Loading

நிரண்யா மனதில் மண்டிக் கிடந்த குழப்பத்துடன் அவரைப் பார்த்தார்.

 

“ஆறு மாசத்தில் ஒருநாள் கூடவா அந்த ப்ரைவேட் டைம் கிடைக்கல.. நிரண்யா இதுக்கான பதில் நீங்கதான் சொல்லணும். உங்க பிரச்சனைக்கு அந்த பதில் ஒரு காரணமா இருக்கணும்..” என்றான் அழுத்தமாக.

 

அவள் பதில் கூறாமல் அமர்ந்திருந்தாள். அவளின் முகத்தில் பதற்றம் படர்ந்திருந்தது.

 

“இதுவரை நான் கேட்ட கேள்விக்கு ரொம்பவே உண்மையா பதில் சொன்னீங்க. இப்பவும் அதே மாதிரி பதிலை எதிர்பார்க்குறேன். அப்பதான் உங்களை இந்த பிரச்சினையில் இருந்து எளிதா வெளில கொண்டு வரமுடியும்..” என்றார் அழுத்தமாக.

 

அவளின் இந்த சிந்தனையும் தயக்கமும் கீதனிற்கு புதிதாக இருந்தது.

 

“கம்மான் நிரண்யா.. அவரை வேணா வெளில இருக்க சொல்லவா..” என்று மித்ரா வினவ, அவசரமாக மறுத்தாள் நிரண்யா.

 

“மேடம் அது வந்து… கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி பேசுறது தப்புன்னு எனக்கு தோணுச்சு” என்று அவள் உரைக்க, அவளை விசித்திரமாகப் பார்த்தான் கீதன்.

 

“ஏன்.. அப்படி தோனுச்சு.. கீதன் உங்க அப்பா அம்மா பார்த்த பையன்தானே.. என்னைக்காவது ஒருநாள் அவர் கூட வாழப்போறீங்கன்னு முடிவான அப்புறம், ஏன் அந்த உணர்வுகள் தப்புன்னு தோணுச்சு..”

 

“அது‌…‌ அது” என்று திணறிய நிரண்யாவால் பதில் கூற முடியவில்லை.

 

“இப்போ புரியிதா உங்க புரிதலோட அளவு..” என்று இருவரையும் பார்க்க, கீதன் உண்மையில் அதிர்ச்சியில் இருந்தான்.

 

“இது ஒண்ணும் இல்லை மிஸஸ் நிரண்யா.. நம்ம கலாச்சாரத் திணிப்பின் ஒரு அங்கம்தான் இது. சின்ன வயசுலேந்து சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டிருக்கீங்க. என்னோட கணிப்பு சரின்னா, டீவில கொஞ்சம் இன்ட்டிமேட்டான சீன் வந்தாலே சேனல் மாத்திருப்பாங்க உங்க அம்மா அப்பா.. அது தப்பு இல்லை. ஒரு குறிப்பிட்ட வயசு வரை அதை செய்யலாம். ஆனால் அது தொடர்ந்து நடக்கவும், உங்களுக்கு அந்த விஷயங்கள் பத்தி பேசுவதோ, அதைப் பார்ப்பதோ தவறுன்னு மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு. அது ஒரு வெறுப்பை உண்டு பண்ணியிருக்கணும். செக்ஸ்ங்கிறது இந்த உலகத்தில் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். ஆனால் அதை யாரும் வெளில சுதந்திரமா பேச மாட்டாங்க. அது ஓப்பனா பேசற விஷயம் இல்லைதான். தவறுகள் அதிகமாகும். அப்படின்னு ஒரு வாதம் இருக்கு. ஆனா அது உண்மையில்லை. பல தவறுகள் நடக்கக் காரணமே அதைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் தான் என்பது என்னோட கருத்து. ஒரு குறிப்பட்ட வயதிற்கு பிறகு அதைப் பற்றிய புரிதல் வரணும். அந்த புரிதலை நம்ம குழந்தைகளுக்கு நாம கொடுக்க மறந்துடுறோம். கல்யாணத்திற்கு முதல் நாள்வரை ஒரு விஷயம் அருவருப்புன்னு ஆழமா மனசுல ஏத்திட்டு, தாலி கட்டுன உடனே அது சரின்னு சொல்லப்படும் கலாச்சார கருத்தை மனசு ஏத்துக்க மறுக்கும் போது, மிக அரிதா இந்த மாதிரி நடக்கும். நிரண்யாவும் அந்த மாதிரி ஒரு குழந்தை. நிரண்யா..வெளில வர முயற்சி செய்ங்க. கீதன்.. நீங்க அவுங்களை வெளிய கொண்டுவர உதவி செய்ங்க. இதுதான் இதற்கு வழி” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் மனநலமருத்துவர்.

