
அத்தியாயம் 4
மகள் கொடுத்த காபியை அருந்தி முடித்தவர் தன்னையும் சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வர உணவு மேஜையில் அமர்ந்து கோகிலாவும் வசந்தியும் உணவு உண்டு கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தவர் எதுவும் பேசாமல் தானும் வந்து அமரச் சூடான சப்பாத்திகளை கொண்டு வந்து தங்கையின் தட்டில் வைத்தபடி தந்தையை பார்த்தவள் அவருக்கும் தட்டை எடுத்து வைத்துப் பரிமாற முயன்றவளை தடுத்தவர். தானே தட்டை எடுத்து வைத்து அருகில் இருந்த ஹாட் பேக்கை திறந்தவர் அதில் நிறைந்திருந்த சப்பாத்திகளை பார்த்துவிட்டு,
“அதுதான் இவ்வளவு சப்பாத்தி இருக்கே மா. இன்னும் ஏன் செய்துட்டு இருக்கிற.?” என்று கேட்டவருக்கு எந்தப் பதிலையும் கூறாமல் தங்கையையும் அன்னையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தன் கையில் இருந்த தோசை கரண்டியை வைப்பதற்காகச் சென்றவளை பார்த்தவர் யோசனையுடன் மனைவியைப் பார்க்க.
“அது ஹாட் பாக்ஸ்ல இருக்கிற சப்பாத்தி வசந்திக்கு பிடிக்காது. அதுதான் அவளுக்கு மட்டும் சூடா ரெண்டு கொண்டு வரச் சொன்னேன். அவ சாப்பிடுறதே ரெண்டு தான் அது அவளுக்குப் பிடிச்ச மாதிரி சாப்பிட வேணாமா.?” என்று சத்தமாகக் கூறியவர்.
“இது எப்போதும் நடக்கிறது தானே. இப்ப என்னமோ புதுசா ஒன்னு ஒன்னையும் கேட்டுகிட்டு இருக்காரு.’ என்று வாய்க்குள்ளாகவே முணுமுணுத்தவரை பார்த்து முறைத்தவர். அதே முறைப்புடன் தன் சின்ன மகளையும் நோக்க. அதற்குள் வேகமாக உணவை வாய்க்குள் அடைத்து எழுந்தவள் தந்தையின் கோபத்திற்கு பயந்து தன் அறையை நோக்கி ஓடிச் சென்றாள்.
“இப்படி வசுந்தராவுக்கு என்ன பிடிக்கும்.? அவ எப்படி சாப்பிடுவான்னு ஏதாவது தெரியுமா உனக்கு.?” என்று கேட்ட கணவனுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அசால்ட்டாக முகத்தைத் திருப்பியவர் தன் உணவில் கவனமாக இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டார். அதற்குள் வசுந்தராவும் வர
“வாடா மா நீயும் வந்து உட்கார்.” என மகளைத் தன் அருகில் அமர வைத்து அவளுக்குத் தட்டை எடுத்து வைத்து இரண்டு சப்பாத்திகளோடு மகள் செய்திருந்த கொண்டைக்கடலை குருமாவையும் அவள் தட்டில் ஊற்றியவர் சாப்பிடுமாறு கண்காட்ட அதுவரை இருந்த சோர்வு மறைந்ததை போல உணர்ந்தாள் பெண் அவள்.
சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் நோட்டிபிகேஷன் சத்தம் வந்ததில் தன் அலைபேசியை எடுத்துப் பார்க்க. அதில் தவறிய இரண்டு அழைப்புகள் இருந்தன. யார் என்று ட்ரூ காலரில் பார்க்க அது டாக்டர் பிரபு எனக் காட்டியது. யார் இந்த டாக்டர் பிரபு என்ற சிந்தனையுடன் அலைபேசியை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தவரைப் பார்த்த கோகிலா.
“அப்படி அந்தப் போன்ல என்ன இருக்குன்னு அதையே திரும்பத் திரும்பப் பார்த்துட்டு இருக்கீங்க.?” எனக் கேட்டார்.
“சாயந்திரம் அஞ்சு மணிபோல டாக்டர் பிரபு என்கிறவர் கிட்ட இருந்து ரெண்டு அழைப்பு வந்திருக்கு. இன்னைக்கு முழுக்க மீட்டிங்ல இருந்ததனால நான் கவனிக்கவே இல்ல. இப்பதான் பாக்குறேன் அதான் யார் என்னன்னு யோசிச்சிட்டு இருக்கேன். .”
“டாக்டரா.? நீங்க எந்த டாக்டர் கிட்டயாவது அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினீங்களா என்ன.?” என்று கேள்வி கேட்டவர். பின்பு அவரே
“ஆனா அப்பாயின்மென்ட் வாங்குன பேஷன்ட் கிட்ட எல்லாம் போன் பண்ணி கேக்குறாங்களா என்ன டாக்டருங்க எல்லாம் இப்போ.?” என்று சிந்தனையுடன் சத்தமாக கூறியவர்.
