Loading

அத்தியாயம்  6 ❤

மறுநாள் காலை விடிந்ததும் ,

கார்த்திக்கும், தமிழும் முதல் நாள் நடத்திய உலகப் போரினால் களைத்துப் போய் உறங்கிக் கொண்டு இருந்தனர்.

அவர்களை அடித்து எழுப்ப முடியாவிட்டாலும், சத்தம் போட்டு அலறி எழுப்பலாம் என முடிவெடுத்த அலாரம் தன் வாயைப் பிளந்து கத்தியது.

அதன் அலறல் கேட்டதும் கார்த்திக் விழித்துக் கொண்டான்.அவனை எழுப்பியதற்குத் தண்டனையாக அதன் தலையை தட்டி விட்டு எழுந்தான்.

அருகில் உறங்கி கொண்டிருக்கும் தமிழைப் பார்க்க அவனோ ,

” செல்லம். உண்மையாவா ! என்னால நம்பவே முடியல. இதோ உடனே காலேஜூக்கு லீவ் போட்றேன். நாம எங்கயாவது வெளியப் போகலாமா ??” என்று முனங்கிக் கொண்டு இருக்க ,

கார்த்திக் ” என்னாச்சு இவனுக்கு  ! நேத்து வர்ற வழியில  ஏதாவது காத்து கருப்பு அடிச்சருச்சா ? ” என்று நண்பனை விநோதமாய்ப் பார்க்க ,

தமிழ்  ”  கார்த்திக் ஆ ! அவனை எப்படியாவது கழட்டி விட்டுடறேன்.நீ கவலைப்படாத செல்லம் “

கார்த்திக் ” என்னது  ! இவனை ! என்று நெஞ்சிலேயே குத்த ,

தமிழ்  “காப்பாத்துங்க.. !!!! ” என்று கத்த ஆரம்பித்தான்.

அவனது கதறலைக் கேட்டும் கார்த்திக் விடாமல் குத்திக் கொண்டு இருந்தான்.

தமிழ்  ”  டேய் வயித்துல உக்காந்துக்கிட்டு நெஞ்சுல குத்துற  ! விடுடா ! ”  தன் மேல் அமர்ந்து இருந்த  கார்த்திக்கை கீழே தள்ளி விட்டான்.

“நீ புலம்பறதைப்  பாத்துட்டு பையனுக்கு ஏதோ பேய் பிடிச்சுடுச்சுன்னு பயந்தா ! நீ என்னமோ என்னைகஅ கழட்டி விட்டுட்டுப் போகலாம்னு உளறிட்டு இருக்க ! யாருடா அது  ? “

தமிழ்  ” மச்சி !  தியா கிட்ட புரப்போஸ் பண்ணேன்ல. அந்த ப்ரப்போசலை நினைச்சுட்டே தூங்குனேனா  ! கனவுல தியா எனக்கு ஓகே சொன்னா ! அதான் அப்படி உளறிட்டேன்  “

“கனவுலயாவது ஓகே சொல்லனும்னு ஆசை போல ! “

தமிழ்  ” ஆமா ! அதுல தான் மண்ணள்ளி போட்டுட்டியே  ! சந்தோஷமா? ” என்று கஞ்சா கருப்பு பாணியில் கேட்க,

“ஹா ஹா  ! பகல் கனவு பலிக்காது மச்சி. ரொம்ப ஆசைப்படாத “

“ஏன்டா  !  ஏன் உனக்கு இந்த கொலைவெறி  ? “

” கோவிச்சிக்காத நான் போய் குளிச்சுட்டு வர்றேன். எனக்கு காஃபி போட்டு வை ‘

தமிழ்  ” இப்பவே போட்றேன். குடிச்சுட்டு குளிக்கப் போடா “

“நான் இன்னும் பல் விளக்கல “

“அதுக்கு என்னடா  ! நான் – லாம் தினமும் என்ன பல்லு விளக்கிட்டா காஃபி குடிக்குறேன் “

கார்த்திக் ‘ ச்சீ ! போடா ” என்று குளியலறை நோக்கி நடந்தான்.

அவன் வருவதற்குள் தமிழ் காஃபி போட்டு வைத்து விட்டு , சோஃபா மூலையில் இருந்த தனது சட்டையை எடுத்தான். பிறகு தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கீழே விழுந்து கிடந்த கால்சராயை எடுத்துக் கொண்டான்.

இப்படியாக இருவரும் மல்லுக்கட்டிக் கொண்டு கல்லூரிக்குச் செல்ல தயாரானார்கள்.

காலைத் தென்றல் ஹாஸ்டல் அறையின் ஜன்னலின் வழியாக மஹிமாவைத் தீண்ட அதில் ஏற்பட்ட சில்லிப்பால் மஹிமா தனது தாமரை மலர் போன்ற விழிகளைத் திறந்து அக்காற்றை சுவாசித்தாள்.

திரையை விலக்கி விட்டு சில கணங்கள் அதை ரசித்துக் கொண்டு இருக்க, வார்டன் வந்து அவர்களை எழுப்பி விட்டு சென்றதும் , அவளுடன் தங்கி இருந்த இரு தோழிகள் ஶ்ரீதேவி மற்றும் திவ்யாவும் முகச்சுளிப்புடன் எழுந்தனர்.

