Loading

அகம் 3

சென்னை:

சென்னையின் தார்சாலையில் சீறிப் பாய்ந்துக்கொண்டிருந்தது, கப்பலை போன்ற தோற்றத்தை கொண்டிருந்த பிஎம்டபுள்யூ கார், காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி வண்டியை லாவகமாகச் செலுத்திக் கொண்டிருந்தான் அகத்தினியன்.

பின்னிருக்கையில் தங்கை சந்தியா காதில் ஹெட்செட்டை நுழைத்துக்கொண்டு, அதில் வரும் பாடலுக்கேற்ப தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள், அவனின் தாய் காயத்ரியோ நன்கு உறக்கம் தழுவியிருந்தார், இவன் தனிமையை உணர்ந்தபடி சாலையை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இந்தப் பயணம் அவன் வாழ்க்கையைப் புரட்டி போட போவதை நன்கு அறிந்திருந்தான் அவன், திருநெல்வேலி நோக்கிய பயணம், அவனின் எதிர்காலத்தை நோக்கிய அவன் விரும்பாத பயணம்.

 ‘யாரென்று பழக்கம் இல்லாத பட்டிக்காட்டானை கட்டிக்கொள்ள வேண்டுமா.?’ அவன் எண்ணம் என்னவோ இதுவாகத் தான் இருந்தது, அவனின் எண்ண ஓட்டத்தைக் களைக்கும் வண்ணம் அவனின் செல்போன் இசைந்து தன் இருப்பைக் காட்ட, முதல் முறை அதை அவன் உதாசீனம் செய்தான்,

இரண்டாவது முறையும் அழைப்பு வர வேறு வழியின்றி அழைப்பை ஏற்றுச் செவிகளில் மாட்டியிருந்த இயர் பட் வழியே அவளின் இனிமையான குரல் ஒலித்தது,

“இனியன் ஆர் யூ தெர்.?”

“யா..?”

“ஹே பேபி மிஸ் யூ” என்றவள் அடுத்ததாய் “இச். இச்.” என்ற முத்தமழை பொழிய ஆரம்பித்திருந்தாள்.

“லேகா நோ.!” கண்டிப்பான குரலில் அவன் பதிலளிக்க, இதனை எதிர்பாராதவள்.

“உனக்கு என்ன தான் ஆச்சு பேபி, எதுக்காக என்னை அவாய்ட் பண்ணுற” கொஞ்சும் குரலில் அவனை வசீகரத்தாள் அவள்.

“லேகா சாரி டூ சே திஸ், எவ்ரி திங் இஸ் ஓவர்” என அவர்களின் காதலுக்கு முற்றுபுள்ளி வைப்பதாய் அவன் சொல்ல,

“வாட் இனியன், கம் அகெயின்”

“இது முடிஞ்சு போச்சு லேகா, என்ன விட்டிரு, நம்ம காதல் சேரும்னு நீ நினைக்காத, இது சாத்தியமில்லை” முடிவாய் அவன் சொல்ல,

“இது தான் உன்னோட முடிவா இனியன்.?”

“யா லேகா”

“ஓகே, என்ன ரீசன் சொல்லு இனியன், உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” அவள் பிடிவதாமாய் நிற்க,

“கால் யூ லேட்டர்” என்றவன் அழைப்பை துண்டித்தான்., அவன் மனதில் இன்னும் லேகா தான் இருக்கிறாள், ஆனால் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டுமல்லவா, என்ன செய்வது காதலை தியாகம் தான் செய்தாக வேண்டும், அவனுக்காக ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி கொடுத்திருக்கிறார், அதோடு மட்டுமில்லாமல் அவன் மீது அளவில்லாமல் அன்பு மழையைப் பொழிந்தவர் ஆயிற்றே, அவனின் மனம் தவித்துப் போனது,

“அண்ணா நீ லவ் பண்ணுறியா..?” பின்னிருக்கையிலிருந்து சந்தியாவின் குரல். அவள் பாடல் கேட்பதை நிறுத்திவிட்டு அவன் அண்ணனை பார்த்து கேட்டாள்.

“அதெல்லாம் இப்போ எதுக்குச் சந்தியா, அதான் வாழ்க்கையே மாறபோகுதே” விரக்தியாய்ச் சொன்னான் அவன்.

