
ஜோவியின் குடும்பத்தை மதுரைக்கு வழியனுப்பி வைக்க, குடும்பமாக ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர்.
ரயில் கிளம்ப, இன்னும் அரை மணி நேரம் இருந்தது. பயணத்தில் அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்த விபு, மாமனாருடனும் ஜீவியுடனும் நின்றுக் கொண்டான்.
மகள் ஜோவியை தனியாக அழைத்து தன்னுடன் நிறுத்தினார் மேகவாணி. அவர்கள் இருவரும் தனியாக செல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
“ஜோவி மா ! உன் அத்தை ரொம்ப நல்லவங்க. அதுக்காக நீ நம்ம வீட்ல இருக்கிறது போல அங்க இருக்கலாம் நீ நினைக்கக் கூடாது.
அவங்க கிட்ட கேட்டு நீ எல்லாத்தையும் பார்க்கணும். உன் கடமையை நீ சரியா செய்யணும். வார்த்தைக்கு வார்த்தை அவங்க கிட்ட வாயாடாம உன் பக்க நியாயத்தை எடுத்து சொல்லு, புரிஞ்சுப்பாங்க.
இது நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை, நல்லவிதமாக கொண்டு போறது உன் கையில தான் இருக்கு. அதே நேரம் உனக்கு என்ன நடந்தாலும் நீ அம்மா கிட்ட அப்பா கிட்ட சொல்லணும் ஜோவி மா ! உனக்காக நாங்க எப்பவும் இருப்போம் ” என்று மகளை பிரிய போகின்ற தவிப்பிலும் அவள் வாழப் போகும் வாழ்க்கையை நினைத்து பயத்திலும் பள்ளிக்கு செல்லும் சிறுபிள்ளையிடம் கூறும் அறிவுரை போல கூறினார்.
அவளும் “சரி ம்மா “என்று தலையை ஆட்டினாள்.
“அடுத்து என்ன பண்ண போற ஜோவி?”
“இன்னைக்கி பி. எட் காலேஜ் போகணும் சொல்லி இருக்கார் ம்மா ! உங்களை சென்ட் ஆப் பண்ணிட்டு அங்க தான் போக போறோம். செகண்ட் இயர் கண்டினு பண்ண போறேன் ம்மா”என்றாள். அதை கேட்டதும் அவருக்குள் சிறு திருப்தி.
“சந்தோஷம் ஜோவி ! எங்களை போல மாப்பிள்ளைய பாடு படுதாம ஒழுங்கா படிச்சி முடி ! வேலைக்கு போகணும் எண்ணம் இருந்தா போ !
அம்மா மறுபடியும் சொல்றேன் உனக்கு இங்க என்ன நடந்தாலும் அம்மா கிட்ட சொல்லு ! உடனே அப்பாவ கூட்டிட்டு வந்துடுவேன். எதையும் உள்ளுக்குள்ளே வச்சி கஷ்டப்பட்டுட்டு இருக்காத ஜோவி மா புரியுதா !”என மீண்டும் மீண்டும் அவர் அழுத்திச் சொல்ல, நேற்று விபு சொன்னது அவளது நினைவிற்கு வந்தது. அதை வாய் விட்டு அவரிடம் கேட்டும் விட்டாள்.
“ம்மா, இன்னும் உங்களுக்கு விபு மேல முழுசா நம்பிக்கை வரலையா??”
அவள் கேட்டதும் சற்று தடுமாறியவர் “நம்பிக்கை இல்லாம தான் உன்னை அவருக்கு கட்டிக் கொடுத்தேனா? என்ன பேசற நீ?” எனக் கடிந்தார்.
குரலில் ஒரு நடுக்கம் இருந்ததை உணர்ந்தவள், மெல்ல புன்னகைத்து, “உங்களுக்கு விபு மேலே முழு நம்பிக்கை வரும் ம்மா ! அவன் என்னை அப்பிடி பாத்துப்பான். நாங்க தேர்ந்தெடுத்த வாழ்க்கை நிச்சயம் தப்பா போகாது. நீங்க நிம்மதியா வீட்டுக்கு போங்க “என்று கட்டி அணைத்தாள். அவருக்கோ கண்ணீர் வந்து விட்டது. மகளை இறுக்க அணைத்துக் கொண்டார்.
வேலைக்கு சேர்த்து விட்டு வழியனுப்பி வைக்கும் போது கட்டி அணைத்து அழுத மகள். இன்று சிரித்துக் கொண்டு வழியனுப்பி வைப்பதை அவரால் நம்ப முடியவில்லை.
