Loading

அந்த வீட்டின் உரிமையாளர் எண்ணை கண்டுபிடித்து அனுப்பினார் செகரெட்டரி. அவருக்கு அழைத்துப் பார்த்தான். ஆனால் அழைப்பை‌ ஏற்கவில்லை மறுபுறம். ஏனோ அனைத்தும் மர்மமாகவே இருந்தது. 

 

“சரி.. இப்போ‌ அந்த வீட்டோட சாவி வேணும்.. உள்ள போய் பார்க்கணும்” என்று கூறிவிட்டு சிந்தித்தவள், சிறிது நேரம் கழித்து “நாமளே பூட்டைத் திறக்கலாம்” என்று எழுந்தாள் நற்பவி.

 

“மேம்.. இங்க உள்ள பூட்டை உடைக்கிறது அவ்ளோ ஈசி இல்லை. பூட்டா இருந்தா உடைக்கலாம். ஆனா இது கதவில் பொறுத்தியிருக்கும் ஆட்டோ லாக். அந்த சாவி போட்டா மட்டும்தான் திறக்க முடியும். உடைக்கிறதும் ரொம்ப கஷ்டம். கார்ப்பெண்டர் வந்தால்தான் முடியும்” என்று கூற, அவன் வீட்டின் பூட்டை ஆராய்ந்தாள் நற்பவி.

 

பின் யாருக்கோ அழைத்து ஏதோ கட்டளைப் பிறப்பித்தாள். 

 

அரைமணி நேரத்தில் ஒருவன் வந்தான் சில உபகரணங்களுடன்.

 

“கீதன், இன்னொரு நம்பர் வந்திருக்குமே. அவுங்களுக்கு கூப்பிட்டு நீங்க பேசுங்க. டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். அவுங்ககிட்டேந்து டீட்டெயில் வாங்குங்க.. நாம சஸ்பெக்ட் பண்ண மாதிரி அங்க ஏதாவது நடந்திருந்தா நமக்கு நிச்சயம் ஏதாவது க்ளூ கிடைக்கும்” என்று கீதனுக்கு கட்டளையிட்டவள், சாவியைத் திறக்க, வந்தவனுடன் வீட்டின் அருகில் சென்றாள்.

 

சில போராட்டங்களுக்குப் பின்னர் சாவி திறந்தது. இரவாகிவிட்டது. நள்ளிரவு வர சில மணித்துளிகளே இருக்கிறது. கீதன் களைத்துவிட்டான். இதுதான் இறுதி நம்பிக்கை. செகரெட்டரி கொடுத்த எண்ணிற்கு அழைத்தாலும், அவனுடைய கண் முழுக்க அந்த வீட்டின் கதவிலேயே இருந்தது. கதவு திறக்கும் ஒலி, நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு வந்தது‌. மூவரும் உள்ளே சென்றனர். வரவேற்பறையில் இருந்த சைனா பெல் இன்னிசை எழுப்பி அவர்களுக்கு வரவேற்புரை நவில்ந்தது. 

 

அங்கு உடைந்திருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்தனர். அதன் அருகில் 

காய்ந்து உலர்ந்து போயிருந்த உதிரத் துளிகள் மனதில் பல கற்பனைகளைத் தட்டி எழுப்பியது. கீதனின் விழிகள் கண்ணீரால் நிரம்பியிருந்தது. அவனின் உள்ளம் ஊமையாய் அழுத்து நிரண்யாவை நினைத்து. அவளுக்கு ஏதோ தவறாக நிகழ்ந்துவிட்டது என்று அறுதியிட்டுக் கூற, உள்ளுக்குள் மரித்துப் போனான். இவ்வளவு நேரம் இருந்த தெளிவு இப்பொழுது இல்லை.

 

நற்பவி ஆராயும் பார்வையுடன் அந்த அறையை அலசிவிட்டாள். சிவா சற்றே பயத்துடன் சுற்றி சுற்றிப் பார்த்தான்.

