Loading

6. இனி எந்தன் உயிரும் உனதா…

 

ஸ்ருஷ்டியின் விழிகளுடன் தன் விழிகளைக் கோர்த்திருந்த சாய், அவள் கரத்தினைப் பற்றிக்கொண்டு, “நீ காலேஜ்ல என்ன ஒளிஞ்சு, மறஞ்சு பாக்குறத நாலு வருஷமா பாத்துருக்கேன். தெரிஞ்சோ, தெரியாமலோ உன் மேல ஒரு சின்ன க்ரஷ் இருந்துச்சு… ஆனா, உன்கூட பழக ஆரம்பிச்சப்புறம், இது அதையும் தாண்டுன ஃபீல்னு இப்போ தோணுது. உன்ன எப்பவுமே சிரிக்க வைப்பேன்லாம் சொல்ல மாட்டேன். சிலநேரம் அழ வப்பேன், கோவப்படுத்துவேன், அதுக்கப்புறம் நானே சமாதானமும் படுத்துவேன்… நீ எவ்ளோ பேசுனாலும் காதுல ரத்தம் வந்தாலும் கூட கேப்பேன், நீ எவ்ளோ மொக்கப் போட்டாலும் உதட்ட இழுத்துப் பிடிச்சாவது சிரிப்பேன்… அதுக்கும் மேல, நீ எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்… இவ்ளோ நல்ல பையன மிஸ் பண்ணிறாத, அப்புறம் வருத்தப்படுவ…” எனக் கூற,

அதில் கண்ணீர் இமை தாண்ட, இதழில் சிரிப்புடன், அவன் தோளில் புதைந்த ஸ்ருஷ்டி, “லவ் யூ யுவா…” என்றாள்.

புன்னகையுடன் “லவ் யூ சிமி…” என்றவன், அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அதைப் பார்த்தபடியே, தன் முன்பு நின்றிருந்த ஆருஷியைப் பின்னிருந்து அணைத்துக் கொண்ட ப்ரித்வி, “செம பேர்ல இவங்க…” என,

“ஆ, ஆ… ஆமா…” என்ற ஆருஷி, அவன் கைகளை விலக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

சற்று தூரம் தள்ளி வந்தவள், இதயத்தைப் பற்றியபடி, இழுத்துப் பிடித்த சுவாசத்தை விட்டாள். “ஐயோ அம்மா, லூசுப்பய… நெலம புரியாம அவன் பாட்டுக்கு வந்து கட்டிப்புடிக்கிறான்… அப்டியே ஹார்ட் பீட்டெல்லாம் எகிறுது. கொஞ்சம் விட்டுருந்தோம், நம்ம கன்ட்ரோலே மிஸ்ஸாகிருக்கும்… பாவி, படுபாவி…” என அவனைக் கழுவி ஊற்றினாள்.

அவனின் அணைப்புகளும், தீண்டல்களும் ஒன்றும் அவளுக்குப் புதிதல்ல. ஆனால், காதல் கொண்ட மனமோ அவன் பார்வைகளிலும், சிறு, சிறு அக்கறைகளிலுமே இழுத்துப் பிடித்தும் நிற்காமல் அவன்புறம் ஓடுகிறது. இதில் இவன் வேறு இப்படியெல்லாம் செய்து வைத்தால், அவனை விட்டுத் தர வேண்டிய நிலை வரும்போது, அவனை விட்டு விலக முடியாமல் காயப்படுத்தி விடுவோமோ என்ற எண்ணத்திலேயே அங்கிருந்து ஓடியே வந்து விட்டாள்.

“அதான் அவன் இப்ப அவள நினைக்கிறத விட்டு நார்மலாகிட்டான்ல… பேசாம அவளப் பத்தி நம்ம தெரிஞ்சுக்கிட்டத சொல்லிட்டு, இனிமே கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுவோம். அப்புறம் நம்மபாட்டுக்கு தீவிரமா லவ் பண்ணித் தொலஞ்சுறப் போறோம்” என்று எண்ணிக்கொண்டவள், அவன்மேல் கொண்ட காதலை உணர்வதற்கு முன்பிருந்தே அவனைத் தீவிரமாகத் தான் காதலித்துக் கொண்டிருக்கிறாள் என உணரவில்லை.

