Loading

“என்னங்க!” என்று அதிர்ந்தவள் சுதாரித்துக் கொண்டு அவனை நெருங்குவதற்குள், கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றான்.

யார் செய்த புண்ணியமோ அதற்குள் மனைவியின் கைகள் வேகமாக அவனைப் பிடித்துக் கொண்டது. அறையின் உள்பக்கம் விழுந்தார்கள் இருவரும். இருவரின் விழிகளும் மூடிக்கொண்டிருந்தது பயத்தில். இருவரின் மூச்சுக்களும் வானை தொட்டுவிட்டு மீண்டும் பூமியை தொட்டுக் கொண்டிருந்தது. நடுவில் எரிமலை சீற்றம் போல் எகிறி குதிக்கவும் தவறவில்லை உணர்வுகள்.

அவனை விட அகல்யா தான் அதிக பயத்தில் படுத்திருந்தாள். அடுத்து என்ன என்று யோசிக்க தெம்பில்லை உடலில். கணவனின் அசைவில் தான் எழுந்து அமர்ந்தாள். பயம் அகலாத முகத்தோடு மூச்சு வாங்கி அவனைப் பார்க்க, தவறு செய்த குழந்தை தலை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தது.

அவன் இருக்கும் தோற்றத்தில் திட்ட கூட மனம் வரவில்லை அவளுக்கு. எதுவும் பேசாமல் எழுந்து நின்றவள் அவனையும் எழுப்பினாள். கை பொம்மை போல் அவளோடு சென்றவன் மெத்தையில் அமர்ந்தான். இருவரும் எதையும் பேசிக்கொள்ளவில்லை.

“குடிச்சிட்டு வாங்க.” என்று இரு வார்த்தையில் அவன் மௌனமாக வேண்டாம் என்று தலையசைத்தான்.

“அத்தை கேட்டா நான் சமாளிச்சுக்கிறேன். நீங்க கிளம்புங்க.” என்றதும் அவள் முகம் பார்த்தவன் குற்ற உணர்வில் தலை குனிந்து கொள்ள,

“முடிஞ்சா கொஞ்சமா குடிச்சிட்டு வாங்க.” என்றாள்.

“சாரி!”

“எதுக்கு?” அவன் பதில் சொல்லாமல் குனிந்த தலையோடு அப்படியே இருக்க,

“கேட்டதுக்கு இன்னும் பதில் வரல.” என்றாள் அகல்யா.

“உன்ன கஷ்டப்படுத்துனதுக்கு.”

“அப்படி என்ன பண்ணிங்க?”

“உங்கள தான் கேட்கிறேன் தரணி. அப்படி என்ன என்னை கஷ்டப்படுத்தினீங்க.”

“சாரி!”

“என் முகத்தை பார்த்து சொல்லுங்க.” என்றாள். அவன் தலை நிமிராமல் இருக்க, தடையில் கை வைத்தவள் நிமிர்த்தினாள். கண்கள் கலங்கி  நீர் சூழ இருந்தது. ஒரு நொடி அவள் விழிகளை நோக்கியவன் கைகளை தட்டி விட்டு மீண்டும் தலை குனிந்து கொள்ள, தன்னை பார்க்குமாறு தடையில் கை வைத்தாள்.

அவன் தட்டி விட, இவள் நிமிர்த்த என்று நிமிடங்கள் கடந்தது. கோபம் கொண்ட அகல்யா வேகமாக உயர்த்த, அதைவிட வேகமாக கோபத்தில் தட்டி விட்டான். ஒவ்வொரு முறையும் அவள் முகம் நிமிர்த்தும் பொழுதெல்லாம் கண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டே இருந்தது தரணீஸ்வரனுக்கு. அதை உணர்ந்து தான் தன் செயலை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

“எத்தனை தடவ பண்றது ஒழுங்கா என் முகத்தை பாருங்க.” கோபமான வார்த்தையோடு அவள் முகம் உயர்த்த, “சாரி!” என்றவன் தலை கவிழ்ந்து கொண்டான்.

“என்னை பார்த்து சொல்லுங்கன்னு சொன்னேன்.” இந்த முறை விட்டுக் கொடுக்காமல் பலம் மொத்தத்தையும் ஒன்று திரட்டி அவன் முகம் நிமிர்த்த, சிகப்பு நிறத்தில் உருவாகியிருந்த உருவம் நில்லாது  அவன் கன்னம் தொட்டது.

அவள் கைகள் கணவனின் கண்ணீரைத் துடைக்க, வேகமாக இடுப்பை கட்டிக் கொண்டான். அதிர்ந்தவள் கையை விலக்கும் நேரம், “சாரி அகல்! என்னால எல்லாருக்கும் ரொம்ப கஷ்டம். இந்த மாதிரி தினமும் உங்களை சித்திரவதைப் படுத்துறதுக்கு நான் செத்துட்டா எல்லாரும் நல்லா இருப்பீங்க. நான் செத்துப் போறேன். என் அம்மா அப்பாவ மட்டும் நல்லா பார்த்துக்க. என்னால அவங்க ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிட்டாங்க.” என்று தேம்பி அழ ஆரம்பித்தான்.

என்ன செய்வதென்று தெரியவில்லை அவளுக்கு. மூச்சு வாங்க அழுகிறான் என்பதை உணர்ந்தவள் பல உணர்வு போராட்டங்களுக்குப் பிறகு தலையை கோதிவிட்டாள் தன்னோடு சேர்த்து. விசும்பி அழுதவன் மெல்ல தன்னை தைரியப்படுத்தினான் அந்த வருடலில்.

தானாகவே அவளை விட்டு பிரியும் வரை தலை கோதுவதை நிறுத்தவில்லை அகல்யா. இப்பொழுது என்ன பேசுவான் என்ற சங்கடத்தோடு அவள் அவன் முகம் நோக்க, அப்படியே மெத்தையில் சாய்ந்தான். கைகள் இரண்டும் மீண்டும் நடுக்கம் கொண்டது. என்ன செய்வதென்று தெரியாமல் சுருண்டு படுத்தவன் துடித்துக் கொண்டிருந்தான் உடலை கட்டுப்படுத்த முடியாமல்.