“அப்போ என் அண்ணா சத்தியம் பண்ணின” அதிர்ச்சியாய் கேட்டாள் சந்தியா.

“நம்ம அப்பா சாதாரணமா கேட்டிருந்தா சொல்லிருப்பேன் மா, அன்னைக்கி நிலைமையே வேறல்ல” அவனின் இயலாமை அவனைக் கொன்றது,லேகாவுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு இப்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்யப் போகிறோம், இதென்னடா வாழ்க்கை என்றாகிவிட்டது அவனுக்கு.

“நீ அம்மாக்கிட்ட பேசி பாறேன் அண்ணா”

“அப்பா என்ன சொன்னாங்கலோ அது தான் நடக்கணும்” எனக் காயத்ரி இமைகள் மூடிய படியே பேச, அவர் அனைத்தையும் கேட்டுவிட்டார் என அறிந்துக்கொண்டவன் அமைதிக்காத்தான்.

“ம்மா அண்ணா பாவம்மா”

“என்னடி பாவம், உங்க அப்பக்காக இதைக் கூடச் செய்ய மாட்டானா உன் அண்ணன், அப்படி அவர் என்னடி கேட்டுட்டார் அவர் தங்கச்சி மகளைத் தன்னோட மகனுக்குக் கட்டிவச்சு குடும்பத்துல இருக்கப் பகையைத் தீர்க்கணும்னு நினைச்சிருக்காரு, அப்போ அப்பா இறந்தப்ப நீங்க அழுத்தெல்லாம் நடிப்பா.?” என மகனின் பலகீனத்தில் சரியாக அடிக்க, தாய் சொல் தட்டாத பிள்ளையாய் அமைதி காத்து வந்தவன், தீடீரென வெடித்துச் சிதறும் கோபத்துடன் அவனுடைய செல்பேசியைச் சாலையில் விசிறியடித்து விட்டு, மௌனமாக வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்தான். அவனது சில நொடி கோபத்தைப் பார்த்த தங்கையும் அன்னையும், அமைதியாகிவிட, அந்தத் தொலைப்பேசியோடு லேகாவின் உறவு முடிந்துவிட்டது என எண்ணினார் காயத்ரி, மனதிலிருந்து அவளைத் தூக்கி எறிய இயலாமல் ஒரு வகைத் தவிப்பில் இருந்தான் நம் நாயகன் அகத்தினியன். பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்க நள்ளிரவில் மதுரையை வந்தடைந்திருந்தனர்.

“இனியன் இங்கேயே ரூம் எடுத்து ஸ்டே பண்ணிக்கலாமா.?”

“இல்ல மாம் திருநெல்வேலி போயிரலாம், அரௌண்ட் த்ரீ ஆர் ஃபோர்குள்ள போயிரலாம்” அவன் சொல்ல,

“அண்ணா நீ டையர்டா இருப்பல்ல அதான் அம்மா சொல்றாங்க”

“நோ ப்ராப்ளாம், யாரும் என் மேல அக்கறை பட வேண்டாம்” என விரக்தியாய் சொல்லி முடித்தான் அவன். அதற்கு மேல் அவனிடம் பேசி அவன் மனதை நோகடிக்க விரும்பாமல், பின்னிருக்கையிலே இருவரும் உறக்கம் தழுவினர். அகத்தினியன் மட்டும் கண் விழித்து வண்டியை இயக்கிக்கொண்டிருந்தான். இது ஒன்றும் அவனுக்குப் புதிதல்ல, இரவு பகல் பாராது, காரை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் ஊர் ஊராய் சுற்றி கூத்தடித்த நினைவுகள் அவன் கண்களில் மின்னி மறைந்தது.

************

விக்கிரமசிங்கபுரம்:

கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத அந்த ஊரில் ஆதவன் சோம்பி தூங்கி கொண்டிருந்த பிரம்ம முகூர்த்த வேளையில், அடுக்களையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்தாள் அவந்திகை,

“ஏட்டி அவி இன்னேரத்துல என்னட்டி அடுப்படியில உருட்டிகிட்டு இருக்குதவ.?” மன்னராசாவின் குரல் கேட்டு அவன் புறம் விழித்தவள்,

“ஏலே நீ என்ன டே தூங்கலையோ.?”

