Loading

ஒரு வாரம் சென்றது. கீதன் வேலைச் சுழலில் சிக்கிக் கொண்டான். நிரண்யாவுடன் அலைபேசியல் கதைக்க நேரமென்பதே இல்லை. மனைவியை காணும் ஆவலில் கொஞ்சம் அதிகமாய் வேலை செய்தான். பத்து நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை ஏழு நாட்களில் முடித்தான். அவ்வப்பொழுது அவளிடம் நலன் விசாரணைகள் மட்டுமே நிகழ்ந்தது.‌ எட்டாவது நாள்.. விமானத்தில் அமர்ந்திருந்தான் கீதன். நிர்ணயாவைப் பற்றிய எண்ணத்தில் உலகை மறந்திருந்திருந்தான். அவளின் அன்னையை துணைக்கு அழைத்துக் கொள்ளும்படி கூறியிருந்தான். ஆனால் அவள் மறுத்துவிட்டாள். தனிமையில் அவனைத் தேடப் போவதாக காரணம் கூறினாள். இன்னும் சில மணி நேரங்களில் அவனுடைய அவளின் முன் இருப்பான். வேலையின் அலுப்பையும் தாண்டி, புதியதொரு உத்வேகம் பிறப்பதை உணர்ந்தான்.

 

அவனுடைய குடியிருப்பிற்குள் நுழைந்து, மின் தூக்கியில் ஏறி, ஆறாவது தளத்திற்கான பொத்தானை அழுத்தினான். வராண்டாவில் அவனுடைய காலடித் தடம்‌ டொக் டொக் என்று எதிரொலித்தது. அவர்கள் இருக்கும் தளத்தில் பெரும்பாலும் யாரும் இல்லை. இவனைத் தவிற இன்னும் சில குடும்பங்கள். அந்த குடும்பங்களில் கணவன் மனைவி என இருவரும் வேலைக்கு சென்றுவிடுவார்கள். அதனால் மிகவும் அமைதியாகவே இருக்கும் அந்த தளம். 

 

கொஞ்சம் துள்ளல் கலந்திருந்தது அவன் நடையில். வீட்டின் அருகில் சென்று கதவைத் தட்ட முனைய, கதவு தானாக திறந்துகொண்டது‌‌. கொஞ்சம் அதிர்ச்சி மேலிட உள்ளே சென்றான். அறையின் கதவுகள் அனைத்தும் திறந்து கிடந்தது. வரிசையாக ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தான். வரவேற்பறையில் தொலைக்காட்சி அலறிக்கொண்டிருந்தது. “நிரு.. நிரு” என்று அழைத்துப் பார்த்தான். அரவமேதும் இல்லை. தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்து வைத்தான்.

 

அடுக்களைக்குள் நுழைந்தான். ஒரு பாத்திரம் கருகியிருந்தது‌. அங்குள்ள ஒவ்வொன்றாக திறந்து பார்த்தான். ஒரு பாத்திரத்தில் நண்டு சமைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் அவன் மனதில் அச்சம் குடிகொண்டது‌. நேத்திரங்களை சுருக்கி நெறித்து ஆராய்ந்தவன், மீண்டும் “நிரு.. நிரு..” என்று கத்தினான்.

 

வீட்டில் எங்கும் அவள் இல்லை. குளியலறையில் தண்ணீர் விழும் ஆர்வம் கேட்க, அங்கு சென்றான். ஆனால் அதுவும் வெளியில் தாழிடப்பட்டிருந்தது. தாழ்ப்பாள் நீக்கி உள்ளே சென்று பார்த்தான். தண்ணீர் குழாயிலிருந்து கொட்டிக் கொண்டிருந்தது.