“சரி திரும்ப நீங்கப் போன் பண்ணி என்ன ஏதுன்னு கேட்டுப் பாருங்க.?”. என்றவருக்கு.
“அறிவு இருக்கா.? மணிய பாத்தியா.? அது சரி அறிவு இருந்தா நீ ஏன் இப்படி இருக்க போற.?” என்றவர்.
“காலைல போன் பண்ணி பாக்கணும்.” என்று கூறியபடியே தன் உணவை முடித்து எழுந்து சென்றார்.
கணவன் கூறியதில் அவரை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தவரைக் கவனிக்கதான் அங்கு யாரும் இல்லை.
காலையில் ரகுபதி எழுந்து வெளியில் வரும்போது வீடு பரபரப்புடன் காணப்பட்டது. எப்பொழுதும் போல வசந்தரா சமையலறையில் பிஸியாகச் சமைத்துக் கொண்டிருக்க. கல்லூரி செல்லும் வயதிலும் மகளை அமர வைத்து அவளுக்குத் தலை பின்னிக்கொண்டிருந்தார் கோகிலா. அதைப் பார்த்து ரகுபதி பெரு மூச்சை இழுத்து விட்டபடி சோபாவில் வந்த அமர. இவர் வந்த அரவத்திலேயே அவருக்கான காபியை எடுத்துக்கொண்டு அவரை நோக்கி வேகமாக வந்த வசுந்தரா அவரிடம் கொடுத்துவிட்டு, அதே வேகத்தில் மறுபடியும் சமையலறையில் சென்று அடைந்து கொண்டாள்.
“ஏன் கோகிலா.? இப்ப இவளுக்கு உட்கார்ந்து தலை வாருவது தான் முக்கியமா.? அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் உதவி செய்யக் கூடாதா..? அவளும் தானே வேலைக்குப் போகணும். ஏன் வசந்தி.? உன் அக்கா தானே அவ. காலைல எந்திரிச்சு எவ்வளவு பொறுப்பா எல்லா வேலையும் பார்க்கிறாள். நீ அவளுக்குக் கொஞ்சம் கூட மாட ஒத்தாசை செய்தால் என்ன.?”என்ற தந்தையின் கேள்வியில் அதிர்ந்து அவரைப் பார்த்தவள். கோபமாக இருக்கும் தந்தைக்கு எந்தப் பதிலையும் கூறாமல் தன்னைக் காப்பாற்றுமாறு அன்னையின் புறம் பார்வையை செலுத்த.
“இப்ப எதுக்கு காலையில் எந்திரிச்சு வந்து தேவையில்லாததெல்லாம் பேசிட்டு இருக்கீங்க. காபி வந்திருச்சா..?பேசாம குடிங்க.” என்றவர்.
“போ குட்டி உனக்குக் காலேஜுக்கு நேரம் ஆகுதுல போய்க் கெளம்பு வேகமா.” என்று மகளையும் சாமர்த்தியமாக அனுப்பினார். அவரைக் கோபமாகப் பார்த்து ஏதோ கூற வந்தவரைக் களைத்தது அவரின் அலைபேசி. எடுத்துப் பார்த்தவர் நண்பர் ஒருவர் அவரின் மகள் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க கட்டாயமாகக் குடும்பத்துடன் வருவதாக வாக்களித்துவிட்டு அலைபேசியை வைத்தார்.
“நேத்து யாரோ டாக்டர் போன் பண்ணாங்க சொன்னிங்களே அவங்களுக்கு போன் பண்ணி என்ன எதுன்னு கேட்கிறதுதானே.?”என்று ஞாபகப்படுத்திய கோகிலாவிற்கு.
“மணி இன்னும் எட்டு கூட ஆகல
அதுக்குள்ள பண்ணனுமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.” என்றார் அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு.
“அவங்க எல்லாம் டாக்டருங்க தானே. இன்னுமா தூங்கிட்டு இருக்க போறாங்க.? அதெல்லாம் எழுந்திருப்பாங்க.நீங்கப் போன் பண்ணி பாருங்க.”என்றார் மறுபடியும் கோகிலா.
இவர்கள் இங்குப் பேசிக் கொண்டிருக்கும்போதே சூடான காய்கறி கிச்சடி கொண்ட ஹாட் பாக்ஸை உணவு மேஜையில் வைத்தவள் சிறிய கிண்ணத்தில் தேங்காய் சட்னியையும் அதன் பக்கத்தில் வைத்துவிட்டு தன் அறையை நோக்கி வேகமாகச் சென்றாள் குளித்து வருவதற்கு.
வசுந்தரா அறைக்குள் செல்வதற்கும் வசந்தி அறையில் இருந்து வெளி வருவதற்கும் சரியாக இருந்தது. சின்ன மகள் வருவதை பார்த்த கோகிலா அவளுக்குக் காலை உணவு எடுத்து வைக்க செல்ல. ரகுபதியும் டாக்டர் பிரபு என்று இருந்த அலைபேசி எண்ணை அழுத்திவிட்டு அந்தப்புறம் எடுப்பதற்காகக் காத்திருந்தார்.
