மனம் வேதனையில் உழன்றது கீதனிற்கு. தனக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்க வேண்டாம் என்று கடவுளை வசைபாடி விட்டான்.
அவள் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கிளம்பிச் சென்ற சம்பவம் நினைவில் வந்து அவனை வருத்தியது. இத்தனை தினங்களில் அவளுக்கு அவளின் குழந்தையை காண்பித்திருக்க வேண்டுமோ. பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொண்டதாக நினைத்திருந்தான். ஆனால் இப்பொழுது அவனின் மனம் அவனை சாடியது. மொழிக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டியது. மனதை அலசிப் பார்த்தால் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டதுபோல் இருந்தது அவனுக்கு. அதனால் அவளின் முகம் காணவும் வெட்கி நின்றான் அவன்.
மருத்துவமனையின் உள்ளே சென்றதும், அவள் ஒரு கடிதம் எழுதி வைத்தாள் அவனுக்கு. பின் அடுத்தடுத்து அவளுக்கு சிகிச்சைகள் நிகழ்ந்தது. இறுதியாக அவனின் முகத்தையேனும் பார்த்துவிட்டு செல்வாள் என்று எதிர்பார்த்த கீதனுக்கு ஏமாற்றமே. அவளுக்கு உதவிய செவிலியிடம், அந்த கடிதத்தைக் கொடுத்திருந்தாள்.
சற்று நேரத்தில் நிரண்யா மற்றும் நற்பவிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதில் அவர்கள் தலையில் பொறுத்தப் பட்டிருந்த மைக்ரோ சிப் அகற்றப்பட்டது.
அவர்களின் மூளைக்கு சிறிது ஓய்வு தேவையென்று மயக்கத்தில் வைத்திருந்தனர். அறுவை சிகிச்சை முடிந்தவுடன், செவிலி அந்த கடிதத்தை கீதனிடம் ஒப்படைத்தாள்.
அதைப் பெற்றவனின் விழிகள் கலங்கி நிற்க, அவசரமாக அதைப் பிரித்தான்.
அன்புள்ளன்னுதான் எழுத ஆரம்பிப்பாங்க. ஆனா நீங்க அன்பை எனக்கு கொடுத்ததால்,
அன்பை அளித்த கீதனுக்கு,
கடைசியா உங்களைப் பார்க்காம போனது உங்களுக்கு வருத்தமா இருக்கலாம் கீதன். ஆனா பார்த்தா என்னால் போக முடியாது. இந்த இடத்தில் நானும் கொஞ்சம் சுயநலமா யோசிக்கிறேன். எனக்காக நீங்க நிறைய செஞ்சிருக்கீங்க. அதுக்குப் பிண்ணனியில் நிரண்யா மட்டும் இல்லை. என் மேல் கொண்ட பரிவும் இருக்கு. அதை என்னால் நல்லாவே உணர முடிந்தது. அதனால் நீங்க தப்பு செஞ்சுட்டதா நினைச்சு வருந்த வேண்டாம். அதை நான் விரும்பவும் இல்லை. இந்த உலகத்தில் உள்ள ஆத்மா எப்போ சந்தோஷமா இருக்கும் தெரியுமா. நிம்மதியா சாகும்போது. அந்த நிம்மதி இப்போ எனக்கு நிறைய இருக்கு. நிம்மதியா வாழாத நான் நிம்மதியா போறேன்.
எனக்காக நீங்க ஒண்ணு மட்டும் செய்ங்க. என்னை என்னைக்கும் மறக்காதீங்க. உங்க நினைவில் நான் என்னைக்கும் வாழணும். இதை மட்டும் நிறைவேத்தி வைங்க. இதுவரை உங்க மனைவியின் நினைவில் வாழ்ந்த நான் இனி உங்களின் நினைவில் இருக்கணும்னு ஆசைப் படுறேன். நிரண்யாவைக் கேட்டதா சொல்லுங்க. எனக்கு மனதளவில் நீங்க உதவியிருக்கீங்க. உடலளவில் நிரண்யா உதவியிருக்காங்க. உங்க ரெண்டு பேரையும் என்னைக்கும் நான் மறக்க மாட்டேன். தயவு செஞ்சு அந்த வீட்டைக் காலி செஞ்சுட்டு போகாதீங்க. என்னை மறக்காதீங்க.
இப்படிக்கு,
உங்கள் மொழி
என்று முடிந்திருந்த கடித்தத்தைப் படித்ததும், அவன் என்ன உணர்ந்தான் என்றே அவனுக்குத் தெரியவில்லை. அப்படியே நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிவிட்டான். நிறை மாத கருவைச் சுமந்த கருப்பைப் போல் மனம் கனத்துப் போனது. அறுவை சிகிச்சை முடிந்ததும் மொழியின் நினைவுகள் அண்டத்தில் சென்று கலந்தது. காற்றாய் அவனை வருடியது. அவனின் பெயரை செவியில் ஏலமிட்டுக் கொண்டே இருந்தது. பரிசுத்தமான அன்பை கொண்டவள் இவனின் நினைவுகளையும் அண்டத்திற்குள் கலக்க விட்டாளோ. அவனும் சில கணங்கள் நினைவுகள் தப்பியதுபோல் இருந்தது.
மொழி வந்து சிரித்தாள். அவனுடன் உரையாடினாள். அவன் பேசுவது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள். இன்னும் பேசும்படி ஊக்குவித்தாள். ஒரு செவிலி வந்து எழுப்பியதும் நினைவு திரும்பினான்.
“டாக்டர் வந்து பார்க்க சொன்னாங்க” என்று கூறிவிட்டு சென்றாள் அவள்.
மைத்ரேயன் முன் நேத்ரன் அமர்ந்திருந்தான். தேவாவும் கைதாகிவிட்டான். அவன் நிறுவனத்தில் நடக்கும் முறைகேடுகள் அனைத்தையும் கண்டறிந்து, நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். இதையறிந்த மைத்ரேயன் அதிர்ச்சியாகவில்லை. அவன் எதிர்பார்த்தது போல் தான் இருந்தான். ஆனால் நற்பவி இந்த அளவிற்கு நுணுக்கங்கள் எழுதி வைப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
“மைத்ரேயன்.. ஏன் இப்படி செஞ்சீங்கன்னு உன் பக்க நியாயம் கேட்க எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. ஆனா கேக்கணும். சட்டத்தின் கட்டாயம் அது. அதனால் கேக்குறேன். சொல்லு.. ஏன் இப்படி செஞ்ச?”
“எனக்கும் உங்ககிட்ட சொல்லணும்னு தோணல. ஆனா இதைக் கேட்டு நீ கொஞ்சம் வருத்தப்படு. என்னால் முடிஞ்ச அளவு உன்னை வருத்த வேண்டாம். பணம் வேணும்னு நினைச்சு செஞ்சது தான். ஆனா தேவாவைப் பழிவாங்க எனக்கு வேற வழி தெரியலை. எப்படியும் தேவா என்னை கொன்னுடுவான். இல்லை செத்துப் பிழைச்சு வந்த நான் எத்தனை நாள் உயிருடன் இருப்பேன்னு தெரியாது. மொழியும் நிரண்யாவும் என்னோட நினைவுகளை சுமக்க தகுதியானவுங்க கிடையாது. அதனால் நற்பவியைத் தேர்ந்தெடுத்தேன். ஆனா அவ என்னைவிட திடமான மனதுடன் இருந்தது எனக்கு எதிராக திரும்பிடுச்சு. எப்படி பார்த்தாலும் எனக்கு லாபம் அஞ்சு வருஷம். தேவாவுக்கு நஷ்டம் அவனுடைய வாழ்க்கை. என்னை வலிக்க வலிக்க அடிச்சவனை அடிக்கணும்னு நினைச்சேன். ஆனா அதை இப்போ நீ செய்ய போற. யார் செஞ்சா என்ன. எனக்குக் காரியம் ஆனா சரி” என்றான்.
நேத்ரனின் கடமை முடிந்தது என்றுபோல் அவனின் வாக்கு மூலத்தை பதிவு செய்து சென்றுவிட்டான்.
நிரண்யாவும் நற்பவியும் நினைவு திரும்பினர். நிரண்யாவிற்கு ஒன்றுமே நினைவில் இல்லை. ஆனால் நற்பவிக்கு அவள் தலையில் அடிப்பட்டதிலிருந்து சில விடயங்கள் நினைவில் இருந்தது.
