Loading

கணி, அதி மற்றும் கீர்த்தி, மூவரும் அறையில் அமர்ந்திருந்தனர்.

திராவிடனின் ஜாதகத்தைத் தோண்டித் துருவிவிட்டனர்.

சென்னி, காப்பியன், திருநா மற்றும் இன்னும் சிலர், அனைவரும் அவனின் உயிர்த் தோழர்கள். அனைவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை அனைவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். திராவிடனைத் தவிற அனைவரும் வேறு துறைகளில் இருந்தனர். திருநா மரபணு தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்று ஒரு பெரும் நிறுவணத்தில் வேலை செய்துகொண்டிருந்தான். அவனை வைத்துதான் நெல்லின் மரபணுவில் மாற்றம் செய்திருக்க வேண்டும்.  அடுத்து சென்னி, காப்பியன் இருவரை பற்றியும் விசாரித்திருந்தான்.

அவர்கள் அனைவரின் பின்புலத்தையும் ஆராய்ந்து அவனால் ஒரு முடிவுக்கு வரமுடிந்தது.

“சார்.. என்ன ஆச்சு? இப்போ கிடைச்ச தகவல் வச்சு என்ன செய்ய முடியும். நம்ம கேஸ்க்கு இவுங்க எங்கையும் லின்க் இருக்க மாதிரி தோணல” அதி.

“அதெல்லாம் நிறைய இருக்கு. நீ திராவிடனைக் கூட்டிட்டு வா.”

திராவிடன் அங்கு வந்ததும் அவனை வந்து அமரும்படி கூற, அவனும் வந்து அமர்ந்தான். கொஞ்சம் கூடுதல் தைரியத்துடன் வந்து அமர்ந்தான். அதைக் கணி குறித்துக் கொண்டான். அதாவது திராவிடன் தோரணையில், இன்று உண்மை தெரிந்தாலும் பாதகமில்லை என்பது வெளிப்பட்டது.

“திராவிடன், இன்னைக்கு கொஞ்சம் அதிகம் தைரியம் இருக்க மாதிரி இருக்கு.”

“அது எப்பவும் இருக்கதுதான் சார். தப்பு செஞ்சவன் பயப்புடலாம். நான் எதுக்கு பயப்புடணும்.”

“நீ தப்பே செய்யலையா?” கணி.

“நான் செய்றது தப்புயில்லை” என்றான் தீர்க்கமாக.

“சரி.. உன்னைப் பத்தி எல்லாம் கண்டுபிடிச்சாச்சு. உன்னோட நண்பன் திருநாவை வைத்து நெற்கதிரில் மரபணு மாற்றம் செஞ்சிருக்கு. அதை இங்கு விளைவித்து, ஊருக்குள்ள காத்தவராயன் ஆவின்னு பொய் சொல்லிருக்க” கணி.

“ஆமா சார். உண்மைதான். இதெல்லாம் நீங்க ஏற்கனவே கண்டுபிடிச்சுட்டீங்க. இப்போ என்ன கண்டுபிடிச்சீங்க” திராவிடன்.

“நான் உங்கிட்ட பொறுமையா பேசுறதால, நான் இப்படித்தான்னு நினைச்சுடாத” கணி.

“இங்க பாரு திராவிடன். அவரோட மனைவியையும் சேர்த்துக் கடத்திருக்கீங்க. எதுக்குன்னு சொல்லுங்க. அவரு உனக்கு நிச்சயம் உதவி சொய்வாரு” அதி.

“மீத்தேன் திட்டத்துக்கு ஆதரவானவுங்க நாங்கயில்ல. அதனால எங்களை நம்பி சொல்லலாம்” கீர்த்தி.

அவன் அமைதியாகவே இருந்தான்.

“சென்னியும் தொல்காப்பியனும் யாரு?” என்று கணி வினவ, திராவிடன் முகத்தில் நொடிக்கும் குறைவான அதிர்வு. கணி கண்டுபிடித்துவிட்டானோ என்ற சிறு சந்தேகம் அவன் மனதில் உதித்தது. அதனால் மழுப்பாமல் பதில் கூறினான்.

“அவுங்க என்னோட நண்பர்கள் சார்.”

“சென்னியோட குடும்பத்துக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியும். இப்பவாவது எனக்கு எவ்வளவு தூரம் தெரியும்னு புரியுதா?” கணி.

