Loading

அத்தியாயம்- 4

 

            அன்று தமிழ் சற்று முன்னதாகவே பேருந்து நிறுத்தத்திற்கு வந்திருந்தாள். வந்ததும் தன் தந்தையை போகச் சொல்லிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அப்பொழுது வண்டியில் ஒருவன் வேகமாக கடக்க, அங்கிருந்தவர்கள் அவனைத் திரும்பி பார்த்து முணுமுணுத்துவிட்டு மீண்டும் தங்கள் பணியைத் தொடர, தமிழுக்கு ஏனோ மதுரனின் நினைவு வந்தது. அன்று பேருந்தில் அனைவரும் இதேப்போல் அவனைத் பார்த்தது நினைவினிலாட, அவளறியாது ஒரு புன்னகை வந்து அவள் இதழ்களில் ஒட்டிக் கொண்டது.

 

       “என்னடி தனியா நின்னு சிரிச்சுட்ருக்க?” என்றபடி முகில் வந்து அவள் தோள் தொடவும் தான் அவள் சிரிப்பதையே உணர்ந்தாள்.

       

       முகிலுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாது விழித்த தமிழ் மீண்டும் ஈஈஈ என்று பல்லைக் காட்டிட,

       

        “நட்டு போல்ட்டெல்லாம் சரியா தானே இருக்கு.” என்று தமிழின் தலையை தொட்டுப் பார்த்த முகில் முகவாயில் விரல் வைத்து அவளை கண்களால் அளந்தபடி,

 

        “எல்லாம் சரியா தானே இருக்கு. அப்புறம் என்னாச்சு உனக்கு?” என்றாள்.

 

       “ஐயய்யோ இவ கிட்ட மாட்டிக்கிட்டோமே. இப்ப என்ன பண்றது. சரி சமாளிப்போம்.” என்று மனதினுள் பேசிய தமிழ்,

 

        “ஹிஹிஹி அது ஒன்னுல்ல முகில் நேத்து நைட்டு வடிவேல் காமெடி ஒன்னு பார்த்தேன். அது இப்ப ஞாபகம் வரவும் சிரிச்சுட்டேன் போலருக்கு.” என்று சிரித்து சமாளித்தாள்.

 

         முகில் அவளை மேலும் கீழுமாக பார்த்து, “ஆஹான் நம்பலாமா?” என்று வினவ,

 

        “என்ன முகில் இப்பிடி கேக்குற. தாராளமா நம்பலாம். உன்கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும்?” என்று தமிழ் படுமும்முரமாக முகத்தை மாற்றி சிறிது பாவமாக வைத்துக் கொள்ளவும்,

 

        “ஓகே நம்புறேன். எப்படி டப்புனு மூஞ்சி சின்னதா போவுது உனக்கு.” என்று முகில் சிரிக்க, தமிழும் சிரித்து அவளை செல்லமாக அடித்தாள்.

 

         “போடி எருமை.” என்று உர்ரென்று முகத்தை மாற்றிய தமிழை பார்த்து முகில் சத்தமாக சிரித்து வைத்தாள்.

 

         “அப்பாடா தப்பிச்சோம்.” என்று உள்ளுக்குள் கூறிக் கொண்ட தமிழும் சிரித்தாள்.

 

          இருவரும் சிரித்துக் கொண்டே திரும்ப நிலா தொலைவில் நடந்து வந்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். அவளும் இவர்களைப் பார்த்துவிட்டு கையசைத்து வேகமாக எட்டு வைத்தாள். அங்கு நின்றிருந்த இளைஞர் பட்டாளத்தில் இருந்த ஒருவன் நிலா அவர்களை கடக்கையில் ஏதோ பாட்டு பாட, அவன் நண்பர்களில் சிலர் அதட்ட, சிலர் நமட்டுச் சிரிப்பு சிரிக்க, நிலா அவர்களை திரும்பி ஒரு பார்வைப் பார்க்கவும் அனைவரும் கப்சிப்பென்று ஆகவும் அவர்களை கடந்து தன் தோழிகளின் அருகில் வந்து நின்றாள் நிலா.

 

          “என்ன நிலா ஃபேன்ஸா?” என்று முகில் கிண்டல் செய்ய, 

 

          “ஆமா ஃபேன்ஸ் ஏன் டி நீ வேற. அதவிடு நான் அங்க வரும்போது பார்த்தேன் ரெண்டு பேரும் அப்பிடி சிரிச்சுட்ருந்தீங்க என்ன விஷயம்?”, நிலா.

 

         “அது ஒன்னுல்லடி நேத்து தமிழ் ஒரு வடிவேல் காமெடி பார்த்தாளாம் அத சொல்லி சிரிச்சுட்ருந்தோம்.”, முகில்.

 

          நிலா மென்னகைப் புரிந்து, “ஹே தமிழ் என்ன வந்ததுலேர்ந்து எதுவும் பேச மாட்ற.” என்று நிலா கேட்டும் தமிழ் பதில் கூறாமலிருக்க, முகில் அவள் தோள் தொட்டு உலுக்கவும் தான் திரும்பி பார்த்தாள் தமிழ்.

