Loading

வானம் – 35

கோவை நகரில் மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் வீற்றிருந்த முருகனின் ஏழாம் படை வீடான மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலைப் பொழுதிலே ஜனத்திரள்களின் நெருக்கடியில் சிக்கி தவித்தது.

பட்டு வேஷ்டி பட்டுச் சட்டையில் முருகன் சந்நிதியின் முன் கம்பீரமாய் அமர்ந்திருந்தான் சித்தார்த். அவனருகே பட்டுபாவாடை சட்டையில் அழகு குவியலாய் அமர்ந்திருந்தாள் இதழிகா. இரட்டை குடுமியைச் சுற்றி மல்லிகை சூடியிருக்க அதற்குப் போட்டியாய் மலர்ந்திருந்தது அவளது பூ முகம்.

ஐயர் கூறிய மந்திரங்களை சிரத்தையோடு கூறிக் கொண்டிருந்தவனை காலில் சுரண்டினாள் இதழிகா. “அப்பா, அங்க பாரு சரயு” என கைநீட்ட, அவள் காட்டிய திசையை நோக்கிப் பார்த்தவனின் விழிகளுள் விழுந்தாள் சரயு.

தங்க நிற காஞ்சிப்பட்டு அவளின் மேனியை தழுவியிருக்க அதற்கு சற்றும் குறைவில்லாமல் அவளது முகம் மகிழ்ச்சியில் தகதகத்துக் கொண்டிருந்தது.

கழுத்தில் வீற்றிருந்த சம்மங்கி மாலை மேலும் அழகூட்ட சம்யுக்தாவின் கரம் பற்றி மணப்பெண்ணுக்கே உரிய நாணத்துடன் தன்னவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.

ஐயர் கூறக் கூற மந்திரங்களை அவனது இதழ்கள் தன்பாட்டுக்கு கூறிக் கொண்டிருந்தாலும் அவனது பார்வை முழுவதும் அவளிடமே நிலைக் கொண்டிருந்தது.

தன்னவனின் பார்வையில் பாவையவளின் கன்னங்கள் செங்கொழுந்தாய் சிவக்க, அவனருகே சென்று அமர்ந்தவள் இதழிகாவை பார்வையால் அழைத்து தங்கள் இருவருக்குமிடையே இருத்திக் கொண்டாள்.

அதனைக் கண்ட ராமமூர்த்தி – கற்பகம்மாளுக்கு நிறைவாய் இருக்க, தங்கம்மாளின் முகமோ மகளை கலக்கத்தோடு பார்த்தன. முத்துச்சாமிக்கு மகளின் மணக்கோலம் நிறைவாய் தோன்றினாலும் மனதினோரம் எழுந்த நெருடலை தவிர்க்க முடியவில்லை.

‘என்ன குறை என் மகளுக்கு, ஏனிந்த வாழ்க்கை அவளுக்கு!’ ஒரு தகப்பனாய் அவர் மனம் குன்றினாலும் மகளின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியில் தன் மனக்கவலையை சற்றே ஓரங்கட்டினார்.

இருபக்கமிருந்து நெருங்கிய உறவினர்கள் என இருபது பேர், கடையில் பணிபுரியும் பணியாட்களும் தான் அத்திருமணத்தில் கலந்துக் கொண்டிருந்தனர்.

மற்றவர்களைக் காட்டிலும் மனம் முழுக்க மகிழ்ச்சியோடும் நிறைவோடும் அத்திருமணத்தில் கலந்துக் கொண்டது பிரஷாந்த் தான்.

தங்கையின் விருப்பத்தை தன் தந்தையிடம் தெரிவிக்கும் போது அவரிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. ஒரு முறை சித்தார்த் அவர்களது இல்லத்திற்கே வந்து முறைப்படி பேசியவன் தன் கடந்த காலத்தையும் ஒளிவு மறைவில்லாமல் ஒப்பித்திருந்தான்.

“உங்க விருப்பம் இல்லாம எங்க கல்யாணம் நடக்காது அங்கிள்” என்றவன்,

“உங்க தயக்கத்துக்கான காரணம் என்னன்னு எனக்கும் புரியுது அங்கிள். ஏன்னா எனக்கும் ஒரு மக இருக்கா” என்றவனின் பேச்சு சற்று தடைபட்டது.

“இதுல உங்களுக்கு சம்மதம் இல்லனா சரயுவோட வாழ்க்கைக்காக நான் விலகணும்னு நீங்க நினைச்சாலும் அதை மனப்பூர்வமாக ஏத்துக்கிறேன்” என்றான்.

அவனது வார்த்தைகளின் அவனது முகம் நோக்கியவர் அவன் கண்களில் பொய் இல்லை என்பதை உணர்ந்து, “எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும் பா” என்றார் முத்துச்சாமி.

அதன்பின் கோவைக்கு நேரிலே வந்து அவனது இல்லம், கடை என பார்த்தவருக்கு மனம் நிறைந்தாலும் தனக்கென ஒரு பேரனோ பேத்தியோ இருந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கவும் தவறவில்லை. தன் தந்தையின் எண்ணம் புரிந்தவனாய், “இது சரயுவோட வாழ்க்கை ப்பா. அவ சந்தோஷம் தான் நமக்கு முக்கியம்” என்றவன்,

“என் வாழ்க்கைல நடந்த தப்பு அவ வாழ்க்கைலயும் நடந்திறக் கூடாது” என அழுத்தமாய் கூறிவிட்டு தன் தங்கையை பார்க்கச் சென்றுவிட்டான்.