அவன் அமைதியாக இருந்தான். கணியே தொடர்ந்தான்.

“அவனோட குடும்பம் விவசாய குடும்பம். கடன் தொல்லையால் அவுங்க அப்பா தூக்குப்போட்டு செத்துட்டார். அப்புறம் அம்மா தங்கச்சி ரெண்டு பேரும் பட்டினியா இருந்து செத்துருக்காங்க. இப்போ அவன் அனாதையா இருக்கான்” கணி.

“இப்போ நடக்குற மீத்தேன் திட்டத்தை நிறுத்த இந்த கடத்தலா?” அதி.

“பத்துப் பேரை கடத்தினா இந்த திட்டம் செயல்படாமல் இருக்குமா?” என்ற திராவிடனின் வினா சாட்டையாய் அவர்கள் மூவரையும் அறைந்தது.

“ஆனா உங்க கெஸ் கரெக்ட் சார். மீத்தேன் திட்டத்தை முறியடிக்க ஒரு திட்டம் வச்சிருக்கோம். ஆனா உங்க யாராலும் நெருங்க முடியாது” திராவிடன்.

“இங்க பாரு திராவிடன்.. உனக்கு என்னோட முழு உதவி இருக்கும். என்னோட மனைவி எங்க இருக்காங்கன்னு சொல்லு. நான் பார்க்கணும். அவ கர்பமா இருக்கா. அவ எப்படி இருக்கான்னு நான் தெரிஞ்சுக்கணும்” கணி.

“சார்.. நீங்கல்லாம் தெருவுல இறங்கி போராடணும்னா உங்க குடும்பத்துலேந்து யாரையாவது கடத்தணும் இல்லையா?” திராவிடன்.

அவனுடைய கேள்வி ஒவ்வொன்றும் மற்ற மூவரையும் முல்லாய் தைத்தது. நனியிதழின் சாட்டையடி கேள்விகளுக்கு பிறகு கணி, அமைதியாக இருந்தது இந்த கேள்விக்குத்தான். நனியிதழை சந்தித்தப் பிறகு அவர்களின் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்தது. இயற்கைக்கு முக்கியத்துவம் அளித்து வாழ்ந்தனர். ஆனால் உலகத்தை மாற்ற முடியாதே. தன்னால் ஆனதை செய்துவிட்டு அவர்களின் வேலையைப் பார்த்தனர் அனைவரும். இப்பொழுது மனைவியை கடத்திவிட்டார்கள் என்று தெரிந்தவுடன் தெருவில் இறங்கி போராட தயார் என்று கணி கூறுகிறான். இது எந்த விதத்தில் நியாயம் என்று திராவிடன் வினவுகிறான்.

“சார்.. உங்களுக்கு ஒரு க்ளூ தரேன். முடிஞ்சா கண்டுபிடிங்க. ஆரல்..” என்று கூறிவிட்டு சென்றான்.

“சார்.. இவன் என்ன புதுசா குழப்புறான்” என்று அதி கூற, அதை கவனிக்கவே இல்லை கணி. அவனுடைய அலைபேசி எடுத்து ஆரல் என்றால் என்ன என்று அலசி ஆராயத் தொடங்கினான்.

“அவன் குழப்பல அதி.. தெளிவா இருக்கான்” கணி.

“சார்.. இப்போ நீங்க குழப்புறீங்க” கீர்த்தி.

“இத்தனை நாள் எதையும் சொல்லாதவன் இன்னைக்கு இவ்ளோ சொல்றான்னா என்ன அர்த்தம்?” கணி.

“நீங்க கண்டுபிடிச்சுட்டீங்க. பக்கத்துல வந்துட்டீங்கன்னு அர்த்தம்” அதி.

“இல்லை..”

“அப்புறம்..”

“அவன் நினைச்சதை சாதிக்கும் விளிம்பில் இருக்கணும். இல்லை கிட்டத்தட்ட சாதிச்சிருக்கணும். இனிமே என்னால ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டுப் போறான். ஆனா ஒரு விஷயம் உறுதி. கடத்தப்பட்டவுங்க எல்லாரும் நல்ல நிலையில் இருக்காங்க” கணி.

“அப்போ அடுத்து என்ன செய்றது?” அதி.