“நீ பாத்திரத்தை போட்டு உருட்ரதுல எங்க தூங்குறது, களைஞ்சிட்டு” எனச் சொன்னான்.

“சக்திக்கு பச்சரில புட்டும், உளுந்த கலியும் செஞ்சு கொடுக்கணும்லே, அதான் உலக்கையைத் தேடிக்கிட்டு இருக்கேன், சும்மா நிக்காமா தேடி கொடாம் டே” அவந்திகை சொல்ல,

“அடுக்களைல உலக்கையைத் தேடினா எப்புடிட்டி கிடைக்கும்.?”

“ஏம்டே அப்படிச் சொல்லுத.?”

“உலக்கை சக்தி பக்கத்துல தானே இருக்கும்” என அவன் சொல்ல,

“பாரேன் மறந்து தொலைச்சுட்டேன், சரி நான் விரச போய் எடுத்திட்டு வந்துடுதேன்”

“இல்லைட்டி நான் போய் எடுத்துக்குடுதேன்” மன்னராசா அமைதியாய் சொல்லி நகர,

எப்போதும் அக்காவுடன் உறங்கி பழக்கபட்டவள், இரண்டு நாட்களாய் தனிமையில், பச்சை ஓலைக்குள் படுத்துக்கொண்டு எதோ சிந்தனையில் இருந்தாள் சிவசக்தி, ஆள் வரும் ஆரவம் கேட்டு எழுந்து அமர்ந்தவள்,

“யாரலே அது” அவள் குரல் கொடுத்தாள்,

“ஏம்ட்டி சக்தி நான்தான்” பதிலுரைத்தான் மன்னராசா,

“அத்தான் நீங்களோ, யாரோன்னு நினைச்சு,ஏலே சொல்லிப்புட்டேன் மன்னிச்சிகிடுக” மன்னிப்பு வேண்டிவளின் விழிகள் அவனையே உறுத்து விழிக்க,

“ஏய் முட்டக்கண்ணி உறங்காம கோட்டான் மாதிரி முழிச்சிருக்க.?” அவன் கேட்க,

“உறக்கம் வரலையே அத்தான்” என அவள் சொல்ல,

“சரி சரி உலக்கையை எடுத்து இப்படிக்கொடாம்ட்டி, உன் அக்காகாரி, வேலை ஏவிருக்கா, உடனே போவலை சாமி ஆடிடுவாட்டி” எனச் சொன்னவன் உலக்கையை எடுத்துக் கொண்டு செல்வதை அவனின் நிழல் மறையும் வரை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவள் “மன்ராசா.!” அவன் பெயரை உச்சரித்துப் பார்த்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள் சிவசக்தி.

“ஏட்டி அவி இந்தா உலக்கை” மன்னராசா நீட்டினான்

“என்ன டே என்கிட்ட கொடுக்குதா.? அந்த அரிசிய எடுத்துட்டு போய் உரல்ல போட்டு துள்ள துள்ள இடிச்சிட்டு வாயாம்லே”

“என்னட்டி என்னைய இடிக்கச் சொல்லுத.? இதுக்குத் தான் பாத்திரத்தை உருட்டி விட்டு எழுப்பி விட்டியோ.?”

“ஏன் உன் மாமன் மகளுக்குச் செய்ய மாட்டியோ.? நீயெல்லாம் மனியனா.?” அவள் அர்ச்சனையை ஆரம்பிப்பதற்குள் அவன் பச்சரியை எடுத்துக்கொண்டு உரலை தேடி ஓடினான்,

“ஏலே நில்லாம்ல கூமுட்டை, உரலை நல்ல கழுவிட்டு, பொட்டுத் தண்ணியில்லாமா துணிய வச்சி தொடைக்கணும், விளங்கிச்சா சொன்னது?” அதட்டலாய் அவந்திகை கேட்க, அவன் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.

“நல்லா தலைய மட்டும் ஆட்டுலே” எனச் சொல்லி விட்டு உளுந்த கலியை செய்யச் சென்றாள்.நறுமணம் நிறைந்த உளுந்த கலியை தயார் செய்துவிட்டுப் பாத்திரத்தை மூடி வைத்தவள், தங்கையை எழுப்பச் சென்றாள்.

