Loading

     அதிரன் இருக்கும் அறைக்குள் சென்று அவன் மறையும் வரை பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்த அழகி மெதுவாக வந்து கூடத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். காலையில் வந்த கனவின் விளைவால் கதிரவனை நேரில் கண்டதும் அவளது மனதை பதற்றம் ஆட்கொண்டது. சிந்தனை தறிகெட்டு ஓட, அவளுக்கு படபடவென்று வந்தது. கொடைக்கானல் குளிரிலும் மனதின் புழுக்கத்தால் உடலும் புழுங்குவது போன்றிருந்தது. நாவெல்லாம் வறண்டு போனது போல் இருந்தது. அமர முடியாமல் அடுக்களைக்கு சென்றாள்.

 

    வறண்ட நாவை நனைக்க, தண்ணீர் எடுத்தவள் படபடப்பில் டம்ளரை கீழே நழுவ விட, அது டங் எனும் ஒலியோடு விழுந்து நீர் முழுதும் தரையில் சிதறியது. ஒரு நொடி என்ன செய்வதென்று புரியாமல் விழித்தவள் இருக்கைகளாலும் முகத்தை மூடி நின்று, பின் இடுப்பில் கை வைத்து கீழே சிதறி இருக்கும் நீரை பார்த்தாள். பின் மெல்ல குனிந்து காலி டம்ளரை எடுத்து அடுப்பு மேடையில் வைத்துவிட்டு நீரை துடைக்கலாமென துணியை தேடி எடுத்து திரும்பியவள் கதிரவனை கண்டதும் அப்படியே திகைத்து நின்றாள்.

 

     “என்ன செல்லம் பார்த்து செய்ய மாட்டியா? இப்படி பாத்திரத்தை சத்தமா உருட்டுனா அதி முழுச்சுக்க மாட்டானா?” என்று கேட்ட கதிரவன் அப்பொழுது தான் கீழே தண்ணீர் சிதறியிருப்பதை கண்டான்.

 

    “என்ன மா தண்ணீ க்ளாஸ் பிடிக்க கூடவா தெம்பில்ல. அவ்வளோ வீக்கா இருக்க நீ. அதிரன பார்த்து பார்த்து கவனிக்கிற. ஆனா நீ சரியா சாப்பிட மாட்டேங்குற. உன்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் சத்து டானிக் வாங்கி குடுக்கணும் போல.” என்றவன் குரலில் அக்கறையும் ஆதங்கமும் ஒருசேர தொனித்தன.

    

    பதில் பேசாது அவனையே திகைத்து பார்த்திருந்த அழகிக்கு படபடப்பு அதிகமாகியது. அவனை பார்த்து திருதிருவென விழித்தவள் மெல்ல கீழே அமர்ந்து தரையில் சிந்தியிருந்த நீரை துடைத்தாள். 

    

     “இந்நேரம் நாம பேசினதுக்கு எண்ணெயில போட்ட கடுகு மாதிரி பொறிஞ்சுருக்கணுமே? என்னாச்சு இவளுக்கு?” என்று யோசித்தபடியே அவளை பார்த்த கதிரவன் அத்துணை குளிரிலும் அவள் நெற்றியில் வியர்வை முத்து முத்து பூத்திருப்பதை பார்த்தான். 

     

    “பல்லு டைப்படிக்கிற அளவுக்கு வெளில பனி பெய்து. இவளுக்கு மட்டும் எப்படி வேர்க்குது? சம்திங் ராங்?” என்று மனதிற்குள் பேசிக்கொண்டவன் அவள் எதிரே கீழே அமர்ந்தான்.

    

    “நீ எழுந்திரி அழகி மா! நான் துடைக்கிறேன்.” என அவள் கையிலிருந்த துணியை வாங்க முற்பட்டான்.

    

   அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் விழியை பார்க்க முடியாது குனிந்துக் கொண்டாள்.

   

    “இல்லை பரவால்ல நானே துடைச்சுக்குறேன்.” என்று தடுமாற்றத்தோடு கூறியவள் வேகவேகமாக தரையை துடைத்தாள்.

 

     அவளின் தடுமாற்றம் அவனை பலத்த சிந்தனையில் ஆழ்த்தியது. அவளை கூர்மையாய் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான். அவளோ அவனை நிமிர்ந்தும் பாராது வேலையில் கண்ணாக இருந்தாள். 

 

    எப்பொழுதும் நிமிர்ந்து நோக்கும் குணம் கொண்ட அகவழகி இப்பொழுது ஏன் குனிந்த தலை நிமிராது இருக்கிறாள் என்ற வினா அவன் மனதின் உட்சுவற்றை அரித்தெடுத்தது. 

 

     தரையை துடைத்து அவள் எழ, அவனும் எழுந்தான். எழுந்தவள் அவனை பாராது திரும்பி துணியை சிங்கில் அலசி விட்டு, குளிர்சாதன பெட்டியிலிருந்து பாலை எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் ஏற்றி பற்ற வைத்தாள்.

 

    “அழகி ஒரு நிமிஷம்.” என கதிரவன் அழைக்கவும், அவள் அடுப்பு மேடையின் விளிம்பை இறுக்க பற்றி விழி மூடினாள்.

 

    “என்னாச்சு உனக்கு? இத்தனை குளிர்லயும் உனக்கு மட்டும் வியர்க்குது?” என்று கதிரவன் கூறவும் வேகமாக தன் முந்தானை கொண்டு அவள் நெற்றியை துடைக்க,

 

   “அழகி திரும்பி என்னைய பாரு.” என அவன் அழுத்தமாக கூறினான்.

 

    அவளோ திரும்பாது நிற்க, “உன்னைய திரும்ப சொன்னேன் அழகி.” என இன்னும் அழுத்தி அழைத்தான்.

 

     அவள் கண்முன் கண்ட கனா நிழலாட, அவள் இதயம் படபடவென துடித்தது. அவனின் குரலில் இருந்த அழுத்தம் அவளது படபடப்பை அதிகரிக்க, முந்தானை நுனியை சுற்றி சுற்றி இறுக்கினாள்.

 

   அவளின் படபடப்பை உணர்ந்த கதிரவன், “திரும்பு டி.” என பொறுமை இழந்து அவளது கையை பற்றி வேகமாக தன்புறம் திருப்பினான்.

 

    கண்களை இறுக்க மூடி தலை தாழ்த்தி நின்றிருந்தவளை அழுத்தமாக பார்த்த கதிரவன், “என்னை பாரு டி.” என தாடை பற்றி அவளது முகத்தை நிமிர்த்தினான்.

 

     அவளது முந்தானையை எடுத்து அவளது நெற்றியில் பூத்திருந்த வியர்வையை ஒற்றி எடுக்க, அவள் உடல் நடுங்கியது.

 

    சட்டென்று விழி திறந்தவள் பட்டென்று அவனது கையை தட்டி விட, அவன் கூர்மையான பார்வையால் அவளை துளைத்தான்.

 

    முதலில் தலை தாழ்த்தியவள் பின் நிமிர்ந்து அவனை முறைத்தபோது விழிகளில் உவர்நீர் திரையிட்டிருந்தது.

 

     “அழகி.” என்று அதட்டலான மெல்லிய குரல் வரவும் அழகி கதிரவன் பின்னே நின்றிருந்த அதிரனை கண்டு விழியில் திரண்டிருந்த நீரை அவசரமாக உள்ளிழுத்துக் கொண்டு,

 

    “எழுந்துட்டியா அதி குட்டி! இதோ டூ மினிட்ஸ்ல காபி போட்டுட்றேன்.” என்று அவள் புன்னகைக்க முயன்றாள்.

 

    அதிரனின் குரல் கேட்டதும் ஓரடி அவளை விட்டு பின்னே தள்ளி நின்ற கதிரவன் பார்வையின் கூர்மை மாற்றாது அவளை பார்த்தான்.

 

   “எனக்கு காபி வேண்டாம். ஏன் இப்போ ஹீரோ கைய வேகமா தட்டுன?” என்று கோபமாக கேட்ட அதிரனை திகைத்து பார்த்தாள்‌.

 

    கதிரவனும் கூட ஒரு நொடி திகைத்து பின் வலிய புன்னகையை வரவழைத்துக் கொண்டு,

 

    “அச்சோ வெல்லக்கட்டி! என் கைல ஒரு பூச்சி இருந்துச்சு அதை தான் அழகி தட்டிவிட்டா. அதை நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட. அப்படி தானே அழகி!” என்று கதிரவன் அழகியை அழுத்தமாக பார்க்க, அதிரனின் கோபத்தில் திகைத்து நின்றிருந்த அழகியோ திடுக்கிட்டு விழித்து,

 

   “ஹான். ஆ…ஆமா…ஆமா… பூச்சி தான் தட்டி விட்டேன்.” என திக்கி திணறி கூறினாள்.

 

     “அப்படியா! ஆனாலும் நீ ஹீரோ கைய வேகமா தட்டியிருக்க கூடாது அழகி!” என்று கண்டிப்பாக உரைத்த அதிரன் அகவழகியை இன்னும் திகைக்கச் செய்தான்.

 

    “அழகி மா பூச்சி இருக்குன்ற பதட்டத்துல தெரியாம பண்ணிட்டா வெல்லக்கட்டி! அழகி தட்டுனதுனால என் கை வலிச்சா போயிருச்சு. என் அழகி அடிச்சு எனக்கு என்னைக்குமே வலிச்சதில்ல. இனியும் வலிக்காது.” என்று கதிரவன் அதிரனை சமாதானம் செய்யும் விதமாக கூறி அவனை தூக்கிக் கொண்டு, அழகியை ஆழமாகப் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துக் கிடந்தன.

 

    “ஓகே அழகி! நீ எங்களுக்கு காபி போட்டு கொண்டு வா. நான் அதுக்குள்ள பிரஷ் பண்ணிட்டு வரேன்.” என்ற அதிரனின் பேச்சு அவள் கருத்தில் பதியவேயில்லை. அவளின் சிந்தனை எங்கோ இருந்தது.

 

    “நானும் இன்னும் ப்ரஷ் பண்ணல. வா டா வெல்லக்கட்டி ரெண்டும் பேரும் போலாம்.” என்ற கதிரவன் தூக்கி வைத்திருந்த அதிரனின் கன்னம் கிள்ளி விட்டு திரும்பி எங்கோ நிலைக்குத்திய பார்வையோடு நின்றிருந்த அழகியை கண்டு பெருமூச்சு விட்டு திரும்பி அங்கிருந்து சென்றான்.

 

     அவர்கள் சென்றதும் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவள் விழியிலிருத்து கன்னத்தில் இறங்கியது. ஸ்ஸ் என்ற சத்தம் கேட்டு பட்டென்று திரும்பிய அழகி பால் பொங்கி வழிவதை கண்டு அடுப்பை அணைத்தாள். கண்ணீரை துடைத்து விட்டு அடுப்பை சுத்தம் செய்து காபி கலக்கினாள்.

 

       அவள் முகம் இறுகிக் கிடந்தது. எதுவோ தொண்டையை அடைத்தது. அது துக்கமா? வருத்தமா? ஏமாற்றமா? வலியா? அழுகையா? என்பதை இனங்காண முடியாது தவித்தாள். அமைதியாக காபி கோப்பைகளோடு கூடத்திற்கு வந்து அதிரனிடமும் ஆளுக்கொரு கோப்பையை கொடுத்தவள் தனக்கானதை எடுத்துக் கொண்டு மீண்டும் அடுக்களைக்கே சென்றாள். சில நிமிடங்கள் கோப்பையோடு அப்படியே நின்றவள் பின் அதனை மேடையில் வைத்துவிட்டு இருந்த காய்களிலெல்லாம் கொஞ்சம் எடுத்து நறுக்கினாள். தாளித்து விட்டு நறுக்கிய காய்கள் பருப்பு, அரிசி, அனைத்தையும் ஒன்றாக குக்கரில் சாம்பார் சோறாக வைத்து விட்டு முட்டையை உடைத்து ஆம்லெட் போட்டாள். 

 

      அரைமணி நேரத்தில் அதிரனுக்கும் தனக்குமான உணவை தயார் செய்து டப்பாவில் கட்டி, தட்டில் கொஞ்சம் சாம்பார் சோற்றை வைத்து அதிரனை அழைக்க, அதிரன் குளித்து முடித்து பள்ளிக்கு தயாராகி வந்திருந்தான். அவன் பின்னேயே கதிரவனும் வர, அவனுக்கும் ஒரு தட்டில் உணவை வைத்து நீட்டினாள். இருவரும் அமைதியாக உண்ண, அவள் எங்கோ வெறித்திருந்தாள். கதிரவன் அவளின் முகத்திலிருந்த அமைதியையும் தாண்டிய இறுக்கம் எதற்கென புரியாது குழம்பினான். பின் ஒரு முடிவு எடுத்தவனாக வேகமாக உணவை உண்டான்.

 

    “அழகி! அதிய நானே ஸ்கூல்ல விட்டர்றேன்.” என்ற கதிரவனுக்கு சிறு தலையசைப்பை மட்டும் பதிலாக தந்தவள் தன் அறைக்கு விரைந்தாள்.

 

     “பை அழகி!” என அவளை இடைமறித்த அதிரன் அவளை குனியச் சொல்லி கன்னத்தில் முத்தம் வைக்க, எப்பொழுதும் முகம் மலர்பவளோ சிரிக்கவும் சிரமபட்டு அவனது தலையில் கைவைத்து விட்டு வேகமாக தன் அறைக்குள் புகுந்தாள்.

 

    “பேக் எடுத்துட்டு காருக்கு போ வெல்லக்கட்டி! நான் வரேன்.” என்று அதிரனிடம் கூறிய கதிரவன் அழகியின் அறைக்குள் நுழைந்தான்.

 

     “அழகி!” என்ற கதிரவனின் குரல் கேட்டு உடை எடுத்துக் கொண்டிருந்த அழகி அசையாது நின்றாள்.

 

    “நான் வெல்லக்கட்டிய ஸ்கூல்ல விட்டுட்டு வர்ற வரைக்கும் வீட்ல இரு. கொஞ்சம் பேசணும்.” என்றவன் கூறவும் சட்டென்று திரும்பி அவனை முறைத்தாள்.

 

     “இல்லனா நான் எஸ்ட்டேட்டுக்கு வருவேன்.” என்றவன் கூறிய சொற்களில் இருந்த அழுத்தம் அவளை அமைதியாக தலையாட்ட வைத்தது.

 

    “நல்லது. குளிச்சுட்டு சாப்பிடு. சாப்பிடலனா நான் வந்து ஊட்டி விட வேண்டியிருக்கும்.” என்றவனை பார்த்த அழகி முறைக்க முயன்று தோற்று போனாள். அவளது கற்பனையில் அவன் ஊட்டிவிடுவது போன்ற காட்சி தோன்றி அவளை இம்சிக்க, எதுவும் கூறாது வேகமாக குளியலறைக்குள் சென்று கதவை தாழிட்டாள். அவளின் வேகம் அவனின் இதழ்களில் அழகான சிரிப்பை தோன்ற செய்திருந்தது.

 

      கதிரவன் அதிரனை பள்ளியில் இறக்கிவிட்டு திரும்பி வரவும் அழகி உண்டு முடித்து தட்டை கழுவவும் சரியாக இருந்தது. வீட்டிற்குள் வந்தவன்,

 

    “அதுக்குள்ள குளிச்சுட்டு சாப்பிட்டியா? ம்ம் பயங்கர ஃபாஸ்ட் தான் நீ. ஊட்டி விடலாம்னு வந்தேன் மிஸ்ஸாகிடுச்சு. பரவால்ல பின்னாடி பார்த்துக்குறேன்.” என்று குறும்பாய் புன்னகைத்த கதிரவனை தீயென முறைத்த அழகி,

 

    “பேசணும்னு சொன்னத பேசினா நான் கிளம்புவேன். எனக்கு நேரமாகுது.” என்றபடி கூடத்திற்கு வர, அவனும் பெருமூச்சோடு அவளை தொடர்ந்து வந்தான்.

 

     “முதல்ல இப்படி உட்காரு.” என இருக்கையில் அமர்ந்தவன் தன் எதிரே இருந்த இருக்கையை கைக்காட்ட, அவனை முறைத்த வண்ணம் அவள் அதில் அமர்ந்தாள்.

 

     “என்னாச்சு அழகி உனக்கு? நேத்து நைட்டு பார்க்கும்போது கூட நல்லா தானே இருந்த. காலைல ஏன் அவ்வளோ பதட்டமா இருந்த?” என அவளையே பார்த்தான்.

 

     “எனக்கு என்ன ஆச்சு. நான் நல்லாதான் இருக்கேன்.” என்றவள் எரிச்சல் முகமூடி அணிந்தாள்.

 

    “இல்லை அழகி. காலைல ரொம்ப பதட்டமா இருந்த. எந்த அளவுக்குனா இந்த குளிர்லயும் வியர்க்குற அளவுக்கு. சொல்லு என்ன ஆச்சு?” என விடாமல் வினவினான்.

 

    “அது உனக்கு தேவையில்லாத விஷயம்.” என்று அவள் அவனை முறைக்க, அவன் பார்த்த பார்வையில் தலைக் குனிந்தாள்.

 

     “இதோ இதே மாதிரி தான் காலைலயும் நான் கேட்டப்ப என் மூஞ்சிய பார்க்காம குனிஞ்ச. எப்பவும் என் கண்ணை பார்த்து பேசுற நீ இன்னைக்கு என் முகத்தை கூட பார்க்கல. சொல்லு என்ன ஆச்சு? நீ சொல்லியே ஆகணும் அழகி. எதாவது சொல்லி சமாளிக்கலாம்னு மட்டும் நினைக்காத.” என்றவன் குரலில் இருந்த எச்சரிக்கை அவளை துணுக்குறச் செய்தது.

 

     சில நிமிட யோசனைக்கு பின் சொல்லாமல் அவன் விட மாட்டான் என்பதனை உணர்ந்து சொல்ல முடிவெடுத்து அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனின் விழியை சந்திக்காது,

 

    “அது…. அது…” என்று தடுமாறினாள்.

 

    அவளின் தடுமாற்றதை குறித்தபடியே அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

    “அது ஒரு கனவு கண்டேன்.” என்று தயங்கி தயங்கித் தொடங்கி கடகடவென தன் கனவினை கூறி முடித்து அவனை பார்க்க முடியாது பார்வையை வேறெங்கோ திருப்பினாள்.

 

      அவள் கூறியதை கேட்டு கலகலவென சிரிக்கும் கதிரவனின் சிரிப்பொலி கேட்டு அவனை திரும்பி குழப்பமாக பார்த்தவளுக்கு அவன் நில்லாமல் சிரிப்பதை பார்த்தும் சுர்ரென்று கோபம் வர, அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்.

 

     அவள் முறைப்பதை கண்ட கதிரவன் மெல்ல சிரிப்பை கட்டுக்குள் கொண்டு வந்து, “ச்ச! இதுக்கா அழகி மா காலைலேர்ந்து பதட்டமா இருந்த. நான் என்னவோ ஏதோனு நினைச்சுட்டேன்.” என்றவன், “நான் ஒன்னு கேட்டா சொல்வியா?” என்று தீவிர முக பாவத்தோடு அவளை நோக்கினான்.

 

     “நேத்து தான் என் முடிவு மாறாது. நான் ஏமாந்து போவேன். அது இதுன்னு அவ்வளோ உறுதியா சொன்ன. தன் முடிவுல உறுதியா இருக்குறவ இந்த கனவுக்காக ஏன் பதட்டமாகுற. இது ஒரு கனவுனு ஜஸ்ட் லைக் தட் அப்படியே விட்டுட்டு போயிருக்கலாமே? ஏன் போகல? ஏன் அதை உன் தலையில போட்டு சுமந்து பதட்டமாகி படபடத்து யோசிச்சு பயந்துட்ருக்க?” என்றவனை பட்டென்று‌ இடைவெட்டிய அழகி, 

 

     “யாரு… யாரு பயப்பட்டா? நான்லாம் பயப்படலயே!” என பதற்றமாகக் கூற, கதிரவனின் இதழ்கடையோரம் மெல்லிய வளைவு.

 

    “இதோ இப்ப கூட பயப்படலனு பதட்டமா தான் சொல்ற.” என்றதும் அவளின் பதட்டம் அதிகமாக முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

 

     இருக்கையை அவளை நெருங்கி நகர்த்தி அமர்ந்த கதிரவன் அவளது தாடை பற்றி தன்னை பார்க்கச் செய்தான்.

 

    “இங்க பாரு அழகி மா! என்னை ஏத்துக்க முடியாதுன்ற முடிவுல நீ உறுதியா இருந்தா எதுக்கு சாதாரண கனவுக்கெல்லாம் கலலைப்பட்ற.” என்றவன் கூறியபோது அவளையும் மீறி அவள் கண்களில் தோன்றிய சிறு வலியையும் ஏக்கத்தையும் கதிரவன் கண்டுக்கொண்டாலும் அதனை காட்டிக்கொள்ளாது தொடர்ந்தான்.

 

    “நான் உனக்கு வேண்டாம்னு உறுதியா இருக்கல்ல அப்போ இந்த கனவ பெரிய விஷயமா எடுத்து யோசிச்சு உன்னை நீயே இறுக்கிக்காத‌. நீ எப்பவும் போல என்னை முறைச்சுட்டே திட்டிட்டே இரு. நானும் உன்னை வம்பு பண்ணிக்கிட்டே இருக்கேன். இல்ல எனக்கு இந்த கனவு ஒரு விஷயம் தான்னு சொன்னனா. உன் மனசுல ஏதோ ஒரு ஓரத்துல எனக்கான ஃபீலிங்ஸ் இருக்குனு அர்…” என்றவன் முடிக்கும் முன், ” என்னது ஃபீலிங்ஸா அதெல்லாம் ஒன்னும் இல்ல.” என்று குறுக்கிட்டவளின் கண்களில் ஒரு நொடி தோன்றிய மகிழ்ச்சியை மறுநொடி அவள் கோபம் கொண்டு மூடுவதை கவனித்து விட்ட கதிரவனின் உள்ளம் துள்ளி குதித்தது. 

 

    “அப்புறம் என்ன? ஃப்ரீயா விட்டுட்டு எப்பவும் போல உன் முடிவுல உறுதியா இரு. சிம்பிள்.” என்று அவளது கன்னத்தை பற்றியிருந்த கையை விலக்கி தோளை குலுக்கி அழகாக புன்னகைத்தான்.

 

     அவன் கன்னத்திலிருத்து கையை எடுத்ததும் இமைப்பொழுது அவளது முகத்தில் தோன்றி மறைந்த ஏமாற்றத்தை அவளே அறியவில்லை. ஆனால் அவன் கண்டுகொண்டு உள்ளுக்குள் புன்னகைத்தான்.

 

     “ஆமா என் முடிவுல நான் உறுதியா இருக்குறப்ப எந்த கனவு வந்தா எனக்கென்ன.” என்று முகத்தை விரைப்பாக வைத்துக் கொண்டு கூறியவளை கொஞ்ச தோன்றிய எண்ணத்தை தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.

 

     “எனக்கு நேரமாச்சு நான் கிளம்பணும்.” என்று அவன் முகம் பார்த்தவள் விழி பார்க்க தடுமாறுவதை பார்த்து அவனுக்குள் சிரிப்பு பொங்கினாலும் சிரிக்காது,

 

     “எனக்கும் வேலையிருக்கு. நானும் கிளம்பறேன். நீ மட்டும் உன் முடிவுல உறுதியா இரு. டக்குனு மனசகினச மாத்திக்காத. நான் உன்கூட குப்பை கொட்ட வேண்டிய பரிதாப நிலைமைக்கு வர வேண்டியதா இருக்கும். சோ எப்பவும் உறுதியா இருடி என் அழகி குட்டி!” என்று அவளை வெறுப்பேற்றி அவள் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைத்துவிட்டு,

 

    “பை டி அழகி செல்லம்! மாமா இன்னும் ஒரு வாரத்துக்கு வர மாட்டேன். அதுவரை ஜாலியா இரு.” என்றுவிட்டு விசிலடித்துக் கொண்டே அவன் வாசலுக்கு விரைந்தான். 

 

    அவன் வெறுப்பேற்றியதில் கோபம் கொண்டு பல்லைக் கடித்து அவனை முறைத்துக் கொண்டிருந்த அழகி, “என் கூட குப்பை கொட்றது உனக்கு பரிதாப நிலையா? ச்ச. ஐய்யோ அழகி கோவத்துல மூளை கலங்கிடுச்சா. அவன் சொன்னதுக்கு எதுக்கு உனக்கு கோவம் வருது. வரக்கூடாது. அதே மாதிரி அந்த கனவையும் மறந்துரு.” என்று அவளுக்கு அவளே பேசிக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டு துரிதமாக தன் கைப்பையையும் வண்டி சாவியையும் எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு திரும்பினாள்.

 

     இன்னும் கிளம்பாது தன் மகிழுந்தில் அமர்ந்திருந்த கதிரவனை கண்டதும் உள்ளுக்குள் அவளறியாது மகிழ்ச்சி தோன்றியது. அழகி அவனை முறைக்க, அவனோ “பை செல்லம்!” என்று பறக்கும் முத்தம் ஒன்றை தந்துவிட்டு மகிழுந்தை கிளப்பிக் கொண்டு செல்ல, அவனை மேலும் முறைத்து விட்டு தன் வண்டியை வேகமாக கிளப்பினாள். அவள் அவன் மீது கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தாலும் அவள் கன்னம் சிவந்திருந்தது. 

 

      அவளின் முகத்தை மகிழுந்தின் கண்ணாடி வழியே கண்ட கதிரவனின் இதழ்களில் குறுநகை அரும்பியது. அவள் மனதில் சிறு மாற்றமேனும் நிகழாதா என்று காத்திருந்தவனுக்கு அவன் அவளது உள்ளத்தில் எங்கோ ஓர் ஓரத்தில் இருப்பதை அறிந்ததும் உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்கியது. அவளுள் தான் இருப்பதை அவள் உணர வேண்டும் என்றெண்ணியே அவளுள் தான் கண்ட மாற்றத்தை கூறாது மனதை இறுக்கிக் கொண்டு அவளுக்கு வந்த அழகான கனவை மறந்துவிட சொல்லி, கூறிவிட்டு வந்தான். அவளின் இச்சிறு மாற்றம் அவன் இத்தனை காலம் கொண்ட நம்பிக்கைக்கு மேலும் வலு சேர்த்திட, மகிழ்ச்சியில் மகிழுந்தினுள் பாடலை ஒலிக்க விட்டான். “அழகியே மேரி மேரி மீ அழகியே!” என்ற பாடல் வரிகளை கேட்டதும் குறுஞ்சிரிப்போடு அனிச்சையாக அவனது இதழ்களும் அப்பாட்டை முணுமுணுத்தன.

வருவாள்….

     

     

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்