2,736 views
எத்தனை நிமிடங்கள் அந்த அணைப்பு தொடர்ந்ததோ, முதலில் நிகழ்விற்கு வந்து விலகியது சஹஸ்ரா தான். அவனும் தடுக்காமல் அவள் முகம் பார்க்க, அதுவோ குழப்பத்திலும் சிவப்பிலும் தோய்ந்திருந்தது.
சட்டென அங்கிருந்து நகர்ந்தவள் அடுக்களைக்கு வந்து நின்று தான் ஆசுவாசமானாள்.
‘இது சரியில்ல. அவருகிட்ட உண்மையை சொல்லிடறது தான் பெட்டர். என்ன இருந்தாலும் இது வெறும் அக்ரிமெண்ட் மேரேஜ் தான்.’ என தனக்குத் தானே உறுதி எடுத்துக் கொண்டவள், தேநீருடன் அவன் அறைக்கு சென்றாள்.
உள்ளேயே படிக்கட்டுகள் செல்லும் ‘டியூப்லெக்ஸ்’ குட்டி பங்களா தான் அவன் வீடு. நீலாங்கரையை ஒட்டியுள்ள அவ்வீட்டில், தீரன் அறையில் இருந்து பால்கனி வழியே காணும் போது தூரத்தில் நீல கடல் நளினமாய் காட்சியளிக்கும்.
திருமணமாகி இங்கு வந்த நாட்கள் முதல், அக்கடலை வேடிக்கை பார்ப்பதே அவளின் ஒரே பொழுதுபோக்கு. திருமணத்திற்கு முன்பு கூட, சிறு சிறு உரையாடல்கள் இருவருக்குள்ளும் இருந்தது. திருமணத்திற்கு பின்னோ, தீரன் கடுமையான மௌன விரதமே காத்தான்.
அதற்கும் சேர்த்து வைத்து இப்போது பேசிக் கொல்பவனை எண்ணும் போதே, இதழ்கள் புன்னகையைத் தத்தெடுக்க, கூடவே, அவன் எடுத்துக்கொள்ளும் அதீத உரிமையை நினைத்து மனம் பதைபதைத்தது.
தீரன் குளியலறையில் இருக்க, எப்போதும் போல பால்கனி வழியே கடல் அலைகளை வெறித்தபடி, அவனிடம் பேசுவதற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிமிடங்கள் கடந்தும், அவன் வரும் அரவம் கேட்காது போக, உள்ளே எட்டிப் பார்த்தாள். அங்கு தீரன் தான் இன்னும் முழுதாக பிரிக்கப்படாமல் கட்டிட்டு இருந்த தலையை பற்றியபடி அமர்ந்திருந்தான்.
அவன் அமர்ந்திருந்த நிலை கண்டு மறுநொடி அவனிடம் சென்றவள், “என்ன ஆச்சு தீரன். தலைவலிக்குதா? ஹாஸ்பிடல் போகலாமா?” எனக் கேட்டாள் பதற்றத்துடன்.
‘வேண்டாம்’ என்பது போல தலையாட்டியவன், “ஏதோ சம் கிளாஷஸ் மாதிரி ஏதேதோ சம்பவம்லாம் வந்து போகுது சஹி. தலை வலிக்குது! ரொம்ப குழப்பமா இருக்கு.” என மெதுவாய் கூறியவனின், கண்கள் வலியை பிரதிபலித்தது.
“இதுக்கு தான் சொன்னேன் இன்னும் ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருக்கலாம்ன்னு. நீங்க கேட்டா தான? இப்பவும் ரெஸ்ட் எடுக்காம கண்டதை யோசிச்சுக்கிட்டே இருக்கீங்க. ரிலாக்ஸா இருங்க தீரன்.” என அவ்வலி அவளையே தாக்கியது போல, அவன் கரத்தை பற்றிக் கொண்டு சமன் செய்தவள், அவனை கட்டிலில் படுக்க வைத்தாள்.
அவளையே விழி எடுக்காமல் பார்த்திருந்தவனின் கண்கள் தூக்கத்திற்கு கெஞ்சினாலும், ஏக்க குரலில், “சஹி… நிஜமாவே நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டோமா?” எனக் கேட்க, அவளோ திகைத்தாள்.