அலைபேசி அடித்து முடியும் தருவாயில்
“ஹலோ டாக்டர் பிரபு…” என்ற தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கனமான குரல் இவர் காதில் வந்து மோதியது.
“ஹலோ டாக்டர். நான் ரகுபதி.”என்று இவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள.
“சரி சொல்லுங்க என்ன விஷயம்.?” என்றவரின் கேள்வியில் குழம்பியவராக.
“நேத்து சாயந்திரம் இந்த நம்பர்ல இருந்து இரண்டு முறை எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதுதான் யார் என்னன்னு கேட்கலாம்னு போன் பண்ணினேன்.? நேற்று கொஞ்சம் வேலையில் இருந்ததால் உடனே என்னால் அலைபேசியை எடுக்க முடியவில்லை.” என்று தன்னிலை விளக்கம் கொடுக்க.அப்போதே பிரபுவிற்கு தான் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது நினைவில் உரைத்தது.
“ஓஹ்..! ரகுபதியா..? நான் நம்பரை சரியாகப் பார்க்காமலே யாரோ பேஷண்ட் தான் பேசுறாங்கன்னு நினைச்சு பேசிட்டேன். சாரி, சாரி.” என்றார் சற்று இலகுவான குரலில்.
“ஐயோ.! எதுக்கு டாக்டர் சாரி எல்லாம்.?” என்றார் இவரும் சற்று இலகுவாகவே.
“நீங்க யார் என்னன்னு எனக்குத் தெரியலையே டாக்டர்.?” எனச் சற்று தயக்கத்துடன் கேட்ட ரகுபதி.
“இதற்கு முன் நாம சந்திச்சிருக்கோமா.?”என்று கேட்டார் சந்தேகத்துடன்.
“இல்லை, இல்லை நாம இதுவரை சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் விரைவில் சந்திப்போம்னு நினைக்கிறேன்.” என்றார் பிரபு,லேசான புன்னகை குரலில்.
“புரியல டாக்டர்.” என்றவருக்கு பதிலாக.
“வசுந்தரா உங்க பொண்ணு தானே.?” எனக் கேட்க
“ஆமா.” என்றவருக்கு பெரும் குழப்பம்.
“வசுந்தராவை பற்றித் தான் உங்க கிட்ட பேசணும்.”
“வசுந்தராவை பற்றிப் பேச என்ன இருக்கு.?” என்றவரின் குரல் ஏனோ லேசாக நடுங்கியது.
மகளுக்கு ஏதேனும் உடல் நிலையில் பிரச்சனையோ அதற்காகத் தான் தன்னிடம் சொல்லாமல் மருத்துவரை அணுகியிருப்பாளோ அவளைப் பற்றிய விஷயத்தை அவளிடம் கூற விரும்பாமல் இந்த மருத்துவர் தன்னிடம் கூற முயல்கிறாரோ என அதற்குள்ளாக அவரின் உள்ளம் எங்கெங்கோ சுற்றி வந்து அவர் கூறப்போகும் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தது. பயத்தில் அதிவேகமாகத் துடிக்கும் இதயத்துடன்.
வசுந்தரா என்ற பெயர் காதில் கேட்டதும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வசந்தியும் அவளின் அருகில் அமர்ந்திருந்த கோகிலாவும் இவரின் புறம்பாகத் திரும்பி என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை கவனிக்க ஆரம்பித்தார்கள்.
மகளின் பெயரைக் கேட்டதும் அதற்கு மேல் அமர்ந்திருக்க முடியாமல் கணவனை நோக்கி எழுந்து வந்தவர். “என்னாச்சு…?” எனக் கேட்க. அமைதியாக இருக்கும்படி அவருக்குச் சைகையில் கூறிய ரகுபதி.
” என்ன சொல்றீங்க டாக்டர்.? வசுந்தராவை பற்றி எதுக்கு கேக்குறீங்க.? அவளுக்கு எதுவும் பிரச்சனையா.?”என்றார் மறுபடியும்.
“அச்சச்சோ.! அப்படியெல்லாம் ஒன்னும் இல்லங்க. டாக்டர்னாலே பிரச்சனை தானா.? நோய்பற்றி மட்டும்தான் நாங்க பேசுவோமா.? நல்ல விஷயங்களும் பேசுவோம்.”என்றார் சற்று சத்தமாகச் சிரித்தபடி. அவரின் சிரிப்பு குரலில் நிம்மதி பெற்றவராக இவர் அமைதியாக இருக்க.
“உங்க மகள் வசுந்தராவை என் மகன் சஞ்சய்க்கு திருமணம் முடிக்கப் பேசுவதற்காகத் தான் உங்களுக்கு அழைத்திருந்தேன்…” என்று விஷயத்தைக் கூறியிருந்தார் பிரபு. இவர் பேசும்போது அவரின் அருகில் வந்து அமர்ந்து அவர் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார் அனுபமா.
“கல்யாணமா.?”என்று இவர் யோசனையுடன் மருத்துவராக இருப்பவர் எப்படி தன் வீட்டில் சம்பந்தம் வைக்க முன் வருகிறார் என்பது புரியாமல் இழுக்க.
