ஏன் கால் பண்ணுற?”

“நேரில் மட்டும் வந்தேன்னு வச்சிக்கோ.. உன்னைக் கொன்னுடுவேன். எதாவது கனவு உலகத்தில் வாழுறியா டா? முதலில் அந்த சம்யூவை கட் பண்ணி விடுன்னு சொன்னால் கேட்கிறியா? தேதி, கிழமை கூட மறந்து தொலைச்சுடு! பத்து நிமிஷத்தில் வந்து சேரு! நான் ப்ரடியூஸர் கிட்டே எதையாச்சும் சொல்லி சமாளிச்சு வைக்கிறேன். ஆனால் இந்த பெஸ்ட் ப்ரெண்ட்டுக்கு அஸிஸ்டண்ட் டைரக்டரா இருக்கிறதை போல் கொடுமை வேற எதுவும் இல்லை டா!”

“அப்போ இன்னைக்கு தான் செவ்வாய்க்கிழமையா? மறந்துட்டேன்டா சித்தார்த்.!”

“உனக்கு என்றைக்குத்தான் ஞாபகம் இருந்துச்சு.. வந்து சேருடா! அம்மா ஃபோன் பண்ணினாங்க! அவங்க கால் பண்ணினப்போ நீ எடுக்கலையாம்.. உன்னைக் கால் பண்ணச் சொன்னாங்க!”

“நான் என்னமோ குழந்தை மாதிரி.. எதுக்கெடுத்தாலும் உனக்கு ஃபோன் பண்ணுறாங்க? அவங்களுக்கு நான் புள்ளையா? இல்லை நீ புள்ளையான்னு தெரியலை. நீ ஏன்டா அவங்க கால் பண்ணினா எடுக்கறே?”

“என்னால் உன்னை மாதிரி பொறுப்பில்லாமல் இருக்க முடியாது டா இடியட்! நானும் ஃபோன் எடுக்கலைன்னா என்னமோ ஏதோன்னு நினைச்சு பதற மாட்டாங்க?” சித்தார்த்தின் கேள்வி எனக்கு நியாயமாகத்தான் பட்டது.

“சரிடா! ஃபோன் பண்ணி பேசறேன் போதுமா?” எரிச்சல் மிகுதியில் அலைபேசியை அணைத்துத் தூக்கி எறிந்தேன். இப்போது வீட்டிற்கு அழைத்தால் என்ன கேள்வி வரும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

“எப்போ கிளம்புறே விக்ரம்?” என்றக் கேள்வி தான் என் தாயின் வாயிலிருந்து வரும் முதல் கேள்வியாக இருக்கும். ஆனால் அந்தக் கேள்விக்கு பதில், இப்போதைக்கு என்னிடம் இல்லை என்பது தான் நிஜம்.
இந்த இராட்சசி என்னைத் தனியாய் தவிக்க விட்டுவிட்டு எந்தக் கவலையும் இல்லாமல் சென்றுவிட்டாள். அவளோடு வாழ்ந்து பழகிய வீடு எனக்கு அந்நியமாய் வேற்றுக் கிரகம் போல் காட்சியளித்தது.

இந்த உலகம் மொத்தமும் அழிந்து போய் நான் மட்டும் மிச்சமிருப்பதைப் போன்ற பிரம்மை தோன்றவாரம்பித்தது. அவள் இல்லாமல் அரை மணி நேரத்தைக் கூடக் கடக்க முடியாத நான், காதல் எனப் புரியாத, காமம் என நானே பெயரிட்டுக் கொண்ட, அவள் மீதான நேசங்களை மனதில் சுமந்துக் கொண்டு, எப்படி இன்னொரு பெண்ணின் கழுத்தில் தாலிக்கட்டப் போகிறேன்.? யோசிக்கவே பயமாக இருந்தது. மலையைத் தூக்கித் தலையில் வைத்ததைப் போல் தலை வலிக்கத் துவங்கியது. சித்தார்த் வரச் சொன்னதையும் மறந்துவிட்டு, தலையில் கை வைத்து நான் அமர்ந்திருக்க, மீண்டும் அலைபேசி அழைப்பு.

“டேய்! நான் தான் வர்ரேன்னு சொன்னேன்ல்ல? நொய் நொய்ன்னு ஏன் உயிரை எடுக்கிறே?” அழைத்தது யாரெனப் பார்க்காமல் கத்தியிருந்தேன்.

“டேய் லூசு.. நான் கவி டா! என்னத்துக்குடா இந்தக் கத்து கத்தறே? உன்கிட்டே வேலை செய்றவிங்க பாவம் டா சாமி!” என்ற சலிப்பான குரலில் என் இதழோரம் புன்னகை நெளிந்தது. என் ஒரே தங்கை, என் தோழி, என் வழிகாட்டி எல்லாமுமாய் இருந்தவள் இந்தக் கவி தான். தன் கணவனைக் காதல் எனும் பெயரில் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கும் லேடி ஹிட்லர் இவள்.

“ஏய் கவி! எப்படி இருக்கே? பாப்பா எப்படி இருக்கா?”

“பாப்பாவை அவர் தான் தூக்கி வச்சிருக்காரு.. நான் நல்லா இருக்கிறதெல்லாம் இருக்கட்டும்? நீ எப்போ கிளம்புற? கல்யாணத்துக்கு ஒரு வாரந்தேன் கிடக்கு.. பொண்ணு பார்க்கக் கூட நீ வரவே இல்லை? அம்மா ரொம்பவும் சங்கடப்படுறாக தெரியுமா?”