 

இருவரும் தலையசைத்து வைத்தனர்.

 

“நிரண்யா.. உங்களுக்கு சில பயிற்சிகள் தரேன்.. அதை சரியா செய்ங்க தினமும். முடிந்தால் யோகாவோ தியானமும் செய்யணும். அது சீக்கிரம் மன அமைதியைக் கொடுக்கும்‌” என்று கூறி அவளுக்கு சில மூச்சுப்பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தார். பின் கண்களை மூடிக்கொண்டு சில வாக்கியங்களை உச்சரிக்கும்படியும் கூறினார்.

 

அவரிடம் இருந்து விடைபெற்றுக் கிளம்பினர் இருவரும். செல்லும் வழியெல்லாம் வாகனங்களின் இரைச்சல் சாலையைப் பிளந்தது. ஆனால் கீதனின் மகிழுந்தில் அசாத்தியமான அமைதி. இருவருக்கும் நடுவே பெரும் திரை ஒன்று எழுந்திருந்தது. கீதனின் முகத்தைத் காணவே நிரண்யாவின் மனதில் திடம் இல்லை. வண்டி வீட்டிற்கு செல்லும் பாதையில் செல்லாமல், வேறு வழியில் செல்ல, நிரண்யா அதை உணர்ந்தது போல் இல்லை. வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். ஒரு உணவு விடுதி முன் மகிழுந்தை நிறுத்தியவன், “நிரண்யா” என்று அழைத்தான்.

 

அவள் நினைவுகள் தப்பி வேறு சாலையில் சென்று கொண்டிருந்ததுபோல. அவள் அசையாமல் இருக்க, அவளைத் தொட்டு எழுப்பினான்‌ அவன். 

 

“நிரு.. ஆர் யூ ஆல்ரைட்?” என்று வினவ, அவள் பதற்றத்துடன் தலையாட்டி வைத்தாள். 

 

“ரிலாக்ஸ் நிரு.. வா.. சாப்பிட்டு போகலாம்” என்று அழைக்க, பொம்மையாய் இறங்கி வந்தாள். 

 

மெல்லிய விளக்கொளியில் அந்த உணவு விடுதியே அழகாய் இருந்தது. இருளில் கொஞ்சம் வண்ணம் கலந்தால் வரும் உணர்வைத் துண்டியது. பின்னணியில் மெல்லிசை ஒலிக்க, அது மனதின் ஓரத்தினை ரகசியமாகத் தொட்டுச் சென்றது. இருவரும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர்.

 

விடுதியின் சிப்பந்தி வந்ததும், அவளுக்கும் தேவையான உணவை அவனே எடுத்துவரும்படி கட்டளையிட்டான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் நிரண்யா. கண்களில் குளம் கட்டியிருந்தது. அவளுக்குப் பிடித்ததை அவன் கூறியதிலிருந்தே, அவனுக்கு அவளின் மேல் உள்ள அன்பும் கரிசனமும் நன்றாக விளங்கியது. கீதன் எதுவும் பேசாமல் அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருந்தான். அவன் உண்மையில் ஒன்றும் செய்யவில்லை. செய்யவும் பிடிக்கவில்லை‌. என்ன செய்வதென்று தெரியாமல் ஏதோ செய்து கொண்டிருந்தான்.

 

“என்னை மன்னிப்பீங்களா கீதன்?” என்றாள் குரலில் ஏக்கத்துடன்.

 

“மன்னிக்க ஏதாவது தப்பு செஞ்சிருக்கணுமே. நீ என்ன தப்பு செஞ்ச?” என்று எதிர்வினா ஒன்றை‌ எழுப்பினான். அவன் முகத்தில் இருந்து எதையும் அறிந்துக்கொள்ள முடியவில்லை அவளால்.

 

அவளுக்கு மனதில் பதற்றம் தோன்றியது. அவன் விரக்தியில் உரைக்கும் பதிலா‌ இது, இல்லை மனதில் இருந்து உரைக்கும் பதிலா என்று ஆராயும் நிலையில் அவள் இல்லை.

 

அவளின் நிலை உணர்ந்து கொண்ட அவனும் அவளை மேலும் தவிக்கவிடாமல், அவள் கைகளைப் பற்றி அழுத்தி, ஆறுதல் அளித்தான்.