திருமணம் என்பது காதில் விழுந்தவுடன்
“என்னது வசுந்தராவுக்கு டாக்டர் பையனோட திருமணமா.?”என்று அதிர்வுடன் வாயில் கைவைத்து, உண்ணுவதை பாதியில் நிறுத்தி, எழுந்து நின்று விட்டாள் வசந்தி. அவளின் அதிர்வில், தன்னை அதிர்விலிருந்து மீட்டுக் கொண்டார் ரகுபதி.
“இல்லை எனக்குப் புரியல டாக்டர்.” என்று மறுபடியும் இவர் கேட்க.
“உங்க பெண்ணை என் பையன் பார்த்து இருக்கான். அவனுக்குப் பிடிச்சிருக்கு போல. எங்க கிட்ட சொன்னான். அது தான் நாம மேற்கொண்டு பேசலாம் என்று உங்களுக்கு அழைத்திருந்தேன்.”என்று தன்னிலை விளக்கத்தை அவருக்குப் பொறுமையாகக் கொடுக்க, அப்போதே சற்று ஆசுவாசமடைந்தார் ரகுபதி.
“நீங்க இன்னைக்கு ஃப்ரீனாச் சொல்லுங்க. ஈவினிங் உங்களை மீட் பண்றேன்.”
“சரிங்க டாக்டர். என் வேலைகளைக் கொஞ்சம் பார்த்துவிட்டு எப்போது.? எங்கே.? என்று நானே உங்களுக்குப் போன் பண்ணி சொல்றேன்.” என்று இவரும் தன்மையாகவே கூறிவிட்டு அலைபேசியை அணைத்து இருந்தார்.
ரகுபதி பேசிக் கொண்டிருப்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த கோகிலா. அவர் அலைபேசியை அணைத்ததும்,
“என்ன ஆச்சு.? வசுந்தரா, கல்யாணம் அப்படின்னு பேசிட்டு இருந்தீங்க. யாருக்கு கல்யாணம்.? யார் அந்த டாக்டர் என்ன சொல்ல வராரு அவரு.?” என்று தொடர் கேள்வியால் குடைந்தெடுக்க. யோசனையில் ஆழ்ந்திருந்த ரகுபதியும்,
“டாக்டர் பிரபுன்னு நேத்து போன் பண்ணாருன்னு சொன்ன இல்ல. அவர்தான். அவங்க பையனுக்கு வசுந்தராவை பொண்ணு கேக்குறாங்க.”
“என்னது டாக்டர் வீட்ல இருந்து இவளைப் பொண்ணு கேக்குறாங்களா.?”
“ஆமா”என்றார் அவரும் யோசனையுடனே
“அது எப்படி அவங்களா கேப்பாங்க. அதுவும் திடீர்னு.?” என்று சத்தமாகக் கேட்டவரை பார்த்த பின்பே ரகுபதி சூழ்நிலையை உணர்ந்து.
“எப்படின்னா.? எங்கேயாவது வசுந்தராவை பார்த்து இருப்பாங்க. அவங்களுக்கு பிடிச்சிருக்கும் அதுதான் யாரு என்னன்னு தெரிஞ்சுகிட்டு பேசுறாங்களோ.? என்னவோ.? என்றார் விளக்கும் விதமாக.
“அப்படி பார்த்தவுடன் பிடிக்கிறதுக்கு அவகிட்ட என்ன இருக்கு.?” என்று சற்று பொறாமை குரலில் வசந்தி கேட்க. அவளை நோக்கிக் கோபமாகத் திரும்பிய ரகுபதி பேச ஆரம்பிப்பதற்குள்ளாகவே அப்போதுதான் வேலைக்குச் செல்லக் கிளம்பி வந்த வசுந்தராவை பார்த்த கோகிலா.
“ஏன்டி.? இதுக்கு தான் சீவீ சிங்காரிச்சி வேலைக்குப் போறேன்னு கிளம்பி போறியா நீ.” என்று சாட்டையாகக் கேள்வியைத் தொடுத்தார். ஒன்றும் புரியாமல் அப்பாவியாக நின்ற தன் இரண்டாம் மகளைப் பார்த்து.
“கோகிலா.” என்ற கணவனின் கோபமான குரலில் சற்று அமைதியானவர் மகளை முறைப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.
‘ஏன் தன் மேல் அம்மாவிற்கு இந்தத் திடீர் கோபம்.’ என்பது புரியாமல் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்த மகளைப் பார்த்த ரகுபதி
“வேலைக்கு நேரமாகலையா மா உனக்கு.” எனக் கேட்ட தந்தையை புரியாமல் பார்த்தவளுக்கு இன்னுமே அதிர்வு விலகவில்லை.
“சாப்பிட்டு கிளம்பு.” என்றவருக்கு சம்மதமாகத் தலையசைத்து உணவு மேசையின் புறம் திரும்பியவளை பார்த்த கோகிலா.