‘இவனுக்கு நினைவு திரும்பி விட்டதோ?’ என்ற ஆர்வத்தில் அவன் முகம் பார்க்க,
அவனோ, “ஐ காண்ட் பிலீவ் திஸ். என்னை எனக்காகவே என்கூடவே இருந்து என்னை கேர் பண்ணிக்கிற என் வைஃப்…! அவளை நான் லவ் பண்ணிருக்கேன்னு நினைக்கும் போது, எதுவும் ஞாபகம் வரலைன்னு கஷ்டமா இருக்கு. முன்னாடி நான் எப்படி உன்ன லவ் பண்ணேன்னு எனக்கு தெரியல. பட், இப்போ நீ பக்கத்துல இல்லைன்னா ஒரு மாதிரி லோன்லியா ஃபீல் ஆகுது. ப்ளீஸ் என்கூடவே இரேன்…!” கெஞ்சும் பாவனையுடன் கேட்கும் அந்த ஆண்மகனை தவிப்பாகப் பார்த்தாள் சஹஸ்ரா.
“நான் உங்க கூடவே தான இருக்கேன். இப்போதைக்கு எதையும் ஞாபகப்படுத்த முயற்சி செஞ்சு உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்காதீங்க.” என்றவள், எப்போது அவன் அருகில் அமர்ந்து அவனது கன்னத்தை பற்றிக் கொண்டாள் என்று அவளே அறியவில்லை.
மெலிதாக முறுவலித்தவன், “ஓகே பிரின்சஸ். இனிமே எதையும் யோசிக்கல!” என்றபடி, அவள் நெஞ்சில் தலையை வைத்து வாகாக படுத்துக் கொள்ள, அவளும் மற்றவை மறந்து மென்மையாக அணைத்துக் கொண்டாள்.
நொடிகள் நிமிடங்களாகி, அவன் உறங்கியதை உணர்ந்த பின்னே, இருவரும் இருக்கும் கோலமே உறைத்தது அவளுக்கு.
குழந்தை போல தன்னிடம் அரவணைப்பு தேடும் கணவனிடம், நமக்குள் காதல் என்றெல்லாம் ஒன்றும் இல்லை என எப்படி கூறுவது?
தன்னைக் கண்டதும், மின்னி ரசனையை வெளிப்படுத்தும் அந்த அழுத்த விழிகள்! அப்பப்பா! அந்த கண்களை கடந்து உண்மையை உரைக்க அவள் நாக்கு ஒத்துழைத்தாலும் மனம் முரண்டு பிடித்தது.
அவளும் அல்லவா அந்த மாய உணர்விற்குள் இழுத்துச் செல்லப்படுகிறாள். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் அவளை அதிர செய்வதுடன், ரசிக்கவும் வைத்ததே! இதற்கு தீர்வு கண்டறிய விழைந்தவள், தற்போதைக்கு அதனை ஒத்தி வைத்து, அவன் உடல்நிலையிலும் மனநிலையிலும் கவனம் செலுத்தினாள்.
மாலை வேளையில் தான், கண் விழித்தவனுக்கு பேச்சு சத்தம் கேட்க, மெதுவாக கீழே இறங்கினான்.
அவனைக் கண்டதும், பள்ளி சீருடையில் இருந்த சஹஸ்ராவின் தங்கை சவிதா, “மாமா…! எப்படி இருக்கீங்க? உங்களை பார்க்க நான் ஹாஸ்பிடல் வந்தேன். நீங்க தூங்கிட்டு இருந்ததனால அக்கா டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு சொல்லிட்டா.” என உரிமையுடன் பேச, அவனோ அவள் யாரென தெரியாமல் விழித்தான்.
“சவி… நீ போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா.” என்ற சஹஸ்ரா, அவள் உள்ளே சென்றதும், தயக்கத்துடன் தீரனை பார்த்தாள்.
“இவ என் தங்கச்சி. நம்ம கூட தான் இருக்கா…” எனத் தயங்கி தயங்கி கூறினாள்.
இருவரும் திருமணம் பற்றி பேசும் போதே, தீரனின் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டவள், அவளும் ஒரு நிபந்தனையை முன் வைத்தாள். அது தான், சவிதாவை அவளுடனே வைத்துக் கொள்வது. தாயையும் தமக்கையையும் நம்பி, அவளை விட மனம் வரவில்லை அவளுக்கு.
