Loading

­மறுபுறம் அமராவதி மாலதிக்கு அழைத்திருந்தார்.

“மாலதி நானும் அண்ணியும் நாளைக்கு ஊருக்கு வாரோம்.”என்று கூற

“ஏதாவது முக்கியமான விஷயமா?”என்று மாலதி கேட்க

“ஆமா. அடுத்தவாரம் ஷாத்விக்கோட கடை திறப்பு விழா” என்று அமராவதி கூற

“நல்லது அண்ணி. நான் சமுத்ராகிட்ட சொல்லிடுறேன்.”என்றவர் சில நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

காலை உணவை முடித்துவிட்டு ஷாத்விக்கே சமுத்ராவை அலுவலகம் அழைத்து சென்றான். செல்லும் வழியில் அவளுக்கு தேவையென்று உணவுப்பொருட்களை வாங்கி குவித்தவன் அதற்கான நேர அட்டவணையையும் வாயாலேயே தயாரித்தான்.

அனைத்தையும் அமைதியாக கேட்டிருந்தவள் 

“அவ்வளவு தானே இல்லை இன்னும் இருக்கா?”என்று குறும்புடன் கேட்க

“இருக்கு. மறுபடியும் ஒருமுறை டாக்டரை பார்த்துட்டு வருவோமா?” என்று ஷாத்விக் கேட்க

“எதுக்கு?” என்று சமுத்ரா கேட்க

“நானும் ஒருமுறை அவர்கிட்ட நேரடியாக கேட்டா தான் எனக்கு நிம்மதியாக இருக்கும்.” என்று ஷாத்விக் கூற

“இன்னும் இரண்டு நாள்ல திரும்பி வரசொல்லியிருக்காரு. அப்போ உங்களையும் அழைச்சிட்டு போறேன்.” என்று சமுத்ரா கூற ஷாத்விக்

“சரி. வேற ஏதும் தேவைனாலும் தயங்காம கூப்பிடு. கவனமாக இருந்துக்கோ.” என்று கூறியவன் அவளை ஆபிஸில் இறக்கிவிட்டு கிளம்பினான்.

இப்படியே இரண்டு நாட்கள் செல்ல சொன்னதை போலவே ஷாத்விக்கை மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள் சமுத்ரா.

அவளை பரிசோதித்த மருத்துவரிடம் சமுத்ராவின் உடல்நலத்தை பற்றி கேட்டு தெரிந்துகொண்டவன் தனக்கிருந்த சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டான்.

பின் இருவரும் டாக்டரிம் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்ததும்

” இப்போ திருப்தியாக உங்களுக்கு?” என்று சமுத்ரா கேட்க ஷாத்விக்கோ

“டாக்டரை பார்த்துட்டு வந்த பிறகு தான் பயமாவே இருக்கு.” என்று ஷாத்விக் சொல்ல

“ஏன் இம்ப்ரூமண்ட் இருக்குனு தானே சொன்னாரு?” என்று சமுத்ரா கூற

“மிஸ் கேரேஜிற்கு சான்ஸஸ் ஜாஸ்தினு சொன்னாரே”என்று ஷாத்விக் கவலையாக கூற சமுத்ராவோ சிரித்தபடி

“லாஸ்ட் டைம் வந்தப்போ எப்போ வேணாலும் மிஸ்கேரேஜ் ஆகலாம்னு சொன்னாரு. இன்னைக்கு சான்ஸஸ் அதிகம்னு சொல்லியிருக்காரு. இது இம்ப்ரூமண்ட் தானே?” என்று சமுத்ரா சாதாரணமாக கேட்க

“என்ன இவ்வளவு சாதாரணமாக சொல்லுற? உனக்கு பயமாகவே இல்லையா?” என்று ஷாத்விக், தான் அவளை ஆறுதல் படுத்தவேண்டும் என்பதை மறந்து அவளிடம் கேட்க

“ஏன் பயப்படனும்? மாமா இந்த குழந்தை ரூபத்துல நம்மகிட்ட மறுபடியும் வந்திருக்காரு. நம்ம கூட தான் இருக்கபோறாரு. இதை நான் நம்புறேன்.” என்றவளின் வார்த்தைகளில் இருந்து உறுதி ஷாத்விக்கை சற்று மிரளத்தான் செய்தது.

சமுத்ராவின் பிடிவாதம் பற்றி நன்கு அறிந்தவனாதலால் அதற்கு மேல் அவன் எதையும் யோசிக்கவில்லை.

“சரி ஆனா நீ ரொம்ப கவனமாக இருக்கனும். முடிந்த அளவு ரெஸ்ட் எடு. இல்லைனா சொல்லு. வேலைன்னு வேற எங்கேயாவது போய் ஒரு மாசம் தங்கிட்டு வரலாம்.” என்று ஷாத்விக் சொல்ல அவனது அந்த அக்கறை சமுத்ராவை எப்போதும் போல் கவர்ந்தது.

“அதுக்கு அவசியமில்லை. நான் வீட்டுல இருந்து வேலையை பார்க்கிறேன். உங்க கடை ஓபனிங் இருக்கு. இந்த நேரத்துல அங்க இங்கனு அலைஞ்சா வேலை தடைப்படும்.” என்று சமுத்ரா சொல்ல

“இப்போ அது எல்லாத்தையும் விட நீயும் குழந்தையும் தான் முக்கியம். கடை ஓபனிங்கை கூட இரண்டு மாசம் கழிச்சு வச்சிக்கலாம்.” என்று ஷாத்விக் சாதாரணமாக சொல்ல சமுத்ராவுக்கு அவனது வார்த்தைகள் மகிழ்ச்சியை கொடுத்த போதிலும் அவனின் முன்னேற்றம் தடைப்படக்கூடாதென்று எண்ணியவள்

“அதுக்கு அவசியமில்லை. நானும் பாப்பாவும் இப்போ நல்லா தான் இருக்கோம். உடம்பையும் இனி கவனமாக பார்த்துக்கிறேன். நீங்க மத்த வேலைகளை கவனிங்க.” என்று சொன்னவள் அவனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

இருவருக்கிடையே தம்பதிகளுக்கிடையிலான அன்னியோன்யம் இல்லாதபோதிலும் இருவரின் உறவிலும் குழந்தையின் பேரில் ஒரு முன்னேற்றம் இருந்தது.

ஷாத்விக்கிற்கு தான் இப்போதுவரை சமுத்ரா மனதில் என்ன ஓடுகின்றதென்று புரியவில்லை. அவனுக்கு அவளிடம் தெளிவுபெற வேண்டிய விஷயங்கள் பல இருந்தபோதிலும் இந்த சமயத்தில் அவளிடம் பேசி அவளின் மனநிலையை மோசமாக்க அவன் விரும்பவில்லை. அதனால் சிலகாலம் அமைதி காப்பதென்று முடிவெடுத்தான் ஷாத்விக். 

இதோ அதோவென்று ஷாத்விக்கின் கடை திறப்பு நாளும் வந்தது. ஏற்கனவே தெரிந்த தொழில் என்பதால் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தான் ஷாத்விக். ஊரிலிருந்து ஏற்கனவே தயாரித்து சேமித்திருந்த உரங்களை வரவழைத்திருந்தவன் கடைதிறப்பு நாளன்றே கடைக்கு பின்புறமிருந்த இடத்தில் புது இயற்கை உரம் தயாரிப்பதற்கான வேலைகளை பூஜையுடன் ஆரம்பிப்பதென்ற முடிவில் இருந்தான்.

அன்று அதிகாலையே ஷாத்விக் கடைதிறப்பு வேலைகளை கவனிப்பதற்காக கிளம்பிவிட்டான். கிளம்புவதற்கு முன் எப்போதும் போல் தங்கள் அறையில் யாரும் அறியாமல் ப்ளாஸ்கில் பாலும் பழமும் சமுத்ராவுக்கு எடுத்துவைத்துவிட்டு கிளம்பினான்.

கடைதிறப்பிற்கான நல்ல நேரம் காலை பத்து மணியென்று குறித்துகொடுத்திருக்க அனைவரும் எட்டரை மணிக்கே அவ்விடத்திற்கு வந்துட்டனர்.

சமுத்ராவிற்கு எதிர்பாரா விதமாக ஏதோ வேலை வந்துவிட ஆபிஸிற்கு சென்று சீக்கிரம் வந்துவிடுவதாக கூறி சமுத்ரா கிளம்பியிருந்தாள்.

மற்றவர்கள் அனைவரும் வெவ்வேறு வேலைகளை பொறுப்பெடுத்து கவனித்துக்கொள்ள பவனும் அவனின் அன்னை நிர்மலாவும் வந்தனர்.

பவனும் ஷாத்விக் மற்றும் அவனின் நட்புக்களோடு சேர்ந்து வேலைகளை கவனிக்க நிர்மலா தான் வம்பு வளர்ப்பதற்கு ஆள் பார்த்துக்கொண்டிருந்தார். அனைவரும் ஒவ்வொரு வேலையை கையிலெடுத்திருக்க அவருக்கு தான் யாரும் சிக்கவில்லை. மணி ஒன்பதரையை நெருங்க உதய்யோடு வந்து சேர்ந்தாள் சமுத்ரா.

ஷாத்விக் தான் உதயிற்கு அழைத்து வரும் வழியில் சமுத்ராவை அழைத்துவரச்சொல்லியிருந்தான்.

அனைவரும் வந்து சேர்ந்திட பூசகர் தொழில் விருத்தி பூஜையோடு கடைதிறப்பு விழாவை ஆரம்பிக்க ஷாத்விக் சமுத்ராவை அழைத்து கடையை திறந்துவைக்க சொன்னான். 

இதுபற்றி சமுத்ராவிற்கு தெரியாமல் தன் குடும்பத்தாரிடம் பேசி தன் அன்னையின் ஆலோசனைப்படியே சமுத்ராவை அழைத்தான் ஷாத்விக்.

சமுத்ராவோ தயங்க வீட்டார் அனைவரும் வற்புறுத்தி அவளை திறந்துவைக்க சொன்னர்.

ஒரு நொடி கண்களை மூடி ஏதோ வேண்டிக்கொண்டவள் மற்றவர் அறியாதபடி வயிற்றில் கைவைத்து எடுத்து ரிப்பனை கட்செய்து கடையை திறந்துவைத்தாள் சமுத்ரா. 

மற்றவர்கள் இது எதனையும் கவனிக்காத போதிலும் ஷாத்விக் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதானிருந்தான்.

அவனுமே அவர்களின் குழந்தையை தன் தந்தையின் மறுபிறப்பாகவே எண்ணியிருந்தான். தன்னுடைய இந்த முன்னேற்றத்தில் தன் தந்தை இல்லையே என்று உள்ளுக்குள் வருந்தியவனுக்கு சமுத்ராவின் செயல் பெரும் ஆறுதலாகவும் நிம்மதியாகவும் இருந்தது.

அனைத்து பூஜைகளும் முடிவடைய முதல் வியாபரம் இந்திராணியால் தொடக்கிவைக்கப்பட்டது. ஏற்கனவே எடுத்திருந்த சிறுசிறு ஆடர்களை டெலிவரி செய்வதற்காக நாதன், பாலு, மற்றும் சிவநேசனை அனுப்பிவைத்தான் ஷாத்விக்.

வீட்டார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலைகளில் ஒதுங்கி பேசிக்கொண்டிருக்க சமுத்ராவும் உதய்யும் ஒரு ஓரமாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

மறுபுறம் அதனை பார்த்துக்கொண்டிருந்த நிர்மலாவோ தன் அருகே அமர்ந்திருந்த ஷாத்விக்கின் ஒன்றுவிட்ட சித்தியான மங்கையிடம் பேசிக்கொண்டிருந்தார்.

“ஏன்க்கா உங்க வீட்டு பையன் ஏன் இவ்வளவு அப்பாவியாக இருக்கான்?”என்று நிர்மலா ஆரம்பிக்க

“நீ யாரை சொல்லுற நிர்மலா?” என்று மங்கையும் புரியாமல் கேட்க

“வேற யார? ஷாத்விக்கை தான். இந்த குடும்பத்துல அதுவும் அந்த திமிரெடுத்தவகிட்ட வந்து சிக்கியிருக்கான்.” என்று நிர்மலா கூற

“அவனா சிக்குனான்? இந்த மாமா பண்ண வேலை இது. அவரு இந்த கல்யாணத்தை செய்துவச்சிட்டு அவர் விதியை அவரே முடிச்சிக்கிட்டாரு.” என்று மங்கை சொல்ல

“என்னக்கா சொல்லுறீங்க?” என்று நிர்மலா புரியாமல் கேட்க

“புது மருமக வந்து முழுசா மூனு மாசம் முடியிறதுக்குள்ள எங்க அக்கா தாலி அறுந்திடுச்சு. நல்லா இருந்தவரு திடீர்னு ஆக்சிடன்ட்ல செத்துபோனாருனா அதுக்கு வேற என்ன காரணமா இருக்க முடியும்?” என்று தன் வார்த்தைகளின் விபரீதம் புரியாமல் மங்கையும் பேச சமுத்ரா மீது அளவுக்கதிகமான வன்மத்துடன் இருந்த நிர்மலாவும் அவருக்கு ஒத்து ஊதினார்.

“அட ஆமாக்கா. இவங்க கல்யாணம் முடிஞ்சி மூனு மாசத்துலயே அவரு தவறிட்டாரு. இழவு வீட்டுலயும் நிறையபேர் புதுபொண்ணு வந்து நேரம் சரியில்லைன்னு பேசிக்கிட்டாங்க.” என்று நிர்மலா கூற

“நான் கூட அக்காகிட்ட அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிவச்சிட்டீங்க. எதுக்கும் ஒரு தடவை இரண்டு பேர் ஜாதகத்தையும் பார்த்து ஏதாவது தோஷம் இருந்தா கழிச்சிவிட்டுருங்கனு சொன்னேன். ஆனா நம்ம சொல்லுறதையெல்லாம் இவங்க என்னைக்கு கேட்டு இருக்காங்க.” என்று அவரும் சொல்ல அந்த பக்கமாக சென்ற அமராவதியின் காதில் இந்த வார்த்தைகள் விழுந்தது.

“என்ன பேசுறீங்க நீங்க? எதையும் எதையும் முடிச்சு போடுறீங்க? நீங்க பேசுறது உங்களுக்கே நியாயமா இருக்கா?”என்று அவர் தன் மகளை இப்படி வைகின்றனரே என்ற ஆதங்கத்தில் பேச

“நாங்க என்ன இல்லாததையா சொன்னோம்? நடந்ததை தானே சொன்னோம். நாங்க மட்டும் இல்லை. ஊரே இதை தான் சொல்லுது.” என்று நிர்மலா சொல்ல

“எது நடந்தது? என் அண்ணன் சாவுக்கு என் பொண்ணு தான் காரணம்னு சொல்லுறீங்களா?” என்று அமராவதி ஆதங்கத்துடன் கேட்க

“நாங்க அப்படி சொல்லலைனாலும் ஊரு அப்படி தான் பேசிக்கிது.” என்று மங்கையும் அலட்சியமாக சொல்ல

“அதுமட்டும் இல்லக்கா. சமுத்ராவுக்கு உடம்புலயும் ஏதோ பிரச்சினை இருக்கு போல. எனக்கு தெரிஞ்சு குழந்தை பெத்துக்கவும் வாய்ப்பில்லை. இதெல்லாம் தெரிஞ்சா வெளியில எவனும் கட்டிக்கமாட்டான்னு உங்க வீட்டு பையன் தலையில கட்டி வச்சிட்டாங்க. இது தெரியாம உங்க குடும்பமே அந்த திமிரெடுத்தவளை தலையில தூக்கிவச்சிட்டு ஆடுது. வீட்டுக்கு பெரியவரை இவ ராசி முழுங்கிடுச்சு. வாரிசுக்கும் வாய்ப்பில்லை. இருக்க ஒரே வாரிசான ஷாத்விக்கையாவது காப்பாத்திடுங்க அக்கா.” என்று நிர்மலாவின் நாவோ விஷ வார்த்தைகளை அள்ளி வீச இதை கேட்டிருந்த அமராவதிக்கு தான் உள்ளம் நடுங்கியது.

அவரோ எதிர்த்து பேச வழியறியாது அழத்தொடங்க அங்கு நடந்துக்கொண்டிருந்த சலசலப்பினை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த சமுத்ராவும் உதய்யும் ஏதோ சரியில்லையென்று உணர்ந்து அவ்விடத்திற்கு விரைந்தனர்.

அருகே வந்த சமுத்ரா தன் அன்னை அழுவதை கண்டு

“என்னாச்சும்மா?” என்று விசாரிக்க அமராவதிக்கோ தான் கேட்ட அனைத்தையும் சமுத்ராவிடம் சொல்லும் தைரியமில்லை.

அவர் அழுவதையே தொடர இப்போது சமுத்ராவோ நிர்மலா மற்றும் மங்கையை திரும்பி பார்த்து முறைத்தவள், குரலில் கடுமையுடன்

“என்ன நடந்துச்சு இங்க?” என்று கேட்க நிர்மலா சற்று பயந்த போதிலும் மங்கை அருகிலிருந்த தைரியத்தில் பேசினார்.

“உண்மையை சொன்னோம். அதுக்கு உன்னை பெத்தவ ஒப்பாரி வச்சா அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்?” என்று நிர்மலா தெனாவட்டாக கேட்க அதற்குள் ஷாத்விக் இந்திராணி மாலதி, பவன் என்று அனைவரும் வந்துவிட்டனர்.

இந்திராணியை கண்டதும் அமராவதி அவரை சென்று கட்டிக்கொண்டு அழ இந்திராணிக்கு தான் எதுவும் புரியவில்லை.

“என்னாச்சு அண்ணி? ஏன் அழுறீங்க?” என்று விசாரிக்க

“அண்ணன் சாவுக்கு சமுத்ராவோட ராசி தான் காரணம்னு சொல்லுறாங்க அண்ணி.” என்று கூறியவர் தேம்பித் தேம்பி அழ அங்கிருந்த அனைவருமே சற்று அதிர்ந்துபோயினர். 

“அம்மா என்னம்மா இது?” என்று பவன் இடைபுக

“டேய் மத்தவங்க சொன்னதை தான் நாங்க சொன்னோம்.” என்று நிர்மலா சொல்ல

“சித்தி அபத்தமா பேசாதீங்க.” என்று ஷாத்விக்கும் பேச

“அவ சரியா தான் பேசுறா. இத்தனை வருஷமா நல்லா இருந்த மனுஷன் இவ இந்த வீட்டுக்கு மருமகளாக வந்து மூனு மாசத்துல ஆக்சிடன்ட்ல செத்துபோயிட்டாரருனா அதுக்கு இவ ராசி தானே காரணம்.” என்று மங்கையும் கூற

“மங்கை கிறுக்குத்தனமா பேசாத. அவர் விதி முடிஞ்சிப்போச்சு. அவரு போயிட்டாரு. வாயிருக்குனு வாழுற புள்ளைக மேல சேத்தை அள்ளி வீசாத” என்று இந்திராணி தன் தங்கையை அதட்ட

“அக்கா உங்களுக்கு தான் இன்னும் விஷயம் புரியல. இந்த குடும்பமே ஒரு பித்தலாட்ட கும்பல். புள்ள பெத்துக்க வக்கில்லாத ஒருத்தியை சொந்தம் அது இதுன்னு சொல்லி உங்க புள்ளைக்கு கட்டிவச்சி வாரிசில்லாமல் ஆக்கிடுச்சுங்க.” என்று நிர்மலா சொல்ல

“அம்மா அவசியமில்லாமல் பேசிட்டு இருக்கீங்க.” என்று பவன் பல்லை கடித்துக்கொண்டு தன் அன்னையை அதட்ட அவரோ அதையெல்லாம் கேட்பதாயில்லை.

“நீ அமைதியாக இருடா. அக்கா போனவாரம் உங்க மருமக டாக்டரை பார்க்க வந்திருந்தா. நான் பார்த்து விசாரிச்சப்போ ஏதோ மழுப்பலா பதில் சொல்லிட்டு போயிட்டா. உடம்பு நல்லா இருக்கிறவ எதுக்கு யாருக்கும் தெரியாமல் டாக்டரை பார்க்க வரனும்? அதுவும் அந்த டாக்டரை குழந்தையில்லாதவங்க தான் அதிகமாக பார்க்க வருவாங்களாம். எதுவும் இல்லைனா எதுக்கு இவ அவங்களை பார்க்க போகனும்?” என்று நிர்மலா கேட்க இப்போது அனைவரின் பார்வையும் சமுத்ராவின் பக்கம் திரும்பியது. 

சமுத்ரா பதில் சொல்வதற்கு முன் ஷாத்விக்கே பதில் சொன்னான்.

“அவளுக்கு உடம்பு வீக்காக இருக்குனு டாக்டர் சொன்னாரு. அதான் பார்க்க போனா. நான் கூடப்போறதாக தான் இருந்தது. ஒரு முக்கியமான வேலை இருந்ததால அன்னைக்கு என்னால போக முடியல.” என்று ஷாத்விக் சமாளிக்க அமராவதியோ சமுத்ரா அருகே வந்தார்.

“சமுத்ரா உண்மையை சொல்லு. அவங்க சொன்னமாதிரி உன் உடம்புக்கு ஏதும் பிரச்சினையா? எங்ககிட்ட ஏதாவது மறைக்கிறியா?” என்று அமராவதி கேட்க

“அது சரி. அவகிட்ட கேட்டா அவ எப்படி சொல்லுவா? மாமாவை முழுங்குனா. வாரிசும் இல்லைனு ஆகிடுச்சு.இப்ப எங்க வீட்டு பையன் மட்டும் தான் மிச்சமிருக்கான். இவனையும் இவ ராசி காவு வாங்கிடக்கூடாது.” என்ற மனதை கூறுபோடும் மங்கையின் வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் வெவ்வேறு விதத்தில் தாக்கியது.

“இல்லை. நீங்க சொல்லுற எதுவும் உண்மை இல்லை. மாமா சாவுக்கு நான் காரணமில்லை. எதுக்கும் நான் காரணமில்லை யாருக்கும் எதுவும் நடக்காது. எதுவும் நடக்காது.” என்று கத்திய சமுத்ரா உடல் நடுங்க மயங்கி சரிந்தாள்.

அருகில் நின்றிருந்த அமராவதி சமுத்ராவை தாங்கிபிடிக்க ஷாத்விக்கோ அருகில் ஓடிவந்து சமுத்ராவை கையில் தூக்கிக்கொண்டவன்

“உதய் காரை எடு சீக்கிரம் ஹாஸ்பிடல் போகனும்.” என்று கூறி விரைய உதய்யும் நிலைமையை புரிந்துகொண்டு முன்னே ஓட பெரியவர்களோ என்ன எதுவென்று புரியாது ஷாத்விக் பின்னேயே ஓட யாருக்கும் எந்த விளக்கமும் கொடுக்காமல் ஷாத்விக் சமுத்ராவோடு காரில் மருத்துவமனைக்கு கிளம்பினான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.