“என்ன நீங்கப் பாட்டுக்கு அவகிட்ட எதுவும் கேட்காமல் வேலைக்குக் கிளம்பி போகச் சொல்றீங்க.? யார்? என்னன்னு அவகிட்ட விசாரிக்க வேண்டாமா?? எனக் கேட்டபடி.
“அடியே நில்லு.யாரது.? யாரோ உன்னைக் கல்யாணம் பண்ணிக்க கேக்குறாங்களாம்.” எனக் கேட்க.
ஒன்றும் புரியாமல் நின்றவளுக்கு ஏனோ எதிர் வீட்டு மாடியிலிருந்து தனக்கு கை அசைத்து, உன்னைத் தானெனக் கூறியவனின் முகம் மனக்கண்ணில் வந்து மறைந்தது.
பயத்தில் ஒரு முறை உடல் சிலிர்த்து அடங்க. அவள் பதிலளிப்பதற்கு முன்பாகவே
“எதுவா இருந்தாலும் சாயந்திரம் வீட்டுக்கு வந்து பேசிக்கலாம். இப்ப அவள் வேலைக்குப் போகட்டும். எனக்கும் வேலை இருக்கு. நானும் கிளம்பனும்.” என்றவர் மகள் கிளம்பும் வரை அங்கேயே நிற்க. அவளிடம் கணவனின் முன்பு வேறு எதுவும் கேட்க முடியாமல் கோகிலாவும் அமைதியாகவே நின்றிருந்தார். கோபத்தை அடக்கி.
தந்தை அங்கேயே இருப்பதால் வேறு எதுவும் அன்னையிடம் பேச முடியாமல் கல்லூரிக்குக் கிளம்பி சென்றாள் வசந்தி.அன்னை கேட்ட கேள்வியிலேயே அதிர்ந்து பயந்திருந்த வசுந்தராவும் காலை உணவை உண்ணாமலேயே வேகமாகக் கிளம்பி சென்றாள் மனம் முழுவதும் குழப்பத்துடன்.
கல்லூரிக்குச் செல்லும் வழியிலேயே தன் வீட்டில் நடந்தவைகளை தன் தமக்கை வசுமதிக்கு அழைத்துச் சொல்லி இருந்தால் வசந்தி.
“என்னடி சொல்ற.?” என்றவளின் அதிர்ச்சியான கேள்விக்கு.
“ஆமா, நீ மற்றதை அம்மா கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ.” என்று கூறி இவளும் அலைபேசியை அனைத்திருந்தாள்.
தங்கை கூறிய விஷயத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் வேகமாக அன்னைக்கு அழைத்த வசுமதி
“என்னம்மா.? வசுந்தராவை யாரோ டாக்டர் வீட்ல பொண்ணு கேட்டு இருக்காங்களாம். இப்போதான் வசந்தி போன் பண்ணி சொன்னா. யாரது.? டாக்டர் குடும்பத்துக்கு எல்லாம் அவளைக் கட்டி கொடுத்தீங்கன்னா அப்புறம் எங்க மாமியார் வீட்டு மதிப்பு குறைந்துவிடும். இதுக்கு நான் என்னைக்கும் ஒத்துக்க மாட்டேன். அது என் மாமியார் வீடு மட்டும் இல்ல உங்க தம்பி வீடும் தான் ஞாபகம் இருக்கட்டும்.” என்று வேகமாகக் கூறியவளை,
“அடி ஏன்டி நீ வேற.?” என்றவாறு அவள் பேச்சைத் தடுத்தவர்.
“எனக்கே ஒன்னும் புரியல. வேலை முடிச்சு வந்த பிறகுதான் என்ன.? ஏதுன்னு.? விசாரிக்கணும்.”
“சரி, சரி நானும் ஒரு மூணு மணிபோலக் கிளம்பி அங்க வரேன்.” என்று கூறியவள் அலைபேசியை அனைத்திருந்தாள்.
வீட்டில் நடந்த கலாட்டாவில் காலை உணவை உண்ணாமலேயே வந்திருந்தாள் வசுந்தரா.
‘என்ன நடந்தது.? யார் தன்னைப் பெண் கேட்டார்கள்.’ என்பதும் புரியவில்லை அவளுக்கு. ஏனோ நேற்று எதிர் வீட்டில் காட்சி தந்தவனே மறுபடியும் அவள் சிந்தையில் உதித்து அவனாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஆனால் மறு மனமோ நேற்று கை அசைத்து விட்டு இன்று தன் பெற்றோரைப் பெண் கேட்க ஏவி இருப்பானா என்ற சந்தேகமும் எழுந்தது.
மனம் முழுவதும் குழப்பமும் யோசனையும் இருந்தாலும் சரியாகக் கால்கள் அவளை அவளின் வேலை தளத்திற்கு அழைத்து வந்திருந்தது. அதற்குப் பின் சிந்திக்கவும் இடம் இல்லாமல், நேரம் குழந்தைகளுடன் ரெக்கை கட்டி பறந்தது. அன்று பால்கனியில் நின்று குழந்தைக்குச் சோறு ஊட்ட ஏனோ அவளுக்குத் தைரியம் வரவில்லை. சில பல சஞ்சலங்கள் அவளுக்கு இருந்தாலும் வாழ்க்கை சற்று தெளிவாகத் தான் நகர்ந்து கொண்டிருந்தது. அதை எவ்வகையிலும் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை அவள்.
