Loading

தன்னைக் கண்டு சிரித்த சஹஸ்ராவை தீரஜ் முறைத்திட, அவளோ சிரிப்பை அடக்க அரும்பாடுபட்டாள்.

பின், முயன்று தன்னை அடக்கி, “அவனுக்கு புரிய வைக்க வேண்டியது தான தீரா. ஏன் நம்ப மாட்டேங்குறான்.” எனக் கேட்கும் போதே அவளை மீறி சிரிப்பு பீறிட்டது.

“சிரிக்காதடி. அடிச்சுடுவேன்!” கண்ணை சுருக்கி தீரஜ் அதட்ட, “சரி சரி சிரிக்கல.” என வாயை பொத்திக் கொண்டாள்.

தீரன் இறந்ததை முற்றிலும் நம்ப மறுத்த ஆண்ட்ரூஸ், தீரஜை தீரனென நம்பிக் கொண்டான். அதற்கு தோதாக, மருத்துவமனையில் இருக்கும் போது, சஹஸ்ரா அவனை ‘தீரன்’ என விளித்ததை வேவு பார்த்து உறுதி செய்து கொண்டவன், நினைவுகளை மறந்த கால இடைவெளியில் தீரனின் மனதை மாற்றி விட்டதாக சஹஸ்ராவின் மீதும் நிக்கோலஸ் மீதும் கோபம் கொண்டான்.

தலையில் அடிபட்டவர்களுக்கு மீண்டும் அதே இடத்தில் அடிபட்டால், மறந்த நினைவுகள் திரும்பி விடும் என ஒரு அரை வேக்காட்டு நண்பன் கூறியதை நம்பி தான், அன்று மருத்துவனையில் தீரஜின் தலையை பதம் பார்க்க முயன்றான். என தீரஜ் கூறியதில், வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள் சஹஸ்ரா.

“ஐயோ முடியல. இவன் என்ன லூசா? தலைல அடிச்சா பழசு ஞாபகம் வந்துடுமா என்ன?” என்ற மனையாளின் மலர்ந்த முகத்தை ரசித்தவனுக்கும் முறுவல் பூத்தது.

“ம்ம். சரியான கேனை கிறுக்கன். எனக்கு எல்லாம் ஞாபகம் வந்ததும், பேப்பர்ல நியூஸ் குடுத்தேன்ல அதை பார்த்துட்டு ஆபிஸ்க்கு வந்து ஒரே சண்டை.

‘நீ தீரன் தான். எனக்கு நல்லா தெரியும். உன்னை உன் கூட இருக்குறவங்க மாத்திட்டாங்க. நல்லா யோசிச்சு பாரு. நீ என் மேல உயிரையே வச்சிருந்த பிளா பிளான்னு…’ என்னை இம்சை பண்ணிட்டான். நானும் பொறுமையா புரிய வைச்சு பார்த்தேன். முடியல. அப்பறம் ‘எப்படியோ போ’ன்னு விட்டுட்டேன். அதுக்கு அப்பறம் தான், உன் மேல கோபத்தை வளர்த்துக்கிட்டு, அன்னைக்கு வீட்டுக்கே வந்து உன்ன அட்டாக் பண்ணுனான்” எனக் கூறும்போதே ஆத்திரம் பொங்கியது அவனுக்கு.

“ஏதோ போனா போகுது பாவம்ன்னு விட்டா, என்ன காரியம் பண்ணிட்டான். ராஸ்கல்!” என முகத்திலேயே ரௌத்திரத்தை தேக்கியவன், காரை ரிவர்ஸ் எடுத்து வீட்டிற்கு திரும்பினான், பழி உணர்ச்சியுடன் எதிரில் நிற்பவனை கருத்தில் கொள்ளாமல்.

தீரஜின் கையைப் பற்றி அழுத்தியவள், “அவன் என்னை கத்தியால குத்த வந்தது தெரிஞ்சும், என்னை விட்டுட்டு சிங்கப்பூர் போய்ட்டீல. ஒருவேளை நீ இல்லாத நேரம் அவன் வந்து என்னை போட்டு தள்ளிருந்தா என்ன பண்ணிருப்பியாம்.” என குறையாக முணுமுணுத்து, அவளே பதிலாக, “விட்டது தொல்லைன்னு அந்த ரோஸியவே கரெக்ட் பண்ணிருப்பீல.” என்றாள் சிலுப்பலாக.