“ஏட்டி சக்தி எழும்பாம்ட்டி”

“அவிக்கா எழும்பி தான் இருக்கேன், உறக்கமே வரலைக்கா, இன்னைக்கி ரவைக்கு உன் கூடப் படுத்துகிடட்டா.?”

“அதெல்லாம் அந்திக்குப் பேசிக்கிடலாம், நீ எந்திடி, விரச குளிச்சுட்டு வா, இந்த அக்கா பாவடை தாவணியை உடுத்திக்க” என அவந்திகை கொடுக்க,

“எக்கோய் இப்பயே குளிக்கணுமா.? குளிரும்க்கா”

“தண்ணி காய வச்சிருக்கேன் டி குளிச்சிட்டு வாயாம்ட்டி, அக்கா தாவணி உடுத்தி விடுதேன்” என அவந்திகை சொல்ல.

“சரிக்கா” என அழகாய் தலையாட்டி குளிலறை நோக்கி ஓடினாள் சின்னவள். அங்கே அரிசி இடித்துக்கொண்டிருந்தவனைப் பார்வையால் வருடிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள். குளித்துவிட்டு வெளியே வந்தவள் தாவணியை உடுத்தத் தெரியாமல் போர்வையைப் போல் போர்த்திக்கொண்டு வெளியே வந்தவள், அரிசியை இடித்துக்கொண்டிருந்தவனைப் பார்த்தவள்.

“அத்தான்..!” அலறினாள்

“ஏம்ட்டி கத்துற”

“அத்தான் அசையாதீங்க”

“ஏய் என்ன சொல்லாம்ட்டி”

“நட்டுவாய்க்காலி (பெருந்தேள்) உங்க புறத்தால இருக்கு” அவள் சொன்னதைப் பார்தவன்

“அது ஒண்ணும் பண்ணாதுட்டி” என்றவன் உலக்கையை உரலாடு வைத்து சுவற்றில் சாய்த்தவன், அதை டப்பாவில் பிடித்தான்.

“அத்தான் அது கொட்டிர போது விசம்” என அலறினாள் சிவசக்தி,

“காட்டுக்குள்ள விட்டுட்டு வந்தேறன்ட்டி” எனச் சொல்லி சென்றவன் ஐந்து நிமிடத்தில் அதை விட்டு வர.

“அதைக் கொண்ணுரக்கலாம்ல அத்தான், விசம் தான, உங்களைக் கொட்டிரலையே” அவன் கைபிடித்து ஆராய்ந்தாள்.

“இல்லைட்டி கொட்டல, தேள் கடில தான் உயிர் போகணும்னா, போய்த் தான் ஆகும், அதுக்கு எதுக்கு அதைக் கொண்ணுகிட்டு, இப்படியே நிக்காம துணிய உடுத்தாம்ட்டி” அவன் சொல்லி விட, விரைந்து வீட்டிற்க்குள் நுழைந்துக்கொண்டாள்.

விசம் என்று தெரிந்தும் அதனைக் கொல்ல நினைக்காதவனின் உயர்ந்த குணம் அறிந்தவளுக்குள், பசுமரத்தாணி போல் பதிந்து போனான் அத்தை மகன் மன்னராசா.

“நான் சொன்னதெல்லாம் சரியா செஞ்சியாட்டி” வினவினாள் அவந்திகை.

“ம்ம்ம்” என்று தலையசைத்தாள் சிவசக்தி, தாவணியை உடுத்திவிட்டு தலைவாரி பூவை தங்கைக்குச் சூடிவிட்டாள் அவந்திகை.

“எக்கா வேண்டாம்க்கா”

“ஏட்டி குடி, இல்லைனா சமட்டிருவேன்” மிரட்டல் விட்டாள் அவந்திகை.

“எக்கா முட்டைய பார்த்தாலே கொமட்டுதுக்கா” அந்தச் சமயம் மன்னராசா அங்கு வர,

“ஏலே மண்ராசா இவா மூக்க பிடிச்சுக்கோ, கட கடனு ஊத்தி விடுதேன்” அவந்திகை சொல்ல, வேண்டாம் என மறுப்பாய் தலையசைத்தாள்.

“ஏட்டி நான் வயசுக்கு வந்தப்ப இப்படித் தான் பச்சை முட்டைய கொடுத்தாவ, நான் உன்ன போல வம்பு பண்ணினேனோ, ஏம்ட்டி இப்படிச் செய்யுத குடியாம்ட்டி” வசை பாடினாள் அவந்திகை.