அப்போதிருந்த மனநிலையில் ஒப்புக்கொண்டான். ஆனால், இப்போது என்ன சொல்வானோ? எனக் கையை பிசைந்தவளிடம்,
“ஓ… உன் தங்கச்சியா. முன்னாடியே சொல்லிருக்கலாம்ல. பாவம்… அவள் பேசுனதுக்கு நான் பதிலே சொல்லாம விட்டுட்டேன்.” என்னும் போதே, சவிதா மீண்டும் அங்கு வந்திருந்தாள்.
அவளிடம் இயல்பாக பேசியவன், அவள் படிக்கும் பள்ளி பற்றியும், வகுப்பு பற்றியும் விசாரித்தான்.
சவிதாவும் அவன் பேச்சு கொடுத்ததில் உற்சாகமாக பதில் அளிக்க, சஹஸ்ராவிற்கு நிம்மதி பெருமூச்சு உதித்தது.
ஆனால், அவர்களின் பேச்சு வார்த்தை தான், சினிமா, அரசியல், பிடித்தது, பிடிக்காதது என இரவு உணவு முடிந்த பின்னும் நீடிக்க, பொறுத்து பொறுத்து பார்த்த சஹஸ்ரா,
“போதும் ரெண்டு பேரும் பேசுனது. தீரன்… உங்களை டாக்டர் கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் தான இருக்க சொன்னாரு. இப்படி பேசிக்கிட்டே இருந்தா எப்படி ரெஸ்ட் கிடைக்கும். சவி… நீ போய் படி.” என்றாள் முறைப்பாக.
அவளோ, “அக்கா எப்பவும் இப்படி தான் மாமா. நம்மளை ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பா. நம்ம ஜாலியா இருந்தா இவளுக்கு பிடிக்காது…” என்று கேலி செய்ய,
“அடிங்க…” என்று சஹஸ்ரா அடிக்க வரும் போதே, “நம்ம நாளைக்கு பேசலாம் மாமா! குட் நைட்” என தீரனுக்கு ஹை ஃபை கொடுத்து விட்டு உள்ளே ஓடி விட, தீரன் கலகலவென சிரித்து விட்டான்.
“போதும் நீங்க சிரிச்சது!” என்று மீண்டும் முறைத்தவள், திரும்பி நடக்கப் போக, மறுகணமே அவன் மடியில் தவழ்ந்திருந்தாள்.
“பிரின்சஸ்க்கு இப்போ நான் ரெஸ்ட் எடுக்கலைன்னு கோபமா? இல்ல, உன்கிட்ட பேசலன்னு பொறாமையா?” எனக் கேட்டு புன்னகைத்தான்.
ஏற்கனவே, ஆடவனின் மூச்சுக் காற்று முகத்தில் வெப்பமாக தீண்டியதில் அதிர்ந்திருந்தவள், அக்கேள்வியில் மேலும் அதிர்ந்தாள்.
இத்தனை நாளாக தன்னிடம் கூட அவன் இவ்வளவு பேசியதில்லை. ஆனால், சவிதாவிடமோ பல வருடம் பழகியவன் போல பேசியதில் மகிழ்ச்சி இருந்தாலும், கூடவே கடுப்பும் எழுந்தது உண்மை தான்.
“நேரடியா உண்மையை சொல்லிட்டேனோ… ம்ம்?” மீண்டும் குறும்பு படரக் கேட்டான்.
அதில் காரணமின்றி செவிமடல்கள் சிவப்பை தனதாக்க, அதரங்கள் புன்னகைக்கத் துடித்தது.
துடிக்கும் அவ்விதழ்கள், அவனைக் கவர்ந்திழுக்க, செவ்விதழ் நோக்கி குனிந்ததில், அவளோ நடக்கவிருக்கும் அசம்பாவிதம் உணர்ந்து, எழ முற்பட்டாள்.
ஆனால், அவளைச் சுற்றி இரும்பு அணை போட்டிருந்த அவனது கரங்களை மீறி அசையக் கூட முடியாதென்பது பிறகே புரிய, படபடப்புடன் கண்ணை மூடிக் கொண்டவளை நெருங்கும் வேளையில் அழைப்பு மணி ஒலிக்கும் ஓசை கேட்க, சட்டென அவன் பிடியில் இருந்து விலகினாள்.
