
மருத்துவக் கல்லூரியிலிருந்து பெரிய கேட்டரிங் ஆர்டர் வரும் என்று ஜனனி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அது அவளது சக்திக்கு மீறியதாகத் தோன்றியது. “கொஞ்சம் யோசித்துச் செய்யலாம்” என்ற முடிவுடன் அவள் வாயைத் திறக்கும் முன்னே, நந்தனோ அவர்களிடம் “சரி” என்று சொல்ல, இவள் திகைத்துப் போனாள்.
“கண்டிப்பா நாங்க பண்றோம் சார். எத்தனை பேர் இருப்பாங்க? என்னென்ன மெனு சொல்லுங்க? எப்போ கொண்டு வரணும்? எல்லா டீடைல்ஸும் சொல்லுங்க சார்…” என்றான்.
ஜனனியை விடுத்து அவன் பதில் சொல்வதைக் கண்டு குழம்பியவர்கள், அவனிடம் “நீங்கள்?” என்றனர்.
“நான் மேடமோட அசிஸ்டென்ட்! நீங்க சொல்லுங்க,” என்று அருகே இருந்த பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு வேகமாக எழுத ஆரம்பித்தான். சைவத்தில் என்னென்ன, அசைவத்தில் என்னென்ன வேண்டும் என்று அவர்கள் சொல்ல, அத்தனையும் காகிதத்தில் குறிப்பாக எழுதி வைத்துக்கொண்டான்.
இருவரும் பணத்தைப் பற்றிப் பேசினார்கள். நியாயமான தொகையை நந்து கேட்க, அவர்களும் முதலில் அதில் பாதியை முன்பணமாகக் கொடுத்தனர்.
“ஓகே, நல்லபடியாகச் செஞ்சுக் கொடுங்க… நாங்க வர்றோம்,” என்று அவர்கள் கிளம்பியதும், ஜனனி நந்துவைப் பிடித்துக்கொண்டாள்.
“என்னடா நினைச்சிட்டு இருக்க நீ? அந்த ஆர்டருக்கு எதுக்கு ஓகே சொன்ன? இது நாம மட்டும் முடிவெடுக்கிற விஷயமல்ல! சமைக்கிறவங்ககிட்ட கேட்கணும்… அவங்களுக்குச் சுமையைக் கொடுத்துட்டு நாம அதிக பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கக் கூடாது நந்து. இப்போ இதுக்குப் பாத்திரமும் ஆட்களும் அதிகம் தேவைப்படும். ரெண்டு நாள்ல எங்க போவ? இங்க வேலை பார்க்கிற எல்லாரும் வயசானவங்க, அவங்களை ரொம்பக் கஷ்டப்படுத்தவும் முடியாது. நான் யோசிக்கிறதுக்குள்ள நீ சரின்னு சொல்லி அவங்ககிட்ட அட்வான்ஸ் வாங்கிட்ட. இப்போ வெளிய இருக்கிறவங்க முடியாதுன்னு சொன்னா என்ன பண்றது?” எனப் படபடத்துப் பேசினாள்.
“ஹேய் ரிலாக்ஸ் ஜனா! ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற நீ? இது சாதாரண விஷயம்… இதுக்கு எதுக்கு ரொம்பப் பொங்குற?”
“பின்ன பொங்காம? சுயநலமா அவ்வளவு பணம் வருதுன்னு யோசிக்கக் கூடாது நந்து. வேலை பார்க்கிறவங்க நலனும் நமக்கு ரொம்ப முக்கியம்…” என்றாள்.
“வாரே வா! எத்தனை முதலாளிங்க உன்னைப் போல யோசிப்பாங்க சொல்லு! பணம் வந்தா போதும், லாபம் கிடைச்சா போதும்னு இருக்கிற முதலாளிகளுக்கு மத்தியில நீ கிரேட் டி!” என்று புகழ,
“ப்ச்… நான் என்ன பேசிட்டு இருக்கேன்? நீ என்ன பேசுற?” என்றாள் சலிப்பாக.
