Loading

 

அத்தியாயம் 4

 

மயூரனுக்காகவும் பாஸ்கருக்காகவும் கூடத்தில் காத்திருந்த கிஷோர் கண்டது, பாஸ்கரை துரத்தி வரும் மயூரனை தான்.

 

“டேய் மயூரா, என்னை விட்டுடு டா. நான் ஒரு அப்பாவி டா.” என்று கத்தியவாறே வந்த பாஸ்கர் கிஷோரின் பின் நின்று கொள்ள, “நீ அப்பாவியா?” என்று அவனை அடிக்க பாய்ந்தான் மயூரன்.

 

இருவரையும் தடுத்த கிஷோர் என்னவென்று விசாரிக்க, “என்ன பண்ணி வச்சுருக்கான்னு அந்த பக்கியையே கேளு.” என்று பல்லைக் கடித்தபடி கூறினான் மயூரன்.

 

கிஷோர் பாஸ்கரை பார்க்க, “கிஷோரு, நீயாவது என்னை நம்பேன்.” என்று அவன் ஆரம்பிக்க, “இப்போ உண்மையை சொன்னா, உன்னை அவன்கிட்ட இருந்து காப்பாத்துவேன். இல்ல, இப்படியே உருட்டிட்டு இருந்தா, அப்பறம் நானும் சேர்ந்து ரெண்டு அடி போடுவேன். எப்படி வசதி?” என்றான் கிஷோர்.

 

‘க்கும், ஒன்னு கூடிட்டாங்களே.’ என்று புலம்பியபடி, “அது… நம்ம தங்கச்சி…” என்று பாஸ்கர் ஆரம்பிக்க, மயூரன் அவனை முறைக்க, கிஷோரோ யாரென்று தெரியாமல் விழித்தான்.

 

கிஷோர் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதால், பாஸ்கர்  துவாரகாவின் அண்ணனானதை இதுவரை அறியவில்லை. அதனால் தான், இந்த குழப்பம்.

 

“யாரு டா தங்கச்சி?” என்று கிஷோர் தன் குழப்பத்திற்கு விடை காண வினவ, “இப்போ உன் அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் ஸீன் எல்லாம் அவசியமா? ஒழுங்கா நடந்ததை சொல்றியா?” என்று மிரட்டினான் மயூரன்.

 

அவன் மிரட்டலில் பயந்த பாஸ்கரோ, கிஷோரிடம் ‘உனக்கு அப்பறம் சொல்றேன்.’ என்று கண்களில் சைகை செய்தவன், “ரெண்டு நாள் ஆஃபிஸ் இல்லல. துவாரகா மயூரனை பார்க்கணும்னு சொல்லுச்சு. அதான், நம்ம போற மாலுக்கு அவளையும் வர சொன்னேன்.” என்றவனின் குரல் தேய்ந்து ஒலித்தது.

 

அதில் திகைத்த கிஷோரோ, ‘உனக்கு இந்த அடி தேவை தான்!’ என்னும் ரீதியில் பார்த்து வைக்க, மயூரனோ தொப்பென்று நீள்சாய்விருக்கையில் அமர்ந்து விட்டான்.

 

அவனைக் கண்ட கிஷோரோ அவனருகே அமர்ந்து, “மயூரா, என்னாச்சு?” என்று ஆறுதலாக வினவ, “பின்ன என்ன கிஷோர்? இத்தனை நாள் உங்க கிட்ட தான புலம்புறேன். நான் அவகிட்ட மாட்டிட்டு எப்படி கஷ்டப்படுறேன்னு உங்களுக்கும் தெரியும் தான? இவன் என்னடான்னா அவளுக்கு ஹெல்ப் பண்றேன்னு கோமாளித்தனம் பண்ணிட்டு இருக்கான்.” என்றான் மயூரன்.

 

“இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு அங்க வேலை செய்யணும்? விட்டுட்டு வேற வேலை பார்க்க வேண்டியது தான? இல்ல, அதுவும் கஷ்டமா இருந்தா…” என்று பேசிக் கொண்டே சென்ற பாஸ்கரை மயூரனின் முறைப்பு அமைதியாக்கியது.