மறுநொடி அவனது விழிகள் காட்டிய அழுத்தத்தில் வாயை இறுகி மூடிக் கொண்டாள். வீடு செல்லும் வரை, சினத்தை காரின் மீது காட்டியவன், அத்தனை சினத்திலும் கவனமாகவே ஓட்டிச் சென்றான்.

கார் வீட்டின் முன் நின்றபிறகும், சஹஸ்ரா இறங்காமல், “தீரா…” என அழைக்க, “இறங்கி போடி!” என்றான் எரிச்சலாக.

கணவனின் கோபம் புரிந்ததில், அவனது சட்டையின் கைப்பகுதியைப் பிடித்தவள், “கோபமா?” எனக் கேட்க, “இறங்கி போய்டு! கடுப்ப கிளப்பாத.” என அவள் கையை தட்டி விட்டான்.

“நீ கூட இல்லன்னு கோபத்துல சொல்லிட்டேன். சாரி தீரா. என்னை பாரு…” என்று அவனது முகத்தை திருப்ப, விழி இடுங்க முறைத்தவன்,

“உனக்கு தெரியுமாடி. உன்னை அப்படியே விட்டுட்டு போயிருப்பேனா? உன்னை என்னைக்கு கத்தியால் குத்த வந்தானோ, அன்னைக்கு நைட்டே அவன் கை கால உடைச்சு ஹாஸ்பிடல்ல படுக்க வச்சுட்டு தான், அடுத்த வேலையவே பார்த்தேன்.

எப்படியும் மூணு நாலு மாசத்துக்கு எந்திரிக்க மாட்டான்னு தெரிஞ்சு தான், இங்க உனக்கு எல்லாம் பாதுகாப்பு ஏற்பாடும் பண்ணிட்டு கிளம்புனேன். அதுக்கு மேல உன் கூட இருந்தா எப்படியும் உன்னை கஷ்டப்படுத்திடுவேன்னு மட்டும் புரிஞ்சுது. அதான் போனேன். போயிட்டு நான் மட்டும் நிம்மதியாவா இருந்தேன்.” என்றவனின் முகம் சுருங்கியது.

அன்று இரவு, கண்ணாடியை உடைத்து கையையும் காயம் ஆக்கியதோடு, இரவோடு இரவாக வெளியில் சென்றவன், இந்த வேலையை தான் பார்த்து விட்டு வந்தானா? என்றே அதிர்ந்தாள்.

“ப்ச்… இறங்கு முதல்ல.” என அவன் கடுப்படிக்க, “சாரி தீரா. எனக்கு என்ன தெரியும்…” என ஆரம்பிக்கும் போதே,

“உனக்கு ஒன்னும் தெரியாதுடி. உன்னை சுத்தி என்ன நடக்குது, என்ன நடந்துச்சு ஒன்னும் தெரியாது. யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடு. ஆனா என்னை மட்டும் நம்பாத.” என்றதில், “அதான் சாரி சொல்றேன்ல…” என்றாள் குழைவாக.

“ஒன்னும் தேவை இல்ல…” என அவன் முறுக்கிக் கொள்ள, அவனது சட்டைக்காலரைப் பற்றி அவள் உயரத்திற்கு இழுத்தவள், தீரஜின் காதோரம், “சாண்டவிச் சாப்பிட வேணாமா?” எனக் கிசுகிசுத்தாள்.

சஹஸ்ரா மன்னிப்பு கேட்கும் போதே, உருகிய மனது, இப்போது மொத்தமாக அவள் வசம் இருந்தது.

அவளுக்கு பதில் கூறும் பொருட்டு, முகத்தை அவள் புறம் திருப்ப, இருவரின் இதழ்களும் பதமாக தீண்டியதில், அவ்விரு இதழ்களும் மெலிதாய் முறுவலித்தது.

இருக்கும் இடம் மறந்து, இரு அதரங்களும் தீண்டி காதல் புரிய, வெளியில் இருந்து காரை யாரோ தட்டும் சப்தம் கேட்டது.

அதை கவனிக்கும் நிலையில் இருவரும் இல்லாது போக, காருக்கு வெளியில் நின்றிருந்த நிக்கோலஸ் தான் தன்னை நொந்தான்.

