ஆதிசக்தியின் மடியில் புதைந்து, தனது கர்வங்களையெல்லாம் தொலைத்து, பாவையின் காதலைக் கேட்டு கதறிய யாஷ் பிரஜிதன் அனைவருக்குமே புதிதாகத் தான் தெரிந்தான்.
‘இவ்ளோ அழுவுறான்னா அப்போ உண்மையாவே லவ்வோ?’ கதிரவனுக்கும் லேசாய் புரியத் தொடங்க, இளவேந்தனும் நொறுங்கிப் போயிருந்தார்.
தங்கை மகளென்று அறிமுகம் கிடைத்த பின்னும், மீண்டும் மீண்டும் அவளைத் தொலைக்கிறோம் எனப் புரிந்திட, அவளைச் சென்னைக்கு அனுப்பி இருக்கவே கூடாது என்ற குற்ற உணர்வில் வதைபட்டார்.
தாயும் தமையனும் அழுவதில் கண்மணிக்கு மனமே வலித்தது.
வெகுநாள்கள் கழித்து ஆதிசக்தியின் தோளைத் தொட்டாள்.
“ம்மா… அண்ணாவுக்கு ஆறுதல் சொல்றதை விட்டுட்டு, நீங்களும் அழுதுட்டு இருக்கீங்க! அண்ணா அழாதீங்கண்ணா ப்ளீஸ். அண்ணிக்கு சரியாகிடும் பாருங்க” என்றதை இருவரும் காதில் வாங்கவில்லை.
மூவரும் ஒவ்வொரு விதத்தில் உடைந்திருந்தனர். யாஷ் பிரஜிதனின் எண்ணம் முழுக்க, அவளது தோளில் சாய்ந்து கன்னம் வருடி மீண்டும் காதல் கதைப் பேசிட வேண்டுமென்ற ஏக்கமே! தன் மீது அன்பைப் பொழியும் அந்தக் கண்களின் ஆதிக்கத்திற்காக ஜீவன் மருகியது.
அடுத்த இரு நாள்களுக்கு நிதர்ஷனாவை அப்சர்வேஷனில் வைத்திருந்தனர். அவளது மனநிலையைக் கருத்தில் கொண்டு கதிரவனைத் தவிர வேறு யாரும் அவள் அறைக்குச் செல்லவில்லை.
அவளது உடல்நிலை சீராக இருக்கிறதென்று உறுதி செய்தபின்னரே, அவளை டிஸ்சார்ஜும் செய்தனர்.
பல சோதனைகள் செய்தும், உண்மையில் அவளுக்கு என்ன தான் ஆகிற்று என்ற காரணம் தெரியவே இல்லை.
அவளது சோதனை மாதிரிகளை வைத்து யாஷ் பிரஜிதன் பல்வேறு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்களை அணுகி விட்டான்.
அவனுக்கு பயமெல்லாம், மறந்து போனது வரை பரவாயில்லை. மீண்டும் இதே போல உடல்நிலைக் கோளாறு ஏற்படாது என்பதற்கு என்ன உத்திரவாதம். இப்போதைக்கு அவளது ஆரோக்கியத்திற்கு குறைவில்லை எனக் கூறும் மருத்துவர்களுக்கு இதே எப்போதும் தொடரும் எனக் கூறுவதில் தயக்கம் இருந்தது.
அது தான் யாஷ் பிரஜிதனை அதிகம் பயமுறுத்தியது. கதிரவன் நிதர்ஷனாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றிட, அவளோ ஓய்வெடுக்காமல் அடுத்த நேர்முகத் தேர்விற்கு தயாராகி மாவாட்டிக்கொண்டும், வெளியில் சுற்றிக்கொண்டும் இருந்ததில் கதிரவனுக்கே பயம் வந்து விட்டது.