 

         “என்ன தமிழ் கூப்பிட்றது காதுல விழலயா? என்னாச்சு?”, நிலா.

 

         “என்னடி சொன்னானுங்க அவனுங்க. திமிரெடுத்ததுங்க படிக்கிறத தவிர இதெல்லாம் நல்லா பண்ணுங்க.”, என்று தமிழ் அந்த இளைஞர் கூட்டத்தை முறைத்துக் கொண்டே கேட்க, நிலாவும் முகிலும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

 

          “ஹே தமிழ் எதுக்கு இப்ப அவங்கள முறைக்கிற. ஃப்ரீயா விடு. இதெல்லாம் இந்த வயசுல நடக்குறது தானே.”, நிலா.

 

          “நிலாவே கூலா இருக்கா நீ ஏன்டி டென்ஷனாகுற. பசங்க இந்த வயசுல இப்படி இல்லனாதான் ஆச்சர்யம்.” என்ற முகிலை தமிழ் முறைத்தாள்.

 

          “ஹே தமிழ் இங்க பாரு. இதுக்கெல்லாம் டென்ஷனாக கூடாது. அவன் சும்மா பாட்டு தானே பாடுனான். பசங்க ஜாலிக்கு பண்றதும் வேணும்னே வம்பு பண்றதுக்கும் வித்தாயசம் தெரியாதவளா நான். இதெல்லாம் இந்த வயசுல வர்ற ஹார்மோனல் சேன்ஜஸ்னால நடக்குறது. ஏன் நமக்கும் தான் ஹார்மோனல் சேன்ஜஸ் நடக்குது. ஏன் நாம பசங்கள சைட் அடிக்கல.” என்ற நிலாவை பார்த்து தமிழ் திருதிருவென்று விழித்தாள். கண்களின் முன் மதுரனின் முகம் நிழலாட, 

 

       “கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டனோ?! இதெல்லாம் எனக்கு புதுசு அதான்.” என்று அசடு வழிய சிரித்த தமிழை பார்த்து நிலா புன்னகைக்க,

 

         “கொஞ்சமில்ல ரொம்பவே ஓவர் ரியாக்ட் பண்ணிட்ட.” என்று முகில் சிரிக்க, தமிழ் அசடு வழிந்தாள்.

 

         “சரி விடு ரொம்ப அசிங்கப்படுத்தாத.”, தமிழ். 

 

         “சரி பஸ் வந்துருச்சு பாரு. வாங்க. இத தென்றல்ட்டயும் துளசிட்டயும் சொல்லணும்.”, என்று முகில் வேகமாக முன்சென்று நிற்க, 

 

       “முகில்! சொல்லாதடி ரெண்டு பேரும் ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க.”, தமிழ் கெஞ்ச,

 

       “ம்ஹூம் நான் சொல்லுவேன்.” என்று முகில் வந்து நின்ற பேருந்தில் ஏற, தமிழ் நிலாவை பாவமாகப் பார்க்க, அவளும் சிரித்துக் கொண்டே பேருந்தில் ஏறி விட, தமிழும் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு ஏறினாள்.

 

      ஏறியதும் தான் மதுரனை பார்க்கவில்லையே என்று அவள் மனம் அவளைப் பிராண்ட, கம்பியை பிடிப்பது போல் திரும்பி பின்னே பார்த்தவள் விழிகள் ஜன்னல் கண்ணாடியில் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த மதுரனை கண்டு இதழ்களில் இளநகையை துளிர்க்கச் செய்தன. இளநகையை இதழ்களில் மேலும் விரித்து முகில் அருகில் அமர்ந்த தமிழ் நிலாவும் முகிலும் ஏதோ பேசிக் கொண்டிருக்கவும் மீண்டும் பின்னே திரும்பி மதுரனை பார்த்தாள். வீசியக் காற்றில் முன் நெற்றியில் கலைந்தாடியக் கேசம் உறங்கும் மதுரனுக்கு வசீகரக் களைக் கூட்ட, அதனை விழிகளில் சிரிப்பைக் காட்டி இரசனையேற்றி பார்த்த தமிழ் தன் மனப்பெட்டகத்தில் உறங்கும் அவன் உருவத்தை படம் படித்துப் பதிந்துக் கொண்டு மென்னகையோடு திரும்பி அமர்ந்தாள்.

 

           நிலாவும் முகிலும் பேசிக் கொண்டே இருக்கவும் அதரங்களில் இளநகை உறைய இருக்கையில் சாய்ந்து விழி மூடினாள் தமிழ். மூடிய விழிகளுக்குள் உறங்கும் மதுரனின் உருவம் தோன்ற அவளின் இளநகை மேலும் விரிய, இதயத்துள் சாரல் மழையின் சில்லிப்பு. அவனது நினைவினிலே இருந்தவள் தென்றலும் துளசியும் ஏறுகையில் உறங்கியிருந்தாள். 