“அடேய்…” என மீண்டும் வேகமாக ஜன்னலைத் தட்ட, அதில் தான், இருவரும் தன்னிலை பெற்றனர்.

நிக்கோலஸை பார்த்ததும் சஹஸ்ராவிற்கு வெட்கம் பிய்த்து தின்ன, தீரஜ் தான், ‘இந்த கரடி ஏன் இந்த நேரத்துல வந்தான்…’ எனக் கடிந்தபடி இறங்கினான்.

நிக்கோலஸோ, “போனை கூட எடுத்துட்டு போகாம எங்கடா போய் தொலைஞ்ச?” என எடுத்ததும் எகிற, நிக்கியின் முக தீவிரத்தை உணர்ந்து, “என்ன ஆச்சு நிக்?” எனக் கேட்டான் தீரஜ்.

சொல்ல வந்ததை முழுதாகக் கூற இயலாமல் திணறிய நிக்கோலஸ், வெகு நேரமாக தீரஜின் வீட்டு வாசலில் தான் நிற்கிறான்.

அவனது கார் வந்ததுமே வேகமாக அருகில் சென்றவன், இருவரும் இன்னும் இறங்காததோடு, முத்தம் கொடுத்துக் கொண்டிருந்ததில் பொறுமை இழந்தவன், வேறு வழியற்று அவர்களின் மோன நிலையைக் கலைத்து விட்டான்.

“நிக்? ஆர் யூ ஓகே?” மீண்டும் தீரஜ் வினவ, “மச்சி… வந்து…” என்றவனின் பார்வை சஹஸ்ராவின் மீதும் ஒரு நொடி பாய, அவளோ குழப்பத்துடன், “ஏதாவது பிரச்சனையா அண்ணா?” எனக் கேட்டாள்.

“இல்ல… அது… அந்த ஆண்ட்ரூஸ் உங்களை டார்கட் பண்றான்னு நியூஸ் வந்துச்சு. அதான்… உங்களை சேஃப் – ஆ இருக்க சொல்லி வந்தேன்.” என்றவனின் குரலிலேயே விஷயம் அது மட்டுமல்ல என இருவருக்கும் புரிந்தது.

தீர்க்க விழிகளுடன், “இதை சொல்ல தான் வந்தியா? ஆர் எனிதிங் எல்ஸ்?” எனக் கூர்மையுடன் கேட்க, நிக்கி அமைதி காத்தான்.

சஹஸ்ரா, தான் இருப்பதால் தான் சொல்ல மாட்டேன் என்கிறான் என உணர்ந்து, “நான் சவி என்ன பண்றான்னு பாக்குறேன்” என உள்ளே நுழைய, நிக்கியோ, “என்னது சவி இங்க இருக்காளா? அவள் உள்ள இல்லையே சஹா…” என்றிட சஹஸ்ரா திகைத்தாள்.

“என்ன அண்ணா சொல்றீங்க…? அவள் உள்ள தான் இருக்கா. சவி…” எனக் கத்தியபடி, சற்று வேகமாகவே உள்ளே செல்ல,

தீரஜ் அவளை நிறுத்தி, “ரிலாக்ஸ் சஹி. நான் பாக்குறேன்.” என்றவன் அவளது அறைக்கு சென்று பார்க்க, அங்கு அவளில்லை.

நிக்கியோ, “நான் வந்ததுமே அவளை தேடுனேன் சஹா. நீ அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு இருந்தீல, அதான், அவளை அங்க கூட்டிட்டு போயிருக்கன்னு நினைச்சேன்.” எனக் குழம்பிட, சஹஸ்ராவிற்கு பயம் நெஞ்சை கவ்வியது.

“இல்ல அண்ணா. அவளை மட்டும் இல்ல நானே அங்க போற ஐடியால இல்ல. உங்க பிரெண்டை டீஸ் பண்ணத்தான் அப்படி சொன்னேன். அது அவளுக்கே தெரியும். இப்ப எங்க போனான்னு தெரியல. பயமா இருக்கு தீரா…” என்றவளுக்கு கண்ணீர் சுரந்தது.