💝

மாலையில், “இந்த லீவுக்கு நீங்க மூணு பேரும் எங்க வீட்டுக்கு வாங்க. சென்னைல ஜாலியா என்ஜாய் பண்ணுவோம்” என அழைத்தாள் ஸ்ருஷ்டி.

“எதே, நீ சென்னையா? சொல்லவே இல்ல. ஆனா, உங்கம்மா ஃபோன்ல பேசும்போது மதுரை ஸ்லாங்ல பேசுனாங்களே” என ஆச்சரியமாகக் கேட்டான் ப்ரித்வி.

“ஆமா, அப்பா சென்னை, அம்மா மதுரை… அம்மா சென்னை வேணாம், மதுரைல படின்னு சொன்னாங்க. அதான் அப்டியே இங்க ஜாலியா ஹாஸ்டல்ல இருக்கேன்” என்றாள் ஸ்ருஷ்டி.

“நல்ல சாப்பாடு வாங்கித் தருவேன்னு சொல்லு, நா எங்க வேணா வர்றேன்” என்றாள் ஆருஷி.

“அதெல்லாம் எங்கம்மா சூப்பரா சமைப்பாங்க” என அவள் சிலுப்பிக்கொள்ள,

“அத விடு, ஃபர்ஸ்ட் டைம் மாமியார் வீட்டுக்கு வர்றேன்… எப்டி நடந்துக்கணும்னு ஏதாவது இருக்கா?” என்றவாறு அவள் தோளில் கையைப் போட்டான் சாய்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ எப்டி இருக்கியோ, அப்டியே இரு. இப்டி தான உன்ன லவ் பண்றேன், இப்டியே அவங்களுக்கும் புடிக்கும்” என்று ஸ்ருஷ்டி கூறியதில், சாய் புன்னகைத்தான்.

“வாட் எ செலக்ஷன்டா மகனே… அப்டியே புல்லரிக்குது” என ஆருஷி கூற,

“என்னா புல்லு? அருகம்புல்லா, கோரப்புல்லா?” என்று கலாய்த்தான் ப்ரித்வி.

“அந்த கொசு பேட்ட எடுடா, இந்த கொசுவுக்கு ஷாக் வச்சு சாவடிக்கிறேன்…” என ஆருஷி வெறியாகிக் கத்தியதில், மற்ற மூவருக்கும் சிரிப்பு தான் வந்தது.

💝

மறுநாள் காலையில் ட்ரெயினில் செல்லலாம் என ஸ்ருஷ்டி கூற, நைட் ட்ராவல் தான் ரொமான்டிக்கா இருக்கும், அதுவும் பஸ்ல தான் போகணும் என உயிரை வாங்கி, அனைவரையும் மாலையில் பேருந்தில் ஏற வைத்திருந்தான் சாய்.

“எனக்கு பஸ்ஸே ஒத்துக்காது, எல்லாம் இந்த பாவியால…” என அவனைத் திட்டிக் கொண்டே பேகை மேலே வைத்துக் கொண்டிருந்தாள் ஆருஷி.

“விண்டோ சீட்ல உக்காரு, கொஞ்சம் கம்ஃபர்டபிளா இருக்கும்” என்ற ப்ரித்வி, அவள் அமர்ந்ததும் அருகில் அமர்ந்துகொண்டான். சாயும், ஸ்ருஷ்டியும் இவர்களுக்குப் பின்னால் இருந்த சீட்டில், சேர்ந்து அமர்ந்துகொண்டனர்.

இரவினை வருடும் தென்றலுடன், அவர்களின் பயணம் தொடர, சாயின் தோளில் சாய்ந்து உறங்கியபடி இருந்த ஸ்ருஷ்டி, குளிரில் லேசாக நடுங்கியபடி இருந்தாள்.

அதனைக் கண்ட சாய், எட்டி ஜன்னலை மூட அதில் கண்விழித்தாள் ஸ்ருஷ்டி. அத்தனை நெருக்கத்தில் அவன் முகம் கண்டவள், சிலையாகி அமர்ந்திருக்க, ஜன்னலை மூடியவாறே அவளைக் கண்டவன், அவள் பார்வையில் முழுதாய் தொலைந்தான்.