 

          முகில் உறங்கும் தமிழின் கன்னம் தட்டி எழுப்ப, உறக்கம் கலைந்து விழித்தவள் கல்லூரி வளாகத்திற்குள் பேருந்து நுழைந்துக் கொண்டிருப்பதைக் கண்டு பரபரப்பாய் நிமிர்ந்து அமர்ந்து இருகைகளாலும் முகம் துடைத்துக் கொண்டு பையை தோளில் மாட்டினாள்.

 

          “மெதுவா தமிழ் இன்னும் பஸ் நிக்கல. ஏன் அவசரம்?” என்ற நிலாவிற்கு சிறு புன்னகையில் பதிலளித்து விட்டு, பதட்டமின்றி எழுந்து படியின் அருகினில் சென்று நிற்க, தோழிகள் நால்வரும் அவளைத் தொடர்ந்தனர்.

 

        மதுரன் பேருந்து விட்டு இறங்குவதைப் பார்ப்பது தமிழின் அன்றாட பழக்கமாய் மாறியிருந்தது. அன்று தூக்கக் கலக்கத்தில் இருந்தவனிடம் வசீகரம் கூடியிருக்க, பேருந்து நின்றதும் அவசர அவசரமாக இறங்கிய தமிழ்,

 

        “ஹே இன்னிக்கு ஈஜி க்ளாஸ் இருக்குடி. ஏ3 ஷீட் தீர்ந்து போச்சு வாங்க மறந்துட்டேன். நா போய் வாங்கிட்டு வந்துட்றேன். நீங்க க்ளாஸூக்கு போங்க டாட்டா.” என்று படபடவென்று பேசிவிட்டு தோழிகளின் பதிலை கூட எதிர்பாராது விறுவிறுவென்று ஸ்டோருக்கு நடையை கட்டினாள். 

 

        “என்னாச்சு இவளுக்கு” என்று தலையை சொரிந்த மற்ற நால்வரும் “ஸ்டோருக்கு தானே போறா.” என்று தோளை குலுக்கிவிட்டு அவரவர் வகுப்பறை நோக்கிச் சென்றனர்.

        

        வியர்க்க விறுவிறுக்க ஸ்டோரை நெருங்கியபோது வெளியே இருந்த வேப்ப மரத்தடியில் மதுரன் அவன் நண்பர்களோடு சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு ஓரவிழியால் அவனைப் பார்த்தவாறே அவனை கடந்துச் செல்ல, அச்சமயம் எங்கிருந்தோ வந்த அவனின் இன்னொரு நண்பன் மதுரனை கேண்டின் அழைக்க, மதுரன் தன் தோழர்கள் குழாமோடு கேண்டின் செல்ல, 

 

        “ஐய்யோ தமிழு இன்னிக்கு காத்து உன் பக்கம் வீசுது டி. இன்னிக்கு நீ நல்ல முகத்துல முழிச்சுருக்க போலருக்கு.” என்று உள்ளுக்குள் துள்ளிக் குதித்தவள் அமைதியாய் மதுரனை பின் தொடர்ந்தாள்.

 

        “தூங்கும்போது கூட அழகா தான் இருக்கான். ப்ளூ ஷர்ட் வேற. என் செல்லம்! இன்னிக்கு ரொம்ப க்யூட்டா இருக்கடா.” என்று மனதிற்குள் மதுரனை இரசித்தபடியே மதுரன் தன் நண்பர்களோடு கேண்டினிற்குள் நுழையும் வரை பின் தொடர்ந்துவிட்டு இதழோரம் புன்னகையை இழையவிட்டபடி வகுப்பறைக்குச் செல்லலாம் என்று திரும்பியவள் அதிர்ச்சியில் அப்படியே அசையாது நின்று விட்டாள்.

 

          “மேடமுக்கு காது கேட்கலயா? கூப்ட கூப்ட நீ பாட்டுக்கு வர்ற.” என்று இசையரசி மூச்சிரைத்தபடி அவளை முறைத்துக் கொண்டு கேட்டாள்.

 

          “அது இல்ல டி. நான் வந்து…” என்று திக்கி திணறி தடுமாறி விழித்தாள் தமிழ்.

 

          “எருமை எருமை. நானும் ஸ்டோர் கிட்டேர்ந்து உன்னை கூப்ட்டுட்டே வரேன். திரும்பவேயில்ல நீ. எல்லாரும் நான் மட்டும் லூசு மாறி தனியா கத்திட்டு போறேன்னு நினைச்சு பார்த்தாங்க. நாலு பசங்க வேற மச்சான் பைத்தியம்டானு சிரிச்சானுங்க தெரியுமா. கூப்பிட்றதே காதுல விழாதளவுக்காடி போவ. இல்ல கனவு கண்டுட்டே நடக்குறியா.”, இசையரசி.

 

         “அச்சோ சாரி டி சாரி டி. நீ கூப்டத சத்தியமா நான் கேட்கல டி. இன்னிக்கு பிசிக்ஸ் டெஸ்ட் இருக்குல்ல அதபத்தி யோசிச்சுட்டு வந்தேன். அதுல நீ கூப்பிட்டத கவனிக்கல டி சாரி டி சாரி டி.” என்று தமிழ் உண்மையாகவே தன் செயலுக்கு வருத்தப்பட்டாள்.