 

சற்று நேரம் அங்கு மௌனமே நிலவ, கிஷோர் மெதுவாக மயூரனிடம் பாஸ்கர் கூறியதையே சற்று மாற்றி கேட்டான்.

 

“மயூரா, உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா, வேற வேலைக்கு டிரை பண்ணலாம்.” என்று கூற, மயூரனோ விரக்தி சிரிப்புடன், “அதுக்கு இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ? அதுவரை உங்களுக்கு பாரமா இருக்கவா?” என்றான்.

 

“ஓஹோ, நாங்க உதவி பண்றது உனக்கு பிடிக்கல அப்படி தான? சரி, இதுவரையான செலவை கணக்கு போட்டு சொல்றேன், காசை எண்ணி எடுத்து வை.” என்று கோபமாக கூறினான் பாஸ்கர்.

 

‘இவன் எதுக்கு இப்போ ரூட்டை மாத்துறான்?’ என்ற எண்ணத்தில் கிஷோர் பாஸ்கரை பார்த்து வைக்க, அவன் முகத்திலிருந்து எதையுமே கணிக்க முடியவில்லை.

 

‘க்கும், இத்தனை வருஷம் இவங்களோட குப்பை கொட்டியும், ரெண்டு பேரையும் கணிக்கவே முடியல பா.’ என்று நினைத்தபடி நடப்பதை கவனிக்கும் மௌனியாகிப் போனான் கிஷோர்.

 

“ப்ச், நான் அதை மீன் பண்ணல பாஸ்கி. இவ்ளோ நாள் ஓகே. இனிமேலும், எத்தனை நாள் இப்படி எனக்கு உதவி செஞ்சுட்டே இருக்கப் போறீங்க? நாளைக்கு உங்களுக்கு ஒரு குடும்பம் வரும். எனக்கும் கல்யாணம் நடக்கும். அப்போ என்ன பண்றது?” என்று நிதர்சனத்தை எடுத்துரைக்க முயன்றான் மயூரன்.

 

“ஆமா ஆமா, கல்யாணம் நடக்குற ஆளைப் பாரு! ஒரு பொண்ணு பின்னாடியே சுத்தி வந்தாலும், கண்டுக்காதவனுக்கு கல்யாணம் ஒன்னு தான் குறைச்சல்!” என்று பாஸ்கர் முணுமுணுக்க, “டேய் திரும்ப ஆரம்பிக்காத டா. இப்போ என்ன நாம படத்துக்கு போறோமா இல்லயா?” என்றான் கிஷோர்.

 

‘அடப்பக்கிப்பயலே! கஷ்டப்பட்டு டாப்பிக்கை மாத்துன்னா, திரும்ப அவன்கிட்ட அடி வாங்க வைக்க பிளான் பண்றான் போலயே.’ என்று மனதிற்குள் அலறிய பாஸ்கர், ஓரக்கண்ணில் மயூரனை பார்க்க, அவனோ ஒரு பெருமூச்சுடன், “நான் வரல. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க.” என்றான்.

 

‘க்கும், இது தேறாது.’ என்று உள்ளுக்குள் நண்பனை வருத்தெடுத்த பாஸ்கரோ, “எங்க அவளை அடிக்கடி பார்த்தா லவ் பண்ணிடுவியோன்னு  பயமா இருக்கா?” என்று உசுப்பேற்றுவது போல பேசினான்.

 

பாஸ்கரை பார்த்து, ‘வாயை மூடு’மாறு சைகை செய்த மயூரனோ, “நீ என்ன டிரை பண்றன்னு புரியுது. நான் வரல அவ்ளோ தான்.” என்று அவன் அறைக்குள் நுழைய போக, “சரி, உனக்கு பயமா இருக்குன்னு துவா கிட்ட சொல்லிடுறேன். அதுக்கு அப்பறம் அவ பாடு, உன் பாடு.” என்று சத்தமாக கூறினான் பாஸ்கர்.

