Loading

 

 

 

 

 

ஆராதனா வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள் கடந்து போனது. இந்த இரண்டு வருடத்தில் ஆராதனா நிறையவே கற்றுக் கொண்டாள். நிறைய குறும்புத்தனங்கள் குறைந்து போனது. எதற்கெடுத்தாலும் வரும் கோபம் குறைந்து போனது. வேலை என்று வந்து விட்டால் எதை பற்றியும் யோசிக்காமல் செய்ய பழகி இருந்தாள்.

 

ஆனால் யுவனிடம் போடும் சண்டை மட்டும் நிற்கவில்லை. எப்போதும் சிறுபிள்ளை தனமாக சண்டை போடுவாள். ஆனால் இப்போது சிறு பிள்ளை தனத்தை விட்டு விட்டு வேலை விசயமாக சண்டை போட ஆரம்பித்து இருந்தாள்.

 

பல டிசைன்கள் அவளுடையது பிரலமாகி இருந்தது. அவளது டிசைன்களுக்கென்று தனி ரசிக கூட்டமே உருவாகி இருந்தது. எத்தனை உயரத்திற்கு சென்றாலும் யுவனிடம் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தாள்.

 

அவன் அதை கை காட்டினால் இவள் மற்றொன்றை கை காட்டுவாள். இரண்டும் சிறப்பாக தான் இருக்கும். யாருக்கு ஆதரவாக நிற்பது என்று தெரியாமல் இம்ரான் விழி பிதுங்கி நிற்பான்.

 

இருவரும் சண்டை இட்டு கடைசியாக யாரோ ஒருவர் இறங்கி வந்து பிரச்சனையை முடித்து விடுவர். ஆனால் முடிந்த மறு நாள் வேறு ஒரு பிரச்சனை வந்து நிற்கும்.

 

இம்ரானை நடுவில் வைத்துக் கொண்டு இருவரும் சண்டை போடும் போது இம்ரான் அழுகாத குறையாக அமர்ந்து இருப்பான்.

 

அலுவலகத்தில் மட்டும் அல்ல. வீட்டிலும் அதே தான். இருவரும் எதற்காகவும் எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். சண்டை போட்டு அவர்களாக ஓயும் வரை பெற்றவர்கள் அவர்கள் பக்கம் திரும்ப கூட மாட்டார்கள். காரணம் இம்ரான் படும் கொடுமையை அவர்கள் அனுபவிக்க முடியாது.

 

இன்றும் ஒரு பிரச்சனைக்கு நடுவில் மாட்டிக் கொண்டு இம்ரான் விழி பிதுங்கி நிற்க யாமினி வந்து சேர்ந்தாள்.

 

“யுவன் சொல்லுறது தான் சரி.. நீ ஏன் ஆராதனா ஒத்துக்க மாட்ர?” என்று யாமினி பேச “உன் கிட்ட ஒப்பினியன் கேட்டனா?” என்று ஆராதனா கேட்டு வைத்தாள்.

 

“பாரு யுவா” என்று யாமினி இழுக்க “ஹேய்.. இந்த சின்ன குழந்த மாதிரி கம்ப்ளைண்ட் பண்ணுறத விட்டுட்டு வந்த வேலைய மட்டும் பாரு. சும்மா எங்க பிரச்சனைக்கு நடுவுல வராத.  இதோட பல தடவ இத சொல்லிட்டேன். திரும்ப வந்தா என்ன நடக்கும் னு தெரியாது” என்று ஆராதனா காட்டமாக பேசி விட்டாள்.

 

எப்போதுமே இருவர் பிரச்சனையில் யாரையும் இடையில் விட்டது இல்லை. அப்படி இருக்க யாமினி மட்டும் நுழைந்தால் எப்படி?

 

இம்ரான் மட்டும் தான் விதி விலக்கு. ஏனென்றால் அவன் யாருக்கும் ஆதரவாக நிற்க மாட்டான். எது நியாயமோ அதை மட்டுமே சொல்லுவேன். சண்டையை விடுங்கள் என்று அறிவுரை கூற மாட்டான். எதற்காக வாக்குவாதம் என்று ஆராய்ந்து பேசுவான்.