கட்டிலில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தவள் அருகில் நேத்ரன் வந்தான். அவன் நிச்சயம் சண்டையிடுவான் என்றே நினைத்திருந்தாள் நற்பவி. ஏனெனில் அன்று அவனின் பேச்சைக் கேட்காமல் சென்றாளே. நிச்சயம் அனைத்திற்கும் காரணம் நீதான் என்று அவளிற்கு பாடம் எடுப்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் நேத்ரன் அவளின் அருகில் அமர்ந்து அவளின் கைகளைத் தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டான்.
“நவி.. ரொம்ப யோசிக்காத. உன்னைத் திட்ட வரல. இனிமே உன்னைத் திட்டவும் மாட்டேன். நீ இந்த வேலையை எவ்ளோ நேசிக்கிறன்னு எனக்கு நல்லா புரியிது. உன் மனதின் திடம் எவ்வளவுன்னு நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன். உண்மையா உனக்கிருக்கும் திடம் எனக்கிருக்கான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்வேன். அ ஐம் நோ மோர் எ செண்டிமெண்ட்டல் ஃபூல்” என்று கூற, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் அவள்.
அவனிற்கு எப்பொழுதும் ஒரு எண்ணம் உண்டு. உடல் வலுவிலும் சரி, மன வலுவிலும் சரி, பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் இல்லை என்று. அது தவறும் இல்லை. நம் சமுதாயத்தின் கட்டமைப்பும் அப்படித்தானே. ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்கும் உண்டு என்பதற்கு நற்பவி ஒரு சான்று. அதை நன்றாக உணர்ந்து கொண்டான் இன்று.
இனி இவர்களின் நீதி பயணம் இனிதே தொடரட்டும்.
மொழியின் வீட்டை வாங்கினான் கீதன். சில மாதங்களில் அங்கு சென்று குடியேறினான்.
“கீதன்.. எல்லாரும் இந்த வீட்டைப் பத்தி தப்பு தப்பா சொல்றாங்களே. எனக்குப் பேய் பிடிச்சிடுச்சுன்னுலாம் சொல்றாங்க. உண்மையா. அப்புறம் ஏன் இந்த வீட்டை வாங்கினோம். எனக்குப் பயமா இருக்கு கீதன்” என்றாள் பாவமாக.
அவளிடம் மொழியின் கடிதம் கொடுத்து அனைத்தையும் விளக்கினான் கீதன். “உண்மையில் ஆத்மா இருக்குன்னா, மொழியின் ஆத்மா இந்த வீட்டில் இருக்குன்னா, நாம ரெண்டு பேரும் ரொம்பவே நல்லாயிருப்போம் நிரு. ஏனா நீயும் நானும் நல்லாயிருக்கணும்னு நினைக்கிற முதல் ஆத்மா அவளா மட்டும்தான் இருக்க முடியும். பொறாமைப் பிடித்த மனிதர்களைக் காட்டிலும் ஆத்மா கொடியது இல்லை நிரு” என்று கூறி, நடந்தவைகளை சுருக்கமாக அவளிடம் கூறினான். அவளால் எதையும் நம்ப முடியவில்லை. ஆனால் நம்ப வேண்டுமே. இந்த இடைப்பட்ட மூன்று மாதங்கள் அவள் வாழ்வில் விடுபட்ட பக்கங்களாக இருக்கிறதே. அதை மொழி நிரப்பியிருக்கிறாள், இவள் அறியாமலே என்பதுதான் விந்தை.
என்னதான் சிந்தித்தாலும் மொழியை அவளால் அவளுக்குள் உணர முடியவில்லை. ஆனால் மொழியாய் அவள் எழுதிய கடிதத்தை ஆயிரம் முறை தடவியிருப்பாள். தன் கணவனின் தயாள குணம் நினைத்து பெருமைக் கொள்வதா, இல்லை அவனின் பொறுமை கண்டு வியப்பதா என்று திண்டாடினாள் அவள். வேறு ஒருவன் அவனிடத்தில் இருந்திருந்தால், மொழியும் இல்லாமல் போயிருப்பாள். நிரண்யாவும் இல்லாமல் போயிருப்பாள். இருவரையும் மீட்டிருக்கிறானே. நிம்மதியில்லாமல் தவித்த மொழிக்கு ஏதோ ஒரு வகையில் தன் உடல் நிம்மதியை அளித்திருக்கிறது என்பதை அறிந்து அவளின் விழிகளும் நிரம்பியது.
