Loading

      அதிரனின் அழைப்பு நினைவலைகளுக்குள் மூழ்கியிருந்தவளை மீட்டது.

 

    “அதி! முழுச்சிட்டியா?!”, குழந்தையை வாரியணைத்தவளின் உள்ளம் ஆற்றாமையில் ததும்பி வெம்பியது. கூடவே இணைந்த இயலாமை இமைகளை ஈரமாக்கியது. 

 

    “அம்மா பயமாயிருக்கு!”, கழுத்து வளைவில் முகம் புதைத்து பிஞ்சு விரல்களால் இறுக்கி அணைத்த அதிரனின் அச்சம் அழகிக்குள் அதிர்வலையை ஏற்படுத்த, இமையோரம் கசிந்த நீர் வெள்ளமாகியது. கன்னம் தாண்டி கண்ணீர் கீழிறங்கும் முன் மனதை திடமாக்கியவள் அதிரன் அறியாது விழிகளை துடைத்து பரிவாய் அவன் முதுகை வருடினாள்.

 

    “ஏன் தங்கம் பயம்? அம்மா எத்தனை முறை சொல்லீர்க்கேன் எதுக்கும் எப்போதும் பயப்படக் கூடாதுனு. அதி ப்ரேவ் பாய் தானே! இப்படி பயப்படலாமா? ம்ம்?”, அதிரனை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தாள்‌.

 

    “ஆமா அதி ப்ரேவ் பாய்! எதுக்கும் பயப்பட மாட்டான்.”, அழகாய் புன்னகைத்தவனை பார்த்தவளின் உள்ளம் இயலாமையில் அயர்ந்து அரற்றியது. அவனது வாய் கூறிய சொற்களுக்கு மாறாக கண்களில் பயம் மிளிர்ந்ததைக் கண்டவளின் மனம் என்று இவன் பயம் முழுவதும் காணாமல் தொலையுமோ என மருகியது.

 

      இயலாமையை வெளிக்காட்டாது, “தட்ஸ் மை அதி குட்டி!”, மென்னகைத்து பிஞ்சுக் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

 

     அழகாய் சிரித்த அதிரன் பட்டு இதழ்களால் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “லவ் யூ அழகி ம்மா!” என்றிட, அழகியின் அதரங்கள் அழகாய் விரிந்தன.

 

     அதிரனின் கண்கள் பக்கத்திலிருந்த பையில் படிந்திட, அழகியின் புன்னகை மெல்ல மறைந்தது.

     

    “கதிர் உனக்கு ட்ரஸ் கொண்டு வந்தார்.”, அழகி.

 

     “ஹீரோ வந்தாரா? ஏன் அழகி என்னை எழுப்பல? ஹீரோவ பார்த்துருப்பேன்ல.”, சோகமாய் கேட்டான்.

 

     அவனின் சோக முகம் சொல்லொணா வலியை தர, “இல்லை அதி நீ நல்லா தூங்கினியா கதிர் தான் எழுப்ப வேணாம்னு சொல்லிட்டாரு.”, என சமாளித்தாள்.

 

    “ஹீரோ தான் சொன்னாரா?! சரி அழகி.”, என்றவன் பையை பிரிக்க, அழகியின் முகத்தில் இறுக்கம் படர்ந்தது.

 

     “உனக்கு ட்ரஸ் பிடிச்சுருக்கானு கதிர் ஃபோன் பண்ண சொன்னார். பண்ணிடு. நான் சாப்பிட ஏதாவது செய்றேன்.”, என எழுந்தவள் ஒரு நொடி நின்று, “பொடி தோசை ஓகே வா அதி.” என வினவிட, “ஓகே அழகி ம்மா!”, நிமிராமல் கூறிய அதிரனின் முகத்தில் வழிந்த ஆர்வமும் மகிழ்வும் அழகியை பெருமூச்செறிய செய்ய, தளர்வாய் அடுக்களைக்குள் புகுந்தாள்.