 

“ஆரா… போதும்… நீ கிளம்பு யாமினி. ” என்று எதையோ கொடுத்து யுவன் அவளை வெளியே அனுப்பி விட்டான்.

 

“அவ வயசுல பெரியவ… இப்படி தான் பேசுவியா?” என்று யுவன் கேட்க “நான் எத்தனை தடவ சொல்லி இருக்கேன். நடுவுல வராத னு . அவ கேட்குறாளா?” என்று ஆராதனா கேட்டாள்.

 

“அவ இனி வர மாட்டா. நான் சொல்லிடுறேன். போதுமா?”

 

“சந்தோசம். அப்படியே நான் அப்ரூவ் பண்ண ப்ராஜெக்ட் தான் முதல்ல முடிக்கனும். புது டீம் நீ ரெடி பண்ணிடு”

 

“முடியாது. நான் சைன் பண்ணிட்டேன். இந்த டேட்ல முடிப்பேன் னு”

 

“அது உன் இஷ்டம்.‌ இது நேத்தே சைன் ஆகிடுச்சு. நீ வேணும் னா வேற டீம் போட்டுக்க.‌ என்‌ பக்கம் வராத.”

 

ஆராதனா திட்டவட்டமாக கூறி விட்டு எழுந்து சென்று விட்டாள்.

 

“இவ ஏன்‌டா இப்படி இருக்கா? எல்லாத்துக்கும் எதிரா தான் போகனுமா?”

 

“இந்த தடவ நீ பண்ணுறது தான்‌ தப்பு யுவா… ஆரா நேத்தே வேலைய ஆரம்பிச்சுட்டா. இப்போ போய் நடுவுல கேட்டா?”

 

“ஒன் டே தான‌டா?”

 

“ஒன் டே உனக்கு ஈசியா இருக்கா?”

 

“இப்ப என்ன அவ பண்ணுறது தான் சரி. அதான?”

 

“உன் மனச கேளு சொல்லும்.‌ என் கிட்ட கேட்காத. நான் கிளம்புறேன்” என்று இம்ரான்‌ எழுந்து சென்று விட்டான்.

 

“இவனும் இம்சை பண்ணுறானே” என்று யுவன் தலையிலடித்துக் கொண்டு வேலையை பார்த்தான்.

 

ஆராதனா அன்று முழுவதும் கடுப்புடன் வேலை செய்து விட்டு வீட்டிற்கு வர அங்கு அவளுக்கு வேறு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

 

அர்ச்சனாவும் பத்மினியும் எதோ ஒரு விழாவிற்கு சென்று அங்கிருந்தவர்கள் கிளப்பி விட்டது தான் அந்த அதிர்ச்சி. பேச்சு வாக்கில் யுவனின்  திருமணம் பற்றி வர “அதான் கையிலயே வெண்ணை இருக்கே. அப்புறம் ஏன் வெளிய பொண்ணு தேட போறாங்க?” என்று யாரோ சொல்லி வைத்தனர்.

 

இது நாள் வரை அர்ச்சனாவோ பத்மினியோ இப்படி யோசித்தது இல்லை. இருவருக்குமே இருவருமே பிள்ளைகள் தான். அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதை பற்றி யோசித்தது இல்லை. சொந்தபந்தங்கள் இருந்திருந்தால் இப்படியான வார்த்தை எப்போதோ வந்திருக்கும். இவர்கள் தான் அத்தனை பேரிடமிருந்தும் விலகி இருக்கின்றனரே. சொந்தபந்தங்களால் பிரிவு தான் வருகிறது என்று விலகி விட இப்படி ஒரு யோசனை வராமலே போனது.

 

இப்போது வந்து விட‌ முதலில் இருவரும் தங்களது கணவர்களிடம் கூறினர்.

 

“இப்படிலாம் உன்ன யாரு யோசிக்க சொன்னது?” – சத்தியன்

 

“முதல்ல பதில சொல்லுங்க. அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சா நல்லா தான இருக்கும்?” – அர்ச்சனா.

 

“அதெல்லாம் நீ ஆரா கிட்ட கேளு. உன்ன நாலு திட்டு திட்டி சண்டைக்கு வராம இருந்தா சரி ” – ரகுநாதன்.

 

“அவள நான் பார்த்துக்குறேன். உங்களுக்கு சம்மதமா இல்லையா?” – பத்மினி.