 

        “சரி விடு. ஆமால்ல பிசிக்ஸ் டெஸ்ட் இருக்குல்ல. நா படிக்கவேயில்ல டி. நீ படிச்சியா?” என்ற இசையரசியின் முகத்தில் கலக்கம் தெரிந்தது.

 

         “நான் படிச்சுட்டேன். ஃப்ரீயா விடு நான் சொல்லி தரேன்.”, தமிழ்.

 

         “எது சொல்லி தர்றியா. பர்ஸ்ட் பிரீயடே பிசிக்ஸ் தான். பர்ஸ்ட் பிரீயட் பெல் அடிக்க இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு.”

 

         “சரி டி டென்ஷனாகாத நான் பேப்பர் காட்றேன் நீ எழுது.”

 

         “ஹான் இது எவ்வளோ நல்லார்க்கு கேக்க.” என்ற இசையரசியை பார்த்து தமிழ் சிரிக்க, அவளும் சிரித்து விட்டாள்.

 

        “சாரி டி நெஜமாவே நீ கூப்பிட்டது எனக்கு கேக்கல.” என்று தமிழ் வருந்த,

 

         “அடச்சீ ப்ரீயா விடு. உன் டமாரம் அவுட்டுனு இப்ப கன்பார்ம் ஆயிருச்சுல்ல இனிமே தூரத்துலேர்ந்து கூப்பிட்டு நா லூசாக மாட்டேன்ல.” என்று இசையரசி நமட்டு சிரிப்பு சிரிக்க,

 

        “அடிப்பாவி.” என்று அவளை அடித்த தமிழும் சிரிக்க, இருவரும் வகுப்பறையை அடைந்திருந்தனர்.

 

        கிறிஸ்டி கையசைக்க, இசையரசி வேகமாக அவளருகில் சென்று அமர,

 

        “அப்பாடி ஜஸ்ட்டு மிஸ்ஸு தமிழு. ஜாக்கிரதையா இருக்கணும் தமிழு.” என்று மனதிற்குள் கூறியபடி அவளும் அவர்களோடு அமர்ந்தாள்.

 

       கிறிஸ்டி, தமிழ், இசை மூவரிடையேயும் நல்ல தோழமை ஒன்று உருவாகியிருந்தது. தமிழும் வகுப்பில் மற்ற மாணவியரோடும் தயக்கம் விடுத்து சிநேக பாவத்தோடுப் பழகத் துவங்கியிருந்தாள். பிடிக்காத இன்ஞ்சினியரிங் என்று படிப்பில் அவள் நாட்டமில்லாமல் இல்லை. சேர்ந்து விட்டோமென்று படிக்காமல் சிரத்தையோடு படிக்க முயற்சித்ததில் அவளுக்கு அதன் மீது விருப்பம் பிறந்திருந்தது.

 

         நாட்கள் படிப்பும் தோழமையுமாய் நன்விதமாய் நகர்ந்துக் கொண்டிருந்தன. 

 

          ஒருநாள் காலையில் தோழிகள் ஐவரும் பேருந்தில் வழக்கம்போல் அரட்டை அடித்துக் கொண்டிருக்க, டமாரென்ற சத்தத்தோடு பேருந்து திடுமென்று நிற்க, கம்பியில் மோதி விடாமல் இருக்கையை இறுக்கமாக பற்றி அமர்ந்து இழுத்துப் பிடித்த மூச்சை வெளியேற்றி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு,

 

         “என்னாச்சு?” என்று வினவிட, அவர்களின் அதே கேள்வியை பேருந்திலிருந்த அனைவரும் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களிடம் எழுப்பினர்.

 

          “டயர் பஞ்சராயிடுச்சு. வேற டயர் மாத்துனா தான் வண்டி கிளம்பும். அரை மணி நேரமாகும்.” என்று ஓட்டுநரும் அவரின் உதவியாளரும் கீழே இறங்கிச் சென்று எந்த சக்கரம் பழுதாகியுள்ளது என்று பார்க்க, பின்னே இருந்த சக்கரம் ஒன்று காற்று போய் சாலையோடு ஒட்டிக் கிடந்தது.

 

        “ஹை ஜாலி அப்ப பர்ஸ்ட் ஹவர் முடிஞ்சு தான் போவோம்.”, நிலா.

 

         “கிரேட் எஸ்கேப்பு டி கெமிஸ்ட்ரி டெஸ்ட்லேர்ந்து.” என்று முகில் துளசியோடு ஹைபை அடிக்க,

 

         “அப்பாடா மேத்ஸ் க்ளாஸ்லேர்ந்து இன்னிக்கு விடுதலை.” என்று தென்றல் ஆசுவாசம் கொள்ள,

 

          “என்னதிது இப்பிடி ஆகி போச்சு. ஒரு பீரியட் முடிஞ்சு போனா அட்டன்டென்ஸ் போகாதா? மேம் திட்ட மாட்டாங்களா?” என்ற தமிழை பார்த்து முகில் தலையில் அடித்துக் கொண்டாள்.

