Loading

கடத்தப்பட்ட அனைவரின் கண்களையும் கட்டியபின், அனைவரும் எங்கோ அழைத்துச் செல்லப்பட்டனர். சிறிது தூரம் நடைப் பயணம், பின் நான்கு சக்கர வாகனத்தில் பயணித்தனர். பின் சற்று தூரம் நடக்க வைத்து, படிகளில் ஏறுவது போல் இருந்தது. அதன்பிறகு இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். மெத்தென்ற இருக்கை, உடலை இதமாக்கிய குளிர் என்று இருக்கும் சூழல் இதமாகவே இருந்தது.  கண்களில் இருந்த கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டது. கண்களைக் கசக்கி, விழிப்பாவைகளைத் திறந்து பார்த்தனர்.

விமானத்திற்குள் இருந்தனர் அனைவரும். விமானத்தில் இவர்களைத் தவிற வேறு யாரும் இல்லை‌. ஒருவன் மட்டும்தான் இருந்தான்.

அதிர்ச்சியில் சற்று நேரம் அமைதியாய் இருந்தனர் அனைவரும். சதாசர்வகாலமும் வாயடித்துக் கொண்டே இருக்கும் தணிகைக் கூட அமைதியாக வந்தான்.

“ஆரு.. நம்மள‌ எங்கடி கொண்டு போறாங்க. அதையாவது சொல்லித் தொலைய வேண்டியதுதான” நேரு.

“ஆமாடி நானும் அதுதான் நினைக்கிறேன். சஸ்ப்பென்ஸ் தாங்க முடியல. செத்துறுவேன் போல” ஆரு.

“டேய்… தணிகை.. ” என்று முன்னிருக்கையில் இருந்தவனைக் கிள்ளினாள்.

“என்ன?” தணிகை.

“அவன்கிட்ட கேளேன்” என்று அவள் கூற, அப்பொழுதுதான் அங்கிருந்தவனைப் பார்த்தான் தணிகை. அடியாள் போல் ஒருவன் இருந்தான். அவனை அன்னார்ந்துதான் பார்க்க வேண்டும். அதுவும் அமர்ந்து கொண்டு பார்த்தால் கழுத்துவலி நிச்சயம். அவனை நிமிர்ந்து பார்த்தவன் இரட்டையர்களை முறைத்தான்.

“என்ன கேக்கணும்?” தணிகை.

“உங்க மூக்கு ஏன் பொடப்பா இருக்குன்னு கேளு” என்று நக்கலடித்தாள் ஆரு.

“ஏன் நீ கேக்குறது?” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“இதெல்லாம் நீதான் நல்லா செய்வ. உன்னால பேசாம இருக்க முடியாதே. அதான் சொன்னோம்” நேரு.

“பனைமரத்துல பாதி உயரமும் ஆலமரத்துல மீதி அகலமும் இருக்கான். அவன் பக்கத்துல வந்து மூச்சுவிட்டாலே இந்த ப்ளைட் பறந்து போயிடும். அவன்கிட்ட என்னைக் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்க ரெடியாயிட்டீங்க ரெண்டு பேரும்” தணிகை.

“ஏன் கடத்திருக்கீங்கன்னு கேளு தணிகை.”

“போய் ஒரு ஓரமா உக்காந்து ஜன்னல் பக்கம் ஏதாச்சும் தெரியுதான்னு வேடிக்கைப் பாரு” தணிகை.

அவர்களுக்கு எதிர்புறம் வேதனும் சித்திரனும் அமர்ந்திருந்தனர்.

“பாஸ்… நீங்கதான் டூப் போடுறவராச்சே. அந்த சிம்பான்ஸிய அடிச்சு போட்டுட்டு எங்களைக் காப்பாத்துறது” வேதன்.

“ஆமா.. அவன் ஒருத்தன்தான் இங்க இருக்கானா?” சித்திரன்.

“ஆமா.. ஒருத்தன்தானே.. அவனை அடிச்சுப் போட்டா தப்பிச்சு ஓடிறலாம்” என்று வேதன் கூற அவனை முறைத்தான் சித்திரன்.