“அதெல்லாம் செஞ்சு முடிக்கலாம் ஜனனி. வரதராஜன் சார் உனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்ததால்தான் அந்த ஃபங்ஷன்ல நீ சமைச்ச! அந்த ஃபங்ஷன் மூலமாத்தான் இந்த வாய்ப்பு வந்திருக்கு. இந்த கேட்டரிங் முடிஞ்சதும் இன்னும் எத்தனை வாய்ப்புகள் வருமோ! சோ, இதை மிஸ் பண்ணாம பண்ணலாம்டி…” என்று ஊக்கம் தர, இவள் யோசிக்கலானாள்.
நந்தன் கைகளைக் கட்டிக்கொண்டு மேஜையில் சாய்ந்தபடி அவளை ரசிக்க, அவளது இரு வளைந்த புருவங்களும் சுருங்கிச் சுருங்கி விரிவது அவனுக்குப் பொழுதுபோக்காக இருந்தது.
“சரி, இதை பண்ணலாம்! ஆனா சமைக்கிறவங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டிடலாமே,” என்றாள். அவனும் தலையை ஆட்டிவிட்டு வெளியே கையை நீட்ட, அவளும் முறைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
அவனும் அவள் பின்னே வந்தான். சமையல் நடக்கும் இடத்திற்கு இருவரும் வந்தனர்.
“உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்,” என்றாள் பதற்றத்துடன்.
அவரவர் செய்து கொண்டிருந்த வேலையைப் போட்டபடி இவளையே கவனித்தனர்.
“ஒரு ஆர்டர் வந்திருக்கு! நம்ம சக்தியை மீறினது, இதைச் செய்யலாமா?” என்று கேட்டாள்.
இது அவள் வழக்கமாக அவர்களிடம் கேட்பதுதான். அவர்கள் ஒரு நாளும் ஆர்டரை வேண்டாம் என்று மறுத்தது இல்லை. இவளும் அவர்களைத் தேவைக்கு அதிகமாக வேலை வாங்கியது இல்லை. முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல், ஒரு குடும்பமாகவே அவர்கள் பழகி வருகின்றனர்.
“செஞ்சிடலாம் பாப்பா! விவரம் என்ன?” என அங்கிருந்த பெரியவர் கேட்க, அவளும் அவர்கள் சொன்ன மெனுவைச் சொல்ல, அங்கிருப்பவர்கள் யோசித்தார்கள்.
“நம்மகிட்ட இருக்கிற ஆட்களை வச்சு சமைக்க முடியுமா பாப்பா? பாத்திரமும் வேணுமே! என்ன பண்றது?”
“சமைக்கத் தேவையான பாத்திரத்தைப் பற்றிக் கவலை வேண்டாம்… சமைக்க ஆள் மட்டும் வந்தா போதும்,” என நந்து சொல்ல,
“எனக்குத் தெரிஞ்ச சமையல்காரங்க இருக்காங்க பாப்பா, கூப்பிட்டா வருவாங்க! கூப்பிடவா?” என அவர் கேட்டார்.
“கூப்பிடுங்க அக்கா! வந்தா நல்லாதான் இருக்கும்,” என்றாள் ஜனனி.
“வருவாங்க பாப்பா! அவங்க வேலை செய்யுற கேட்டரிங்ல இப்போ ஆர்டர் வர்றதே இல்லையாம். சும்மா தான் இருக்காங்க, கூப்பிட்டா வருவாங்க!”
“எந்த கேட்டரிங்ல வேலை செய்றாங்க அக்கா?” என ஜனனி சந்தேகமாகக் கேட்க, “கந்தன் கேட்டரிங் பாப்பா!” என்றதும் அதிர்ந்தாள்.
“கந்தன் கேட்டரிங்கா??! அவன்கிட்டயா வேலை பார்க்கிறாங்க?! வேணாம் அக்கா, அவங்க வேணாம். இது சரி வராது,” என்று பின்வாங்கினாள்.
“ஏன் சரி வராது? அவன் யாரு? அவனால என்ன பிரச்சனை வரப்போகுது?”