 

         “தமிழ் என்ன இன்னும் ஸ்கூல் புள்ள மாறி? நீயாவா வேணும்னு லேட்டா போற? காலேஜ் பஸ் தானே பஞ்சராச்சு. அதுக்கெல்லாம் திட்டவும் மாட்டாங்க அட்டன்டென்ஸூம் போடாம இருக்க மாட்டாங்க. வீணா பயப்படாத.” என்று நிலா அவளுக்கு புரியும்படி கூறி அவளது பயம் போக்கவும் தமிழின் இதழ்களில் சிறு வளைவு.

 

         இதழ்கள் புன்னகைத்து பதில் தந்தாலும் மின்னிய விழிகள் மட்டும் தோழிகளை காணவில்லை. மாறாக ஜன்னல் வழியே தெரிந்த மதுரனின் மீது பதிந்திருந்தன. அதன் பின் தமிழிற்கு பயமெல்லாம் காணாமல் ஓடிபோயிருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?! எதிரே ஒரு கடையினோரம் நின்று தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த மதுரனை ஜன்னல் வழியே கண்டு விழிகளில் நிறைத்தபடி திரும்பிய தமிழ் விழித்த விழி மாறாமல் சில நொடிகள் அமர்ந்து விட்டாள். ஏனெனில் நிலா, முகில், துளசி, தென்றல் என்று நால்வருமே மதுரனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். 

 

         யதார்த்தமாக திரும்பிய மதுரன், நிலா பார்ப்பதைப் பார்த்துவிட்டு புன்னகைக்க, நிலா கையசைத்து “சாப்பிட்டியா?” என்று சைகையால் வினவிட, அவன் தலையசைத்து சாப்பிட்டதாகத் தெரிவிக்க, நிலா மென்னகைப் புரிந்து தோழிகள் புறம் திரும்ப, மதுரனும் அவன் நண்பர்களோடு கதைப்பதைத் தொடர்ந்தான். நிலா திரும்புவும் தமிழை தவிர மற்ற மூவரும் முகத்தினை இயல்பாக்கிக் கொண்டு அவளைப் பார்த்தனர். தமிழ் அம்மூவரையும் ஒரு தினுசாக நோக்கிவிட்டு நிலாவின் மீது விழி பதித்தாள்.

 

         “நல்ல வேளை இன்னிக்கு சாப்பிட்டான். இல்லனா பயபுள்ள காலைல சாப்புடவே சாப்பிடாது. கேண்டின்ல தான் சாப்பிடும். லேட்டா போனா நேரா க்ளாஸுக்கு போகணுமே இவன் எப்பிடி சாப்புடுவான்னு நினைச்சேன். சாப்பிட்டுட்டான்.”, என்று நிலா அவளாகவே மதுரனை பற்றி பேசினாள்.

 

          “ஓஓ அதான் டெய்லி பஸ்ஸ விட்டு இறங்கியதும் நேரா கேண்டின் போறானா. நான் கூட ரெண்டாவது ரவுண்ட் சாப்புடுறானு தப்பா நினைச்சுட்டேன். சாரி டா மது.” என்று மானசீகமாக அவனிடம் மன்னிப்பு கேட்ட தமிழ்,

 

          “டெய்லியுமே காலைல சாப்பிட மாட்டாங்களா?” என்று கேட்டாள்.

 

           “அப்பிடியில்ல. மோஸ்ட்லி சாப்பிட மாட்டான்.”, நிலா.

 

          “ஏன்”, துளசி.

 

          “ஆமா ஏழு மணி பஸ்ஸுக்கு ஆறேமுக்காலுக்கு எந்திரிச்சா எப்படி சாப்புட்றதாம். அரக்க பரக்க கிளம்பி வருவான். அவங்க பாட்டிக்கும் காலைல சீக்கிரம் எழுந்துக்க முடியாது அதுனால கேண்டின்லயே சாப்பிட்டுக்குறேன்னு பாட்டிக்கிட்ட சாப்பாடு செய்ய வேணாம்னு சொல்லிட்டான்.”, நிலா.

 

          “ஏன் அவங்க அம்மா செஞ்சு குடுக்க மாட்டாங்களா?”, முகில்.

 

          “அவங்க அம்மாவும் அப்பாவும் பெங்களூர்ல வொர்க் பண்றாங்க. அவங்க அடிக்கடி ஆன்சைட் போறதால சிக்ஸ்த் படிக்கும் போதுலேர்ந்தே இவன் தாத்தா, பாட்டி கூட இங்க தான் இருக்கான்.”, நிலா.

 

          “ஓஓ ஆனா டெய்லி கேண்டின்ல சாப்புட்றது கஷ்டம்ல.”, என்ற தென்றலை 

          

         “அத ஏன் இவ ஃபீல் பண்றா?” என்று எண்ணியபடி பார்த்த தமிழ்,

         

         “அப்ப மதியமும் மதுரன் கேண்டின்ல தான் சாப்பிடுவாங்களா?” என்று கேட்டாள்.