“சார்… இவள் கம்முன்னு இருக்க மாட்டுறா. எனக்கு ஒன்னும் இல்லன்னு மாத்திரையும் போட மாட்டுறா. டாக்டர் இன்பெக்ஷன் ஆகிடாம பாத்துக்க சொல்லிருக்காங்க. இவ என் பேச்சே கேக்க மாட்றா சார்…” என்று கதிரவனுக்கு யாஷ் போன் செய்து அவளது நலத்தை விசாரிக்கும் போதெல்லாம் இப்படியே புலம்ப, யாஷால் அவளைத் தனியே விட இயலவில்லை.
அவளை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற பரிதவிப்பு ஒரு புறமும், அவளுக்கு மீண்டும் தன் மீது காதல் உணர்வை வர வைத்தே தீர வேண்டுமென்ற பரபரப்பு ஒரு புறமும் வாட்ட, இறுதியாய் அவன் எடுத்த முடிவு தான் இது.
நடந்து முடிந்தவைகளை மீண்டும் நிகழ்த்திக் காட்டுவது.
‘பிளேஸ்பேக் ரீக்ரியேட்’ மட்டுமே ஒரே தீர்வு என்றவனை மொத்த குடும்பமும் குழப்பமாகப் பார்த்தது.
மகேந்திரனும் நடந்ததை அறிந்து வெகுவாய் நொந்து போனார். யாஷ் பிரஜிதனுக்கு இந்த திட்டம் உதயமானதுமே அவன் சென்றது தஞ்சாவூருக்குத் தான்.
பேரனைக் கண்டதும் பரபரத்தவர், “வா ப்பா… நிதா எப்படி இருக்கா இப்ப…” என்றதும் “அவள் என் கூட இல்லையே க்ராண்ட்ப்பா” என்றவனின் குரலில் முன்பிருந்த கம்பீரம் முற்றிலும் இல்லை.
ஆதிசக்தி திடீரென வந்த மகனைக் கண்டு சற்றே மகிழ்ந்து அவனருகில் சென்று அமர, “எனக்கு ஒரு ஃபேவர்” என நேரடியாக ஆரம்பித்து அவனது திட்டத்தைக் கூற குடும்பமே திருதிருவென விழித்தது.
“வாட்?” அனைவரையும் காந்த விழிகளால் அதட்டியவனிடம்,
இளவேந்தன் தான் தயக்கத்துடன் கேட்டார்.
“எப்படிப்பா இதெல்லாம் சாத்தியம். அவளைத் தெரியாத மாதிரி பட்டும் படாம இருக்குற மாதிரி இனி எப்படி நடிக்க முடியும். அதுவும் இல்லாம தேதி கூட அவளுக்கு தெரியும் தான.”
“அவள் கொஞ்ச நாளைக்கு போன் யூஸ் பண்ண கூடாதுனு டாக்டர் அட்வைஸ். அவளோட ஒரிஜினல் போன் என்கிட்ட தான் இருந்துச்சு. அதுல அவளுக்கு ஞாபகம் இருக்குற வரைக்குமான டேட்ல இருந்து ஃபிக்ஸ் பண்ணிருக்கேன். பட் இதையே தொடர முடியாது. அவள் குழம்பவும் கூடாது. இப்போதைக்கு அவள் என்கிட்ட மட்டும் தான் சேஃபா இருப்பா. அண்ட் இங்க இருக்குறவரை அவள் போன் யூஸ் பண்ண வாய்ப்பில்லை. அவளுக்கு நடந்ததெல்லாம் திரும்பி நடக்கும்போது ஏதாவது ஒரு பாயிண்ட்ல அவளுக்கு நடந்தது ஞாபகம் வரலாம். இல்ல மறுபடியும் என்மேல அட்டாச்மெண்ட் வரலாம். அண்ட் மோர் ஓவர், உங்களை நான் இதை பண்றீங்களான்னு கேட்க வரல…” என நிறுத்தியவன், ஒட்டு மொத்த கம்பீரமும் தனக்கே சொந்தம் கொண்டவனாக,
“நான் சொல்றதை செஞ்சே தீரணும்! இட்ஸ் மை ஆர்டர்!” என்றான் மிரட்டும் தொனியில்.