அன்று குழந்தையும் அவளுக்கு எந்தச் சிரமமும் கொடுக்காமல் அமர்ந்த இடத்திலேயே உணவை உண்டு முடித்திருந்தது.
இன்றும் எதிர் வீட்டில் அவன் நிற்கிறானா என்று தெரிந்து கொள்ள கூட விரும்பவில்லை அவள். எப்பொழுதும் குழந்தைக்கு வேடிக்கை காட்டியபடி சோறு ஊட்டும் அவள் இன்று ஒரே இடத்தில் குழந்தையை மடியில் அமர வைத்து உணவு ஊட்டுவதை பார்த்த, அங்கு மேல் வேலைகள் செய்யும் லட்சுமி என்ற பெண்,
“என்ன வசுந்தரா மா? இங்கேயே உட்கார்ந்து குழந்தைக்குச் சோறு ஊட்டிடீங்க இன்னைக்கு.”
“கொஞ்சம் உடம்பு சரியில்லை அக்கா அது தான்.” என்றாள் இவளும் சமாளிக்கும் விதமாக. அதே நேரம் அங்கு வந்த உரிமையாளர் மேடம்.
“அப்புறம் வசுந்தரா கல்யாண வேலை எல்லாம் ஆரம்பிச்சிட்டாங்களா.? உனக்கும் உன் குடும்பத்துக்கும் இந்தச் சம்பந்தத்துல சம்மதம் தானே.?” என்று கேட்கப் புரியாமல் முழித்தது அங்கு நின்று கொண்டிருந்த லட்சுமி அக்கா மட்டும் அல்ல. அருகில் அமர்ந்திருந்த வசுந்தராவும் தான்.
“என்ன மேடம் சொல்றீங்க.? யாருக்கு கல்யாணம்.? எந்தச் சம்பந்தம்.?” என்று ஆவலாக லட்சுமி கேட்க.
“அது எதிர்த்த வீட்டு அனுபமா இருக்காங்கல்ல.”
“யாரு.? அந்த டாக்டர் அம்மாவா.”என்றவளின் யோசனையான கேள்விக்கு.
“ஆமா, அவங்களே தான். ஒரு ரெண்டு நாள் முன்னாடி சாயந்திரம் அஞ்சு மணி இருக்கும். திடீர்னு வீட்டுக்கு வந்து பொதுவா பேச்சு கொடுத்தாங்க.
“என்னடா.? இந்தம்மா இப்படி எல்லாம் வந்து பேசமாட்டாங்களேன்னு யோசிச்சிட்டு இருக்கும்போது தான். வசுந்தராவை பற்றிக் கேட்டாங்க. நானும் எதுக்கு இவளைப் பற்றிக் கேக்குறாங்கன்னு யோசனையா அவங்கள பார்க்க. அதற்குள் அவங்களே எல்லாத்தையும் சொல்லிட்டாங்க.”
“என்ன சொன்னாங்க.?”
“அவங்க இவளை இங்க வைத்துப் பார்த்திருப்பாங்க போல. பார்த்தவுடனே அவங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு. இவளோட அமைதியான குணம் யாருக்கு தான் பிடிக்காமல் போகும்…” என்று அவளைப் பாராட்டிவிட்டு.
“அதுதான் என்கிட்ட வந்து இவளுடைய டீடைல்ஸ் கேட்டாங்க. நானும் இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் சந்தோசம் தான்னு அவங்க கேட்ட எல்லா தகவல்களையும் கொடுத்துட்டு அவளுடைய அப்பா நம்பரையும் கொடுத்தேன். அதுதான் அவங்க எதுவும் பேசினாங்களா.? வந்தாங்களான்னு.? கேட்டேன். இவளாகவே ஏதாவது சொல்லுவான்னு எதிர்பார்த்தேன். ஆனா, அவ சொல்ற மாதிரி தெரியல. அதுதான் நானாவே கேட்டேன். இப்பவும் ஒன்னும் சொல்லாம அமைதியா தான் இருக்கா.” என்றார் அவளையே பார்த்துக்கொண்டு.
அதற்குள் வேறொரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் வசுந்தரா,
‘பிடித்தது அன்னைக்கா.? அல்லது அவனுக்கா.?’ என்ற பெரும் சிந்தனையில் அமர்ந்திருந்தவளை “வசுந்தரா.” என்ற மேடத்தின் சத்தமிட்ட அழைப்பு அவளை நிகழ் உலகிற்கு அழைத்து வந்தது.
“இல்ல மேடம் யாரும் வந்து பேசல.”என்றவள் குழந்தைக்கு வாய் துடைத்து விடும் சாக்கில் வேகமாக எழுந்து சென்றாள்.
