மறுநாள் காலையில் சர்ச்சிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர் இருவரும்.
டீ – ஷர்ட், ஜீன்ஸ் சகிதம் கிளம்பி நின்ற யாஷ் பிரஜிதனை தானாய் தேடிப் பருகியது பாவையின் விழிகள்.
“இன்னைக்கு எத்தனை மணிக்கு பிளைட்?” நிதர்ஷனா இயல்பாகக் காட்டிக்கொள்ள முயற்சித்தாள்.
“இன்னைக்கு ஈவ்னிங் 5 மணிக்கு திருச்சி டூ சென்னை பிளைட். நம்ம ரெண்டு மணிக்கே இங்க இருந்து கிளம்பிடனும். சென்னை ரீச் ஆனதும் அங்க இருந்து ஷார்ப் அட் நைன் பிஃப்ட்டிக்கு இட்டாலி பிளைட். ஏர்போர்ட்ல இருந்து ஆஹில் உன்னை பிக் பண்ணி வீட்ல விட்டுருவான். நீ எல்லாம் பேக் பண்ணிட்ட தான?” என்றான் தீவிரமாக.
“நான் பேக் பண்ண என்ன இருக்கு?” அவள் கேட்டதும், புருவம் சுருக்கினான்.
“இங்க இருக்குற ட்ரெஸ் ஜுவெல்ஸ் எல்லாம் நான் போட்டுக்கவா?” அடக்கப்பட்ட புன்னகையுடன் அவன் கேட்க,
“இதெல்லாம் ரித்தியா நடிக்கிறதுக்கு வாங்குனது. இப்ப நான் ரித்தி இல்லைன்னு எல்லாருக்கும் தெரிஞ்சுருச்சு. அப்பறம் எதுக்கு இந்த வேஷம். இந்த வெயிட்டான கல்லு வச்ச ட்ரெஸ்ஸ போட்டுட்டு, காலுக்கு செட் ஆகாத ஹீல்ஸ போட்டுட்டு என்னால முடியாதுப்பா. நமக்கு எப்பவும், ஒரு குர்தி தான்!” என நாசுக்காக மறுத்தவளை முறைத்துப் பார்த்தான்.
“நேத்துல இருந்து ஓவரா போயிட்டு இருக்க நீ!” யாஷ் கண்டிக்க, அவளிடம் அமைதி நிலவியது.
“சரி ட்ரெஸ் வேணாம். ஜுவல்ஸ்?”
அவள் அழுத்தமாக நிற்க, “சோ இங்க இருந்து எதுவும் எடுத்துட்டுப் போக மாட்ட அப்படி தான?” ஆடவனின் விழிகள் அவளைக் குற்றம் சாட்டியது.
“எனக்கு உரிமை இல்லாத எதையும் எடுத்துட்டு போற பழக்கம் எனக்கு இல்ல யாஷ்!” திட்டவட்டமாக உரைத்து விட்டவளை வற்புறுத்தவில்லை அவன்.
“ஃபைன்!” சினம் தெறிக்க ஒற்றை வார்த்தையில் பேச்சு வார்த்தையை முடித்து வைத்தவன், அவள் முகம் பாராமலேயே சர்ச்சிற்கு அழைத்துச் சென்றான்.
சர்ச்சினுள் நுழைந்ததும், முட்டியிட்டு கண்ணை மூடி யாஷ் பிரஜிதன் வேண்டுதலைத் தொடங்கி இருக்க, அவனைப் போல அவளும் முட்டி இட்டு அமர்ந்து கொண்டாள்.
“ஏசப்பா… இந்த அரக்கனுக்கு அறிவை குடுங்க!” அவனை சீண்ட வேண்டி வாயைத் திறந்தே வேண்டினாள்.
அவனோ கண்ணைத் திறவாமல், “ஓ ஜீசஸ்… இந்த கடன்காரிக்கு இன்னும் கொஞ்சம் கடன் பிரச்சினையைக் குடுங்க” எனப் பயபக்தியாய் வேண்டிக்கொண்டதில் அவள் முறைத்தாள்.
“யோவ்… சாமிட்ட நான் நல்லாருக்கணும்னு வேண்டுறதுக்கு கூட்டிட்டு வரலையா நீயி.”
“இல்ல. உனக்குப் பிரச்சினை வந்தா தான, நான் கார்னர் பண்ணுனா சைலண்டா இருப்ப. இப்ப திமிராகிடுச்சு உனக்கு. எப்படியும் உனக்கு வேலை கிடைக்கிற வரை கடன் வாங்காமலா போய்டுவ” யாஷ் கண்ணைச் சுருக்கி போலி வஞ்சத்துடன் பேசினான்.
“அடப்படுபாவி!” வாயில் கை வைத்தவள், “நீ எல்லாம் மனுசனே இல்ல தெரியுமா?” என மூச்சிரைத்திட,
“தெரியும்” என்று உதடு குவித்தவன், “ஹியூமன் இல்ல. உன் பாஷைல அரக்கன்! ம்ம்?” என்றான் நெற்றி நெளிய.
‘அரக்கனுக்கு அர்த்தம் தெரிஞ்சுடுச்சா இவனுக்கு…’ என விழித்தாலும், “ஏசப்பா… இவன் ரிசர்ச் நாசமா போகணும். சேர்மன் சேர்ல ஆணி வந்துடனும்” எனப் பெரிய கும்பிடாகப் போட்டு வேண்டிக்கொள்ள, “ஏய்…” என்று பற்களைக் கடித்தான் யாஷ் பிரஜிதன்.
“அப்ப தான உனக்கும் தேவை வரும். என்னைத் தேடி வருவ… பௌ பௌ!” என்று ஆள்காட்டி விரலை மடக்கி அழகு காட்டியவள், அவன் அடிக்க வருவதை உணர்ந்து திடுதிடுவென ஓடினாள்.
நேராக காரின் அருகில் சென்று நின்றவளின் குதிரை வால் முடியை கொத்தாகப் பிடித்தான்.
“இதோ பாருயா. சாமி கும்புடுற இடத்துல வன்முறையை கையாள்றது மகாபாவம்! வலிக்குதுயா” என்றவளை சிறிது நேரம் கதற விட்ட பிறகே பிடியைத் தளர்த்தினான்.
“அரக்கா… அரக்கா…” என அவன் தோள்பட்டையிலேயே படபடவென அடித்தவள், தலையைத் தேய்த்துக்கொண்டு, “மூஞ்சைப்பாரு” என சிலுப்பியபடி காரில் ஏறினாள்.
அவளது பாவனைகளை எல்லாம் கண்களுக்குள் படம் பிடித்தபடி காரை ஆதிசக்தியின் வீட்டு வாசலில் நிறுத்தினான்.
காலையிலேயே கண்மணி கட்டளையாகவே சொல்லி விட்டாள். காலை உணவும் மதிய உணவும் இங்கு தான் என்று.
ஆதிசக்தி தனதறையில் ஜன்னல் கம்பிகளின் வழியே எங்கோ வெறித்திருந்தார்.
குத்திக்காட்டக் கூட இனி அவன் அருகில் இருக்கப்போவதில்லை தானே!