 

     பையை பிரித்து உடையை வெளியே எடுத்த அதிரனின் விழிகள் மிளிர, காலர் இல்லா வெள்ளை பனியனும் அடர் சாம்பல் நில ப்ளேசரும் அதே நிறத்தில் பேன்ட்டும் அதற்கேற்றார் போலிருந்த கூலரும் கண்டு அதரங்கள் பெரிதாய் விரிந்து “வாவ்! இட்ஸ் ஆஸம்!” முணுமுணுத்தது.

 

    உடனே கைப்பேசியை எடுத்து கதிருக்கு அழைத்தான்.

 

    அழகியின் எண்ணிலிருந்து வந்த அழைப்பைக் கண்டதும் கதிரவன், உதட்டில் விரிந்த புன்னகையோடு அழைப்பை ஏற்றான்.

 

     “ஹீரோ ட்ரஸ் இஸ் ஜஸ்ட் ஆசம். ஐ லவ்ட் இட்.”, அதிரனின் குரல் கேட்டதும் கதிரின் புன்னகை இருமடங்காக விரிந்தது.

 

      “என் வெல்லக்கட்டிக்கு ட்ரஸ் புடிச்சுருக்கா?”, கதிர்.

 

      “ரொம்ப ரொம்ப புடிச்சுருக்கு ஹீரோ. ஆமா நீ ஏன் என்னை எழுப்பல?”, செல்லமாக கோபித்தான்.

 

     “வெல்லக்கட்டி நல்லா அழகா தூங்குறப்ப எப்படி எழுப்ப தோணும். அதான் எழுப்பல.”

 

      “நோ நோ ஹீரோ. நீ வீட்டுக்கு வந்தும் நான் உன்னை பார்க்கல. நான் உன்னை பார்க்கணும் நாளைக்கு வீட்டுக்கு வரியா?”, வினவிய அதிரனின் குரலில் இருந்த ஏக்கம் கதிரை உடனே ஒப்புக் கொள்ள வைத்தது.

 

     “என் வெல்லக்கட்டி கூப்ட்டு நான் வராம இருப்பேனா! காலைல அதி எழும்போது நான் அங்க இருப்பேன். ஓகே?”

 

     “ஹை! ஓகே ஹீரோ. காலைல நீ கண்டிப்பா வந்துடணும்.”, அதிரனின் அன்பான கட்டளையில் சிரித்த கதிர்,

 

     “கண்டிப்பா வந்துடுவேன். ஆமா வெல்லக்கட்டி சாப்ட்டீங்களா?” என்று கேட்க,

 

     “அதி குட்டி சாப்பிட வா!” என்று அழகி அழைக்கும் குரல் கேட்டு கதிரின் உள்ளம், “ஆஹா என்ன டைமிங் டி செல்லம். ஹ்ம் வேவ்லென்த் ஒன்னா இருந்தும் நீ மாமாவ ஒதுக்குறியே!” எண்ணிட அவனறியாமல் பெருமூச்சு விட்டான்.

     

     “அம்மா கூப்பிட்றாங்க பாரு வெல்லக்கட்டி. போய் குட் பாயா சாப்பிடுங்க.”

     

     “சரி ஹீரோ. காலைல மீட் பண்ணலாம். லவ் யூ ஹீரோ! குட் நைட்!”, அதிரன்.

     

     “லவ் யூ வெல்லக்கட்டி! குட் நைட்!”, கதிர்.

     

     “அதி குட்டி போதும் பேசினது சீக்கிரம் சாப்பிட்டா தானே சீக்கிரம் தூங்கி காலைல ஸ்கூல் போக முடியும். சீக்கிரம் வா.”, அழகியின் குரல் கேட்கவும், “இதோ வந்துட்டேன் அழகி!”, அழைப்பை துண்டித்து விட்டு அதிரன் ஓடினான்.  

 

     சிறு சிரிப்போடு கைப்பேசியை காதிலிருந்து எடுத்த கதிரின் மனம் அழகியை எண்ணியது. அழகியை பற்றி எண்ணுகையில் அவன் முகத்தினில் பல உணர்வுகள் தோன்றி தோன்றி மறைந்தன. வெகு நேரம் அழகியின் நினைவில் தொலைந்திருந்த கதிரின் இமையோரம் ஈரம் கசிந்திட, வான் நோக்கி விழியுரத்தி விழிநீரை உள்ளிழுத்தான்.