 

“என் கிட்ட கேட்டா? அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர பத்தி ஒருத்தர் என்ன நினைச்சு இருக்காங்க னு அவங்க கிட்ட தான் கேட்கனும்” – சத்தியன்.

 

“கண்டிப்பா நாளைக்கே கேட்குறேன்” – அர்ச்சனா.

 

“கேட்டு நான் அவன அண்ணனா தான் நினைச்சேன் னு சொல்லி நீ அசிங்க படாம இருந்தா சரி. ” – ரகுநாதன்.

 

“அப்படிலாம் ஒன்னும் சொல்ல மாட்டா ” – பத்மினி.

 

“அதையும் பார்ப்போம். தங்கச்சி னு சொல்லலனா எனக்கு சம்மதம்” – சத்தியன்.

 

“அப்போ சரி தூங்குங்க” – அர்ச்சனா.

 

இரண்டு நண்பர்களும் ஒரே மாதிரி பதில் கூறி விட்டு தூங்கி விட இரண்டு அன்னைகளும் இரவே தீவிரமாக யோசித்து திட்டம் போட்டு விட்டனர்.

 

அதன் விளைவு கோபத்துடன் வந்த ஆராதனாவை அமர வைத்து பேச ஆரம்பித்து விட்டனர்.

 

“ஏன் ஆரா… யுவனுக்கு கல்யாணம் பண்ணலாம் னு அர்ச்சனா நினைக்குது. நீ என்ன நினைக்கிற?” என்று பத்மினி கேட்க “ஆமா ஆரா.. அவனுக்கும் வயசாகுதல?” என்று அர்ச்சனா கேட்டார்.

 

“ஓஹோ… ஆமா.. பெரிய வயசு… ” என்று ஆராதனா உதட்டை சுழிக்க “இந்த வயசுலயே பண்ணா தான் நல்லது. பொண்ணு வேற பார்த்தாச்சு. எதுக்கு நேரத்த தள்ளி போடனும்?” என்று அர்ச்சனா கேட்டார்.

 

“பார்த்தாச்சா? யாரு?”

 

“உனக்கு தெரிஞ்ச ஆளு தான்”

 

“யாரு? எனக்கு தெரிஞ்சவளா?”

 

ஆராதனா புருவம் சுருக்கி யோசிக்க யுவன் வந்து சேர்ந்தான். அவனை அர்ச்சனா தனியாக பிடித்து அழைத்து சென்று விட்டார்.

 

“என்னமா? அங்க தான உட்கார்ந்து பேசிட்டு இருந்தீங்க?” – யுவன்.

 

“இல்லடா… ஆராதனாக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறத பத்தி பேசிட்டு இருந்தோம். அதான் பத்மினி பேசட்டும் னு வந்துட்டேன்”

 

“ஆராக்கு கல்யாணமா? அதுக்கென்ன அவசரம் இப்போ?”

 

“இப்போ இல்லாம வேற எப்போ பண்ணுறது? உன்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னேன். மாட்டேன் னு சொல்லிட்ட. சரி ஆராதனாவுக்காச்சும் பண்ணி வைப்போம்”

 

“இத சொல்லி அவ கிட்ட வாங்கி கட்டிக்காம இருந்தா சரி”

 

“அதெல்லாம் பத்மினி பார்த்துப்பா. பையன பார்த்தாச்சு. இன்னும் ஏன் வெயிட் பண்ணனும்?”

 

“என்னது? எப்ப‌ பார்த்தீங்க? இந்த வேலை எல்லாம் எப்போ நடந்துச்சு?”

 

“எப்பவோ நடந்துச்சு”

 

“ஆமா.. யாரு அது?”

 

“உனக்கு தெரிஞ்ச ஆளு தான்”

 

“யாரு?”

 

“அத அப்புறம் சொல்லுறேன். கல்யாண பேச்சு நடக்குதுல. உனக்கும் பொண்ணு பார்த்து வச்சுருக்கேன் கட்டிக்கிறியா?”

 

“ம்மா… காண்டாகிடும்.”

 

யுவன் இங்கே முறைக்க ஆராதனாவும் அதை தான் செய்தாள்.

 

அர்ச்சனா அங்கிருந்து சென்றதும் “யாரு மா அந்த பொண்ணு? அந்த யாமினி யா?” என்று கேட்டாள்.