“சரி அவனை நான் அடிக்கப் போறேன். நீ இந்த ஜன்னலைத் தொறந்து வச்சுக்க.”

“எதுக்கு?”

“குதிச்சு ஓடி தப்பிக்க வேணாம். அதுக்குத்தான்.”

“எதுக்கு பாஸ் குதிச்சு ஓடணும். கதவைத் திறந்து ஓடிறலாம்” என்று வேதன் கூற, அவனை விசித்திரமாக பார்த்தான். அவனைப் பார்த்தால் நக்கல் செய்வது போல் இல்லை.

“அடேய்… நீ இருக்கது ப்ளைட்.. கொல்லாதீங்கடா” சித்திரன்.

சுற்றிலும் பார்த்தவன், “ஆமாயில்ல” என்றான்.

“ஆமா… முன்னப்பின்ன நீ ப்ளைட் பார்த்ததில்லையா?” சித்திரன்.

“பாத்திருக்கேன்.. டீவில.. ஆனா உள்ளுக்குள்ள நான் ப்ராமாண்டமா இருக்கும்னு நினைச்சேன். இது செமி ஸ்லீப்பர் மாதிரி கூட இல்ல” வேதன்.

“ஐயோ… சாமி.. முடியலடா.. நீ ஒரு டிசைன். அந்த தணிகை ஒரு டிசைன். பேசாம வா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் எதுக்கு கடத்தினாங்கன்னு தெரியும்” சித்திரன்.

“வாய்ஸ் மட்டும்தான் சின்சான்னு நினைச்சேன். ஆனா..” வேதன்.

“ஆனா..” சித்திரன்.

“ஆனாயில்ல பாஸ் ஆவன்னா.. நீங்க படுத்துத் தூங்குங்க” வேதன்.

திருநல்லனும் பல்லவியும் அருகில் அமர்ந்திருந்தனர்.

இருவருக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை. பல்லவியின் மடியில் குழந்தை அலர்விழி அமர்ந்திருந்தாள்‌. அவள் அழாமல் அமர்ந்திருந்ததே ஆச்சர்யம்தான்.

“அப்பா.. என்னப்பா இன்னும் எதுவுமே சொல்லாம இருக்காங்க. எதுக்காக நடக்குது இதெல்லாம்னு” பல்லவி.

“விடுமா.. கத்திரிக்காய் முத்துனா கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகணும். ஆனா நம்ம உயிருக்கு அவுங்களால எந்த ஆபத்தும் இல்ல” திருநல்லன்.

உண்மையில் அவர்கள் செல்லப் போகும் இடத்தின் கொடூரம் அறிந்திருந்தால் திருநல்லன் இப்படி ஒரு வார்த்தைக் கூறியிருக்கமாட்டார்.

தணிகைக்கு அருகில் இருந்த இருக்கை காலியாக இருக்க, அவன் அருகில் வந்து அமர்ந்தான் அந்த நெடியவன். அதை விழிப் பிதுங்கிப் பார்த்துக்கொண்டிருந்தான் தணிகை.

‘அடேய், பனைமரம். இடமா இல்ல. இங்க வந்து ஏண்டா உக்காருற’ என்று நினைக்கத்தான் முடிந்தது தணிகையால்.

“தப்பிக்க நினைச்சாலே செத்துறுவ” என்று மிரட்டினான் நெடியவன்.

தணிகை பதிலேதும் கூறாமல் பார்க்க, “ஜன்னலைத் திறந்து அப்படியே கீழ தள்ளிடுவேன்” என்றான்.

“நான்தான் தப்பிக்க நினைக்கலையே. உங்களுக்கு கஷ்டமே வேண்டாம் ப்ரோ” தணிகை.

அந்த நெடியவன் அனைவரையும் திரும்பி ஒரு பார்வைப் பார்த்தான். இரட்டையர்கள் அவனையே பார்த்துக்கொண்டிருக்க என்ன வேண்டும் என்றான் விழிகளை சுருக்கி.