மொழியின் நினைவுகளுடன் அந்த வீட்டில் அவர்களின் வாழ்வும் இனிதாக தொடங்கியது. மொழியின் மறைவு இருவருக்கும் வலியைத் தந்தாலும், அவர்களின் நினைவில் நீக்கமற நிறைந்திருந்தாள் அவள். இவர்களின் வாழ்விற்கு முகவரியாகிப் போனாள் மொழி.
இன்பனுக்குக் குழந்தைப் பிறந்து சில மாதங்கள் முடிந்திருந்தது. கீதன் நிரண்யாவை அழைத்துக் கொண்டு சென்றான் அங்கு.
இன்பனுக்கு நிரண்யாவைக் காண அச்சமாக இருந்தது. ஆனால் அவளுக்கு குணமாகிவிட்டது என்று கூறியே அழைத்துச் சென்றான் கீதன். மொழியின் முதல் குழந்தையை அவளின் அன்னை அழைத்து வந்திருந்தார். இன்பனிற்கும் வித்யாவிற்கும் பிறந்த குழந்தையை போற்றிவிட்டனர் அவர்கள் வீட்டின் ஆட்கள். மொழியின் குழந்தை அங்கு ஆதரவில்லாமல் வளர்ந்தது. அதைக் கண்ட நிரண்யாவிற்கு மனம் தாங்கவில்லை.
மொழியின் அன்னையிடம் சென்றவள், “எனக்கு இந்த குழந்தையைத் தத்துக் கொடுங்க” என்று உரிமையாக கேட்க, சபையே சமைந்து நின்றது. அதற்கு காரணம் அவளின் கோலம். அவளும் மேடிட்ட வயிற்றுடன் இருந்தாள். குழந்தை இல்லாதவர்கள் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டே அவள் கேட்பது அங்குள்ளவர்களுக்கு அபத்தமாக தெரிந்தது.
காரணம் என்னவென்று அவளுக்கும் கீதனுக்கும் மட்டுமே தெரியும். மொழியின் அன்னையிடம் தனியே பேசி சம்மதம் வாங்கி விட்டாள் நிரண்யா. இன்பனுக்கு இதில் பெரிதாக ஆட்சேபனை இல்லை. அதனால் குழந்தையை வாங்கிக்கொண்டே வந்தாள் நிரண்யா.
“உன்னால முடியுமா நிரு” என்றான் அந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டே.
“நம்மால் வளர்க்க முடியும் கீதன். நமக்கு நிச்சயம் பெண் குழந்தைதான் பிறக்கும். நீங்க மொழின்னுதான் பேர் வைக்கப் போறீங்க. இவளை மொழியோட மனசு தேடிருக்குமே. அதனால் இவ நம்மகிட்டே இருக்கட்டும். மொழி நமக்கு பிறக்கும்போது ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கட்டும். அம்மாவையும் பிள்ளையையும் சேர்த்து வச்ச புண்ணியமும் நம்ம பிள்ளைக்குப் போகட்டும். மொழி வாழாத வாழ்க்கையை அவள் வாழட்டும்” என்று அவள் கூற, அவனின் மனம் மகிழ்ச்சியில் கனத்துப் போனது. வழக்கமாக துக்கத்தில் தான் மனம் கனக்கும். ஆனால் வெகு சில தருணங்களில் மகிழச்சியிலும் மனம் கனத்துப் போகும். அந்த தருணம் நம் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருக்கும் அல்லது நம் வாழ்வின் திருப்புமுனையாக இருக்கும் அல்லது நம் வாழ்வின் ஏக்கங்களாக இருக்கும்.
புழுவாய் கூட்டுக்குள் இருந்த பட்டாம்பூச்சி வெடித்து வண்ணத்துடன் வானில் பறக்கும் பொழுது இருக்கும் வலி மகிழ்ச்சியானது. பிரசவம் முடிந்து, குழந்தையின் அழுகுரல் கேட்கும் பொழுது வழியும் கண்ணீர் கனமானது. மனதில் அடைத்து வைத்திருக்கும் அன்பு மடை திறந்த வெள்ளமாய் வெளி வரும்பொழுது உள்ள உணர்வு கனத்தது. இப்படி ஒரு மனநிலையில்தான் கீதன் இருந்தான்.