“ஏட்டி சக்தி, அக்கா சொல்லுறத கேளு” என்ற மன்னராசாவின் அதட்டலில் முட்டையை வாங்கிக் குடித்திருந்தாள் சிவசக்தி, அதே முட்டை ஓட்டில் நல்லெண்ணையை ஊற்றி அதையும் குடிக்க வைத்தாள் அவந்திகை.

“ஏட்டி அவி அரிசி இடிச்சு வச்சுட்டேன்” என அவந்திகையிடம் சொன்னவன்

“ஏட்டி சக்தி உனக்குப் பிடிச்ச கலரு என்னட்டி, சொல்லு உனக்குப் புடவை எடுக்க அம்பைக்குப் போறேன்” அவன் கூறியதைக் கண்டவளின் மனக் கண்ணில், அவளுக்குப் பிடித்த வெங்காய நிற புடவையில் ஜொலித்தவளின் கழுத்தில் ரோஜாக்ளால் தொடுக்கப் பட்ட மாலையை மன்னராசாவின் கையில் வாங்கிக்கொள்வதைப் போல் காட்சி சிவசக்தியின் மனக் கண்ணில் நிழலாட,

“அவளுக்கு வெங்காயக் கலரு புடிக்கும் டே” எனப் போற போக்கில் சொல்லிச் சென்றாள் அவந்திகை. சரியெனத் தலையாட்டி புறப்பட்டான் மன்னராசா.

அதன் பின் மாட்டுத் தொழுவத்திற்குச் சென்று பசு மாட்டிடம் பாலை கரந்தவள், தொழுவத்தைச் சுத்தம் செய்து விட்டு, அவளுடைய கடையைத் திறக்கச் சென்றாள் அவந்திகை.

“ஏட்டி அவி”

“சொல்லுங்க அத்தை” கடைக்குள் இருந்த படி குரல் கொடுத்தாள் அவந்திகை.

“எட்டி வாசல் பெருக்கல, கோலமும் போடலை, கடையில போய் உட்காந்திருக்க” பார்வதி முறைத்தபடி கேட்க

“எத்தை உங்களுக்குத் தெரியாத மாதிரயே கேக்குதீய, அம்மை கோலம் போடுவாவ, கடுங்காப்பிப் போட்டு வச்சிருக்கேன் எல்லாருக்கும் ஊத்தி கொடுத்திருங்க அத்தை” எனப் பேசியவள் வியாபாரத்தைத் தொடர்ந்தாள்.

“ஏட்டி அவி அரை லிட்டரு பால் கொடு” பக்கத்து வீட்டு வசந்தி வந்து நின்றார்.

“வசந்தி எக்கோய் எத்தனை முறை சொல்லுறது, பாத்திரத்தை கொண்டு வந்து வாங்கினா தான் என்ன” எனத் திட்டியபடி அவள் செய்து வைத்திருந்த மரக்குவளையில் அரைலிட்டர் பாலை ஊற்றிக்கொடுத்தாள்.

“ஊத்திட்டு வந்து உன் மர பாத்திரத்தை கொடுக்குதேன்” எனச் சிரித்தபடி வசந்தி சொல்ல,

“ஆமா அப்படியே கொடுத்துட்டாலும்” எனச் சலித்துக் கொண்டாள் அவந்திகை.

அதே சமயம் அவள் கடையின் முன் ஒய்யாரமாய் வந்து நின்றது அந்தப் பிம்டபிள்யூ கார்.

‘நம்ம கடைல சாமான் வாங்க கார்லலாம் வந்திருக்காவ, அவந்தி நீ வளர்ந்திட்டடி” அவள் மனம் குதுகலிக்கக் காரையே பார்த்தபடி இருந்தாள் அவந்திகை. அவள் பார்த்துக்கொண்டிருந்த போது காரின் கண்ணாடி மெல்ல திறக்க அவள் கண்களுக்கு இருக்கையில் அமர்ந்திருந்தாலும் அவனின் உயரத்தை பார்த்து கணித்தவள்

‘பனை மரத்துல பாதி இருப்பான் போலேயே” தனக்குள் பேசிக்கொண்டாள்.