 

‘ஹையோ, அவளா? அவளை சமாளிக்குறதுக்கு, பல்லைக் கடிச்சுட்டு படத்துக்கே போயிட்டு வந்துடலாம்!’ என்று மயூரன் நினைக்க, அவன் மனமோ காறி துப்பாத குறையாக, ‘இதுக்கு உனக்கு பயம்னே ஒத்துக்கலாம்.’ என்றது.

 

அதனை கண்டு கொள்ளாமல், திரும்பி பாஸ்கரை முறைத்தவன், விடுவிடுவென்று வெளியே சென்றான்.

 

அதைக் கண்ட மற்ற இருவரும் ஒருவரையொருவர் பார்த்து பக்கென்று சிரிக்க, கிஷோர் தான், “என்னடா இது பேரை சொன்னாலே பையன் அரண்டு போறான்? அவ்ளோ டெரர் பொண்ணா?” என்று வினவ, “உனக்கு சொன்னா புரியாது மச்சி. இன்னைக்கு நேர்ல பார்த்து தெரிஞ்சுக்கோ!” என்று அவனை இழுத்துக் கொண்டு போனான் பாஸ்கர்.

 

*****

 

அரை மணி நேரத்திற்கு முன்னர், அழகாக காட்சியளித்த அந்த படுக்கையை,  இப்போது கலைந்து கிடந்த ஆடைகள் மறைக்க முற்பட்டுக் கொண்டிருந்தன.

 

அது துவாரகா என்னும் பெண்ணின் படுக்கைறை என்பதை சொல்லவும் வேண்டுமா?

 

“ப்ச், படத்துக்கு போட்டுட்டு போக ஒரு நல்ல டிரெஸ் இருக்கா?” என்று அலமாரிக்கு உள்ளிருந்து அவளின் குரல் கேட்க, அதற்கு அருகே இருந்த நீள்சாய்விருக்கையில் தேமே என்று அமர்ந்திருந்த கோபிநாத்தோ, மகளை மறைத்திருக்கும் அலமாரி கதவையும், படுக்கையில் குவிக்கப்பட்டிருந்த உடைகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தலையை இடவலமாக அசைத்தார்.

 

“ப்பா, நான் இங்க கவலையா பேசிட்டு இருக்கேன், நீங்க என்னடான்னா ஜாலியா தலையாட்டிட்டு இருக்கீங்க?” என்று அவள் கோபப்பட, ‘எது? ஜாலியா இருக்கேனா?’ என்று நினைத்த மனிதர், கடந்த அரை மணி நேரமாக அந்த அறைக்குள் அடைபட்டிருப்பதை நினைத்து பார்த்தார்.

 

அன்று சனிக்கிழமை என்பதால், மாலை நான்கு மணிக்கெல்லாம் வீடு வந்து விட்டார் கோபிநாத். மகள் செய்யப் போகும் கூத்து முன்னரே தெரிந்திருந்தால், அவசரப்பட்டு வந்திருக்க மாட்டாரோ என்னவோ! அவரின் விதி, இன்று இப்படி மகளின் அறையில் பழியாக கிடக்க வேண்டும் என்றிருந்தால் அவரால் என்ன செய்ய முடியும்?

 

“ப்பா, தேங்க் காட், இன்னைக்கு சீக்கிரமா வந்தீங்க.” என்று துவாரகா கூற, அப்போதும் மகளின் முகத்திலிருந்த மகிழ்ச்சியைக் கண்டாரே தவிர, சுதாரித்துக் கொள்ளவில்லை.

 

“என்ன துவாம்மா, ரொம்ப ஹாப்பியா இருக்க போல?” என்று தந்தையும் மகிழ்ச்சியுடன் வினவ, “ஆமா ப்பா, இன்னைக்கு என் லவர் கூட படத்துக்கு போறேன்.” என்றாள் மகள்.

 

அதைக் கேட்டதும் சப்பென்று ஆகி விட, “துவா, அப்பா திரும்ப சொல்றேன்னு கோச்சுக்காம, நான் சொல்றதை முழுசா கேளு டா. இப்படி தினமும் எதையாவது பண்ணா, அந்த பையனுக்கு எப்படி உன்னை பிடிக்கும்.” என்று சொல்ல வந்தவரை இடை வெட்டியவள், “ப்பா, இப்படி பூமர் மாதிரி ஏதாவது பேசாம, எனக்கு டிரெஸ் செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணுங்க.” என்று அவரை கையோடு அழைத்து வந்து விட்டாள்.