ஆக இப்போது அனைத்தும் தெளிவாகப் புரிந்தது அவளுக்கு. தனக்கு கைகாட்டியவனின் தந்தை தான் தன் அப்பாவிடம் காலையில் பேசி இருக்கிறார் என்பது தெளிவானது. ஆனால் ஏன் என்ற கேள்விக்குத்தான் அவளிடம் பதில் இல்லை. ஒன்றும் புரியாமல் குழம்பியவளுக்கு இப்போது விடை தெரிந்ததில் சற்றே நிம்மதி ஏற்பட்டது.
வீட்டிற்கு போவதற்கே சற்று பயமாக இருந்தது அவளுக்கு. ஆனால் இவளின் பக்கம் இருந்து எந்தத் தவறும் இல்லாமல் இருப்பதால் சற்றே தனக்குத்தானே தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தாள். காலை உணவு உண்ணாததாலும் சுளிர் என்று முகத்தில் அடித்த வெயிலின் தாக்கத்தாலும் தலைவலி மண்டையை பிளந்தது. இவள் வீட்டுக்குள் நுழையும் போதே தமக்கை வசுமதியின் குரல் கேட்டது. பெரும்பாலும் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்லும் தமக்கைகள் வீடு வந்தால் தங்கைகளுக்கு அது மன மகிழ்வை கொடுக்கும் ஆனால் இவளுக்கோ மனதிற்குள் பயப்பந்தை ஏற்படுத்தியது. இவள் நுழையும்போது ஏதோ பேசிக் கொண்டிருந்தவர்கள் இவள் வரவைக் கண்டு பேசுவதை நிறுத்திவிட்டு இவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோகிலாவும் வசுமதியும். அக்காவைப் பார்த்து வரவேற்றவள்.
“வாக்கா.” என்ற படியே தன் அறைக்குள் சென்று நுழைந்து கொண்டாள் தன்னை சுத்தப்படுத்தி வருவதற்கு.
“வசந்தரா சீக்கிரம் வா. வந்து சாப்பாடு எடுத்து வை. பசி உயிர் போகுது.” என்றார் சோபாவில் அமர்ந்திருந்த கோகிலா.
பெருமூச்செறிந்தவள் வந்தவுடனேயே தன்னை நிற்க வைத்த கேள்வி கேட்காமல் இருப்பதே பெரும் நிம்மதியாக உணர்ந்தாள்.
இவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளி வரும்போது கல்லூரிக்குச் சென்று இருந்த வசந்தியும் வந்திருந்தாள். அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாகச் சமையலறைக்குள் சென்று.காலையில் சமைத்து வைத்துவிட்டு சென்ற சாம்பாரையும் உருளைக்கிழங்கு பொரியலையும் வேகமாகச் சூடு செய்து அனைத்தையும் உணவை மேஜையில் அடுக்கி விட்டு நிமிர மூவரும் சாப்பிடுவதற்கு வந்து அமர்ந்தார்கள்.
அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து உண்ணும் பாக்கியம் எப்போதும் தனக்கில்லையென நினைத்தவளாகச் சமையல் அறைக்குச் சென்று அங்கு அவளுக்கென்று இருக்கும் நாற்காலியில் எப்பொழுதும் போல் அமர்ந்து சாப்பிடுவதற்காகத் திரும்பிச் சென்றவளை பார்த்தபடியே வசந்தி,
“அம்மா அப்பளம் இல்லையா.?” எனக் கேட்க. இருக்கும் தலைவலிக்கு ஏதேனும் வயிற்றுக்குள் போட்டால்தான் சரி வரும் என நினைத்தபடி வேகமாகச் சமையல் அறையின் உள் சென்றவளுக்கு வசந்தியின் குரல் கேட்க ஆயாசமாக இருந்தது.
பின்னேயே அன்னையின் குரலை எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம் தராமல் அவரும்.
“ஏய் வசுந்தரா. அப்பளம் பொரிச்சி எடுத்துட்டு வா.” என்றார்.
சலிப்பை முகத்தில் காட்டாமல் அவர்கள் கேட்டதை செய்து எடுத்துக் கொண்டு போய் டேபிளில் வைத்தாள். அவளையும் அங்கேயே அமர்ந்து சாப்பிடுமாறு யாரும் கூறவில்லை. இதை எதிர்பார்ப்பது தன் முட்டாள் தனம் என்பதை உணர்ந்தவளாகச் சமையலறையில் அமர்ந்து வேகமாக உண்டு முடித்தவளுக்கு சற்றே ஆசுவாசமாக இருந்தது.
சாப்பிட்டு முடித்து வெளியில் வந்து பார்க்க, சாப்பிட்ட தட்டைக் கூட எடுத்து வைக்காமல் அனைவரும் மறுபடியும் சோபாவில் சென்று அமர்ந்து மும்முரமாகப் பேச ஆரம்பித்திருந்தார்கள் மூவரும். எப்போதும் நடப்பது தான் என்றாலும் இன்று ஏனோ அவளுக்கு இருந்த தலைவலியில் மிகவும் சோர்வாக உணர்ந்தவள். மெதுவாகவே அனைத்தையும் எடுத்துச் சுத்தம் செய்துவிட்டு சிறிது நேர ஓய்விற்காகத் தன் அறையை நோக்கிச் சென்றவளை
“வசுந்தரா இங்க வா.” என்ற அன்னையின் அழைப்பில் அவரின் முன் போய் நின்றாள் இவளும்.
