Loading

      பேச வேண்டும் என்று கூறி கிளம்ப இருந்தவனை நிறுத்திவிட்டோம் ஆனால் எப்படி பேசுவது எதிலிருந்து தொடங்குவது என்ற யோசனையும் தயக்கமுமாய் அழகி நின்றிருந்தாள்.

 

      அவளின் தயக்கம் கதரவனின் குறுஞ்சிரிப்பை மேலும் விரிய செய்தது.

 

    “என்ன மா? என்கிட்ட பேச இவ்வளோ யோசிக்கிற? நீ எதுவேணாலும் தயங்காம என்கிட்ட பேசலாம். ஏன் திட்டலாம் அடிக்கலாம் அதுக்கான உரிமை முழுக்க உனக்கு மட்டும் தான் இருக்கு. இவ்வளவு ஏன் இப்ப போடா நாயேனு நீ கழுத்த புடிச்சு வெளில கூட தள்ளலாம். ஆனா காலைல உன் கண் முன்னாடி வந்து நிப்பேன். நீ என்னை என்ன சொன்னாலும் நான் உன்கிட்ட தான் திரும்பி வருவேன். அது மட்டும் எப்பவும் நினைப்புல வச்சுக்கோ.” என்று அவன் சிறு சிரிப்புடனே கூறினாலும் அவன் உதிர்த்த சொற்களில் இருந்த உறுதி அழகிக்கு கலக்கத்தை கொடுத்தது.

 

    “கதிர்! வேணாம் கதிர். இப்படி நீ பேசறதாலயோ இல்ல எப்பவும் என் பின்னாடி வர்றதாலயோ என் மனசு மாறாது. அதி குட்டிய பழைய மாதிரி மாத்த நீ முயற்சி பண்றன்றதுக்காகலாம் என் முடிவு மாறாது. எனக்காக காத்திருந்தா தேவையில்லாம நீ தான் ஏமாந்து போவ. என்னைக்குமே நான் மாற மாட்டேன். இதை நீ எப்பவும் ஞாபகம் வச்சுக்கோ.” என்று அழகியும் உறுதியோடு கூறினாள்.

 

    அழகியின் பேச்சை கேட்ட கதிர் கலகலவென்று சிரிக்க, அழகிக்கு தான் திடீரென்று இவனுக்கு என்னவானது என்ற யோசனை. “ஒருவேளை முத்திடுச்சோ?” என்றவள் குழப்பமாக அவனை பார்த்துக் கொண்டிருக்கையில் கதிரவனின் சிரிப்பு மெல்ல அடங்கி, அவளை பார்த்தான்.

 

     “அழகி மா நான் உன்னை என்னவோனு நினைச்சேன். ச்ச போ. உன் மனச மாத்த தான் அதி குட்டிய எங்கனு சொல்லாம ஒரு வாரமா கூட்டிட்டு போய் வந்தேன்னு நினைச்சியா? அதி மேல உனக்கு எவ்வளோ அன்பும் அக்கறையும் இருக்கோ அதே அளவு எனக்கும் இருக்கு. அதி எனக்கும் பையன் தான். என் பையன சரி செய்ய நான் என்ன செய்யணுமோ அதைதான் செஞ்சிக்கிட்டு இருக்கேன். மத்தபடி இதுனால உன் மனசு மாறும்னுலாம் நான் கப்பித்தனமா யோசிக்கல.” என்று குறுநகை புரிந்தவனை என்ன சொல்வதென்று தெரியாது அழகி வாயடைத்துப் போனாள்.

 

     “நீ பேசணும்னு சொன்னது இவ்வளோ தானா இல்லை வேற எதாச்சும் இருக்கா? இல்லைன்னா நான் கிளம்புவேன்.” என்று கேட்ட கதிரவனுக்கு அழகியின் தலை அனிச்சையாக இல்லை என்று ஆட, அவன் உதட்டில் குறுஞ்சிரிப்பு உறைந்தது.

 

     “சரி அழகி மா! அப்ப நான் கிளம்பறேன். கதவை மறக்காம தாழ் போட்டுக்கோ. நல்லா தூங்கு அப்ப தான் கனவு வரும். கனவுல நானும் வருவேன். ஓகே குட் நைட் செல்லம்! ஹேவ் ஏ கதிர் ட்ரீம்!” என்றவன் கண்சிமிட்ட, அதுவரை வாயடைத்து நின்றிருந்த அழகிக்கு சுர்ரென்று கோபம் உச்சிக்கு ஏறிடவும்,

 

    “டேய்! ச்ச. கிளம்பு டா சாமி நீ முதல்ல.” என பல்லைக் கடிக்க, அவன் சிரித்து, கண்ணடித்து அவளை வேண்டுமென்றே வெறுப்பேற்றி விட்டு கிளம்பினான்.