“ஹே யூ வில்லேஜ் க்ர்ள்” அவள் உடுத்தியிருந்த தாவணியையும் எண்ணெய் வழிந்த கொண்டையும் பார்த்து அவன் அப்படிக் கூற, கோபம் பொங்கி எழுந்தாலும் அவன் எதோ வாங்க வந்திருப்பதாய் நினைத்து, அவளின் கோபம் முகத்துக்குக் கடிவாளம் இட்டவள், சிரித்த முகமாக,

“சொல்லுங்க பைனி குடிக்கிறியளா.?” கேள்வியாய் அவன் முகம் பார்த்தாள்.

“பைனியா.?” அவளின் மொழி புரியாது அவன் விழிக்க. காரின் பின்னிருக்கையின் கண்ணாடி மெல்ல திறக்க,

“எம்மா பொண்ணு, இந்த அட்ரஸூக்கு வழி சொல்லுமா” காயத்ரி கேட்க.

“நான் வழி சொல்லுதேன், கடையில எதாவது வாங்கிட்டா தான் வழி காட்டுவேன்” அவள் சொல்ல.

“மா., வேற யார்க்கிட்டையாவது கேட்டுக்கலாம், இவ நம்மகிட்ட விக்காத பொருளை விக்க ட்ரை பண்ணுறா மா” அகத்தினியன் சொல்ல,

‘ஏலே என்னையவா அவ இவன்னு சொல்லுத, இன்னக்கி நீ செத்தல’ மனதில் தாளித்துக்கொண்டிருந்தாள் அவனை.

“விலாசத்தைக் கொடுங்க பார்த்து சொல்லுதேன்” வாங்கியவள் அதிலிருந்த ஆங்கில எழுத்துகளைப் பார்த்து பயந்து போனாள்.

“ஆத்தி இந்த எலவுக்குப் பயந்து தான் பள்ளிகொடத்துக்கு மட்டம் போட்டோம், சரி எழுத்துக் கூட்டி படிச்சு சொல்லிடுவோம்” என வாய்விட்டு புலம்பியவள், எழுத்துக் கூட்டி படித்து முடித்தவள், அது அவர்களின் விலாசம் என்பதை அறிந்துக்கொண்டாள்.

“ஓ அப்பாவ தேடி வந்திருக்கியோ” நினைத்துக்கொண்டவள்.

“நான் சொல்லுறதை கவனமா கேட்டு கிடுங்க, நேரே கிழக்காலப் போனீயன்னா அங்க ஒரு தண்ணி தொட்டி இருக்கும், அதில இருந்து தெற்காலத் திரும்புனியன்னா, ஒரு கருக்குமட்டையில வேலி போட்ட வீடு இருக்கும், அதிலேருந்து நேர போனியன்னா, அஞ்சு தலை பாம்பு கனக்கா தலையவிரிச்சாப்புல ஒரு ஆலமரம் இருக்கும், அந்த ஆலமரத்துல இருந்து வடக்காலப் போனீயன்னா, சின்னப் பெட்டிக்கடை இருக்கும், அந்தப் பெட்டிக்கடைக்கு எதிர்த்த வீடு தான், அரண்மனை மாதிரி வீடு இருக்கும்” என அவள் இடை விடாமல் சொல்லி முடிக்க.

“மா வாட் இஸ் தெட் கிழக்கால, வடக்கால, அவ சொன்னது எதுமே புரியலைமா” கயாத்ரியிடம் கேட்டான் புதல்வன்.

“நீ வண்டிய எடு, நான் வழி சொல்றேன்” எனச் சொன்னவர் அவந்திகை புறம் திரும்பி நன்றி சொன்னார். இவ்வளவும் நடந்துக்கொண்டிருந்த போது சந்தியா உறக்கத்தில் இருந்தாள்.,

அவள் சொன்ன வழியில் எப்போதும் சீறி பாயும் அவனின் பிம்டபூள்யூ, மாட்டு வண்டியை போல் ஆடி அசைந்து தெருக்களுக்குள் செல்ல, அதைத் துரத்திக்கொண்டு சிறுவர்கள் பின்தொடர்ந்தனர்., கடைசியாக அந்தப் பெட்டிக் கடையைக் கண்டுபிடித்துவிட, அந்தப் பெட்டிக் கடையினுள் எட்டி பார்க்க அங்கே சிரித்தபடி அவந்திகை அமர்ந்திருந்தாள்.