“திருநாவை பாளோ பண்ணலாம்” கீர்த்தி.

“இல்ல… சென்னியைப் பார்க்கப் போகலாம்” கணி‌.

“ஏன் சார்..” கீர்த்தி.

“அவனுக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்குன்னு நினைக்கிறீங்களா?” அதி.

“நிச்சயம் இருக்கணும். அடுத்து அவன்தான் ஏதோ செய்யணும். அவன் பேரை சொன்னதும் திராவிடன் கண்ணில் கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி இருந்துச்சு” கணி.

***********

கடத்தப்பட்டவர்கள் இருந்த அறைக்கு தொல்காப்பியன் வந்தான்.

“எல்லாரும் எப்படி இருக்கீங்க?” காப்பியன்.

அதே குரல். சில தினங்கள் முன் கேட்ட குரல்.

“நாங்க நல்லாருக்கோம். மொத எங்களை ஏன் கட்ததுனீங்க. அதை சொல்லுங்க?” தணிகை.

“சொல்லலைனா?” காப்பியன்.

“தொரிஞ்சுக்குற உரிமை எங்களுக்கு இருக்கு” தணிகை.

“கடத்தப்பட்டா கொன்னுடுவாங்களோ கற்பழிச்சிடுவாங்களோன்னு பயம் வரும். ஆனா ஏன் கடத்துனீங்கன்னு தெரியாம மண்டை வொடிக்கிது” இரட்டையர்.

“உங்களுக்கு என்ன வேணும்?” மதுபல்லவி.

“இதுவரை இப்படி ஒரு விசித்திரமான கடத்தல் நான் கேள்விப்பட்டதில்லை” சித்திரன்.

“எதுவாயிருந்தாலும் நேர் வழில செய்ங்க தம்பி” திருநல்லன்.

“கூல்.. கூல்.. எங்களுக்கு ஒன்னும் வேண்டாம். உங்களுக்கு ஒன்னும் ஆகாது. இப்போ இருந்த மாதிரி இன்னொரு இடத்தில் போய் இருக்கப் போறீங்க” காப்பியன்.

“என்னது? திரும்பவுமா?” வேதன்.

“சாப்பாடு போடுவீங்களா?” தணிகை.

“ம்ம்ம்..‌ அதெல்லாம் உண்டு” காப்பியன்.

“ஆமா.. எவ்ளோ நாளு?” தணிகை.

“ரெண்டு வருஷம்?” என்று கூற, “என்ன சொன்னீங்க?” என்றனர் அனைவரும் ஒன்றுபோல்.

“ரெண்டு வருஷம்” என்றான் மீண்டும்.

“ஆமா.. காசு நிறைய வச்சிருக்கீங்களா?” வேதன்.

“எங்களைத் தத்தெடுத்து சோறு போடுற மாதிரி இருக்கு?” சித்திரன்.

“இதனால உங்களுக்கு என்ன ஆதாயம்?” திருநல்லன்.

“நாங்க எங்க இருக்கணும்?” மதுபல்லவி.

“நீங்க எல்லாம் ஸ்பேஸ்ல ட்ராவல் பண்ணப் போறீங்க” என்று காப்பியன் ஒரு இடியைத் தலையில் இறக்கி வைத்தான்.

தங்கள் காதில் கேட்டது உண்மைதானா என்று அனைவரும் காப்பியனைப் பார்த்தனர். இவன் என்ன கிறுக்கனா? கடத்திவந்து என்னென்னவோ உளறுகிறான். ஒருவேலை காதில் ஏதும் தவறுதலாக விழுந்திருக்குமோ என்று ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்தனர்.

“நீங்க கேட்டது உண்மைதான். நீங்க எல்லாரும் ஸ்பேஸ் ஷட்டிலில் நாளைக்கு கிளம்பிப் போறீங்க” காப்பியன்.

“அப்பிடினா?” வேதன்.

“விண்கலம்” காப்பியன்.

“வெங்கலமா?” வேதன்.

“திருடன்னு நிரூப்பிக்கிற பாத்தியா? உனக்கு புரியிற மாதிரி சொல்லவா… ராக்கெட்ல உன்னை‌ ஏத்தி விடப்போறாங்களாம்” தணிகை.

“ராக்கெட்லையா?” என்று வாயைப் பிளந்தான் வேதன்.