தன் எதிரில் வந்து நின்ற மகளை உருத்து நோக்கியபடி
“ஆமா, காலைல அப்பா ஏதோ டாக்டர் வீடு, பொண்ணு பார்க்க வராங்கன்னு சொன்னாரே என்ன கதை அது.?” என்று கேட்டவருக்கு பதில் ஏதும் கூறாமல் யோசனையுடன் இவள் அவரையே பார்த்திருக்க.
“உன்ன தான் கேட்கிறேன். பதில் எதுவும் சொல்லாம என்னையே பாத்துட்டு இருக்கே. யார் அது.? வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டு யாரையும் லவ் பண்ணிட்டு இருக்கியா என்ன.? அவங்க தான் உன்னைக் கேட்டு வராங்களா.?” என்று கோபத்துடன் சத்தமாகக் கேட்க.
“அம்மா, அம்மா என்ன பேசுறீங்க நீங்க.? இவளையாவது யாரும் லவ் பண்ணுவதாவது. ஏதாவது நடக்கிற காரியமா பேசுங்க அம்மா.”என்று சிரிப்புடன் கூறிய தமக்கையை பார்த்தாள் ஆதங்கமாக. இவள் தன் விளக்கத்தைக் கூற ஆரம்பிப்பதற்கு முன்பாக, அவள் பேசத் தொடங்கவும், தனக்கு ஆதரவாகப் பேசுகிறாளேயென நினைத்து ஒரு நிமிடம் மகிழ்ந்தவளுக்கு. அது அப்படி இல்லை என்பது தெரிய. அமைதியாகவே நின்றிருந்தாள் வசுந்தரா.
மேலும் சிரித்த வசுமதி
“இவகிட்ட அப்படி என்ன இருக்குன்னு யாரும் இவளை லவ் பண்ண போறாங்க.? என்னையும் வசந்தியை மாதிரியும் கலராக இருந்தாலும் பரவாயில்லை. இவளே கருப்பு. ஏதோ முடி ஒன்னு பெருசா இருக்கு. இடுப்பை தாண்டின அளவுக்கு.” என்றாள் சற்றே பொறாமையான குரலில்.
அது மட்டும் இருந்தா போதுமா.? இப்பதான் ஜவுரி முடி வச்சே நிறைய பேரு நிறைய முடி இருக்கிற மாதிரி காட்டிக்கிறாங்க. அதனால இது ஒரிஜினலா.? இல்லையான்னு.? நிறைய பேருக்குச் சந்தேகம் வரும். இருந்தாலும் ஒன்னு ரெண்டு ஆம்பளைங்களுக்கு இந்தப் பெரிய முடியைப் பார்த்தா அப்படி என்னதான் ஆசை வருமோ தெரியல.” என்று நொடித்தவள். தன் கணவனுக்கே பெரிய முடியின் மீது ஆசை இருப்பது நினைவு வந்தது.
“அதனால யாரும் இவள லவ் பண்றதுக்கு எல்லாம் வாய்ப்பில்லை.” என்றவள்
“அதுவும் டாக்டர் வீடுன்னு சொல்றீங்க. அவ்வளவு பெரிய இடத்திலிருந்தெல்லாம் இவளைக் கேட்கிற அளவுக்கு அப்படி என்ன இருக்கு இவகிட்ட. அப்பாக்கு யாரோ தெரியாம தப்பா கால் பண்ணி இருப்பாங்க.” என்றாள் உறுதியான குரலில்.
“அப்படியா சொல்ற.?” என்ற கோகிலாவும்.
“ஆனா இவ பேர சரியா சொல்லி இருக்காங்களே.?” என்றார் யோசனையுடன். அதுவரை அமைதியாக இருந்த வசந்தி
“அம்மா இவ மட்டும் தான் உலகத்திலேயே இந்தப் பேரோட இருக்காளா.? ஏதாவது தப்பான அழைப்பாதான் இருக்கும் அது.” என்றாள் அவளும் உறுதியாக.
“ஹ்ம்ம் நானும் கருப்பிக்கு நல்ல இடம் அமைஞ்சிடுச்சோன்னு ஒரு நிமிஷம் எதிர்பார்த்துட்டேன்.” என்றவரை முறைத்து பார்த்த இரு மகள்களும்,
“ரொம்ப தான் மா. பேராசை உங்களுக்கு.” என்றார்கள் சிரிப்புடன்.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வேகமாகத் தன் அறையை நோக்கிச் சென்றாள் வசுந்தரா. வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே.
அந்தக் கோதுமை நிற அழகியின் அழகு இவர்களுக்குத் தெரியாவிட்டால் என்ன.? அங்கு ஒருவனை தலை குப்புற விழச் செய்திருந்தது இவளின் ஆர்ப்பாட்டமில்லாத மனதை கவரும் ரம்யமான அழகு.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
1
+1
+1