அவன் அவளின் முகத்தின் அருகில் நெருங்க, அவன் மூச்சுக் காற்றின் வெப்பத்தை உணர்ந்தவள் கண்களை மூடிக்கொண்டாள். அதில் சிறிதாய் புன்னகைத்தவன், அவள் முகத்தில் மெலிதாய் ஊத, கண்களைத் திறவாமல் அதே நிலையிலேயே அமர்ந்திருந்தாள் அவள். அவள் மூக்கின் நுனியில் முத்தமிட்டவன், அவள் தோளில் சாய்ந்துகொண்டு, “ஓவரா இமாஜின் பண்ணாத…” என்றான்.

அவன் தலையில் முட்டியவள், “ஏண்டா இவ்ளோ நல்லவனா இருக்க?” என்றாள்.

நிமிர்ந்து, அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டவன், “அப்டியிருந்தா தான் என் ஆளுக்குப் பிடிக்கும்…” எனப் புன்னகையுடன் கூறினான்.

“அது சரி” என்றவள், இரு கைகளாலும் அவன் கையைப் பிடித்து, அவன் உள்ளங்கையில் இதழ் பதித்தாள்.

“இன்னும் ஆறு மாசம் தான் ஒன்னா இருப்போம், அப்புறம் நா பேங்க்ளூர்ல ஜாப் போலாம்னு இருக்கேன்” என அவன் கூற,

“உன் இஷ்டம், ஆனா வீக்லி ஒன்ஸாவது பேசிரணும், என்ன?” எனக் கேட்டாள் அவள்.

“எல்லாதுக்கும் இப்டி ஓகே சொல்லாதடி… ‘அங்கல்லாம் எதுக்குப் போற, இங்கயே பக்கத்துல எங்கயாச்சும் இருக்கலாம்ல, அடிக்கடி மீட் பண்ணிக்கலாம்… என்னப் பத்தி யோசிக்கவே மாட்டியா?’ அப்டி ஏதாவது சொல்லி சண்ட போடு…” எனக் கூற, நிமிர்ந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, மீண்டும் சாய்ந்து கொண்டாள்.

அதில் இதழில் படர்ந்த புன்னகையுடன், “லவ் யூ சோ மச் சிமி, லைஃப் லாங் இப்டியே உன் கையப் புடிச்சிட்டு, ட்ராவல் பண்ணிட்டே இருந்தா நல்லாருக்கும்ல…” எனக் கண்சிமிட்டிக் கேட்க,

“நேத்து நைட்டு தெறி படம் எதுவும் பாத்தியாடா?” என சிரித்தாள் ஸ்ருஷ்டி.

“போடி லூசு” என்றவாறே, அவள் மடியில் சாய்ந்தவன், “தூக்கம் வருது” என கொட்டாவி விட்டபடி உறக்கத்தில் ஆழ்ந்தான். அவன் முதுகிலேயே புன்னகையுடன் தலைசாய்த்தவள், தானும் உறங்கிப் போனாள்.

💝

“தூக்கம் வரலையா?” என ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த ஆருஷியிடம், கேட்டான் ப்ரித்வி.

“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதுன்னு தெரியாதா?” என அவள் ஃபோனிலேயே கண்களைப் பதித்து நக்கலாகக் கூற,

“மவளே நீ மட்டும் தூங்குடி, அப்டியே ஜன்னல் வழியா வெளியத் தள்ளி விட்டுடுறேன்” என முறைத்தான் ப்ரித்வி.

“இந்த நல்ல மனசுக்கு, உனக்கு நல்ல பேய்க்கனவா வரும்… தூங்கு” என மீண்டும் நக்கலாகவே கூறிய ஆருஷியை முறைத்தவன்,

“உன்கிட்டப் போய் அக்கறையாக் கேட்டேன், பாரு…” என,

“உன் அக்கறை, அமிஞ்சிக்கரை, கம்மாக்கரையெல்லாம் நீயே வச்சிக்கோ” என மொபைலை டாப்பின் பாகெட்டில் வைத்தவாறு, சிரித்தபடியே கூறினாள்.

“மொக்க கவுண்டர் குடுக்குறத நிறுத்துடி” என அவன் சலிப்பாகக் கூற,

“நிறுத்த முடியாது, ப்ரேக் ஃபெயிலியர் ஆகிருச்சு” என அவனைப் பார்த்துக் கூறினாள் அவள்.