“ஹேய் இனியன், நமக்கு வழி சொன்னளே, அந்தப் பொண்ணு மாதிரியே இல்லை” காயத்ரி குழம்பி போய்ப் பார்த்தார்.

“அந்தப் பொண்ணு மாதிரி இல்லை அவளே தான்” என அகத்தினியனின் பேச்சில் எரிச்சல் வழிந்தது,

“இந்த ஊரு பொண்ணுங்க எல்லாரும் ராங்கிய இருப்பாங்க போல, இதுல இந்த ஊர் பொண்ண தான் கட்டியாகணுமா” என மனதோ படபடவென அடித்துக்கொண்டது, அவள் சொன்னது போல் கடையின் எதிரே இருந்த வீட்டிற்குள் அவளை முறைத்த படி நுழைந்தான் அகத்தினியன், அவனின் பின்னே காயத்ரியும், சந்தியாவும் உள்ளே சென்றனர்.

திசை தெரியா ஊரில் கண்ணைக் கட்டி விட்டதைப் போல் உணர்ந்தான் அகத்தினியன், அவர் நுழைந்த போதே வீட்டின் முன் அழகாய் படர்ந்து இருந்த பூவரச மரத்தில் கிளிகளின் கீச்சலிடும் சத்தம் அவர்களை வரவேற்றது,

“வாவ் ஐ லவ் திஸ் ஃபேளேஸ்” எனக் கிளிகளைப் பார்த்தவுடன் அவளின் கேமராவை வைத்துப் புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தாள், பூவரச மரத்தடியில் சாய்வான நாற்காலியில் சாய்ந்த படி அன்றைய நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தார் முத்துவேல்.

“முத்து அண்ணா” மெல்லிய குரலில் அழைத்தார் காயத்ரி.

“வா தாயி, இப்ப தான் ஊருக்கு வழி தெரிஞ்சுதோ” முகத்தை உர்ரென்று வைத்தபடி கேட்டார் முத்துவேல்,

“யாரு இவிய, வாங்க வீட்டுக்குள்ள வாங்க, காப்பித் தண்ணி கொண்டு வாரேன்” என உபசரித்த ஜெயக்கொடியை முறைத்தார் முத்துவேல்.

“ஏட்டி செயா, இவிய யாருன்னு தெரிலையோ.?”

“அவியல பார்க்க பட்டணத்துல இருந்து வந்தவிய போலத் தெரியுது, யாரா இருக்கும்” என ஜெயக்கொடி யோசித்தார், அவரின் மனதில் பதியாமல் போயிருந்தது அவரின் அண்ணி முகம், இதுவே அவரின் அண்ணனை கண்டிருந்தால் தாவி குதித்து அணைத்திருப்பார்., அவரின் மீதான பாசம் இன்னும் வற்றாமலே இருந்தது ஜெயக்கொடியின் மனதில்.

“இவிய பேரு காயத்ரி, எனக்குத் தங்கச்சி நினைவு வருதாட்டி” என அவர் சொல்ல ஜெயக்கொடியின் விழிகளில் கண்ணீரின் சாயல்.

“இவிய பிரியன் பேரு செந்தில்நாதன், உனக்கும் அண்ணன் முறை தான், ஆனா தமையன் இல்லை” என அவர் அழுத்தி சொல்ல, விழிகளின் நீர் கீழே இறங்கவில்லை ஆனால், ஜெயக்கொடியின் மனம் வெடித்துச் சிதற,

“மைனி” என்ற கேவலுடன் அவரை அணைத்திருந்தார் ஜெயக்கொடி. அவரின் அழுகை, அங்கே கல்நெஞ்சாய் நின்றுக்கொண்டிருந்த முத்து வேலின் மனதை கரைக்கதான் செய்தது, ஆனால் அதை வெளிக்காட்டாது தன் மீசையை முறுக்குவதிலே மும்மரமாய் இருந்தார்.

“எய்யா.! என் அண்ணன் மகனாயா நீ.?” என வாஞ்சையுடன் அகத்தினியனின் தோள் சாய்ந்து ஆழ, அவனுள்ளும் சிறிய சலனம் ஏற்பட்டது.