இதற்கு மேலும் அவனைக் கட்டுப்படுத்தினால் சரி வராது என்று உணர்ந்து, “நீங்க குடிக்க போங்க வீட்ல இருக்கவங்க கேட்டா நான் பதில் சொல்லிக்கிறேன்.” என்றாள்.

முதலில் அதை மறுத்தவன் உடல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதை உணர்ந்து, “என் அம்மா கிட்ட சொல்லிடாத. போனதும் உடனே வந்துடுவேன். நீ சொன்ன மாதிரி கொஞ்சமா குடிச்சிட்டு வரேன்.” என்றவன் முகத்தைத்தான் அவள் பயந்து கொண்டு பார்த்திருந்தாள்‌.

கோபம் எதுவும் தென்படவில்லை. அதற்கு மாறாக கிடைக்கக் கூடாத ஒன்று கிடைத்தது போல் ஆர்வத்தோடு கண்கள் விரிந்து… வார்த்தை தடுமாறி மனநிலை சரியில்லாதவர் போல் இருந்தது. அவன் பாவனையில் தலை தானாக ஆட, அப்படி ஒரு சிரிப்பு அவன் முகத்தில்.

ஒரே ஓட்டமாக ஓடி விட்டான் அங்கிருந்து. பின்னால் வந்தவள் அவன் என்ன செய்கிறான் என்று நோட்டமிட, அன்னை அறியாது பூனை நடை போட்டவன் அவர் அறையை கடந்ததும் ஓட்டம் பிடித்தான்.

***

வீட்டிற்கு வந்ததும் வராதமாக தயாளன் மகனைப் பற்றி விசாரிக்க, அகல்யாவிற்கு தூக்கி வாரி போட்டது. என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் முழிக்க, ஆதிலட்சுமிக்கு தெரியாது என்பதால் அறைக்குள் இருப்பதாக தெரிவித்தார்.

இருவரும் அவளோடு சகஜமாக உரையாட அவளுக்குத்தான் பதட்டம் ஏறிக்கொண்டே இருந்தது கணவனை நினைத்து. உடனே வந்து விடுவேன் என்றவன் இரண்டு மணி நேரங்கள் ஆகியும் வரவில்லை. இங்கிருந்து கிளம்பும் போது இருந்த மனநிலையில் இப்பொழுது எங்கு? என்ன செய்து கொண்டிருக்கிறானோ என்ற தவிப்பு அதிகமானது.

சாப்பிட்டு முடித்தவர்கள் மகனை சாப்பிட அழைப்பதாக கூற, கை கால்கள் உதற ஆரம்பித்தது அவளுக்கு. மருமகள் நிலை அறியாது ஆதிலட்சுமி மாடிப்படி ஏற,

“அவரு தூங்கிட்டு இருக்காரு எதுக்கு டிஸ்டர்ப் பண்றீங்க. நீங்க சாப்பாட்டை வைங்க நானே எடுத்துட்டு போறேன்.” என்றாள் பயத்தை மறைத்துக் கொண்டு.

மருமகளின் வார்த்தையில் அதிசயத்தவர் கணவனை பார்த்து புன்னகைக்க, அவரோ மருமகளை ஆச்சரியத்தோடு பார்த்திருந்தார். இருவர் காட்டும் முக பாவனைகளை கவனிக்கும் அளவில் அவள் மனநிலை தெளிவாக இல்லை.

மருமகள் வார்த்தையை மீறும் தைரியம் இல்லாததால் அவர்கள் புன்னகையோடு அங்கிருந்து விடைபெற, கணவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள் அகல்யா. இரண்டு என்ற எண் நான்கு என்று ஆனது அவன் வீட்டை விட்டுச் சென்று. அவனுடைய கைபேசி எண் இல்லாததால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை அவளால்.

இரவு பதினோரு மணிக்கு தள்ளாடி கொண்டு உள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டவள் மாமியார் அறையை பார்த்தாள். அறை கதவு மூடி இருக்கும் தைரியத்தில் கணவனை நெருங்கியவள்,

“இதுதான் நீங்க சீக்கிரமா வர லட்சணமா. போனா போகுதுன்னு அனுப்பி வச்சா  எவ்ளோ டென்ஷன் பண்ணிட்டீங்க.” பொறுமையாக தன் கோபத்தை காட்டிக் கொண்டிருந்தாள்.

“நான் எப்ப வேணா போவ எவ்ளோ நேரம் வேணா கழிச்சு வருவேன். அதைக் கேட்கிற உரிமை உனக்கு இல்லை.” உளறலோடு அவன் வார்த்தைகள் சற்று அதிக சத்தத்தோடு வர,

“சத்தம் போடாம மேல போங்க. நீங்க வீட்ல இல்லங்கற விஷயம் உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாது.” என்றாள்.

“ஏன் தெரியாது? நான் வீட்ல இல்லன்னு நீ சொல்லி இருக்க வேண்டியது தான. என்ன பண்ணிடுவாங்க அவங்க? இந்த தரணி யாருக்கும் பயப்பட மாட்டான்‌.” சட்டை காலரை தூக்கி விட்டவன் நிதானம் இல்லாமல் தடுமாற ஆரம்பித்தான்.

தலையில் அடித்துக் கொண்டு அவனைத் தாங்கியவள், “உன்னை அனுப்பி வெச்சேன்ல எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.” என்று அவனோடு சேர்ந்து மாடிப்படி ஏற முயன்றாள்.

“என்னது என்னை நீ அனுப்பி வச்சியா? நல்ல காமெடி பண்ற. இந்த தரணி யார்கிட்டயும் எப்பவும் பர்மிஷன் கேட்க மாட்டான். அவன் நினைச்சா போவான். அவன் நினைச்சா வருவான். அவன் நினைச்சா குடிப்பான். அவனே ராஜா, மந்திரி, ராணி எல்லாமே.” என்றவன் வார்த்தைகளை கேட்டுக்கொண்டே ஒரு வழியாக அறைக்கு வந்து விட்டாள்.

