Loading

மனப்பூவையின் கூவல் செவிமடுக்க மனிதம் இல்லையே மனிதா!
மன ஆழ்குழியின் சங்கதிகள் பல சமயங்கள் ஓலத்தின் சாயலாய்!
உன்னுள் மெல்லிய பாகமாய் இருக்கவே  பிறவியெடுத்தேன்!
என் மீது மனச்சவாரி செய்திட்டாய்!
பின்விளைவுகள் பேணாமல் முன்முடிவுகள் எடுத்தேன்!
உருக்குலைந்து உக்கிரமாய் உன் முன் நிற்கிறேன்!
என்றேனும் என் மென்மையை எனக்களித்திடுவாயா?
                                                    – மனம்

நிரண்யாவை பைத்தியம் என்று சிலர் முடிவுகட்டினர். சிலர் பேய் பிடித்திருப்பதாக கூறினர். மனம் கலங்கிடாமல், தன் கற்பனைக்கு எட்டிய கதைகளையும் அதனுடன் சேர்த்துப் புனைந்து, பல புதிய படைப்புகளை உலாவ விட்டனர்.

இதுவும் மனதின் வக்கிரத்தில் ஒன்று. ஒரு தீய செய்திக் காட்டுத் தீயாய் பரவிவிடும். தீமையைத் தீக்கிரையாக்கு என்பது தகுமோ? அதன் பொருட்டே இப்படி தீயாய் பரவி, அழிவைக் கொண்டு வருகிறதோ என்னவோ?

இவன் சிந்தனையில் இருக்கும்பொழுதே குடியிருப்பின் தலைவர் கீதனுக்கு அழைக்க, நினைவுலகிற்கு திரும்பினான் கீதன். பதற்றத்துடன் கைகள் நடுங்க, அழைப்பை ஏற்றான்.

“மிஸ்டர் கீதன்.. என்ன நடக்குது.. பூட்டியிருந்த வீட்டிற்குள் உங்க மனைவி எப்படி போனாங்க. அப்புறம் இப்படி பைத்தியம் மாதிரி நடந்துக்கிறாங்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு. பல குடும்பம் வாழ்ந்துட்டு இருக்கு. நீங்க இந்த வீட்டைவிட்டு போறது நல்லது” என்று அவரும் தீயாய் காய, விக்கித்து நின்றான் கீதன். அவனின் பேச்சற்ற நிலைகண்டு, அலைபேசியை நற்பவி வாங்க, மறுப்பேதும் கூறாமல் அவளிடம் கொடுத்தான்.

அவரின்‌‌ கூற்றைக் கேட்ட நற்பவி, “சார்.. ஒரு நிமிஷம்.. நீங்க உங்க பக்கத்து நியாயத்தை சொல்லிட்டீங்க. நாங்க எங்க பக்கத்து நியாயத்தை சொல்ல வேண்டாமா?” என்று இழுக்க, “நீங்க யாரு?” என்று வினவினார் அவர்.

“நான் நற்பவி. ஐ.பிஎஸ். கீதனோட தோழி” என்று தன்னை அறிமுகம் செய்துகொள்ள, எதிர்ப்புறம் ஒரு அமைதி.

“என்ன சார் பேச்சே காணும்‌. எதிர் வீட்டில் ஒரு பொண்ணு தற்கொலை செஞ்சு இறந்திருக்கா. இந்த விஷயம் ஏன் கீதனுக்கு யாரும் சொல்லல. சொல்ல மறந்துட்டீங்களா இல்லை மறைச்சுட்டீங்களா? நீங்கதானே இந்த அப்பார்ட்மெண்ட் செகரெட்டரி. உங்களை முதலில் சந்திச்சு பேசிருப்பாரே. அப்போ ஏன் இதை சொல்லல. அதனால கீதனோட மனைவி மனநிலை பாதிக்கப்பட்டிருக்காங்க. இதுக்கு நீங்க பொறுப்பேத்துக்கணும்” என்று கூற, எதிர்முனையில் சிறிய மௌனம்.

“அதெப்படி நான் பொறுப்பேத்துக்குவேன். இது அநியாயமா இல்லை. அவர் பொண்டாட்டிக்குப் பைத்தியம் புடிச்சா நான் காரணமா?” என்று எதிர் வினா எழுப்பினார்.

“நான் கேட்டது அபத்தமா இருக்கா? அப்போ நீங்க பேசுறது அபத்தமா இல்ல. ஏற்கனவே மனசு நொருங்கிப்போய், என்ன நடக்குதுன்னு தெரியாம இருக்க அவருக்கிட்ட நீங்க பேசுன முறை சரியா?” என்று சிறிது காட்டமாகவே கேட்டாள். அதில் நக்கல் தொனியும் கலந்திருந்தது என்று கூறினால் மிகையாகாது.

அவர் எதுவும் பேசாமல் அமைதியாகவே அழைப்பைத் துண்டித்தார். வம்பை விலைக்கு வாங்க அவர் தயாராய் இல்லை. கீதன் அவளை நன்றியுடன் பார்த்தான்.

“இனி இது விஷயமா உங்களை யார் தொல்லை செஞ்சாலும் எனக்கு சொல்லுங்க. நான் பார்த்துக்குறேன்” என்று கீதனுக்கு தைரியம் வழங்கவும் தவறவில்லை நற்பவி.

“கீதன்.. என்ன பாத்துட்டு இருக்கீங்க.. அவுங்களை ஹாஸ்பிடலில் சேர்க்கணும்” என்று நற்பவி கூற, காரியங்கள் துரிதமாக நடந்தேறியது.

மருத்துவமனையில் நிரண்யாவை அனுமதித்த பின் அவளின் பெற்றோருக்கும் அழைத்து விஷயத்தைக் கூறினான். அவளின்‌ அன்னைப்
பதறியடித்து ஓடிவந்தனர்.

அவன் மீண்டும் மனநலமருத்துவர் மித்ராவை சந்தித்து நிகழ்ந்தவைகளைக் கூற அவர் சிந்தனை வயப்பட்டார்.

“கீதன், நான் கேட்கும் கேள்விக்கு கொஞ்சம் பொறுமையா பதில் சொல்லுங்க..” மித்ரா.

“கண்டிப்பா மேடம்.. நீங்க என்ன கேக்கணுமோ கேளுங்க.”

“நிரண்யா ஏன் அந்த வீட்டுக்குள்ள போகணும்.. அங்க ஏன் இப்படி அப்நார்மலா நடந்துக்கணும்..”

“அந்த வீட்ல இருந்த யாரோ ஒரு பொண்ணு சூசைட் பண்ணிக்கிட்டதா சொல்றாங்க மேம்.”

“அது சரி..‌ அதுக்கும் உங்கள் மனைவிக்கும் என்ன சம்மந்தம்..”

“தெரியல மேம்… எல்லாமே மர்மமா இருக்கு. நாங்க அந்த வீட்டுக்கு வந்து ஒரு மாசம்தான் ஆகுது. எதிர் வீட்டில் யாரும் இல்லை. ஒரு வருஷமாவே காலியா இருக்குன்னு சொன்னாங்க.”

“சரி.. நீங்க கொஞ்சம் விசாரிங்க. எனக்குத் தெரிஞ்சு அங்க இருந்த பொண்ணு சூசைட் பண்ணிக்கிட்ட கதையை யாரோ உங்க மனைவிக்கு சொல்லிருக்கணும். ஏற்கனவே உங்க மனைவி மனதளவில் பலவீனாமா இருந்ததால், மேலும் பாதிப்படைந்திருக்கணும். அந்த பொண்ணோட ஆவி இவுங்க உடம்புக்குள்ள வந்துட்டதா அவுங்களே நம்பிருக்கணும். இது ஒரு விதமான மனநோய்” என்று மித்ரா ஏதேதோ கூற, கீதன் கொஞ்சம் பதறிவிட்டான்.

“மேம்.. அவளை எப்படி வெளில கொண்டு வரது” என்றான் வருத்தத்துடன்.

“இப்போ நான் சொல்ற விஷயம் எல்லாத்தையும் கவனமா கேளுங்க..”

“உங்க மனைவிக்கு இருப்பது ஒரு மனநோய். பைபோலார் டிஸ்ஆர்டர் கேள்விப் பட்டிருக்கீங்களா. இருமுனை பிறழ்வு என்றும் கூறலாம்.  இது மனநலம் சார்ந்த பிரச்சினையாகும். இதனால் ஒருவருக்கு உச்சநிலை மகிழ்ச்சி மற்றும் மன சோர்வு என மாறிமாறி உண்டாகும். இது உங்க மனைவிக்கும் இருக்கு. நீங்க முதலில் கூட்டிட்டு வந்தப்போ ஏதோ சில பயத்தினால் அவுங்களுக்கு ஹேலுசினேஷன் வருதுன்னு நானும் நினைச்சேன்.. உங்க உதவியோடு அதிலிருந்து வெளியில் கொண்டு வரலாம்னு நினைச்சேன். ஆனால் உங்க மனைவி அந்த நிலையைக் கடந்துட்டாங்க. இனிதான் அவுங்களை ரொம்பவே கவனமா பாத்துக்கணும். பைப்போலாரோட ஸ்பிலிட் பெர்சானாலிட்டியும் இருக்கு. அதான் தன்னை யாரோ ஒருத்தரா நினைச்சு, அவுங்களை மாதிரி நடந்துக்கிறாங்க” என்று புரியாத மொழிகளில் ஏதேதோ உரைக்க, கீதனுக்குத் தலையை ஆட்டி வைப்பதைத் தவிற வேறு வழியிருக்கவில்லை.

“நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்னனு சொல்றேன். கேளுங்க.  ஒருவரின் உள்ளம் மிகவும் உயர்ந்த உணர்ச்சிகளுடன் இருக்கும் நிலை பித்துன்னு சொல்வாங்க.
இந்த நிலையில் அவர்கள் அதீத மகிழ்ச்சி மற்றும் நேர்மறை உணர்வை வெளிப்படுத்துவார்கள். பிறருக்கு கொடை அளிப்பதோ,பணத்தை செலவழிப்பதோ,பொருட்கள் வாங்குவதோ இயல்புக்கு மாறாக இருக்கும்.
முன்கோபம், திரிபுக்காட்சி அல்லது இல்லாததை இருப்பதுபோல உணர்தல் ஆகிய உணர்வுகள் இருக்கலாம்.
இதற்கு நேர் எதிர்மறையான நிலை மனசோர்வு இந்நிலையில் ஒருவர் சோகமாக,சோர்வாக மற்றும் எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.
இந்த மனச் சோர்வு மனைசார் மனச்சோர்வு  போன்று இருக்கும். அதில் ஒருவர் யாருடனும் பேசவோ அல்லது அவருடைய அன்றாட வேலைகளை செய்யவோ விருப்பமில்லாமல் இருப்பார்கள்.அவர்களுக்குத் தற்கொலை எண்ணம் தோன்றலாம்.
மாய புலன் உணர்வுகள் (hallucination) பிறழ் நம்பிக்கை (delusion) குழப்பமான எண்ணங்களில் சிக்கியிருத்தல் இத்தகைய மாற்றங்கள் தனக்குள் ஏற்பட்டிருக்கிறது என்ற விழிப்புணர்வுகூட இல்லாமல் இருப்பார்கள்” என்று நீண்ட விளக்கம் அளிக்க, கீதனுக்கு தலை சுற்றியது. ஏனெனில் அவளின் தற்கொலை எண்ணத்தை சற்று முன் கண்டானே.

“எனக்கு பாதி புரியிது.. பாதி புரியலை மேம்..” என்றான் பாவமாக.

“ம்ம்ம்… சுருக்கமா சொல்லணும்னா சில சமயம் உங்க மனைவியா இருப்பாங்க. சில சமயம் வேறு ஒரு ஆளாக இருப்பாங்க…” என்று கூறியவர், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்களே பார்த்திருப்பீங்க.. மனச்சோர்வோ அழுத்தமோ ஏற்படும்போது அப்படி மாறிடுவாங்க..” என்று நிறுத்தினார்.

“அப்போ அவளுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாதா மேம்..”

“அவுங்க நிரண்யாவா இருக்க வரைதான் உங்க மனைவி. நீங்க சொல்றது கேட்கும். வேறு ஒருத்தரா இருக்கும்போது நீங்க ஒரு அந்நியர். அவ்ளோதான்.”

“அப்போ இதுக்கு தீர்வு..”

“நான் சில மருந்து தரேன். அதைத் தவறாமக் கொடுக்கணும். அப்புறம் அவுங்க என்ன சொன்னாலும் நீங்க நம்புற மாதிரி பேசணும். அதை ஏத்துக்கணும். நான் இருக்கேன்ங்கிற நம்பிக்கையை அவுங்களுக்குக் கொடுக்கணும்.. பொதுவா வெளில உள்ள ஒருத்தர் அவுங்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்திருந்தா, அவுங்களை எளிதா வெளில கொண்டு வரலாம்.”

“புரியல மேம்..”

“இந்த நோயோட ஒரு அறிகுறி அவுங்களுக்கு சில குரல்கள் கேட்கும். அந்த குரல்கள் அவுங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருந்து, அந்த கற்பனை குரலில் நம்பிக்கை வைத்துவிட்டால் அவுங்களை வெளில கொண்டு வர்றது சாத்தியமில்லை. உள்ளே கேட்கும் குரல் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுவதாக இருந்தால், அவுங்க தற்கொலை செஞ்சுக்கவும் தயங்க மாட்டாங்க. அடுத்த நிமிஷம் கழுத்தை அறுத்துக் கொண்டோ, மாடியிலிருந்து குதித்தோ அந்த குரலின் கட்டளையை நிறைவேற்றி விடுவார்கள்” என்று கூற அவன் உண்மையில் அதிர்ந்துவிட்டான்.

“இப்போ நான் சொல்றது புரியிதா.. கற்பனை குரலில் உள்ள நம்பிக்கையைவிட உங்களிடம் அதிக நம்பிக்கை இருந்தால், உங்களால் அவரின் தற்கொலை எண்ணத்தைத் தடுக்க முடியும்” என்று மித்ரா கூற, புதைக்குழியில் புதையுண்ட உணர்வில் சிக்கித் தவித்தான் கீதன்.

அவரின் வார்த்தைகளைக் கேட்ட கீதன் அமைதியாய் அமர்ந்திருந்தான். மனதில் திடுக்கிடல். மாய உலகில் இருப்பது போல் தோற்றம். இவனுக்கு பைத்தியம் பிடிப்பதுபோல் இருந்தது.

திகையாதே மனமே!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்