மகனின் வார்த்தைகளில் அங்கேயே தேங்கி விட்டார் முத்துச்சாமி. சித்தார்த்தின் கடையின் வெளியே நின்றிருந்தவரின் காலை சுரண்டினாள் இதழிகா.

யாரென அவர் குனிந்துப் பார்க்க, முகம் முழுதும் மலர்ந்திருக்க, “நீங்க தான முத்து தாத்தா!” என ஆர்வமாய் கூற, அதில் அவர் முகம் சிறு புன்னகையை கடன் வாங்கிக் கொண்டது.

“ஆமா டா அம்மு” என்றவர் அவளைத் தூக்கிக் கொள்ள, “ஏன் நீங்க இவ்ளோ நாளா என்னை பார்க்க வரல தாத்தா? சரயு நீங்க வருவீங்கனு சொல்லிட்டே இருந்தா, ஏன் என்னைப் பார்க்க வரல, என்னை உங்களுக்கு பிடிக்கலயா?” என இதழைப் பிதுக்க, அவரின் மனம் முழுதாய் அவளிடம் வீழ்ந்திருந்தது.

“தாத்தாவுக்கு வேலை அதிகமா இருந்ததால வர முடியல சாமி, இனி உன்னை அடிக்கடி பார்க்க வருவேன். நீயும் தாத்தாவ பார்க்க ஊருக்கு வரணும் சரியா! அங்க பாட்டிலாம் இருக்காங்க. தோட்டம் இருக்கு, அங்க வந்தா உன்னை தோட்டத்துக்கு எல்லாம் கூட்டிட்டுப் போவேன்” என அவளை அவளின் போக்கிலே சென்று சமாதானப்படுத்த ஆரம்பித்தார்.

“அங்க பிக் கௌ’லாம் இருக்கா தாத்தா?” என கைகளை விரித்து கண்கள் விரிய கேட்டவளின் கேள்வி புரிபடவில்லை என்றாலும் அவர் தலை தானாக ஆமாம் என ஆடியது.

“ஐய், ஜாலி ஜாலி. நான் வர்றேன், நான் வர்றேன்” என அவள் குதிக்க அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டே அவளோடு சரயுவிடம் சென்றார்.

அதன்பின் அவரும் சம்மதம் தெரிவித்து விட, தங்கம்மாளின் மனமோ தன் மகளின் வாழ்வை நினைத்து கவலைப்படத் தொடங்கியது.

ஆனால் அவரால் எதுவும் பேச முடியாமல் போக, அதன்பின் மடமடவென திருமணத்திற்கு நாள் குறித்து வேகமாய் செயல்பட்டனர்.

“பொண்ணோட தாய்மாமன் இருந்தா வரச் சொல்லுங்கோ” என்ற ஐயரின் குரலில் நிகழ்காலத்திற்கு வந்தான் பிரஷாந்த். சற்று தள்ளி நின்றிருந்த தன் மாமனைப் பார்க்க, அவரும் மணமக்களின் அருகே வந்திருந்தார்.

“பொண்ணு நெத்தில பட்டம் கட்டுங்கோ” என தங்கப்பட்டத்தை நீட்ட தன் மருமகளின் நெற்றியில் அதைக் கட்டிவிட்டவரின் கண்கள் சற்றே கலங்கியது.

“என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா” என்றவாறே அவரது காலில் சரயு விழ, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “நல்லா இரு சாமி” என மனதார வாழ்த்தினார்.

நல்லசுந்தரம் – வாணி இருவரையுமே திருமணத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என சரயுவே அழைத்திருந்தாள். ஆனால் வாணி மறுத்துவிட, நல்லசுந்தரத்தால் சரயுவை ஒதுக்கிவிட முடியவில்லை. அதனால் தான் இத்திருமணத்திற்கு வந்திருந்தார்.

அவரைக் கண்டு கண்கள் ததும்ப நின்றிருந்த தங்கையை ஏறிட்டும் பார்க்காது வரவேற்பாய் புன்னகைத்த முத்துச்சாமியிடம் மட்டும் சிறு தலையசைப்பை பதிலாக்கி இருந்தார்.

“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்ற ஐயரின் வார்த்தைகளில் கெட்டிமேளம் முழங்கிட, சரயுவின் சங்கு கழுத்தில் மஞ்சள் நாணால் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கிக் கொண்டான் சித்தார்த்.

கண்களில் நீர் ததும்ப அமர்ந்திருந்தவளின் கரங்களைப் பற்றிக் கொள்ள, அவனோடு சேர்ந்து இதழிகாவும் தன் கரங்களை அவர்களின் பிணைந்த கையோடு கோர்த்தாள்.

இதழிகாவின் நெற்றியில் தன் இதழைப் பதித்தவள், தன்னவனின் கரத்தோடு அவளது கரத்தையும் இறுகப் பற்றிக் கொண்டாள். அவர்களின் செயல் சுற்றி உள்ளவர்களின் பார்வையில் நிம்மதியை பரப்பிவிட, தன்னருகே நின்றிருந்த நல்லசுந்தரத்திடம், “தேங்க்ஸ் மாமா, வந்ததுக்கு” என்ற பிரஷாந்த்தின் குரல் தழுதழுத்திருந்தது. அதில் சிறு புன்னகையோடு அவனது தோள் தட்டினார்.