“கந்தன் கேட்டரிங் நடத்துறது வேற யாரும் இல்லை… கந்தரூபன் தான்,” என்று அவன் யாரென்று அவனுக்கு நினைவுபடுத்தினாள்.
“அவன்கிட்ட உதவி கேட்கணுமான்னு தோணுது,” என்று முகம் சுருக்கினாள்.
“பாப்பா! தப்பா எடுத்துக்காத! அங்க கேட்டரிங் வேலை பார்த்த எல்லாரும் வேலை இல்லாமதான் இருக்காங்க! ஆர்டர் வந்தாதான் சம்பளம்னு அந்த முதலாளி சொல்லிட்டான். அவன் மட்டும் கந்து வட்டித் தொழில்ல நாலு காசு பார்க்கிறான். இவனை நம்பி இருக்கிற யாருக்கும் ஒத்த பைசா கொடுக்கிறது இல்லை பாப்பா! உன்னால முடிஞ்ச வாய்ப்பைக் குடு பாப்பா,” எனக் கெஞ்சினர்.
யோசனை செய்தவள், “சரிக்கா, நான் அவன்கிட்ட பேசி உதவிக்குக் கேட்கிறேன்… அவன் ஒத்துக்கிட்டா சரி! இல்லைன்னா அதுக்கு மேல நாம வேற தான் யோசிக்கணும்,” என்று தோளைக் குலுக்கி விட்டு உள்ளே சென்றாள். அவளைப் பின் தொடர்ந்தான் நந்து.
“இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க?”
“இந்த விஷயத்துல ஈகோ பார்க்க வேணாம்னு தோணுது! அவன்கிட்ட பேசிப் பார்க்கலாம். ரொம்பப் பண்ணா பார்த்துக்கலாம்… எனக்கு எப்போவுமே கந்தன் கேட்டரிங் சர்வீஸ் மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு நந்து. ரொம்ப வருஷமா பேரும் புகழும் வாங்கின கேட்டரிங்! அது அவன் கையில கிடைச்சுச் சீரழியுது! அந்த கேட்டரிங்காக உழைச்ச மக்கள் இப்போ கஷ்டப்படுறாங்க. அவன் ஒரு சுயநலவாதி… அவனை நினைச்சா கோபமா வருது,” என்று பற்களை அரைத்தாள்.
“கோபம் அப்புறம் படு! இப்போ நமக்கு அதுக்கான நேரமில்லை. சீக்கிரமா அந்த கந்தன்கிட்ட பேசி, அவனோட கேட்டரிங் ஆட்களை முதல்ல வர வைப்போம்,” என்றான் அவன்.
“ம்ம்… சரி, நான் போய் அவன்கிட்ட பேசுறேன்… வேலைக்கு ஆள் கிடைக்குமான்னு பார்க்கிறேன்,” என்று வண்டிச் சாவியை எடுத்துக்கொண்டு தனது பையைத் தோளில் போட்டுக்கொண்டு வெளியே வர,
“நீ மட்டும் போக வேணாம், நானும் வர்றேன்.”
“நீ எதுக்கு?”
“அவன்கிட்ட பேச நீ தனியா போக வேணாம், நானும் வர்றேன்,” என்று அவளிடமிருந்து சாவியைப் பறித்து விட்டு முன்னே நடக்க, தலையில் அடித்துக்கொண்டு அவனோடு நடந்தாள்.
ஜெயந்தியிடம் சொல்லிவிட்டு இருவரும் அவளது வண்டி அருகே சென்றனர்.
அவன் அமர, அவள் அவன் முன்னே வந்தாள். “காலையில யாரோ ‘உரிமை இல்லை… எனக்குச் சங்கடம், எனக்குக் கஷ்டம்’னு சொல்லிட்டு ஆட்டோவுல போனாங்க! இப்போ என்னோட வண்டியில வர இருக்காங்க… என்னவாம் அதுக்குள்ள?”