“ஆதி…” இளவேந்தன் அழைக்க, அவரது கண்ணில் நீர் திரையிட்டிருந்தது.
மெளனமாக கணவனின் தோளில் சாய்ந்து கொண்டவர், “ஆனாலும் இந்த ரெண்டு பேருக்கும் இவ்ளோ அழுத்தம் வேணாம். நிதாவும் போறேன்னு சொல்றாளே. அவளாச்சு இருக்கலாம்ல…” என்றதில் இளவேந்தனின் கண்களும் கலங்கி நின்றது.
“ம்ம்… அவங்க முடிவுல நம்ம தலையிட முடியலையே!”
“யாஷ் தான் இட்டாலி போயிடுவான். நிதா சென்னைல தான இருப்பா. அப்போ அப்போ போய் பாத்துக்கலாம் இளா” கணவனின் வேதனை முகம் அவரை வருத்தியது.
“ம்ம்!”
“என்ன இளா…”
“என்னவோ மனசே சரி இல்ல ஆதி. யாஷும் நிதாவும் இங்க இருந்தது நல்லாருந்துச்சு. அதே போல தான அவங்களும் ஏங்கி இருப்பாங்க. நிதாக்கு இப்படி ஒரு குடும்பம் இருக்குறதே தெரியாது. ஆனா யாஷ்… குடும்பம் இருந்தும்…” எனப் பேச முடியாமல் நிறுத்த, “எல்லாம் என்னால தான?” என்றார் விரக்தியாக.
“ப்ச்… விடு ஆதி. நம்ம மனநிலை எப்பவும் ஒரே மாதிரி இருக்குறது இல்லைல. வந்தப்ப நம்மளை பார்த்தா எரிஞ்சு விழுந்தான் யாஷ். இப்ப முகம் குடுத்துப் பேசுறான்.”
“அதுவும் நிதாவால தான்” ஆதிசக்தி சேர்த்துக்கொண்டார்.
“ஹ்ம்ம்! ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் நல்லாருக்குல” இளவேந்தன் சொன்னதும்,
“ஆமா இதை சொன்னதும் ரெண்டு பேரும் உடனே புருஞ்சுப்பாங்க பாரு… ரெண்டு பேருக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு இளா. நிதா முகத்துல தடுமாற்றம் தெரியுது. ஆனா இந்தப் பையன் தான், அதை புருஞ்சுக்குறா போல தெரியல…” என்றார் நகத்தைக் கடித்தபடி.
“ஹா ஹா… உன் பையன்ல!” இளவேந்தன் நக்கலாக சிரிக்க,
“ஏன் ஏன்?” என ஆதிசக்தி பொங்கினார்.
“க்கும்… சின்ன வயசுல இருந்து உன்னை நான் லவ் பண்ணேன். கூடவே இருந்ததுனால என் லவ் உனக்கு தெரியவே இல்ல. நானும் கண்ணால காட்டுனேன் கையால காட்டுனேன்… ம்ம்ஹும்… ஒன்னும் வேலைக்கு ஆகல. இருக்குற மூளை எல்லாம் கொண்டு போய் வேலைல மட்டும் கொட்டிட்டு வீட்டுல எம்ப்டி மண்டையோட இருக்குறது. அதே மாதிரி தான் அவனும் இருக்கான்…” என்று சத்தமாக சிரித்து விட, “உன்னைக் கொல்லப்போறேன் இளா…: என்று சிணுங்கியபடி ஆதிசக்தி அவரை நெஞ்சில் தாக்கினார்.
தாயைப் பார்க்கும் பொருட்டு அங்கு வந்த யாஷ் பிரஜிதன், இருவரும் கையைப் பிடித்துக்கொண்டு நிற்பதைக் கண்டு, பின்னந்தலையைக் கோதி நின்றான்.
“ஐ திங்க், ஐ கேம் அட் ராங் டைம்? (தப்பான நேரத்துல வந்துட்டேனோ)” யாஷ் கேட்க,
ஆதிசக்தி “அதெல்லாம் ஒன்னும் இல்ல வா…” என்றவருக்கு ஐயோ என்றிருந்தது.
“நிதா எங்க?” இளவேந்தன் கேட்க, “வந்ததும் நேரா கிட்சன் போய்ட்டா…” லேசான புன்னகையுடன் கூறியதில் அவர் முகத்திலும் சிறு புன்னகை.
யாஷ் ஆதிசக்தியைப் பார்க்க, அவர்களுக்கு தனிமை கொடுக்கும்பொருட்டு, “சரி நீங்க பேசிட்டு இருங்க. நான் என் மருமகளை பார்த்துட்டு வரேன்” என்று நாசுக்காக வெளியில் சென்று விட்டார்.
“எல்லாம் பேக் பண்ணிட்டியா யாஷ்?” ஆதிசக்தி முயன்று வேதனையை அடக்கியபடி கேட்க, “எஸ்! ஏதாவது மிஸ் பண்ணிருந்தா ஆள் அனுப்புறேன் குடுத்து விடுங்க…” என்றான்.
அவர் அவனைப் பாராது தவித்து மறுபுறம் திரும்பிக் கொண்டார்.
“ரித்தி எங்க இருக்கா?” கேட்க வேண்டுமே எனப் பேச்சை வளர்த்தார்.
அவளுக்கு இருந்த பிரச்சினையைப் பற்றி கூறியவன், “நொவ் பெட்டர். நேத்து கல்கட்டா போய்ட்டா” என்றான்.
“எப்போ கல்யாணம்?”
நிதர்ஷனாவிடம் உரைத்த அதே பதிலைத் தாயிடமும் உரைத்திட, “அட்லீஸ்ட் டேட் பிக்ஸ் பண்ணுனதும் சொல்லுவியா யாஷ்?” கேட்கும்போதே அவரது குரல் உடைந்தது.
முன்னைப் போல அவரை ஒதுக்க இயலாமல் அவனுக்குள்ளும் எதுவோ நழுவிய உணர்வு.
“சொல்லுவேன். சான்ஸ் இருந்தா வாங்க மம்மா” என்றவனின் அழைப்பே அவரது இதயத்தை நிறைத்தது.
இம்முறை கலங்கிய விழிகளுடனே மகனை ஏறிட்டவர், “கவனமா இரு யாஷ்! எப்பவும் விட கவனமா இரு!” என எச்சரித்தார்.
“சியூர்! அண்ட்” என நெற்றியை நீவியவன், “சாரி அபவுட் எஸ்டர்டே (நேத்து பேசுனதுக்கு சாரி)” எனக் கூறிய யாஷை விழி விரித்துப் பார்த்தார்.
“நீ உண்மையை தான சொன்ன. சாரி சொல்ல வேண்டிய அவசியம் இல்ல யாஷ்…”
“டூ பி பிராங்க்! நான் சொன்னதுல எந்தத் தப்பும் எனக்குத் தெரியல. பட் உண்மையா இருந்தாலும் இட் ஹர்ட்ஸ் யூ ரைட்? சாரி கேட்கணும்னு நிதுவோட ஆர்டர்” என்றவன் உண்மையை ஒப்புக்கொள்ள, “அதான… நீ சாரி கேட்கவும் உனக்குள்ள ஆவி புகுந்துருச்சோன்னு பயந்துட்டேன்” என்று கேலி செய்தார்.
