ஆழாக்கு அன்பு..
உழக்கு பயம்..
குப்பி தெளிவு..
மில்லி வஞ்சம் ஒன்றாய் குழைத்து மனமெனும் பிண்டம் பிடித்தான் இறைவன்!!! மனிதம் வாழ்ந்தது!கொஞ்சம் அறிவின் செறிவு உபரியாய் ஊற்றெடுக்க, மனதின் வஞ்சம் முகந்தளக்க, அளவீடு இல்லாமல் திகைத்தானோ?
நற்பவியின் இந்த கேள்விகள் கீதனை எரிச்சலூட்டியது. வீட்டில் எந்த ஒரு துப்பும் அவளுக்கு கிடைக்கவில்லை ஒன்றைத் தவிற. அதனால் அதைப் பற்றிய விசாரணைகளை முன் வைத்தாள் கீதனிடம்.
“மேம்.. நீங்க தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்றீங்க.. அப்படி ஒருவேளை நிரைண்யாவுக்கு என்னால ஆபத்து இருந்துச்சுன்னா, நான் ஏன் உங்களைத் தேடி வரணும்..” என்று அழுத்தமாக வினவினான்.
“ஒரே ஒரு காரணம்தான்.. உங்க மேல சந்தேகம் வரக்கூடாதுன்னு இப்படி செய்யலாமே..”
“நற்பவி.. கீதனைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவன் தப்பான ஆள் இல்லை..” என்று சிவா வலியுறுத்திக் கூற, நற்பவி அவனை அலட்சியப் பார்வைப் பார்த்தாள்.
“சிவா.. இது என்னோட வேலை.. இதுல நீங்க யாரும் தலையிடக்கூடாது. அதை நான் விரும்பவும் இல்லை. நீங்க எங்கிட்ட உதவி கேட்டதால, உங்க மேல சந்தேகப்படக்கூடாதுன்னு ஏதாவது ரூல் இருக்கா என்ன? நான் பல கோணத்தில் யோசிக்கணும். கடிவாளம் கட்டின குதிரை மாதிரி போக முடியாது” என்று அழுத்தம் திருத்தமாக கூறினாள் நற்பவி. எட்டி நில்.. என்று எச்சரிக்கை செய்வதுபோல் இருந்தது.
“இல்ல நற்பவி.. நான் எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்..” என்று சிவாவின் குரல் உள்ளே சென்றது.
“சரி.. மிஸ்டர் கீதன்.. இப்போ சொல்ல முடியுமா இது என்னனு?” என்று அவள் கையில் இருந்த காகிதத்தை அவன் முன் நீட்டினாள்.
“இது… கொஞ்ச நாள் முன்னாடி நாங்க ஒரு மனநலமருத்துவரை பார்த்தப்போ அவர் கொடுத்த ப்ரிஸ்க்ரிப்ஷன். நிரண்யாவுக்கு ஒரு ஃபோபியா இருந்துச்சு.. ஜீனோ ஃபோபியா.. அவெர்ஷன் டுவேர்ட்ஸ் பிசிக்கல் ரிலேஷன்ஷிப்.. அதனால் டாக்டரைப் பார்த்தோம்..” என்று திக்கித் திணறி கூறி முடித்தான்.
“ம்ம்ம்.. நீங்க ரெண்டு பேரும் புதுமனத் தம்பதிகள். ஆனா மனைவிக்கு தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லை…” என்று இழுத்தவள், “நீங்க நிரண்யாவை கட்டாயப் படுத்தியி
ருக்கீங்களா?” என்று அவள் முடிக்கவில்லை, கீதன் எரிச்சலுற்றான்.“வாட்…?” என்று அதிர்ந்தவன், “வாட் கைண்ட் ஆஃப் குவெஸ்டின் ஈஸ் திஸ்? அண்ட் இன் விச் வே, இட் ஈஸ் ரிலேடட்?” என்று அதிர்ச்சியுடனும் கோபத்துடனும் வினவினான்.
“இது ரொம்ப முக்கியமான கேள்வி. உங்களுக்கு மனதை கீரி விடலாம். ஆனா கொஞ்சம் ஒத்துழைச்சா நல்லாருக்கும்” என்று பொறுமையாக அவள் கூற, கீதன் சற்றே சலிப்புடன் பதிலுரைத்தான்.
“இல்லை.. நான் அவளை ஃபோர்ஸ் பண்ணதில்லை. அதுக்காகத்தான் அவளை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனேன்” என்றான்.
பின் அடுக்களையை சென்று ஆராய்ந்தாள். அங்கு நண்டு சமைத்து வைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்தவள், “கீதன், உங்க மனைவிக்கு நண்டு ரொம்ப பிடிக்குமோ..” என்றாள்.
“இல்லை.. பிடிக்கவே பிடிக்காது..” என்றான் கவலையும் வருத்தமுமாக.
“அப்புறம் எப்படி சமைச்சிருக்காங்க.. யாராவது வீட்டுக்கு வந்திருக்க வாய்ப்பு இருக்கா.. அவுங்களுக்கு பிடிச்சதை உங்க மனைவி சமைச்சிருக்கலாம் இல்லையா..?”
“இல்லை.. அவளுக்கு பெருசா இங்க யாரையும் தெரியாது.. ஆனா இது ஏன் சமைச்சான்னு தெரியலை..”
“அவுங்களுக்கு பாஸ்ட் லவ் ஏதாச்சும்..”
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை..”
“நல்லா யோசிச்சு சொல்லுங்க.. அதனால கூட, அவுங்க உங்களுடனான வாழ்வை நிராகரிச்சிருக்கலாம்” என்று கூற, நிரண்யாவின் அலைபேசியை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“எனக்கு தெரிஞ்சு எதுவும் இல்லை.. நான் அவளை நம்புறேன். நீங்க உங்களுக்கு சந்தேகம் இருந்தா இதுல பார்த்து தெரிஞ்சுக்கோங்க” என்று கொடுக்க, அவள் அதை வாங்கி சில நிமிடங்கள் ஆராய்ந்தாள்.
“சரி.. வாங்க.. சீ.சீ. டீவி ஃபூட்டேஜ் பார்க்கலாம்” என்று இருவரையும் அழைத்துச் சென்றாள். குடியிருப்பின் வாயிலில் இருந்த சீ.சீ.டீவி பூட்டேஜ் அறைக்கு சென்றனர் மூவரும். குடியிருப்பின் காவலனிடம் சில வினாக்கள் வினவியபின், ஒளித்திரையில் தெரியும் பிம்பங்களை ஆராய்ந்தாள்.
கீதன் நிரண்யாவிடம் கடைசியாக பேசிய நேரத்தில் தொடங்கி, அனைத்து பதிவுகளும் அலசப்பட்டது. ஆனால் ஒன்றும் புலப்படவில்லை. அதற்கு முன்பும் உள்ள பதிவுகளையும் அலசி ஆராய்ந்து விட்டனர். யாரும் சந்தேகப்படும்படி உள்ளே வரவும் இல்லை. வெளியே செல்லவும் இல்லை. காய் வாங்க அவள் இருமுறை கீழே இறங்கி வந்திருக்கிறாள். நாலாவது தளத்தில் இருக்கும் ஒரு பெண்மணியின் வீட்டிற்கு ஒருமுறை சென்றிருக்கிறாள். ஒருமுறை அவளின் எதிர்வீட்டை சற்று நேரம் நின்று பார்த்தாள். அதுவும் மிக சில நொடிகளே.
“கீதன்.. இந்த நாலாவது மாடில உள்ள வீட்டில் போய் செக் பண்ணலாம்..” என்று நற்பவி கூற, மூவரும் நாலாவது தளத்திற்கு சென்றனர். அங்கு வீட்டில் யாரும் இல்லை. வீடு புட்டப்பட்டிருந்தது.
சரியென்று மீண்டும் ஆறாவது தளத்திற்கு சென்றனர். எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. தொடக்கப் புள்ளியில் மீண்டும் வந்து நின்றனர்.
“கீதன்.. இந்த தளத்தில் யாரெல்லாம் இருக்காங்க. பெருசா ஆளுங்க இருக்க மாதிரி இல்லையே..” நற்பவி.
“தெரியல மேம். இங்க மொத்தமா ஒரு நாலு குடும்பம் இருப்போம். ஆனா எல்லாருமே வேலைக்குப் போறாங்க. இப்போதான் இந்த தளத்தில் இருந்த வீடு எல்லாம் வேலை முடிஞ்சிருக்கு. இனிமேதான் ஆளுங்க வரணும்..” என்று விளக்கம் அளித்தான் கீதன்.
கீதனின் எதிர்வீட்டைப் பார்த்தாள் நற்பவி. அது கொஞ்சம் பழைய வீடாக இருந்தது. இப்பொழுது தான் இந்த தள வீடுகள் முடிந்திருக்கிறது என்று கீதன் கூறிய கூற்றைக் கண்டு பல்லிளித்தது. யாருமே இல்லாத தளத்தில், இங்கு நின்று நிதானித்து இந்த வீட்டை ஏன் நிரண்யா பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது நற்பவிக்குள்.
“கீதன், இந்த வீட்டில் உள்ளவுங்களோட உங்க மனைவிக்கு பழக்கம் இருக்கா? இந்த வீட்டில் யார் இருக்கா? இந்த வீட்டை ஏன் உங்க மனைவி ஒரு நிமிஷம் நின்னு பார்க்கணும்?” என்று நற்பவி வினவ, அவன் உதட்டைப் பிதுக்கினான்.
“நற்பவி.. ஒரு வீட்டைத் திரும்பி பாக்குறது ஒரு தடையமா? இந்த வீடு நல்லாருக்கு, இந்த வீடு பழசாயிருக்கு, இல்ல அவுங்களுக்கு வேற ஏதாவது யோசனைல பார்த்திருக்கலாம். இப்படி ஆயிரம் காரணங்கள் இருக்கும் போது, அதுக்கு எப்படி பதில் சொல்ல முடியும்” சிவா. அதே குழப்பத்துடன் கீதனும் நற்பவியைப் பார்த்தான்.
“நிரண்யா வீட்டிலிருந்து கிளம்பி கீழே போயிருக்காங்க. ஏதோ வேலையாக கீழ போயிருக்கணும். அவுங்க திரும்பி லிஃப்ட் ஏறி வர்ற வரை எதையும் எங்கேயும் நின்னு யோசிக்கல. லிஃப்ட்ல ஒரு லேடியோட பேசிருக்காங்க. அவுங்க நாலாவது தளத்தில் இறங்கியிருக்காங்க. படபடன்னு நடையில் வேகத்துடன் நடந்து வர்றவுங்க, சரியா இந்த வீட்டுக்கு முன்னாடி வந்து ஏன் தேங்கி நிக்கணும். இதுக்கு ரெண்டு காரணம் மட்டும்தான் இருக்க முடியும். ஒண்ணு லிஃப்ட்ல பாத்த பொண்ணு இந்த வீட்டைப் பத்தி நிரண்யாவிற்கு ஏதாவது சொல்லியிருக்கணும். இல்லை அவுங்க காரிடர்ல நடந்து வரும்போது, இந்த வீட்டுக்குள்ளேந்து ஏதாவது சத்தம் வந்திருக்கணும். இது ரெண்டுல ஏதாவது ஒண்ணு நிச்சயம் நடந்திருக்கணும்” என்று கூற மற்ற இருவரும் திடுக்கிட்டனர்.
“நாங்க வரும்போது இங்க யாருமே இல்லை மேடம். இந்த ஒரு வாரத்தில் யாராவது வந்திருக்காங்களான்னு தெரியலை மேடம்” என்று அவன் கூற, காலிங் பெல்லை அழுத்தினாள் நற்பவி. ஆனால் இங்கும் எந்த ஒரு அரவமும் இல்லை.