நிர்ணாயவின் இந்த முடிவு நாடகத்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் மொழிக்கு செய்யும் நியாயமாகவே நான் பார்க்கிறேன். கதையின் ஆசிரியராகிய நான் வழங்கிய பொயட்டிக் ஜஸ்ட்டிஸ்.
நிரண்யாவிற்கும் குழந்தைப் பிறந்தது. அவர்கள் நினைத்தது போல் பெண் குழந்தைதான். மொழி என்றே பெயரிட்டனர்.
நற்பவியையும் நேத்ரனையும் அழைத்திருந்தான் கீதன். இருவரும் குழந்தையைப் பார்க்க வந்தனர். அவர்கள் புதமணத் தம்பதியராக வந்திருந்தனர்.
“வாங்க மேடம்.. வாங்க சார்” என்று கீதன் அழைக்க, நற்பவி கோபம் கொண்டாள்.
“கீதன்.. எத்தனை முறை சொல்றது. இப்படி கூப்பிட வேண்டாம்னு. பேர் சொல்லியே கூப்பிடுங்க” என்றாள் அவள்.
மொழியின் வீட்டை அவன் பெயருக்கு வாங்கவும், குழந்தையைத் தத்தெடுக்கவும் பெரிதும் உதவினாள் நற்பவி. கீதனும் நிரண்யாவும் அவளிற்கு பேராச்சரியம்தான். எப்படி அவர்களால் இப்படி சிந்திக்க முடிகிறது என்று லட்சம் முறை வியந்திருப்பாள் நற்பவி. அதைக் கூறியே நேத்ரனின் காதை செவிடாக்கி விட்டாள் என்று நேத்ரன் கிண்டலாக உரைப்பதுண்டு.
மொழியை உணர்ந்த இருவரும் இது பெரிய காரியமில்லை என்றே பேசினர்.
“நற்பவியோட மனோதிடம் முன்னாடி நான் ஒண்ணுமே இல்லை” கீதன்.
“ஆனா உங்க தெளிவும் பொறுமையும் எனக்கு இல்லை கீதன்” நற்பவி.
“சரி.. போதும்.. போதும்.. இதைக் கேட்டு டயர்டாயிடுச்சு எனக்கு” என்று கிண்டலடித்தான் நேத்ரன்.
“சார்.. உங்களோட மூளையும் இம்போர்டட் மூளைதான். இல்லைனா இந்த கேஸை உடைச்சிருக்க முடியாது” கீதன்.
“போதும்.. போதும்.. மைத்ரேயன் மைண்ட் அப்லோட் பண்ணதும், மைண்ட் டவுண்லோட் பண்ணதும். இனி இம்போர்ட் வேற செய்யணுமா.. யாருக்கும் ஐடியா கொடுத்துடாத. என்னால இனி பைத்தியமா அலைய முடியாது. நம்ம நாலு பேரை வச்சு இங்கிலீஷ் படமே எடுத்துட்டான் அவன்” என்றான் விளையாட்டாக.
நற்பவி, நேத்ரனைப் பொறுத்தளவு, மைத்ரேயன் செய்தது தவறாய் இருந்தாலும், கீதனுடைய மனதின் சிறு பாகம், அவனை சரி என்றே கூறியது. அது மொழியின் மேல் இருந்த அன்பினால். அன்பு எப்பொழுதும் சரி தவறுகள் பிரித்தறியும் தன்மை இழந்துவிடுமே. அவன் மைத்ரேயனை நாயகனாகவே பார்த்தான்.
மொழி, மொழி என்ற விளிப்பினிலே அந்த வீடு முழுக்க நிறைத்திருந்தாள் மொழி. வருடங்கள் உருண்டோடியது.
எட்டு வயது மொழி பலகணியிலிருந்து வான் மகனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். அவளின் பொக்கை வாய் சிரிப்பின் முன் மிணுக்கும் விண்மீனும் தோற்றுவிடும். பூத்துக்குலுங்கும் விண்மீன்கள், அவள் விழியின் பிரகாசத்திற்கு ஈடாகுமா என்ன?
