2,816 views

தயக்கமேதும் இன்றியே ஒருவருக்குள் ஒருவராக தஞ்சமடைந்தனர் ஜிஷ்ணு தர்மனும் வசுந்தராவும். வெகு நேரம், அவளைக் கையில் தாங்கியே நடந்தவனின் கன்னத்தில் மெல்ல முத்தமிட்ட வசுந்தரா, “இறக்கி விடு” என்றாள்.

“ஏன் பேப்? எனக்கு கையெல்லாம் வலிக்கல” எனத் தனக்காக கூறுகிறாளோ என்ற மிதப்பில், மென்மையாக இறக்கி விட்டான்.

அவளோ, “உனக்கு கை வலிச்சா என்ன, வலிக்கலைன்னா எனக்கு என்ன? நீ முரட்டுத்தனமா கிஸ் குடுத்து குடுத்து என் லிப்ஸ் வலிக்குது. கொஞ்ச நேரம் தள்ளியே வா.” என அவனை கிண்டலுடன் வார, “அடிங்க…” என்று அவளை அடிக்கத் துரத்தினான்.

அன்றைய பொழுதையும், ஜிஷ்ணு வீட்டிலேயே கழித்தவள் அவ்வீட்டில் ஒருவளாய் மாறி விட, ஜிஷ்ணுவின் கருவிழிகள் அவளை மட்டுமே வட்டமடித்தது.

குமரன் தான், “ஹக்கும் ஹக்கும்” என இருமி ஜிஷ்ணுவை சுய நினைவிற்கு கொண்டு வந்து, “என்னை விட்டுட்டு நீ மட்டும் எதுக்குடா போன?” என்றான் கிசுகிசுப்பாக.

“நீ தூங்கிட்டு இருந்த மாப்ள. உன்ன எழுப்ப என் மனசு வலிச்சுச்சு…” என நெஞ்சைப் பிடித்து நடித்தவனைக் கண்டுகொண்ட குமரன், “உனக்கு நெஞ்சுன்னு ஒன்னு இருக்குன்னும், அதுல லவ்வுன்னு ஒன்னு இருக்கும்ன்னு இப்ப தான் மாப்ள தெரியுது…” என நக்கலாக கூறியதில்,

அவனை முறைத்த ஜிஷ்ணு, “லவ்வா அதெல்லாம் இல்லையே” என்றான் அசட்டையாக.

“ஓ… லவ் இல்ல…? அப்புறம், ஏண்டா மந்திரிச்சு விட்ட ஆடு மாதிரி பேப், பேப்ன்னு அவள் பின்னாடியே சுத்துற?” எனக் கேட்க, அவனிடம் சிறு முறுவல் தவிர வேறு பதிலில்லை.

நாட்கள் என்னவோ கடகடவென தான் ஓடியது. இதனிடையில், முகத்தை தொங்க போட்டே அலைந்த ராதிகாவையும் சமாதானம் செய்திருந்தாள். அன்று ராதிகாவிற்கு பிறந்த நாளாக இருக்க, அறையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தவளை நோக்கி வந்த வசுந்தராவை நிமிர்ந்தும் காணவில்லை அவள்.

தொண்டையை செருமிய வசுந்தரா, “இன்னைக்கு ஒரு கரடிக்குட்டிக்கு பிறந்தநாள்ன்னு கேள்விப்பட்டேன்.” என எங்கோ பார்த்து பேச, அதில் அவளை முறைத்த ராதிகா, மீண்டும் உர்ரென தலையை தாழ்த்தினாள்.

“ஓஹோ… நீங்க ஃபீலிங்ஸ் இல்லாத செல்ஃபிஷ்கிட்ட எல்லாம் பேச மாட்டீங்களோ? தெரியாம வந்துட்டேன்…” என்று நக்கலாகக் கூறி விட்டு நகர எத்தனித்தவளின் கையைப் பிடித்த ராதிகாவிற்கு கண்ணெல்லாம் கலங்கி இருந்தது.