“அம்மாவ மிஸ் பண்ணுவ தான !!!”
“கண்டிப்பா ! உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ம்மா ! “என்று கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. எல்லாரும் ஒன்று கூடி நின்றனர்.
“மாமா !! ஜோவிய…”என இழுக்கும் போதே ,”என்ன டா ஜோவிய கண்கலங்காம பாத்துக்கணுமா?”என நக்கலாக கேட்டான் விபு.
“ச்ச ச்ச ஜோவிய கல்யாணம் பண்ணி இருக்கீங்க. நீங்க கண் கலங்காம இருக்கணும் சொல்ல வந்தேன். பெட்டர் மாஸ் லைட் வேணும் அடம்பிடிச்சி கட்டிருக்கீங்க , உங்க வாழ்க்கை எப்படி பிரகாசமா இருக்க போகுதோ?!” என்று வராத கண்ணீரை துடைத்த படி வருத்தம் கொள்ள, விபுவோ வாய்விட்டு சிரித்தான்.
“அப்பாஆ…! உங்களுக்கு இவன் தேவையான்னு சொல்லுங்க ! ஏதாவது ஒரு டிரெயின்ல ஏத்தி வேற ஊருக்கு கடத்தி விடுறேன்”என்று பொய் கோபத்துடன் சொன்னாள் ஜோவி.
“ஜோவி கொஞ்சம் திருத்தம், உன்னை தான் ஊர் விட்டு ஊர் கடத்தி விட்டுட்டு நாங்க போறோம்” என கிண்டல் செய்ய “அப்பா….”என மீண்டும் கடுப்பாக கத்தினாள்.
“சும்மா இருடா “என்று மகனை அடக்கியவர், விபுவிடம், ” என்னவோ தம்பி !! அன்னைக்கே என் மகளை பாத்துங்க உங்க கிட்ட ஒப்படைச்சேன். பாத்துக்கிறேன் சொன்னீங்க, வருஷக் கணக்குல பாத்துப்பீங்க நான் நினைச்சா நீங்க வாழ்நாள் மொத்தமும் அந்த பொறுப்பை எடுத்துக் கிட்டீங்களே ! உங்களுக்கு பெரிய மனசு தம்பி “என்று இவரும் மகளை கிண்டல் செய்ய, ” நீங்களுமா ப்பா”என உதட்டை பிதுக்கினாள்.
அவளிடம் “சும்மா டா “என்றவர்,”பாப்பாவ பாத்துகங்க தம்பி !! இனி எங்க பொண்ணு உங்க பொறுப்பு ! உங்க மேலே எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. நீங்க அதை காப்பாத்துவீங்க நான் நம்புறேன் தம்பி ” என்றார் விபுவின் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டு, அவனது பார்வையோ அருகே இருந்த வாணியின் மீது படிய அவரோ அவனை பார்க்கவில்லை.
“உங்க நம்பிக்கைய நான் காப்பாத்துவேன் மாமா ! உங்க பொண்ணு இப்போ என்னோட உயிர். அவளை பத்திரமா பாத்துப்பேன். நீங்க தைரியமா இருங்க , உங்களையும் அத்தையையும் பாத்துக்கங்க மாமா”என்றவன்,
“ஜீவி!! அத்தையும் மாமாவையும் பார்த்துக்கற பொறுப்பு உனக்கு இருக்கு நீ தான் கவனமா பாத்துக்கணும்… எதுனாலும் போன் பண்ணு நான் வந்துடுவேன்” என்றான். தலையை ஆட்டிக் கொண்டே ஜீவிதன், தான் மாமனை அணைத்து விடுவித்தான்.
“அண்ணி ! அவ இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா கத்துட்டு இருக்கா ! நீங்க சொல்லி கொடுங்க அவ கத்துப்பா ! கொஞ்சம் செல்லம், ஆனா பொறுப்பா இருப்பா ! பாத்துங்க அண்ணி !”என சுதாவின் கைகளை அழுத்திப் பிடித்து மகளை கண்ணீர் கம்பளியுமாக சுதாவிடம் ஒப்படைக்க,
சுதாவோ “என்ன அண்ணி நீங்க?! எங்க வீட்டு பொண்ணை எங்களே பாத்துக்க சொல்றீங்க ! ஜோவி, இப்போ என் பொண்ணு ! அவளை நான் பாத்துக்காம யார் பாத்துப்பா ? நீங்க எந்தக் கவலையும் இல்லாம போங்க… “என்றார் ஆதரவாக,
அந்தப் பாச பரிமாற்றங்களை ஓரமாக மகனை வைத்துச் சிரிப்புடன் பார்த்து நின்றிருந்தாள் ஜனனி.
அவளைக் கண்டதும் அவள் அருகே வந்த வாணி, சச்சினை தூக்கி கொஞ்சி விட்டு, “நீயும் ஜோவியும் வேற வேற இல்ல எனக்கு. நீயும் என் பொண்ணு தான். உன்னை முதல் முறையா பார்த்த நான், என் மகளுக்கு நீ இடைஞ்சலா இருப்பீயோ நினைச்சிருக்கேன். அது தப்பு என் மனசுக்கு உரைக்க, நீ நடந்துக்கிட்ட. ஆனாலும் உள்ளுக்குள் சின்ன நெருடல் இருக்கு ஜனனி “என்றதும் அவளோ”என்ன நெருடல் ம்மா?”
“நீ இருந்த இடத்தில இப்போ ஜோவி இருக்கா? நீ தனியா நிக்கிறது தான் என் நெருடலே ! சீக்கிரமா உன் மனசு மாறி , ஒரு வாழ்க்கை துணைய தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் தான் எனக்கு இந்த நெருடல் குறையும். அதுக்காக உன்னை கட்டாயப்படுத்தல ! உன் வாழ்க்கைக்காக நல்லா யோசி ஜானு! நான் வரேன்”என்று அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு சென்றார். ரயில் கிளம்பிட மூவரும் அவர்களிடம் விடைப்பெற்று கொண்டனர்.
கண்ணீருடன் தாய் , தந்தை, தம்பியை அனுப்பி வைத்தாள் ஜோவி. அவளை தோளோடு அணைத்துக் கொண்டான் விபு !
வீட்டிற்கு வந்து விட்டனர். ஜோவியை அழைத்துக் கொண்டு விபு கல்லூரிக்குச் செல்ல தயாராகிட, மூவரிடம் சொல்லிக் கொண்டு ஜனனி, சச்சினை அழைத்து, தன் வீட்டிற்கு வந்து விட்டாள்.
ஜனனியின் முகத்தில் களைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. இருந்தும் வீட்டு வேலைகளைப் பார்க்க முனைந்த ஜனனியை தடுத்து உறங்கச் சொல்லி அனுப்பி வைத்தார் வள்ளி. ‘சச்சினை தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி’ அவளை அறைக்குள் அனுப்பி வைத்தார்.
அவளுக்கும் உறக்கம் தேவைப்பட்டதால் அறைக்குள் வந்ததுமே மெத்தையில் சரிந்தாள். தனது அலைபேசியில் அலாரம் வைத்து தூர வைக்கப் போனவள் என்ன நினைத்தாளோ புலனத்தை எடுத்து பார்க்கலானாள்.
அவனிடமிருந்து ‘ இனிய இரவு, இனிய காலை வணக்கம், திருமணம் எப்படி முடிந்தது? பிஸியா? ஹாய் சொல்லக் கூட நேரம் இல்லையா? எப்போ மேடம் மெசேஜ் பண்ணுவீங்க? “என்று அவனது தவிப்புகளும் ஏக்கங்களும் குறுஞ்செய்திகளாக அனுப்பி வைத்திருந்தான்.
அவளோ அதை முறுவலுடன் வாசித்து விட்டு பதிலேதும் அனுப்பாமல் அலைபேசியை அணைத்து வைத்து விட்டு உறங்கச் சென்றாள்.
ஆனால் குறுஞ்செய்திகளுக்கு சொந்தக்காரனோ இன்றும் அவளது பதில்கள் வராது போக, கடுப்புடன் காலை சமையலை செய்துக் கொண்டிருந்தான்.
கொதிக்கும் எண்ணெயில் கடுகை சொத்தென போட, அது படபடவென வெடிக்க ஆரம்பித்தன. படபடவென வெடித்து வெளியே கொஞ்சம் தெறிக்க, அது பக்கத்தில் நின்றிருந்த பஞ்சம்மாளின் முதுகிலும் பட்டு விட, சுர்ரென்று வலிக்கவும் திரும்பி பக்கவாட்டில் நின்றவனையும் கடாயையும் மாறி மாறிப் பார்த்தார்.
வாய்க்குள் எதையோ முணுமுணுத்து கொண்டிருந்தான் இளன். அவன் முகத்தை பார்த்தார். அவர் பார்ப்பத்தை கவனிக்காது தாளித்து விட்டு சட்னியில் கொட்டினான். கடுகுக்கு போட்டியாக கடுகடுப்புடன் இருந்தான்.
“அடேய் இளா ! யாரை போட்டு இப்படி தாளிக்கற?”என அவன் வாய்க்குள் அரை படும் நபர் யாரென அறிய கேட்டார்.
“கடுக போட்டு தான் தாளிப்பாங்க !பின்ன உன் புருஷனை போட்டா தாளிப்பாங்க !”என அந்தக் கோபத்திலும் அவரை கேலிச் செய்யும் வேலையை மறக்கவில்லை.
“கடாயில என்னத்த போட்டு தாளிக்கிறன்னு கேக்கல கருவாபயலே ! உன் வாயில யாரை போட்டு தாளிக்கிறனு கேட்டேன்? என் புருஷன இழுக்கலேன்னா அந்த நாளே விளங்காதுல உனக்கு ?” என்றவர் திட்ட,
“ஆமா விளங்காது !! வைரலிங்கத்தை இழுத்து பேசலைன்னா எப்பிடி அந்த நாள் விளங்கும் எனக்கு சொல்லு !”என மீண்டும் கேலியில் இறங்கினான்.
“ப்ச் ! அந்தாளை விடு ! எனக்கு பதில் சொல்லு, யார் மேல துரை கோபமா இருக்கீரு?! “
“வேற யார் மேலே கோபமா இருப்பேன். எல்லா கோபமும் உன் பேத்தி மேல தான். ஒரு வாரமா மெசேஜ்ஜும் பண்ணல போனும் பண்ணல ! இங்க ஒருத்தன் அவளுக்காக காத்திட்டிருக்கேன் தெரிஞ்சும் அக்கறை இல்ல !!! அந்தக் கோபம் தான்!”என்றவனின் குரல் தழுதழுத்தது.
“அவ தோஸ்துக்கு கல்யாணம்னு நீ தானச் சொன்ன ! அதுல வேலை பிசியில பேசாம விட்டிருப்பா ! ஃப்ரீ ஆனதும் எடுத்து பேச போறா !!! இதுக்கு எதுக்கு அந்தப் பொண்ணு மேலே கோபப்படுற நீ?! “எனப் பார்த்திடாத பெண்ணவளுக்காக பேச, அவரை தீயாக முறைத்து வைத்தான் இளன்.
“என்ன பேசிட்டேன் முறைக்கற நீ?!”என முகம் சுருக்க,
“அவளுக்கு என்ன எல்லாரும் கூட இருக்காங்க… ஆனா எனக்கு அவளும் அவ மெசேஜ்ஜும் தான எல்லாம். அது அவளுக்கும் தெரியும். கிடைக்கற நேரத்துல ஒரு வார்த்தை பேசி அனுப்பச் சொன்னேன்… ஒரு வாரம் ஆகுது பஞ்சு ! ஒரு மெசேஜ் இல்ல ! காலும் இல்ல ! எனக்கு பைத்தியமே பிடிக்குது பஞ்சு !!! “என்று தலையைப் பிய்த்து கொள்ளாத குறையாக அவன் கத்த, அவருக்கு அவனை நினைத்து பாவமாக இருந்தது.
“ஆம்பள உனக்கே இந்தச் சமையல் கட்டுல வேலை அதிகம்… பொம்பளை அவளுக்கு இருக்காதாப்பா !!! கொஞ்சம் பொறுமையா இரு ! இன்னைக்கி அவ பேசிடுவா !!! பஞ்சு சொல்றேன் பழிக்கும் பாரேன்”என அவனது நாடியை பிடித்து கொஞ்சிட, அவன் சமாதானம் ஆகும் முன்னே மேலும் அவனது கோபத்தை ஏற்றும் விதமாக கூடத்திலிருந்து கட்டளை ஒன்று சத்தமாக வந்தது.
“இளா…! பாப்பா எழுந்து வந்துட்டா ! பால் கொண்டு வா !!!”
” இவ ஒருத்தி எழுந்து தொலைஞ்சிட்டா !!! இனி அடையற வரைக்கும் என் பேர ஏலம் விடுவா !! சீக்கிரமா இங்க இருந்து கிளம்பணும் பஞ்சு !! எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல !!! “என்று சலித்து கொண்டு, சூடான பாலில் அவளுக்கு பிடித்த பொடியை கலந்து பஞ்சுவிடம் நீட்டி ” போய் குடுத்திட்டு வா அந்த மகாராணிக்கு”என்றான்.
“நானா? நான் போனா, அந்தக் கிழவி, ஏதோ சக்களத்திய பார்த்த மாதிரி கத்தி தள்ளுவா ! நீ போடா பேரா !!! “என மீண்டும் கொஞ்ச,
“முடியவே முடியாது தோசை ஊத்தணும் எனக்கு நிறைய வேலை இருக்கு, நீயே போய் குடு “என்றான். அடுப்பில் அந்தப் பெரிய கல்லை வைத்து தேய்த்த படி.
இவரும் மெதுவாக ஆடி அசைந்து சமையலறையில் இருந்து கூடத்தை அடைய, வெளியே நீள் விருக்கையில் அமர்ந்திருந்த வசந்திக்கும் அவரது தோளில் சாய்ந்திருக்கும் மித்ராவிற்கும் பஞ்சுவை கண்டதும் எரிச்சலாக இருந்தது.
“பச்… வசு ! “என பல்லை கடிக்க, வசந்தி, பஞ்சுவை தீயாக முறைத்தார். காரணம் தெரியாமலே அவரது முறைப்பை பெற்றுக் கொண்ட பஞ்சு வழிந்த படி”பாப்பா பாலு !”என அவளிடம் நீட்டினார்.
விட்டால் சுட்டு அவரை விழிகளாலே எரித்து விடுவாள் போலும் அப்படி ஒரு பார்வை பார்த்து விட்டு, பாலை எடுத்து ஒரு மிடறி பருகியவள் முகத்தை சுளித்தாள்.
“வசு!! பால் கேட்டா பச்சை தண்ணீ குடுக்கிறாங்க உன் பேத்திக்கு ! எனக்கு இந்த பாலே வேணாம் போங்க”என விறுவிறுவென மாடி ஏறிச் சென்று விட்டாள்.
“மித்து !! மித்து குட்டி இருடா சூடு பண்ணி கொண்டு வரச் சொல்றேன்”எனக் கெஞ்ச, அவரது குரல் காற்றில் கரைந்து போனது அதற்குள் மித்து அறைக் கதவை தாளிட்டு இருந்தாள்.
“கிழவி !ஆடி அசந்து வந்து ஆறிப் போன பால என் பேத்திக்கு குடுக்கற, இதுனால என் பேத்திக்கு சளி பிடிச்சா நீ வந்து பாப்பீயா? பசியோட வந்தா என் பேத்தி, எதுவும் வேணாம்னு போயிட்டா ! அவளுக்காக தான நீங்க இங்க இருக்கீங்க, ஆனா அவளுக்கு அதை கூட ஒழுங்கா குடுக்க முடியல உங்களால! எங்க அந்த இளா , கொளா அவன வர சொல்லு !”என்னும் போதே அவனே வந்தான்.
“என்ன வேணும் உங்களுக்கு?!”என சலிப்புடன் வந்து கேட்டான்.
“ஒழுங்கா பாலை சூடு பண்ணி என் பேத்திக்கு கொண்டு போய் குடுக்கற! இல்ல உன்னை வேலை விட்டு தூக்கிடுவேன்”என்று அவர் மிரட்ட,
தலைக்கு மேல் கையை வைத்து கும்பிடு போட்டவன் “அதை முதல்ல செய்ங்க” என்று உள்ளே சென்று, பாலை சூடு செய்து எடுத்துக் கொண்டு மேலே அவளது அறைக்கு சென்றான்.
அறை கதவு தட்ட, “எஸ் கம்மின்” என்று உள்ளிருந்து குரல் வர, கண்களை மூடி தன்னை சமம் செய்து உள்ளே சென்றவன், அவள் நின்ற கோலத்தை கண்டு சட்டென அதிர்ந்து திரும்பி நின்றான்.
அவன் திரும்பி நின்றதும் மித்ரா, அவனை பின்னால் வந்து அணைக்க, இருந்த கோபத்தில் அவளை தன்னிடமிருந்து பிரித்தவன், சப்பென அறைந்து விட்டு வெளியேறியிருந்தான். கன்னத்தில் கை வைத்தபடி கண்ணீருடன் மெத்தையில் இருந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
+1
+1