“என்ன கவி, எல்லாம் தெரிஞ்சும் நீயே இப்படி பேசுற? நான் என்ன ஆஃபீஸ் ஜாப் பார்க்கிறேனா? நான் வேலைப்பார்க்கிறது சினிமாவில். இங்கே நேரம் காலமெல்லாம் கிடையாது. வேலை நிறைய இருக்கு. கல்யாணத்திற்கு முதல் நாள் சரியா வந்துடுறேன்.!”

“கல்யாணத்துக்கு முதல் நாளா? டேய், நீ யாரோட கல்யாணத்துக்கோ விருந்தாளியா வரலை! உனக்குத்தேன் கல்யாணமுன்னு நினைப்பு இருக்குதா இல்லையா?”

“எல்லாம் இருக்கு கவி! என் வேலையையும் புரிஞ்சுக்கோங்க! வர முடிஞ்சால் வர மாட்டேனா?” கொஞ்சம் கோபமாய் குரலுயர்த்தினேன்.

“என்கிட்டே குரலுயர்த்தி ஒண்ணும் ஆகப் போறதில்லை! அம்மா ரொம்பவும் சங்கடப் படுறாக! நம்ம வீட்டில் நீ தான் ஒரே ஆண்பிள்ளை! கடைசி விஷேஷம் இது! எல்லாருக்கும் ஆசை இருக்காதா? ஊரே உன்னையைத் தான் கேட்குது. எல்லாரும் நீ வருவியா.. வருவியான்னு எதிர்பார்த்துட்டு இருக்காங்க! பிறகு உன் விருப்பம். ஆயிரம் கோபம் மனஸ்தாபம் இருக்கட்டும். அதுக்காக நீ இங்கே வராமல் இருக்கிறது தப்பு! நான் சொல்றதைச் சொல்லிட்டேன்!”

“இன்னும் அவன் பிடிச்ச பிடியில் தான் இருக்கானா? கல்யாணத்திற்குக் கூட வர மாட்டேன்னு வீம்பு பிடிக்கிறவன், என்னத்துக்கு கல்யாணத்துக்கு சம்மதிச்சான்.? எல்லாம் உன்னைச் சொல்லணும்! செல்லம் கொடுத்து அவனைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிட்டே! நான் அப்பவே சொன்னேன், இந்த சினிமாவெல்லாம் நமக்கு ஒத்து வராதுன்னு.. யாரு கேட்டிங்க? அவன் என்னடான்னா சென்னையில் போய் உட்கார்ந்துக்கிட்டு எல்லாரையும் ஆட்டிப் படைக்கிறான். கல்யாணத்திற்கு முன்னாடி அவன் இங்கே வந்து சேரலை.. அப்பறம் இருக்கு.”

கவிதா அலைபேசி இணைப்பைத் துண்டிப்பதற்கு முன் பின்னாலிருந்து என் தந்தை பேசியதெல்லாம் வார்த்தை மாறாமல் என் செவிகளில் விழத்தான் செய்தது. ஆனால் அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என்னைப் பெற்றார் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்குப் பிடித்ததை மட்டுமே என்னால் செய்ய முடியாது. நான் ஒன்றும் தொழிற்சாலையில் வடிவமைக்கப் பட்ட பொம்மையோ இயந்திரமோ இல்லை. நான் சதையும் இரத்தமுமாய் உயிரோடு இருக்கும் மனிதன். நான் செய்வது எனக்குப் பிடித்ததாகத்தான் இருக்க வேண்டும். நிச்சயமாய் நான் செய்வது எனக்குப் பிடித்ததாகத்தான் இருக்கும்.

எனக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும் என முடிவெடுத்த பின் ஒருநொடி கூட நிற்கவில்லை, அவசரமாய் குளித்துக் கிளம்பி, கதவைப் பூட்டிவிட்டு வெளியே வந்தேன்.

ஞாபகமாய் சித்தார்த்துக்கு அழைத்து அவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, அவனின் அக்கறையான திட்டுக்களைப் பெற்றுக் கொண்டு, என் வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். இத்தனை நேர கடின மனநிலை மாறி, உற்சாகம் உள்ளத்தை நிறைத்தது.

நான் செல்ல வேண்டும் என முடிவெடுத்தது என் திருமணத்திற்கு அல்ல. என் மனம் எனக்குத் தெரிந்த பிறகு, அந்தத் திருமணம் எனக்குத் தேவையும் இல்லை. நான் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்தது, என் இதயப் பரப்பில் கல்லெறிந்து, பேரன்பின் பெருஞ்சலனங்களை நிகழ்த்திவிட்டு காணாமல் போன என் சம்யூவைப் பார்க்கத்தான்.

“எனக்கானவளே..!
நீதான் கிட்ட வர்ரியா?
தெரிஞ்சா செஞ்சேன்…
மன்னிப்பே கிடையாதா…
உடனே என்ன உதறிப்போனா…
சரியா..?
இனிமே நானும் உயிரும்
அட தனியா..!
என் சொகமே…
என் மொகமே…
எங்கேயோ…
தொலைஞ்சவளே.!
என் வரமே…
என் நிறமே…
ஏழாக வளைஞ்சவளே..!”

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்