 

நிரண்யாவை எங்கும் காணவில்லை. அவனை பயம் தொற்றிக் கொண்டது. அவளின் அலைபேசிக்கு அழைத்துப் பார்த்தான். அது வீட்டிலே அடித்து ஒலித்து அடங்கியது. என்ன செய்வதென்று தெரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தான். அவளின் அன்னைக்கு அழைத்துப் பார்க்கலாம் என்று அவரின் எண்ணை தேடி எடுக்க, அவளின் அலைபேசி மீண்டும் ஒலித்தது. நிரண்யாவின் அன்னை அழைத்திருந்தார் அவளுக்கு. அதைக் கண்டதும் மனதில் ஏமாற்றம் மூண்டது. அவனுக்கு இருந்த சிறு நம்பிக்கையும் கானல் நீராய் போயிற்றே என்று அவரின் அழைப்பை ஏற்றான்.

 

அழைப்பை ஏற்றுவுடன் அவளின் அன்னை பதற்றத்துடன், “ஏன்டி.. நிரு.. எத்தனை முறை கூப்பிடுறேன். எடுத்து பேசுனா என்ன.. மாப்பிள்ளை வேற ஊருக்கு போயிருக்காரு. நீ தனியா இருக்க. இப்படி போனை எடுக்காம இருந்தா பதறுது” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார். 

 

கேட்டவன் தான் அரண்டு போனான். எத்தனை முறை அழைப்பது என்று கடிந்து கொள்கிறார் என்றால், நிரு எப்பொழுதிலிருந்து அழைப்பை ஏற்காமல் போனாள். அவளுக்கு ஏதேனும் பிரச்சனையோ. யாரேனும் கடத்திச் சென்று விட்டனரா? அப்படி யாரும் குடியிருப்புக்குள் வர வாய்ப்பில்லையே. இங்கு பாதுகாப்பு அதிகம். அவளுக்கு என்ன நிகழ்ந்திருக்குமோ என்று பதறியதில் பதிலுரைக்க மறந்துவிட்டான்.

 

“ஏய்..‌ நிரு.. என்ன இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம். ஏதாவது பேசு.. மாப்பிள்ளை எப்போ வர்றாரு..” என்று பெற்ற அன்னையின் மனம் பரதவிக்க, சுயவுணர்வு பெற்றான் கீதன்.

 

“அத்தை.. நான் கீதன் பேசுறேன். இப்போதான் வந்தேன். நிரு குளிக்கப் போயிருக்கா.. வந்ததும் கூப்பிட சொல்லவா?” என்று நைச்சியமாக அழைப்பைத் துண்டிக்க முயன்றான்.

 

எதுவும் உறுதி செய்யப்படாத பொழுது அவரிடம் கூறி, அவரையும் பதற்றமாக்க அவன் விழையவில்லை.

 

“ஓ.. நீங்களா.. மாப்பிள்ளை.. எப்படி இருக்கீங்க.. இவளுக்கு என்ன ஆச்சு.. நான் நேத்துலேந்து அத்தனை முறை போன் செஞ்சேன். ஆனா எடுக்கவே இல்லை” என்று குறைப்பட்டார்.

 

“அது… அவ போனை சைலண்ட் மோட்ல வச்சுட்டா.. அதான்” என்று சமாளித்து வைத்தான்.

 

“சரி மாப்பிள்ளை.. நீங்க ரெஸ்ட் எடுங்க.. அவ வந்ததும் கூப்பட சொல்லுங்க” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

 

கீதன் கையில் இருந்த அலைபேசி நழுவி கீழே விழுந்தது. திரட்டியில்(கண்கள்) திரண்டு உருண்டு வந்த நீர் கன்னத்தின் மேட்டில் இளைப்பாற, அவன் மனம் அமைதியின்றித் தவித்தது. எங்கிருந்தோ அவள் குரல் ஒலிப்பது போல் தோன்ற எழுந்து அங்கும் இங்கும் தேடினான். ஆனால் ஆசை கொண்ட நெஞ்சின் கற்பனையாக போனது.

