
விஷ்வாவும் அருணும், மர வீட்டில் நிஷிதாவை கட்டிப்போட, மயக்கத்திலிருந்து கண் விழித்தவள், “ஏய்! என்னை விடுங்கடா! என்னைக் கடத்திட்டா எதுவும் நடக்காதுன்னு நினைக்கிறீங்களா? என் பாஸ்க்கு மட்டும் தெரிஞ்சுச்சு, உங்க நாலு பேரையும் கொன்னு புதைச்சுடுவாரு! விடுங்கடா என்னை?” என்று கத்த, அவர்களோ அவள் பேசியதை காதிலேயே வாங்கவில்லை. முதலில் கத்தியவள், பின் “எனக்கு ஊசியைக் குடுங்கடா, எனக்கு அது வேணும். தலை வலிக்குது. குடுங்கடா!” என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்.
அம்மு, ஒரு புத்தகத்தை எடுத்துப் பக்கத்தைத் திருப்பிக் கொண்டிருக்க, அதனை வெடுக்கெனப் பிடுங்கிய தமி, “என்னடி நினைச்சுட்டு இருக்க? அங்க, அவனை அப்படி பார்த்து வச்சுட்டு இங்க வந்து கூலா புக்கு படிக்கிற?” என்று முறைத்திட,
“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்? சைட் அடிச்சது ஒரு குத்தமா? நம்ம அடிக்காத சைட்டிங்கா?” என்று தோளைக் குலுக்கினாள். தமி, “ப்ச்! அதெல்லாம் ஏதோ விளையாட்டுக்கு சொல்லுவோம்.
ஆனால், நீ விளையாட்டுக்குச் சொல்லலைன்னு எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும்…” என்றாள் கண்டிப்பாக.
அம்மு, புத்தகத்தை மூடி வைத்து, “ஆமா நான் சீரியஸா தான் சொன்னேன்… ஐ லைக் ஹிம்.” என்று கண்ணில் ரசனையோடு கூறியவளைக்கண்டு அதிர்ந்தவள், “யூ லைக் ஹிம் ஆ? இல்ல யூ லவ் ஹிம் ஆ?” என்று தமி கூர்மையாகக் கேட்டதில் பெருமூச்சு விட்டாள்.
“தமி… எனக்கு இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல! ஐ நோ. இது முட்டாள்தனம் தான். நேத்துவரை அவனை ஜொள்ளு, அது இதுன்னு திட்டிட்டு, இப்போ, இப்படி பண்றது எனக்கே ஆச்சர்யமா தான் இருக்கு. ஆனால், எனக்கு அவனைப் பிடிச்சுருக்கு. எப்படி சொல்றதுன்னு தெரியல… பட் அவன் கூட லைஃப் லாங் இருக்கணும்னு தோணுது…” என்றாள் அவளுக்குப் புரிய வைக்கும் நோக்கில்.
அதில், “இதெல்லாம் சரியா வருமா? அதுவும் இல்லாம அவனுங்க திருடிட்டும், கடத்திட்டுமா இருக்கானுங்க… வீட்டுல சொன்னா செருப்படி தான் விழும்.” என்றதும், கமுக்கமாகச் சிரித்தவள், தமி காதில் ஏதோ முணுமுணுக்க, அவள் விழி விரித்து, “நிஜமாவா” என்க, அம்மு “ஆமா” என்று கண்ணடித்தாள்.
தமி, “அந்த அருண் சொன்ன மாதிரி நம்ம லூசு தான் போல அம்மு…. எல்லார் கிட்டயும் ஏமாந்துடுறோம். இதை முதல்ல ரெண்டு பேர்கிட்டயும் சொல்லணும்.” என்று இருவரும் வைஷுவை பார்க்கச் செல்ல,
அவள் அழுதுகொண்டு அமர்ந்திருந்த கோலம் கண்டு அதிர்ந்தனர்.
அப்போது தான், தேவாவும் ஆருவும் அங்கு வர, தேவா அவசரமாகக் கிளம்பி மர வீட்டிற்குச் சென்றான். ஆரு, “ஹே கைஸ்! ஐ காட் இட்!” என மகிழ்ச்சியாகத் தோழிகளைக் காணச் செல்ல, வைஷு அழுது கொண்டும், மற்றவர்கள் அவளைச் சமாதானம் பண்ணிக்கொண்டும் இருந்ததை கண்டு திகைத்து, “என்ன ஆச்சு?” என்றாள்.
அம்மு, “எல்லாம் நிஷாந்த் பார்த்த வேலை தான். இவளை சரி பண்ணுவான்னு பார்த்தா, கூடக் கொஞ்சம் ஹர்ட் பண்ணிட்டு போயிருக்கான். இடியட்” என நடந்ததை கூறினர்.
“எனக்கு ஊசி வேணும்! ப்ளீஸ், எனக்கு ஊசி குடுங்க!” என்று கயிறை அறுக்க முயற்சி செய்து நிஷிதா கத்திக் கொண்டிருக்க, தேவா வேகமாக அங்கு வந்தான் கையில் ஊசியுடன். அதனைப் பார்த்துக் கண்கள் மின்னியவள், “குடு! குடு! சீக்கிரம் குடு!” என்றிட, அவன் சிரிஞ்சை கழட்டி, அந்த மருந்தைக் கீழே ஊற்றப் போனான்.
அதில் அவள் கண்கள் சிவந்து “வேணாம், வேணாம் ப்ளீஸ்… கீழ ஊத்திராத! ஐ நீட் இட்… ப்ளீஸ்…!” என்று பிதற்றியவளிடம், “உனக்கு இது வேணும்னா எனக்கு நீ சில டீடைல்ஸ் சொல்லணும்…” என்றதும்,
“நீ என்ன கேட்டாலும் சொல்றேன்… எனக்கு அதைக் குடுத்துடு” என்றாள் பதட்டமாக.
தேவா “இன்னைக்கு சரக்கு எங்க கை மாறுது.” என்று கேட்டதும், அவள் முகம் வெளிறிவிட்டது. “அது அது, எனக்குத் தெரியாது.” என்றவள் கண்கள், அந்த ஊசியைக் கை நடுக்கத்துடன் பார்க்க, அவன் அந்த மருந்தைக் கீழேயே கொட்டிவிட்டான்.
“நோ நோ! எனக்கு வேணும்!” என்று கதறியவளிடம், மற்றொரு ஊசியைக் காட்டியவன், “இது தான் லாஸ்ட். இன்னொரு தடவை நான் கேட்குறதுக்கு பதில் சொல்லாமல் இருந்தா, இதையும் கீழ கொட்டிடுவேன்… இந்த ஊசியைப் போடலைன்னா, உனக்கு என்ன ஆகும்னு தெரியும்ல … ம்ம்?” என்று அதட்டியதில் மிரண்டு விட்டாள்.
“நான் சொல்லிடறேன்” என்று சரணடைந்ததும், தேவா, “ம்ம்… சொல்லு இன்னைக்கு சரக்கு, எங்க இருந்து யார் கிட்ட கை மாறுது?” எனக் கேட்டான். இதனைச் சொன்னால் அவன் கொலை செய்வான், சொல்ல வில்லை என்றால் இவன் என்னைக் கொன்று விடுவானென உள்ளுக்குள் மிரண்டவளுக்கு, அந்த ஊசிதான் தனக்கு வேண்டும் என்று மூளை உரைத்ததில், “இந்தத் தடவை, சரக்கு ரோடு வழியா கொண்டு வரல… போன தடவை சரக்கை யாரோ திருடிட்டாங்கன்றதால ஹெலிகாப்டர் மூலமா மினிஸ்டர் இடத்துக்குக் கொண்டு போறாங்க. எனக்கு அதைக் குடுத்துடு ப்ளீஸ்…” என்று ஊசியிலேயே நின்றாள்.
அருண், “மச்சான், ஹெலிகாப்டர்ல கடத்துறாங்களா? ஆனால் அந்த மினிஸ்டர்கிட்ட ஹெலிகாப்டர் இல்லையேடா? ஒருவேளை வாங்கிருப்பானோ” எனச் சந்தேகமாகக் கேட்க, தேவா மறுப்பாகத் தலையாட்டி ரகசிய குரலில், “சம்திங் ஃபிஷி… ஒருவேளை அவனுக்குச் சரக்கு குடுக்குறவனே ஹெலிகாப்டர்ல அனுப்பி வைச்சுருந்தா?” என்க,
“ப்ச், அவனுக்கு என்னடா தேவை…? சரக்கை விக்கிறது மட்டும் தான் அவனுங்க வேலை. அதைச் சரியா கொண்டு வர்றது மினிஸ்டர் வேலை தான். எதுக்கு, அவன் ரிஸ்க் எடுத்து அவனோட ஹெலிகாப்டர்ல மினிஸ்டர்க்கு குடுத்து விடணும்? அதுக்கு அவசியமே இல்லையே?” என இருவரும் குழம்புவது போல் நடித்தனர்.
நிஷிதா “ஐயோ! இப்போ என்ன உங்களுக்கு? அந்த சரக்கை மினிஸ்டர் ஸ்டோர் பண்ணி வைக்கிறது தான், அவன் வேலை. மத்தபடி, சரக்கைத் தயாரிக்கிறது, விக்கிறது, அது மூலமா லாபம் பார்க்குறது, ஆர்கன்ஸ் எடுக்குறதுலாம் அவன் தான்…” என்று நிறுத்தினாள்.
தேவாவும் அருணும் இதைச் சொல்ல வைக்கத் தான, இவ்ளோ நேரம் புரியாத மாதிரி பேசுனோம் என்று வெற்றிப்பார்வை பார்த்துக் கொள்ள, தேவா அவள் அருகில் நெருங்கி “யாரு” என்றான் கூர்மையாக.
“அதான், தி கிரேட் பிசினெஸ் மேன் ஷிவ்… இம்போர்ட் எக்ஸ்போர்ட் பண்றவரு. அவரு தான், இந்த எல்லா பிசினெஸ்க்கும் மூலதனம். சின்னா அவரோட ரைட் ஹேண்ட். அவனும் அந்த ஹெலிகாப்டர்ல தான், இன்னைக்கு 3 மணிக்கு சரக்கோட வர்றான். நான் தான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே, அந்த ஊசியைக் குடுத்துடு ப்ளீஸ்” என்க, தேவா விஷ்வாவை ‘ஓகே வா?’ என்று பார்த்தான்.
விஷ்வா “ஒளியும் ஒலியும் சூப்பரா கேப்ச்சர் ஆகியிருக்கு…” என்று போனை காட்ட, அவன் அவளின் ஒரு கையை மட்டும் அவிழ்த்து விட்டு ஊசியைக் கொடுத்ததும், அவள் வேகமாக அதனை வாங்கிப் போட்டாள். சிறிது நேரத்தில் அவள் மீண்டும் கத்த ஆரம்பிக்க, அவளுக்கு மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து விட்டு மூவரும் வெளியில் வந்தனர்.
அருண், “ஒருவழியா ஷிவ் பத்தி ஒரு ஆதாரம் ரெடி பண்ணியாச்சு. ஆனால் இது மட்டும் போதாதுல்ல…” என்றிட, தேவா “ம்ம் இதுலாம் பத்தாது, ரொம்ப ஸ்ட்ராங்கான எவிடென்ஸ் நிறைய வேணும். அதுக்கு முதல்ல, அவன் உண்மையான முகத்தை வெளிய கொண்டு வரணும். இதுவரை அவன் எந்த மீடியாலையும் தன்னோட முகத்தைக் காட்டுனதே கிடையாது…! சீக்கிரம் எல்லாத்துக்கும் ஒரு முற்று புள்ளி வைக்கலாம். அதான் பகடை காயா, நம்ம கூட ஒருத்தி இருக்காளே!” என்று இளக்காரமாகச் சிரிக்க,
விஷ்வா, “தேவா! எதுக்கு இதுல அவளை இழுக்கனும். நம்மளே இதை…” என்னும் போதே அவனை முறைத்தவன்
“என்னைக்கா இருந்தாலும் அவள் நமக்குத் தேவைப்படுவா? நான் சொல்றதை மட்டும் செய்…” என்று அதட்டி விட்டு, மேலும் சில நிமிடம் பேசிவிட்டு குடிலுக்குச் சென்றனர்.
அங்கு, கடுங்கோபத்தில் இருந்த ஆரு, நிஷாந்தின் வருகைக்காக வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். வைஷுவிடம் பேசிவிட்டு வெளியில் சென்றவன், இன்னும் வரவே இல்லை. அவள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருப்பதை கண்ட தேவாவிடம், அவள் “எங்க அவன்…?” எனக் கேட்டதும், “யாரு” என்று புரியாமல் பார்த்தான்.