ஶ்ரீதேவி  ” காலைலயே திட்டுறாங்க ! ” என்று சலித்துக் கொள்ள ,

திவ்யா ” மஹிமா  ! அங்க நின்னு  என்னப் பாத்துட்டு  இருக்க  ? “

மஹிமா ” ஒன்னும் இல்ல.  இங்க நிக்கும் போது நல்லா காத்து அடிச்சுச்சா மனசுக்கு நல்லா இருக்கு “

ஶ்ரீ  ” இப்படியே நின்னுட்டு இருந்தா  காலேஜூக்கு எப்போ கிளம்புவ  ! போய் ரெடி ஆகு” என்று மஹிமாவைத் தயாராக சொல்ல திவ்யா தன் காதலனைப் பார்க்கச் செல்வதாக கூறிவிட,
அவள் கிளம்பியதும் மஹிமாவும் ,ஶ்ரீயும் தங்களது புத்தகங்களை எடுத்துக் கொண்டனர்.

அப்போது தான் ஞாபகம் வந்தவளாக,

மஹிமா ” ஶ்ரீ  ! அப்பாவுக்கு கால் பண்ணனும். நல்லவேளை ஞாபகம் வந்துருச்சு “

” கால் பண்ணு . நேத்தே சென்னாருல்ல “

மஹிமா தனது மொபைலை எடுத்து அப்பாவின் நம்பருக்குக் கால் செய்தாள்.

அவளது அப்பா அழைப்பை ஏற்காதிருக்கவும்,
‘ கல்லூரி  முடிந்து பேசிக் கொள்ளலாம்  என்றால், அதற்குத் தனியாக திட்டு விழும் ‘ என்பதை அவள் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே , எதிர்முனையில் குரல் கேட்டது.

ராமநாதன் ” ஹலோ என்ன மஹிமா? “

எரிச்சலுடனும், சலிப்புடனும் பேச,

பயத்தில் தெண்டைக் குழியில் எச்சிலை விழுங்கிக் கொண்டே,
” அப்பா நான் காலேஜூக்குக் கிளம்பிட்டேன் “

” அதுக்கு என்ன இப்போ  ? “

நீங்க தான நேத்து  காலேஜூக்குப் போறதுக்கு முன்னாடி கால் பண்ணுன்னு சொன்னிங்க.அதான் இன்ஃபார்ம் பண்ணேன்  “

” போய்ட்டு வா. இனிமேல் கால் பண்ணாத “

மஹிமாவின் கண்களின் ஓரத்தில் கண்ணீர்த் துளி கீழே விழ , அதைத் துடைத்தது ஶ்ரீயின் கை.

நிமிர்ந்து ஶ்ரீயைப் பார்த்த மஹிமா விரக்திப் புன்னகைத்தாள்.

ஶ்ரீ ” போகலாமா மஹி  ? “

மஹிமா ”  ம் ” என்று அவளுடன் கிளம்பினாள்.

புது கல்லூரியில் அடி எடுத்து வைத்ததும் இன்னும் இரண்டு வருடங்கள் இங்கு தான் இருக்கப் போகிறோம்.

புதுப் புது நண்பர்களைச் சந்தித்து இனிமையாக நாட்களைக் கழிக்கப் போகிறோம் என்ற எண்ணம், அவளுக்குள் ஒரு புது உற்சாகத்தை வரவழைக்க தோழியுடன் சேர்ந்து தங்களது வகுப்பறையைத் தேடி அலைந்தாள்.

ஒரு கட்டத்தில் தேடிக் கலைத்துச் சோர்ந்து போக ஶ்ரீதேவி அங்கிருக்கும் படியில் அமர்ந்து விட்டாள்.

” என்னால முடியலை மஹி “

என்று மூச்சு வாங்க,

அவளருகில் நின்ற மஹிமா தனது புத்தகத்தை அருகில் வைத்துக் கொண்டு , அவளது அருகில் நின்று கொண்டாள்.

அப்போது அந்த மாடியில் இருந்து இறங்கிய கார்த்திக்கின் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு  தமிழ் விளையாட, கார்த்திக் அவனைத் துரத்திப் புத்தகத்தைப் பெற முயல, அது சரியாக மஹிமாவின் புத்தகத்திற்கு அருகில் வந்து விழுந்தது.

அந்த சத்தம் கேட்டு மஹிமாவும் , ஶ்ரீதேவியும் எழுந்து, அவர்களுக்கு வழி விட்டு தள்ளி நின்றனர்.

கார்த்திக் மஹிமாவையேப் பார்க்க, அவள் அவனது பார்வையைக் கண்டறிந்து கொண்டு அதைத் தவிர்க்கும் விதமாக,

புத்தகத்தை எடுத்துக் கொண்டு, 

”  ஶ்ரீ கிளம்பலாம் “

அவளைப் பின் தொடர ஆரம்பித்தான் கார்த்திக்.

அதைக் கண்டு கொண்டவள் ஒரு கட்டத்தில் அவனுடைய செயல் பிடிக்காமல் திரும்பி, கார்த்திக்கைப் பார்த்தாள்.

அவன் புன்னகைத்துக் கொண்டே,

” ஹாய் மஹிமா  ! ஐ யம் கார்த்திக். என்ன ஞாபகம் இருக்கா  ? ” என்று கேட்டான். 

– தொடரும் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்