 

     அடுக்களையில் இருந்தாலும் இருவரின் அலைப்பேசி உரையாடலை கேட்டிருந்த அகவழகியின் நெஞ்சத்தில் மலையை பெயர்த்தெடுத்து வைத்துப் போன்ற கனம். கதிரவனுடன் பேசிய பின் அதிரனின் முகத்தினிலிருந்த மகிழிச்சியும் தெளிவும் அவளின் மனதின் கனத்தைக் கூட்டிட, மெல்லிய அச்சம் அவளை ஆக்கிரமிக்கத் துவங்கியது. கண்களில் உறைந்த அச்சத்தோடு அதிரனை பார்த்தவாறே அவனுக்கு உணவை ஊட்டி உறங்க வைத்தவளுக்கு தொண்டைக் குழியில் உணவு இறங்குவேனா என சண்டித்தனம் செய்ய உண்ணாது சால்வையை குளிருக்கு இதமாய் போர்த்தியபடி வீட்டின் வெளியே வந்து நின்று வானில் மிளிர்ந்த விண்மீன்களில் விழி பதித்தாள்.

 

     கடந்து வந்த பாதையில் பயணித்த அவளின் நினைவு கதிரிடம் வந்தபோது நெஞ்சத்தில் சொல்லொனா வலியை தோற்றுவிக்க, விழித் தாண்டி உவர்நீர் கன்னத்தில் இறங்கியது. கதிரவனையும் அதிரனையும் சேர்த்து எண்ணும்பொழுது மகிழ்வும், அச்சமும், வலியும், வேதனையும், ஆற்றாமையும் மாறி மாறித் தோன்றி அவளை அலைக்கழிக்க, வெடித்த அழுகையை வாயை மூடி தொண்டைக் குழிக்குள்ளேயே அடக்கினாள். வலியை அழுகையாய் வெளியேற்ற முயன்றவளை அவள் கொண்ட வைராக்கியம் தோற்கச் செய்ய, இயலாமை அவளைக் கொன்றுத் திண்றது. வைராக்கியத்தை இறுக்கமாய் பற்றிக் கொண்டதன் விளைவை நிதம் நிதம் வலிக்க வலிக்க அனுபவித்தாள். பின் ஒருவாறு தன்னை சமன் செய்து வீட்டிற்குள் செல்ல, உறங்கும் அதிரனை கண்டதும் மீண்டும் பொங்கி வந்த அழுகையோடு சத்தமிடாது அவனருகில் படுத்துக் கொண்டாள்.

 

     என்ன நிகழ்ந்தாலும் தன் வைராக்கியத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது என்னும் திண்ணமான எண்ணம் மட்டும் அவள் நெஞ்சத்தில் அத்தனை வலிகளுக்கிடையேயும் துடித்துக் கொண்டிருந்தது.

     

     விண்மீன்களை வெறித்திருந்த கதிரவன் “நீ எவ்ளோ பிடிவாதமா என்னை வேண்டாம்னு சொல்றியோ அவ்ளோ பிடிவாதமா நான் உன்னை நெருங்கி வருவேன் அழகி மா! யார் பிடிவாதம் ஜெயிக்கிதுனு பார்ப்போம் அழகி மா!”, முணுமுணுத்த போது அவன் குரலிலிருந்த உறுதி அவன் அழகி மீதுக் கொண்ட காதலின் ஆழத்தை உரைத்தது. 

 

     “இதுவரைக்கும் நீ பார்க்காத கதிர நாளைலேர்ந்து பார்க்க போற அழகி மா! பீ ரெடி செல்லம்.”, என தனக்குத் தானே கூறியவன் விழிகளில் புத்தொளி மிளிர்ந்தது. உதடு நிறைந்த புன்னகையோடு மாடிப்படிகளில் இறங்கினான்.

 

       ஜெயிக்கப் போவது அவளின் வைராக்கியமா? அவனின் காதலா? 

 

தொடரும்….

 

 

 

     

 

   

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்