 

    அவளோ மிளகாயை கடித்தவள் போல் முகத்தை உர்ரென்று வைத்து உள்ளுக்குள் அவனை தாளித்துக் கொண்டிருந்தாள். வாசல் வரை சென்ற கதிரவன், திரும்பி கடுகு வெடிக்கும் அவளின் முகத்தை கண்டு குறும்பாய் புன்னகைத்து,

 

    “அப்பறம் அழகி மா ஒரு விஷயம்.” என்றான்.

 

    “என்ன?” என அவள் எரிச்சலாய் கேட்டாள்.

 

    “நான் ஏமாந்தெல்லாம் போக மாட்டேன். எப்படினு உன்னை நீயே கேட்டுக்கோ பதில் கிடைக்கும்.” என்று தெளிவாய் அவளை குழப்பிவிட்டு, “பை செல்லம்! மாமா காலைல வரேன். அதுவரை பத்திரமா கதவை பூட்டிக்கோ.” என கண்ணடித்து விட்டு விசிலடித்தபடியே சென்றான்.

 

    அவனை எரிச்சல் மண்ட பார்த்தவள் வேகமாக கதவை சாற்றி தாழிட்டு வந்து கூடத்திலிருந்த இருக்கையில் அப்படியே அமர்ந்தாள். அவன் மேல் எழுந்த கோபம் ஒரு புறம் இருந்தாலும் கடைசியாய் அவன் கூறிச் சென்ற வார்த்தைகள் அவளை குழப்பத்தில் ஆழ்த்தின.

 

     ” லூசு. இவன தான் ஏத்துக்க போறதேயில்லன்ற முடிவுல இருக்கேனே. அப்புறம் எப்படி என்கிட்ட பதில் கிடைக்கும்? ஆமா நான் ஏன் அவன ஏத்துக்க போறதில்லைனு சொல்லணும். அப்போ…. ஐய்யோ ச்ச! தெளிவா குழப்பிட்டு போய்ட்டான் கிறுக்கு பைய. அழகி வேணாம் அழகி அவன் நீ குழம்பணும்னே சொல்லிட்டு போய்ருக்கான். இதை பத்தி ரொம்ப யோசிக்காம ரெண்டு வருஷம் முன்னாடி எடுத்த முடிவுல மட்டும் தெளிவா இரு. நீ அவன் பேசுறதுக்கெல்லாம் கோவப்பட்டு ரியாக்ட் பண்றதால தான் அவன் ஏதேதோ சொல்லி உன்னை குழப்பி விட்றான். சோ அவன்கிட்ட பேசறத அவாய்ட் பண்ணு. அது தான் நல்லது. ஆமா அது தான் கரக்ட்.” என்று தனக்கு தானே வாய்விட்டு கூறிக் கொண்டவள், எழுந்து உறங்கும் அதிரனுக்கு போர்வை போர்த்திவிட்டு தானும் உடை மாற்றி வந்து அதிரனை அணைத்தபடி படுத்தாள்.

 

       ஆதவனின் கதிர் ஊடுருவ முடியாதபடி பனி படர்ந்திருந்தது. அழகி வழக்கம்போல் வீட்டிற்கு அருகில் இருக்கும் குன்றின் மீது நின்று ஆதவனின் உதயத்தை பார்த்திருந்தாள். அவளுதட்டில் புன்னகை உறைந்திருந்தது. குளிருக்கு இதமாக அவள் சால்வையை இழுத்து போர்த்த முனையும் முன் பின்னிருந்து நீண்ட இருகரம் அதனை செய்து முடிந்திருந்தன. செயலை செய்தது யாரென்று அறிந்ததினால் அவள் உதட்டில் உறைந்திருந்த புன்னகை மலர்ந்து விரிந்தது. சால்வையை போர்த்திய கரங்கள் பின்னிருந்து அவளை அணைக்க, அவள் முகம் மலர்ந்து சிறு நாணம் துளிர்க்க, மெல்ல தலையை திருப்பி குறுஞ்சிரிப்போடு அவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைத்த கதிரவனை கண்டாள். செல்லமாக அவன் நெற்றியில் முட்டி அவள் சிரிக்க, அவனும் மெல்லிய சிரிப்பை உதிர்த்தான். அவள் கரம் உயர்ந்து அவனது பின்னந்தலையை கலைத்து விளையாட, அவன் அவளின் மூக்கோடு மூக்குரசினான். இருவரையும் அழைத்தபடி ஓடி வந்த அதிரனை கண்டு இருவரும் விலகி நின்று அதிரனை பார்த்து சிரித்தனர். ஓடி வந்த அதிரனை கதிரவன் தூக்கிக் கொள்ள, அழகி அதிரனை கொஞ்ச, பின் மூவரின் விழிகளும் செம்மஞ்சளாய் எழுந்த ஆதவன் மீது படிந்தது. புன்னகையோடு அழகி கதிரவனின் தோளில் சாய, திரும்பி புன்னகைத்தை கதிரவன் மேடிட்டிருந்த அவளது வயிற்றில் ஒரு கரம் பதிக்க, அவன் கரத்தின் மேல் அழகியும் ஒரு கரம் பதிக்க, இருவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தபடி நின்றனர்.