வெட்டி வைத்த நிலவாய் நுதல், கதை சொல்லும் விழிகள், வழுக்கி விழ வைக்கும் கன்னக்குழி, புன்னகைப் பூக்கும் அதரங்கள், கொஞ்சி பேசிடும் தாடை என்று அரிதாரம் பூசாத அழகியாய் இருந்தாள் அவள். அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே. அவள் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. அவள் முகத்தில் பட்டுத் தெறித்த நிலவின் ஒலியில், இன்னும் பத்து உலகிற்கு வெளிச்சம் பாய்ச்சலாம்.
கீதன், நிரண்யா வாழ்வின் அச்சாணி இவள். இவள் வாழ்வின் அச்சாரம் அவர்கள். அற்றைத் திங்களில் இவளுக்கு சூன்யமாய் இருந்த ஓர் இரவு, இன்று ஏகாந்தமாய் இருந்தது.
“அப்பா.. அந்த நிலா ஏன் இவ்ளோ அழகா இருக்கு” என்றாள் கீதனிடம்.
“என் மகளின் சிரிப்பில் கொஞ்சம் கிள்ளிப் சென்றதால்” என்றான் கீதன்.
“அப்போ நான் சிரிச்சா நிலா அழகா இருக்குமா அப்பா.”
“நிச்சயம் டா.. நீ சிரிப்பதால்தான் நிலா அழகா இருக்கு.”
“எல்லாருக்கும் இந்த நிலா அழகா இருக்குமா அப்பா.”
“கண்டிப்பா..”
“அப்போ நான் சிரிச்சுட்டே இருக்கேன்” மொழி.
அவளை இறுக்கி அணைத்திருந்தான் கீதன்.
அந்தி மாலையை வழித்துக் துடைத்து விழித்தெழுந்தது அந்தகாரம். மனம் மகிழ்ச்சியாய் இருந்தால் இருண்மையும் ஏகாந்தமே. வானில் உள்ள மேடை அரிதாரம் பூசி அலங்காரத் திட்டாய் காட்சியளித்தது. கண் விழிக்கும் வின்மீண்கள், கால் முளைத்த மேகக் கூட்டங்கள், தெவிட்டாத நிலவென்று வின் மேடை விடியலை அரங்கேற்றும்வரை, அலங்காரப் பாவையாய் பவனி வந்தாள்.
அண்டத்தின் தொடக்கமும் முடிவும் ஒரு புள்ளியில் தான். இந்த கதையின் தொடக்கமும் முடிவும் ஒரே பத்தியாக இருக்கட்டும் என்று அந்த ஓர் இரவில் கதையை முடிக்கிறேன்.
***********
நம் மனதின் திடம் நம்மை பல இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நம்மைக் காக்கும் என்பதே உண்மை. அதற்கு நாம் அதை பழக்க வேண்டும். இந்த கதையில் கூறப்பட்ட அனைத்தும் என் கற்பனையே. மைண்ட் அப்லோடிங், மைண்ட் டவுண்லோடிங் என்பதெல்லாம் அறிவியலின் அதீத கற்பனைகள். இந்த நூற்றாண்டில் இவையெல்லாம் இல்லை. ஆனால் இனி வரலாம்.
மனம் எப்பொழுதும் ஒரு கழிவிரக்கம் தேடும் என்பதே உண்மை. மனம் அடுத்தவரின் இன்னல் கண்டு வருத்தம் கொள்ளவே நினைக்கும். எடுத்துக்காட்டாக ஆழ்துளை கிண்ற்றில் மாட்டி இறந்த குழந்தை, கற்பழிக்கப்பட்டு இறந்த பெண் என்று இவர்களைப் பற்றிய செய்தியையே அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்ளும். அதையே திரும்ப திரும்ப பேசும்படி கட்டளையும் இடும். இந்த மனதின் எண்ணம் புரிந்து கொண்டே ஊடகங்கள், குறிப்பிட்ட செய்திகளை திரும்ப திரும்ப நம் கண் முன் காட்சிப் பொருளாக்குகிறது.