 

இருவரும் அறைக்குள் வந்து அரை மணி நேரமாகி விட்டது. இன்னும் எதையும் தேர்ந்தெடுத்த பாடில்லை.

 

முதலில் ஒரு மஞ்சள் வண்ண ட்யூனிக் டாப்பை எடுத்து கண்ணாடி முன் வைத்து பார்க்க, அதுவே அழகாக தான் இருந்தது.

 

கோபிநாத்தும் அதற்கு சரியென்று கூறிவிட, அதற்கு ஏதுவாக அடர்நீல வண்ண ஜீன்ஸ் பேண்ட்டும் எடுத்தாகிற்று.

 

ஆனால், திடீரென்று என்ன தோன்றியதோ, “இல்ல இல்ல. டாப் பேண்ட் ரெண்டுமே அடிக்கிற மாதிரி இருக்கு. வேற பார்க்கலாம்.” என்று அதனை படுக்கையில் எரிந்து விட்டாள்.

 

அதன் பிறகு, பெப்ளம், ஏ-லைன், கிராப் டாப், ஆஃப் ஷோல்டர், கோல்டு ஷோல்டர், ஃபுல் லெந்த், மேக்சி, ஷராரா, குர்தி, டிசைனர் சேரி என்று பலவகை ஆடைகளை அவள் கையில் எடுத்தும், படுக்கையில் வீசியும் ஓய்ந்து போன பின் தான், தன்னிடம் உடைகளே இல்லை என்று தந்தையிடம் புகார் வாசித்தாள்.

 

“துவாம்மா, ஒரு நிமிஷம் உன் பெட்ல பாரேன். இதை வச்சு டெக்ஸ்டைல் ஷாப்பே ஓப்பன் பண்ணிடலாம்.” என்று கோபிநாத் கூற, “ப்பா…” என்று சிணுங்கியவள், என்ன நினைத்தாளோ, படுக்கையில் அடியில் இருந்த உடையை எடுத்துக் காட்டி, “இதுவே ஓகே மாதிரி தான் இருக்கு.” என்று அரைமனதாக கூறினாள்.

 

அவள் கையில் வைத்திருந்த உடையை பார்த்த கோபிநாத் திகைத்து எதையோ கூற வந்தவர், பின்னர் எதற்கு வம்பு என்று வெளியே சென்று விட்டார்.

 

பின்னே, அவள் முதலில் தேர்ந்தெடுத்த உடையை அல்லவா கைகளில் வைத்திருந்தாள்!

 

அடுத்த கால் மணி நேரத்தில் தயாராகி வந்த மகளைக் கண்டவரின் இதழ்கள் தானாக விரிய, அதற்கேற்றவாறு மகளும், “ப்பா, நல்லா இருக்கேனா?” என்று சிறு பெண் போல சுற்றிக் காட்டினாள்.

 

“என் பொண்ணு எப்பவும் அழகு தான்.” என்று கொஞ்சிய கோபிநாத், “டிரைவரை கூட்டிட்டு போ துவாம்மா.” என்று கூற, “ப்பா, நான் என்ன சின்ன பாப்பாவா? அதெல்லாம் நானே போயிப்பேன். பை ப்பா.” என்றவாறு வெளியேறி விட்டாள்.

 

அவள் சென்ற திசையையே பார்த்த கோபிநாத்தோ, “சில விஷயங்கள்ல இன்னும் சின்ன பொண்ணு மாதிரி தான் டா பிஹேவ் பண்ற! கடவுளே, இது எங்க போய் முடியப்போகுதோ?” என்று புலம்பியவர், தன் வேலையை பார்க்கச் சென்றார்.