“உன் பேரு என்னய்யா.?” கண்ணீரை துடைத்தபடி கேட்டார் ஜெயக்கொடி.,

“அகத்தினியன்” அவன் பெயரை சொல்ல, அந்தப் பெயரை கேட்டவுடன் அவர் முகத்தில் அவ்வளவு மன திருப்தி,

“எம்மா பொண்ணு உன் பேரு என்ன.?” பாசத்துடன் கேட்க,

“சந்தியா அத்தை” தன் முத்து முரல் தெரிய அவள் சொல்ல.,

“அத்தை தான், அத்தை தான்” என வாய்விட்டு சிரித்தார்., தன் பிறந்த வீட்டின் சொந்தத்தைப் பார்த்தவுட்ன, தமையனை கண்கள் தேட,

“எய்யா உங்க அய்யா, இந்தத் தங்கச்சி மேல இன்னும் கோபம் போகலையோ வெளிய நிக்குறாவளோ?” என்ற கேள்வியுடன் வாசலை நோக்கி நடந்த ஜெயக்கொடியை தடுத்த காயத்ரி.

“அவுங்க வருவாங்க ஜெயா, வேலை அதிகம்” எனச் சமாளித்தார் காயத்ரி., புரியாது விழித்த அகத்தினியனையும், சந்தியாவையும், கண் ஜாடையிலேயே உண்மையைச் சொல்ல வேண்டாம் தடுத்தார் காயத்ரி.

“எல்லாம் சரி இருபத்தி ஏழு வருசம் வராத நீங்க இப்போ எதுக்காக வந்திருக்கீங்க.?” நாளிதழை கீழே வைத்துவிட்டு எழுந்து நின்று கேட்டார்.

“வந்திருக்கவியள வான்னு சொல்லறது தான், நம்ம மரபு” எனக் கோபமாய்க் கணவன் புறம் திரும்பினார் ஜெயக்கொடி.

“உபசரிப்பு, வரவேற்பெல்லாம், உறவுகளை மதிக்கிற குடும்பத்துக்குத் தான்” என்ற முத்துவேலின் சொல்லில் நெருஞ்சி முள்ளின் மேல் நிற்பதை போல் உணர்ந்தார் காயத்ரி.

“இப்போ என்ன நடந்து போச்சு மாமா, எங்க அப்பா எதோ தப்பு பண்ணிருக்காங்க தெரியுது, அந்தப் பகை இன்னக்கி வரைக்கும் தொடருதுன்னும் தெரியுது மாமா, இதுக்கு முடிவே இல்லையா.?” அகத்தினியன் தைரியமாய்ப் பேச,

“முடிவு உண்டு மாப்பிள்ளை”

“அந்தச் செந்தில் நாதன், என் காலுல விழுந்து மன்னிப்பு கேட்டாகணும்”

“முடியாது மாமா”

“இனியன் நோ” தடுத்தார் காயத்ரி.

“அப்பனுக்குத் தப்பாமல்ல பொறந்திருக்க, நெஞ்சை வெடச்சிகிட்டு நிக்குத, உங்க அப்பன் மாதிரியே” என வார்த்தைகளை அள்ளி வீசினார் முத்துவேல்.

“நீங்க என்ன நினைச்சாலும், எங்க அப்பாவ உங்க கால்ல விழ வைக்க முடியாது மாமா” என ஆக்ரோஷமாய் அவன் கத்தி விட,

எதோ சண்டை நடப்பதாய் கடையில் இருந்த படி உணர்ந்தவள், கடையில் இருந்து வெளியே ஓடி வந்தவள் வீட்டின் வாசலில் நின்றாள், தாயின் கண்ணீர் சொல்லாமல் சொல்லியது பிரச்சனையின் வீரியத்தை, தலையும் புரியாமல் வாலும் புரியாமல் மிரண்டபடி நின்றாள் அவந்திகை.

“அதான் தெரியுமே டே, உன் அப்பன் வீம்பு பிடிச்சவன்னு”

“எங்க அப்பா” என அவன் இறந்த செய்தியை அவன் சொல்ல முற்பட, அவன் வாயை கை வைத்து மூடியிருந்தார் காயத்ரி.

“அவர் வந்ததும், உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லுறேன்” என ஒற்றை வரியில் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்தார் காயத்ரி.

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்