         

        “ஆமா” என்று நிலா பதிலளிக்க,

        

        “பாவம்தான் இல்ல. என்னதான் பாட்டி, தாத்தா நல்லா பார்த்துக்கிட்டாலும் அம்மா அப்பா பக்கத்துல இல்லயேனு தோனும்ல அவங்களுக்கு.”, என்று முகில் கேட்க,

 

       “ஆமா அவன் நெறய டைம் என்ட்ட சொல்லி ஃபீல் பண்ணிருக்கான். ஆனா அவங்க அப்பா அம்மாவுக்கு அது புரியலேயே. அவன் பியூச்சருக்காக அவன் ப்ரசன்ட்ட ஏக்கமா மாத்திட்டாங்க.”, என்று நிலா வருத்தப்பட்டாள்.

 

       ஏனோ தமிழிற்கு கண்கள் கலங்கி விட்டது யாரும் பார்த்து விடக் கூடாதென்று அவள் குனிந்துக் கொள்ள, மற்றவர்களுக்கும் மனம் கனத்ததால் அமைதியாக இருந்தனர்.

 

        “எப்படி டா மது இவ்ளோ ஃபீலிங்ஸ உள்ள வச்சுட்டு சிரிச்சுட்ருக்க. உன் பச்சபுள்ள சிரிப்பை பக்கத்துல இருந்து பார்க்க உன் அப்பா அம்மாக்கு தான் குடுத்து வைக்கல. ச்ச நாம ப்ரண்ட்ஸாயிருந்தா உனக்கும் சேர்த்து டெய்லி டிபன் கட்டி எடுத்து வந்துருவேன். எங்கம்மா கைப்பக்குவமிருக்கே அட அட சாப்பிட்டுட்டே இருக்கலாம். ம்ம்ம் என்ன பண்ண? எப்படியாச்சும் நான் உன்கூட ப்ரண்டாகுறேன். எங்கம்மா சமையல நீயும் டேஸ்ட் பண்ற.” என்று மதுரனுடன் பேசுவதாக எண்ணி அவளுக்கு அவளே ஆறுதல் சொல்லிக் கொண்டாள் மனதிற்குள்.

 

       சாலையில் வேகமாகச் சென்ற இருச்சக்கர வாகனமொன்று அமைதி கலைக்க, நிமிர்ந்து பார்த்த நிலாவும் தமிழும் ஒரே நேரத்தில்,

 

          “ஆர் ஓன் ஃபைவ்.” என்று விழி விரித்து கூறி சிரித்துக் கொண்டனர்.

 

         “உனக்கு பைக்ஸ் புடிக்குமா தமிழ்?”, என்று விழிகள் மின்ன கேட்டாள் நிலா.

 

        “ஆமா புடிக்கும். உனக்கும் புடிக்குமா? அதுனால தானே எங்கப்பாவோட இன்னும் வண்டில வரேன்.” என்று கண்சிமிட்டினாள் தமிழ்.

 

        “சூப்பர் போ.” என்று நிலா சிரிக்க,

 

        “அடிப்பாவி. அப்ப லாங் ட்ராவல் பண்ணி பழக்கமில்ல பஸ்ல தனியா வந்ததில்லனு சொன்னதெல்லாம் பூருடாவா.”, என்று முகில் அவளை அதிர்ந்து நோக்கினாள்.

 

         “ஹாஹாஹாஹா இல்ல முகில் அது உண்மைதான். ஆனா இப்ப லாங் ட்ராவல், பஸ்ல வர்றதெல்லாம் புடிச்சுருக்கு ஆனா பைக்ல வர்றது ரொம்ப புடிச்சுருக்கே அதான் காலைல மட்டும் அப்பாவோட வரேன்.” என்று தமிழ் கூறவும்,

 

          “நீ நடத்து டி நடத்து.” என்று முகில் சிரிக்க,

 

         “நாங்கூட உன்னை என்னவோனு நினைச்சேன் ஆனா நீ பயங்கர கேடி டி.” என்று தென்றல் கூற,

 

          “உன்னை யாரு என்னவோனு நினைக்க சொன்னா?” என்று தமிழ் புருவம் உயர்த்த,

 

          “ஹாஹாஹாஹா தேவையா இது உனக்கு. பல்பு.” என்று துளசி தென்றலை கிண்டலடித்து சிரிக்க, உடன் மற்றவர்களும் சிரிக்க, தென்றலும் சிரித்து விட்டாள்.

 

          “ஆமா நிலா மதுரனுக்கு பைக் ஓட்ட தெரியுமா?”, முகில்.

 

         “அதெல்லாம் சூப்பரா ஓட்டுவான்.” என்று நிலா கூறவும் மற்றவர்கள் புன்னகைத்தனர்.

 

         “மதுவுக்கு பைக் ஓட்ட தெரியுமா? அப்ப என் ஸ்மார்ட் பாய் பைக் ஓட்ற ஸ்டைல பார்த்தாகனுமே” என்ற எண்ணம் தமிழ் மனதில் தோன்ற, அவள் அதரங்களில் அனிச்சையாய் புன்னகை விரிந்தது.