அதில் மென்முறுவல் பூத்தவன், “வெரி ஃபன்னி” எனத் தலையாட்டிக்கொள்ள, இருவருக்கும் அந்த நொடி மனதில் ஆழப்பதிந்தது.
சாதாரணமாய் இலகுவாக அவர்கள் பேசிய முதல் தருணம் இதுவே! உள்ளம் வெடிக்க அழுகை முட்டிக்கொண்டு நின்றாலும் மகனின் முன் நன்றாக நடித்தார் ஆதிசக்தி. கடந்த இருபது வருடங்களாக மகனைப் பிரிந்து பாசமில்லை என நடித்து தேர்ச்சி பெற்றிருக்கிறாரே!
பின், “என்ன இருந்தாலும் நிதாவுக்கு நீ செஞ்சது சரி இல்ல யாஷ்” எனக் கண்டனத்துடன் கூற, அவன் புரியாது பார்த்தான்.
“ஒரு பொண்ணை, சொந்த விருப்பத்துக்காக நடிக்க கூப்பிட்டு ஒரே வீட்ல வச்சுருக்குறது ரொம்ப தப்பு. நீ அவளை ஹர்ட் பண்ணுனன்னு நான் சொல்லல. ஆனா, இப்ப அவ மனசுளவுல வருத்தப்படுவா தான…” என்றவருக்கு அந்தப் பெண்ணின் உள்மன உளைச்சலைப் புரிய வைக்க இயலவில்லை.
“ஒரு பொண்ணோட மன வருத்தமும் அந்தப் பாவமும் நம்மளை சும்மா விடாது யாஷ்!” வருத்தத்துடன் அவர் கூற,
அவனோ ஏளனமாகப் புன்னகைத்தான்.
“கமான் மம்மா… எங்களுக்குள்ள எந்த பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்பும் இல்ல. நான் அவளை சீட் பண்ணவும் இல்ல. அப்படிலாம் பார்த்தா, என் பப்பா இன்னும் நல்லா திடகாத்திரமா தான இருக்காரு. உங்களை ஹர்ட் பண்ணிட்டு, அவர் ஒன்னும் அந்தப் பாவத்துல புரண்டுட்டு இருக்கலையே” என்றான் நக்கலாக.
“அதுல உன் அப்பாவோட தப்பு மட்டும் இல்லையே. என் தப்பும் இருக்கே. உன் அப்பாவை நம்பிப் போனது என்னோட முதல் முட்டாள்தனம். அவனைப் பத்தி தெரிஞ்சதும் எங்கயாவது விழுந்து சாகாம இங்க வந்து நின்னது நான் செஞ்ச அடிமுட்டாள்தனம்! நீ சொன்னது தான், நிதா ஒன்னும் நானும் இல்ல. நீ அலெஸ்ஸும் இல்ல…” அவரது பார்வை ஜன்னல் வழியே வெறிக்க, வார்த்தைகளில் உயிர்ப்பில்லை. ஆனால் அந்த வலி அவனுக்குள்ளும் கடத்தப்பட்டது.
யாஷ் பதில் பேசாது இறுக்கத்துடன் நிற்க, “ஆனா இங்க நிதா எந்தத் தப்பும் பண்ணலையே. உனக்காகவே என்னை எவ்ளோ பேசிருக்கா… நடிக்க வந்தவ எதுக்காக இந்த அன்பைக் காட்டணும்” என்றிட,
“நீங்க என்ன சொல்ல வர்றீங்க? நான் சொன்னது மாதிரி அவளை செட்டில் பண்ணிட்டு தான் போறேன்…” என்றான்.
“ப்ச் அதில்ல. நீ அவளை விரும்புறியோன்னு…” ஆதிசக்தி இழுக்க,
“நோ வே! ஷீ இஸ் மை சோல்மேட் மம்மா. அண்ட் அவள் ஒரு ரிலேஷன்ஷிப்பை டாப் டூ தி பாட்டம் சீரியஸா எடுக்குறவ. எனக்கு அந்த சீரியஸ்னெஸ் சுத்தமா இல்ல. எங்களுக்குள்ள லவ், மேரேஜ்… இதெல்லாம் டெம்ப்ரவரியா இருக்கலாம். ஆனா பெர்மனண்ட்டா… ஐ ஆம் நாட் சியூர்” எனத் தோளைக் குலுக்கிட,
“அப்போ நீ இதை பத்தி யோசிச்சுருக்க?” எனக் கேட்டார் வியப்பாக.
“யோசிச்சேன். நேத்து நைட். பட் மேரேஜ் ஒன்னும் எமோஷனலா எடுக்குற முடிவு இல்ல மம்மா. லாஜிக்கலா இது செட் ஆகாது. நிறைய ரிலேஷன்ஷிப்ப அடுத்து அடுத்து பிரேக்கப் பண்ணிட்டு போறவங்களை பார்த்தே வளர்ந்துட்டேன். சோ என்னால, பெர்மனண்டா ஒரு ரிலேஷன்ஷிப்ல அட்டாச் ஆக முடியாது.
ரித்திக்கும் எனக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. அவளுக்கும் ஜாப் தான் ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ். அதுக்கு மேல, எனக்கு சேர்மன் போஸ்ட் வேணும். ஐ ஜஸ்ட் நீட் இட். அதுக்காக என்னோட அஞ்சு வருஷத்தை நான் தியாகம் பண்ணிருக்கேன். அதுக்காக இன்னும் எவ்ளோ தியாகம் வேணாலும் பண்ணுவேன்” எனத் திட்டவட்டமாக உரைத்தவன், சற்றே இளகி,
“அண்ட் மோர் ஓவர் அவள்கிட்ட நான் மேரேஜ் பத்தி யோசிச்சேன்னு சொன்னா கூட, எனக்கு காபில பாய்சன் கலந்துடுவா. அந்த அளவு அவளுக்கு என்மேல ஒரு சின்னக் கொலைவெறியும் இருக்கு” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே,
“பாயாசம் வாசம் உனக்கும் வந்துடுச்சா யாஷ்?” என்றபடி கையில் பாயாசக் கிண்ணத்துடன் உள்ளே வந்தாள் நிதர்ஷனா.
ஆதிசக்தி மகனை முறைத்தபடி நிற்க, அவளோ “ஓ… தனியா பேசிட்டு இருக்கீங்களா ரெண்டு பேரும். இப்ப நான் போகணுமா? ப்ச் வேணாம். நீங்க என்ன சட்டசபைல யாரை பிரெசிடண்ட் ஆக்கலாம்னா பேசப்போறீங்க. நீ நாலு திட்டு திட்டுவ. இந்தம்மா கல்லு மாதிரி கேட்டுட்டு நிக்கும். ம்ம் ஸ்டார்ட் பண்ணுங்க!” என்றவள் ஏதோ வேடிக்கை பார்ப்பது போல பாயசத்தைப் பருக,
ஆதிசக்தியும் யாஷ் பிரஜிதனும் ஒன்றாக அவள் காதைத் திருகினர்.