“சாரி தாரா. நான் அப்படி பேசியிருக்க கூடாது…” எனப் பிசிறடித்த குரலில் கூற, அதில் புன்னகைத்தவள், “பர்த்டே பேபி ஆழப்படாது…” என்று அவள் கன்னத்தைக் கிள்ளி, “ஹேப்பி பர்த்டே ராதி…!” என்று கண் சிமிட்டி, அவளுக்கு பரிசும் கொடுத்தாள்.

அதில் விழி விரித்த ராதிகா, “கிஃப்ட் எனக்கா?” என வியப்பாய் கேட்டு, அதனை வேகமாக பிரித்தவள், உள்ளே லேட்டஸ்ட் ஆண்ட்ராய்ட் மொபைல் இருப்பதைக் கண்டு இன்னும் துள்ளினாள்.

“ஃபோனா? எனக்கா தாரா?” எனக் கேட்டவளைக் கண்டு அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. பின்னே, இன்னும் அவள் நோக்கியோ பட்டன் போனை தானே உபயோகித்துக் கொண்டிருந்தாள்.

இருவரும், பழைய மாதிரி பேசியபடியே கல்லூரிக்கு சென்றனர். வாசலில் நின்று தான் ஜிஷ்ணுவும் குமரனும் பேசிக்கொண்டிருக்க, ராதிகாவோ தயங்கினாள்.

“என்னடி?” வசுந்தரா புரியாமல் பார்க்க,

“தர்மா என் மேல கோபமா இருக்கான். திரும்பி அடிச்சுட்டா?” என கன்னத்தில் கை வைத்து பாவமாக கேட்க, பக்கென சிரித்த வசுந்தரா, “அதெல்லாம் அடிக்க மாட்டான்… வா” என இழுத்துக்கொண்டு அவர்கள் முன் நிறுத்த, குமரன் வேகமாக, “ஹேப்பி பர்த்டே ராதி…!” என்று கை குலுக்கினான்.

“தேங்க்ஸ் குமரா…” என மெல்ல சிரித்தவள், ஜிஷ்ணுவைக் கண்டு உம்மென முகத்தை வைத்துக் கொள்ள, வசுந்தரா தான் அவனை இடித்து, “ப்ச் பேசு ஜிஷு. பாவம் அவ…” என்றாள் கண்ணை சுருக்கி.

அவளையும் ஒரு நொடி உறுத்து விழித்தவன், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேச வரும் முன், ராதிகாவே “சாரி தர்மா” என்றாள் அழும் குரலில். எங்கே அடித்து விடுவானோ என்ற பயம் வேறு அவளைப் பிசைந்தது.

அவனுக்கும் அவள் குரல் ஏதோ செய்திட, “விடு ராதி. பொறந்த நாள் அதுவுமா கண்ணை கசக்கிக்கிட்டு… பிறந்த நாள் வாழ்த்துக்கள்…” என்றான் புன்சிரிப்புடன்.

அவன் சாதாரணமாக பேசியதும் தான், அவளுக்கு நிம்மதி ஆக, “தேங்க்ஸ்” என்றவள், கல்லூரிக்கு சென்றாள் துள்ளல் நடையுடன்.

வசுந்தராவோ, “நீ அவளை அடிச்சது தப்பு ஜிஷு. அவள்ட்ட சாரி கேளு” என்று கண்டிப்பாய் கூற,

அவளை அமைதியாக பார்த்தவன், “நான் சாரி கேட்டா, அவள் பேசுனது சரின்னு ஆகிடும். கேட்க முடியாது” என்றான் அழுத்தமாக.

“அவள் பேசுனது எல்லாம் உண்மை தான?” என்றபடி ஜிஷ்ணுவைக் காண, அவனும் அவளை ஒரு லேசர் பார்வை பார்த்து விட்டு, வகுப்பிற்கு சென்றான்.

மாலை, பேருந்து நிலையத்திலேயே ராதிகாவிற்கு திகைப்பூட்டும் விதமாக கேக் வாங்கி வெட்ட வைத்து, அவள் பிறந்த நாளை நால்வருமாக கொண்டாடிட, கேலியும் கிண்டலும் சிறு சிறு உரசல்களுமாக நாட்கள் அழகாக நகர்ந்தது நால்வருக்கும்.