 

        அச்சமயம் புது சக்கரம் மாற்றி முடித்து பேருந்து புறப்படத் தயாராக, தமிழ், மதுரன் பேருந்தில் ஏறி விட்டானா? என்று பின்னே திரும்பி பார்த்து அவன் ஏறியதை உறுதி செய்து திரும்பி அமர்கையில் பேருந்து கல்லூரியை நோக்கிப் புறப்பட்டது.

 

           இவ்வாறு தமிழ் பார்ப்பவற்றில் கேட்பவற்றில் எண்ணத்தில் என்று நித்தமும் ஏதோ ஒன்றில் மதுரன் இருக்குமளவு மதுரன் மீதான அவளின் அன்பு நாளுக்கு நாள் பெருகியது. எவ்வளவு அன்பென்றால் முதல் செமஸ்டர் முடிவடையும் தருவாயில் பரீட்சை, படிப்பு என்று அவள் கவனமாக படித்தாலும் அவனை நித்தமும் ஒருமுறையேனும் நினைக்காமல் பார்க்காமல் இருக்க மாட்டாள். அவனை காலையும் மாலையும் ஒருமுறை பார்க்காமல் அன்றைய நாள் தமிழிற்கு தொடங்காது, முடியாது. 

 

            நாட்கள் இவ்வாறு கடக்க, ஏன் மதுரனை அவளுக்கு அவ்வளவு பிடித்திருக்கிறதென்ற கேள்வி எழுந்தாலும்,

 

         “பிடிச்சுருக்குல்ல. இந்த பீலிங் நல்லாருக்குல்ல. அத அனுபவி அதவிட்டுட்டு ஆராயாத.” என்று அவள் மனமிட்ட கட்டளைக்கு இணங்க மூளை எழுப்பிய கேள்வியை புறந்தள்ளி அவ்வுணர்வை முழுமையாக அனுபவித்து ஆனந்தித்துக் கொண்டிருந்தாள்.

 

         செமஸ்டர் பரீட்சைக்கு முன் மாடல் எக்ஸாம் வந்தது. அனைவரும் செமஸ்டர் பரீட்சையின் முன்னோட்டம் போல் அது என்பதால் மும்முரமாகப் படித்து அத்தேர்வை எழுதி முடித்தனர். முதல் செமஸ்டரில் இருக்கும் மும்முரம் பிற்பாடு எங்கே என்று தேட வேண்டும் என்று அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

 

        மாடல் எக்ஸாம் என்பதால் கல்லூரி மதியத்தோடு நிறைவடையும். எக்ஸாம் முடிந்த கடைசி நாளன்று மதியம் முதலாமாண்டு மாணவர்களை சற்று நேரம் வகுப்பறையிலேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு ஆசிரியர்கள் எல்லாம் சென்று விட்டார்கள். ஏன்? எதற்கு? என்று காரணம் தெரியாமல் மாணவர்கள் அனைவரும் அவர்களுக்குள்ளே கிசுகிசுத்து விட்டு தங்களது அரட்டைக் கச்சேரியை துவங்கியிருந்தனர். சிலர் பக்கத்து வகுப்பறைக்கு சென்று அங்கிருக்கும் அவர்களின் நட்புக்களோடு கதைத்துக் கொண்டிருந்தனர். ஒரு அரைமணி நேரம் சென்றிருந்த போது தான் மெல்ல அச்செய்தி ஒவ்வொரு வகுப்பறையாக பரவியது. 

 

        சீனியர் மாணவர்கள் சிலர் கல்லூரி கட்டணம் உயர்த்தியதைக் கண்டித்து போராட்டத்தில் குதித்து கட்டிடக் கண்ணாடிகளை உடைத்து கலவரம் செய்கின்றனர் என்ற செய்தியை கேட்டதும் அனைவருள்ளுமே பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று என்ற பயம் வந்து ஒட்டிக் கொண்டது. 

 

         தமிழிற்கு அப்பயத்தை தாண்டி மதுரன் பாதுகாப்பாக இருக்கிறானா? என்ற எண்ணமே அதிக பயம் தந்தது. ஏனெனில் பையன்கள் பலர் கல்லூரி பேருந்து இல்லாவிட்டால் தனியார் பேருந்தில் செல்வதாகக் கிளம்பிச் சென்றிருந்தனர். மதுரனும் அதுபோல் கிளம்பியிருந்தால் அவன் அக்கலவரத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்ற பயத்தோடு அவளால் அமைதியாக அமர்ந்திருக்க இயலவில்லை. கிறிஸ்டியிடமும் இசையிடமும் சொல்லிக் கொண்டு முகிலை தேடி சென்றாள். அங்கு முகில், துளசியோடு தென்றலும் அமர்ந்திருப்பதுக் கண்டு அவள் சற்று நிம்மதி கொண்டாள்.