 

“அத அப்புறமா சொல்லுறேன். உனக்கு கூட கல்யாணம் பண்ணி வைக்கலாம் னு ஒரு பையன பார்த்து இருக்கேன். நீ என்ன சொல்லுற?”

 

“ம்மா… வேற வேலை இல்லையா உங்களுக்கு?”

 

“இல்ல… நீ வேலை பார்க்கனும் உலகத்த நல்லா தெரிஞ்சுக்கனும் னு தான் இவ்வளவு நாள் சும்மா விட்டோம். இன்னும் என்ன? ஒழுங்கா கல்யாணத்துக்கு ரெடியாகு”

 

“முடியாது போங்க மா” என்று கூறி விட்டு ஆராதனா எழுந்து வீட்டுக்குள் வந்தாள். யுவன் அவளை திரும்பி பார்க்க முறைக்க அவளும் முறைத்து விட்டு வேறு பக்கம் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

“அப்படி யார பார்த்தீங்க அத்த இவ தலையில கட்டுறதுக்கு?” என்று யுவன் கேட்க “ஆமா.. இவன் கிட்ட மாட்டி விட எந்த பொண்ணு சிக்குச்சு உங்களுக்கு?” என்று ஆராதனா அர்ச்சனா விடம் கேட்டாள்.

 

யுவன் அவளை முறைக்க அவளும் முறைத்து பார்த்தாள்.

 

“நான் பார்த்த பொண்ணு உனக்கு எதிர்ல தான் டா இருக்கு” என்று அர்ச்சனா கூற யுவன் அதிர்ச்சியுடன் ஆராதனாவை பார்த்தான்.

 

“இவன் தான் நான் சொன்ன பையன்” என்று பத்மினி கை காட்ட ஆராதனாவும் யுவனும் ஒன்றாக எழுந்து விட்டனர்.

 

“என்னது … இவன போய் கட்டிக்கவா? “

 

“என்னது? போயும் போயும் இவளயா எனக்கு பொண்ணு பார்த்து வச்சீங்க?”

 

“இவன கட்டுறதுக்கு கிணத்துல குதிக்கலாம்”

 

” இவள கட்டுறதுக்கு கடல்ல விழலாம்”

 

“விழு டா.. எனக்கென்ன போச்சு. நிம்மதியா இருந்துடுவேன்”

 

“நீ போய் கிணத்துல விழு டி. என் விதி கிட்ட இருந்து தப்புச்சுடுவேன்.”

 

“என்ன வேணாம் னு சொல்லிட்டல அதோட ஓடி போயிடு. ஓவரா பேசுன வாய உடைச்சுடுவேன்”

 

“ரவுடி. கல்யாணம் னு சொன்னதுக்கே வாய உடைக்க கிளம்பிட்டா. இவள கட்டி வைக்க பார்க்குறீங்க. ம்மா.. அத்த.. என்ன முழுசா பார்க்க ஆசை இருந்தா இதோட இந்த பேச்ச விடுங்க”

 

“சரி தான் போடா. உன் முஞ்சிக்கு நான் அதிகம். எனக்கு நீ ரொம்ப கம்மி. ஆனா ஒரு விசயம் கரெக்ட்டு. மவனே கல்யாணம் கில்யாணம் னு சொல்லிட்டு வந்த… எல்லாத்தையும் விட்டுட்டு உன்ன தான் போட்டு தள்ளுவேன்”

 

“உன்ன கட்டிக்குறதும் சாகுறதும் எனக்கு ஒன்னு தான்”

 

யுவனை முறைத்து பார்த்தவள் “அத்த உங்க வீட்டுல நான் வந்து தங்கனும் னா நேரா சொல்லுங்க. காலத்துக்கும் இருக்கேன். அதுக்காக உங்க மகன் தலையில கட்டி வைக்க நினைச்சீங்க. உங்கள டைவர்ஸ் பண்ண வேண்டி வரும்” என்று ஆராதான திட்டவட்டமாக கூறினாள்.

 

“அட ப்பே.. வந்துட்டா டைவர்ஸ் பத்தி பேச” என்று யுவன் கூறினான்.