வகுப்பில் உறங்கித் திட்டு வாங்கும் குமரனை கேலி செய்வதும், அலமேலு ஜிஷ்ணுவிற்காக கொடுத்து விடும் உணவை வசுந்தரா பிடுங்கி உண்பதும், யாரையாவது அடித்து விட்டு, கையில் ரத்தக்களரியுடன் வரும் ஜிஷ்ணுவை முறைத்து வைப்பதும், விடுமுறை நாட்களில் முத்தத்தின் மோகத்தில் திளைப்பதுமாக இனிமையான தருணங்களை நிறையவே கொடுத்தது அக்கல்லூரி வாழ்க்கை.

ஜிஷ்ணு வசுந்தராவின் காதலை விட, மூவருக்குள்ளும் நட்பு பிணைப்பு அதிகமாகவே வளர்ந்தது. அதுவே குமரனை ஒரு சட்டை வாங்குவதில் கூட, வசுந்தராவிடம் அபிப்ராயம் கேட்பதிலும், ஜிஷ்ணுவிற்கு கோபமோ ஆத்திரமோ சூழ்கையில், அவளை அணைத்துக் கொள்வதில் அக்கோபங்கள் மட்டுப்படுவதிலும் நட்பும் நேசமும் வளர,

குமரனை அடித்துப் படிக்க வைப்பதிலும், ஜிஷ்ணு சில நேரம் வகுப்பிற்கு வராதிருந்தால், இரு நாட்களாவது மௌன விரதத்தில் கோபத்தை காட்டுவதிலும், ‘பேப்’ என்ற அவனின் ஒற்றை வார்த்தையில் மொத்தக் கோபமும் பனியாக உருகி, மனமும் மேனியும் அவனிடமே சரணடைவதிலும், வசுந்தராவிற்கு அவனே அனைத்தும் ஆகிப் போனான்.

ஆனால், அப்படி சரணடையும் மனதை அத்தனை சீக்கிரம் வெளிப்படுத்தி விட மாட்டாள். அவனும் அத்தனை சீக்கிரம் சமாதானம் செய்து விட மாட்டான். காதலென்ற உருவமற்ற திரவம், உயிரணுக்களில் ஆறாக ஓடியும், அதனை வாய் வார்த்தையாக வெளிப்படுத்த இருவருமே முயற்சிக்கவில்லை. ஆனால், செயல்களில் வெளிப்படுத்தினர்.

அவளை யாரையும் ஒரு வார்த்தை பேச விட மாட்டான். அதே போல, அவனுக்கு ஒன்றென்றால் அவளும் துடிக்கத் தான் செய்வாள். அதனை அத்தனை பெரிய பாதிப்பாக இருவருமே காட்டிக்கொள்வதில்லை.

“இவனுக்காக நான் ஏன் பலவீனமானவளாணும்? நான் எப்பவும் இப்படி தான் இருப்பேன்.” என்ற நிலையான கொள்கையில் இருந்து அவளும் சரி, “இந்த திமிர்பிடிச்சவகிட்ட நான் ஏன் உடைஞ்சு போகணும்” என்ற ரீதியில் அவனும் சரி, அவர்களின் நிலையில் இருந்து மாறாமலேயே அவர்களுக்குள் பிணைப்பை வளர்த்தனர்.

அது தான் இருவருக்குமே பிடித்தது. அவனால் அவன் கர்வத்தை விட்டுக்கொடுக்க இயலாததே அவளையும் ரசிக்க வைத்தது. நீ சென்றால் கூட எனக்கு பெரிய பாதிப்பில்லை என்ற பெண்ணவளின் திமிர் தான் ஆணவனையும் சாய்த்தது.

இதில் அவர்களே அறியாத, அறிந்தும் அதனை அலட்சியப்படுத்திய ஒரே விஷயம்… ஒருவரன்றி மற்றவரால் சில நொடிகள் கூட தாக்கு பிடிக்க இயலாது என்பது தான்.

அன்று, வெகு நேரம் கடந்தும் வசுந்தரா வகுப்பிற்கு வராது போக, “எங்க போய் தொலைஞ்சா இவ…” இன்னைக்கும் வீட்ல ஒரண்டை இழுத்துட்டாளோ” என்ற எண்ணத்தில் அவளுக்கு போன் செய்ய அந்த அழைப்போ எடுக்கப்படவே இல்லை.