 

அடுத்து அங்கு நிகழ்ந்த நிகழ்வைக் கண்டு ஆடிப்போனான் கீதன். நற்பவியும் நிகழ்ந்த நிகழ்விற்கு சாட்சியாகிப் போனாள். அவளாலும் சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.

 

காற்று அதீத வேகத்தில் அடித்தது. வீட்டின் கதவு அடித்து அறைந்து சாத்தியது. படுக்கையறை அருகே அரவம் தெரிய, மூவரும் நிமிர்ந்து பார்த்தனர். மிளகாய்ப்பழமாய் சிவந்திருந்த மூக்கு, எரிமலையின் சாயல் சுமந்த விழிகள், தலைவிரி கோலம் என்று நிர்ணயா நின்றிருந்தாள்.  நிரண்யாவாக அல்ல. விழிகளில் வழியும் உக்கிரத்துடன் ஒரு அலட்சியம். அவளைப் பார்க்கவே பயமாக இருந்தது. தலை பின்னலில் இருந்து உடை, நடை மற்றும் பாவனை என்று அனைத்திலும் மாற்றம். அவளால் இப்படி அலட்சியமாய் பார்க்க முடியாது. அவளால் இப்படி முகம் சிவக்க சீற்றம் கொள்ள முடியாது. அப்படித்தான் நினைத்திருந்தான் கீதன். ஆனால் இன்று… அவன் பார்வையில் கோளாறு இருக்குமோ‌ என்று சந்தேகம் மட்டுமே கொள்ள முடிந்தது.

 

அவளைக் கண்டதும், “நிரண்யா” என்று கீதன் அழைக்க, அவளின் அம்பகங்கள் ஆயிரம் அம்புகளை தொடுத்துவிட்டது. அதில் அடுத்த வார்த்தையை விழுங்கி விட்டான். தன் ஓரவிழி பார்வைக்கு ஏங்கித் தவித்தவளா இவள். ஒற்றைப் பார்வையில் இவனின் ஓராயிரம் உணர்வுகளை அடக்கிவிட்டாளே!

 

“நிரு.. உனக்கு என்ன ஆச்சு?” என்று பதறினான் கீதன். முயன்று மீண்டும் வரவழைத்த தைரியத்துடன் தான் வினவினான். தொண்டைவரை பயம் அடைத்திருந்ததுதான் உண்மை.

 

“யார் நீ?” என்ற‌ ஒற்றைக் கேள்வியில் அவனை அந்நியப்படுத்தினாள் அவள்.

 

சிவாவும் நற்பவியும் அங்கு நிகழ்பவைகளுக்குப் பார்வையாளர்கள் ஆயினர். 

 

“டேய்… கீதன், எதிர்த்த வீட்லயே உன் பொண்டாட்டிய வச்சுகிட்டு இன்னைக்கு நாள் முழுக்க அலைய விட்டுட்டியே” என்று சிவா கடுப்புடன் கூற, கீதன் அதை காதில் வாங்கியதுபோல் இல்லை.

 

கீதன் அவள் அருகில் சென்று நிர்ணயாவின் கைகளைப் பற்ற, அவள் அவனை உதறித் தள்ளினாள். எங்கிருந்து அவளுக்கு அவ்வளவு பலம் வந்தது என்று அங்கிருந்தவர்களுக்கு விளங்கவில்லை. கீழே விழுந்து கீதன் எழ முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட சிவா அலறிவிட்டான்.

 

“டேய்.. கீதன்.. உன் பொண்டாட்டிய பேய் புடிச்சிருக்கு” என்று உலறி வைக்க, நிரண்யாவின் பார்வை சிவாவின் புறம் திரும்பியது. ஏனோ நற்பவியை அவள் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

 

“யாருடா நீ.. திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழைஞ்ச மாதிரி..” என்று அவனையும் பிடித்து வெளியில் தள்ளினாள். நற்பவி அதைத் தடுக்க முற்பட, அவளின் புறம் திரும்பி அவளைத் தாக்கினாள். நற்பவி பலம் பொருந்தியவள். ஆண்களுக்கு நிகராக சண்டைப் போடுவாள். கராத்தே குத்துச்சண்டை போன்றவற்றில் பயிற்சி பெற்றவள். ஆனால் அவளே நிரண்யாவை சமாளிக்க திணறினாள். பத்து மனிதர்களின் பலம் ஒன்றாக சேர்ந்தால், எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது அவளின் தாக்குதல். நற்பவியும் திணறி ஒரு ஓரமாக விழுந்திருந்தாள். கோபத்தின் உச்சத்தில் கத்தினாள் நிரண்யா. அந்த குடியிருப்பு பகுதியே அலறிவிட்டது. எதிரொலி எதுவும் இல்லாமலே நிரண்யாவின் குரல் எங்கும் ஒலித்தது.

 

“இங்க பாருடா.. நான் உன் பொண்டாட்டி இல்லை. நான் மொழி. என்னோட தீபனோட சேர்ந்து வாழ வந்திருக்கேன். நீ பக்கத்தில் வந்த மரியாதை இருக்காது” என்றவளை அதிர்ச்சி மேலோங்க கீதன் பார்க்க, அவனைக் கண்டவள் கோரமாக நகைத்தாள். தன் மனைவிதானா இது என்று அவனால் சிந்திக்கவும் அவகாசமில்லை. அவளின்‌ ஓலம் அந்த குடியிருப்பை ஒரு வழி செய்தது. கீதனின் கழுத்தை தெறிக்க ஆரம்பித்தாள். மற்ற இருவரும் அவளைக் காக்கப் போராட, அவர்களையும்‌ தாக்கினாள். 

 

அவளால் தாக்கப்பட்ட மூவரும் எழ முடியாமல் தவித்தனர். அறையை இடவலமாக அளந்து நடை பயின்றாள். 

 

பின் “தீபன்… தீபன்…” என்று கத்திக்கொண்டே ஓடினாள் நிரண்யா. பலகணி இருக்கும் இடம் சென்றவள், அதன் கம்பியின் மேல் ஏற, அனைவரும் பதிறியடித்து ஓடினர். அவளைப் பிடித்து கீழே‌ தள்ளுவதற்குள் மூவருக்கும் மூர்ச்சையானது. ஆனால் நிரண்யாவின் ஆற்றல் குறைந்தது போல் இல்லை. அவள் மீண்டும் மீண்டும் அங்கிருந்து குதிக்க முற்பட, நற்பவி யாருக்கோ‌ அழைத்துத் தகவல் கூறினாள். அதன்பின் நிரண்யா கீழே விழுந்தாலும் அடிபடாமல் இருக்க சில ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அவளைப் பிடித்து அங்கிருந்த கம்பியில் கட்டி வைத்திருந்தனர்.

 

ஏனோ அதுவரை துள்ளிக்குதித்தவள், கொட்டித் தீர்த்து திடீரென நின்ற மழை போல் அமைதியானாள். 

 

அவர்களிடம் கெஞ்ச ஆரம்பித்தாள். 

 

“என்னை விடுங்க. இதை அவிழ்த்துவிடுங்க. நான் உங்களைக் கெஞ்சிக் கேக்குறேன். என்னை என் தீபனோட சேர்த்து வைங்க..” என்று‌ கதறி அழுதாள். பின் மயங்கி சரிந்தாள்.

 

நள்ளிரவு நேரம் என்பதால் குடியிருப்பில் இருக்கும் அனைவரும் கீழே கூடிவிட்டனர். சிலர் ஆறாவது தளத்திற்கும் வந்தனர். பலர் நிரண்யாவின் நிலை கண்டு தலைத் தெறிக்க ஓடியும் விட்டனர். சிலர் உதவ முன் வந்தனர். 

 

மயங்கி சரிந்தவளை விழியகற்றாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் கீதன். அவனுள்‌ பல வினா தீயாய் காய, யாரோ உள்ளத்தின் உட்புறச் சுவரில் அமிலக் கரைசல் ஊற்றியது போல் எரிந்தது.

 

‘யார்‌ இந்த தீபன். நிரண்யாவை ஆட்டிப் படைக்கும் அந்த ஒருவன் யார்? ஏன் இப்படி நடந்தது? தன்னை ஆசையுடன் பார்த்த கண்களா இது? தன்னை ஆரத்தழுவிடத் துடித்தக் கரங்களா இவை?’ என்று மனம் எழுப்பிய வினாக்களுக்குப் பஞ்சமில்லை. அதற்குத்தான் நொடியில் நூற்றாண்டுகள் பயணிக்கும் ஏகபோக உரிமையும் வளமையும் இருக்கிறதே. சாட்டையால் அடித்து இழுத்து வந்து கழி கம்பில் கட்டி வைத்தாலும், திமிறி அறுத்துக்கொண்டு செல்லும் வலு இருக்கிறதே. இடிந்து மடிந்து அமர்ந்திருந்த கீதனின் விழிப்ப்வைகள் இலக்கின்றி நிரண்யாவை மொய்த்தது. 

 

‘பூட்டியிருந்த வீட்டிற்குள் அவள் எப்படி வந்தாள்’ என்று மீண்டும் ஒரு வினாவை மூளை எழுப்ப, அவனின் மனம் அழற்சியின் பிடியில் சிக்கித்தவித்தது.

 

  அதன்பிறகு அவளை கீதன் அவனின் வீட்டிற்குத் தூக்கிச் சென்றான். காய்ந்து சருகாய் உலர்ந்து உதிர்ந்த இலையாய் இருந்தாள் நிர்ணயா. பல நாள் உண்ணாமல் உறங்காமல் இருந்த கிறக்கம் உடலில். நிறையவே மெலிந்திருந்தாள். ஒரு வாரத்தில் இந்த மெலிவு சாத்தியமா என்ன? அவள் உடை நடை அனைத்திலும் பல மாற்றங்கள். மயங்கியிருக்கும் நிலையிலும் அவள் நெற்றியில் சுருக்கங்கள். குழப்பம் வஞ்சனையில்லாமல் வாடகையளித்து குடியேறியிருந்தது அவளின் முகரேகையில்.

 

அவளைக் கட்டிலில் படுக்க வைத்தான். அதன்பிறகு அவன் ஒன்றுமே பேசவில்லை. மூவர் மட்டுமே இருந்தனர்.  மயான அமைதி. கீதனின் அதிர்ச்சி கண்டே நற்பவிக்கும் சிவாவுக்கும் நன்றாக விளங்கியது. இது அவனுக்கும் முதல் அதிர்ச்சி என்று. 

 

நற்பவி பேய் பிசாசு மேல் நம்பிக்கையற்றவள். சிவா உறுதியாக பேய்தான் என்றான். அதற்கு ஏற்ப அந்த குடியிருப்புவாசிகளும் நிரண்யாவிற்கு பேய் பிடித்திருப்பதாகப் பேசிக்கொண்டனர். ஒருவருடம் முன்னர் ஒரு பெண் அந்த வீட்டின் பலகணியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டாள் என்று பேசிக்கொள்ள கீதன் பயந்துவிட்டான். சிவா தான் கூறியது சரியென்று உறுதி செய்து கொண்டான்.

 

நற்பவி அங்கிருந்த ஒருவரிடம் என்னவென்று விசாரிக்க, ‘அந்த வீட்டில் ஒரு குடும்பம் வசித்து வந்ததாகவும், கணவன் மனைவி இருவருக்கும் எப்பொழுதும் சண்டைதான் என்றும், மனைவியின் மேல் சந்தேகப்பட்டதால் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்றும், தனக்கு வந்த செய்தியைக் கூறினார்.’

 

“சரி.. சரி.. எல்லாரும் கிளம்பி போங்க. இங்க கூட்டம் கூட வேண்டாம்” என்று அனைவரையும் அனுப்பி வைத்தாள் நற்பவி. 

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்