 

*****

 

மாலுக்கு வந்த நண்பர்கள் மூவரும், படம் ஆரம்பிப்பதற்கு இன்னும் நேரமிருந்ததால், அங்கிருந்த கடைகளில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

 

பாஸ்கர் மட்டும் அவ்வபோது அலைபேசியை பார்த்துக் கொண்டே வர, மயூரன் அதை பார்த்தாலும் எதுவும் சொல்லவில்லை.

 

முன்னே மயூரன் செல்ல, அவனைப் பின்தொடர்ந்து பாஸ்கரும், கிஷோரும் சென்றனர்.

 

அப்போது எங்கிருந்தோ திடீரென்று வந்த துவாரகா, “சர்ப்ரைஸ்!” என்று மயூரன் முன் வந்து கத்த, மூவருக்கும் சட்டென்று எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்று புரியத்தான் இல்லை.

 

முதலில் மீண்டது என்னவோ மயூரன் தான்.

 

அவன் திரும்பி பாஸ்கரை முறைக்க, ‘ஹையோ, நடந்தது என்னன்னு தெரியாம, பழைய ஸ்க்ரீன்-பிளேலேயே போறாளே.’ என்று எண்ணிய பாஸ்கர், அவளிடம் சைகையில் எதையோ சொல்ல முயல, அவள் அதை கவனித்தால் தானே.

 

“அட, மயூ…ரன், நீங்களும் படத்துக்கு தான் வந்துருக்கீங்களா? நானும் படத்துக்கு தான் வந்துருக்கேன். என்ன ஒரு கோ-இன்ஸிடென்ஸ்?” என்று சத்தமாக கூறியவள், மயூரனை நெருங்கி, “அப்போ இது லவ் தான மயூ…ரன்?” என்று கேட்க, அவனோ நெளிந்து கொண்டு விலகிச் சென்றவன், அவளிடம் காட்ட முடியாத கோபத்தை பாஸ்கரிடம் இறக்கி வைத்தான்.

 

அவள் கூறியதைக் கேட்ட பாஸ்கரோ, ‘அட கூறுகெட்ட கிறுக்கி, பழசுல கூட இப்படி சொதப்புறாளே! இவ எல்லாம் எங்க ஆன் ஸ்பாட்ல டைலாக் பேசப் போறா?’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு அவன் கவலை!

 

அப்போது தான் பாஸ்கரின் கரத்தை பிடித்து வெளியே தெரியாத வகையில் நசுக்கிய மயூரன், “நான் தியேட்டருக்குள்ள போறேன். அங்கயும், உன் தங்கச்சி ஏதாவது செஞ்சா, உன்னை தான் தூக்கிப் போட்டு மிதிப்பேன்.” என்று அவன் செவிக்குள் கூறிவிட்டு விறுவிறுவென்று முன்னே நடந்தான்.

 

அவனைப் பின்தொடர போன துவாரகாவை நிறுத்திய பாஸ்கரோ, “தங்கச்சி, ஏன் மா இப்படி சொதப்புற?” என்று வினவியவன், வீட்டில் நடந்ததைக் கூற, “ஓஹ், தெரிஞ்சுடுச்சா? அவருக்கு தெரிஞ்சுடுச்சா? பரவால!” என்று ஒரு மாதிரி அவள் கூற, கிஷோரோ பாஸ்கரின் செவிகளில், “இது அதுல?” என்றான்.

 

“இப்போ தெரியுதா எவ்ளோ டெரர்னு?” என்று கிஷோரிடம் கிசுகிசுத்த பாஸ்கர், துவாரகாவிடம் திரும்பி, “இப்போ என்ன செய்யப் போற?” என்றான்.

 

“ஹ்ம்ம், என்ன செய்ய, வாங்க போய் படம் பார்க்கலாம்.” என்று சிரித்துக் கொண்டே போக, “இன்னும் என்ன செய்யப் போறாளோ? இன்னைக்கு நாள் முடியுறதுக்குள்ள, இன்னும் யாருக்கிட்ட எல்லாம் வாங்கிக் கட்டிக்கப் போறேனோ?” என்று முணுமுணுத்தபடி அவளைப் பின்தொடர்ந்தான் பாஸ்கர்.

 

*****

 

தன் அலுவலக அறையிலிருந்து வெளியே வந்த கோபிநாத், உணவு மேஜையில் அமர, அவருக்கு சாப்பாடு எடுத்து வைத்த வேலையாள், “ஐயா, பாப்பா வந்துடுச்சுங்க. ஆனா, சாப்பிட கூப்பிட்டதுக்கு பதில் சொல்லாம ரூமுக்கு போயிடுச்சுங்க.” என்றார்.

 

“என்ன சாப்பிடாம போயிட்டாளா?” என்றவர் நன்கறிவார், துவாரகா சாப்பாடு விஷயத்தில் சரியாக இருப்பாள் என்பதை.

 

புருவ முடிச்சுடனே, துவாரகாவின் அறைக்கு செல்ல, கதவு பூட்டப்படாததால், ஒரே தள்ளில் திறந்து கொண்டது.

 

உள்ளிருந்து எட்டிப் பார்த்த இருளைக் கண்ட கோபிநாத்தின் மனது அடித்துக் கொள்ள, வேகமாக விளக்குகளை ஒளிர விட்டார்.

 

அங்கு அவரின் செல்ல மகளோ, அநாதாரவான நிலையில் கீழே அமர்ந்து தரையையே வெறித்துக் கொண்டிருப்பதைக் கண்டவர் பதறியபடி, “துவாம்மா என்னடா இது? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?” என்று வினவ, அவளிடம் பதிலில்லை.

 

அவளின் மௌனம் தந்தைக்கு பதற்றத்தைக் கூட்ட, “துவா, இங்க பாரும்மா, அப்பாவை பாரு டா.” என்று அவள் முகத்தை நிமிர்த்தி தன்னைப் பார்க்கச் செய்ய, மறுபடி அதே வெறித்த பார்வை தான் அவளிடம்.

 

“அப்பாக்கு பயமா இருக்கு டா துவா. என்னாச்சு மா? அப்பா கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணுவ தான? என்ன நடந்துச்சுன்னு சொல்லு டா. அப்பா எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன்.” என்று பேசிக் கொண்டே போனவரை, மகளின் விரக்தி சிரிப்பு தடுத்து நிறுத்தியது.

 

“அப்போ அம்மாவை உயிரோட கூட்டிட்டு வருவீங்களா ப்பா?” என்று துவாரகா வினவ, கோபிநாத்திற்கு தெரிந்து போனது, மகள் மீண்டும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளாள் என்பது.

 

“நான் ரொம்ப கெட்ட பொண்ணுல ப்பா. அதான், எனக்கு பிடிச்ச யாருக்கும் என்னை பிடிக்கல போல.” என்று அவள் புலம்ப ஆரம்பிக்க, அவளை இழுத்து அணைத்துக் கொண்டவரோ, “உனக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும்ல டா. அப்பாக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் துவாம்மா. உன்னை மட்டும் தான் பிடிக்கும்.” என்று ஆறுதல் கூறினார்.

 

அதன்பிறகு எத்தனை நேரம் அணைத்தபடி ஆறுதல் கூறினாரோ தெரியவில்லை. மகளின் புலம்பல் நின்று, அவள் ஆழ்ந்த உறக்கம் சென்ற பின்னர் தான், அவளை பிரித்து படுக்கையில் படுக்க வைத்தார்.

 

அதே படுக்கையில், அவள் எடுத்துப் போட்ட ஆடைகள் இருக்க, அவள் சென்ற இடத்தில் தான் ஏதோ நடந்திருக்கிறது என்பதை கண்டு கொண்டார் கோபிநாத்.

 

ஏதோ யோசனையில் இருந்தவர், யாருக்கோ அழைத்து, “துவாக்கு திரும்ப அந்த பிராப்ளமுக்கான சிம்ப்டம்ஸ் தெரியுது. நாளைக்கு கூட்டிட்டு வரேன்.” என்று பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவர், மகளின் தலையை கோதியபடி அமர்ந்து விட்டார்.

 

தந்தைக்கும் மகளுக்கும் அன்றைய இரவு, உணவு உண்ணாத இரவாக மாறிப்போனது.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்