தீரஜிற்கும் அதே அதிர்ச்சி தான். டீ – பாயை உடைக்கும் போது கூட அந்த சத்தம் கேட்டு அவள் வெளியில் வராமல் இருக்கும் போதே இந்த சந்தேகம் வந்திருக்க வேண்டும் என்ற எண்ணமே தாமதமாக தான் வந்தது.

நிக்கி, “காம் டௌன் சஹா. ஒருவேளை உங்கிட்ட சொல்லாம உன் அம்மா கூட்டிட்டு போயிருக்கலாம்” என்றிட,

தீரஜ், “நான் எல்லாரையும் அனுப்பிட்டு தான் ரூம்க்கு போனேன் நிக். அவ அம்மா கூட போகல!” என்றவனுக்கு ஆண்ட்ரூஸ் மீது தான் கோபம் வந்தது.

“எல்லாம் அந்த ஆண்ட்ரூஸால வந்தது. எல்லாம் பண்ணிட்டு என்னையவே ஃபாலோ பண்ணிருக்கான். அவனை…” என சீறிடும் போதே, நிக்கி அவனைத் தடுத்து, “அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் தீரா.” என தயங்கினான்.

அவனை அழுத்தமாகப் பார்த்த தீரஜ், “இப்ப நீ சொல்ல வந்ததை சொல்ல போறியா இல்லையா?” எனக் கடிந்திட, மூச்சை இழுத்து விட்ட நிக்கோலஸ் பதில் கூறும் முன்,

“அவனுக்கு பதிலா நான் சொல்லவா தீரா” என்ற ஆண்குரல் அவர்களுக்கு பின்னால் ஒலித்தது.

பிறந்ததில் இருந்து நிதமும் கேட்ட குரல் தீரஜ் அறியாததா…! அக்குரலிலேயே ஊனிலும் உயிரிலும் சந்தோஷ மின்சாரம் பாய்ந்தது.

படக்கென வாசல் புறம் பார்த்தவனுக்கு, வாயடைத்த நிலை தான். இறந்து விட்டதாக எண்ணிய தன்னுடைய இரட்டை சகோதரன் கண் முன் உயிருடன் நிற்பதைக் கண்டு தீரஜிற்கு விழிகள் கலங்கியது.

நிச்சயமாக, அவனை சஹஸ்ரா எதிர்பார்க்கவில்லை என்பது அவளது முக அதிர்விலேயே விளங்க, அவளைக் கண்டு இளக்கார நகை வீசினான் தீரன் ஆத்ரேயன்.

அதைக் கண்டுகொண்டாலும், அதற்காக எதிர்வினை காட்டக்கூட இயலவில்லை தீரஜிற்கு.

“ஆது? ஆது… நீ நிஜமாவே கண்ணு முன்னாடி தான் இருக்கியா? தேங்க் காட்! என்னால நம்பவே முடியல ஆது. யூ ஆர் அலைவ்…!” என்றவனின் வார்த்தைகள் உணர்ச்சி நிரம்பியதாக வெளிவர, அதற்கு எதிர்ப்பதமாக இருந்தது தீரனின் வார்த்தைகள்.

“எஸ். ஐ ஆம் அலைவ். ஏன் நான் உயிரோட இருக்குறதுல உனக்கு எதுவும் பிரச்சனையா தீரா? மறுபடியும் ஆக்சிடென்ட் பண்ணிடேன்.” யோசியாமல் கேட்டவனின் முகத்தில் ஆத்திரம் வழிந்தது.

அதில் திகைத்து வலித்தது என்னவோ தீரஜிற்கு தான். தினம் தினம் சகோதரனின் இறப்பை எண்ணி செத்து பிழைப்பது அவன் தானே! சுலபமாக தன் மீது அமிலத்தை வீசிட, அப்போதும் இப்போதும் இவனால் எப்படித்தான் முடிகிறது என்றே துவண்டான்.

சஹஸ்ராவிற்கோ, தங்கையை காணாத பதட்டமும், திடீரென தங்கள் வாழ்க்கைக்குள் புகுந்த தீரனையும் கண்டு, உள்ளுக்குள் பதைபதைத்தது.

சர்வ நிச்சயமாக நல்லதாக எதுவும் நடக்கப்போவதில்லை என்பது மட்டும் அவளுக்கு உறுதி! அதை எண்ணும்போதே மேனி எங்கும் அச்சம் பரவியது.