 

“எனக்கு கோவமே இல்லைன்னு சொல்ல நான் புத்தன் இல்லை நிரு. கோவம் இருந்துச்சு. ஆனா இப்போ இல்லை. இப்போ வருத்தம் உன்மேல்.. மல்லிப்பூ, கெரசின் வாடை, மண் வாசனை, கோலா உருண்டை, ரோட்டுக்கடை பரோட்டா, மீன், ப்ளூ கலர், பாரதியார்… இதெல்லாம் உனக்கு பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்ட எனக்கு, உனக்கு பிடிக்காதது என்னனு தெரிஞ்சுக்க முடியல.‌ அந்த வருத்தம் இருக்கு.”

 

“அது என் மேல்தான் தப்பு.. நீங்க தப்பா நினைப்பீங்களோன்னு..” என்று கூறி முடிக்க முடியாமல் திணறினாள்.

 

“இனி நான் அந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்..”

 

“ப்ளீஸ் டோண்ட் கிவ் மீ ஃபாலஸ் ஹோப்ஸ்..” என்று அவன் கூற, அவள் பதில் கூறாமல் அவனைப் பார்த்தாள்.

 

“இப்பவும் சொல்றேன்.. நான் ரொம்ப நல்லவன்.. உன் பக்கத்தில் வரமாட்டேன்னு பொய்யான வசனம் பேச விரும்பல. அஸ் அன் ஆப்போசீட் ஜென்டர் அண்ட் ஆல்ஸோ ஹேவிங் தி ரைட்ஸ் ஓவர் யூ , ஐ ஆல்வேஸ் எக்ஸ்ப்பெக்ட் யூ டு மேக் லவ் வித் மீ..” என்று நிறுத்தியவன், “வெனெவர் ஐ அம் இன் நீட்….. பட் ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யூ அண்ட் வெயிட் ஃபார் சம்டைம்” என்று முடித்தான். 

 

இதைக் கேட்டதும், அவள் மனதில் பதற்றம் தொற்றிக் கொண்டது. 

 

“இதையே தமிழில் சொல்லிருந்தா, தப்பாயிருக்கும். அதான் என்னோட உணர்வுகளையும் நீ புரிஞ்சுக்கணும்னு சொல்லிட்டேன். உனக்கு அவசரமோ பதற்றமோ கொடுக்க, இதை சொல்லல. ஆனா எந்த ஒரு ஃபால்ஸ் ஹோப்பும் வேண்டாம். அதான் சொல்லிட்டேன். உன்னைக் காயப்படுத்த மாட்டேன். என்னை நம்பலாம்” என்று கூறினான்.

 

அவள் தலையை ஆட்டினாள். பதிலேதும் கூறவில்லை. 

 

“புரியிதா நான் சொல்றது?” என்றான் மீண்டும் அழுத்தமாக. 

 

“ம்ம்ம்.. புரியிது..” என்றாள் அவசரமாக.

 

அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வந்தது. அதை ஏதோ கொரித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர் இருவரும். வீடு வந்ததும் அவனுக்கு என்ன வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்தாள் நிரண்யா. அவள் செய்யும் காரியங்கள் அனைத்திலும் பதற்றம். அவனுக்கு அவளின் அன்பை உணர்த்திவிடும் அவசரமும் இருந்தது அவளது செயலில். 

 

“நிரண்யா.. இன் செக்கியூர்டா பீல் பண்றியா?” கீதன்.

 

“இல்லை..” என்றாள் அவசரமாக. 

 

“அப்போ நிதானமா இருக்கலாமே. நான் எங்கேயும் போயிட மாட்டேன்‌. இங்கதான்  இருக்கப் போறேன்” என்றான் சிரித்துக்கொண்டே. 

 

“அது ஏன்னு தெரியல.. என்னால நிதானமா இருக்க முடியல..”

 

“எனக்கு தேவையான ஒரு விஷயத்தை நீ மறுத்திருக்க. அதனால் அதை சரிகட்ட, வேற என்னவோ செய்ற. இந்த நிதானமின்மை உன் மனசில் உள்ள குற்றவுணர்ச்சியின் வெளிபாடு” என்று சரியாய் கணித்தான் அவளின் மனதை. 

 

“எனக்கு வேற என்ன செய்யணும்னு தெரியல கீதன். இந்த விஷயம் நாளைக்கு வெளில தெரிஞ்சா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க.. பயமா இருக்கு கீதன்..” என்று அழுதாள் அவள்.

 

முதல் முறையாக அவளின் மன அழுத்தத்தை அவனின் முன் வைத்திருக்கிறாள். அதுவே அவனுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. 

 

“ஷ்ஷ்..‌ இது வெளில தெரியிறதுக்கு முன்னாடி அந்த விஷயத்தை காலாவதியாக்கிடலாம்.. கவலைப்படாத” என்று கூறிவிட்டு சென்றான்.

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்