“ஆத்தாடி… அட்டாக் பண்றதுக்கு மட்டும் கூட்டு சேருறீங்களா நீங்க?” என முறுக்கிக் கொண்டதும் இருவருக்கும் புன்னகை மலர்ந்தது.
நிதர்ஷனாவோ பாயாசத்தைக் குடித்து விட்டு, “இந்தக் கண்மணி பாயசம் கிண்டும்போதே நினைச்சேன். இனிப்பு இருக்காதுன்னு” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
“ஏன்?” ஆதிசக்தி வினவ,
“உன் பொண்ணு, சக்கரைக்கு பதிலா அதுல கண்ணீரை கொட்டிட்டு இருக்குத்த. அண்ணன் இத்தாலிக்கு போறான்னு ஒரு மூச்சு அழுதுட்டு ஒரு கிண்டு, நீங்க எனக்கு அண்ணி இல்லையான்னு அழுதுட்டு ஒரு கிண்டு, அப்பறம் நீங்களும் ஊருக்கு போறீங்களான்னு மூக்கால அழுதுட்டு ஒரு கிண்டு… கடைசி வரை பன்னீர் பாயாசம் செய்யல அவ. கண்ணீர் பாயசம் தான் செஞ்சுருக்கா…” எனப் புலம்பியதில் ஆதிசக்தி வாய்விட்டே சிரித்து விட்டார்.
‘இவள் வாய் இருக்கே…’ எனத் தலையில் அடித்துக் கொண்ட யாஷ் பிரஜிதன், ஆதிசக்தியின் சிரித்த வதனத்தை ஒரு முறை கண்களில் நிரப்பிக்கொண்டு தங்கையைக் காணச் சென்றான்.
கண்மணி அடுக்களையில் மூக்கை உறிஞ்சியபடி, “சிந்தா… அந்த முந்திரிப்பருப்பை எடு!” என்றாள். அழுது அழுது தொண்டை கட்டிக்கொண்டது வேறு.
பாயாசத்துடன் கேசரியும் கிண்டிக் கொண்டிருந்தாள்.
சிந்தாமணியோ, “முந்திரில உன் கண்ணீர் படாம வறுடி. கேசரி வாயில வைக்க முடியாம போய்ட போகுது” எனப் பரிதாபமாகக் கூற, அவளை முறைத்தவள், “எனக்குத் தெரியும்” என்றாள் கடுப்பாக.
“ஐயோ… இந்நேரம் பார்த்து எங்க அம்மா வேற கிச்சனை இவளை நம்பி குடுத்துட்டு கோவிலுக்குப் போய்டுச்சே…” எனப் புலம்பியவள், அங்கு யாஷ் நிற்பதைக் கண்டு “ஏய் உன் அண்ணன்டி” என்று இடித்தாள்.
கண்மணி வேகமாகக் கண்ணீரைத் துடைத்து விட்டு, யாஷை பார்த்தாள்.
“பாயசம் தரட்டா அண்ணா?” என வேகமாக சட்டியைத் திறக்க, “எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க?” என்று அதட்டலாகக் கேட்டான்.
அதில் திறந்த சட்டியை மூடாமல் அவள் மீண்டும் கண்ணீர் விடத் தயாராக, சிந்தாமணி அவளை ஒரு அடி நகர்த்தி நிற்க வைத்தவள், சட்டியை மூடி விட்டு, “ம்ம் இப்ப அழுது தொலையும்…” என்றாள் சலிப்புடன்.
“அடியேய்” கண்மணி முறைத்ததில், பொங்கி வந்த சிரிப்பை அடக்கிய யாஷ் பிரஜிதன், “கண்மணி” என அழைத்தான் அன்பாக.
“கம்…” எனக் கையை நீட்டி அழைத்திட, புயலாக தமையனைக் கட்டிக்கொண்டாள் கண்மணி.
“என்மேல உங்களுக்கு கோபம் இல்லை தான? நான் உங்களை ஒன்னும் ஒதுக்கி வைக்கல. எனக்கு எதுவுமே தெரியாது. உங்களை பத்தி தெரிஞ்சதும் உங்களுக்கு பேச எவ்ளோவோ ட்ரை பண்ணேன். அட்லீஸ்ட் நீங்க வந்தப்பறம் பேசலாம்னு கூட எவ்ளோ வாட்டி ட்ரை பண்ணிருக்கேன் தெரியுமா…” எனத் தேம்பித் தேம்பி அழுதிட,
“ஓகே ஓகே… ஐ அண்டர்ஸ்டுட்! உன்மேல எனக்கு கோபம் எல்லாம் இல்லடா” என்றான் மென்மையாக.
“ஆனா என்னை உங்களுக்கு பிடிக்காது தான?” உதட்டைப் பிதுக்கி அவள் கேட்க,
“நீ என் தங்கச்சின்னு தெரியுறதுக்கு முன்னாடியே உன்னை எனக்குப் பிடிக்கும். வந்து வந்து வாண்டடா என்கிட்ட திட்டு வாங்கிட்டுப் போறது எனக்கு இன்டரஸ்டிங்கா இருக்கும் கண்மணி” என்றான் அவள் கண்ணீரைத் துடைத்தபடி.
“எதே எங்களைத் திட்டுறது உங்களுக்கு இண்டரெஸ்ட்டா இருக்கா. இதெல்லாம் டூ மச் மாமா…” சிந்தாமணி எகிறி விட்டு, “என்ன இருந்தாலும் அவள் உங்க உடன்பிறப்பு. நான் என் லிமிட்ல இருந்துக்குறேன்ப்பா…” என்றாள் உர்ரென.
“ரொம்ப நல்லது. அங்கேயே இருந்துக்கோ” என வாரினான்.
சிந்தாமணி சிலுப்பிக்கொள்ள, அதில் மென்னகை வீசியவன், “இன்னும் ஒரு வாரத்துல உங்க ரெண்டு பேருக்கும் விசா வரும். என் வெடிங் டேட் பார்த்துட்டு டிக்கட் அனுப்புறேன். போத் ஆஃப் யூ மஸ்ட் கம்” என்று கண்டிப்பாக அழைத்தான்.
“நானுமா மாமா?” சிந்தாமணி விழி விரிக்க, “ஹ்ம்ம்” என்றான் கண்ணை மூடித் திறந்து.
கண்மணியோ “எவ்ளோ நாளைக்குன்னா…?” எனக் கேட்க,
“15 டேஸ்க்கு தான். பட் நான் போறதுக்காக இவ்ளோ பீல் பண்றன்னா என்கூட அங்கேயே இருந்துக்கோ. பிஜி அங்க போடலாம்…” என அவளை ஆழம் பார்த்தான்.
சட்டென கண்ணீர் நின்று விட, சங்கடத்துடன் நெளிந்தாள்.
“அது வந்துண்ணா…” என தயங்கியவளைக் கண்டு, நக்கல் புன்னகை பூத்தவன், “உன்னால அங்க இருக்க முடியாது… என்னால இங்க இருக்க முடியாது. சோ இந்த டியர்ஸ் வேண்டாமே!” என்றிட, அவளும் மனமின்றி தலையசைத்தாள்.
