ஒரு கோப்பையில் அடைத்தேன் காதலை – சிந்தாமல் சிதறாமல் நீ பருகிட..
ஆனால்…
கண்ணாடி சில்லாய் உடைந்த கோப்பையின் கூர்முனைகள் கிழித்தது என் காதலை! – அவன்.
முனை கிழித்த முன்னம்(உள்ளம்) என் நெஞ்சமெனும் மஞ்சத்தில் பத்திரமாய் இருக்குதடா!
துவள வேண்டாம்! தோகை கொண்டு வருடி காயம் ஆற்றுவேன்! – அவள்.
சில நாட்கள் சென்றது. கீதனும் நிரண்யாவும் வாழ்க்கையை அதன் போக்கில் வாழப்பழகினர். ஒருமுறை மித்ராவிடமும் சென்று வந்தனர். இப்பொழுதெல்லாம் குரல் கேட்பது கொஞ்சம் குறைந்திருக்கிறது என்று கூறியிருந்தாள் நிரண்யா. கீதனும் வீட்டிலிருந்தே வேலைப் பார்த்தான். அதனால் இருவருக்குள்ளும் இருந்த இடைவெளி குறைந்து போயிருந்தது.
அன்று அவன் அலுவலக வேலையாக வெளியூர் சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தான். அவனுக்கு உண்மையில் செல்லவே மனம் இல்லை. ஆனால் தவிர்க்கவும் முடியாத சூழல். நிரண்யாவும் வருத்தமாகவே இருந்தாள்.
“கீதன்… கண்டிப்பா போகணுமா?” என்றாள் வருத்தத்துடன்.
“இல்லைன்னு சொல்லத்தான் ஆசை. ஆனா உண்மை அது இல்லை நிரு. கண்டிப்பா போகணும்..” என்று அவனும் வருத்தத்துடனே கூறினான்.
சரியென்று அவனுக்கு தேவையான உடைகள் மற்றும் பொருட்கள் என்று அனைத்தையும் பெட்டியில் அடுக்க ஆரம்பித்தாள்.
கீதன் அவள் வேலை செய்யும் அழகை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் ஊசியாய் துளைக்கும் பார்வை அவளை ஏதோ செய்திட, சற்று தடுமாற்றம் அவளிடம்.
மெதுவாக அவளின் பின்னே வந்தவன், அவளின் இடை வளைத்து அவளைத் திருப்பினான். அவனைக் காணும் திண்ணம் இல்லை அவளிடம். கொஞ்சம் அதிகமாய் துடித்த இதயத்தை சீர்திருத்தம் செய்ய முயற்சிக்க, அது தோல்வியைத் தழுவியது. கருவிழிப் பாவைகள் அங்கும் இங்கும் மருகிட, அவளின் பார்வையும் இலக்கற்று அலைந்தது.
“என்ன ஆச்சு?” என்றான் மிகவும் மென்மையாக.
ஒன்றுமில்லை என்று இடவலமாக தலையை ஆட்டினாள். அவளின் இடைப் பிடித்து அங்கிருந்த திட்டில் அமரவைத்தான்.
“நிரு.. என்னைப் பாரு..” என்றான் சிறு கட்டளையுடன். அவனின் கட்டளையை ஏற்று விட்டாள். ஆனால் அவளின் விழிப்பாவைகளுக்கு மூளை கட்டளைப் பிறப்பிக்க வேண்டுமே.
“பயமா இருக்கா.. இப்போ ஒண்ணும் செய்ய மாட்டேன். கவலைப் படாத. இந்த பிரிவு இப்போ ரொம்ப அவசியம். அதுவும் ஒரு காரணம் நான் வேற ஊர் போறதுக்கு. நான் திரும்பி வரும்போது நமக்குள்ள இப்போ இருக்க இடைவெளி இல்லாமல் போகணும்..” என்று சிறு புன்னகையுடன் கூறினான்.
“சரி… இப்போ ஏன் இப்படியே உக்காந்திருக்க?” என்றான் புருவம் சுருக்கி.
“நான் கீழ இறங்கணும்..”
“இறங்கு..”
“நீங்க… நீங்க… நிக்கிறீங்களே..”
“சரி.. நான் நிக்கல.. நானும் உன்கூட உக்காந்துக்குறேன்..” என்று கூறி திட்டில் ஏறி அமர்ந்தான். அவளின் தோள் மேல் கைகள் போட்டுக்கொண்டான்.
“இன்னும் கொஞ்சம் பேக் பண்ணனும். அப்புறம் மறந்துடுவேன்” என்றாள் நெளிந்து கொண்டே.
“எதை மறப்ப.. என்னையா?” என்றான் விளையாட்டாக.