மெத்தையில் படுத்திருந்தவன் விடாமல் பேசிக்கொண்டே இருந்தான். காதில் ரத்தம் வராத குறையாக கேட்டுக் கொண்டிருந்தாள் அகல்யா. சிறிது நேரம் பேச்சை நிறுத்தியவன் தூங்கிக் கொண்டிருக்க, போன் அடித்தது. மயான அமைதியாக இருக்கும் அறையில் திடீரென்று ஓசை கேட்க, பதறி எழுந்தவள் யார் என்று பார்த்தாள்.

மாமியார் தான் அழைத்து இருந்தார். மகன் சாப்பிட்டு விட்டானா என்று விசாரிக்க, “ம்ம்” என்ற ஓசையை பதிலாக கொடுத்தவள் துண்டித்தாள்.

அவன் சாப்பிடாமல் இருப்பது அறிந்து உணவு எடுத்து வந்தவள் சாப்பிட அழைத்தாள். மயக்கத்தில் இருந்தவன் அதை உணராமல் மீண்டும் பேச துவங்கி விட்டான். இப்படி ஒரு நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்த சுகன்யா மீது கோபம் பிறந்தது மகளுக்கு.

கடினப்பட்டு அவனை அமர வைத்தவள் மடியில் தட்டை வைக்க, எடுக்கும் ஒரு வாயில் ஒரு பருக்கை தான் உள்ளுக்குள் சென்றது. மீதி அத்தனையும் மடிமீதும் கட்டில் மீதும் விழுந்தது. அருவருப்பாக உணர்ந்தவள் இதற்கு மேல் முடியாது என்று பால்கனியில் நின்று கொண்டாள்.

உளறிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த தரணீஸ்வரன், “உன்ன நான் கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாது. எல்லாம் அவனால வந்தது. தங்கச்சி பாவம் தங்கச்சி பாவம்னு என்னை உன்கிட்ட சிக்க வச்சுட்டான். அவன் மட்டும் இப்ப என் கையில கிடைச்சான் அடிச்சே கொன்னுடுவேன்.” என்றான்.

வார்த்தை செவியை அடைந்ததும் திரும்பி பார்த்தாள் கணவனை. அதை அறியாதவன் கடந்த கால வாழ்க்கையை பற்றி பேசிக் கொண்டிருந்தான். தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளுக்கு அதிகம் ஆகியது. அருகில் அமர்ந்தவள்,

“யார சொல்றீங்க? சிவானி கூட எப்படி உங்களுக்கு கல்யாணம் நடந்துச்சு?” மெல்ல பேச்சு கொடுத்தாள்.

முன்னாள் மனைவியின் பெயரில் ஒரு நொடி முகம் மாறியது அவனுக்கு. அதை குறித்து வைத்துக் கொண்டாள். விடாமல் அவனிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருக்க,

“அப்பா அம்மா ஒத்துக்கல.  கல்யாணத்தை இன்னும் ரெண்டு வருஷம் தள்ளி வைக்கலாம்னு சொன்னேன். ஆனா அவ தான் சாகப் போறன்னு பிடிவாதம் பிடிச்சா. அதுக்கு என் கூட இருந்தவனும் ஒத்து ஊதினான். நண்பன் பேச்சைக் கேட்டு தப்பு பண்ணிட்டேன்.” என்றவன் தொடர்ந்தான்….

“இல்ல அவன் எனக்கு நண்பன் இல்ல. அந்த துரோகிய என் வாழ்க்கையில சிக்க வச்ச அயோக்கியன். அவன தான் தேடிட்டு இருக்கேன். கிடைச்சதும் கொன்னுடுவேன்.” என்றான்.

உண்மை தெரியாமல் பாதி பாதியாக கேட்கும் வசனங்கள் அவளுக்குள் ஆர்வத்தை தூண்டியது.

“அம்மா அப்பா மேல இவ்ளோ பாசம் வச்சிருக்க நீங்க எப்படி அவங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிங்க.” மயக்கத்தில் இருப்பவனிடம் பேச்சு கொடுத்து கடந்த காலத்தை தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.

***

படிப்பு முடிந்ததும் ஊருக்கு அனுப்பி வைத்தான் காதலியை. அவளோ விஷயம் கேட்டு மீண்டும் சென்னைக்கு வந்துவிட, அவனின் பள்ளி நண்பன் சூர்யாவை தொடர்பு கொண்டான்.

“மச்சி எங்கடா இருக்க?”
இருவரும் பள்ளி கால  தோழர்கள். சிவானியை காதலித்ததை கூட இவனிடம் தான் முதலில் சொன்னான்.

“அக்காக்கு குழந்தை பிறந்திருக்குடா. அதனால அம்மாவும் அப்பாவும் அமெரிக்காவுக்கு கிளம்புறாங்க. வழி அனுப்ப வந்திருக்கேன்.”

“மச்சி! அக்காக்கு கங்கிராஜுலேசன் சொன்னேன்னு சொல்லுடா.”

“சரி மச்சி” என்றவன் அழைத்ததற்கான காரணத்தைக் கேட்க, “ஒன்னும் இல்ல மச்சி நீ அம்மா அப்பாவ பிளைட் ஏத்தி விட்டுட்டு வா பொறுமையா பேசிக்கலாம்.” என்றான் மழுப்பலாக.

நண்பனின் பேச்சை கண்டு கொண்டவன், “நீ முதல்ல என்ன விஷயம்னு சொல்லு.” என்றான்.

“இல்லடா உனக்கே தெரியும் இப்போ என்ன பிரச்சனை போயிட்டு இருக்குன்னு. சிவா சென்னைக்கு வந்துட்டா. காலேஜ் முடிஞ்சதால அந்த ஹாஸ்டல காலி பண்ணிட்டோம். அதான் அவளை எங்க தங்க வைக்கிறதுன்னு தெரியல.” எனப் பேச்சை நிறுத்த,

“அவள எதுக்கு இங்க தங்க வைக்கிற? ஊருக்கு அனுப்பி விடு.” என்றான் சூர்யா.

“போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறா. அவ வீட்ல தீவிரமா பையன் பார்த்துட்டு இருக்காங்க. காலேஜ்ல இன்னும் வேலை முடியலன்னு சொல்லி கிளம்பி வந்துட்டா. திரும்ப அங்க போனா ஏதாச்சும் பண்ணிடுவாங்கன்னு பயப்படுறா.”