“உன் வாய்ல தயவுசெஞ்சு கொஞ்சம் ஃபெவிக்விக்க ஊத்திக்கோ” என்று அவன் எரிச்சலாகக் கூறியதில்,

“கத்திகூட தேவையில்ல, கத்தியே பிரிச்சுருவேன்… அஞ்சு நிமிஷத்துக்காக, அஞ்சு ரூபாய எதுக்கு வேஸ்ட் பண்ணிக்கிட்டு?” என அலட்டாமல் கேட்டாள் ஆருஷி.

“ஏண்டி இப்டி ரம்பம் வச்சு அறுக்குற?” என அவன் கேட்டதற்கும்,

“ச்ச ச்ச, இப்ப தான் ப்ளேட ஸ்டார்ட் பண்ணிருக்கேன், ரம்பம் வர இன்னும் நெறைய டைம் எடுக்கும்” என கடுப்படிக்குமாறே பதிலளித்தாள்.

அதில் நொந்துபோன ப்ரித்வி, “உன்கிட்ட வந்து பேசுனேன்ல, என் புத்திய பிஞ்ச செருப்பால தான் அடிச்சுக்கணும்” என காண்டாகத் தலையில் அடித்துக் கொள்ள,

“என் செருப்ப வேணா பிச்சுத் தரவா? ஆனா, நீ அடிச்சுக்கிட்ட அப்புறம் எனக்கு புதுசு வாங்கிக் குடுத்துரணும்” எனக் கறாராகக் கூறினாள் அவள்.

“எதுக்கு நீ கஷ்டப்பட்டுப் பிச்சுக்கிட்டு, ஃபர்ஸ்ட் உன்ன அடிச்சுப் பிச்சுர்றேன்… அப்புறம் என்ன அடிச்சுக்குறேன்…” என அவன் கூறியதும், அவள் ஏதோ கூற வாயைத் திறக்க,

அவளின் இதழ்கள் இரண்டையும் அழுத்தமாகப் பற்றியவன், “தயவுசெஞ்சு இதுக்கு மேல பேசாத, சத்தியமா என்னால முடியல” எனப் பாவமாகக் கூறியவனால், நிஜமாகவே அவள் போடும் மொக்கையைத் தாங்க முடியவில்லை.

அவன் இதழைப் பற்றியதிலேயே செயலிழந்தவள், அதன்பின் ஏதும் பேசாமல் மௌனியாகிப் போனாள்.

சிறிது நேரத்திலேயே ப்ரித்வி உறங்கிப் போக, ஆருஷியும் ஜன்னல் கம்பியில் தலைசாய்த்து உறங்கி விட்டாள்.

💝

மறுநாள் அதிகாலையில் அனைவரும் சென்னையில் இறங்க, சாதாரணமாகவே பேருந்தில் பயணிக்க சிரமப்படும் ஆருஷி, எதிர்காற்று முகத்தில் மோதுமாறு ஜன்னலில் வேறு சாய்ந்து தூங்கியதால் சோர்வுடனே வந்தாள்.

அவள் முகம் கண்ட ப்ரித்வி, சாயிடம் திரும்பி, “லூசுப்பயலே, இவ எப்டி இருக்கா பாரு… இதுக்கு தான் பஸ் வேணாம்னு சொன்னது. கேட்டியா நீ?” என எகிற,

“ஹே விடுடா” என கண்கள் இரண்டும் பாதிசொருகிய நிலையில் சோர்வாகக் கூறிய ஆருஷியைத் தோளோடு அணைத்துக் கொண்டவன், சாயை மீண்டும் முறைத்துவிட்டு அவளை நடத்திச் சென்றான்.

அதில் சாய் பாவமாக ஸ்ருஷ்டியைப் பார்க்க, அவளோ புன்னகையுடன், செல்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அவன் என்னத் திட்டுறான், நீ என்ன சிரிச்சுட்டு இருக்க?” என சாய் கடுப்புடன் கேட்க,

அதைக் கண்டுகொள்ளாதவள், “இவங்க எப்ப தான் லவ்வ சொல்லிக்கப் போறாங்களோ? எனக்கு தான் ஒரே எக்ஸைட்மெண்ட்டா இருக்கு” என அவர்கள் இருவருக்கும், மகிழ்ச்சியாக திருஷ்டி கழித்தாள்.

அதில் அவளைத் தலையில் தட்டி அழைத்துச் சென்றவனுக்கும், அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று தான் தோன்றியது.

 

-தொடரும்…

  -அதி… 💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments