
அந்த மொத்தக் காடும் பகலிலேயே கரும் மேகத்தில் மூடி இருக்க, காடே அதிரும் அளவு வந்த இடியின் சத்தம் காதைப் பிளக்க, சட சட வென மழை பேயாகப் பொழிந்தது. நிஷாந்தை அறைந்த ஆராதனா அவனைக் கொலைவெறியில் முறைக்க, வைஷு அதிர்ந்து விட்டாள்.
தேவாவோ ஆருவை பிடித்து இழுத்து, “ஏய்! எதுக்குடி அவனை அடிச்ச? அவனை அடிக்கிற ரைட்ஸ் உனக்கு யாரு குடுத்தது?” என அடித்த கையைக் கோபத்தில் இறுக்கி பிடிக்க, அவள் வலியில் முகம் சுருங்கினாள். “ப்ச் கையை விடு” என்று எச்சரிக்கையாய் கூறியவளிடம், அவன், “நீ முதல்ல அவன் கிட்ட சாரி கேளு, நீ எப்படி அவனை அடிக்கலாம்? அதுவும் என் முன்னாடி” என்று உச்ச பட்ச கோபத்தில் இடியின் சத்தத்திற்கு மேல் அவன் உறுமினான்.
“ஷ், தேவா கையை விடப் போறியா இல்லையா?” என்று அவளும் கோபத்தோடு சேர்ந்த வலியிலும் கத்த, நிஷாந்த் வேகமாகத் தேவாவை பிடித்து இழுத்து,
“டேய் என்னடா! விடு அவளை…” என்று வலுக்கட்டாயமாக அவள் கையைவிட வைக்க, தேவாவின் பார்வை மட்டும் அவளை எரித்தது.
மற்றவர்களுக்குச் சில நிமிடங்களில் நடந்து விட்ட நிகழ்வில் ஒன்றும் புரியாமல் பார்க்க, வைஷு, அவனை அவள் ஏன் அடித்தாளென உணர்ந்து கொண்டு, “ஆரு” எனப் பாவமாக அழைத்தாள்.
அவளோ பதில் பேசாமல் நிற்க, விஷ்வா, “நிஷாந்த் என்னடா நடக்குது இங்க? உனக்கு இந்தப் பொண்ணை தெரியுமா?” என்றான் புரியாமல். அருண் யோசனையாக, “நீ சொன்ன பொண்ணு, வைஷ்ணவி தானா?” எனக் கேட்க, அவன் தேவாவை சிறிது பயத்துடன் பார்த்து “ம்ம்” எனத் தலையாட்டினாள்.
அதில் இருவரும் அதிர, தேவா தனக்கு இது ஏற்கனவே தெரியும் என்பது போல், கண்டுகொள்ளாமல் நின்றான். நிஷாந்த், “தேவா, அது நீ அவள் மேல கோபமா இருந்தீல. அதான் நான் நான் வந்து சொல்லல” எனத் தயங்கி கொண்டு கூற,
தேவா, “நீ சொல்லலைன்னா எனக்குத் தெரியாதுன்னு நினைக்கிறியா நிஷாந்த்?
இந்தப் பொண்ணுங்களோட குடும்பத்தைப் பத்தி விசாரிக்கும் போதே, எனக்குத் தெரிஞ்சுடுச்சு. இந்த வைஷ்ணவி தான், உன் மாமா பொண்ணுன்னு” என்றிட,
அருணும் விஷ்வாவும் அவளை முறைப்பாகப் பார்த்தனர் ‘நீ மட்டும் எங்கள் வாழ்வில் வராமல் இருந்திருந்தால்?’ என நினைத்து.
ஆனால், பெண்களுக்கு இது புது செய்தி தான். “என்ன மாமா பொண்ணா?” எனப் புரியாமல் பார்த்த ஆரு,
இருவரின் நடவடிக்கையை வைத்து, அவர்களுக்குள் ஏற்கனவே அறிமுகம் இருக்கிறது என உணர்ந்து கொண்டாள். அதன் பின், அவள் காதலித்த பையனும், அவள் எப்போதும் ஏதோ நினைவில் வாடக் காரணம் ஆனவனும் இவனே என்பதை புரிந்து கொண்டவளுக்கு, நிஷாந்த் மேல் கடும் கோபம் இருக்கவே செய்தது.
ஆனாலும், வைஷு என்னதான் செய்கிறாள் என்று பார்ப்போம் என்றெண்ணி தான் அமைதி காத்தாள். ஆனால், இப்போது மாமா பெண் என்றது அவளுக்குக் குழப்பத்தையே கொடுத்திட, தமி, “ஐயோ என்ன சொல்றீங்க…? வைஷு, நிஷாந்த் உன் சொந்தமா? நீ அப்போ லவ் பண்ணேன் சொன்னியே அது இவன் தானா? அப்போ உன் அத்தை பையனை நினைச்சு தான் நீ ஃபீல் பண்ணியா? ஆனால், நீ ஏன் எங்க கிட்ட இதைச் சொல்லல?” எனக் குழம்பி தள்ளியவள், ஆருவை பார்க்க அவளும் அதே குழப்பத்தோடு வைஷுவை பார்த்திருந்தாள்.
அவளோ உதட்டைக் கடித்துக்கொண்டு நின்றிருக்க, ஆரு, “வாயைத் திறந்து பேசு வைஷு… என்ன தான் நடந்து தொலைச்சுச்சு” என்று எரிச்சலாகக் கேட்டதில், அவள் சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வை நினைவுபடுத்தினாள்.
“ஹே! நான் என்னடி பண்ண? எங்க அப்பா பத்தி தான் உங்களுக்கே தெரியும்ல… ஏற்கனவே நான் பன்னிரண்டாவதுல ஆயிரத்து நூத்திப்பத்து மார்க் எடுத்துத்துட்டு BA ஹிஸ்டரி அண்ட் ஆர்க்கியாலஜி படிக்கிறதுல செம்ம காண்டுல இருக்காரு. ஏதோ கை கால்ல விழுந்து படிச்சுட்டு இருக்கேன்.
இதுல ப்ராஜக்ட்காக ரிசர்ச் பண்ணப் போறோம்… அதுவும் ஒரு மாசம்ன்னு சொன்னா? எங்க அப்பா என்னைக் கொன்னு, இந்தியா பார்டர்ல போட்டுருவாரு.” என்று வைஷு போனில் கதறினாள்.
ஆரு, “எப்போ பாரு பயந்து சாகு… நான் வேணா உன் அப்பாகிட்ட பேசவா?” எனக் கேட்க, அவள், “வேணாம் தாயே! நீ எங்க அப்பாகிட்ட பேசுனாலே உனக்கும் அவருக்கும் சண்டை தான் வரும். நீ மகராசியா போயிட்டு வா” என்றதும், அம்மு, “ப்ச் நாங்க இல்லாம நீ எப்படிடி தனியா காலேஜ் போயிட்டு வருவ போர் அடிக்கும்.” என்றதும், தமியும், “ஆமா வைஷு நாங்க வீட்டுல பேசி பெர்மிஷன் வாங்குறோம் வாடி” என்று அழைத்தும், அவள் மறுத்து விட்டாள். அவள் மறுக்க அப்பாவின் மேல் இருந்த பயம் மட்டும் காரணம் அல்ல, வேறொரு முக்கிய வேலையும் அவளுக்கு இருந்தது. ஏனோ! அதனை தோழிகளிடமிருந்து மறைத்து விட்டாள்.
“வைஷு” என்ற முத்துவேலின் கம்பீர குரலில், போனை வைத்து விட்டுப் பதறி வெளியே வந்தவளை, “இன்னும் காலேஜ் கிளம்பாம என்ன பண்ற? சீக்கிரம் கிளம்பு?” என்றவர் வெளியில் சென்றார். அவர் சென்றதை உறுதி செய்து கொண்டவள்,
அடுக்கலையில் இருந்த, அவளின் அம்மா ஜானகியை பிடித்து, “அம்மா அம்மா நான் உன்கிட்ட நேத்தே கேட்டேன்ல, எனக்குக் காட்டு மா” என அவரைப் படுத்த ஆரம்பித்து விட்டாள்.