இதில், தீரனின் பார்வை வேறு, அவளையும் அவள் வயிற்றையும் மாறி மாறி பார்த்து மேலும் வெறுப்பை உமிழ்ந்திட, அப்பார்வையில் எரிச்சல் மிக, தீரஜின் முதுகுக்கு பின்னால் தன்னை மறைத்துக் கொண்டவள், பயத்துடன் அவனது கரங்களை பற்றினாள்.

தன்னவளின் தீண்டலில் தான் சுயம் பெற்ற தீரஜ், ஒரு நொடி கண்ணை இறுக்கி மூடி திறந்து எதிரில் நிற்பவனை எதிர்கொள்ள ஆயத்தமானான். தவறிழைத்தது தீரன் தானே! தொழிலில் இருந்து திருமணம் வரை, தன்னை அனைத்து இக்கட்டிலும் சிக்க வைப்பவனும் அவனே தான்.

ஆனால், இவனெப்படி உயிருடன்? என்ற கேள்விக்கு விடை புரியாமல் தீரஜ் நிக்கோலஸை பார்த்தான். விபத்து ஏற்பட்டு, தீரஜ் மருத்துவமனையில் கண்விழிக்கையில், தீரனுடைய சாம்பலை மட்டுமே நிக்கோலஸ் காட்டினான். அதனை வலி மிகுந்த விழிகளுடன் சலனமின்றி பார்த்த தீரஜ், அத்துடன் எதைப் பற்றியும் கேட்டுக்கொள்ளவில்லை.

நிக்கியோ எச்சிலை விழுங்கிக் கொண்டு நிற்க, தீரன் தான், அப்போதும் அவனுக்கு பதிலாக பேசினான்.

“உன் பிரெண்டு எப்படி வாய திறப்பான் தீரா. நான் ஆக்சிடென்ட்ல சாகவே இல்லன்னு அவனுக்கு நல்லா தெரியுமே. அப்பறம் எப்படி பதில் சொல்லுவான் இல்ல நிக்கி?” என எகத்தாளமாக கேட்க, தீரஜிற்கு தாடை இறுகியது.

நிக்கி தலையை தரையில் புதைத்திருக்க, விழிகளில் கடுமையை ஏற்றிய தீரஜ், “இவன் சொல்றது உண்மையா நிக்? ஆது உயிரோட இருக்குறது உனக்கு தெரியுமா?” என்றவனின் அமைதியான ஆழ்ந்த குரலே, நிக்கோலஸிற்கு கிலி ஏற்படுத்தியது.

“மச்சி… அது…!” எனப் பேச இயலாமல் திணறியவன், பின் ஒரு முடிவோடு,

“இவன் செத்தானா சாகலையான்னுலாம் எனக்கு தெரியாது தீரா. ஆனா, ஆக்சிடென்ட் நடந்த ஸ்பாட்ல தீரன் கிடைக்கல. அங்க நீ மட்டும் தான் இருந்த. சுற்றுவட்டாரத்துல தேடி பார்த்தும் தீரன் கிடைக்கல.

அந்த நேரத்துல நீயும் ரொம்ப சீரியஸா இருந்த… அதுவும் நீ யாருன்னு உனக்கே தெரியாத நிலமைல… எனக்கு அந்த நேரத்துல நீ மட்டும் தான் முக்கியமா தெரிஞ்ச தீரா.

அப்போ, உன் பிரதரை காணோம்ன்னு சொல்லி, உன்னை ஸ்ட்ரெஸ் பண்றதுக்கு அவன் செத்துட்டான்னு கொஞ்ச நேர வலியோட நிறுத்துறது பெட்டர்ன்னு தோணுச்சு. அதான், உன்கிட்ட பொய் சொல்ல சொல்லி, டாக்டரையும் போர்ஸ் பண்ணுனேன். நான் தீரனை கொஞ்ச நாள் தேட தான் செஞ்சேன். ஆனா, உன் அன்புக்கு அவனுக்கு தகுதி இல்ல. அவன் திரும்பி வந்தா உன் வாழ்க்கையும் பாதிக்கும்ன்னு நான் தேடுறதை நிறுத்திட்டேன்.” எனக் கூறி முடிக்கும் முன்னே, நிக்கோலஸின் கன்னம் பழுத்தது.