 

அத்தையிடம் பேசியவள் யுவனை முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட அவனும் முகத்தை திருப்பிக் கொண்டு அறைக்குள் சென்றான்.

 

அர்ச்சனாவும் ப்தமினியும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாக பார்த்தனர்.

 

“கண்டு பிடிச்சுட்ட தான?” என்று அர்ச்சனா கேட்க “சத்தியமா எதிர் பார்க்கல” என்றார் பத்மினி.

 

“நானும் தான். ரெண்டு பேர் மூஞ்சியும் கல்யாணம் பண்ணிக்க னு சொல்லும் போது இருண்டு போச்சு. பார்த்த‌ மாப்பிள்ள பொண்ணு இவங்க தான் னு தெரிஞ்சதும் அந்த இருட்டு காணாம போயிருச்சு. ” – அர்ச்சனா

 

“சீக்கிரமே நீ எனக்கு சம்பந்தி ஆகிடுவ போலயே”

 

“ஆமா பொண்ணு வீட்டு காரவங்க எவ்வளவு நகை போடுவீங்க?”

 

“நீயே போட்டு அவள கூட்டிட்டு போயிக்கோ. என் கிட்ட எதுவும் கேட்காத”

 

“நல்ல அம்மா நல்ல மாமியார்” என்று அர்ச்சனா கூற‌ இருவரும் சிரித்து விட்டனர்.

 

*.*.*.*.*.

 

அறைக்குள் வந்து நின்ற யுவன் மீண்டும் மீண்டும் அர்ச்சனா சொன்னதையே யோசித்து பார்த்தான்.

 

“ஆராவா…?” என்று தனக்கு தானே கேட்டவன் முகத்தில் அவனையும் அறியாமல் புன்னகை வந்தது. கண்ணாடி முன்னால் வந்து நின்றவன் “எப்படி ஆராவ கல்யாணம் பண்ணி வைக்க தோனுச்சு இவங்களுக்கு?” என்று தனக்குத் தானே கேட்டான்.

 

“இதுக்கு சரி னு சொல்லுறதா வேணாமா?” என்று யோசித்தவன் முகத்தில் இருந்த புன்னகை பெரிதானது.

 

“வேணாம் னு சொல்லிடுவியா நீ?” என்று கண்ணாடியை பார்த்து தன்னிடமே கேட்டவன் எல்லா பக்கமும் தலையாட்டி சிரித்து விட்டான்.

 

“நான் உனக்கு கம்மியாடி? உன்ன ஒரே மாசத்துல சம்மதிக்க வைக்கிறேன் பாரு” என்று சபதம் எடுத்துக் கொண்டான்.

 

“இவள நம்ம எப்போ இப்படி நினைக்க ஆரம்பிச்சோம்? இவள தங்கச்சியாவோ ஃப்ரண்டாவோ நாம நினைச்சதே இல்ல. அதையும் தாண்டி எப்படி யோசிச்சேன் னு தெரியலையே….” என்று தனக்கு தானே பேசிக் கொண்டு மெத்தையில் விழுந்தான்.

 

“எப்போ எதுக்கு ஏன் னு ஆராயாம கல்யாண வேலைய ஆரம்பிக்கிறது பெட்டர்” என்ற முடிவுக்கு வந்தவன் ஆராதனாவை எப்படி சம்மதிக்க வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

 

“உன்ன எல்லாம் யாரு டி அவன் கல்யாணத்த பத்தி விசாரிக்க சொன்னது?” என்று ஆராதனா தன்னை தானே கண்ணாடியின் முன் நின்று திட்டிக் கொண்டிருந்தாள்.

 

“இப்ப பாரு உன்னயே அவனுக்கு கட்டி வைக்க பார்க்குறாங்க…” என்று தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்து விட்டாள்.

 

“இருக்க டென்சன்ல இது வேற புதுசா…. ஆனா நல்ல வேளை அவனும் வேணாம் னு சொல்லிட்டான். இல்லனா சிக்கி இருப்பேன்” என்று நினைத்தவள் இதிலிருந்து தப்பிக்கும் மார்க்கத்தை யோசிக்க ஆரம்பித்தாள்.

 

இருவரின் யோசனையும் வெவ்வேறு பாதையில் பயணிக்க காலம் இருவருக்கும் ஒரே பதிலை வைத்து காத்திருந்தது.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்