ஆழ்துளை கிணற்றில் இருந்து காப்பாற்றப்பட்ட குழந்தை, தன் கற்பை சூரையாடியவனை காவல்துறையில் பிடித்துக் கொடுத்த பெண்கள் என்று செய்திக்கு மற்றொரு பக்கமும் உண்டு. இம்மாதிரி செய்திகள் அனைத்தையும் ஊடகங்கள் ஒரு வரியில் கடந்து சென்றுவிடுகிறது. நாம் ஒரு நொடியில் கடந்து சென்றுவிடுகிறோம். ஏனெனில் எதிர்மறையில் உணர்வுகள் குவியலாக இருக்கிறது. அது எளிதில் மக்கள் மனதைப் பாதித்துவிடும். நேர்மறையில் சுவாரஸ்யம் காட்டுவதில்லை மனித மனம்.
அதற்காக சமூக அவலங்களை காட்சிப்படுத்தல் வேண்டாம் என்று கூறவில்லை நான். அவலங்கள் மக்களுக்கு தெரிய வேண்டும். அந்த அவலங்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டவர்கள் மனதில் பதிய வேண்டும்.
தெரிந்து கொள்வதற்கும், மனதில் பதித்துக் கொள்வதற்கும் வித்யாசம் இருக்கிறது. பின்னது மனதில் பதியும் போது மனதில் ஒரு வலு தோன்றும். இந்த பிரச்சினை வந்தால் இப்படியெல்லாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று மனம் கணக்குப் போடும். அப்படி ஒரு சூழல் வாழ்வில் வரும்போது, மனம் திடமாக இருந்து தன்னைக் காக்கும் ஆவணங்கள் அனைத்தும் செய்யும். முன்னது மனதில் பதிந்தால், அந்த நிகழ்வில் உள்ள உணர்வான பயம் மட்டுமே மனதில் அப்பிக் கொள்ளும்.
ஆக மனம் பயந்து ஒடுங்கி இருத்தல் கூடாது. மனம் உன்னைக் கேள்வி கேட்க வேண்டும். நீ மனதைக் கேள்வி கேட்க வேண்டும். சில சமயங்களில் நண்பர்களாய், சில சமயங்களில் எதிர்கட்சியாய்.
மகிழ்ச்சியை மட்டுமே ஆராதிக்கும் மனம் வேண்டாம். துன்பத்தையும் தாங்கும் மனம் வேண்டும். இதுவும் கடந்து போகும். அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி. துக்கமாக இருந்தாலும் சரி. அது நிச்சயம் கடந்து போகும். அதை கடந்து போவதே வாழ்க்கை. நாம் வாழும் இந்த குறுகிய காலத்தில் வாழ்க்கை நமக்கு பல விசித்திரங்கள் வைத்திருக்கிறது. ஒவ்வொன்றையும் வாழ்ந்து பார்க்கலாமே.
திடமான மனதுதான் வேண்டும் என்பது இல்லை. தெளிவான மனம் இருந்தால் போதும். வாழ்வு கசந்து போயிருந்தாலும், அதில் நாம் நினைத்தால் சர்க்கரை சேர்க்கலாம்.
மனமே!
ஆயிரம் முறை அடிப்பட்டாலும் மாண்டு விடாதே!
மீண்டும் மீண்டெழு!
துவண்ட மனமே எழுச்சியின் பிறப்பிடம்!
காத்திரு! எழுச்சியாய் உரு பெரும்வரை!
மீண்டு வா! மீண்டும் ஒரு சகாப்தம் படைப்போம்!
என்னோடு நீயிருந்தால் உலகமே என் வசம்!
முற்றும்…
இந்த கதைக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றிகள். உங்கள் விமர்சனங்களுக்கு தனித்தனியே பதிலளிக்க இயலவில்லை. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை இந்த இறுதி பதிவில் கேளுங்கள். என்னிடம் ஏதேனும் கேட்க வேண்டும் என்றாலும் கேட்கலாம். அனைத்திற்கும் பதில் எழுதுகிறேன் ஒரு பதிவில்.
மீண்டும் சந்திக்கலாம் ஆரல் கதையில். புத்தாண்டு பிறக்கும் பொழுது வர்மன் நிச்சயம் வருவான் என்று கூறி விடை பெறுகிறேன்.
Seriously sema super ah irundhuchu Sogam ana time la eppadi yodikanum irukanum kooda solirikinga
nandri ma.. ippo dhan comment pathen