கிருஷ்ணவேணியும் அழகேசனும் கோவிலில் இருந்து வந்து யாஷிற்கும் நிதர்ஷனாவிற்கும் திருநீர் வைத்து விட, இளவேந்தன் “உங்க கூட நானும் சென்னைக்கு வரேன். யாஷை பிளைட் ஏத்தி விட்டுட்டு, உன்னை வீட்ல விடுறேன்” என்றார் நிதர்ஷனாவிடம்.
“பிளைட்ல நானே ஏறிப்பேன் ஹெல்ப் தேவை இல்லை” என அமர்த்தலாகக் கூறிய யாஷை முறைத்தார்.
நிதர்ஷனாவும், “நீங்க வீட்டுக்கு வந்தா ஏரியாவுக்கே நான் பதில் சொல்லணும் மாமா. யாராச்சு ஒருத்தருக்கு தெரிஞ்சா கூட நிவே வந்ததும் போட்டுக் குடுத்துடுவாங்க…” என்றவளை வருத்தமாக ஏறிட்டார்.
“அப்போ கடைசிவரை என்னை சொந்தம்னு சொல்லிக்கவே மாட்டியா?” அவரது கேள்வியில் அவளுக்கும் வலித்தது தான். ஆனால் என்ன செய்திட இயலும்.
ஆதிசக்தி, “அட்லீஸ்ட் திருச்சி ஏர்போர்ட்க்கு வர்றோமே?” என்றதில் இருவரும் தலையசைத்தனர்.
நிதர்ஷனா அன்றைய நாளின் ஒவ்வொரு துளியையும் அன்றே இறுதி என்பது போல அவனுடனே கழித்தாள்.
மகேந்திரனும் வரவேற்பறையில் பேரனையும் பேத்தியையும் பார்த்த வண்ணம் அமர்ந்து கொண்டார்.
நிதர்ஷனா முயன்ற மட்டும் பேசி சிரித்து மற்றவர்களுடன் அரட்டை அடித்து நேரத்தை நகர்த்திட இருவரும் கிளம்பும் நேரமும் வந்தது. அவர்களை திருச்சி விமான நிலையத்தில் விடுவதற்கு மொத்தக் குடும்பமும் கிளம்பியது.
“ஏர்போர்ட் போனதும் உள்ள போயிடுவோம். எதுக்காக தேவையில்லாத அலைச்சல்” யாஷ் கூறியும் “பரவாயில்ல. திருச்சி வரை உங்க கூட இருக்கலாம்ல” என்ற கண்மணியில் கூற்றை மறுக்க இயலவில்லை.
திருச்சி வரையிலும் உடன் வந்தவர்களுக்கு அவர்களை பிரியும் வலி அளவுக்கு அதிகமாக இருந்தது. யாஷை மட்டுமல்லாது நிதர்ஷனாவையும் பிரிய வேண்டிய சூழ்நிலை இளவேந்தனைக் கொன்றது.
“ஏதாவதுன்னா எனக்கு போன் பண்ணுமா. யாரோ மாதிரியாவது என்னை வந்து பார்த்துட்டுப் போ. இல்ல, நான் அங்க வந்து உன்னை பாக்குறேன்” விமான நிலையம் வந்தும் இளவேந்தன் கெஞ்சல் தொனியில் பேசியதில்,
“அப்போ அப்போ வரேன் மாமா…” என்றாள் அதற்கு மேல் அவரை வாட்ட இயலாதவளாக.
அதில் சற்றே நிம்மதி கொண்டவர், “அடிக்கடி வரணும்” எனக் கண்டிப்பாய் கூறினார்.
ஆதிசக்தி மகனை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஐந்து வயதில் அலெஸ்ஸாண்டரோ இங்கிருந்து யாஷ் பிரஜிதனை அழைத்துச் சென்றபோது, “மம்மா… ஐ ஆம் கோன்ன மிஸ் யூ. ஐ லைக் இண்டியா மம்மா. லெட் மீ ஸ்டே வித் யூ! ப்ளீஸ்…” (உங்களை மிஸ் பண்ணுவேன்மா. எனக்கு இந்தியா தான் பிடிச்சுருக்கு. என்னை உங்க கூடவே வச்சுக்கோங்க) எனக் கண்ணில் நீர் தளும்ப அவன் அடம்பிடித்தது இன்றளவும் அவருள் ஊசியாய் குத்திக் குடைந்தது.
கையாளாகாத நிலையில் யாஷை வெறித்துப் பார்த்திருந்தவர், “யூ ஷுட் கோ வித் பப்பா யாஷ். மம்மா வில் நெவர் அலோ யூ டூ ஸ்டே வித் மீ!” (நீ அப்பா கூட தான் போகணும் யாஷ். அம்மா உன்னை என்கூட இருக்க அலோ பண்ண மாட்டேன்) எனத் தீர்மானமாக உடைக்க, அந்தச் சிறிய பளபளத்த கண்களில் அதிகமான ஏமாற்றம்.
அத்துடன் அவன் அடம்பிடிக்கவில்லை. அலெஸ்ஸாண்ட்ரோவுடன் சென்று விட்டான்.
இன்று அதே வார்த்தையை அவனிடம் அவர் கூறினார்.
“ஐ ஆம் கோன்ன மிஸ் யூ யாஷ்!” என்றதில், அவன் தோளைக் குலுக்கிக் கொண்டான்.
மகேந்திரன், யாஷ் பிரஜிதனின் கையைப் பற்றிக்கொண்டார் அழுத்தமாக.
“முடிஞ்சா இன்னொரு தடவை வந்துட்டுப் போப்பா…” என்றவர் “மன்னிச்சுடு” என்றார் பலவீனமாக.
“இட்ஸ் ஓகே க்ராண்ட்பா!” பெரிய மனதுடன் மன்னித்தவன், கண்மணியையும் ஒரு முறை கட்டி அணைத்து விட்டு நிதர்ஷனாவுடன் விடைபெற்றான்.
விதி மீண்டும் சுவற்றில் அடித்த பந்தாக அவனை இங்கேயே தள்ளப்போவதை அறியாதவனாக!
திருச்சியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் வரை இருவரிடமும் பேரமைதி.
காலையில் இருந்து இருவருக்கும் தனிமை கிடைக்கவில்லை. சென்னை வரையிலான ஒரு மணி நேர பயணம் கூட ஒரு நொடியில் முடிந்து விட்டது போலொரு பிரம்மை அவளுக்கு.
சென்னை வந்திறங்கியதும் ஆஹில்யன் அவர்களுடன் இணைந்து விட்டான்.
“ரித்தியை கல்கட்டா அனுப்பியாச்சா. ப்ராபளம் எதுவும் இல்லைல…” யாஷ் கேட்டதும், “இல்ல பாஸ். சேஃப் தான்” என்றான்.
“ஒகே. நீ இட்டாலிக்கு இப்போதைக்கு வரவேணாம். இங்க நான் குடுத்த வேலையெல்லாம் ஞாபகம் இருக்குல்ல. அதை ப்ராப்பரா செஞ்சு முடிக்கணும். காட் இட்!” என உத்தரவிட, விறைப்பான மார்புடன் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு “காட் இட் பாஸ்” என்றான்.
“இப்ப இந்தப் பொண்ணை வீட்ல டிராப் பண்ணிடவா?”
“ம்ம்… நான் பிளைட் ஏறுனதும் கூட்டிட்டுப் போ” யாஷ் உரைத்ததும் “ஓகே பாஸ்” என்றவன், அவர்களுக்கு இடையூறாக அங்கேயே இருந்தான்.
நிதர்ஷனா யாஷைப் பார்ப்பதும் பின் திரும்பிக் கொள்வதுமாக இருக்க, அவனும் அவளது கையைப் பிடித்துக்கொண்டு ஆஹில்யனிடம், “நீ வெளில வெய்ட் பண்ணு. நான் கிளம்புனதும் இவள் வருவா…” என்று அனுப்பி விட முயற்சிக்க, அவன் இருவரையும் ஒரு மாதிரியாகப் பார்த்தபடி வெளியில் வந்தான்.
வந்தவன் அவசரமாக யாருக்கோ போன் செய்தான்.
மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், “மேடம் மேடம்… உங்க ஃபியான்ஸ் உங்களுக்கு துரோகம் பண்றாங்க மேடம். இதைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா. கண்ணு முன்னாடி உங்க வாழ்க்கை அழிஞ்சு போறதை பார்க்க முடியல மேடம்” என வெகுவாய் வருந்திக் கூறினான்.
அப்போது தான் தந்தையுடன் உண்ண அமர்ந்த ரித்திகா, ஆஹில்யனின் குற்றச் சாட்டில் முகம் கறுத்தாள்.
வரதராஜன் அவளுக்கு சப்பாத்தி வைத்தபடி “போன்ல யாருடா?” எனக் கேட்டார்.
“ஆ… ஆஹில்ப்பா. யாஷ்ட்ட பேசுறதுக்கு கால் பண்ணேன். அவன் போன் ஆஹில்ட்ட இருக்கும்போல. நீங்க சாப்பிடுங்க. நான் யாஷ்ட்ட பேசிட்டு வரேன்…” என நாசுக்காக எழுந்து தனதறைக்குச் சென்றவள் இரவு உடையிலும் அழகாய் மினுத்தாள்.
“சார் பக்கத்துல இருக்காரா மேம்…” ஆஹில்யன் கேட்டதும்,
“டேய்… உன்னை பி. ஏ வேலை பார்க்க அனுப்புனா. அவனுக்கு மாமா வேலை பாக்குறியா?” என்று பற்களைக் கடித்தாள் அவள்.
“அவ்வா… நான் அப்படியெல்லாம் செய்வேனா மேடம். அதுவும் நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறவரை தப்பான வழிக்கு போகாம கடிவாளம் போட்ட மாதிரி இத்தாலிக்கு அனுப்புறது என் கடமைல மேடம்…” என்றான் சிரத்தையாக.
“உன் கடமைய தூக்கி கடல்ல போடு!”
“அடியேய்… ஒழுங்கா உன் அப்பாட்ட வேலை பார்த்திருந்தா கூட அந்த ஆள் கைகால்ல விழுந்து உன்னைக் கல்யாணம் பண்ணிருப்பேன். சீக்கிரம் செட்டில் ஆகணும்னா இவனுக்கு பி.ஏவா போன்னு என்னை இந்த ரோபோ கூட கோர்த்து விட்டுட்ட. உன் அப்பனை விட பயங்கரவாதியா இருக்கான் இவன். இந்த அஞ்சு வருஷத்துல நான் இங்க பி. ஏவா இல்லடி. இவனுக்கு கைக்கூலியா இருக்கேன். என் அப்பா என்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சது, அடியாளா இருக்குறதுக்கு தான்னு இங்க வந்தப்பறம் தான் தெரியுது. சேர்மன் போஸ்ட்க்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொன்னா கூட அவன் பண்ணிப்பான்…” எனப் புலம்பி தள்ளியதில் ரித்திகா வாயைப் பொத்தி சிரித்தாள்.
“ச்சே அவன் டேஸ்ட் அவ்ளோ மட்டம் இல்ல பட்டு!”
“இந்த நிலமைலயும் சிரிக்கிறீல நீ… ஒருவேளை லாஸ்ட் மினிட்ல என்கூட ஓடி வந்துடுவியா…?”
“நோ. இந்தக் கல்யாணம் நடக்கும். நடக்கலைன்னா என் அப்பா என்னையும் உன்னையும் யாஷுக்கு முன்னாடி போட்டுத் தள்ளிடுவாரு.”
அவன் முகம் சிறுத்து விட, “சீரியஸாவே கல்யாணம் பண்ணிக்க போறியா பேபி?” என ஏமாற்றமாய் கேட்க, “ம்ம்… வேற வழி இல்ல ஆஹில். உன்னை என் அப்பாட்ட பலி குடுக்க முடியாது…” என்றதில், அழைப்பைத் துண்டித்து விட்டான்.
காரில் ஏறி அமர்ந்த ஆஹில்யனின் கண்ணில் இருந்து ஒரு துளி நீர் பிரிந்து வழிந்தது. எட்டு வருட காதல். பள்ளி காலம் தொட்டே ரித்திகாவை உயிராகக் கருதுகிறான். இப்போதோ கண்முன்னே அவள் கைவிட்டுப் போகப் போகிறாளென்ற உண்மை உறைக்க, காதலும் கசந்தது.
தனது கையைப் பிடித்துக்கொண்ட யாஷ் பிரஜிதனின், உள்ளங்கை சூடு அவளை சுட்டது. கையை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டவள், “இப்ப கிளம்புனா இத்தாலி போக எவ்ளோ நேரம் ஆகும் யாஷ்?” எனக் கேட்டாள் இயல்பாக.
“12 மணி நேரத்துக்கு மேல ஆகும்”
“அவ்ளோ நேரமா?”
“ம்ம்…” என அவனது பாக்கெட்டில் இருந்து ஒரு போனை எடுத்து நீட்டினான்.
என் போன் எங்க யாஷ்…” எனக் கேட்டபடி அந்த அலைபேசியை திருப்பி திருப்பிப் பார்த்தாள்.
“ஐ ஃபோனா?” திகைப்பாய் அவள் கேட்க, “ம்ம்! நீ யூஸ் பண்ணுன சிம் இதுல தான் இருக்கு…” என்றதும், “என் போனை குடுங்க. இது எதுக்கு எனக்கு?” அவளது பேச்சைக் கண்டு கொள்ளாதவனாக, மற்றொரு பொருளை எடுத்தான் கைப்பையில் இருந்து எடுத்தான்.
கையடக்க ஹெட் போன் போல இருந்த பொருளை அவளிடம் நீட்ட, “இது என்னது?” எனக் கேட்டாள்.
“ஆலம்பனா மாதிரி… இதுல இந்த பட்டனை ஆன் பண்ணிட்டு, நீ என்ன கேள்வி கேட்டாலும் இது பதில் சொல்லும். உன் கூட சேர்ந்து பாடும். உன் இன்டெர்வியூஸ்க்கு ஹெல்ப் பண்ணும். குட்டி ஆலம்பனா மாதிரி! அண்ட் இதுல இன்னொரு ரெட் பட்டன் இருக்குல்ல…” எனக் காட்ட, அவள் அவனையே பார்த்திருந்தாள்.