அதன்பின்னான சடங்கு சம்பிரதாயங்கள் முடிய மணமக்களை சித்தார்த்தின் இல்லத்திற்கு அழைத்து வந்திருந்தனர். அங்கு பூஜையறையில் சரயு விளக்கேற்ற, அதன்பின் பாலும் பழமும் கொடுத்திட இருவருமே முதலில் இதழிகாவிற்கு கொடுத்துவிட்டே தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டனர்.

ஊரில் இருந்து வந்த உறவினர்கள் கிளம்பிட, இரு வீட்டாரின் குடும்பத்தினர் மட்டுமே அங்கிருந்தனர்.

தன் மகளிடம் வந்த முத்துச்சாமி, “நாங்க கிளம்புறோம் மா” என்றவர் சிறிது தயங்கிப் பின், “நீயும் மாப்பிள்ளையும் பேத்தியோட ஒருமுறை ஊருக்கு வந்துட்டு போங்க சாமி” என்றவரின் கண்கள் கலங்கி இருந்தன.

இன்னுமே அவள் ஊருக்கு வராதது அவர் மனதில் பெரிய குறையாய் இருந்தது. அவள் பார்வை தன் தாயின் மீது பட்டு மீள, பெருமூச்சொன்றை இழுத்துவிட்டாள்.

தன்னவளின் மனமறிந்து, “கண்டிப்பா நாங்க வர்றோம் மாமா” என தன் மாமனாரிடம் தெரிவித்தான் சித்தார்த்.

சிறு தலையசைப்போடு அவர் கிளம்ப, தங்கம்மாளின் கண்களோ கண்ணீரை சுரந்திருந்தன. அவரின் நிலை உணர்ந்தும் சரயுவோ அவர்புறம் திரும்பாமலே இருக்க, தன் மனைவியிடம் கண்களாலே தனது மாமியாரை ஜாடைக் காட்ட அவளோ அதனைக் கண்டும் காணாதது போல் இருந்தாள்.

“நீங்க கவலப்படாதீங்க அத்தை, அவ உங்க பொண்ணு. கொஞ்ச நாள்ள சரி ஆகிருவ. கண்டிப்பா ஊருக்கு வருவோம்” என தன் மாமியாரிடமும் அனுசரணையாகவே பேசினான்.

அவனின் அணுகுமுறையில் அவர் உள்ளம் நெகிழ்ந்தாலும் தனது மகன், மகளின் பாராமுகம் அவரை தினந்தினம் கொல்லாமல் கொன்றுப் புதைத்தது.

இன்னொரு வீட்டு மருமகளாய் தன் தங்கையை பார்த்தவனின் அகம் நிறைந்திருந்தது. அதனையே அவனது புறமும் உரைத்திட, அவளது தலையை ஆதுரமாய் தடவிக் கொடுத்தவன், “போய்ட்டு வரோம் குட்டிமா” என்றான்.

இதுவரை திடமாய் நின்றிருந்தவள் தன் அண்ணனின் வார்த்தைகளில் உடைந்து அவனை இறுக கட்டிக் கொண்டு அழுதாள் சரயு.

“தேங்க்ஸ் ண்ணா” என அவளது இதழ்கள் முணுமுணுக்க, “உன் சந்தோசம் தான் டா என் சந்தோசம்” என்றவன், பார்வையாலே சித்தார்த்திடம் விடைபெற்றவன் இதழிகாவை தூக்கி அவளது நெற்றியில் முத்தமொன்று வைத்தவன் அவளுக்காய் வாங்கி வைத்திருந்த டெடி பியர் ஒன்றை கொடுத்தான். அதனை வாங்கிக் கொண்டவள் அவனது கன்னத்தில் இதழ் பதிக்க, மாமன் – மருமகள் உறவில் மனம் நெகிழ்ந்து போயினர் கற்பகம்மாளும் ராமமூர்த்தியும்.

அவர்கள் கிளம்பிய பின் வீடே அமைதியாய் இருந்தது. கற்பகம்மாள் சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்க, ராமமூர்த்தி சற்றுநேர ஓய்விற்காக தன் உடலை கட்டிலில் சாய்த்திருந்தார்.

சித்தார்த்தின் அறையில் சரயுவும் இதழிகாவும் சரயுவின் உடைமைகளை அடுக்கிக் கொண்டிருந்தனர்.

இதழிகாவின் முகம் உட்சபட்ச மகிழ்ச்சியில் திளைத்திருத்தது. “இனி என்கூடவே இருப்ப இல்ல சரயு” என்றவாறே அவளது உடைகளை சரயுவின் உடைகளுக்கு அருகே ஓடி ஓடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

தன் மகள் மற்றும் மனைவியின் செயல்களை கட்டிலில் தலையணையை முதுகுக்கு கொடுத்து சாய்ந்தவாறு அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

உடைகளை அடுக்கி முடித்ததும், “நீங்க அப்பா கூட சமத்தா உட்காருங்க கியூட்டி, நான் பாட்டிக்கு ஹெல்ப் பண்ணிட்டு வரேன்” என்றவள் கற்பகம்மாளிற்கு உதவிக்கு செல்ல அவரோ அனைத்து வேலைகளையும் முடித்திருந்தார்.

நேரமும் மாலையை தொட்டிருக்க, “ஏங்க, ஜோசியர்கிட்ட சாந்தி முகூர்த்தத்துக்கு நல்ல நேரம் பார்த்து குறிச்சுட்டு வரச் சொன்னனே, கேட்டுட்டு வந்தீங்களா?” என கற்பகம்மாள் வினவினார் தன் கணவரிடம்.