ஏனோ அவனால் இயல்பாக இருக்க இயலாமல், ராதிகாவுக்கு போன் செய்ய, சிறிது நேரத்தில் போனை எடுத்தவளிடம், “இன்னும் காலேஜ் வரலையா ராதி?” என்றான் வேகமாக.

அவளோ ஹஸ்கி குரலில், “தர்மா… நான் க்ளாஸ்ல தான் இருக்கேன். இன்னைக்கு இன்டர்னல்ஸ் இருந்துச்சுன்னு சீக்கிரம் வந்துட்டேன்.” என்றதும்,

“அப்போ வசு?” எனக் கேட்க,

“அவள் அடுத்த பஸ்ல வர்றேன்னு சொன்னாளே வரலையா? நான் அவள் வீட்டுக்கு போகும் போது கிளம்பிட்டு இருந்தா!” என்றதில், ஜிஷ்ணுவிற்கு இதயம் படபடவெனத் துடித்தது.

உடனே, வெளியில் சென்றவன், மீண்டும் மீண்டும் அவளுக்கு அழைக்க, அதுவோ கேட்பாரற்று அணைந்து போனது.

“பேப் எங்க போன?” என வாய்க்குள்ளேயே முனகியவனுக்கு, மூச்சு வேறு வாங்கியது. இதுவரை இப்படிப்பட்ட உணர்வுகளை சந்தித்திராதவனுக்கு தொண்டைக் காய்ந்தது.

நண்பனின் வண்டியை எடுத்துக்கொண்டு, பேருந்து வரும் வழியெல்லாம் தன்னவளைத் தேடிக்கொண்டே சென்றான் தவிப்புடன்.

இதற்கு சில நிமிடங்கள் முன்பு, கல்லூரி நோக்கி பேருந்தில் பயணம் செய்த வசுந்தரா, அடிக்கும் லேசான அனல் காற்றில் ஆடிய கூந்தலை அடக்கியபடியே, வழியில் தெரிந்த தோப்பு, மரங்களை எல்லாம் பார்வையிட்டுக் கொண்டே வந்தவள், சட்டென புருவம் சுருக்கினாள்.

தூரத்தில், இரு ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணின் கையைப் பற்றி இருப்பதையும், பேருந்தைக் கண்டதும், அவளை மரத்தின் பின்னால் மறைப்பது போலவும் தோன்ற, சற்றும் யோசியாமல் பேருந்தை நிறுத்தக் கூறினாள்.

நடத்துனரோ, “இங்கல்லாம் பஸ் நிக்காதும்மா” என்று காட்டமாக கூற, “அண்ணா… அங்க ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன்” என்றதில், அவர் எதையும் காதில் வாங்காததோடு பேருந்தும் கூட்டமாக இருக்க, சற்றே கடுப்பானவள், ஓடும் பேருந்திலிருந்தே இறங்கி விட்டாள்.

அப்படியும் எதையும் கண்டுகொள்ளாத ஓட்டுனர், பேருந்தை புயல் வேகத்தில் செலுத்த, “பரதேசி நாயே… வேகமா போய் சாவ போறியா?” என பேருந்தை பார்த்து வாய்க்கு வந்தபடி திட்டியவள், அந்த ஆண்களை நோக்கி செல்ல, அவர்களோ லேசாக பின்னால் நகன்றனர்.

“டேய்… இங்க என்னடா பண்றீங்க?” என அதட்டலாக கேட்டவள், ஒரு பெண்ணை வாயைப் பொத்தி மரத்தின் பின் நிற்க வைத்திருப்பதை கண்டு, “யாருடா இந்த பொண்ணு? பொறுக்கி நாய்ங்களா என்னடா பண்றீங்க?” என்று கத்தினாள்.