“அது சரி மச்சி. நீ எதுக்காக இவ்ளோ யோசிக்கிற ஒரு நல்ல ஹாஸ்டல்லா பார்த்து சேர்த்து விடு.”

“இதை தான்டா நானும் சொல்லிட்டு இருக்கேன். கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்கவே மாட்றா. நீயாது ஒரு நாளு வார்த்தை சொல்லி புரியவை.  நீ சொன்னா தான் அவ கொஞ்சமாவது கேட்பா.” என்ற நண்பனுக்கு சம்மதமாக பேச தயாரானான் அவனின் காதலியிடம்.

“ஹாய் சிவா! எப்படி இருக்க?” அதுவரை அழுது கொண்டிருந்த சிவானி புன்னகையோடு, “நான் நல்லா இருக்கேன். நீங்க?” நலம் விசாரித்தாள்.

காதலின் புன்னகையைக் கண்டு மனம் நிறைந்தவன் ஒட்டி இருக்கும் கண்ணீரை துடைத்து விட்டான். அவனைத் திரும்பிப் பார்த்தவள் புன்னகையோடு பேச துவங்கினாள் சூர்யாவிடம்.

“இல்ல சூர்யா என்னால திரும்பி ஊருக்கு போக முடியாது. தரணி சும்மாவே கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கான். நான் கூட இல்லன்னா அவனோட அம்மா அப்பா ஏதாச்சும் பேசி மனச மாத்திடுவாங்க. எனக்கு ஒரு முடிவு தெரியுற வரைக்கும் நான் எங்கயும் போக மாட்டேன். நான் ஹாஸ்டல்ல தங்கி இருந்தா கரெக்டான டைம்க்கு போகணும், வரணும். அதையே சாக்கா வச்சு தரணி என்னை அவாய்ட் பண்ணுவான்.”

“அது சரி லவ்வர எங்கயும் தனியா விட கூடாதுன்னு முடிவோட இருக்கு அப்படித்தான!”

“லவ்வர் இல்ல என் புருஷன்.” என்றவள் தரணீஸ்வரனை காதலோடு பார்த்தாள். அவ்வார்த்தை அவனுக்குள் மத்தாப்பாய் புன்னகையை சிதறவிட்டது. இருவரும் விழிகளால் பேசிக்கொண்டு தொலைத் தொடர்பில் இருப்பவனிடம் பேச மறந்தார்கள்.

அவனோ யாரும் பேசாததால் அழைப்பை துண்டித்து விட்டு மீண்டும் அழைத்தான். அசடு வடிந்து ஒருவரை ஒருவர் பார்வையால் கொஞ்சிக் கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

“சரி சிவா… நீ ஹாஸ்டல்ல தங்க வேணாம். என் வீட்ல வந்து தங்கு. அம்மா அப்பா எல்லாரும் வர ஆறு மாசத்துக்கு மேல ஆகும். அதுக்குள்ள உனக்கு சாமர்த்தியம் இருந்தா என் நண்பனை கல்யாணம் பண்ணிக்கோ.”  என்றிட,

“ஆறு மாசம் எல்லாம் ரொம்ப அதிகம் சூர்யா. என் புருஷன இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் பண்ணி காட்டுறேன் பாரு.” என்று கண்ணடித்தாள் தரணீஸ்வரனை பார்த்து.

சூர்யாவின் வீட்டில் தங்க வைக்கப்பட்டாள் சிவானி. நண்பன் வீடு என்பதால் தான் அடிக்கடி இரவில் தங்க ஆரம்பித்தான் தரணீஸ்வரன். இருவருக்கும் துணையாய் நின்றான் சூர்யா. சூர்யாவின் தந்தை ஆடிட்டர். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவனுக்கு ஒரே நண்பன் தரணீஸ்வரன் தான். அதனாலயே அவனின் காதலுக்கு முடிந்தவரை உதவியாக இருந்தான்.

தரணியின் பெற்றோர்கள் சம்மதிக்காதது அனைத்தும் அவனுக்கு தெரியும். ஒவ்வொரு தடவையும் அதை தெரியப்படுத்துவது சிவானி தான். அறைக்குள் மெதுவாக அவன் பேச, கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விடுவாள். இருவருக்கும் நடுவில் சமாதானப்படுத்தும் வேலை சூர்யாவின் கைக்கு வரும்.

கடைசியாக அன்னை முடிவை தெரிவித்து விட, வீட்டை விட்டு வெளியேறியவன் மனம் நொந்து காதலின் முன் நின்றான். அவளோ முடிவாக திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினாள். இருவருக்கும் இடையில் சிக்கித் தவித்தான். அப்படியே இரண்டு நாட்கள் ஓட,

“தரணி எங்க அப்பா எப்போ வீட்டுக்கு வரேன்னு கேட்குறாரு. இப்ப நீ முடிவா என்ன சொல்ற?” என சண்டையிட்டாள்.

அன்னையின் முடிவில் மாற்றம் வராது என்பதால் அடுத்த முடிவை எடுக்க முடியாமல் தடுமாறினான். முடிந்தவரை காதலியை சமாதானம் செய்ய, இவ்வளவு முயன்றும் தன்  பேச்சைக் கேட்காத காதலன் மீது கடும் கோபம் எழுந்தது அவளுக்கு. வாக்குவாதங்கள் கடுமையாக நடைபெற்றது இருவருக்குள்ளும்.

“இதுக்கு மேல உன்கிட்ட பேசி பலன் இல்ல தரணி. உன்னை காதலிச்சதுக்காக எனக்கான தண்டனைய நானே கொடுத்துக்கிறேன்.” என்றவள் வேகமாக அறைக்குள் ஓடி தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.

தரணியோடு சூர்யாவும் அறைக்கதவை வெகு நேரமாக தட்டிக் கொண்டிருக்க, அவள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள். ஒரு வழியாக கதவை உடைத்தவர்கள் உள்ளே செல்ல, கையில் ரத்த காயத்தோடு நின்றிருந்தாள். காதலியை காப்பாற்றியவன் அழுகையோடு அவளிடம் மன்னிப்பை வேண்ட,

“நீ அழாத தரணி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உன்ன நான் பார்த்திருக்கக் கூடாது. காதலிச்சு இருக்க கூடாது. கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்திருக்க கூடாது. உன்ன கஷ்டப்படுத்துனதுக்காக நான் செத்துப் போறேன். முடிஞ்சா என்னை மறந்துட்டு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க பாரு.” என்றவளை கட்டிக்கொண்டு அழுது தீர்த்தான்.

அவளும் அழுகையோடு அவனை அணைத்துக் கொள்ள, இருவருக்கும் தனிமை கொடுத்துச் சென்றான் சூர்யா. நேரங்கள் கடந்து மீண்டும் உள்ளே வந்தவன் இருவரையும் பார்க்க, எதுவும் நடக்காதது போல் காதலித்துக் கொண்டிருந்தார்கள்.

“தரணி சொல்றன்னு தப்பா நினைச்சுக்காத. உனக்காக சாகுற அளவுக்கு போன இந்த பொண்ண இதுக்கு மேலயும் தள்ளி வைக்கிறது நல்லதுக்கு இல்லை. அவளோட சந்தோஷத்துக்காக ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கோ. பொறுமையா அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்குனதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்.” என்று நண்பனின் வாழ்க்கையை அழிக்க முதல் அடியை எடுத்து வைத்தான்.

தனக்கொரு உதவி கிடைத்து விட்டதை அறிந்த சிவானி அதை எடுத்துக் கொண்டு அழுது கரைந்தாள். காதலியின் அழுகை அவன் மனதை முற்றிலும் மாற்றி இருக்க, நண்பனின் உதவியோடு பதிவு திருமணம் செய்து கொண்டான். திருமணம் முடிந்த கையோடு மனைவியை பெற்றோர்களிடம் அனுப்பி வைக்க முற்பட்டான்.

அவளோ அதை விரும்பாது தங்களின் திருமண புகைப்படத்தை பெற்றோர்களுக்கு அனுப்பி வைத்தாள். திடீரென்று மகளை அந்தக் கோலத்தில் பார்த்தவர்கள் கொட்டி தீர்த்து விட்டார்கள் மனவேதனையை. அவளைப் பார்க்க முகவரி கேட்க, கொடுக்க மறுத்து விட்டாள். காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதாக கூற,

“நான் மேஜர். எங்க போனாலும் உங்க கேஸ் செல்லாது.” என்றிட, பெற்ற வயிறு பற்றி எறிய உறவை முறித்தார்கள்.

அதை அறிந்து கொண்ட தரணி திருமணத்திற்கு பின் முதல் சண்டையை போட்டான். இருவருக்குள்ளும் வாக்குவாதங்கள் ஓடிக்கொண்டிருக்க, “எத்தனை நாளைக்கு இதை மறைக்க முடியும் தரணி. நான் உன்னோட பொண்டாட்டி. என்னை இன்னொருத்தன் கூட சேர்த்து வைச்சு திருமண பேச்சை பேசுறது கூட எனக்கு பிடிக்கல.” என்று அவன் மனதை மாற்றினாள்.

மகனின் திருமணத்தை அறியாத பெற்றோர்கள்  பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் எங்கிருக்கிறான் என்ற விசாரித்து அவன் முன்பு நின்றார்கள். வீட்டை விட்டு வெளியில் வந்ததிலிருந்து கம்பெனிக்கு செல்லவில்லை தரணீஸ்வரன். தாய் தந்தையரின் பிரிவு துயரத்தை கொடுத்தாலும் புது மனைவியின் காதல் அதை ஈடு செய்தது.

பதிவு திருமணம் செய்த கையோடு வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தவனை செல்ல விடாமல் காதல் உலகில் சுற்றி திரிந்தாள் சிவானி. காதலியின் காதலில் முற்றிலும் தன்னை மறந்தவன் அவளோடு சுற்றி திரிந்தான். சூர்யாவின் வீட்டில் தான் இன்னும் தங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவளுக்கு ஊட்டியவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் பெற்றோர்களை பார்த்து அதிர்ந்தான்.

அதைவிட அதிக அதிர்ச்சி அவர்களுக்கு. அவர்களைக் கண்டு பேச மறந்தவன் அமைதியாக நிற்க, சூர்யா தான் இருவரையும் சமாதானப்படுத்தினான். திருமணம் ஆனது தெரியாததால் தங்கள் மகனை வீட்டிற்கு அழைக்க,

“எனக்கும் தரணிக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் ஆகிடுச்சு. என் புருஷனை எங்கிட்ட இருந்து பிரிக்க பார்க்காதீங்க.” விஷயத்தை நடுக் கூடத்தில் நின்று போட்டு உடைத்தாள் சிவானி.

மறைத்து வைத்த ஒன்றை போட்டு உடைத்ததால் மனைவி மீது இரண்டாம் முறையாக சண்டையை தொடுத்தான். அவளோ அவன் மீது உள்ள கோபத்தையும் சேர்த்து, “புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல சண்டைய மூட்டி விட்டுட்டீங்க இப்போ உங்களுக்கு சந்தோஷமா.” என்று எரிந்தாள் வார்த்தையால்.

மகனின் நடவடிக்கையைக் கண்டு முற்றிலும் உடைந்து போன தம்பதிகள் மனக்கலக்கத்தோடு இல்லம் திரும்பினார்கள். பெற்றோர்களை பார்க்க கூடாத நிலையில் பார்த்ததால் இருவருக்குள்ளும் மீண்டும் சண்டை துவங்கியது.

“எதுக்காக தரணி என்கிட்ட இவ்ளோ கோபப்படுற. இப்ப தெரிஞ்சதுக்கே எவ்ளோ சங்கடப்பட்டு போறாங்க என்னோட அத்தை மாமா. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவாங்க. அவங்க என்னை மருமகளா பார்க்காம இருக்கலாம் ஆனா எனக்கு அவங்க தான் இனி எல்லாமே. ஒரு மருமகளா அந்த கஷ்டம் அவங்களுக்கு வரக்கூடாதுன்னு நினைச்சேன்.