 

         நால்வருக்கும் நிலாவை பற்றிய கவலையும் பயமும் வேறு சேர்ந்துக் கொண்டது. ஏனெனில் அவள் இருக்கும் கட்டிடம் வேறு. அங்குதான் கலவரம் நடப்பதாக வந்தத் தகவலே அவர்களை அதிகக் கவலைக் கொள்ளச் செய்தது. நால்வரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு எண்ணவோட்டம். அப்படியே ஒரு மணி நேரம் கடக்க, ஆசிரியர்கள் வந்து பிரச்சனை முடிந்து விட்டதாகவும் அனைவரும் விரைவாக அவரவர் செல்லும் பேருந்திற்கு செல்லும் படியும் கூற, அனைவரும் பேருந்துகள் நிற்குமிடம் நோக்கி விரைவாகச் சென்றனர்.

 

         தோழிகள் நால்வரும் அவர்களின் பேருந்தை கண்டறிந்து அருகேச் செல்லும் பொழுதே நிலாவும் பேருந்தில் ஏற வருவதைக் கண்டு நிம்மதியுற்றனர்.

 

        “உங்களுக்கு ஒன்னும் பிரச்சனையில்லயே?” என்று நிலா கேட்க,

 

        “எங்களுக்கு ஒன்னுமில்ல. உனக்கு ஒன்னுமில்ல தானே?” என்று அவர்கள் பதிலுக்கு அவளை கேட்க,

 

       “இல்ல பா. பிரச்சனைனு தெரிஞ்சவொடனேயே எங்களை சேஃபா ஒரு இடத்துல உக்கார வச்சுட்டாங்க‌. கிளம்புறேன்னு சொன்ன பசங்களயும் போக கூடாதுனு சொல்லி உக்கார வச்சுட்டாங்க.” என்று நிலா சொல்லியதும் தான் அனைவருக்கும் முழுதாய் ஆசுவாசம் அடைய முடிந்தது.

 

      தமிழிற்கு அப்பொழுது தான் மூச்சே வந்தது. பெருமூச்சுவிட்டு அவள் பக்கவாட்டில் திரும்ப, மதுரன் பேருந்தில் ஏறுவதை கண்டு மிகவும் நிம்மதியுற்று அவனையே பார்த்திருந்தாள். ஐந்து நிமிடத்தில் பேருந்து கிளம்பிவிடும் என்று ஓட்டுநர் கூறவும் அனைவரும் விரைவாக பேருந்தில் ஏறவும் தான் தமிழும் தன்னுணர்வு அடைந்து பேருந்தில் ஏறி அமர்ந்து ஒருமுறை மதுரனை திரும்பிப் பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டு இருக்கையில் சாய்ந்தமர்ந்து விழிகள் மூடிக் கொண்டாள். நிலா,முகில், துளசி, தென்றல் நால்வரும் நடந்த பிரச்சனை பற்றி பேசிக் கொண்டு வந்தது காதில் விழுந்தாலும் அப்பேச்சில் அவள் கலந்துக் கொள்ளவில்லை. நிறுத்தத்தில் இறங்கியும் தமிழ் முகிலடமோ, நிலாவிடமோ எதுவும் பேசவில்லை. அவர்களும் அவள் அதிகம் பயந்துவிட்டாள் என்று நினைத்து அவளை எதுவும் கேட்கவில்லை. 

 

                    தமிழ் அவள் ஊருக்கு வந்து அவள் வீட்டிற்கு நடந்து செல்கையில் தான் அவ்வளவு நேரம் முகத்தினில் காட்டாத தீவிர சிந்தனையை பாவமாய் முகத்தினில் சூடியபடி, “ஏன் மதுரனுக்கு ஒன்னும் ஆகலன்னவொடனே அவ்வளோ நிம்மதியான? மதுரன ஏன் தினமும் பார்க்கணும்னு தோனுது உனக்கு? அவன பார்த்தவொடனே ஏன் அவ்வளோ சந்தோஷப்பட்ற? பார்க்கலனாவோ இல்ல அவன் லீவ் போட்டாலோ ஏன் அவ்வளோ சோகமாகுற?” என்று அவள் மனது எழுப்பிய கேள்விகளுக்கு என்ன விடையளிப்பதென்று அறியாமல் குழம்பியவள்,

         

        “அடச்சீ போ அது ஏன் எதுக்குன்லாம் தெரிய வேணாம். மதுவ ஏனோ ரொம்ப புடிச்சுருக்கு பார்க்குறேன். சந்தோஷப்பட்றேன். பார்க்கலனா வருத்தப்பட்றேன் அவ்வளோதான். அவன பார்த்தா, நினைச்சா அவ்வளோ சந்தோஷமா இருக்கு. ஏதோ ஒரு நல்ல ஃபீல் உள்ள கெடைக்குது.” என்று கேள்வி கேட்ட தன் மனதிற்கு கொட்டு வைத்து நிம்மதி பெரும்மூச்செறிந்து மீண்டும் மதுரனை எண்ணி புன்னகைத்துக் கொண்டாள்.

 

“ஏன் எதற்கென்று அறியவில்லை!

ஆராயவும் மனமில்லை!

சாரல் மழை அவன்!

சிலாகித்து ஆனந்தித்திருக்க…!”

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்