“முதலாளியம்மா! இப்போ நான் உங்க அசிஸ்டென்ட்! உங்க டிரைவர்! புரொபஷனல் வேற, பெர்சனல் வேற! இப்போ புரொபஷனல் ரீதியாக உங்களோட வண்டியில வர்றேன். இல்லை, நான் வர்றது இன்னமும் உங்களுக்குச் சங்கடமா இருக்குன்னா சொல்லுங்க, நான் ஆட்டோவுல வர்றேன்… பணம் குடுத்துடுங்க!” என்றிட, அவனது பதிலால் கடுப்பானவள் அவன் முதுகில் ஒன்று வைத்தாள்.
“ரொம்பப் பண்ணாதடா, வண்டியை எடு,” என்று பின்னே அமர்ந்தாள். வண்டி புறப்பட்டது.
“கந்தன் பைனான்ஸ்” என்ற பெரிய பலகை கொண்ட அந்த இடத்திலேயே “கந்தன் கேட்டரிங் சர்வீஸ்” என்ற பெயர்ப் பலகையும் அனாமத்தாகத் தொங்கியது.
அவனது கந்து வட்டி அலுவலகம் மட்டும் தான் பரபரப்பாக இருந்தது. பத்து பேருக்கு மேல் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அனாமத்தாக இருக்கும் அந்தப் பெயர்ப் பலகையைப் பெருமூச்சுடன் பார்த்துவிட்டு அலுவலகத்தினுள் நுழைந்தாள். அவளுடன் நந்துவும் நுழைந்தான்.
வரவேற்பில் இருந்த பெண்ணிடம் கந்தனைப் பார்க்க வேண்டும் என்றாள் ஜனனி.
அவளும் கந்தனை அழைத்து விஷயத்தைச் சொல்ல, உள்ளே அனுப்புமாறு அவன் சொல்லியிருந்தான்.
“நீங்க போகலாம்,” என்று வழி காட்ட, அவள் முன்னே செல்ல அவளுடன் அவன் நடந்தான்.
கதவைத் தட்டிக்கொண்டு, “எக்ஸ்கியூஸ் மீ?” என்றாள்.
“கம் இன்,” என்றான்.
இருவரும் உள்ளே நுழைந்தனர்.
“உட்காருங்க ஜனனி மேடம்,” என்று இருக்கையைக் காட்ட, அவர்களும் உட்கார்ந்தனர்.
“என்ன ஒரு ஆச்சரியம் ஜனனி மேடம்! புதுசா என் ஞாபகம் வந்து என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?! எதுவும் சந்தோஷமான விஷயம் சொல்லப் போறீங்களா?” என்று பழைய விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொண்டு கேட்டான். அது அவளுக்குப் புரியாமல் இல்லை, பல்லைக் கடித்துக்கொண்டாள்.
“உங்ககிட்ட உதவி கேட்க வந்திருக்கோம்,” என்றாள்.
“பணம் எதுவும் வேணுமா? எவ்வளவு வேணும் சொல்லுங்க! உங்களுக்கு மட்டும் வட்டி இல்லாமல் கடன் தர்றேன்! நீங்க கொடுக்கும் போது கொடுங்க,” என்றான் சிரித்தபடி. நந்துவுக்கு அவன் பேச்சு கடுப்பைத் தந்தது.
“ஹலோ மிஸ்டர் கந்தன். உதவிதான் சொன்னாங்க! கடன் வேணும்னு சொல்லல! என்ன விஷயம்னு கேட்டுட்டுப் பேசுங்க,” என்று இடையில் வர, அப்போதுதான் அவனை கவனித்தது போல,
“சார் யாருன்னு சொல்லவே இல்லையே ஜனனி மேடம்?” எனப் புருவங்கள் சுருக்கி, யாரென்று யோசித்தபடி கேட்டான்.
அவள் சொல்ல வருவதற்குள், “நான் ஜனனியோட வருங்கால கணவர்,” என்றான்.
இதை எதிர்பார்க்காத கந்தன் திகைக்க, அவனது திகைப்புக்கு நிகராக அவளும் திகைத்துப் போய் நந்துவைப் பார்த்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
1
+1