ஆதிசக்தி அவனை முறைத்து வைக்க, அதனை சட்டை செய்யாதவன் “எனக்கு அவள் வேணும். அதுக்கு நான் எந்த டெட் எண்டுக்கும் போவேன்!” என்றவனின் உறுதியில் மலைத்துப்போனார்.
“உனக்காக நானும் என்ன வேணாலும் செய்வேன் தான் யாஷ். ஆனா ப்ராக்டிகலி… ஒர்க் அவுட் ஆகுமா? நீ இங்க இருந்தப்ப, கோவில்ல ரௌடீஸ் அட்டாக் பண்ணாங்க. மழை வெள்ளம்னு எவ்ளோவோ நடந்துச்சு…” என்றவரைத் தடுத்தான்.
“சுனாமியே வந்துருந்தாலும், திரும்ப வர வைப்பேன்!” ஒரே வார்த்தையில் குடும்பத்தினரை வாயடைக்கச் செய்து விட்டான்.
இங்கு கதிரவன் தான் அடம்பிடித்து விட்டான்.
“சார் சார்… மறுக்கா மறுக்கா அவளைத் தனியா அனுப்ப முடியாது சார். இந்த தடவை நானும் அவள் கூட வரேன். ப்ளீஸ் சார்…” எனக் கெஞ்ச,
“நோ கதிரவன். நீ வந்தா எல்லாம் கொலாப்ஸ் ஆகிடும்” எனத் திட்டவட்டமாக மறுத்து விட்டான் யாஷ்.
“நான் சத்தியமா ரூமை விட்டுக் கூட வர மாட்டேன் சார்… ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்… அவளை அனுப்பிட்டு எனக்கு நிம்மதியே இருக்காது சார்” எனக் கண்ணில் குளம் கட்டக் கூற, “அவள் வர்றது என் கூட. எனக்குத் தெரியும் அவளை எப்படி பார்த்துக்கணும்னு” என்று பல்லைக்கடித்தான்.
“அதுலாம் சரிதான் சார். என்னால இருக்க முடியாதுனு தான் சொல்றேன்” என்றவன் யாஷ் காலின் அருகில் மண்டியிட்டு விட, “ஹே… வாட் ஆர் யூ டூயிங்?” என யாஷ் கடுகடுத்தான்.
“அவளை விட்டுட்டு என்னால முடியாது சார்… கொஞ்ச நாளைக்குனாச்சும் அவளோட இருந்துடுறேன். என்னையும் கூட்டிட்டுப் போங்க சார். நான் உங்க ரீ- க்ரியேட்ட தொந்தரவே பண்ண மாட்டேன். என் மேல சத்தியமா…” எனத் தனது தலையில் கை வைத்தவன், “இல்ல இல்ல நிதா மேல சாத்தியமா… ப்ளீஸ் சார்” எனக் கெஞ்சி கூத்தாடி தான் யாஷ் மனத்தைக் கரைத்தான்.
“வந்து தொலை!” என்றபின்னே அழுகையை நிறுத்தினான் கதிரவன்.
பின் காசியை மீண்டும் நிதர்ஷனாவிடம் பிரச்சினை செய்யுமாறு நடிக்க அனுப்பி விட்டவன், திட்டமிட்டது போல மீண்டும் கடத்தினான்.
மீண்டும் அவளது விழி மொழிகளில் வீழ்ந்தான். மீண்டுமொரு சந்திப்பு, மீண்டுமொரு ஊடல்கள், மீண்டுமொரு பயணம். இம்முறை ஒவ்வொன்றையும் வலியுடன் ரசித்தான்.
ஒரே திருத்தமாக, இம்முறை அவளை உண்மையாகவே அவளது விருப்பப்படி கோவிலில் திருமணம் செய்து கொண்டான். அவளைப் பொறுத்தவரையில் இந்தத் திருமணம் ஒரு நடிப்பு அவ்வளவே! ஆனால் அவனைப் பொறுத்தவரையில் மனப்பூர்வமாய் செய்து கொண்ட திருமணம் அது.
நிகழ்காலம்:
பால்கனியில் சோகமே உருவாய் நின்று கொண்டிருந்தாள் நிதர்ஷனா. அவளது கற்றைக் கூந்தல் காற்றில் அலைபாய்ந்தது.
அவளை நோக்கி அழுத்த காலடி ஓசையுடன் வந்த யாஷ் பிரஜிதன், “சாப்பிடல?” எனக் கேட்டான்.
“பசிக்கவே இல்ல…” முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு பதில் அளித்தாள். மனதில் நிவேதனைப் பற்றிய பயம் எழுந்தது.
“சரி எலிசாவைக் கூப்பிடு!” என்றான் கையைக் கட்டிக்கொண்டு.
அவனைப் புரியாமல் பார்த்தவள் “எலிசா” என அழைக்க, அதுவோ கிணற்றில் போட்ட கல்லாக சமைந்திருந்தது.
“உனக்குப் பிடிச்ச பேர்ல கூப்டு!” என்றவனின் கூற்று புரியாது, “எனக்குப் பிடிச்ச பேரா?” எனக் குழம்பியவள் பின் “ஆலம்பனா?” என அழைக்க, “ஆமா நான் உங்க ஆலம்பனா தான் சொல்லுங்க கடன்காரி இப்ப நான் என்ன செய்யணும்” என்று எலிசா ஆலம்பனாவாக மீண்டும் அவளுக்காக உருமாறி பதில் அளிக்க, நிதர்ஷனா விழி விரித்தாள்.
“ஹை ஆலம்பனா தமிழ் பேசுது!” எனத் துள்ளிக் குதித்தவள், மெல்ல மெல்ல முகம் மாறினாள்.
வேகமாக அவனை நெருங்கியவள், சுற்றி முற்றி அவசரமாகப் பார்த்து விட்டு, ஹஸ்கி குரலில் பேசினாள்.
“சார்… நான் சொல்றதை யாரண்டையும் சொல்லிடாதீங்க. முக்கியமா இந்த கதிறு பய கைல சொல்லிடாதீங்க” என்றதில், அவன் தான் அவளது நெருக்கத்தின் சூட்டில் உருகிப்போனான்.
அதே ஹஸ்கி குரலில் அவனும், “என்ன?” எனக் கேட்க,
“எனக்கு புதுசா ஒரு பவர் வந்துருக்கு” என்றாள் விழிகளை உருட்டி.
“பவரா?” யாஷ் புருவம் சுருக்க,
“ஆமா சார். எனக்கு பின்னாடி நடக்கப்போறது முன்னாடியே தெரியுது சார். இந்த அழகிய தமிழ் மகன் படம் பாத்துருக்கீங்களா? அதுல விஜய்க்கு கூட வருமே… ப்ச் அட நீயே மொழி புரியாத பாச பேசுறவனாச்சே” எனத் தலையை சொறிந்தவள்,
“ஆனா மேட்டர் இது தான்… இப்ப நீ இந்த எலிசாவை ஆலம்பனாவா மாத்தப்போறது கூட நேத்திக்கு என் கனவுல வந்துச்சே” என்று அதிசயித்துப் போனாள்.
கீழுதட்டை அழுந்தக்கடித்து சிரிப்பை அடக்கிய யாஷ் பிரஜிதன், “ஓஹோ! இது ஏதோ சூப்பர் பவர் மாதிரி இருக்கே!” எனத் தாடையைத் தடவியபடி கூற, “ல்ல…” என்று அவளும் ஆமோதித்தாள்.
“வெறும் இது மட்டும் தான் வந்துச்சா என்ன?” யாஷ் அவளை ஆழம் பார்க்க,
“இதுக்கோசம் இன்னும் நெறய வந்திச்சு. ஆமா உங்க அப்பா வெளிநாட்டுக்காரரா? உங்க அம்மாவை எல்லாம் நான் கேக்காத கேள்வி கேக்குறேன்னா பாத்துக்க. ஆனா எனக்கு இன்னா ஒன்னு புரியலைன்னா… நடிப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாம்… உனக்கோசம் உங்கம்மாட்ட பேசி எனக்கு என்ன நீ அவார்டா தர போற? அந்தக் கனவுல வந்த மாறிக்க கழட்டி விட்டு தான் போவப்போற” என நொடித்துக் கொண்டாள்.
அவளை அமைதியாய் பார்த்தவன் பதிலேதும் கூறவில்லை.
அடுத்ததாக அவள் கோவிலுக்குச் செல்வதாக சொல்ல வேண்டும். ஆனால் அவளோ, “இங்க ஆறு குளம் ஏரி எல்லாம் இருக்காதா அரக்கன் சார்?” எனக் கேட்டாள் தீவிரமாக.
“ஏன் குதிச்சு சூசைட் பண்ணிக்கப் போறியா?” அவன் நக்கலாக வினவ,
“நான் இன்னாத்துக்கு குதிக்கனும்? உன்னை தான் தள்ளி விடுவேன். எனக்கு இங்கயே அடைஞ்சு கெடக்க ஒரு மாறி நிவே நெனப்பாவே இருக்கு. அதான் கொஞ்ச நேரம் போய் உக்காந்துட்டு வரலாம்னு கேட்டேன்” என்றாள் சற்றே சோகமாக.
“ஓ! பொதுவா இந்த மாதிரி பீல் வரப்பா எல்லாம் டெம்பிள் தான போவாங்க?” யாஷ் அவளை ஆழம் பார்க்க,
“எனக்கும் கோவிலுக்கு போவணும் போல தான் இருக்கு. ஆனா எனக்கு வந்த அந்தக் கனவுல நான் கோவிலுக்குப் போனா என்னை எவனாச்சும் கையில கீறுவான். ஒனக்கு மூக்குல இருந்து ரத்தம் வரும். ஏதோ வியாதி பேர் சொன்னியே என்னது அது?” எனத் தலையைச் சொரிந்தாள்.
அவளைக் கையைக் கட்டிக்கொண்டு பார்த்தவன், “சோ கனவுல வந்த பிளேசை சேஞ்ச் பண்ணிட்டியா?” என்றான்.
“ம்ம் ஆமா. ஒரு மணி நேரத்துல வந்துடுறேன். கண்மணியை கூட்டிட்டுப் போகட்டா. ப்ளீஸ் அரக்கா…” அவள் கெஞ்சலுடனும் ஆசையுடனும் கேட்க, “நோ வே” என்றான் கடுமையாக.
“ச்சே… இந்த சுதந்திர உலகத்துல இயற்கைய ரசிக்க கூட உரிமை இல்ல” எனக் கண்ணீர் மழையைப் போலியாய் பொழிய, வாசல் வரைக்கும் சென்றவன் சற்றே நின்று விட்டு “போ!” என நிதானமாகக் கூறினான்.
“ஹை… தேங்க்ஸூ அரக்கா” என்றவள் வேகமாக பக்கத்து வீட்டிற்குச் சென்று கண்மணிக்கு குரல் கொடுத்தாள்.
சிந்தாமணியும் கண்மணியும் அவள் கோவிலுக்கு அழைப்பதாக எண்ணி வெளியில் வந்திட, அவளோ “என்னை ஏதாச்சு ஆத்துக்கு கூட்டிட்டுப் போ” என்றதில் விழித்தனர்.
“என்னடி கண்மணி… உன் அண்ணி சொதப்புது” சிந்தாமணி முணுமுணுக்க, “தெரியலையேடி… சரி போவோம் வேற வழி” என்றவள், “ஆனா அண்ணி… அண்ணாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க” என்று பாவம் போல கூறினாள்.
“அதெல்லாம் அவர்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டேன். சீக்கிரம் போயிட்டு வரலாம் வா…” என்றதும் மூவரும் கிளம்பினர்.
சிலுசிலுவென மாலை நேரக் காற்று முகத்தில் மோத, வெண்ணாறு கரையோரம் அமர்ந்தனர் மூன்று பெண்களும்.
அந்த இயற்கை காற்றை ஆழ்ந்து சுவாசித்தப் பெண்ணவள், “ப்பா… ரொம்ப அழகா இருக்குல்ல!” என அந்த ஆற்றின் அழகைக் கண்டு களிக்க, இருவரும் ஆமோதித்தனர்.
அந்நேரம் எங்கிருந்தோ திடுதிடுவென ஓடி வந்த ஆள்கள் கையில் கத்தியுடன் நிதர்ஷனாவை நெருங்க, “இது என்னது? கோவிலுக்குப் போனா தான யாரோ அட்டாக் வர்ற மாதிரி இருந்துச்சு கனவுல…” எனக் கண்ணைக் கசக்கிக் கொண்டவள் நிகழ்வை உணரும் முன்னே, அவளை நோக்கி வந்தவனின் அடிவயிற்றில் ஒரு குத்து விட்டான் யாஷ் பிரஜிதன்.
அவன் பறந்து ஆற்றினுள்ளேயே விழுந்து விட, ‘ஐயோ!’ என வாயைப் பொத்திக்கொண்டவள், “நீ எப்படியா கரெக்ட் டைம்க்கு வந்துடுற?” என்றவளைத் திரும்பி முறைத்தான்.
அந்நேரம் அவளை யாரோ தாக்க வர, அவளைத் தன்னருகில் இழுத்து மார்பில் முட்ட வைத்தவன், எதிராளியின் கையைப் பிடித்து வளைக்க, “ஆத்தாடி” என அவன் கண்ணை மூடி ஆடவனின் நெஞ்சிலேயே புதைந்து கொண்டாள்.
யாஷ் பிரஜிதனின் இதழ்களில் சிறு கர்வப்புன்னகை உதயமாக, “எந்திரிச்சுடாதடி… உன் தலையைத் தனியா கைல தந்துடுவாங்க இந்த ரௌடீஸ்…” எனப் பயமுறுத்தியதில்,
“யோவ் யோவ்… தலைக்கு மேல இருந்த கடனை இல்லாம பண்ணுயான்னா, தலையே இல்லாம பண்றியே!” எனப் புலம்பி மெல்ல நகர எத்தனித்தாள்.
அவளை ஒரு கையால் பிடித்து மீண்டும் நெஞ்சோடு புதைத்தவன், “நகராதன்னு சொல்றேன்லடி கடன்காரி… உன்னைக் காப்பாத்த வேண்டியது என் தலையாய கடமை… என் ரிசர்ச் முடியிற வரை நீ உயிரோட இருக்கனும்” என்று ஏளனத்துடன் அவள் காதோரம் முணுமுணுத்து அடியாள்களைத் தாக்கத் தொடங்கினான்.
ஏற்கனவே, அவன் மீது தான் காதல் கொண்டது ஏதோ ஒரு கனவாக வந்திருக்க, அவன் மீது காதல் உணர்வு வரவில்லை என்றாலும், உரிமையுணர்வு படர்ந்தது. அதனாலேயே அவனது இந்தக் கூற்று அவளுள் சிறு ஏமாற்ற விதையைத் தூவியிருக்க, அவ்விதை மீண்டுமொரு நேசமாய் பூத்துக்குலுங்கிட, ஆயத்தமானது.
அன்பு இனிக்கும்
மேகா
super ❤️