“இந்த வீடு பழைய வீடு மாதிரி இருக்கே?” என்று நற்பவி வினவ, அவன் விழித்தான். அவனும் இதை இப்பொழுதுதான் கவனித்தான்.
“தெரியல மேடம்..”
சிறிது நேரம் முன் இருந்த நிம்மதி காற்றுடன் கலந்திருந்தது.
“ச்ச… எங்க ஆரம்பிச்சோமோ அங்கேயே வந்து நிக்கிறோம்” என்று சலித்துக் கொண்டான் கீதன்.
அவனின் தவிப்பு அவன் மட்டுமே அறிவான். தன் உணர்வுகளுக்கு இடம் கொடுத்தால், ஒருவேளை திறம்பட செயல்பட முடியாதோ என்று அனைத்தையும் தள்ளி வைத்திருந்தான்.
“மிஸ்டர் கீதன்.. இந்த ப்ளாக் செகரெட்டரி நம்பர் வச்சிருக்கீங்களா?” என்று நற்பவி வினவ, அவன் ஆம் என்று தலையசைத்தான்.
“அவருக்கு கால் பண்ணி, அந்த வீட்ல உள்ளவுங்களோட ஃபோன் நம்பர் வாங்குங்க..” என்று கூற, அவனும் அவசரமாக அழைத்து அவரிடம் பேசினான்.
அவர் சொன்ன தகவலில் அதிர்ந்தான் கீதன். அவனின் அதிர்ச்சி மேலிட்ட முகத்தைத் கண்டு மற்ற இருவரும் முகம் சுருக்கினர்.
“என்னாச்சு கீதன்.. ஏதாவது தகவல் கிடைச்சுதா?”
“நாலாவது மாடில உள்ளவுங்களோட நம்பர் அனுப்புறேன்னு சொல்லிட்டாரு. ஆனா இங்க எதிர்த்த வீட்டில் யாரும் இல்லையாம். வீடு காலியா இருக்கு..” என்று அவன் கூற, கீதனின் பதற்றம் ஏன் என்று அவர்களுக்கு விளங்கியது.
“ஒருவேளை அந்த வீட்டில் யாராவது இருந்திருப்பாங்களா..” சிவா..
“யாராவதுன்னா?” கீதன்.
“சந்தேகப்படுற மாதிரி.. கதவை உடைச்சு யாராவது உள்ள போயிருந்தது, நிரண்யா சந்தேகப்பட்டிருக்கலாம். ஏதாவது சத்தம் வந்திருக்கலாம். அதனால் இங்க நின்னு பார்த்திருக்கலாம்” நற்பவி.
“எல்லாமே ஒரு அனுமானம்தானே. எதுவும் உறுதியா சொல்ல முடியாதே” சிவா.
“ஆனா இந்த அனுமானம் உண்மையாகும் சாத்தியக்கூறுகள் அதிகம் சிவா.”
கீதனின் இதயம் படபடத்து அடங்கியது. அவளைத் தனியே விட்டுச்சென்றது பெரும் தவறு என்று தன்னையே நொந்து கொண்டான். ஆனால் துவண்டு விழும் நேரம் இது இல்லையே. அவன் விரயமாக்கும் ஒவ்வொரு நொடியும் நிரண்யாவை ஒரு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் துவளாதே மனமே.. அவளைக் கண்டறிய உடலுக்குத் தேவையான உயிர் ஆற்றலைக் கொண்டு என்று தன்னையே திடப்படுத்திக் கொண்டான் கீதன்.
அந்த வீட்டின் உரிமையாளர் எண்ணை கண்டுபிடித்து அனுப்பினார் செகரெட்டரி. அவருக்கு அழைத்துப் பார்த்தான். ஆனால் அழைப்பை ஏற்கவில்லை மறுபுறம். ஏனோ அனைத்தும் மர்மமாகவே இருந்தது.
திகையாதே மனமே!