 

      உறங்கிக் கொண்டிருந்த அழகி அரண்டு எழுந்து அமர்ந்தாள். அத்தனை குளிரிலும் அவள் நெற்றியில் சில வியர்வை முத்துக்கள் தோன்றியிருந்தன. இதயம் படபடவென துடிக்க, நெற்றி வியர்வையை மெல்ல துடைத்தவள் அருகில் மேசை மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முழுதும் குடித்து முடித்தாள். தன் கைப்பேசியை எடுத்து பார்க்க காலை ஐந்து என்ற நேரம் கண்டு அவளுள் கலக்கம் பிறந்தது.

 

      விடியற்காலையில் என்ன கனவு இது? என்று சற்றே எரிச்சல் தோன்றினாலும் மனதுள் இனம்புரியாத அச்சம் தோன்றி அச்சுறுத்தியது. அவன் ஏன் கனவில் வந்தான்? என்ற எண்ணம் இயலாமையாய் மாறி அவளை சுட்டது. அதுவும் அதில் தான் அவனை கண்டு மகிழ்ந்தது சிரித்ததெல்லாம் ஏன்? என்ற பெரும் வினா எழுந்து அவளைக் குழப்பியது. இறுதியாய் கனவில் தன் வயிறு மேடிட்டிருந்ததே! அப்படியென்றால் தான் கர்பமாக இருந்தோமா? என்று தோன்றிய நொடி அவள் திகைத்தாள். முதன்முறையாக தன் வைராக்கியம் தகர்த்தெறியப்படுமோ என்கிற பயம் அழுத்தமாக உள்ளத்தில் தோன்றியது. இல்லை அது மட்டும் நடக்கவே கூடாது என்று அவளை எவ்வளவு திடப்படுத்தினாலும் நிஜம் போன்றே இருந்த கனவு மீண்டும் மீண்டும் நினைவு வந்து அவளை தளரச் செய்தது.

 

     கனவு தான் என்றாலும் அவனது ஸ்பரிசமும் தீண்டலும் இப்பொழுதும் உடலில் ஒட்டியிருப்பது போன்ற மாயை தோன்றிட, அவசரமாக போர்வையை எடுத்து கையையும் முகத்தையும் அழுந்த துடைத்தாள். பின் தன் செய்கையை எண்ணி தன்னை தானே நொந்துக் கொண்டு அயர்ந்து அமர்ந்தவளுக்குள் குழப்பமும் பயமும் மாறி மாறி தோன்றி அவளை தளரச் செய்தன. அதன்பிறகு அவளுக்கு உறக்கம் வருவேனா என்றது. என்ன தான் பயமும் குழப்பமும் மேலிட்டாலும் உள்ளத்தின் ஓர் ஓரமாய் அக்கனவை நினைத்து சிறு மகிழ்ச்சி தோன்றுவதை அவளால் தடுக்க இயலவில்லை. திரும்பி உறங்கும் அதிரனை கண்டவளின் முகத்தில் அப்பட்டமான கலக்கம் தென்பட்டது. அப்படியே குழப்பத்தோடும் யோசனையோடும் அமர்ந்து விட்டாள்.

 

      நேரம் விரைந்தது. தன் வேலைக்கும் அதிரனின் பள்ளிக்கும் நேரமாவதை கூட உணராமல் திக்பிரம்மை பிடித்தவள் அமர்ந்திருந்தவளை வீட்டின் அழைப்பு மணி உணர்வு பெறச் செய்தது. திடுக்கிட்டு விழித்தவள் மணியை பார்க்க, அது ஏழு என்றிருக்கவும் இவ்வளவு நேரம் அமர்ந்துவிட்டோமா?! என தன்னை தானே நொந்துக் கொண்டு அவசரமாக எழுந்து முகத்தை அழுந்தத் துடைத்து கதவைத் திறக்கச் சென்றாள். அவள் கதவை திறப்பதற்குள் இரண்டு முறை அழைப்பு மணி ஒலித்து ஓய, “வரேன்.” என்று சத்தமிட்டபடியே கதவைத் திறந்தவள் திகைத்து நின்றாள். அவளை பார்த்து புன்னகைத்த கதிரவனோ,

      

     “குட் மார்னிங் அழகி மா! இன்னும் அதி தூங்கறானா?” என்று கேட்டபடியே வீட்டிற்குள் நுழைந்து அதிரனை தேடிச் செல்ல, அகவழகி செல்லும் அவனையே பிரம்மைப் பிடித்தவள் போல் பார்த்திருந்தாள். அவள் இதயம் பயத்தில் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. 

வருவாள்….

 

 

 

    

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்