“அதான் உன் வீணாப்போன பிரெண்டு எங்க அவன்? பேசுறதையும் பேசிட்டு எங்க போய் ஓடி ஒளிஞ்சுருக்கான்…?” என்க, தேவா, “ஏய்” எனக் கொலை வெறியில் அவளை நெருங்க, அருணும் விஷ்வாவும் மிரண்டு அவனைப் பிடித்து அவர்கள் பக்கம் இழுத்தனர்.
அப்போது தான், காடு எல்லாம் கால் போன போக்கில் நடந்து விட்டுத் திரும்பி வந்த நிஷாந்தை கண்ட ஆரு “என்னடா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல…? உன் இஷ்டத்துக்கு லவ் பன்றேன்னு சொல்லுவ! அப்பறம் லவ் பண்ணலைன்னு சொல்லுவ… அவளைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?” எனப் பார்வையால் சுட்டெரிக்க, தேவா “நிறுத்துறியா” என அதட்டினான்.
ஆரு தேவா அருகில் வந்து, “உன் பிரெண்ட்ஸ் அவளைத் திட்டும்போது நான் ஏதாவது சொன்னேனா? அதே மாதிரி நீயும் அமைதியா இரு…” என்று கனலை கக்கியவளை சற்று சுவாரஸ்யமாகப் பார்த்தான்.
மீண்டும், நிஷாந்திடம் வந்தவள் “அவள் அப்பா பண்ணது தப்பு தான். அவர் அப்படி பேசுனதும் தப்பு தான். இவள் உன்னைப் பத்தி அவர்கிட்ட முன்னாடியே சொல்லாம இருந்ததும் தப்பு தான். அதால அவள் காயப்பட்டதை விட, நீ அதிகமாகவே காயப்பட்டுருப்ப. இது எதையும் நான் மறுக்கல. அவள் மேலயும் தப்பு இருக்குறதால தான், உன் பிரெண்ட்ஸ் அவளைத் திட்டும்போது கூட நான் சும்மா இருந்தேன். அவளைப் பார்த்து நாங்க எவ்ளோ ஹர்ட் ஆனோமோ! அதே மாதிரி தான் அவங்களும் ஹர்ட் ஆகிருப்பாங்க. எல்லாம் ஓகே? ஆனால், இப்போ… நீ ஏன் அவள் கிட்ட அப்படி பேசுன? அவளை லவ் பண்ணது என்னமோ கொலை குத்தம் பண்ணுன ரேஞ்சுல பேசியிருக்க! அவ அப்பா உன்னை ஹர்ட் பண்ணது உனக்கு வலிக்கும்னா… இப்போ நீயும் அவரை மாதிரி தான பண்ற…? அவள் அப்பா காதல் மேல இருக்குற கோபத்துல அப்படி பேசுனா, நீ அவரு மேல இருக்குற கோபத்துல அவளைக் காயப்படுத்துற! அப்போ உனக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்…?” என அழுத்தம் திருத்தமாய் வார்த்தையைக் கோர்க்க, அவன் அவனின் நண்பர்களைப் பாவமாகப் பார்த்தான்.
அவர்களுக்குத் தெரியும், அவர்மேல் இருக்கும் கோபத்தில் இப்படி பேசி இருக்க மாட்டான், அவனால் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் வரக் கூடாது என்றும்,
இன்னும் அவனுக்குள் இருக்கும் குற்ற உணர்ச்சியைப் போக்க முடியாமலுமே ஒதுங்கிப் போகிறான் என்று.
அவன் அமைதியாய் நிற்பதை கண்டவள், “ஏதாவது பேசு நிஷாந்த். உன்கிட்ட தான பேசிகிட்டு இருக்கேன். வாயைத் திறந்து பதில் சொல்லு” என்க, வைஷு வேகமாக அங்கு வந்து,
“அவன் எதுவும் சொல்ல வேணாம். அதான் சொல்ல வேண்டியது எல்லாம் தெளிவா சொல்லிட்டானே. ஆனால் அவன் என்ன சொன்னாலும் சரி, என்னால அவனை மறக்கவோ, அவன் வாழ்க்கையை விட்டுப் போகவோ முடியாது. நான் உயிரோட இருக்குற வரை, என் காதல் அவன் மட்டும் தான். அவன் திருடுனாலும் சரி, கடத்துனாலும் சரி, கொலையே பண்ணாலும் சரி… என்னால அவனை வெறுக்க முடியாது.” என்றவள் அவளைக் கலங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்த நிஷாந்தை கண்டு, “ஐ லவ் ஹிம் ஆல்வேய்ஸ்! இனிமே இதைப் பத்தி பேச வேண்டாம்… நம்ம வந்த வேலையைப் பார்ப்போமா?” என்று நிஷாந்தை பாராமல் உள்ளே சென்று விட்டாள்.