இன்னும் கண்ணில் மிச்சமிருந்த மோகத்துடன் அவளைப் பார்த்தவன், “இந்த நேரத்துல எந்த கரடி வந்து காலிங் பெல் அடிக்குது” என்று கடுப்படிக்க,
‘ஹப்பா தப்பிச்சோம்…’ என்ற உணர்வு எழுந்தாலும் கூடவே, அவனைப் பிரிந்ததில் ஏமாற்றமும் சூழவே செய்தது பெண்ணவளுக்கு.
அதனை தனக்குள் புதைத்துக் கொண்டவள், கதவைத் திறக்க, அங்கோ காளியாக நின்றிருந்தாள் வினோதினி.
“அக்கா! இந்த நேரத்துல இங்க என்ன செய்ற?” எனப் புரியாமல் பார்க்க,
“எத்தனை நாள் பிளான் இது? நீயும் உன் புருஷனும் சேர்ந்து ஒருத்தனை கொலை பண்ணிட்டு, இப்ப எதுவும் தெரியாத மாதிரி கேக்குற?” என்றாள் ஆத்திரம் பெருக.
சஹஸ்ரா திகைத்து, “உளறாதக்கா!” என அதட்ட,
“நான் உளறுறேனா? அது சரி! நான் கல்யாணம் பண்ணிக்க போறவனை ஆக்சிடெண்ட்ன்ற பேர்ல கொலை பண்ணிட்டு வந்துருக்கான் உன் புருஷன். அதெப்படி, அவ்ளோ பெரிய ஆக்சிடெண்ட்ல ரேயன் மட்டும் செத்துட்டான். இவன் உயிரோட இருக்கானா? இதெல்லாம் என்னை நம்ப சொல்றியா?” என நாக்கில் நரம்பின்றி பேச, தீரனுமே அதிர்ந்தான்.
“அக்கா… கண்டபடி பேசாத. ஆக்சிடெண்ட்ல அவரு செத்ததுக்கு தீரன் என்ன செய்ய முடியும்? சொல்ல போனா அவரும் செத்து பொழைச்சு தான் வந்துருக்காரு.” என்ற அவளின் விளக்கத்தை ஏற்காத வினோதினி,
“இத்தனை நாளா நடக்காத ஆக்சிடெண்ட் இப்ப மட்டும் நடக்குதா என்ன? எல்லாம் உன்னால தான். உனக்கு தான் ஆரம்பத்துல இருந்தே நானும் ரேயனும் கல்யாணம் பண்ணிக்க போறது பிடிக்கலைல.” என்று குற்றப் பத்திரிக்கை வாசிக்க,
“ஆமா பிடிக்கல தான். ஆனா, நான் தடுக்கலையே. ஆக்சிடெண்ட்ன்னா எப்போ வேணாலும் நடக்கும்க்கா. அதுக்காக இப்படி அபாண்டமா பேசாத… முதல்ல இங்க இருந்து கிளம்பு” என்றாள் கோபமாக.
“என்ன? நான் அபாண்டமான பேசுறேனா? க்கும்! நீ தான் அப்படி நடந்துக்கிட்ட. இவன் தம்பியை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சு, அவசர அவசரமா இவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட. இவனும் அவசர அவசரமா தம்பியை போட்டு தள்ளிட்டான். எதுக்கு? இந்த சொத்துக்காக தான? இதை நான் சும்மா விட மாட்டேன். கேஸ் போட்டு உங்க ரெண்டு பேரையும் உள்ள தள்ளுவேன்.” என வாய்க்கு வந்ததை பேசியதில், மறுவார்த்தை பேச மொழியற்று சஹஸ்ரா பேச்சிழந்து இருக்க, வினோதினிக்கு தான் ஒரு நொடி கண்ணை இருட்டியது தீரன் அடித்த அடியில்.
ஆத்திரத்தில் எரிமலையாக நின்றிருந்தான் அவன். அச்சிறு கண்களுக்குள் இத்தனை சீற்றத்தை அடக்க இயலும் என இப்போது தான் முதன் முறை பார்க்கிறாள் சஹஸ்ரா.