அவங்க முன்னாடி இன்னும் நீ சங்கடப்படக் கூடாதுன்னு நினைச்சேன். இதை கூட புரிஞ்சுக்காம எங்கிட்ட  சண்டை போடுற. உண்மையா என்னை காதலிச்சு இருந்தா என் மனசு புரிஞ்சு  இருக்கும்.” என்று அழுதிட, மனைவியின் எண்ணத்தை புரிந்து கொண்டவன் தன்னை தானே திட்டிக் கொண்டான்.

மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தியவன் அவளை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் முன்பு நின்றான். கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை அவர்களால். பெற்றோர்களின் காலடியில் விழுந்தான் மனைவியோடு. இந்த முறையும் தயாளன் தான் இறங்கி வந்தார். மனைவிக்கு பிடிக்கவில்லை என்றாலும் வீட்டிற்குள் அனுமதித்தார்.

மருமகளின் தாய் தந்தையரை சந்தித்து அவர்களுக்காக மன்னிப்பு கேட்டார். மகளுக்காக அவர்களும் விட்டுக் கொடுத்து செல்ல, தரணியோடு அவ்வீட்டில் வாழ ஆரம்பித்தாள் சிவானி.

“இந்த வீட்ல தான் அவளோட வாழ்ந்தேன். ஆனா அவ பண்ண காரியத்தால இதே வீட்ல செத்துட்டு இருக்கேன்.” கடந்த கால நினைவுகளை கொஞ்சம் மனைவியோடு பகிர்ந்தவன் அதற்கு மேல் பேச முடியாமல் சரிந்து விட்டான்.

 

***

விடிவதற்கு முன் எழுந்து விட்டாள் அகல்யா. எழ மனமில்லாமல் அப்படியே படித்திருந்தவளின் நினைவில் நேற்று அவன் சொன்னது தான் ஓடிக் கொண்டிருந்தது. சிந்தனைகள் எங்கெங்கோ
தறிக்கட்டு ஓடியது.
அதோடு தயாளன் பேசிய வார்த்தைகளும் சேர்ந்து கொள்ள, எதற்காக ஆதிலட்சுமி கணவனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள்.

திரும்பி தரணீஸ்வரனை பார்க்க, நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்து குளியலறை சென்றவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு மாமியாரை தேடி கிட்சன் வந்தாள். வந்தவளிடம் பேச்சு கொடுக்காமல் புன்னகைத்தவர் தன் வேலைகளை தொடர, பல தயக்கங்களுக்குப் பிறகு,

“நீங்க எதுக்காக அந்த பொண்ண வேணாம்னு சொன்னீங்க.” என்று நேரடியாகவே கேட்டாள்.

“எந்த பொண்ண?”

“அதான் உங்க மகன் காதலிச்ச பொண்ண.” என்ற மருமகளை உணர்வின்றி பார்த்தவர் தன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.

பொறுத்திருந்து பார்த்தவள் மீண்டும், “உங்க மகன் மேல இவ்ளோ பாசம் வச்சுட்டு காதலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சது சரியில்ல. அதனால தான அவரு உங்களை மீறி கல்யாணம் பண்ணாரு. முதலே மகன் ஆசைக்காக விட்டுக் கொடுத்துப் போயிருந்தா உங்களுக்கு எந்த கஷ்டமும் வந்திருக்காதே.” என்றாள்.

“அவன் ஆசைக்கு எதிரா இருக்கணும்னு நான் என்னைக்கும் நினைச்சதில்ல. அதே மாதிரி அவனும் நம்ம நல்லதுக்காக தான் அம்மா சொல்லுவாங்கன்னு ஒரு செகண்ட் நினைச்சிருந்தா கூட உன் முன்னாடி நிக்க கூடாத கோலத்துல நின்னுருக்க மாட்டான்.” என்றவர் எதற்காக அப்பெண்ணை வேண்டாம் என்பதை கூற துவங்கினார்.

“அவனுக்கு ஈட்டி எறிதல் மேல அலாதி ஆர்வம். அவனோட ஆர்வத்தை தெரிஞ்சிக்கிட்டு நாங்களும் முழு ஈடுபாட்டோட அவனை அதுல உத்வேக படுத்தினோம். எங்க போட்டி நடந்தாலும் அவனோடு சேர்ந்து நாங்களும் கிளம்பிடுவோம். அப்படி ஒரு நாள் போன அப்போ தான் அவன் வாழ்க்கை மொத்தமா மாறிடுச்சு.” மகனின் கடந்த கால வாழ்க்கையை துவங்கினார் ஆதிலட்சுமி.

தரணீஸ்வரன் கல்லூரி படிப்பை மேற்கொண்டிருக்கும் பொழுது கொடைக்கானலில் நடக்கும் ஈட்டி எறிதல் போட்டியை பற்றி கல்லூரியில் கூறப்பட்டது. பெற்றோர்களிடம் பேசியவன் கல்லூரி சார்பாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டான். அதில் கலந்து கொள்வதற்காக தரணி கிளம்ப, தந்தை வர முடியாத காரணத்தினால் ஆதிலட்சுமியை அழைத்துக் கொண்டு சென்றான்.

மூன்று நாட்கள் நடக்கும் போட்டி அது. முதல் நாள் போட்டியில் தரணீஸ்வரன் தன் திறமையின் பசியை ஓரளவுக்கு தின்று தீர்த்தான். அங்கிருந்த அனுபவஸ்தர்கள் அனைவரும் அவனின் ஆர்வத்தை கண்டு பாராட்டினார்கள். வழக்கம் போல் குறிபார்த்து ஓடும் மகனின் கண்ணில் தெரியும் ஜுவாலைகளை கண்டு ஆரவாரம் செய்தார் ஆதிலட்சுமி.