அவரோ, “வைஷு, இது விளையாட்டு இல்ல. உன் அப்பாவுக்குத் தெரிஞ்சா நம்மளை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாரு” என்று எச்சரிக்க, “அம்மா, அப்பாவுக்குத் தெரியாம நான் பார்த்துக்கிறேன். ப்ளீஸ் மா ப்ளீஸ்!” எனக் கெஞ்சியவளிடம் ஜானகி, “இது எங்க போய் முடியும்னு தெரில!” என்று நொந்து கொண்டு ஸ்டோர் ரூம் சென்று, முத்து வேலுக்கு கூடத் தெரியாமல் மறைத்து வைத்திருந்த அந்தப் பெரிய பிரேம் போட்ட புகைப்படத்தை வைஷுவிடம் கொடுத்தார். அவள் அந்த போட்டோவில் இருந்த அவளின் அத்தை குடும்பத்தை ஆசையாக வருடினாள்.
பல வரலாறுகளை பற்றிப் படித்துக் கொண்டிருந்த வைஷுவிற்கு, திடீரென, நம் குடும்ப வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது,
அதில், அவள் அம்மாவிடம் பேச்சு குடுக்கும்போது தான், அவளின் தாத்தாவின் இரண்டாம் மனைவியின் மகள் ஒருவர் இருந்ததாகவும், அவரை முத்துவேல் அவரின் தங்கை போல் பாசமாகப் பார்த்துக்கொண்டதாகவும் தெரிந்தது. அவரின் தங்கை சாவித்ரி வேறு ஒருவரை காதலித்து, சொல்லாமல் கொள்ளாமல் காதலருடன் ஓடி விட்டதால், தங்கை என்று ஒருவள் இருப்பதையே மறந்திருந்தவர், சில வருடங்கள் கழித்து, கணவன், மகனுடன் வந்தவரையும் ஏற்றுக்கொள்ள மறுத்து அவமானப்படுத்தி அனுப்பி விட்டார் என்பதையும் தெரிந்து கொண்டாள்.
அவர் திருமணம் செய்து சென்றபிறகு தான் ஜானகி இந்த வீட்டிற்கு மருமகளாக வந்ததினால் அவருக்கும் இந்த விஷயமே சாவித்ரி அங்கு வந்தபோது தான் தெரிந்தது. எப்படியாவது சாவித்ரியை குடும்பத்துடன் சேர்க்க நினைத்துத் தோல்வியையே தழுவினார்.
இரண்டு வயது பையனுடன் வந்த அந்த அக்குடும்பத்தை அடை மழையென்றும் பாராது, வீட்டினுள் கூட விடாமல் முரண்டு பிடித்த கணவரிடம் போராட முடியாமல் தவித்தவர், சாவித்ரியிடம் தனியாக, “அவரு என்னைக்காவது ஒரு நாள் கண்டிப்பா மனசு மாறுவாரு. உன்னை இந்த வீட்டுக்குக் கூட்டிட்டு வர வேண்டியது என் பொறுப்பு. நீ நல்லாருக்கீல? உன் வீட்டுகாரர் உன்ன நல்லா பார்த்துக்குறாரா?” என்று அந்த வீட்டு மருமகளாகப் பரிவாக பேசியவரை சாவித்ரிக்கு மிகவும் பிடித்தது.
அங்கிருந்த ஒரு ஐந்து நிமிடத்திலேயே ஜானகியை “அண்ணி” என்று பாசமாக அழைத்தவர், சில நாட்களுக்கு முன் எடுத்த அவரின் குடும்ப புகைப்படத்தைக் கொடுத்து, “என்னைக்காவது அண்ணா என்னை மன்னிச்சா… அவருக்கு இதைக் காட்டுங்க அண்ணி …நான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவரு என்னை ரொம்ப நல்லா பார்த்துக்குறாரு. இப்போ கூட, எனக்காகத் தான் அவர் இப்படி வந்து நிக்கிறாரு. மத்தபடி நான் நல்லாருக்கேன். நான் சொல்லாமல் அப்படி பண்ணுனதும் தப்பு தான். கண்டிப்பா அண்ணா என்னை மன்னிப்பாரு. உங்களைப் பார்த்ததும் எனக்கு அந்த நம்பிக்கை வந்துருச்சு.” என்று கண்ணீருடன் போனவர் தான் அதன் பிறகு அவரை ஜானகி பார்க்கவே இல்லை.
இதை அறிந்து கொண்ட வைஷுவுக்கு தான் பரபரவென இருந்தது. தனக்கு சொந்த அத்தை குடும்பம் இருப்பதை நினைத்து மகிழ்ந்தவள், எப்படியாவது அவர்களைக் கண்டறிந்து, தன் குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என உறுதி எடுத்து, கல்லூரிக்குக் கூட செல்லாமல், அவர்களைப் பற்றி ஆராய ஆரம்பித்தாள்.
கிட்டத்தட்ட ஒரு வாரமாக ராத்திரி பகலாய் ஆராய்ந்ததில், அவள் அறிந்து கொண்ட தகவல், அவளுக்கு மட்டும் அல்லாது ஜானகிக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அன்று தன் அண்ணனைக் காண வந்த, சாவித்ரி குடும்பம் திரும்பிச் செல்லும் போது ஏற்பட்ட கன மழையில், அவர்கள் சென்ற கார் விபத்திற்குள்ளாகி, சாவித்திரியும் அவர் கணவனும் அந்த இடத்திலேயே இறந்து விட்டனர்.
அந்தப் பையனுக்கு மட்டும் உயிர் இருந்ததில் அவனை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.
இதனைக் கேட்ட ஜானகி துடித்துப் போனார். “கடவுளே! இது என்ன சோதனை! வீடு தேடி வந்த பொண்ண இப்படி அற்பாயுசுல கூட்டிட்டு போய்ட்டியே? இதுக்கு தான் அவள் இங்க வந்தாளா?” என அந்த போட்டோவைப் பார்த்து கதற ஆரம்பித்து விட்டார்.
வைஷுவிற்கு நேரில் பார்த்திராத அத்தை குடும்பத்தை நினைத்துக் கண் கலங்கியது. “அந்தப் பையன் என்ன ஆனான் வைஷு?
ஏதாவது தெரிஞ்சுச்சா?” என்று கேட்டவரிடம், “நான் விசாரிக்கச் சொல்லிருக்கேன் மா… அந்த ஆக்சிடென்ட் நடந்தப்போ, அந்தப் பையனைச் சேர்த்துருந்த ஹாஸ்பிடல்ல என் பிரெண்டோட அக்கா வேலை பார்க்குறாங்க, அவங்க கிட்ட கேட்டிருக்கேன்.” என்றதும்,
அவர், “அந்தப் பையனையாவது கண்டுபிடிச்சு, நம்ம இங்க கூட்டிட்டு வந்துடனும் வைஷு… பாவம் புள்ளை தனியா எங்க என்ன கஷ்டப்பட்டானோ? சாவித்ரியை இந்தக் குடும்பத்தோட சேர்க்குறேன்னு வாக்கு குடுத்துருந்தேன். ஆனால், நான் குடுத்த வாக்கைக் காப்பாத்தவே இல்ல” என்று மேலும் வருந்தி அழுதவரை சமன் செய்தவள், “கவலை படாத மா, நீ என்ன தெரிஞ்சா பண்ணுன? என் அத்தை மகனை உன் முன்னாடி நிறுத்த வேண்டியது என் பொறுப்பு. அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்.
நம்ம பொறுமையா இதைச் சொல்லலாம்…” என்றவள், அடுத்த இரண்டு நாளில் அவன் அத்தை மகன் நிஷாந்த் என்றும், அவன் ஊரை விட்டுத் தள்ளி இருக்கும் ஒரு சிறிய ஆஸ்ரமத்தில் இருப்பதாகவும் தெரிந்து கொண்டு, ஜானகியிடம் கூடச் சொல்லாமல், அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவன் இருக்கும் ஆஸ்ரமத்திற்குச் சென்றாள்.
“நிஷா டார்லிங்! இன்னைக்கு பண்ண வேண்டிய அசைன்மென்ட் எங்க?” என்று கேட்ட விஷ்வாவை நிஷாந்த்,,
“டேய் நிஷா நிஷான்னு கூப்பிடாத! ஏதோ பொண்ணை கூப்புட்ற மாதிரி இருக்கு.” என்றான் கடுப்பாக. அவன், “மச்சான், அருண்மொழியை சுருக்கி அருண்ன்னு கூப்பிடறோம், அப்போ நிஷாந்தை சுருக்குனா நிஷான்னு தான கூப்பிடனும்… ம்ம்” என தோளைக் குலுக்க, அவனோ வெறியாக முறைத்தான்.
அருண், அவர்கள் செய்யும் அலும்பைக் கண்டு சிறு சிரிப்புடன், “சரிடா, இன்னும் ஒரு மாசத்துல நமக்கு படிப்பு முடியுது… அதுக்கு அப்பறம் நம்ம இங்க இருந்து போய்டணும் தான… என்ன பண்றதுன்னு ஏதாவது ஐடியா இருக்கா?” என்க,
விஷ்வா வேகமாக, “என்ன டா இப்படி கேட்டுட்ட? நமக்காக பேங்க்ல கோடிக்கணக்கில் லோன் குடுக்க லைன்ல நிக்கிறாங்க. அது போக படிப்பு முடிஞ்சதும், வேலை குடுக்க வேற நிறைய பேர் நமக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க.
அது எல்லாத்தையும் விட, வேலை கிடைச்சதும் நம்ம அத்தை பொண்ணு மாமா பொண்ணுலாம் நம்மளை கல்யாணம் பண்ணிக்க கியூல நிக்குதுங்க…” என்றதும், அருண் அவனை உர்ரென்று பார்த்தான்.
விஷ்வா, “பின்ன என்னடா? படிப்பு முடிஞ்சதும் நம்ம கேரா ஆப் பிளாட்பார்ம். என்ன, இப்போ மணி அடிச்சா சோறாவது குடுத்தாங்க. அடுத்த மாசத்துல இருந்து, அது கூடக் கிடைக்குமான்னு தெர்ல” என்றதும், நிஷாந்த், “டேய் ஏண்டா இப்படி பேசுற? நம்ம தான் படிச்சுருக்கோம்ல ஏதாவது வேலையில சேர்ந்து” என ஆரம்பிக்கையில்,
விஷ்வா, “போடாங், வேலையாம் வேல! ஒரு பார்ட் டைம் ஜாப் கொடுக்கவே அவ்வளவு யோசிக்கிறாங்க. என்னமோ நம்ம எல்லாத்தையும் ஆட்டைய போட்டுட்டு போய்டுவோம்னு நினைச்சு… எங்க போனாலும் ஏதாவது சிபாரிசு தான் கேட்பாங்க. நம்மளை யாருக்குமே தெரியாது. நமக்கும் யாரையும் தெரியாது. இதுல பான் கார்டு, வோட்டர் ஐடி, பிளா பிளான்னு நமக்கு அடையாளம் கேட்பாங்க. காலேஜ்ல சேரவே எவ்ளோ கஷ்டப்பட்டோமுன்னு தெரியும்ல” என்றான் சிறு பயத்துடன். அவன் பேசியதில் இருவருமே சற்று சோர்வாகி விட்டனர்.
அப்போது அங்கு வந்த தேவா, “இங்க என்னடா வெட்டியா நின்னு பேசிகிட்டு இருக்கீங்க? காலேஜ்க்கு கிளம்பல…” என்றதும், விஷ்வா, “ம்ம் சட்ட சபையிலே அடுத்து என்ன என்ன திட்டங்கள் கொண்டு வரலாம்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்கோம்” என்றான் நக்கலாக.
தேவா அவனை முறைத்து, “எப்ப பாரு நெகட்டிவா பேசாதன்னு சொல்லிருக்கேன்ல… போய் கிளம்பு போ” என்று அதட்டிட, அவன் தலையைக் குனிந்து கொண்டு சென்றான்.
பின், அருணைப் பார்த்தவன், “அருண் அடுத்த மாசம் என்ன பண்ணலாம்னு அடுத்த மாசம் யோசிக்கலாம். இப்போ போ…” என்றவன்,
நிஷாந்திடம், “நீ சீக்கிரம் கிளம்பி காலேஜ்க்கு போ, எனக்குக் கொஞ்சம் ஒர்க் இருக்கு அதை முடிச்சுட்டு நான் வந்துடுறேன்.” என்று சொல்லிச் சென்றவனையே பார்த்திருந்தான்.
விவரம் தெரிவதற்கு முன்பிருந்தே இந்த ஆஸ்ரமத்திற்கு அறிமுகம் ஆனது நிஷாந்த் தான். அதன் பிறகு, சில நாட்களில் அருண் வந்து சேர்ந்தவன், நிஷாந்திடம் நன்றாக ஒட்டிக்கொண்டான். அதன் பிறகு, அவர்களின் 8 வயதில் தான், அங்கு தேவா வந்தான்.
சில மாதங்களிலேயே, அங்கிருக்கும் குழந்தைகள் ஒருவரிடம் ஒருவர் ஒன்றி விட, தேவா மட்டும் தனித்தே தான் இருப்பான் யாரிடமும் பேசாமல். நிஷாந்தும், அருணும் சென்று பேசினாலும் அவன் பதில் கூடச் சொல்லமாட்டான். அந்த நேரத்தில் தான், ஆஸ்ரமமே அதிரும் அளவுக்கு அழுகை சத்தத்துடன் விஷ்வா வந்தான்.
எப்போதுமே ‘அம்மா அம்மா’ என்று அழுது கொண்டே இருப்பவனை நிஷாந்தும், அருணும் தான் வித்தியாசமாகப் பார்ப்பர்.
சில சமயம் அவன் அழுவது எரிச்சலை கூடக் கொடுக்கும். சாப்பிடும் போது, தூங்கும் போது என எப்போதுமே அழுது கொண்டிருந்தவனை யாரினாலும் சமாதானப்படுத்தவே முடியவில்லை. ஒரு முறை, சாப்பிடாமல் கத்தி கத்தி அழுதவனை கண்டு தேவா தான், “இப்போ எதுக்குடா அழுதுகிட்டே இருக்க? இன்னொரு தடவை வாயைத் திறந்த, வாயில சூடு வச்சுடுவேன். சாப்பிடு எடுத்து!” என்று பிஞ்சு குரலில் மிரட்டியதில் விஷ்வாவின் குண்டு விழிகள் பயத்துடன் அவனைப் பார்த்தது.
அதில் ஏதோ சிறு குழந்தை தன் முன் இருப்பது போன்று உணர்ந்தவன், மென்மையாக, “நீ சாப்ட்டா உனக்கு சாக்லேட் தரேன் சாப்டு” என்று தலையை ஆட்டி அவனைக் கொஞ்ச முயல, அவன் மீண்டும் தேம்பி உதட்டைப் பிதுக்கினான்.
தேவா முதல் முதலாய் பேசியதை வியப்பாகப் பார்த்திருந்த அருண் நிஷாந்திடம், “இவன் சாப்பிடலைன்னா இவனை வெளிய இருக்கர பூச்சாண்டி கிட்ட பிடிச்சு குடுத்துருங்க. நீங்க சாப்பிடலைன்னா, உங்களை வந்து தூக்கிட்டு போகும்ல” எனக் கேள்வியாக கேட்க, அவர்களும் புரிந்து கொண்டு, “ஆமா, நாங்க ஒரு தடவை சாப்பிடாம இருந்தப்போ எங்களைத் தூக்கிட்டு போய் அடிச்சுச்சு…” என்று கன்னத்தில் அடித்துக்கொண்டு இருவரும் அதனை உண்மை போலயே பேச, விஷ்வா தான் அரண்டு பார்த்திருந்தான். பின், அந்தப் பூச்சாண்டிக்கும், தேவாவுக்கும் பயந்து தான், அழுகையை குறைக்க ஆரம்பித்தான்.
அவர்கள் நால்வருக்கும் ஒரே வயது தான் என்றாலும், விஷ்வாவை மட்டும் சிறு குழந்தை போன்றே நடத்துவர். அதன் பிறகு, தேவா ரொம்ப பேசவில்லை என்றாலும், தேவை என்றால் மட்டும் மூவரிடமும் பேசிக்கொள்வான். அவ்வப்போது, சண்டை, விளையாட்டு, நிறைய பசி, ஏக்கம், குறும்பு என மூவரும் எல்லா உணர்ச்சிகளுடன் வளர்ந்தாலும், தேவா மட்டும் கோபத்தை தவிர எந்த உணர்ச்சியையும் யாரிடமும் காட்ட மாட்டான். நாளடைவில் அவன் உணர்ச்சியைக் காட்டவில்லை என்றாலும், மூவரும் அதனை உணர ஆரம்பித்தனர். அதுவே அவர்களை நெருங்கிய நண்பர்கள் ஆக்கியது.