“இன்னொரு வார்த்தை பேசுன… உன்னை இங்கயே குழி தோண்டி புதைச்சுடுவேன். எவ்ளோ தைரியம் இருந்தா என் கூட பிறந்தவனை நானே கொலை பண்ணிட்டேன்னு சொல்லுவ. என் பொண்டாட்டியோட கூட பிறந்த ஒரே காரணத்துக்காக உன்ன இப்ப முழுசா விடுறேன். இன்னொரு தடவை, உன்னை இங்க பாத்தேன்… கை கால்லாம் பார்சலா தான் உன் வீட்டுக்கு போகும். அவுட்!” பற்களை கடித்துக்கொண்டு அவன் நின்ற விதத்தில் வினோதினியுடன் சஹஸ்ராவுமே அரண்டு விட்டாள்.
‘நியாயமா இந்த வீட்டுக்கு வரவேண்டியது நான் தான்! என்னையவே வெளிய போக சொல்றியா. பாத்துக்குறேன், இங்க இவளோட நீ எப்படி வாழ்றன்னு’ மனதினுள் கருவியபடி அவள் சென்று விட, அடுத்த நொடி, கதவை டமாரென அடைத்தான்.
ஆனால், வினோதினியிடம் காட்டிய சினத்தில் ஒரு பங்கை கூட, மனையாளிடம் காட்டாதவன்,
“இவ எப்படி பிரின்சஸ் உனக்கும் சவிக்கும் அக்காவா பிறந்தா. டூ பேட்! எனக்கு பொய் சொல்றதே பிடிக்காது. அதுலயும் இல்லாத ஒன்னை இருக்குற மாதிரி பேசுறது சுத்தமா பிடிக்காது. இடியட்!
நான் போய் அவன… அதுவும் சொத்துக்காக. புல் ஷிட்! என் உயிர் சஹி அவன். எனக்குன்னு இருந்த ஒரே சொந்தம் அவன் மட்டும் தான். கொஞ்சம் முன்ன பின்ன இருப்பான் தான். ஆனா… யாரையும் கஷ்டப்படுத்தணும்ன்னு நினைக்க மாட்டான்!” கோபத்துடன் ஆரம்பித்தவன், குரல் உடைந்து கண்ணில் தோன்றிய நீர்த் துளியுடன் முடித்திருந்தான்.
முதலில் அவன் கோபத்தினால் ஏற்பட்ட பயத்திலும், அவன் நல்லதிற்காக என்றாலும், தான் கூறிய பொய்யில் குற்ற உணர்வில் வெந்தவள், இறுதியாக அவன் சிந்திய கண்ணீரில் அனைத்தையும் மறந்து விட்டு, அவன் கன்னத்தை தாங்கி கொண்டாள்.
“அவள் தான் பைத்தியம் மாதிரி உளருறா. அத பெருசா எடுத்துக்காதீங்க தீரன். அவள் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைச்சவன் இறந்த விரக்தில பேசுறா. போக போக அவளே புருஞ்சுப்பா. அவளுக்காக நான் சாரி கேட்டுக்குறேன்…” என்றவளுக்கும் தன்னிச்சையாக கண்கள் நீரை உற்பத்தி செய்ய, இப்போது அவன் பதறினான்.
கன்னத்தில் வழியத் தயாராக இருந்த தன்னவளின் கண்ணீரை கட்டை விரல் கொண்டு சுண்டி விட்டவன், “ம்ம்ஹும்… என் பிரின்சஸ் என்கிட்ட சாரி கேட்குறதா? நோ வே!” என தன் விரல்களை கன்னத்தோடு உறவாட விட்டான்.
புத்தம் புது ஸ்பரிசம் தந்த நெகிழ்விலும், ஆடவனின் அன்பிலும் மூழ்கியவள், கண்ணை மூடி நிற்க, “நீ என்னை நம்புற தான சஹி?” என்ற அவன் கேட்ட கேள்வியில் தான் கண் விழித்தாள்.
சிறிய முறைப்பை பரிசாக வழங்கியவள், “இதென்ன கேள்வி?” எனக் கோபத்துடன் கேட்கும் போதே, அவ்வார்த்தைகள் அவனிதழுக்குள் தொலைந்து போனது இதமாக.
யாரோ அவள்(ன்)
மேகா!
அடுத்த பதிவு திங்கள் வரும் drs 🤩. Happy wkend…
Irukku radhu reyan illa dheeran 🤔🤔🤔