“ம், கேட்டுட்டு வந்தேன் மா” என்றவர், “ஒன்பது மணிக்கு மேல நல்ல நேரம் ஆரம்பிக்கிறதா சொன்னாரு. அதுக்கு ஏத்த மாதிரி ஏற்பாடு பண்ணிரு” என்றவர், “அப்புறம் குட்டிமாவ இங்க நம்ம கூட படுக்க வச்சுரு கற்பகம்” என்றார்.

தற்செயலாய் அவர்களது அறையை கடந்த சித்தார்த்தின் காதுகளில் அவர்களது உரையாடல் விழ, அவனது கால்களோ சட்டென நடையை தடை செய்தது.

அதுவரை இருந்த சந்தோஷ மனநிலையை தண்ணீர் விட்டு அணைத்தது போல் முகம் வாட, கண்களை இறுக மூடிக் கொண்டான்.

அனைத்தையும் யோசித்தே முடிவெடுத்து தான் இத்திருமணத்திற்கு அவன் மனம் சம்மத்திருந்தாலும் வரப்போகும் முதலிரவை நினைத்து அவன் மனம் மருகியது.

அதனை எதிர்கொள்ளும் தைரியம் தனக்கில்லை என நினைத்தவன், நேராய் சரயுவிடம் சென்றான்.

அதிகாலையிலேயே விழித்திருந்ததால் ஓய்வாக தாயும் மகளும் உறக்கத்தின் பிடியில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்க, “சரயு” என அழைத்தான்.

அவனின் இரண்டு மூன்று முறை அழைப்பிற்கு பிறகே தான் கண்களைத் திறந்தாள். “சொல்லுங்க சித்” என கண்களை தேய்த்தவாறே கூற,

“எனக்கு கடைல கொஞ்சம் வேலை இருக்கு, லோட் வந்திருக்கிறதா பாண்டியன் சொன்னான். போய்ட்டு வந்தறேன்” என படபடவென கூற, உறக்கத்தின் பிடியில் இருந்து இன்னும் மீளாததால் அவனது முகத்தில் தோன்றி மறைந்திருந்த உணர்வுகளை பார்க்காமல் விட்டுவிட்டாள் அவள்.

எப்பொழுதும் லோட் வந்தால் அவனது முழு கண்காணிப்பிலே தான் வேலைகள் நடக்கும் என்பதால் அவளும் சரியென தலையாட்ட அறைக்கதவு வரை சென்றவன், “அம்மாட்டையும் சொல்லிரு” என்றுவிட்டு கிளம்பினான்.

அதன்பின் சிறிது நேரத்திலே சரயுவும் எழுந்துவிட, சித்தார்த் எங்கே என கேட்ட கற்பகம்மாளிடம், “லோட் வந்ததா சொல்லிட்டு கடைக்குப் போயிருக்காரு அத்தை, உங்ககிட்டயும் சொல்ல சொன்னாரு. தூக்கத்துல இருந்ததால உடனே வந்து சொல்ல முடியலங்த்த” என்றாள்.

“இவன என்ன பண்றது!” எனப் புலம்பியவாறே “ஏங்க, லோட் வந்திருந்தா நீங்க போய்ருக்கலாம்ல. இன்னிக்கு தான அவனுக்கு கல்யாணம் முடிஞ்சுருக்கு. அதுக்குள்ள வேலை பின்னாடி போய்ட்டான்” என்றார் குற்றசாற்றாய் தன் கணவரிடம்.

“இன்னிக்கு என்ன லோட் வந்திருக்கு? அப்படி எதுவும் பாண்டியன் என்கிட்ட சொல்லலயே மா! சொல்லி இருந்தா நான் போயிருப்பனே” என்றவர் யோசனையில் ஆழ்ந்துவிட கற்பகம்மாளோ தனது மகனுக்கு அலைப்பேசியில் அழைத்தார்.

அவர்களின் செயல் புரிபடாமல், “அதுனால என்னங்த்த, லோட் வந்தா எப்பவும் அவரு தான பார்த்துக்குவாரு. வேலை முடிஞ்சதும் வந்தறப் போறாரு” என இயல்பாய் பதிலளிக்க, அவளை பார்த்தவருக்கு மெல்லியதாய் கோபம் வெளிபட்டது.

“கல்யாண ஆன முத நாளும் அதுவுமா அவன் இப்படி பண்றானேனு நான் வருத்தப்பட்டா அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசற, உன்னை என்ன சொல்றது!” என நொடித்துக் கொண்டவர் மகன் அழைப்பை ஏற்காமல் போகவும் மீண்டும் அழைத்தார்.

தன் மாமியாரின் கோபம் புரிபடாமல் போக, அவளோ திருதிருவென முழித்தாள். அவளின் முகத்தைக் கண்டு என்ன நினைத்தாரோ, “போய் குளிச்சிட்டு நல்ல புடவையா கட்டிக்கிட்டு வா சரயு” என்றிட முதலில் அவரின் கூற்று புரிபடாமல் முழித்தவள் பின் மெதுவாய் புரிந்திட, அவளது கன்னங்கள் இரண்டும் செந்நிறத்தை பூசிக் கொண்டது.

மாமியாரின் சொல்படி குளித்து முடித்து வந்தவள் கண்ணாடி முன் நின்று புடவையைக் கட்டிக் கொண்டிருக்கும்போது தான் வெளியே கற்பகம்மாளின் குரல் கேட்டது.