“ராக்கெட்டை உன் மேல ஏத்தணும்” தணிகை.

“உனக்கு அப்படியே புரிஞ்சு கிழுச்சிடும்” வேதன்.

“நான் இஞ்சினியர்” தணிகை.

“இஞ்சி திண்ணவன் மாதிரி இருந்துகிட்டு இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” வேதன்.

“கொஞ்சம் நான் சொல்றதை கவனமா கேக்குறீங்களா?” காப்பியன்.

“நான் காலேஜ்லே பாடம் கவனிச்சதில்ல” என்று தணிகை கூற அவனை முறைத்தான் காப்பியன்.

“இங்க பாருங்க. நீங்க விண்கலத்தில் பயணம் செய்யும் போது, என்ன செய்யணும், எப்படி இருக்கணும்னு இன்னைக்கு சொல்லித்தரேன். எல்லாரும் கவனமா கேளுங்க” காப்பியன்.

தணிகையும் வேதனும் இயல்பாய் இருக்க, மற்ற அனைவரும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளியில் வரவில்லை. இன்னும் கனவு போல்தான் தோன்றியது.

“மிஸ்டர் காப்பியன். எதுக்கு நாங்க ஸ்பேஸ் டராவல் பண்ணனும்? இதுக்கு அப்ரூவல் இருக்கா?” மதுபல்லவி.

“அதானே. அப்ரூவல் இருக்குன்னா நேரடியா செயல்பட வேண்டியதுதானே. எதுக்கு திருட்டுத்தனமாக கடத்தி இந்த வேலை செய்யணும்” திருநல்லன்.

“அதெல்லாம் இருக்கு. அரசாங்கம் ரகசியமா இந்த ஆராய்ச்சியை செய்ய சொல்லிருக்காங்க” காப்பியன்.

“ஓ… கடத்தலுக்கும் அனுமதி வழங்கப்பட்டதா” என்றாள் நக்கலுடன்.

“போலீஸ்காரன் பொண்டாட்டின்னு நிரூபிக்கிறீங்க” என்று சென்னி உள்ளே வந்தான்.

நீங்க ஏதோ விபரீதமான ஆராய்ச்சி செய்றீங்க. கர்பமா இருக்கவுங்க ஸ்பேஸ் ட்ராவல் செய்யக் கூடாது. உங்களுக்கு தெரியுமா?” என்று மதுபல்லவி வினவ, “உங்களையெல்லாம் கடத்திட்டு வந்திருக்கேன். நான் சொல்றதுக்கு தலையாட்டுறதைத் தவிற வேற வழியில்லை” சென்னி‌.

“ஹவ் டேர் யூ?” என்று அவனை அடிக்கப் போனாள் மதுபல்லவி. அவளின் கைகளைப் பற்றியவன், ஏதோ சொல்ல வர, காப்பியன் வந்து தடுத்தான்.

“டேய் சென்னி.. நீ ஏண்டா வந்த. நான் பாத்துக்குறேன்னு சொன்னேனே” காப்பியன்.

“மிஸஸ் மதுபல்லவி. கொஞ்சம் பொறுமையா இருக்கீங்களா. உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் ஒன்னும் ஆகாது‌” காப்பியன்.

“இது நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. திஸ் ஈஸ் அன்னெத்திக்கல்(This is unethical)” மது.

“எத்திக்ஸனா நெறிமுறைதானே. இங்க நடக்குற எல்லா விஷயத்துக்கும் எத்திக்ஸ் இருக்கா என்ன? இல்ல வாழற எல்லாருக்கும் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?” சென்னி.

“நீங்க செய்ற விஷயம் வெளில தெரிஞ்சா என்ன ஆகும்னு தொரியுமா?” மதுபல்லவி.

“தம்பி.. நாங்க எல்லாரும் வரோம். ஆனா அந்தப் பொன்ன மட்டும் விட்ருங்க” திருநல்லன்.

“முடியாது. திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. நான் சொல்றதைக் கேக்கணும். இல்லை உயிரோடு இருக்கு முடியாது” என்று கத்தினான் சென்னி.

“சென்னி, நீ போடா. நான் பாத்துக்குறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாரும் முழு மனசோட சம்மதிப்பாங்க” காப்பியன்.