அதில் ஒருவன் சற்றே மிரண்டிருக்க, மற்றொருவனோ வசுந்தராவை மேலிருந்து கீழ் வரை அருவருக்கும் பார்வை பார்த்து, “நீ யாரு?” எனக் கேட்க, “மச்சான்… இவளை தர்மா கூட பாத்துருக்கேன்.” என்றதில்,

கண்கள் சிவக்க, “அப்போ முதல்ல இவளை போட்டு தள்ளலாம்.” என பின் முதுகில் சொருகி வைத்திருந்த பெரிய கத்தியை எடுக்க, வசுந்தரா ஒரு நொடி அதிர்ந்தாள்.

சரியாக அவளைத் தாக்க வருகையில், ஜிஷ்ணுவும் அங்கு வந்து விட, அவளோ அக்கத்தி வைத்திருந்தவனின் கையைத் திருகி, அக்கத்தியை அவள் கையில் வாங்கி, அவனின் கையையே கிழித்து காயமாக்க மற்றொருவன் கோபத்துடன் அவளைத் தாக்க வந்தான்.

அதனை ஜிஷ்ணு பிடித்து தடுத்து, காலாலேயே அவனை எத்தி விட, அவனோ தூரம் சென்று விழுந்தான்.

அவனை எதிர்பாராதவள், “ஜிஷு…?” என விழி விரிக்க, ஒரு நொடி ஒரே நொடி அவளைக் கண்ட நிம்மதியில் ஜிஷ்ணு தடுமாறிட, ஒருவன், கட்டையால் அவன் தலையில் அடித்திருந்தான்.

அதே வேகத்தில் மற்றொருவன் அதிர்ந்து நின்றிருந்த வசுந்தராவின் கழுத்தைக் கத்தியுடன் குறி வைத்து வர, ஜிஷ்ணு சட்டென அவளை தன்னருகில் இழுத்திருந்தான்.

அப்படி இருந்தும், அவளின் கைப்பகுதியில் கீறி இருக்க, அவ்வளவு தான் ஜிஷ்ணுவிற்கு வெறி வந்து விட்டது.

“பளார்! பளார்!” என இருவரையும் மாறி மாறி அறைந்தவன், அவர்கள் எதிர்க்க சிறிதும் இடம் கொடுக்காமல், பைத்தியம் பிடித்தவன் போல நிதானமின்றி இருவரையும் மிதித்திருந்தான்.

அப்போதும் ஆத்திரம் அடங்காமல், கீழே கிடந்த கத்தியை எடுத்து, இருவரின் கைகளையும் ரத்தக்களரி ஆக்கி இருக்க, அதுவரையிலும் ஜிஷ்ணுவின் அவதாரத்தில் சிலையாகி நின்ற வசுந்தரா, அதன் பிறகே சுயநினைவு வந்து, “ஜிஷு… ஜிஷு விடு அவங்களை…” என்று அவனை பிடித்து பின்னால் இழுத்தாள்.

ஆனால், அவளால் முடியவில்லை. “ஜிஷு… ப்ளீஸ் வா.” என்று பதற, அவனோ எதையும் காதில் வாங்காமல், அவர்கள் வயிற்றில் கத்தியை சொருக எத்தனிக்க, அவன் முன் வந்து அவனின் கன்னத்தை தட்டிய வசுந்தரா, “சொன்னா கேளு ஜிஷு. விடு செத்துருவானுங்க. ப்ளீஸ்…” என்றாள் பதற்றமாக.

“சாவட்டும் டி… உன்மேல கை வப்பானுங்களா? கை இருந்தா தான” என கர்ஜித்து ஒருவன் கையைப் பிடித்து வளைக்க, “ஐயோ… விடுடா!” என்றவள், அவனைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் இறுக்கி அணைத்தாள்.

“சொன்னா கேளு… வா!” என அணைத்தபடி அவனை நகர்த்த, அவளின் அணைப்பில் சற்றே தணிந்தான்.

அதனைப் பயன்படுத்தி அவ்விருவரும், அங்கிருந்து தப்பித்து ஓட, ஜிஷ்ணு அவர்களை வஞ்சமாக உறுத்து விழித்தான்.

“அவனுங்களை கொன்னுருப்பேன்டி” என்று கோப மூச்சுக்கள் வாங்கியவன், அவள் கையில் இருந்து வழிந்த ரத்தத்தை சலனமின்றி பார்த்தான்.

“வலிக்குதா?” எனக் கேட்டவனின் குரல் நடுங்க, “இ… இல்ல… லைட்டா தான்” என்றவளுக்கு வலியில் முகம் சுருங்கியது.

“வா. ஆஸ்பத்திரிக்கு போலாம்” என்றவன் குமரனுக்கு போன் செய்து வரச் சொல்ல, அங்கு பயந்து நின்றிருந்த அப்பெண்ணைப் பற்றியும் விசாரித்தான்.

மேலும் பேச தன்னவளின் குருதி நிறைந்த கரம் இடம் கொடுக்கவில்லை அவனுக்கு. எண்ணம் முழுதும் அவளுக்குக் கட்டிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நிறைந்திருக்க, அவள் மெதுவாக ‘ஸ்ஸ்’ என முனகினாலும், “என்னடி ஆச்சு…? வலிக்குதா?” எனப் பதறி அருகில் வந்திருந்தான்.

அவன் பதற்றம் விசித்திரமாக இருந்தது அவளுக்கு. ஆனால், பிடித்திருந்தது. அந்நேரம் அவன், பின்னந்தலையில் கை வைத்து மெல்ல அழுத்திட, அதில் தான் அவளும், “தலைல அடிபட்டுச்சுல ஜிஷு. நல்லா தேய்ச்சு விடு…” என்று அவனின் பின்னந்தலையில் கை வைக்க வர, அவன் “ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல” என்று நகன்றான்.

“ப்ச்… விடு நான் தேய்ச்சு விடுறேன்!” என வம்படியாக தன் அடிபடாத கை கொண்டு பின்னந்தலையில் கை வைத்தவள் தன் உள்ளங்கையில் அவனின் உதிரம் பிசுபிசுப்பதைக் கண்டு திகைத்தாள்.

“ஜிஷு… ரத்தம் வருதுடா.” என்று பதற, “லேசா தான் பேப்…” என சமாளிக்க முற்பட்டவனிடம், “தலைல இருந்து ரத்தம் வருது. லேசாதான்னு சொல்ற?” என்றவளுக்கு கரங்கள் நடுங்கத் தொடங்கியது.

அவளின் துப்பட்டாவை எடுத்து, பின்னந்தலையை அழுத்தி பிடித்தவளின், கண்கள் அவளை மீறி கலங்கியது.

“வலிக்குதா?” எனத் தேய்ந்த குரலில் கேட்டவளுக்கு வார்த்தைகளும் தேய்ந்தது.

அவனுக்கு அவளது கண்ணீர் புதிது தான். ஏனோ அவனுக்கான அவளது கலங்கிய கண்கள் அவனுக்குள் வியப்பையே கொடுத்தது.

அதற்குள் குமரனும், மேலும் சில நண்பர்களும் வந்து விட, அவர்களோ இன்னும் பதறினர்.

கூடவே ஒரு ஆட்டோவையும் அழைத்து வந்ததில், இருவரையும் ஏற்றி விட்டு, “உடனே ஆஸ்பத்திரிக்கு போகாம ஏன் இப்டி இங்க நிக்கிறீங்க?” என்று குமரன் கோபத்துடன் கேட்க, “அந்த பொண்ணை விட்டுட்டு எப்படி போக முடியும்?” என இருவரும் ஒரு சேர பதிலளித்தனர்.

சுற்றிலும் பொட்டல் காடு. மணிக்கொரு தரம் தான் பேருந்தும் வரும். இங்கிருந்து அருகிலிருக்கும் ஊருக்கு செல்ல குறைந்தது அரைமணி நேரம் ஆகும். அதுவரை அப்பெண்ணை தனியாகவும் விட இயலாததுனாலேயே, இருவரும் காயத்தை பொறுத்துக்கொண்டு அங்கேயே நின்றனர்.

அப்பெண் தான் இருவருக்கும் கண்ணீரிலேயே நன்றி உரைக்க, குமரன், “நான் இந்த பொண்ணை வீட்ல சேர்த்துடுறேன். நீங்க போங்க” என்று இருவரையும் அனுப்பி விட்டான்.

மருத்துவமனைக்கு சென்று, இருவரையும் தனி தனி அறையில் காயத்தில் மருந்திட, இருவருக்கும் தையல் போடப்பட்டது.

தனக்கு போடும் வரை பொறுத்தவள், அதற்கு மேல் முடியாமல் ஜிஷ்ணுவின் அறைக்கு சென்று, “ஒன்னும் இல்லல. ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கலாமா?” எனக் கேட்க, அவனோ “அவ்ளோ சீன்லாம் இல்லடி…” என மறுத்தும் கேளாமல், அனைத்து சோதனைகளையும் எடுக்க வைத்து, அனைத்தும் சரியாக வந்ததும் தான் அவளால் மூச்சே விட முடிந்தது.

அதுவரையிலும், அவளது தவிப்புகள் எல்லாம் ஆடவனின் விழிகளுக்குள் அடக்கமானது.

சில நேரம் கடந்தே, ஜிஷ்ணு “நீ அந்த இடத்துல என்னடி பண்ணிட்டு இருந்த?” எனக் கேட்க, அவள் நடந்ததைக் கூறினாள்.

“நான் தான் சொன்னேன்ல. நீ எதுலயும் தலையிடாதன்னு” என்று கடிந்தவனிடம், “அதுக்கு? கண்ணு முன்னாடி ஒரு பொண்ணு ஆபத்துல இருக்கும் போது, எப்படி சும்மா இருக்க முடியும்? என்னால செல்ஃப் டிஃபன்ஸ் பண்ண முடியும். அதான் தைரியமா இறங்குனேன். ஆனா, உன் பேரை சொன்னதும் என்னை ஏண்டா கொலை பண்ண வந்தான்?” என அவள் புரியாமல் கேட்டாள்.

“என்கிட்ட அடி வாங்குனவனா இருப்பான்… ஆனா அவனை சாவடிக்காம விடமாட்டேன்” என்று கடும் கோபத்துடன் கூறியதில், “இதை விடு ஜிஷு. காயம் சரி ஆகுற வரை வீட்ல ரெஸ்ட் எடு. காலேஜ்க்கு வராத. எவனையும் அடிக்கிறேன் கொல்றேன்னு போகாத…” எனக் கண்டிக்க, அவனிடம் பதிலில்லை.

“உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் ஜிஷு. தேவை இல்லாத எந்த பிரச்சனையும் பண்ணாத. உன் படிப்ப அஃபெக்ட் பண்ணும்” என்றவளிடம்,

“அதுக்கு, உன்ன கொலை பண்ண வருவான். நான் மூடிக்கிட்டு இருக்கணுமா. என் விஷயத்துல தலையிட்டா என்ன ஆகும்ன்னு தெரிய வேணாம்? தெரிய வைக்காம விட மாட்டேன்” என்றவன் விழிகளில் நெருப்புத் தெறித்தது.

“சொன்னா கேளு ஜிஷு” என நொந்தவளால், அவனை சரி செய்ய இயலவில்லை.

“நீ உன் அப்பாவை வர சொல்லி, வீட்டுக்கு போ” என உத்தரவிட்டவன், எழுந்து சட்டையை கையில் எடுக்க, அவனருகில் நெருங்கியவள், “நான் சொல்றதை கேட்க முடியுமா? முடியாதா?” என்றாள் அதிகாரமாக.

“கேட்க முடியாது போடி…” என எரிச்சலாகக் கூறியவனின் இதழ்களில் எட்டி தன் இதழ்களை பதித்திருந்தாள் வசுந்தரா.

அவன் கோபம் ஆற்றும் வழி தெரிந்ததனாலா, அல்லது அவன் காயம் கண்டு எழுந்த தவிப்பினாலா என்பதை பிரித்தறிய இயலாது, அவனுடன் ஒன்றிப் போனாள்.

பெண்ணவளின் முத்தம், அவனுக்கும் அவளைக் காணாத நொடியில் ஏற்பட்ட தாக்கத்தை வெளிக்கொணர, அவ்விதழ் முத்தத்தில் தன்னை நனைத்துக் கொண்டான்.