அவள் சென்றதும் ஆரு “இங்க பாரு… அவளைக் கழட்டி விடணும்னு நினைச்ச, உன்னைத் தலை கீழா கட்டி இங்கயே தொங்க விட்டுடுவேன்.
அப்பறம், திருட்டு தொழில் கூடப் பார்க்க முடியாது…” என்று விரலை நீட்டி எச்சரித்ததில், நிஷாந்த், அவளை அரண்டு பார்க்க, தேவா நீட்டிய அவள் விரலைப் பிடித்தான்.
“அதான் பேசுற வரை பேசிட்டீல, போ…!” என்றான் அவளை ஆழமாய் பார்த்து. அவனிடமிருந்து விரலை உருவியவள், அனைவரையும் முறைத்து விட்டு, உள்ளே சென்றவளிடம் அம்முவும் தமியும் ஏதோ சொல்ல வர, அவள், “ப்ச், போதும்! எப்போ பாரு அவனுங்களை பத்தியே தான் யோசிக்க வைக்கறானுங்க… நம்ம வேலை முடியுற வரை நம்ம கான்செண்ட்ரேஷன் வேலையில தான் இருக்கணும் புரிஞ்சுதா!” என்று அவர்களுக்கு உத்தரவிடுவது போல், தனக்கு தானே இனிமேல் தேவாவை பற்றி நினைக்கக் கூடாது என்று கூறிக்கொண்டாள். மனமோ அவளிடம் முரண்டு பிடிக்க, அட்லீஸ்ட் ரிசர்ச் முடியிறவரையென சமன்படுத்த, அதன் பிறகே அவள் மனமே சற்று சாந்தமானது.
நிஷாந்த் கலங்கிப்போய் நின்றதில் தேவா, அவன் முதுகை தடவிக் கொடுத்து அமைதிப்படுத்த, அவன் அவனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டான்.
தேவாவுக்கு அவன் கண்ணீருக்கு காரணம் ஆனவர்கள் மேல் எப்போதும் போல் கோபம் வர, அதனை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு, “இன்னும் எத்தனை நாளைக்குடா இப்படி இருக்க போற? நடந்ததுலாம் ஒரு விபத்து. அதையே நினைச்சுகிட்டு, உன்னை நம்பி வந்த பொண்ணை கஷ்டப்படுத்தாத…” என்றவனை வியப்பாகப் பார்த்தான்.
அவள்மேல் இவர்களை விடக் கோபத்தில் இருந்தது தேவாதான். ஆனால் ,அவனே அவளுக்கு ஆதரவாகப் பேசியதில், அவன் மட்டும் அல்லாமல், அருணும் விஷ்வாவுமே வியந்து பார்த்தனர்.
விஷ்வா மெதுவாக, “இவன்தான் பேசுறானா? இல்ல நம்ம தான் எதுவும் கனவு காணுறோமா?” எனக் குழப்பமாகக் கேட்க, அருண் அவள் கையில் நறுக்கெனக் கிள்ளினான்.
அதில் விஷ்வா “ஆஆஆ” எனக் கத்த, அம்மு பதறி அடித்து வெளியில் வந்தவள், “என்னடா ஆச்சு? எதுக்கு கத்துன?” எனக் கேட்டதில், திருதிருவென முழித்தான்.
அருண் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “நீ இவனை ‘சைட்’ அடிச்சீல… அதான் ஏதோ ஆவி அடிச்சுருச்சுன்னு நினைச்சு கத்துனான்!” எனக் கேலி செய்ய, அம்மு அவனை முறைத்தாள்.