“இந்த பட்டனை பிரெஸ் பண்ணி, எனக்கு வாய்ஸ் நோட் அனுப்பலாம். ஆனா அதுக்கு மட்டும் இன்டர்நெட் வேணும். மத்தபடி இதை நீ ஆஃப்லைன்லேயே யூஸ் பண்ணலாம்” என்றிட, தலையாட்டினாள்.
“அப்பறம் இதைப் பிடி” என ஒரு ஸ்கின் லோஷனையும் கொடுத்தான்.
“இதை நீ யூஸ் பண்ணிட்டு இருந்ததான. தொடர்ந்து யூஸ் பண்ணு ஸ்கின் ட்ரை ஆகாம இருக்கும்”
“ம்ம்க்கும் எப்படியும் திரும்ப போய் தேங்கா நாரால தேய்க்கிறப்ப இந்த லோஷனை போட்டாலும் வேஸ்ட் தான். எனக்கு வேணாம்… இருக்குறதே போதும்” என்றிட, அதற்கும் பதில் அளிக்காது வலுக்கட்டாயமாக கொடுத்தான்.
“எனக்கு மட்டும் அட்வைஸ் பண்ணுனா பத்தாது நீயும் அப்போ அப்போ மிஸ்டர் இளவேந்தன்க்கு போன் பண்ணி பேசிக்கோ. ஹி லுக் லைக் குட் சோல்” என்றிட, “ம்ம்” என்றாள்.
பயணிகளுக்கு அழைப்பு ஒலிக்க, “ஓகேடி. ஐ ஹேவ் டூ கோ! ஒழுங்கா படி. எந்த ஹெல்ப் வேணாலும் என்னை காண்டாக்ட் பண்ணு. போன்ல என் நம்பர் சேவ் பண்ணிருக்கேன். ஆஹில் நம்பரும் இருக்கு. பத்திரமா இரு. சீக்கிரம் நிவேதன் வருவான். அண்ட்…” என இன்னும் பேச வார்த்தைகள் இருப்பது போல தேடினான்.
“அண்ட்… சீக்கிரம் திரும்ப கடன்காரி ஆகிடுடி” என்றான் குறும்பாக.
கண்ணில் முட்டி நின்ற நீருக்கு விமோச்சனம் அளிக்காது பாடுபடுத்தியவள், “பாத்துப் போ அரக்கா…” என்றாள்.
அவளை இறுக்கி அணைத்துக் கொண்டவன், அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, “மிஸ்ஸிங் யூ மின்னல். லவ் யூ!” என அவள் கன்னம் தீண்டி தான் வளர்ந்த கலாச்சார முறையில் பிரியாவிடை கொடுக்க, தன்னுள் மீண்டும் மீண்டும் அமிலத்தை ஊற்றி விட்டு அழகு பார்ப்பவனின் முதுகை வெறித்தவளின் கண்ணிலிருந்து விடுதலையானது கண்ணீர் துளிகள்.
அவன் எதேச்சையாய் திரும்பிப் பார்ப்பது போல் கையசைக்க, நொடியில் கண்ணீரை துடைத்துக் கொண்டவள் மெலிதாய் புன்னகைத்து கைகாட்டி விட்டுப் பின் விறுவிறுவென வெளியில் வந்தாள்.
ஏனிந்த இந்தக் காதலும் தன்னுள் கதறுகிறது என்ற புதிர் புரியாதவளாய், அவனிடம் இருந்து எந்தப் பொருளையும் எடுத்துக்கொண்டு வர மறுத்தவள், தாராள மனதுடன் தனது உயிரை மட்டும் அவனது வழிப்பயணத்திற்கு கடனாய் கொடுத்து விட்டு, வெற்றுடலாய் நின்றாள்.
ஆஹில்யன் கண்ணைத் துடைத்துக்கொண்டு விமானநிலைய வாசலை நோட்டமிட, அங்கு நிதர்ஷனா வருவது தெரிந்து காரை எடுத்துக்கொண்டு அவளிடம் சென்றான்.
அவளுக்கு கதவைத் திறந்து விட்டதும், உணர்வற்ற முகத்துடன் காரில் ஏறியவள், ஒரு வார்த்தை பேசவில்லை.
தனது இயல்பைத் தொலைத்து, தன்னையே தொலைத்திருந்தவளை வீட்டில் இறக்கி விட்டவன், “எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க மேம். உங்க பிரதர் பத்தின டீடெய்ல் கிடைச்சா உங்களை காண்டாக்ட் பண்றேன்” என்றிட, அப்போதும் அவள் அவனைக் கவனிக்கவில்லை.
“மேம்? உங்க வீடு வந்துடுச்சு…” ஆஹில்யன் மீண்டும் அழைத்தபின்னே நிகழ்வு உணர்ந்தவள், “ஓ… தேங்க்ஸ்ண்ணா!” என்றபடி இறங்கினாள்.
“தோ பாருடி… இவளை கார்ல வந்து எறங்குறா!” என அக்கம் பக்கத்தினர் கூடி விட, ஆஹில்யன் கிளம்பியதும் கதிரவன் தோழியைக் கண்டு ஓடி வந்தான்.
“நிதா… நீ நல்லாருக்க தான. அந்த நாசமா போன வெளிநாட்டுக்காரன் என்னை முடக்கி வச்சுட்டான். நான் ஏதாவது விவகாரமா செஞ்சா உன்னைக் கொன்னுடுவேன்னு மிரட்டி வச்சதுல உனக்கு என்ன ஆகுமோன்னு பயந்துட்டே இருந்தேன் தெரியுமா இவ்ளோ நாளா” என்றவன் மற்றவர்களுக்காக குரலைத் தாழ்த்திப் பேசினான்.
வீட்டினுள் இருந்து வந்த நடேசன், “என்னமா நல்லாருக்கியா? வேலை எல்லாம் எப்படி இருக்கு” எனக் கேட்டார்.
அவள் புரியாமல் விழிக்க, கதிரவனோ “நீ வெளியூர்ல வேலை பார்த்துட்டு இருக்கன்னு சொல்லிருந்தேன்” என்று முணுமுணுக்க அதை தொடர்ந்து “நல்லாருக்கேன்…” என்றாள் அளவாய் புன்னகைத்து.
அவளை விசித்திரமாகப் பார்த்த பரமேஸ்வரி, “காசு வந்தா காக்கா கூட கலராகிடும்னு சும்மாக்கா சொன்னாங்க… சரி சரி இங்க நின்னு ஏன் படம் காட்டிட்டு இருக்காம வீட்டுக்குப் போ” என்றிட, அவள் பதில் ஏதும் பேசாது வீட்டை அடைந்தாள்.
அவள் பின்னே செல்ல எத்தனித்த கதிரவனை முதுகில் அடித்தவர், “போய் தூங்குடா நாளைக்கு வேலைக்கு போவணும்ல” என்று உள்ளே அனுப்ப, “இந்தம்மா வேற…” என எரிச்சலுடன் வீட்டினுள் சென்றான்.
வீட்டினுள் நுழைந்த நிதர்ஷனாவிற்கு தானாய் நிவேதனின் நினைவு வந்தது. கதிரவன் வீட்டை சுத்தம் செய்து வைத்திருந்தான்.