“ம்ம்ப்ப்ஸ்.. ஏன் இப்படி பேசுறீங்க..” என்று கடிந்து கொண்டாள். அவனின் கைகளை விளக்க முற்பட, அவன் பிடி இறுகியிருந்தது.
“விடுங்க.. நான் கோவமா இருக்கேன்..” என்று தள்ளி அமர முயன்றாள்.
“ஏய்.. நான் விளையாட்டுக்குச் சொன்னேன். நீ ஏன் இவ்ளோ ரீயாக்ட் பண்ற..”
“அதெப்படி சொல்லலாம். உங்களை எப்படி மறப்பேன்..”
“அட.. இவ்ளோ கோவம் வருமா உனக்கு. இது தெரியாம போச்சே..”
“எனக்கு நிறைய கோவம் வரும். உங்களுக்கு தெரியாது. தெரிஞ்சுக்காம இருக்கது நல்லது..”
“சரிங்க மேடம்.. அது எனக்கு தெரியாமையே போகட்டும்.. நான் ஏதோ கொஞ்சம் ரொமாண்ஸ் பண்ணலாம்னு என்னை மறந்திடுவியாடின்னு கேட்டேன்.. நீ இந்த மாதிரி அவதாரம் எடுத்து நிக்கிற..”
“இதுல என்ன ரொமான்ஸ் இருக்கு..” என்று நொடித்துக்கொண்டாள்.
“ஓ.. மேடம் எனக்கு ரொமான்ஸ் சரியா வரலைன்னு சொல்றீங்க.. நீங்க சொல்லிக்கொடுங்க.. நான் தெரிஞ்சுக்குறேன்..”
“ஷ்… விளையாடாதீங்க..”
“நீ மறந்திடுவேன்னு சொல்லிருந்தன்னு வச்சுக்கோ சீனே வேற மாதிரி ஆகிருக்கும்..”
“எப்படி ஆகிருக்கும்..”
“வாலி படம் பார்த்ததில்லையா..”
“பார்த்திருக்கேன்..”
“அதுல என்ன வரும்..”
“அந்த படம் எனக்குப் பிடிக்காது..”
“ரொம்ப தப்புமா.. இப்படி சாமியாரா இருந்தா என்னோட பொழப்பு என்ன ஆகுறது..”
“நான் அடுக்கி வைக்கணும்.. வழி விடுங்க..”
“மாட்டேன்.. முதலில் நான் சொல்றதையாச்சும் கேளு..”
“சரி.. சொல்லுங்க..”
“என்னத்த சொல்றது. நான் ஊதி வச்ச பலூனை உடைச்சுட்ட.”
“சரி.. சொல்ல வேண்டாம் விடுங்க. வேற பலூன் வாங்கி ஊதலாம்.”
“அட.. இப்படியெல்லாம் கூட பேச தெரியுமா உனக்கு..”
“உங்க காத்து இங்க கொஞ்சம் அடிச்சிருச்சு.”
“சரி.. கேளு.. அதுல மௌத் ஆர்கன் சீன் பாத்துருக்கியா?” என்றதும் மெல்லிய வெட்கம் அவள் முகத்தில்.
“இல்ல.. வழியை விடுங்க” என்று தள்ளிவிட்டு சென்றாள் அவனை.
“உதடு ஒண்ணு சொல்லுது.. கண்ணு ஒண்ணு சொல்லுது.. பொய் சொல்ற உதட்டுக்கு ஏதாவது தண்டனை தரலாம்..” என்று அவன் கூற, அவனைப் பிடித்துத் தள்ளினாள். பொய்யாக அவனும் கட்டிலில் சாய்ந்தான்.
பெட்டியடுக்கி முடித்து சற்று நேரத்தில் அவன் கிளம்பினான். அவனை வழியனுப்பி வைக்க அவளும் அவனுடன் சென்றாள். அவர்கள் பெரிய குடியிருப்பில் இருக்க, ஆறாவது மாடியிலிருந்து லிஃப்ட் மூலம் கீழே இறங்கி வந்தனர். கீதனுக்கு கார் தயாராய் இருந்தது. பிரிவின் பரிவைப் பார்வையில் உணர்த்திவிட்டுச் சென்றான் கீதன்.
மகிழுந்து சென்ற வழியையே பார்த்து கொண்டிருந்தாள் நிரண்யா. அவன் திரும்பி வந்துவிட மாட்டானா என்ற ஏக்கம் அவள் விழிகளில் கண்ணீராக வழிந்தது. ககனம் கருத்திருந்தது. வானை உறுத்து விழித்தாள் அவள். அடர்ந்த மேகக் கூட்டங்கள், பல உருவங்களை ஓவியமாய் தீட்டிட, அதை உருவகப்படுத்தியது விழிகள். பெருமூச்சை வெளியிட்டவள் மீண்டும் வீட்டிற்கு செல்ல திரும்பினாள். அவனுடன் கழித்தப் பொழுதுகள், அவளை பின்னோக்கி இழுத்துச் சென்றது. அவனில்லாத வீட்டின் வெறுமையை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கால்கள் போன போக்கில் நடந்தாள். ஆறு மாடியையும் ஏறினாள். நண்பகல் வேலைதான். இருந்தாலும் யாரும் வெளியில் இல்லை. ஆறாவது மாடியில் வராண்டா வெறிச்சோடி இருந்தது. வேலைக்கு செல்பவர்கள் சென்றிருக்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பி சென்றிருக்க வேண்டும். வீட்டரசிகள் அடுக்களையில் அமிழ்ந்து போயிருக்க வேண்டும். அதுவே இந்த மயான அமைதிக்குக் காரணம் என்று எண்ணிக் கொண்டாள். கீதனைப் பற்றி நினைப்பிலே வீட்டிற்கு அருகில் வந்து கதவைத் திறக்க, பின்னிருந்து ஒரு சத்தம் வந்தது. யோசனையாக திரும்பிப் பார்த்தாள். எதிர் வீட்டின் கதவு க்ரீச் என்ற சத்தத்துடன் மெதுவாக திறந்தது.
அந்த வீட்டில் யாருமில்லை என்று கேள்வியுற்றிருந்தாள் நிரண்யா. கதவு திறந்ததும், தன் வீட்டைப் பூட்டிவிட்டு, அந்த வீட்டின் வாசல் அருகில் சென்றாள். கதவிற்கு நேராக ஜன்னல். அதிலிருந்து கொஞ்சம் அதிகமான காற்று வந்தது. கதவு மெல்ல காற்றில் ஆடியது. அவள் மெதுவாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். வரவேற்பு அறையில் இருந்த சைனா பெல் காற்றில் அசைந்து கீதம் இசைத்தது. வரவேற்பு அறையின் வடக்கு திசையில் பலகணியிருந்தது. வீடு முழுக்க ஒட்டடையும் தூசியும். திடீரென காற்று வேகமாக அடிக்க, கதவு அறைந்து சாத்திக்கொண்டது. அங்கிருந்த ஏதோ ஒரு பொருள் கீழே விழுந்து உடைந்தது. கண்ணாடி உடைந்த சத்தம் போல் இருந்தது. நிரண்யா சற்று திடுக்கிட்டாள். பின் கதவைத் திறந்தாள். வீட்டிற்குள் காற்று இல்லாமல் இருக்க, ஜன்னலை சென்று அடைத்தாள். பின் கூடத்தில் உடைந்து கிடந்த பொருளின் அருகில் சென்றாள் புகைப்பட சட்டம் குப்புற விழுந்திருந்தது. அதை எடுத்துப் பார்க்க, கண்ணாடி உடைந்திருந்தது. உள்ளுக்குள் ஒரு புகைப்படம். அதில் தூசு படிந்திருந்தது. அந்த தூசியை கைகளால் விளங்கினாள்.
உடைந்திருந்த கண்ணாடி அவளின் விரல்களை பதம் பார்த்தது. “ஷ்” என்று கைகளை உதிறினாள். இரு துளி உதிரம் அங்கு வடிந்து உறைந்தது. வாயில் விரலை வைத்தவள், அந்த புகைப்படத்தில் இருக்கும் உருவத்தைப் பார்த்தாள்.
அழகாய் ஒரு பெண் சிரித்துக் கொண்டிருந்தாள். ப்ரெண்ச் ஃப்ளாட் போட்டிருந்தாள். சிறிய பொட்டு. எள்ளுப்பூ மூக்கு. உதட்டில் உறைந்திருந்த புன்னகை செண்டிமீட்டர் சிரிப்பாய் இருந்தாலும், அதில் அளவுகடந்த வசீகரம். சில நிமிடம் கண்ணெடுக்காமல் அந்த பெண்ணையே பார்த்தாள். மனதிற்கு நெருக்கமான உருவமாக தோன்றியது.
எங்கிருந்தோ அவளின் அலைபேசி ஒலிக்க, திடுக்கிட்டாள். பின் அவசரமாக உடைந்த புகைப்படத்தை அங்கு வைத்துவிட்டு அவளின் வீட்டை நோக்கி சென்றாள். மீண்டும் ஒருமுறை அலைபேசி அடித்து ஒலித்தது.
கீதன் பலமுறை அழைத்திருந்தான். தன்னையே கடிந்து கொண்டு அவனுக்கு அழைப்பு விடுத்தாள். அலைபேசியில் அழைப்பு செல்லவில்லை. பீப் பீப் என்ற ஒலியே ஒலித்து அடங்கியது. சலித்துக் கொண்டே அலைபேசியை மெத்தையில் தூக்கியெறிந்தாள்.
திகையாதே மனமே!