ஒன்றுமில்லை என்று இடவலமாக தலையை ஆட்டினர் இருவரும். ஆரு தணிகையின் கையைக் கிள்ளினாள்.

“ஆ…” என்று தணிகை அலற, இப்பொழுது அனைவரும் தணிகையைப் பார்த்தனர்.

“என்ன?” நெடியவன்.

“எரும்பு கடிச்சிருச்சு?” என்ற தணிகையை முறைத்தான்.

“ஏதாச்சும் ப்ளான் செஞ்சா என்ன நடக்கும்னு முன்னாடியே சொல்லிருக்கேன்” நெடியவன்.

“நல்லா தெரியுங்களே.. இந்த ஜன்னலைத் தொறந்து வெளில தள்ளிவிடுவீங்க..” தணிகை.

“டேய்.. கேளுடா?” என்று மீண்டும் கிள்ளினாள் ஆரு. அவன் மீண்டும் கத்த, இம்முறை தணிகையின் கைகளை முறுக்கினான் அந்த நெடியவன்.

“பாஸ்.. பாஸ்.. வலிக்கிது விடுங்க. சொல்றேன்” என்று தணிகை‌ கூற அவனை விடுவித்தான் நெடியவன்.

“நாங்க எங்க இருந்தோம் இத்தனை நாள்?‌ அதை மட்டும் கொஞ்சம் சொல்லுங்க ப்ரதர்? சஸ்பென்ஸ் தாங்காம மண்டை வெடிச்சிடும் போல” தணிகை.

“பரவாயில்ல வெடிக்கட்டும்.”

“ப்ரோ.. உங்களுக்கு நிறையவே கடமைப் பட்டிருக்கோம். ஏனா கடத்தி வச்சு நல்ல சோறு போட்ருக்கீங்க. அதனால அதை மட்டும் சொல்லுங்களேன்” வேதன்.

“ஆமா… இனி திரும்ப எங்களை அந்த இடத்துக்குக் கூட்டிட்டு போக மாட்டீங்கங்கிறது எங்க கணிப்பு. அதனால அது என்ன இடம்னு கொஞ்சம் சொல்லுங்களேன். ஒரே பனியா இருந்துச்சு” சித்திரன்.

விதவிதமாக அவனிடம் கேட்டுப் பார்த்தனர்.

“ரொம்ப குளிருச்சோ? அப்ப ஊட்டியா இருக்கும்” என்று நக்கலடித்தான் அவன்.

“ப்ரோ.. விளையாடாதீங்க.. ஒரே வெள்ளையா இருந்துச்சு. காஷ்மீரா?” ஆரு.

“ஆமா.. காஷ்மீர்ல உள்ள தீவிரவாதிக்கு உங்களை விக்க போறோம். அதான் நல்லா சாப்பாடு போட்டு கூட்டிட்டுப் போறோம்” என்று கூறியதும்‌ அனைவருக்கும் திக்கென்றிருந்தது.

மது அவர்களை சும்மா இருக்கும்படி கண்களால் கட்டளையிட்டாள். ஆனால் யாரும் கேட்பது போல் இல்லை. திருநல்லன் இவை எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவன் கூறிய பதிலைக் கேட்டு அரண்டுபோன ரெட்டையர்கள் வாயை மூட்க்கொண்டனர்.

மற்ற மூவரும் தொடர்ந்தனர்.

“ஆமா.. தீவிரவாதிக்கிட்ட விக்கிறதுக்கு பொன்னுகளைக் கடத்துனா அதில் நியாயம் இருக்கு” தணிகை.

“டேய்.. பொன்னுங்களைக் கடத்துறது நியாயமா?” நேரு.

“சரி.. சரி..‌ நீ சண்டைக்கு வராத. பொன்னுங்களைக் கடத்தினா ஒரு காரணம் இருக்கு. எங்களை ஏன் கட்ததுனீங்க” என்று சிரித்துக் கொண்டே வினா எழுப்பினான் தணிகை. கண்டுபிடித்துவிட்டானாம். மூளை வேலை செய்துவிட்ட பெருமை.