“இவன என்னங்க பண்றது? தெரிஞ்சு பண்றானா இல்ல தெரியாம பண்றானா… இன்னும் வீட்டுக்கு வந்து சேரல, போன் பண்ணா எடுக்கவும் மாட்டேங்கிறான். அப்படி என்ன வேலை முக்கியமா போச்சோ!” என தன் கணவரிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

அவரது வார்த்தைகளைக் கேட்டவளுக்கு தன் கணவனின் செயல் மெதுவாய் புரிபட மாலையில் அவன் வேகமாய் கிளம்பிச் சென்றது நினைவில் வர, “எவ்ளோ நாள் இப்படியே ஓடி ஒளிய போறீங்க சித்!” என முணுமுணுத்துக் கொண்டது அவளின் இதழ்கள்.

இரவுணவை அவர்கள் நால்வருமாய் முடித்துக் கொள்ள, இதழிகாவோ தூக்கம் வருதென கூறவும் உறங்க வைப்பதற்காக சரயு தங்களது அறைக்கு அவளை அழைத்துச் செல்ல முற்பட அதனைத் தடுத்தார் கற்பகம்மாள்.

“அவள எங்க ரூம்ல படுக்க வச்சுருக்கிறோம் சரயு” என்றிட, “பரவால்ல அத்தை, அவ என்கூட படுக்கட்டும்” என மறுத்தவள் இதழிகாவை தூக்கிக் கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.

கற்பகம்மாளுக்கோ அதற்குமேல் என்ன சொல்வது எனப் புரியாமல் கைகளைப் பிசைந்தார். இன்று அவர்களுக்கு முதலிரவு அல்லவா. இதழிகாவை தங்களோடு இருத்திக் கொள்ளலாம் என நினைத்தவரால் அதனை வெளிப்படையாய் சரயுவிடம் கூற முடியவில்லை. தயக்கம் தடுக்க, கைகளைப் பிசைந்துக் கொண்டு நின்றார்.

அவரின் நிலையறிந்த ராமமூர்த்தி, “அதான் அவனே இன்னும் வரலயே கற்பகம். விடு, அவன் வர்ற வரைக்கும் குட்டிமா மருமக பொண்ணோடயே தூங்கட்டும். அவன் வந்தோனே அவளத் தூக்கிட்டு வந்து நம்ம ரூம்ல படுக்க வச்சுக்கலாம்” என்க,

“இவன் ஏங்க இப்படி பண்றான், நல்ல நேரம் வேற போகுது” என குறைபட, தன் மகனின் மனநிலையை உணர்ந்தவரால் மனைவியிடம் எதுவும் பேச முடியாமல் போனது.

“சரி, கவலப்படாத. அவ என்ன சின்ன குழந்தையா! நாலு வயசு குழந்தைக்கு தகப்பன் மா, அதெல்லாம் அவன் பார்த்துக்குவான். நீ வந்து படு” என்றழைக்க,

“இல்லங்க நீங்க போய் படுங்க. நான் அவன் வர்ற வரைக்கும் இங்க ஹால்லயே இருக்கேன்” என அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்துகொள்ள, உறக்கம் கண்ணைக் கட்ட தங்கள் அறைக்குள் நுழைந்துக் கொண்டார் ராமமூர்த்தி.

இரவு பதினொன்றை கடந்திருக்க அப்பொழுது தான் வீட்டினுள் நுழைந்தான் சித்தார்த். அந்நேரமும் தொலைக்காட்சியில் ஏதோ நாடகம் ஓடிக்கொண்டிருக்க அரைகுறை தூக்கத்தில் ஷோபாவில் அமர்ந்திருந்த கற்பகம்மாளை பார்த்தவன், “அம்மா, இங்கயே ஏன் உக்காந்துருக்கீங்க. ரூம்ல போய் படுக்கலாம்ல” என கடிந்துக் கொண்டான்.

ஆனால் அவனின் வார்த்தைகளில் அவர்தான் கோபமாய் பார்த்தவர், “ஏன்டா பொறுப்புனு ஒன்னு உனக்கு இருக்கா, இல்லையா? கல்யாணம் ஆன மொத நாளுமா அதுவுமா இப்படி பொண்டாட்டிய இந்நேரம் வரைக்கும் தனியா விட்டுட்டு போற அளவுக்கு அப்படி என்ன வேலை முக்கியமா கெடக்கு” என சீற,

“அவள எங்க ம்மா தனியா விட்டுட்டுப் போனேன். அதான் நீங்க எல்லாம் கூட இருக்கீங்க இல்ல, அப்புறம் என்ன” எனக் கேட்டவனை ஏகத்துக்கும் முறைத்து வைத்தார் அவர்.

அதனை புறம் தள்ளியவனாய், “சரி, உள்ள போய் படுங்க ம்மா. எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்” என அவன் நகரப் போக, “சாப்ட்டு போ கண்ணா” என்றார் கற்பகம்மாள்.

“லோட் இறக்க வந்த பசங்களோடயே சேர்ந்து சாப்டுட்டேன் ம்மா” என்றவன், “நீங்க சாப்ட்டீங்களா?” என்றிட, அவரோ பதிலளிக்காமல், “ஒரு நிமிஷம் இங்கேயே உட்காரு” என்றவர் சமையலறைக்குள் நுழைந்தார்.

அவன் புரியாமல் தன் தாயைப் பார்க்க, ஒரு நொடியில் வெளியே வந்தவர் அவனது கைகளில் பால் தம்பளரை திணித்தவர், “இத குடி” என்றவாறே அவனது அறைக்குள் சென்று உறக்கத்தில் இருந்த இதழிகாவை மெதுவாய் தூக்கிக் கொள்ள, இதழிகாவின் அசைவில் கண் முழித்தாள் சரயு.