உள்ளே செல்லக் கூட தெம்பின்றி கதவின் மீதே சாய்ந்து அமர்ந்து கொண்டவளுக்கு, இந்தத் தனிமையைத் தாள இயலவில்லை.
வளவளவெனவென்ற பேச்சினை இனி அந்த கலப்படக் கண்ணுக்காரனைத் தவிர யார் கேட்பார்கள்?
அதிலும் அந்த ரசனை மின்னும் விழிகள். அந்த விழிகள் காட்டும் கோபம். அந்தக் கோபத்தின் வழியே உணரும் அன்பு. அந்த அன்பின் வெளிப்பாடாய் அவன் சிந்தும் புன்னகை. அந்தப் புன்னகையினூடே யாரிடமும் அவன் காட்டிராத வலி. அந்த வலியை இன்று தனக்கு தந்து விட்டுச் சென்றவனின் அணைப்பு. இறுதியாய் அவன் தந்த முத்தம்!
இன்னும் அந்த மீசையின் முணுமுணுப்பு கன்னத்தில் தவழ்ந்த வண்ணம் இருந்தது.
இனி அவ்வளவு தானே எல்லாமே! ஆம்! அவ்வளவே தான். நினைக்க நினைக்க நெஞ்சம் அடைக்க, வாய் விட்டே கதறி அழுதாள்.
இந்தக் காதல் தன்னைச் சேர்ந்திருக்கவே கூடாது!
“யாஷ்!” தனது காலைக் கட்டிக்கொண்டு தன்னவனின் பெயரையே வெகுநேரம் உளறியபடி அப்படியே உறங்கியும் போனாள். ஒரு வாரத்திற்கு அந்த வீட்டை விட்டு அவள் வெளியில் வரவே இல்லை. அவளுக்கு வேண்டிய பொருள்களை கதிரவன் வாங்கித் தர, அவளின் அமைதி அவனைப் பாடாய் படுத்தியது.
“ஏன் இப்டி இருக்க நிதா. எனக்குப் பயமா இருக்கு உன்னைப் பார்த்தா. அங்க உனக்கு பிரச்சினை எதுவும் இல்லைதான?” எனக் கேட்க, “இல்ல” என மறுப்பாகத் தலையசைப்பவள் மேற்கொண்டு எதுவும் பேசுவதில்லை.
பாத்திரம் கழுவும் போது, தானாய் உள்ளங்கையைப் பார்த்துக் கொள்வாள்.
“இது என்ன… உன் கை இவ்ளோ ரஃப்பா இருக்கு” அவன் முகம் சுளித்தது தானாய் நினைவில் ஆட, கண்ணீர் துளி ஒன்று உள்ளங்கையை நிறைத்தது.
இடையில் இரு முறை பேசினான். அதன்பிறகு அவனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. இளவேந்தன் தினமும் அழைப்பார். அவரது மனதை வருத்த மனமின்றி இரு வார்த்தைகள் பேசி விட்டு வைத்து விடுவாள்.
சில நேரம் ஆஹில்யன் அழைப்பான். நிவேதன் பற்றிய தகவல் எதையாவது கேட்டு விட்டு, அவளது நலத்தையும் அறிந்து கொள்வான்.
அவள் எந்நேரமும் ஏதோ யோசனையில் இருப்பது கதிரவனை வாட்ட, அவளது மனதை மாற்றும் பொருட்டு, “நிதா… நீ அரைக்கிற மாவுல இட்லி தோசை சாப்பிடாம நாஷ்டாவே இறங்க மாட்டுது. நம்ம ஏரியாவே, உன் மாவுப்பாக்கெட் இல்லாம வறண்டு போயிருக்கு. நான் இட்லி அரிசி வாங்கியாரட்டா?” என ஆர்வமாகக் கேட்க, “ம்ம்” எனத் தலையாட்டியவள் தனது கவனத்தைத் திசை திருப்ப கிரண்டரைக் கழுவி மாவட்டத் தொடங்கினாள்.
மாவின் பதத்தை சரி செய்து கொண்டிருந்தவளின் எண்ணத்தைக் கலைக்கும் வண்ணம் கதவு படபடவெனத் தட்டப்படும் சத்தம் கேட்டது.
——
நிகழ்காலம்
தலையைப் பிடித்துக்கொண்டு ஏதேதோ யோசனையில் அப்படியே உறங்கிப்போன நிதர்ஷனாவை எழுப்பியது கதவு வேகமாகத் தட்டப்படும் ஓசை.
நடந்தவைகள் எல்லாம் நிஜமா வெறும் கனவா என எண்ணும் அளவு தத்ரூபமாக இருந்தது.
‘என்ன ஆச்சு நமக்கு…? நேத்து நிவே பாடி இருக்குன்னு யாஷ் திருச்சிக்கு கூட்டிட்டுப் போனாரு. கதிரோட சண்டை போட்டோம். தலைவலிக்குதேன்னு ரூம்க்கு வந்தா, என்னென்னமோ தோணுது. ஏற்கனவே நடந்த மாதிரி… ஆனா இதெல்லாம் கனவு கண்ட மாதிரி இருக்கே. நிஜமா நடந்துருந்தா நமக்கு தெரியாமலா இருக்கும். அதுவும் அந்த அரக்கனை நான் விரும்பி உருகுறதுலாம் நம்ம கேரக்டருக்கே செட் ஆகாது. நமக்கு தான் ஏதோ ஆகிடுச்சு போல. இந்த தேஜாவூன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி…’ என்றவளுக்கு தலைவலி குறைந்து விழிப்பு வர வர, கனவு போல இந்த நினைவுகள் இதயத்தின் ஆழத்தூரம் சென்று விட்டது.
சில கனவுகள் மறக்கப்படுவது போல, இந்த நினைவுகளும் கனவுகளாக கலைந்தது.
அதன்பிறகே தான் மெத்தையில் இருப்பதை உணர்ந்தாள். ‘நேத்து நம்ம தரையில தான உக்காந்துருந்தோம். எப்படி கட்டிலுக்கு வந்தோம்?’ என யோசித்தபடியே தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு கீழே வந்தாள்.
அதே நேரம் யாஷும் தனது அலுவல் அறையில் வெளியில் வந்தவன், “ஆர் யூ ஆல்ரைட்?” எனக் கேட்டான் கூர்மையாக.
அவளது விழிகள் சிவந்திருக்க, அவளோ அவனேயே உற்றுப் பார்த்தாள்.
“வாட்?”
இந்த மூஞ்சில சிரிப்பு வந்துச்சுங்க யாஷ். அதுவும் என்கிட்ட நீங்க சிரிச்சு சிரிச்சு பேசுற மாதிரி கனவுலாம் வந்துச்சு தெரியுமா? இந்த லட்சணத்துல இங்க இருந்து போறதுக்காக நான் அழுக வேற செஞ்சுருக்கேன். கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாம்… நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்” எனக் கிளுக்கிச் சிரித்தவளை உணர்வற்று பார்த்திருந்தான் யாஷ் பிரஜிதன்.
அன்பு இனிக்கும்
மேகா