காப்பியனின் கூற்றைக் கேட்டு அனைவருக்கும் அதிர்ச்சி. இவர்களின் விஷப் பரீட்சைக்கு எல்லோரும் முழு மனதுடன் சம்மதிப்பார்கள் என்று வாக்களிக்கிறான். இது எப்படி சாத்தியம் என்று அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.

அதன்பிறகு காப்பியன் அவர்களின் நிறுவணம் பற்றியும், அவர்கள் செய்யப்போகும் ஆராய்ச்சி பற்றியும் விளக்கிக் கூறினான். நிறுவணத்தின் நோக்கம் என்ன, இதனால் விளையப்போகும் நன்மை என்ன என்றும் விளக்கிக்கூறினான். இதில் ஈடுபடப்போகும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்புகள் பற்றியும், இதை ஒப்புக்கொள்வதால் அவர்களுக்கு விளையும் நன்மை பற்றியும் எடுத்துக் கூறினான்.

அனைத்தையும் கேட்ட அனைவரும் வாயைப்பிளந்தனர். முரண்டு பிடித்த அனைவரும் தலையசைத்தனர்.

காப்பியன் விண்கலத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும், விண்வெளியில் என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்று அவர்களுக்கு விளக்கிக் கூறினான். உண்மையில் அவர்கள் ஒத்துழைத்தால் போதும் என்பதை அழுத்திக் கூறினான். அவர்களுடன் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் வருவதால் அனைத்தையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறினான்.

“ஒருவேளை விண்கலம் ஆபத்திற்கு உள்ளானால், பதட்டப்படக்கூடாது. நீங்க பதட்டப்பட்டு, அது விண்கலம் செலுத்துபவர்களை ஏதேனும் பாதித்தால், அவர்களால் வேலை செய்யமுடியாமல் போகும்” காப்பியன்.

“ஆமா..‌ ஆதான் எல்லா பாதுகாப்பு ஏற்பாடும் செஞ்சாச்சுன்னு சொன்னீங்களே. அப்புறம் ஏன் பயமுடுத்துறீங்க” ஆரு.

“நீ நர்ஸ்தானே. ஆப்ரேஷன் செய்யும் போது கார்டியன்ட்ட கையெழுத்து வாங்கமாட்டீங்களா?” காப்பியன்.

“ஆமா.. வாங்குவோம்.. அதுக்கென்ன இப்போ” நேரு..

“அதுல என்ன எழுதிருக்கும்?”

“நோயாளிக்கு ஏதாவது ஆச்சுன்னா நிர்வாகம் பொறுப்பில்லைனு எழுதிருக்கும்” ஆரு.

“அந்த மாதிரிதான் இதுவும்.”

“அப்போ‌ எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா?” தணிகை.

“அதுதான் சொன்னேனே எதுவும் ஆகாதுன்னு” காப்பியன்.

“ஏதாவது ஆனாலும் ஆகும்னு இப்ப சொன்னீங்களே!” வேதன்.

“ஐயோ முடியலடா சாமி” காப்பியன்.

“ஆமா நாம எங்க போறோம்?” தணிகை.

“நிலாவுக்கு சோறு ஊட்டப் போறோம்” காப்பியன்.

“நக்கலு..”

“டேய்… விடிய விடிய கதைக் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொல்ற” காப்பியன்.

“அட நமக்கு தெரியும் பாஸ். ரீடர்ஸ்க்கு தெரியாதே. பெரிய பெரிய பில்டப் குடுத்துட்டு, இன்னும் அவுங்களுக்கு எங்க போறோம்னு சொல்லாம வச்சிருக்கீங்க” தணிகை.

“ஓ.. அப்படி ஒண்ணு இருக்கோ.. சரி… சஸ்ப்பென்ஸ் உடைச்சுடலாம்.. நாம செவ்வாய் கிரகத்தில் போய் குடியேறப் போறோம்” காப்பியன்.

ஆமாபா.. இவுங்க எல்லாரும் சேர்ந்து செவ்வாய் கிரகத்துக்கு போறாங்க… சஸ்ப்பென்ஸ் உடைச்சாச்சு.. ஆரல் அப்படின்னா செவ்வாய் கிரகம். அக்கினி பழத்தில் அரைத்த ஆரல்னு ஏன் டைட்டில்னு அடுத்த எபில பாக்கலாம்.

அடுத்து சில மணிநேரங்களில் அவர்கள் அணிவதற்கான உடைகள் வந்தது.

அதை எடுத்துப் பார்த்த தணிகை, “ஆமா இது என்ன?” என்றான்.

“திஸ் ஈஸ் ஸ்பேஸ் சூட், மேட் அப் ஆஃப் நைலான், ஸ்பான்டெக்ஸ், யுரேதேன்  கோட்டட் நைலான், டேக்ரான், நியோபிரேன், மைலர், கார்டெக்ஸ், கெல்வர் மற்றும் நோமெக்ஸ்.”

“புரியிற மாதிரி ஏதாவது சொல்றானா?”

“இது இல்லாம விண்வெளில உன்னால இருக்க முடியாது. முப்பது நொடில மயக்கமாயிடுவ. தொன்னூறு நொடியில இறந்துடுவ. இப்போ புரியிதா?” காப்பியன்.

“நல்லா புரியிது.”

“ஆமா.. விண்வெளில ஏ.சி. இருக்குமா?” வேதன்‌.

“டேய்.. நான் ஒண்ணு சொல்லவா?” காப்பியன்.

“வந்ததுலேர்ந்து நீ ஏதேதோ சொல்லிட்டுதான இருக்க. இப்ப மட்டும் எதுக்கு கேக்குற” தணிகை‌.

“டேய்.. நீ சும்மா இரு.. சார் ஏ.சி இருக்குமா இருக்காதா?” வேதன்‌.

“டேய் இதெல்லாம் ஒரு கேள்வியா?” சித்திரன்.

“இங்க பாரு… நான் பிக்பாக்கெட் அடிக்க பஸ்ல ஏறுனா கூட ஏ.சி. பஸ்ஸுலதான் ஏறுவேன். அடிக்கிற வெயிலுக்கு இதைப் போட்டா செத்துருவோம்” வேதன்.

“தம்பி.. ஏ.சி இருக்கும் தம்பி. விட்ருங்க.. எனக்கு படிச்சதெல்லாம் மறந்து போயிடும் போல” காப்பியன்.

“சார்.. அவுங்க கிடக்குறாங்க.. நீங்க சொல்லுங்க” இரட்டையர்.

“வேதன், தணிகை.. ரெண்டு பேரும் அமைதியா இருங்க. அவருதான் நமக்கு எல்லாம் சொல்றாரே..” மதுபல்லவி.

“மேடம்.. இது உங்களுக்கு ஸ்பெஷலா தயார் பண்ணிருக்க ட்ரெஸ். உங்களுங்கு இன்னும் அதிக பாதுகாப்போட தயார் செய்யப்பட்டிருக்கு” என்று காப்பியன் மதுபல்லவியிடம் கூறினான்.

“அப்போ எங்களுக்கு எதுவும் ஸ்பெஷலா இல்லையா?” இரட்டையர்.

“உங்களுக்கு என்ன ஸ்பெஷலா வேணும்.. ரெண்டு பாக்கெட் பொறி உருண்டை சட்டைப் பையில் வைக்கிற மாதிரி தச்சுக் குடுங்க சார்” தணிகை.

“ஷட் அப்.. கொஞ்சம் கவனமா கேளுங்க. இந்த ட்ரெஸ்ஸோட விலை 25 மில்லியன் டாலர்” காப்பியன்.

“என்ன அவ்ளோவா?” என்று அனைவரும் வாயைப் பிளந்தனர்.

“ஆரெழில்.. நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு புரியிது. யூ கேன் ஹேவ் யுவர் பீரியட்ஸ் நார்மளி(You can have your periods normally)” காப்பியன்.

“உடையின் பின்புறம் ஒரு முக்கிய அமைப்பு உள்ளது (Backpack). இதன் மூலம் தான் வீரருக்கு தேவையான ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு அவர்  வெளிவிடும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியற்றப்படுகிறது.மேலும் உடைக்குத் தேவையான மின்சாரத்தையும் இது வழங்குகிறது” காப்பியன்.

“என்னது மின்சாரமா?” சித்திரன்.

“ட்ரெஸ்ல எதுக்கு மின்சாரம்?” வேதன்.

“நீ கொஞ்சம் வாய மூடிட்டு இரு மேன். உனக்கு புரியிற மாதிரி சொல்லணும்னா உன்னோட ட்ரெஸ்ல ஏ.சி. இருக்கும்” காப்பியன்.

முதலில் விண்வெளி வீரர் ஒரு மெல்லிய ஆடையை அணிவார். அந்த ஆடையில் குளிர்ந்த நீர் பாயும் பிளாஸ்டிக் குழாய்கள் நெய்யப்பட்டு இருக்கும். அதன் மேல் தான் விண்வெளி உடையை அணிவார். விண்வெளி உடையின் பின் புறத்திலும் தண்ணீர் தொட்டி இருக்கும். இந்த குளிர்ந்த நீர் அமைப்பு விண்வெளி வீரரின் உடல் இருந்து வெளியாகும் வெப்பத்தை குளிரச் செய்ய பயன்படுகிறது.
ஏனெனில், விண்வெளியில் நம் பூமியைப் போன்று வெப்பசலனம் மூலமாக வெப்பத்தை வெளியேற்றும் அமைப்பு எதுவும் கிடையாது. கதிர்வீச்சு மூலமாக மிகவும் சிறிய அளவு வெப்பமே வெளியாகும். இதனால் வீரரின் உடலை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க இந்த அமைப்பு பயன்படுகிறது.

உடையில் உள்ள ஒரு பாகத்தைச்‌ சுட்டி, “இதில் தொடர்பு சாதனங்கள் பொறுத்தப்பட்டிருக்கிறது.
விண்வெளி உடையில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொள்ளத் தேவையான அனைத்து கருவிகளும் இருக்கும். அடுத்து தொப்பி. இந்த தொப்பியில் பேசுவதற்கு மைக் மற்றும் இயர் போன் இருக்கும். மேலும், சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் தலைக் கவசமும் இதற்கு மேல் அணியவேண்டும்” காப்பியன்.

“ஆமா.. இது எவ்ளோ வெயிட் இருக்கும் சார்?” ஆரு.

“20 கிலோ இருக்குமா” மதுபல்லவி.

“21 kgs” காப்பியன்.

“அக்கா.. செம்ம.. கண்ணுலே எடை போடுற” தணிகை.

“நீ அதிகமா பேசுனா உன்னையும் ‌போடுவேன்” மதுபல்லவி.

“இதை ரொம்ப நேரம் போட்ருக்கதால கஷ்டமா இருக்காதா?” திருநல்லன்.

“விண்கலத்தில் பூமியில் உள்ள சூழல் உருவாக்கி இருக்கோம். அதனால் நீங்க இதை உள்ள இருக்கும்போது போடணும்னு அவசியம் இல்லை. உள்ள போடுறதுக்கு வேற ட்ரெஸ் இருக்கு. அது இவ்ளோ கணமா இருக்காது..” காப்பியன்.

“நைட் போய் நைட்டி மாத்திக்கிற மாதிரிங்களா?” நேரு.

“ஸப்பா… இப்பவே கண்ணக் கட்டுதே.. உங்க பாஷைல ஆமாமா…” காப்பியன்.

“நீங்க நேரா செவ்வாய்க்குப் போறீங்க. ஸ்பேஸ்ல போய் இதை போட்டாலும் உங்களுக்கு வெயிட் தெரியாது. ஏனா ஸ்பேஸ்ல ஈர்ப்புவிசை இல்லை. அதனால இதோட எடை தெரியாது. உங்களோட எடையே முதல்ல தெரியாது. இறகு மாதிரி லேசா ஆயிடுவீங்க” காப்பியன்.

“சார் எனக்கு ஒரு பெரிய டவுட்” வேதன்.

“சொல்லு..” காப்பியன்.

“எப்படி போறது?” வேதன்.

“எங்க?”

“அதான் சார்..  காலைல போகணுமே?” வேதன்.

“அதான் சொன்னனே.. காலைல ஸ்பேஸ் ஷட்டிலில் போகப்போறீங்கன்னு. ஏற்கனவே அங்க மூணு டீம் போயிட்டாங்க” காப்பியன்.

“சார்.. இது அந்த போறது இல்ல. வேற போறது” வேதன்.

“வேற எங்கடா போகணும்” காப்பியன்.

“சார்.. அவன் உச்சா, கக்கா எப்பிடி போறதுன்னு கேக்குறான்” தணிகை.