கற்பகம்மாள் அவளை தூக்குவதைக் கண்டவள், “அவ இங்கயே தூங்கட்டும் அத்த” என்க, அவரோ அதனைக் கண்டு கொள்ளாமல், “அவன் வந்துட்டான். ஒழுங்கா சாப்ட்ருக்க மாட்டான், சாப்ட வச்சுட்டு ரெண்டு பேரும் படுங்க” என்றவர் தன் பேத்தியை தூக்கிக் கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

புடவையிலேயே உறங்கியதால் கலைந்திருந்த புடவை மடிப்பை சரி செய்தவாறே வெளியே வந்தவளின் கண்ணில் பட்டான் கையில் பால் தம்ளருடன் அமர்ந்திருந்த சித்தார்த்.

“சாப்ட எடுத்து வைக்கவா சித்?” என்றவளை பார்த்தவன், “இல்ல வேண்டாம் சரயு” என்றவன், “அம்மா பால் கொடுத்துட்டுப் போனாங்க, இதுவே போதும்” என்றவாறே தங்கள் அறைக்குள் நுழைய, அமைதியாய் அவன்பின் சென்று கட்டிலின் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டான்.

அறைக்கதவை சாற்றிவிட்டு, இரவு விளக்கை ஒளிர விட்டவன் தயக்கத்தோடே கட்டிலின் மறுபுறத்தில் சென்று அமர்ந்துக் கொண்டான்.

“லோட் இறக்க லேட்டாகிருச்சு சரயு மா. அதான்” என அவன் தயக்கத்தோடு உரைக்க, “ம், பாண்டி அண்ணா சொன்னாங்க” என்றவளின் குரலே உன்னை நானறிவேன் என்றது. இன்றைக்கு அவன் செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்பதை அவள் அறிவாள்.

“சாரி டா” என மெதுவாய் அவன் மன்னிப்பு வேண்ட, “எதுக்காம்?” என இடக்காய் கேள்வி எழுப்பினாள் சரயு.

“அது…” என அவன் இன்னுமே தயங்க, கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருவனின் அருகே நகர்ந்து கால்களை மடக்கி அதிலே அமர்ந்தவாறே, “என் சித்துவுக்கு என்கிட்ட என்ன தயக்கமாம்!” என்றவளின் வார்த்தைகள் குழைந்திருந்தது.

மெலிதாய் ஒளிர்ந்த இரவு விளக்கின் உபயத்தால் அவளது முகத்தை பார்த்தவனின் கண்கள் தாழ்ந்துக் கொள்ள, அவனது முகத்தை கையில் ஏந்தி இருந்தாள் பாவையவள்.

“இன்னிக்கு வேலைனு சொல்லி ஓடிட்டீங்க. நாளைக்கு, அதுக்கு அடுத்த நாள்… இன்னும் பல இரவுகள், என்ன சொல்லி என்கிட்ட இருந்து தள்ளிப் போவீங்க சித்!” என்றவளின் வார்த்தைகளில் அவனது கண்கள் பனித்தன.

கண்களை இறுக மூடிக் கொண்டான். “சாரி சரயு மா” என தயக்கத்தோடு வார்த்தைகள் வர, “இந்த தயக்கத்த நான் போக்கவா!” என்றவளின் குரல் அவனது காதோரம் கிசுகிசுத்தது.

அவனின் பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை போலும்! தனது வார்த்தைகளை செயலாக்கத் தொடங்கி இருந்தாள்.

அவனது உச்சந்தலையில் தன் இதழ்களை அழுத்தமாய் ஓற்றி எடுக்க அதில் அவனின் உடல் சிலிர்த்து அதிர்ந்தது. அவனது கரங்கள் தன்னால் அவளது இடையை இறுக அணைத்திருக்க அவனது முகத்தை கையில் ஏந்தி இருந்தாள் அவள்.

அடுத்தாய் அவனது நெற்றியில் இதழ்களை பதித்தவள், பனித்திருத்த அவனது கண்களை தனது இதழ்களால் வருடிவிட்டாள்.

தன்னவளின் ஸ்பரிசத்தில் அவன் மூழ்கிக் கொண்டிருக்க அவனது கன்னங்கள் இரண்டிலும் அழுத்தமாய் முத்தம் பதித்தாள். முழுதாய் தாடி வழிக்கப்பட்டிருந்தாலும் சிறியதாய் வெளியே எட்டிப் பார்த்த ரோமங்கள் அவளது இதழ்களில் குறுகுறுப்பூட்ட அதில் மூழ்கி இருந்தவளை தடித்த அவனது இதழ்கள் தடையிட்டு அவளது இதழின் சுவையறிய தொடங்கியது.

அதன்பின் அவன் ஆசிரியராய் மாறிப் போக, சமத்தான மாணவியாய் அவனிடம் பாடம் கற்கத் தொடங்கினாள் அவள்.

பள்ளியறைப் பாடத்தில் இருவரும் இன்னுமின்னும் தொலைந்திருக்க அதிகாலையில் தான் இருவரையும் உறக்கம் தழுவியது.

தன் காதல் கணவனின் கையணைப்பில் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்க அவளது தலைக் கோதி விட்டவன், அவளின் பிறைநெற்றியில் அழுத்தமாய் தனது இதழ்களைப் பதித்தான்.

அதில் சிணுங்கியவாறே அவனது நெஞ்சத்தில் மேலும் புதைந்தவளை இறுக அணைத்துக் கொண்டவனின் இதழ்கள் “ஐ லவ் யூ சரயு மா” என முணுமுணுத்துக் கொண்டன.

கணவன் மனைவிக்கிடையேயான தாம்பத்திய வாழ்க்கைக்கான முழு அர்த்தத்தையும் அவளிடம் தான் அவன் உணர்ந்துக் கொண்டான். இல்லை இல்லை அவள் தான் தன்னை முழுதாய் அவனிடம் ஒப்படைத்து உணர்த்தி இருந்தாள்.

நேற்றைய மாலைப் பொழுதில் அவனிடமிருந்த தயக்கத்தின் மிஞ்சம் மீதி கூட விட்டு வைக்காமல் முழுதாய் துடைத்தெறிந்திருந்தாள் அவனின் சரயு மா.

அதன்பிறகான அவனது நாட்காட்டியில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்துக் கொண்டிருந்தது.

அன்று இதழிகாவின் பிறந்தநாள் என்பதால் மாலைப் பொழுதில் சித்தார்த்தின் இல்லமே பரபரப்பாய் காணப்பட்டது.

இதழிகாவின் நான்காவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளில் பம்பரமாய் சுழன்றுக் கொண்டிருந்தாள் சரயு.

அவளுடன் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலரையும் இதழிகாவின் பள்ளி நண்பர்கள் சிலரையும் விருந்தினர்களாக அழைத்திருக்க வீட்டின் முன் பகுதியில் இருந்த காலி இடத்தில் அதற்கான ஏற்பாடுகள் தான் நடந்துக் கொண்டிருந்தன.

“சரயு மா” என்ற கணவனின் அழைப்பில் தங்கள் அறைக்குள் விரைந்தவளின் இடையை சித்தார்த்தின் கரங்கள் வளைத்திருந்தன.

அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டவன், “எந்த ஷர்ட் போடறது சரயு மா” என்றவனின் வார்த்தைகள் குழைந்திருந்தன.

“எந்த ஷர்ட் போடறதுனு இப்படி தான் கேட்பாங்களா” என சலித்துக் கொண்டாலும் தன்னவனின் அணைப்பில் பாகாய் உருகிக் கொண்டிருந்தாள் பாவையவள்.

“சொல்லு சரயு மா” என இன்னுமின்னுமாய் அவளுள் அவன் இழையத் தொடங்க, “சார் அடுத்து எதுக்கு அடி போடுறீங்கன்னு புரிஞ்சுப் போச்சு. ஒழுங்கா கிளம்பிற வழிய பாருங்க, எனக்கு தலைக்கு மேல வேலை கிடக்கு” என அவனிடமிருந்து அவள் போலியாய் விலக முற்பட,

“ப்ச், சரயு மா” என்ற குரலோடு, “சரயு மா” என்ற மற்றொரு குரலும் போட்டிக்கு அழைத்திட, “கியூட்டி” என்றவாறே வேகமாய் அவனிடமிருந்து தன்னைப் பிரித்தெடுத்துக் கொண்டாள் சரயு.

“என்கூட போட்டிக்குனே வருவா நான் பெத்தது” என அவன் இதழ்கள் சலித்துக் கொண்டாலும் தன்னிடமிருந்து விலகிய மனைவியின் இதழ்களில் வேகமாய் தனது இதழ்களை பதித்திடவும் தவறவில்லை.

அதில் மகிழ்வுற்றாலும் போலியாய் அவனிடத்தில் முறைத்தவள், தங்கள் அறையின் கதவருகே வந்திருந்த இதழிகாவிடம் பார்வையை செலுத்தினாள்.

“நான் எந்த டிரஸ் போடறது சரயு மா” என்றவளை தூக்கிக் கொண்டவளின் விழிகள் இரண்டும் தன் கணவனை தான் மொய்த்தது.

அலமாரியை திறந்தவள் அதிலிருந்து ஒரு உடையை எடுத்து, “இத போட்டுக்கோ கியூட்டி” என்றிட, அவளிடமிருந்து இறங்கியவள், “போட்டு விடு ப்பா” என்றாள் தன் தந்தையிடம் சற்று அதிகாரமாய்.

அவனும் அந்த அதிகாரத்துக்கு கட்டுப்பட்டது போல் இதழிகாவிற்கு உடைமாற்றி விட அதற்குள் தான் விட்டு வந்த வேலையை கவனிக்கச் சென்றாள் சரயு.

சில நொடிகளிலே, “சரயு மா”, ” சரயு மா” என தந்தையும் மகளும் போட்டிப்போட்டு கொண்டு அழைக்க, சரயு அங்கு வருவதற்குள் கற்பகம்மாள் அங்கு வந்திருந்தார்.

“அவனோட சேர்ந்து நீயும் அப்படி கூப்டாதனு சொன்னா கேட்க மாட்டியா குட்டிமா? ஒழுங்கா அம்மானு கூப்டு” என வழக்கம்போல் அவளை அதட்ட,

“அவ அப்படியே கூப்டட்டும் அத்தை” என இதழிகாவிற்கு முன் முந்திக் கொண்டு பதிலுரைத்தாள் சரயு.

சரயுவின் பதிலால் இதழிகா, ‘இப்போ என்ன பண்ணுவீங்க’ என்ற ரீதியில் தன் பாட்டியை பார்க்க, “என்னமோ பண்ணித் தொலைங்க” என சொல்லி சொல்லி சலிப்புற்றவராய் அங்கிருந்து நகர, சரயுவை தன்னருகே இழுத்து அவளது கன்னத்தில் முத்தமொன்றை பதித்தவள் வேகமாய் அங்கிருந்து ஓடிவிட்டாள்.

ஓடும் இதழிகாவையே புன்னகையோடு பார்த்திருந்தவளை தோள் பற்றி தன்னோடு அணைத்துக் கொண்டவன், “அவ அம்மானு கூப்டணும்னு உனக்கு ஆசை இல்லயா சரயு மா” என்றான் தவிப்போடு.

இல்லை என அவள் தலை அழுத்தமாய் மறுத்தது. “ஏன்?” என அவன் வினவிட, “உங்கள மாதிரியே அவளும் சரயு மா’னு கூப்டறது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சித்” என கண்கள் மின்ன உரைத்தவளின் காதலில் மீண்டுமொரு அவளிடம் வீழ்ந்தான் அவன்.

பாலைவனமாய் கிடந்த தன் வாழ்வை பூத்துக்குலுங்கும் சோலைவனமாக்கியவளின் காதலில் இஷ்டப்பட்டே கரைந்தவனின் மனமோ மகிழ்ந்து கிடந்தது.

இதே மகிழ்ச்சி அவனது வாழ்வு முழுமைக்கும் கிடைத்திட நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.

_சுபம்_

 

வணக்கம் கண்மணிகளே ❤

கதைப் பற்றின நிறை, குறைகளை உங்கள் விமர்சனத்தில் கூறுங்கள். என்னுடைய எழுத்தை மேலும் மேருகேற்ற உதவும் கண்மணிஸ். அதனால் மறக்காமல் உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

இதுவரை தொடர் ஆதரவைக் கொடுத்து என்னையும் என் எழுத்தையும் ஊக்குவிக்கும் அனைத்து வாசக கண்மணிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் அன்புகளும்.

இக்கதையை எழுத தூண்டியது என் அக்கா ஒருவர் தான்.

மருத்துவரான அவர் ஒருமுறை பணியின்போது அழைத்திட, ஆச்சரியத்தோடு “என்ன க்கா, இந்த நேரத்துல கால் பண்ணிருக்க. பேஷன்ட்ஸ் யாரும் இல்லயா” என்று நக்கலாய் உரைத்தவவளை அடுத்து அவர்கள் கூறிய விசயம் வாய்மூட வைத்தது.

தன் மனைவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வாசெக்டமி செய்துக் கொண்ட ஒருவரை அவரது மனைவியே வார்த்தைகளால் காயப்படுத்தி விட்டு தனது குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறொருவரோடு தனது வாழ்க்கையை தேடி சென்றுள்ளார்.

அவர் ஒருமுறை மருத்துவமனைக்கு வந்தபோது மனமுடைந்து தனது துயரத்தை வாய்விட்டு சொல்லி அழுதுள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் சூழ்ந்திருக்க உடைந்துப் போய் அவர் அழுத அழுகையை பற்றி அடுத்த சில நிமிடங்களிலே என்னை அழைத்து தெரிவித்தார் எனது அக்கா.

“உன் எழுத்து மூலமா ஏதாவது செய் சாரா” என்று அவர்கள் கூறும்போது என்னால் என்ன செய்துவிட முடியும் என்றே தோன்றியது.

அவருக்கு நிஜ வாழ்வில் மீண்டுமொரு அவரை முழுதாய் புரிந்துக் கொண்ட வாழ்க்கைத் துணை அமையுமா அல்லது அவரது எதிர்காலம் எவ்வித தடையும் இல்லாமல் குழந்தைகளின் வளர்ப்பில் பாதை மாறுமா என்று எதுவும் தெரியாது.

99% அவரது வாழ்க்கை பற்றிய கணிப்பு தெரியாது என்றாலும் எனது கற்பனை உலகில் அவருக்கான ஒரு நல்வாழ்வை அமைத்திட முடியும் என்ற நம்பிக்கையோடு தான் இக்கதையை எழுதத் தொடங்கினேன்.

அந்த நம்பிக்கை தான் ‘சித்தார்த்’ என்ற ஒருவனை உருவாக்கியது.

பெண்களுக்கு எப்படி கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறோ அதேப்போல் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு தான் வாசெக்டமி.

வாசெக்டமி (Vasectomy)என்பது விந்து வெளியேறுவதைத் தடுக்க ஆணின் விந்துக்குழாய் அல்லது விந்துநாளத்தைத் துண்டித்து, கட்டி வைத்து அல்லது அடைப்பிட்டு மூடி செய்யப்படும் நவீன, எளிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சை ஆகும்.

குறிப்பாக பெண்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சையை விட மிக எளிதானதும் குறைந்த செலவும் கொண்டதாகும்.

இதனால் இயல்பான தாம்பத்ய வாழ்க்கையில் எவ்வித தடைகளும் ஏற்படாது.

இன்னும் மக்களிடையே இதனைப் பற்றிய புரிந்துணர்வு இல்லாதது தான் வேதனைக்குரிய விசயம்.

என்னால் முடிந்த மட்டும் சித்தார்த்திற்கு நியாயம் செய்திருப்பதாக நினைக்கிறேன். இக்கதை எழுத தூண்டிய எனது அக்காவிற்கு “தொடுவானம்” படைப்பை சமர்பிக்கிறேன்.

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாய் இழுத்தடித்தாலும் என்னோடும் சித்தார்த், சரயுவோடும் பயணித்த வாசக கண்மணிகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

எனது அடுத்த படைப்பான, “மதுரகவி”யில் சந்திக்க வருகிறேன் கண்மணிகளே.

ப்ரியங்களுடன்…

_சாராமோகன்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்