 

அதன்பின் வேகமாக எழுந்து மின்தூக்கியை நோக்கிச் சென்றான். கீழே செக்கியூரிட்டியிடம் சென்று, அவள் வெளியே ஏதும் சென்றாளா என்று விசாரித்தான். அவன் இல்லை என்று கூறினான். குடியிருப்பு முழுக்க தேடிவிட்டான். மீண்டும் ஒருமுறை வீட்டிற்கு சென்று தேடிப் பார்த்தான். ஆனால் பலன்தான் சுழியம். அடியும் அறியாமல் நுனியும் தெரியாமல் என்னவென்று தேடுவது. யாரிடம் கேட்பது. நேரம் செல்ல செல்ல அவனை பயம் பிடித்துக்கொண்டது. 

 

என்ன செய்வதென்று தெரியாமல் பைத்தியம்போல் அலைந்தான். இனி தேடுவது வீண் என்று அறிந்தவன், அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று சிந்தித்தான்.

 

தன் நண்பனுக்கு அழைத்து விவரம் கூற, அவன் இவனைத் தேடி வந்துவிட்டான். இருவரும் வண்டியை எடுத்துக்கொண்டு சற்று நேரம் குடியிருப்பு பகுதியின் வெளியில் தேடினர். ஆனால் அவள் எங்கும் கிடைக்கவில்லை. அருகில் உள்ள கோவில், கடைகள் என்று அவள் வழமையாக செல்லும் இடங்கள் அனைத்திலும் தேடிவிட்டான். 

 

இனி அவன் உடலில் வலு இல்லை. இவ்வளவு நேரம் மனம் தொய்ந்திருந்தாலும், அவன் உடல் செயல்பட ஒத்துழைத்தது. ஆனால் இப்பொழுது மனமும் உடலும் சோர்ந்து போனது. வகைவகையாய் வண்ணங்கள் தெளித்து, அந்தி வானம் அழகியலைப் பரப்பி, இரவினை இனிமையாய் வரவேற்க தயார் நிலையில் இருந்தது. அதில் இவனது படபடப்பு அதிகமானது.

 

அதன்பின் அவன் நண்பன், சிவா போலீஸிடம் போகலாம் என்று கூறினான். 

 

“என்னடா.. போலீஸா.. அவ பேரு என்ன ஆகுறது.. அது சரியா வருமா? ” என்று வருந்தினான் கீதன்.

 

“அவளை யாராவது கடத்திருந்தா என்ன செய்வ.. நாம சீக்கிரம் போறதுதான் பெஸ்ட்.. அவளுக்கு எதுவும் ஆகக்கூடாதுடா..” என்று கீதனுக்கு எடுத்துக் கூற, அவனும் சரியென்று தலையை ஆட்டினான்.

 

சிறிது நேரம் யோசித்த சிவா, “சரிடா.. நாம கம்ப்ளையிண்ட் எதுவும் கொடுக்க வேண்டாம். எனக்கு தெரிஞ்ச, ஒரு ஐ.பி. எஸ் இருக்காங்க. பேரு நற்பவி.. அவுங்ககிட்ட சொல்லி தேட சொல்லலாம்” என்று யோசனை வழங்க, அது சரியென்று தோன்றியது கீதனுக்கும்.

 

நற்பவிக்கு அழைத்தான் சிவா.. ஓரிரு அழைப்புகளைத் துண்டித்தாள் அவள். பின் சிறிது நேரத்தில் அவளே அழைத்தாள். அவள் மீண்டும் அழைக்கும்வரை இவர்கள் இருவரும் செயலற்று போயிருந்தனர்.

 

“சொல்லுங்க சிவா.. எதுவும் அவசரமா.. இத்தனை தடவை கூப்பிட்டிருக்கீங்க?” என்று வினவ, அவனும் நிகழ்ந்ததைக் கூறினான். அனைத்தையும் தெளிவாய்க் கேட்டவள், “சரி.. எங்க இருக்கீங்க.. சொல்லுங்க நான் வரேன்..” என்று கூறியவள் கீதனின் குடியிருப்பிற்கு வந்தாள்.

 

அவர்கள் இருவரும் குடியிருப்பின் வெளியில் காத்துக் கொண்டிருந்தனர். நற்பவி வந்ததும், கீதன் வீட்டிற்குப் போகலாம் என்று அவள் கூற, “வீட்ல அவ இல்ல மேடம்.. நான் நல்லாவே தேடிட்டேன்..” என்றான்.

 

“மிஸ்டர் கீதன்.. நீங்க தேடுறது வேற.. நாங்க தேடுறது வேற.. எந்த க்ளூவும் இல்லாம எப்படி கண்டுபிடிக்கிறது” என்று எதிர் கேள்வி எழுப்பிவிட்டு, வேகமாக நடந்தாள்‌. நண்பர்கள் இருவரும் அவளின் பின்னே ஓடினர்.

 

குடியிருப்பின் உள்‌சென்றவுடன் விழிகளை எட்டுத் திக்கும் சுழலவிட்டபடியே நடந்து சென்றாள். எதுவும் விசித்திரமாய் தெரிகிறதா என்று நிமிடத்தில் அலசி ஆராய்ந்து விட்டது அவள் பார்வை. பின் மின் தூக்கியில் ஏறி ஆறாவது தளத்திற்கு சென்றனர். கீதன் வீட்டின் கதவை திறந்தான். 

 

வீட்டிற்கு உள் நுழைந்ததும், வீட்டை பார்வையில் அலசினாள்.

 

“கீதன், உங்க மனைவி பேர் என்ன?” நற்பவி.

 

“நிரண்யா..”

 

“அவுங்க வேலைக்கு போறாங்களா?”

 

“இல்லை மேடம்.. வீட்லதான் இருக்காங்க..”

 

“நீங்க எங்க போனீங்க. அவுங்க காணாம போனாங்கன்னு எப்போ தெரியும். கடைசியாக எப்போ உங்களுக்கு பேசுனாங்க” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினாள்.

 

அவன் அனைத்திற்கும் பதிலளித்தான்.

 

“நீங்க வீட்டிற்கு வரும்பொழுது வீடு என்ன நிலைமையில் இருந்தது. எப்பவும் வீடு இப்படி கலைஞ்சுதான் இருக்குமா?”

 

“இல்ல மேடம்.. வீடு எப்பவும் சுத்தமா வச்சுப்பா.. நான் வீட்டிற்கு வரும்போது வீடு இன்னும் அலங்கோலமா இருந்துச்சு.”

 

“உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினை..”

 

“அதெல்லாம் இல்லை.. எங்களுக்கு கல்யாணமாகி ஒரு மாசம்தான் ஆகுது..”

 

“ஸோ வாட்? அப்படி இருந்தா எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாதுன்னு இருக்கா என்ன?” என்று கூறியவள், அங்கு மேசையில் இருந்த இழுப்பறைகளை சோதனை செய்தாள். 

 

அதிலிருந்து அவர்கள் மனநலமருத்துவரை சந்தித்தபோது அவரளித்த ப்ரிஸ்க்ரிப்ஷன் இருந்தது. அதை வேகமாக எடுத்தவள், “இது என்ன?” என்றாள் கேள்வியாக. 

 

“இது வேற பிரச்சினை மேடம். இதுக்கும் இப்போ அவ காணாம போனதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..”

 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொன்னீங்க. இப்போ இது வேற பிரச்சினைன்னு சொல்றீங்க..”

 

“மேடம்.. நீங்க துருவி துருவி கேள்வி கேக்குறதைப் பார்த்தா என் மேலையே சந்தேகப்படுறீங்க போல..”

 

“ஏன் சந்தேகப்படக்கூடாது..? அது ஏன் உண்மையா இருக்கவும் கூடாது..எந்த உத்தரவாதமும் இல்லையே” என்றே அவள் கூற, கீதன் திடுக்கிட்டான்.

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்