போட்டியை வெற்றிகரமாக முடித்தவன் அன்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது வழிமறித்தாள் அவள். யார் இந்த பெண் என்று அவன் குழப்பமாக பார்க்க,

“செம்மையா பெர்பாம் பண்ணிங்க. நானும் என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் ரொம்ப என்ஜாய் பண்ணோம். உங்க கேம்மை விட நீங்க ரொம்ப ஹண்ட்ஸம்மா இருக்கீங்க. நாங்க ரொம்ப நேரமா உங்களை சைட் அடிச்சிட்டு இருந்தோம்.” என்றவள் பேச்சுக்கு என்ன முகபாவனை காட்டுவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான் தரணீஸ்வரன்.

அவன் பேசாமல் இருப்பதை உணர்ந்தும் உணராதது போல், “ஐ அம் சிவானி.” என்று கை நீட்டினாள்.

சம்பிரதாயத்திற்காக புன்னகைத்தவன் பதிலுக்கு கை கொடுக்க, “வாவ்! ஈட்டி பிடிக்கிற கை இவ்ளோ மிருதுவா இருக்குமா.” என்று புகழ்ந்தாள்.

“அது என்ன கடப்பாறையாங்க கை காப்பு காய்க்க.” என்றவன் தன்னிடம் பேசிய முதல் வார்த்தையில் உற்சாகம் கொண்டவள்,

“ஆள் மட்டும் இல்ல குரலும் ரொம்ப அழகா இருக்கு.” என புகழ்வதை நிறுத்தவில்லை.

பேச்சை நிறுத்தி அங்கிருந்து நகர பார்த்தவனை விடாமல் பிடித்துக் கொண்டாள் சிவானி. பேச்சுக்களுக்கு இடையே அவளைப் பற்றி தரணி விசாரிக்க,

“எனக்கும் இந்த விளையாட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை. செமஸ்டர் எக்ஸாம்ல இருந்து தப்பிக்க சப்போர்ட் பண்ண வரதா  சொல்லி எஸ்கேப் ஆகிட்டேன்.” என்று கண்ணடித்தாள்.

யார் என்று தெரியாத ஒருத்தி தன்னை பார்த்து கண்ணடித்ததும் அக்கம் பக்கம் திரும்பி பார்த்தான். அவன் செய்கையில் சிரித்தவள், “எதுக்கு இப்படி முழிக்கிறிங்க‌. இப்ப எல்லாம் கண்ணடிக்கிறது ரொம்ப சாதாரண விஷயம்.” என்றாள்.

“ஓகே சிவானி நம்ம இன்னொரு தடவை மீட் பண்ணலாம்.” என்று அந்த சந்திப்பிற்கு அவன் மீண்டும் முற்றுப்புள்ளி வைக்க முற்பட,

“நீங்க எங்க தங்கி இருக்கீங்க.” விவரம் கேட்டாள் சிவானி.

தனியார் விடுதியில் தங்கி இருப்பதன் முகவரியை அவன் கொடுக்க, அடுத்தடுத்து அவனைப் பற்றிய விசாரிப்புகளை மேற்கொண்டாள். புன்னகை முகமாக பதில் கொடுத்தவன் ஒருவழியாக அவளிடம் இருந்து தப்பித்து ஆதிலட்சுமி இடம் வந்து சேர்ந்தான்.

இவ்வளவு நேரம் மகன் ஒரு பெண்ணுடன் பேசுவதை கவனித்தவர், “என்ன தரணி பொண்ணுங்க ரசிகை அதிகமாயிடுச்சு போல.” என்று கேலி செய்தார்.

“அட நீங்க வேற ம்மா! அந்த பொண்ணு யாருன்னு தெரியல அதுவா வந்து பேசுச்சு அதுவா போயிடுச்சு.”

“பார்த்து தரணி பொண்ணுங்க கிட்ட விழுந்துட்டா அப்புறம் எந்திரிக்க முடியாது.” என விளையாட்டாக தன் மகனுக்கு செய்தி உரைக்க, பின் நாளில்  அதுதான் நடந்தேறியது அவன் வாழ்வில்.

***

இரண்டாம் நாள் போட்டியில் அவளாகவே வந்து பேசினாள் அவனிடம். நேற்று பார்த்த பெண் என்பதால் இந்த முறை கூச்சம் இல்லாமல் பேச துவங்கினான். அவளோடு இன்று நட்பு வட்டாரங்களும் சூழ்ந்து கொண்டது. அதில் ஒருத்தி,

“இவ நேத்தி ராத்திரி முழுக்க உங்கள பத்தி தான் பேசிட்டு இருந்தா.” என்றாள்.

எதற்கென்று அவன் காரணம் கேட்க, “நீங்க ரொம்ப அழகா இருந்தீங்களாம். கல்யாணம் பண்ணா உங்கள மாதிரி ஒரு பையனை தான் கல்யாணம் பண்ணனும்னு பேசிட்டு இருந்தா.” என்ற தோழியை அடக்கி கொண்டிருந்தாள் சிவானி.

அவன் எதுவும் பேசாமல் மலுப்பலாக சிரிப்பை கொடுக்க, “நீங்க யாரையாது லவ் பண்றீங்களா?” என்ற தோழியின் கேள்விகளுக்கு சிவானியின் கண்களில் ஆர்வம் பொங்கியது.

அதை கவனித்து விட்டான் தரணீஸ்வரன். ஒருவித ஆச்சரியத்தோடு அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவன் “இல்லை” என்றிட, ஆர்வம் பொங்கிய கண்களில் மகிழ்வு வழிந்தோடியது. அதில் இன்னும் கவனித்தான் அவள் முகத்தை.

அரை மணி நேரத்திற்கு மேலாக அவர்களுடன் கதை அளந்தவன் இரண்டாம் நாள் போட்டிக்கு விரைந்தான் மைதானத்திற்கு. இன்றும் வெற்றி வாய்ப்பை அவனே வசப்படுத்திக் கொள்ள, அவனை சுற்றி வரும் ஆரவார இசையில் மதி மயங்கி போனாள் சிவானி.

அவளின் பூர்வீகம் திருநெல்வேலி. நடுத்தர வசதி கொண்ட குடும்பம். தாய் தந்தை இருவரும் ஆசிரியர் பணிபுரிகிறார்கள். மூன்றாவது பெண்ணாக பிறந்ததால் அதிகச் செல்லம் அவளுக்கு. படிப்பில் அந்த அளவிற்கு நாட்டம் இல்லாதவள் பெயருக்காக தொடர்ந்து கொண்டிருக்கிறாள். ஆடம்பர வசதி மீது அதிக ஆர்வம் உருவாகியது கூடாத நட்பில்.

அவளை விட குறைவாக இருக்கும் பெண்களிடம் நட்பு கொள்ள விரும்பாதவள் தகாத நட்புகளை உருவாக்கிக் கொண்டாள். நாளடைவில் அவர்களின் வாழ்விற்கு பழகிப்போனவள் இதையே நிரந்தரமாக்க ஆசை கொண்டாள்.

***

விளையாடிவிட்டு சோர்வாக வருபவனை முதல் ஆளாக பிடித்துக் கொண்டாள் சிவானி. பாராட்டு வரைமுறை இல்லாமல் சென்று கொண்டிருந்தது. ஓரளவிற்கு மேல் கேட்க முடியவில்லை தரணீஸ்வரனால். புன்னகையோடு சமாளித்து அங்கிருந்து நகர்ந்தான்.

உடனே தன்னை விட்டு நகர்ந்ததால் கோபம் வந்தது அவளுக்கு. அந்தக் கோபத்தில் டோர்னமெண்ட் மைதானத்தில் கடுப்போடு அமர்ந்தாள். அடுத்த சுற்றுக்கு முன்னாள் வந்து நின்றான் தரணீஸ்வரன். அவன் மீது இருக்கும் கடுப்பில்,

“அவன் சரியாவே ஆடல. அவன விட பக்கத்துல இருக்குறவன் நல்லா விளையாடுறான். நீங்க வேணா பாருங்க அவன் பக்கத்துல இருக்கவன் தான் ஜெயிக்க போறான்.” என்றாள்.

“என்னம்மா அந்த பையன் சரியா ஆடல. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ரொம்ப நல்லா விளையாடுறான்.”

“அதை எதுக்கு நீங்க கேக்குறீங்க? உங்க வேலைய மட்டும் பாருங்க.” மூஞ்சியில் அடித்தது போல் பதில் சொன்னவள் முணுமுணுத்தாள்,

“வயசான காலத்துல இவங்கள யார் இங்க வர சொல்றது.” என்று.

நன்றாகவே கேட்டது அவளுக்கு கீழ் இருக்கையில் அமர்ந்திருந்த ஆதிலட்சுமியின் காதிற்கு. சிவானி மீது அளவு கடந்த கோபம் எழுந்த போதிலும் ஆட்டம் தொடங்கி விட்டதால் மகனை ஆர்வத்தோடு பார்க்க ஆரம்பித்தார். நாயகன் ஆட்ட நாயகன் ஆனான் அன்றைய விழாவில். மகனின் வெற்றியை எழுந்து நின்று கைதட்டி கொண்டாடினார் ஆதிலட்சுமி.

‘இந்த அம்மா என்ன இப்படி ஆடுது’ என அவரை உள்ளுக்குள் கேவலமாக நினைத்தவளை தோழிகள் கேலி செய்தார்கள் அவள் சொல்லியதற்கு மாறாக நடந்ததால்.

“ஹலோ! ஜெயிப்பான்னு சொன்னது அவன தான்.” என்று முழு பூசணிக்காயை சாப்பாட்டில் மறைத்தாள்.

அவள் வார்த்தையில் திரும்பி ஆதிலட்சுமி கடுமையாக முறைக்க, யார் என்று தெரியாதவர் முறைப்பதால் இவளும் சலிக்காமல் முறைத்தாள். முதல் நாள் தூரத்தில் நின்று பேசியதால் சரியாக சிவானியின் முகம் பதியவில்லை அவருக்கு. ஆனால் இந்த முறை அவளின் முகம் மட்டும் அல்ல குணமும் நன்றாக பதிந்து போனது அவருக்குள்.

மகனை புன்னகையோடு எதிர்கொள்ள நினைத்தவர் ஆசையாக நெருங்க, “ஹாய் தரணி! செம்மையா விளையாடி கலக்கிட்டீங்க. நீங்க தான் ஜெயிப்பீங்கன்னு என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் அடிச்சு சொன்னேன்.” என பேச்சு கொடுத்தாள் சிவானி.

சிவானிக்கு புன்னகையோடு, “தேங்க்யூ சோ மச்!” என்று பதில் கொடுத்தவன் அவளுக்கு பின்னால் நிற்கும் அன்னை ‘ஏன்?’ முறைக்கிறார்கள் என்று தெரியாமல் குழம்பினான்.

“என்ன மாம்?” என்றவன் சத்தத்தில் பின்னால் திரும்பிய சிவானி அதிர்ந்து நின்றாள்.

மகனுக்கு பதில் சொல்லாதவர் அவளை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தார். அன்னையின் கோப முகத்தில் அவன் சிவானியை கேள்வியாக பார்க்க, பதில் சொல்லாமல் நழுவினாள். அவள் ஓட்டத்தை பார்த்தவன் காரணம் கேட்க, முழுமையாக விவரித்தார்.

“ஹா! ஹா! இதுக்காம்மா பாவம் அந்த பொண்ண முறைச்சிங்க. உங்களுக்கு பயந்து எப்படி ஓடுறா பாருங்க. நேத்து முதல் ஆளா இந்த பொண்ணு தான் வந்து என்கிட்ட பேசுச்சு.”

“அந்த பொண்ணோட பேச்சு எனக்கு ஒன்னும் பிடிக்கல தரணி.”

“அம்மா அந்த பொண்ணு உண்மையாவே என்னை சொல்லி இருக்கலாம்ல. உங்களுக்கு அது தப்பா கேட்டு இருக்கலாம்.” என்றதும் மகனை அவர் முறைக்க,

“நேத்து முழுக்க அந்த பொண்ணு என்னை பத்தி தான் அவ பிரெண்ட்ஸ் கிட்ட பேசி இருக்கா. அப்படி இருக்க என்னையே குறை சொல்லுவாளா.” அவனையும் அறியாமல் விழுந்தான் சிவானி பேச்சில்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
32
+1
52
+1
4
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்