அந்த ஆஸ்ரமத்திற்கு டொனேஷன் வழங்கிக் கொண்டு இருந்தவர் திடீர் என்று இறந்து விட, ஆஸ்ரமத்தில் அவ்வப் போது தோன்றிய வறுமையில் அவர்களும் சேர்ந்து பட்டினி இருப்பர். சில சமயம் பெரிய ஆளுக்குப் பிறந்த நாள் என்று ஆஸ்ரமத்திற்கு சாப்பாடு போடுகிறோம் எனச் சொல்லி, அதிலும் ஊழல் செய்து, கெட்டுப் போனதைப் போடுவர். சரியான பராமரிப்பு இல்லாமல் அங்கிருக்கும் குழந்தைகள் தான் வாடிப் போவர்.
அதன் பிறகு, இவர்கள் கல்லூரி படிப்பதற்கு கூட ஸ்பான்சர் இல்லாமல் தவிக்கையில், தேவா தான், திடீரென நால்வருக்கும் சீட் கிடைத்து விட்டது என வந்து நின்றான். அவனே நால்வருக்கும் ஒரு பகுதி நேர வேலையும் ஏற்பாடு செய்திருந்தான். அதன் மூலம் அவர்கள் அந்த ஆஷ்ரமத்திற்கும் அவர்களால் முடிந்த அளவு உதவி செய்வர்.
ஆனால், இதெல்லாம் எப்படி நடந்தது? எனக் கேட்டால், அவனிடம் பதில் மட்டும் இருக்காது. கல்லூரி முடிந்ததும், இந்தப் பகுதி நேர வேலையில் வரும் சொற்ப பணம் எந்த மூலைக்கு பத்தும்? அது போக வேலையின்மை பற்றி நிறைய கேள்வி பட்டவர்களுக்கு, இனி இந்தச் சிறு கூடு கூட இல்லாமல் எங்குச் சென்று, என்ன செய்வது என்று மனம் நடுங்கினர்.
‘இப்போதும் தேவா ஏதாவது பிளான் வைத்திருப்பான், ஆனால், அதனை முன்னாடியே சொல்ல மாட்டான் அழுத்தக்காரன்’ என்று நிஷாந்த் பழைய நினைவில் மூழ்கி, தேவாவை செல்லமாக மனதில் திட்டிக்கொண்டு,
வெளியில் செல்லும்போது தான், பிங்க் நிற வண்டியில், நீல நிற காட்டன் சுடி அணிந்து, கண்ணில் விழுந்த கூந்தலை ஒதுக்கிக் கொண்டே, யாரையோ தேடும் வைஷுவை கண்டான்.
‘யார் இந்தப் பொண்ணு, இங்க நின்னுட்டு இருக்கு?’ என்றெண்ணியவன் அவளை தாண்டிப் போகையில், “எக்ஸ்கியூஸ் மீ… இங்க நிஷாந்த் யாரு?” என்று கேட்டவளை ‘எதுக்கு இவள் என் பேரைச் சொல்லி விசாரிக்கிறா?’ என குழப்பமாகப் பார்த்தவன், “எதுக்கு கேட்குறீங்க?” என்றான் புருவத்தைச் சுருக்கி.
‘கேட்ட கேள்விக்குப் பதில் சொல்றானா பாரேன்’ எனக் கடுப்பானவள், “ம்ம் அவரு என் அத்தை பையன்… அதான் கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்” என்று கண் சிமிட்டினாள். அதில் திகைத்தவன், “என்ன சொல்றீங்க?” என்று முறைக்க,
“ப்ச்! நீங்க முதல்ல அவர் யாருனு சொல்றீங்களா?” என்றதும், அவன், “நான் தான் நிஷாந்த். என்ன விஷயம்? எதுக்கு இப்படி உளறிக்கிட்டு இருக்கீங்க?” என்று நேரடியாகச் சொல்லிவிட, அதில் அவள் தான் தடுமாறி விட்டாள்.
கூடவே ‘ஹையோ! இப்படி கல்யாணம் அது இதுன்னு உளறிட்டோமே!’ என தன்னிச்சையாகச் சிவந்தவள்,
“நீ நீங்க தான் நிஷாந்த் ஆ?” என்று மெல்லிய குரலில் கேட்க, “ப்ச் ஆமா, சீக்கிரம் சொல்லுங்க. என்ன வேணும் உங்களுக்கு…?” என்று எரிச்சலானான்.
வைஷுவோ சிறு சிரிப்புடன், “எனக்கு நீங்க தான் வேணும், என் அத்தை மகனே!” என்று தலை சாய்த்துக் கூற அவன் சிலையானான்.