“அதான.. ஆம்பளைங்களைக் கடத்தி என்ன செய்யப் போறீங்க” வேதன்.

“ரேப் பண்ணப் போறோம்” நெடியவன்.

“என்னது….?” என்றனர் ஒன்றாக.

“ஆமா.. இப்போ‌ உங்களை மாதிரி ஆம்பளைங்களுக்கும் டிமாண்ட் அதிகமா இருக்கு.”

“ச்சீ…‌ இதெல்லாம் ஒரு பொழப்பா?” வேதன்.

“ஆமா…இவரையுமா?” என்று திருநல்லனை காண்பித்தான் தணிகை.

அந்த நெடியவனுக்கும் சிரிப்பு வந்திருக்க வேண்டும். இதழ்கடையில் அரும்பிய மென்னகையை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டான்.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் தெரிஞ்சிடும்” என்று கூறி எழுந்து சென்றான்.

“சார்..‌‌ நீங்க இன்னும் பதிலே சொல்லல?” என்ற நேருவை அனைவரும் அலுப்புடன் பார்த்தனர். மீண்டும் முதலிலிருந்தா என்று.

“நாங்க இருந்த இடத்தோட பேரு மட்டும் சொல்லிட்டுப் போங்க.”

“வடதுருவம் பக்கத்துல ஒருநாட்டில் இருந்தீங்க” என்று கூறிவிட்டுச் சென்றான்.

“எந்த நாடு?” ஆரு.

“மூளையிருந்தா கண்டுபிடி” என்று கூறிவிட்டுச் சென்றான்.

இப்பொழுது மீண்டும் குழப்பம் மட்டுமே மிஞ்சியது. இது என்ன அனைத்தும் அவர்களின் கற்பனைக்குக் கூட எட்டாத விஷயமாக இருக்கிறது. வடதுருவம் செல்வது சாதாரண காரியமில்லை. எவ்வளவு பொருட்செலவு செய்ய வேண்டும். எத்தனை இடத்தில் அனுமதி வாங்க வேண்டும். இவன் திருச்சிக்கும் சென்னைக்கும் சென்று வருவது போல் கூறுகிறான். உண்மையில் வடதுருவத்தில்தான் கடத்தி வைத்திருந்தனரா? இவ்வளவு பொருட்செலவு செய்கிறார்கள் என்றால், இதனால் இவர்களுக்கு கிடைக்கப்போகும் ஆதாயம் எத்தகையதாக இருக்கவேண்டும்.

“இதுக்கு இவன் சொல்லாமலே போயிருக்கலாம்” தணிகை.

“எனக்கு வடதுருவம் எங்க இருக்குன்னு கூட தெரியாது” வேதன்.

“எனக்கும் தெரியாது.‌ மேப்ல கூட பாத்தது இல்லை” சித்திரன்.

“ஒரு க்ளுனா அதை வச்சு ஏதாச்சும் கண்டுபிடிக்கிற மாதிரி இருக்கணும். இந்த பனங்கா மண்டையான் குடுத்த க்ளூல மண்டை வெடிச்சிரும் போல” இரட்டையர்.

சற்று நேரம் கழித்துத் திரும்பி வந்தான். ப்ளாஸ்தரை எடுத்துவந்து அனைவரின் வாயிலும் ஒட்டினான். திருநல்லனுக்கும் மதுவுக்கும் ஒட்டவில்லை.

“இனி போய் சேரும்வரை எதுவும் பேசக்கூடாது” என்று எச்சரித்துவிட்டுச் சென்றான் நெடியவன்.

சில மணிநேர பயணத்திற்கு பின் விமானம் தரையிறங்கியது. மீண்டும் கண்கள் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

“எதுக்குடா கண்ணக் கட்டுறீங்க. நீங்க சும்மாவிட்டாலே எங்களால தப்பிச்சு போக முடியாது. இந்தியா மேப்ல கூட தெரியாத வடதுருவத்திலேந்து எங்குட்டு தப்பிச்சுப் போறது” தணிகை.

“எருமைமாடு.. வடதுருவம் இந்தியால இல்லை. அது உலகத்தோட வடதுருவம். உலக உருண்டைல அடிப்பகுதில இருக்கும்” ஆரு.

“எது எப்படியோ? இந்தியாவும் உலகத்துல இருக்கு. அந்த துருவமும் உலகத்துல இருக்கு. மனிஷன நிம்மதியா பொலம்பவாச்சும் விடு. தள்ளிப் போ” என்று அவன் கூறி முடிக்க அனைவரின் விழிகளும் கட்டி முடிக்கப்பட்டது.

பின் வளைந்து நெளிந்து சென்றது பாதை. அனைவரும் சங்கிலத்தொடராய் கைகளைப் பிணைத்துக்கொண்டு நடந்து சென்றனர்.

அதன்பின் குறிப்பிட்ட இடத்தை அடைந்த பின்னர் கண்கட்டுகள் அவிழ்க்கப்பட்டது. அனைவரின் மனமும் திக்திக்கென்று அடித்துக் கொண்டது. எழுதிய பரீட்சையின் முடிவுகள் வரும் தருணம் நோக்கிக் காத்திருந்தனர். விழிகளைத் திறந்துவிட்டால் எதற்காக கடத்தப்பட்டோம் என்ற காரணம் தொரிந்துவிடும் என்று நினைத்தனர்.
ஆனால் விழிகள் திறந்தால் மீண்டும் ஒரு வெற்று அறை. இருக்கைகள் தவிற அந்த அறையில் ஒன்றும் இல்லை.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் காப்பியன் சார் வந்து எல்லாத்தையும் சொல்லுவாறு” என்று கூறிவிட்டு சென்றான்.

“எனக்கு தலை சுத்துது… அந்த காப்பிய கொஞ்சம் சீக்கிரம் தந்தா நல்லாருக்கும்” தணிகை.

“டேய்.. அது யாரோ சாராம்” ஆரு.

“ஐயோ.. இப்படி சஸ்பென்ஸ் வச்சு கொல்றாங்களே..” வேதன்.

“இங்க அடைச்சு வச்சு சாப்பாடு போடப் போறாங்களோ?” நேரு.

“போரடிக்காது?” தணிகை.

“யாருக்கு?” நேரு.

“கடத்துனவனுக்குதான்.. சும்மா இடத்தை மாத்தி அடைச்சு வச்சு சோறு போட” தணிகை.

அனைவருக்குமே பொறுமை காற்றில் பறந்துவிட்டது. இது என்ன அடுத்தடுத்து முடிச்சுகள் இட்டுக் கொண்டே போகிறார்களே என்று.

இன்றுவரை யாராலும் தங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையா என்ன என்று பலவாறு குழம்பித் தவித்தாள் மது. கணியால் இன்னுமா கண்டுபிடிக்க முடியவில்லை என்று மனதிற்குள் மறுகிவிட்டாள். தாய்க்குண்டான சோர்வு வேறு அவளை ஆட்கொண்டது. அவள் அப்படித்தான் நினைத்திருந்தாள். ஆனால் உண்மை அதுவல்ல.  உண்மையில் அவளுக்கு அதீத சோர்வு இல்லை என்றே கூறலாம். மனச்சோர்வால் வந்த உடல் சோர்வேயன்றி அது வேறு காரணங்களால் அல்ல. ஏனெனில் உடல் களைப்படையும்படி எந்தவொரு காரியமும் செய்யவில்லை. உணவும் நல்ல சத்தான உணவுவகைகள். அவள் சமைத்து உண்டிருந்தால் கூட இப்படி உண்டிருப்பாளா என்பது கேள்விதான். தாய்மைக்குண்டான வாந்தியோ மயக்கமோ அவளுக்கு அதிகமாக இல்லை. மற்றவர்களைப் போலவே வளைய வந்தாள்.

அனைவரும் காப்பியனுக்காகக் காத்திருந்தனர்.

ஆரல் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்