தேவா குழப்பமாக “என்னாச்சு விஷ்வா” எனக் கேட்க, அவன் “இந்த அருண் தாண்டா என்னைக் கிள்ளிட்டான்…” எனச் சிறு பிள்ளை போல் புகார் செய்ததில், தேவா பேச வருவதற்குள்,
அம்மு, “டேய் ஏண்டா என் செல்லத்தை கிள்ளுன? இனிமே அவனை ஏதாவது பண்ணுன… உன் கையை வெட்டி சூப் வச்சுடுவேன். பீ கேர்ஃபுல்!” என மிரட்டி விட்டுச் செல்ல, விஷ்வா தான் அவள் ‘செல்லம்’ என்றதில் மிரண்டு நின்றான்.
அருணோ ‘பே’ வெனப் பார்க்க, தேவா “வாட் தி ஹெல் இஸ் ஹேப்பனிங் ஹியர்…?” என்றான் குழப்பமாக. அருண் “அது தான்டா எனக்கும் புரியல. அவள் இவனைப் பார்க்குறதும் அதுக்கு இவன் வெட்கப்படுறதும்! யப்பா என்னாலேயே முடியல” என்றதும்,
விஷ்வா “நான் வெட்கப்பட்டதை நீ பார்த்தியா? அவள் தான் தேவை இல்லாம என்ன டீஸ் பண்றாள்…” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான்.
அதில் புன்னகைத்த தேவா, “டேய்! விட்டா அவள் ஈவ் டீசிங் பண்றானு சொல்லிக் கம்பளைண்ட்லாம் குடுப்ப போல…” என்றிட, அருண், “சொல்ல முடியாது தேவா, பண்ணாலும் பண்ணுவான். பையன் அரண்டு போயிருக்கான்…” என்றதும், தேவா யோசனையுடன் அவனைப் பார்த்தான்.
சிறுவயதில் இருந்தே, தனக்கு இதுதான் வேண்டும் என அவனுக்குச் சொல்லத் தெரியாது. பசித்தாலும் அழுவான், தூக்கம் வந்தாலும் அழுவான், தாயின் நினைவு வந்தாலும் அழுவான். தேவா தான் அவனை உருட்டி மிரட்டி, அவன் அழுகையை குறைக்க வைத்ததே. ஆனால் வளர வளர அவனின் இந்தக் குணம் மட்டும் மாறவே இல்லை.
அழுகவில்லை என்றாலும், அமைதியாக முகம் சுருங்கி விடுவான். கோபம் என்றாலும், வருத்தம் என்றாலும், மனதில் எழும் எந்த உணர்வு என்றாலும், அதனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் திணறுவான். அவனிடம் பேசி, அவனின் தற்போதைய உணர்வு இது தானெனப் புரிய வைக்கவே மூவருக்கும் போதும் போதும் என்று ஆகி விடும்.
இப்போதும் கூட அவன் மனதை ஏதோ அழுத்த, அது என்ன உணர்வு என்று புரியாமல் சிக்கி தவித்தான். விஷ்வா முகத்தைச் சுருக்கி, அறைக்குள் சென்று விட,
தேவா அவனை நோக்கிச் சென்று அவன் அருகில் அமர்ந்து, “என்ன ஆச்சு விஷ்வா? அவள் உன்னை என்ன பண்ணா?” என மிருதுவாகக் கேட்க, சட்டென்று அவன் மடியில் படுத்துக் கொண்ட விஷ்வா, “அவள் என்னை ‘சைட்’ அடிக்கிறேன்னு சொல்றா?” என்றான் பாவமாக.
“நான் அவளைக் கூப்பிட்டு திட்டறேன்” என்று எழப் போனவனை விஷ்வா வேகமாகத் தடுத்து, “வேணா! வேணா! திட்டுற அளவுக்கு அவள் ஒண்ணும் பண்ணல…” என்றதும், தேவா, “ஹ்ம்ம், அவள் பார்க்குறது உனக்குப் பிடிக்கலையா?” எனக் கேட்டான்.
“அப்படிலாம் இல்லயே!” என்றவனிடம், “அப்போ பிடிச்சிருக்கா?” எனக் கேட்டான் புருவத்தை உயர்த்தி. அதில் திருதிருவென விழித்த விஷ்வா, “ஒரு தடவை நான் ஒரு பொண்ணை பார்த்து வளையல் வாங்கி குடுத்தேன்னு சொன்னேன்ல? என் அம்மா மாதிரி அவளுக்கு முடிலாம் நீளமா இருக்குன்னு சொன்னேன்ல, நீங்கக் கூட என்னை அப்படி வாங்கி குடுக்க கூடாதுன்னு திட்டுனீங்கள்ல?” என்று தேவாவிற்கு நினைவுப்படுத்த முயன்றான்.
தேவா “ம்ம் ஆமா… அதுக்கு என்ன இப்போ?” என்று மென்மையாக அவன் முடியைக் கோதிக் கொண்டு கேட்டதில், “அந்தப் பொண்ணு அமுதா தான். அவள் வந்ததுல இருந்து என்னைத் தப்பா நினைச்சு, முறைச்சுகிட்டே இருந்தா. அப்பறம் நான், அவள் கிட்ட நடந்ததை சொன்னேன். அதுக்கு அப்பறம் என்னை, இப்படி பார்த்துகிட்டே இருக்கா” என்றதும்,
தேவாவிற்கு புரிந்து விட்டது, அவளுக்கு இவன்மேல் ஒரு சாஃப்ட் கார்னர் என்று.
இதனைப் பற்றி அவளிடம் பேச வேண்டும் என்று குறித்துக் கொண்டவன், “சரி, அவள் பார்த்தா உனக்கு என்ன? நீ ஆம்பளை பையன் தான? அவள் பார்க்குறான்னு, நீ ஏன் ஷையா ஃபீல் பண்ற விஷ்வா…” எனக் கேட்டதும்,
“தெரியல. உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது அவளைப் பார்த்தாலே! என் அம்மா மாதிரி என்னை ‘செல்லம்’னு வேற கூப்பிட்டாளா, எனக்கு அழுகையா வருது. அவள் என்னை எப்பவுமே அப்படி கூப்பிடணும்னு தோணுது” என்றவன் மீண்டும் அவன் மடியில் புதைந்து கொள்ள, நிஷாந்தும் அருணும் அவன் பேசியதை கேட்டு, ஒருவரை ஒருவர் நக்கல் சிரிப்புடன் பார்த்துக் கொண்டனர்.
அருண் தான், “அட நாசமா போனவனே! அவளை லவ் பண்றேன்னு சொல்றதை ஏண்டா, இத்தனை மாடுலேஷன்ல சொல்ற? இவன் இன்னும் வளரவே இல்லை மச்சான்…!” என்று தலையில் அடிக்க,
தேவா “ப்ச்” என அருணை முறைத்து விட்டு, விஷ்வாவிடம், “சரி டா… நீ ஒன்னு பண்ணு. அவள் பார்த்தா நீயும் அவளைப் பாரு… அவள் உன்னை டீஸ் பண்ணா, நீயும் டீஸ் பண்ணு. அதான், உன் அக்மார்க் ரைமிங் மொக்க இருக்கே. அதுல நாலை எடுத்து விடு…” என்றான்.
விஷ்வா உடனே “அப்படி பண்ணுனா?” எனக் கேள்வியாகக் கேட்க, அருண் “ம்ம், நீ போடுற மொக்கையில, அதுக்கு அப்பறம் அவள் உன் பக்கத்துலயே வரமாட்டா…” என்றான் கேலியாக.
விஷ்வா, “ப்ச் நான் அப்படி பேசுனா என்னைக் கடிச்சு வச்சுருவேன்னு சொல்றா!” என்றதும், தேவா அவளை மனத்தினுள்ளேயே திட்டிக்கொண்டு, “அவள் மிரட்டுனா நீயும் மிரட்டு! அவள் பயந்துடுவாள்… இப்போ கொஞ்ச நேரம் தூங்கு” என்று அவன் தலையைத் தடவிக்கொடுக்க, மனதில் இருந்ததை கொட்டி விட்ட நிம்மதியில் அவனும் அசந்து உறங்கி விட்டான்.
அவன் உறங்கியதும், பெண்களின் அறைக்கு வந்த தேவா, அம்முவிடம், “விஷ்வாவை ஏன் மிரட்டுற? எதுக்கு அவனை ‘சைட்’ அடிக்கிற” எனக் கோபமாகக் கேட்க, அவளோ, ‘என்னடா சைட் அடிச்சா சண்டைக்குலாம் வர்றீங்க…?’ என்று தலையைச் சொரிந்து கொண்டு ஆருவை பார்க்க, அவளோ ‘நல்லவேளை நம்மளை எதுவும் கேட்கலை இவன். ஆனால், பொம்பளை புள்ளைங்களே தோத்துரும்டா உங்ககிட்ட!!!’ என நொந்து விட்டாள்.