“அது எனக்கு தெரியுமே.. அது டயப்பர் போட்டுக்குவாங்க. டிக்.. டிக்.. படத்துல சொல்லிருக்காங்க..” சித்திரன்.

“ஆமா.. அந்த படத்தில் வந்த மாதிரிதான். டேக் அஃப், லேண்டிங், ஸ்பேஸ்வாக் அப்போலாம் ஸ்பெஷலி மேட் அடல்ட் டயப்பர் யூஸ் பண்ணனும்” காப்பியன்.

“அப்போ மத்த நேரம்” ஆரு.

இருங்க வரேன் என்று வெளியில் சென்றவன், சிறிது நேரத்தில் ஒரு பொருளுடன் வந்தான்.

“இதுதான் விண்களத்தில் இருக்கும் டாய்லெட்” காப்பியன்.

அது மிகவும் சிறியதாக இருந்தது. உள்ளுக்குள் ஒரு ஃபேன் இருந்தது.

“என்ன சார் இவ்ளோ சின்னதா இருக்கு. இந்த குந்தாணி உக்காந்தா உடைஞ்சிரும் போலவே” என்று இரட்டையர்களை நக்கலடித்தான் தணிகை.

“டேய்… உன்னைக் கொலை பண்ணிருவோம்” இரட்டையர்.

காப்பியன் களைத்துப்போய்விட்டான்.

“மேட் அப் ஆஃப் ஸ்ட்ராங் மெட்டல். உடையாது. இதுக்குள்ள பாருங்க. ஒரு ஃபேன் அண்ட் சக்ஷன் பம்ப் இருக்கும். இதை ஆன் பண்ணிட்டு போகணும். அது நம்ம கழிவுகளை உருஞ்சி எடுத்து ட்ஸ்போஸ் பண்ணிடும்” காப்பியன்.

“அது வேலை செய்யலைனா?” வேதனும் தணிகையும்‌ ஒன்றாய் வினவினர்.

“இது என்ன சதாப்தி எக்ஸ்பிரஸ்ஸா? வேலை செய்யாமப் போக” காப்பியன்.

“ராக்கெட்டே வெடிக்கிது. வேலை செய்யாம போகுது” தணிகை.

“சரி சொல்றேன். இது வேலை செய்யாம போனா கழிவுகள் காற்றில் மிதக்கும். மொத்தத்தில் விண்கலம்…” காப்பியன்.

“நாறிடும்” வேதன்.

“ஆமா..‌ அதைத்தான் சொல்ல வந்தேன்” என்றான் காப்பியன் பாவமாக.

“அடச்சீ… இவ்ளோ கஷ்டப்பட்டு போறதுக்கு போகாமயே இருக்கலாம்” ஆரு.

“ஆமா.. எத்தனை நாள் ஆகும் சார்?” சித்திரன்.

“பதினைந்து நாள்” காப்பியன்.

“அப்போ நிச்சயம் நாறிடும்” நேரு..

“என்னது?” காப்பியன்.

“எங்க பொழைப்பைச் சொன்னேன் சார்” நேரு.

அவர்கள் அடித்தக் கூத்தில் காப்பியன் ஒருவாறு களைத்து, சளைத்துவிட்டான். ஆனால் ஒருவழியாக அவர்களின் கேள்விகளுக்கு பதிலும் அளித்து, அனைவரையும் தயார் நிலையில் வைத்தான்.

இவ்வளவு கருவிகள் இருப்பதால்  தான்  இந்த உடையை அணிவதே விண்வெளி வீரருக்குச் சிரமமாக இருக்கும். ஆனால், விண்வெளியில் இதன் எடையை உணர முடியாததால் சிரமமின்றி வீரரால் செயல்பட முடியும்.

இப்பொழுது உள்ள தொழில்நுட்பம் ‌கொண்டு செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொள்ள குறைந்தது ஆறுமாத காலம் ஆகும்‌. கதைக்காக நான் அதை பதினைந்து தினங்கள் என்று கூறியிருக்கிறேன். மேலும் கர்ப்பிணி பெண்கள் விண்வெளி பயணம் செய்ய உண்மையில் அனுமதியில்லை. ஒரு சில காரணங்களால் கதைக்கு தேவை. அதனால் கதையை இப்படி நகர்த்தியிருக்கிறேன்.

ஆரல் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்