“ஹொவ் டேர் யூ? நீ என் ப்ரெண்ட் மட்டும் தான் நிக். ஆனா, அவன் என் அண்ணன். என் வாழ்க்கைல என் கூட யார் இருக்கணும் இருக்க கூடாதுன்னு முடிவெடுக்குற உரிமை உனக்கு கிடையாது.” ஆதங்கத்தில் மொழிந்த தீரஜின் சுடுசொற்களில் நிக்கியின் கண்களில் நீர் கோர்த்தது.

சஹஸ்ராவிற்கும் இது அதிர்ச்சி தான் என்றாலும் நிக்கியின் எண்ணமும் புரிந்தே இருந்தது. அவனிடத்தில் அவள் இருந்தால் கூட, இதை தான் செய்திருப்பாள்.

“தீரா…” என அவனை அமைதி படுத்த முயல, திரும்பி அவளை ஒரு முறை முறைத்ததில் அதற்கு மேல் பேச அவளுக்கு நா எழவில்லை.

அதே தீப்பார்வையுடன் நிக்கியை ஏறிட்டவன், “அவுட்!” எனக் கர்ஜிக்க, நிக்கிக்கு அழுகை தான் வந்தது. இதுவரை தன்னிடம் கோபமே காட்டாத நண்பன், தனக்கு அவன் மீது உரிமை இல்லை என்றதில், மனம் வெந்தது.

என்ன இருந்தாலும் தீரன் தானே அவனது இரத்த சொந்தம்! என விரக்தியுடன் எண்ணியவன், தீரஜை நிமிர்ந்து பாராமல் வெளியேறி இருந்தான்.

விபத்து நடந்த அன்று, காரிலிருந்து வேறு பக்கம் தூக்கி எறியப்பட்டான் தீரன். ஆனால், அப்போதும் அவனுக்கு சுயநினைவு இருந்தது. மகிழுந்து தலை குப்பற கவிழ்ந்து கிடந்ததை கண்டவனுக்கு தலையில் தான் பலத்த காயம். ஆள் அரவமற்ற சாலையில் யாரையும் உதவிக்கு கூட அழைக்க இயலவில்லை. குருதி வழிய, உதவி நாடி சில நிமிடங்கள் நடந்தவன், அப்படியே சரிந்து விட்டான். அதன் பிறகு கண்விழித்தது சில நாட்களுக்கு முன்பு தான்.

யாரோ ஒரு வழிப்போக்கன், தலையில் அடிபட்டுக் கிடந்தவனை அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டிருந்தான். இத்தனை மாதங்களும், அவனுக்கு நினைவு வர வேண்டி மருத்துவமனையிலேயே வைத்திருந்தவர்களுக்கும் அவனைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவனுக்கு நினைவு திரும்பியதுமே, சகோதரனின் ஞாபகமே வந்தது.

அந்த விபத்தில் அவன் உயிர் பிழைத்தானா இல்லையா என்பது கூட தெரியாமல் தவித்தவனுக்கு உடனே எழுந்து நடக்க இயலாதவாறு, உடல் நிலையும் ஒத்துழைக்கவில்லை. ஒரு வாரமாக சற்று தேறி வந்தவன், தீரஜைக் காண, வீட்டிற்கு வர, அப்போது தான், சஹஸ்ராவின் வளைகாப்பு விஷயமே அவனுக்குத் தெரிந்தது. தனக்கு என்ன ஆனது எனக் கூட விசாரியாமல், தான் திருமணம் செய்த பெண்ணுடனே குடும்பம் நடத்தி, அவளுக்கு நேசம் வழிய வளையல் அணிவித்தவனைக் கண்டு, சினம் பீறிட்டது.

அதற்கு மேல் சஹஸ்ராவைக் காணும் போதெல்லாம் வஞ்சம் நிறைந்தது. ஏதோ தீரஜிற்கு பயப்படுவது போல் நடித்து, தான் கூறிய அனைத்திற்கும் சரி சரியென தலையாட்டி விட்டு, இப்போது தான் இறந்து விட்டதாக புரளியைக் கிளப்பி, தன் உடன்பிறப்புடன் ஜம்மென வாழ்பவளின் புன்னகையை குத்தகைக்கு எடுக்க வெறி பிறந்தது.

அதே வெறியுடன் தான் இங்கு வந்தான். வந்ததுடன் நிக்கியையும் வெளியில் அனுப்பி விட்டு, வெற்றிப் புன்னகையும் பூத்தவன், சஹஸ்ராவை நோக்கி, “உனக்கு வெட்கமா இல்ல?” என்றான் அருவருக்கும் பார்வையுடன்.

அப்பார்வை அவளைக் குறுக செய்தாலும், பிழை செய்தவனே இக்கேள்வியை கேட்கையில் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஆனாலும் எதுவும் பேசவில்லை அவள்.

என்னதான் தவறிழைத்தாலும், தன் கணவன் நிச்சயம் அவனை விட்டுக்கொடுக்க போவதில்லை. அவள் ஏதாவது பேசிவிட்டு, தீரனின் முன்னாலேயே, நிக்கியை அறைந்தது போல தீரஜ் தன்னிடம் கடுமை காட்டிவிட்டால்…! அதை நினைக்கவே வலித்தது பாவைக்கு.

கண்ணில் நிறைந்த நீரை அடக்கிக்கொண்டு நின்றவளை ஒரு முறை ஏறிட்ட தீரஜ், ஆதுவை நோக்கி,

“வெட்கத்தை பத்தி பேச உனக்கு எந்த யோகிதமும் இல்ல ஆது. டயர்டா இருப்ப. போய் ரெஸ்ட் எடு! பை த வே, ஷீ இஸ் மை வைஃப்.” என நிறுத்தி நிதானமாக அதே நேரம், ‘மை வைப்’ என்ற வார்த்தையில் அழுத்தத்தை அதிகப்படுத்தி கூறியவனின் தோரணையில் தீரனிற்கு பேச்சு நின்றது.

இதற்கு மேல் பேசினால், சற்று முன் நிக்கிக்கு விழுந்த அறை தனக்கு விழுகும் என்று அவன் அறிந்தது தான்! ஆனால், என்னை அவதூறாக பேசியவளின் முன்னாலேயே அவமானப்படுத்துபனின் மீது மேலும் எரிச்சல் மிகுந்தது.

அதில் வாயைக் கட்டுப்படுத்தாமல், “உன் வைஃபா? அது சரி… நான் செத்துட்டேன்னு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, நீ செத்துட்டா அடுத்து யாரை கல்யாணம் பண்ணிப்பா…?” என விஷம் தோய்ந்த குரலில் விஷமமாய் கேட்டிட, தீரஜிற்கு கோபம் எல்லையைக் கடந்தது.

ஓங்கி அறைய எத்தனிக்கும் போதே, “என்ன அடிக்க போறியா? அதுவும் என்னை அசிங்கப்படுத்துனவ முன்னாடியே. அடி! அடி! ஆனா, அடிக்கிறதுக்கு முன்னாடி, உன் ஆசை பொண்டாட்டியோட தங்கச்சி எங்க இருக்கான்னு யோசிச்சுட்டு அடி.” என்றான் நக்கலாக.

சவிதாவைப் பற்றி பேசியதும் இருவருமே உறைநிலைக்கு செல்ல, சஹஸ்ராவிற்கு பயம் அப்பியது. அவன் எண்ணியது நிறைவேறுவதற்காக உடன்பிறந்தவனின் குணத்திலேயே சாணியை பூசியவன் ஆகிற்றே.

இப்போது என்ன செய்து வைத்தானோ என்ற பதற்றத்தில் தீரஜைப் பார்க்க, அவனும் அதே பதற்றத்துடன், “சவி எங்க?” எனக் கேட்டான்.

அதற்கு தோளை குலுக்கியவன், “எனக்கு இவள் வேணும்…! இவளுக்கு வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கவே கூடாது. அவளை என்கிட்ட குடு. நான் சவிதா இருக்குற இடத்தை சொல்றேன்.” என அசட்டையாக கூறிட, தீரஜ் தான் எரிச்சலானான்.

“முட்டாள்தனமா பேசாத ஆது. நிஜமா சஹி மேல எந்த தப்பும் இல்ல. அன்னைக்கு உன்னை பத்தி இவள் அப்பாகிட்ட பேசுனது வினோதினி தான்.” என அவனுக்கு புரிய வைக்க முயல,

“அப்படின்னு இவள் சொன்னாளா?” என வஞ்சமாக நகைத்தவன், “இதை நம்புற அளவு நான் முட்டாள் இல்ல தீரா.” என்றான் முடிவாக.

ஒரு நொடி நெற்றியில் விழுந்த கேசத்தை அழுந்த கோதியவன், “நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம். உனக்கும் அவளுக்கும் நடந்ததும் கல்யாணமே இல்லன்னு உனக்கே தெரியும். இப்ப அவள் என்னோட வைஃப். உன் ஸ்டுப்பிட் தியரியை இந்த நேரத்துல காட்டாத ஆது. ஷீ இஸ் கேரியிங்.” எனப் பொறுமையை இழுத்துப் பிடிக்க,

“ஸ்டுப்பிட் தியரியா தீரா? எப்பவும் யாரு என்னை பத்தி என்ன பேசுனாலும் சண்டைக்கு போவ தான. இப்போ இவள் உன்னை மாத்திட்டாளா? இல்ல அவள்கிட்ட மயங்கி நீ மாறிட்டியா? வாட் எவர். அவளுக்குன்னு ஒரு குழந்தை இருக்குன்னா அதுவும் இந்த உலகத்துல இருக்கவே கூடாது.” என்றவனுக்கு பட்ட அவமானத்தை எள்ளளவும் மறக்க இயலவில்லை.

அதில் திகைத்த தீரஜ், “உளறாதடா. அது என் குழந்தையும் தான்.” என ஏமாற்றத்துடன் கூற, “நீ என்னை பத்தி யோசிக்காதப்ப நான் ஏன் உன் குழந்தையை பத்தி யோசிக்கணும்” என்றவனை கொல்லவே தோன்றியது தீரஜிற்கு.

சிறிதளவு கூடவா இவனுக்கு பாசமின்றி போய் விட்டது!

அனைத்தையும் கேட்ட சஹஸ்ராவிற்கு தான் கண்ணே இருண்டது. தன் தங்கையையும் மறைத்து வைத்துக் கொண்டு, குழந்தை மீதும் குறி வைக்கிறானே… என்ன மனிதன் இவன் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

நடுங்கிய குரலில், “உனக்கு என் மேல தான கோபம். அதுக்கு என் தங்கச்சியும் என் குழந்தையும் என்ன செஞ்சாங்க தீரன். ப்ளீஸ், சவி எங்க இருக்கான்னு சொல்லிடு.” எனக் கெஞ்சுதலாக கேட்க, அதனை அலட்சியப்படுத்தியவன்,

“உனக்கு உன் தங்கச்சி வேணும்ன்னா, நம்ம போட்ட அக்ரிமெண்ட்ட ஒத்துக்கிட்டு என்கூட இரு.” என்றான் இயல்பாக.

அதிர்ந்து விழித்தவள் தன்னையே நொந்து கொண்டாள். தேன் தடவிய விஷப் பாம்பு என்றறியாமல், இக்கட்டில் தானாக மாட்டிக்கொண்டு, இப்போது தங்கையையும் தன் குழந்தையையும் அல்லவா அடகு வைத்திருக்கிறாள்.

சஹஸ்ராவின் முகத்தில் தெரிந்த கலவரத்தைக் கண்டு மகிழ்ந்திருந்தவனும் தீரஜை கவனியாது, “சாய்ஸ் இஸ் யுவர்ஸ்!” என்றான்.

சஹஸ்ராவோ, “எனக்கு என் தங்கச்சி வேணும் தீரன். இப்ப நான் என்ன பண்ணனும்? நீ என்ன சொன்னாலும் செய்றேன்” என முடிவாக கேட்டிட, வெடுக்கென அவள் புறம் திரும்பிய தீரஜ், அவளை கடுமையாக முறைத்து விட்டு,

தீரனிடம் “இப்ப சாய்ஸ் உனக்கு தான் தரணும் ஆது. நீ சொல்லு… இப்ப உனக்கு இவளை பழி வாங்குறது முக்கியமா? இல்ல ஆண்ட்ரூஸ் முக்கியமா?” என ஒற்றைப் புருவம் உயர்த்தி வினவிட, தீரன் ஆடிப்போனான்.

யாரோ இவள் (ன்)
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
23
+1
72
+1
2
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்