அவளை லேசாக தூக்கியபடியே, கட்டிலில் அமர்ந்தவன் அவளையும் மடியில் அமர வைத்து, முத்தத்தை முரட்டுத்தனமாகவே தொடர்ந்திட, அவளும் அவனையே பின் தொடர்ந்தாள்.

மூச்சு வாங்குபவளின் முதுகில் தடவிக் கொடுத்தவன், வேகத்தை மட்டும் குறைத்தானில்லை. இருவருமே சோர்ந்து போன பின்னே, ஆசுவாசமாகி இறுகிய அணைப்பில் திளைத்திருக்க, வசுந்தரா மயக்க குரலில், “இதை இப்படியே விட்டுட்டு ஜிஷு. படிப்பு முக்கியம். எனக்காக!” என்றவளின் குரலும், நெருக்கமும் அவனைக் கட்டிப் போட, “ம்ம்” என்றான் அவள் கழுத்தில் புதைந்தபடி.

சில நொடிகளில் சட்டென நிமிர்ந்தவன், “ஆனா, இன்னொரு தடவை இப்படி பொறுமையா இருக்க மாட்டேன் பேப்.” எனக் கூர்விழிகளால் எச்சரிக்க, “சரிடா அடியாளே. இந்த முரட்டு கோபத்த கொற. அப்பறம் எப்படி அரசியல்வாதி ஆகுறது. ம்ம்?” என புருவம் உயர்த்தி முறுவலுடன் கேட்டவள், கோபத்தில் நெளிந்திருந்த அவனது புருவத்தை வருடி சீராக்கினாள்.

அதில் அவனும் மென்முறுவல் பூத்து, “எனக்கு நார்மலாவே கோபம் நிறைய வரும் தான். ஆனா, உன் விஷயத்துல என்னை மீறி எல்லையில்லாம வருது” என்றவன், மீண்டுமொரு முறை அவள் அதரம் தீண்டி, அவள் மூச்சை கடன் வாங்கி விலகி, “இந்த மூச்சை சுவாசிச்சா அந்த கோபமும் தன்னால அமுங்கிடுது…” என்றான் ஆழமான கரகரத்த குரலில்.

உருமும் வேங்கை
ஒரு மான் முட்டித் தோத்தேனடி
உசுரக்கூட தர யோசிக்கமாட்டேனடி

பாா்க்காத பசி ஏத்தாத
இந்த காட்டான பூட்டாதடி
சாஞ்சாலே கொடை சாஞ்சேனே…

சிறுக்கிவாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனேன் பின்னாடியே…

வசுந்தரா வெகுநேரம் அவனையே கண்ணிமைக்காமல் பார்த்திருக்க, அவனோ அவ்விழிகளில் புதைந்து எழுந்து, நக்கல் நகையுடன் “கண்ணுலாம் கலங்குச்சு? எனக்காகவா?” எனக் கேட்டான் குறுகுறுவெனப் பார்த்து.

அதில் தான் சுயம் பெற்றவள், அவனின் இதழ்நீர் இன்னும் தன் இதழ்களைத் தீண்டி இருப்பதை உணர்ந்து, லேசாக கன்னம் சிவக்க, புறங்கையால் அதனை துடைத்து விட்டு, “சே சே… எனக்கும் தான அடிபட்டச்சு. எனக்கு வலிச்சனால கண்ணு கலங்கி இருக்குமா இருக்கும்…” என்றாள் அவனைப் பாராமல்.

“இருக்கும் இருக்கும்…” நக்கலாக சிரிப்பை அடக்கிக் கூறியவனை முறைக்க முயன்றவள், அது முடியாமல் அவன் கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.

“பொதுவா அவ்ளோ சீக்கிரம் நான் அழுதுற மாட்டேன் தான். ஆனா, உன் விஷயத்துல என்ன மீறி வந்துடுச்சு!” என அவன் கழுத்தில் இதழ் பதித்து கூறியவள், மறுநொடி ஆடவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்… அவள் பிடித்துக் கூறியதாலேயோ என்னவோ, அவளுக்கு வெறும் கண்ணீரை மட்டுமே பரிசளிக்கப் போகிறோம் என ஜிஷ்ணுவும் உணரவில்லை. வசுந்தராவும் அறிந்திருக்கவில்லை.

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
87
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment