Loading

உடனே,”இதைக் கேட்கவே எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்குடா! அந்தப் பொண்ணு உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு வந்ததில் இருந்து அவளோட கண்ணில் ஏதோ ஒரு சோகம் இருந்ததைப் பார்த்திருக்கேன். அதை உங்க அம்மாகிட்டே சொல்லவும் செஞ்சேன். ஆனால், இங்கே வந்தவுடனேயே அவகிட்டே கேட்க வேண்டாம்னுக் காத்திருந்தோம். ஆனால், உனக்கும், அவளுக்குமே இயல்பானப் பேச்சு வார்த்தை இல்லைன்றதை அப்பறமாகத் தான் நாங்கப் புரிஞ்சுக்கிட்டோம் டா. நீங்க ரெண்டு பேரும் சாதாரணமாகப் பேசுனதுக்கு அப்பறம் உங்கிட்ட எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சிக்க வெயிட் பண்ணோம்!” என்று மகனிடம் விவரித்தார் அகத்தினியன்.

 

“ம்ம். எனக்கும் அப்போ உங்களோட மனக் கவலை புரிஞ்சுச்சு ப்பா. அதுக்காக நம்மகிட்ட ஒதுங்கிப் போகிற பொண்ணைப் பிடிச்சு இழுத்து வைக்கிறது தப்பு தானே?” என்றான் அற்புதன்.

 

“நீ சொல்றது கரெக்ட் தான் டா” என்று அவன் கூறியதை ஒப்புக் கொண்டவரோ,

 

“ம்ஹ்ம். நீங்க ரெண்டு பேரும் இனிமேலாவது நிம்மதியான வாழ்க்கையை வாழனும்” என்று அவனிடம் உரைத்தார் கீரவாஹினி.

 

“கண்டிப்பாக ம்மா, ப்பா. எங்களுக்கு இடையில் எந்தப் பிரச்சனையும் இல்லை, இதுக்கப்புறமும் வரவும் வராது! அவளுக்கு வேற ஒரு பிராப்ளம் இருந்துச்சு. என்கிட்ட இப்போ கொஞ்ச நாளாகத் தான் அதைப் பத்தி முழுசா ஷேர் பண்ணிட்டு இருக்கிறா! அதைக் கேட்டதுக்கு அப்பறமாகத் தான் நானுமே அவளைப் புரிஞ்சிக்க ஆரம்பிச்சேன்! இனிமேல் எல்லாமே நல்லா நடக்கும்!” என்று தன்னுடைய பெற்றோருக்கு வாக்குறுதி அளித்தான் அற்புதன்.

 

“அப்படியா? எங்க மருமகளுக்கு என்னாச்சு டா? என்னப் பிரச்சினையாம்? எதுவாக இருந்தாலும் எங்ககிட்டேயும் சொல்லி இருக்கலாம்ல? அது இப்போ சரி ஆகிடுச்சா?” என்று அவனிடம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தார் அகத்தினியன்.

 

அவருக்கும், அவரது மனைவிக்கும் தங்களுக்கு மகள் இல்லை என்ற குறையை யக்ஷித்ராவின் வரவால் நிவர்த்தி செய்து கொள்ள முடிவெடுத்து அவள் தங்கள் வீட்டிற்கு மருமகளாக வந்ததில் இருந்து அவளை நன்றாக கவனித்துக் கொண்டு இருந்தார்கள் அவர்கள் இருவரும்.

 

அதனால், அவளுக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்றதும் தங்களது மருமகளுக்காகத் துடித்துப் போய் மகனிடம் இத்தனை வினாக்களை எழுப்புகிறார்கள் அகத்தினியன் மற்றும் கீரவாஹினி.

 

“அச்சோ! பொறுங்க! முதல்ல நீங்க ரெண்டு பேரும் என்னைப் பேச விடுங்க!” என அவர்களை அமைதிப்படுத்தி விட்டு,

 

“அவளுக்கு ஃபிஸிக்கல் அண்ட் மென்டல் ஹெல்த் இரண்டிலேயும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவளுக்குக் கடந்த காலத்தில் தான் ஒரு பிராப்ளம் இருந்துச்சு. நான் அதையும் அவகிட்டே கேட்டுச் சரி பண்ணிட்டுத் தான் இருக்கேன். இனிமேலும் அவளை நான் நல்லா பார்த்துக்குவேன். நீங்க கவலைப்படாதீங்க! நான் இப்படி உங்ககிட்ட சொன்னதை அவகிட்டே கேட்றாதீங்க! ப்ளீஸ்!” என்று தன் தாய், தந்தையிடம் கேட்டுக் கொண்டான் அற்புதன்.

 

“சரிடா. எங்க மருமக கிட்டே நாங்க இதைப் பத்தி எதையும் கேட்கவே மாட்டோம்” என்று அவனிடம் உறுதியாக கூறி விட்டனர் அவனது பெற்றோர்.

 

அதற்குப் பிறகுத் தன் அறைக்குச் சென்று, தனது மனைவிக்குக் கொடுப்பதற்காகத் தான் வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருளை எடுத்துப் பார்க்கத் தொடங்கியவனோ,

 

அதை அவளது கையில் ஒப்படைக்கும் வரையிலும் இப்படித் தான் நிலை கொள்ளாமல் இருக்கப் போகிறோம் என்பதை உணர்ந்து தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டான் அற்புதன்.

 

இதையெல்லாம் அறியாதவளோ, தன்னுடைய தோழிக்காகத் தேடித்தேடி வாங்கி வைத்திருந்தப் பரிசுகளை அவளிடம் கொடுக்கும் நேரம் வந்து விட்டதை உணர்ந்து,”நீங்கப் பேசிட்டு இருங்க. நான் வந்துட்றேன்” என்று மற்ற மூவரிடமும் கூறி விட்டுத் தன் அறைக்குப் போய் அந்தப் பரிசுகளை எடுத்து வந்து,”நான் இதையெல்லாம் உனக்காகப் பார்த்துப் பார்த்து வாங்கினேன் நிவி. வாங்கிப் பிரிச்சுப் பாரு” எனக் கூறி அவற்றைத் தன்னுடைய தோழியிடம் நீட்டினாள் யக்ஷித்ரா.

 

அந்தப் பொருட்களை வாங்கிப் பார்த்த நிவேதிதாவின் விழிகள் இரண்டும் அதுவாகவே ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்தது.

 

ஏனென்றால், அந்த இரண்டு பரிசுப் பொருட்களும் அவளுடைய மனதுக்கு நெருக்கமானவை என்று கூறலாம்.

 

அதனால் தான், இந்தளவிற்கு உணர்ச்சி வசப்பட்டுப் போய் நின்று விட்டாள் நிவேதிதா.

 

அந்தப் பரிசுகள் என்னவென்றால், அவளுக்கு மிகவும் மனதுக்குப் பிடித்த முருகக் கடவுளின் சிலையும், அவர்களது சிறு வயதில், தங்களுக்கு இடையே இருக்கும் வலுவான நட்பின் காரணமாக ஒரு சில வாழ்த்து அட்டைகளை ஒருவருக்கொருவர் வாங்கிக் கொடுத்து மகிழ்வார்கள்.

 

அந்தப் பழக்கம் தான், தங்களது பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களிலும் நிவேதிதா மற்றும் யக்ஷித்ராவிற்கு இருந்த மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்றாகும்.

 

தன் தோழியின் முகத்தில் அளவுக் கடந்த சந்தோஷத்தையும், பெருமிதத்தையும் கண்ட பிறகுத் தான், தனது பரிசுகள் யாவும் அவளுக்குப் பிடித்து விட்டது என்பதை அறிந்து கொண்டதும் அவளைப் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் யக்ஷித்ரா.

 

அவளை ஏறிட்டவளோ,”இந்த ரெண்டு கிஃப்ட்ஸ்ஸூமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! தாங்க்யூ சோ மச் ம்மா!” என்று அவளிடம் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கவும்,

 

“ஹேய்! பரவாயில்லை ம்மா. நான் தந்திருக்கிற கிஃப்ட்ஸ் உனக்குப் பிடிச்சு இருக்குல்ல? அதுவே எனக்குப் போதும்!” என்று தன்னிடம் கூறியவளை அணைத்துக் கொண்டாள் நிவேதிதா.

 

அவர்களது நட்பின் சிறப்பைக் கண்ட மீனாவும், யாதவியும் நெகிழ்ந்து போனார்கள்.

 

அதன் பின்னர், தனது கண்களைச் சுத்தப்படுத்திக் கொண்டவளோ,”எங்கே நிறைய பேர் சொல்றா மாதிரி நம்மளோட கல்யாணத்துக்கு அப்பறம் நம்ம ஃப்ரண்ட்ஷிப்பைத் தொடர முடியாதோன்னு நாம படிக்கிற காலத்தில் யோசிச்சுப் பார்த்து எவ்வளவு கஷ்டப்பட்டோம்? ஆனால் இப்பவும் நாம க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் ஆக இருக்கோம்ன்றதை நினைக்கும் போதே ரொம்ப பெருமையாக இருக்கு!” என்று அவளிடம் பெருமிதத்துடன் கூறினாள் நிவேதிதா.

 

“ஆமாம் மா. எனக்கும் உன்னைப் போலப் பெருமையாகத் தான் இருக்கு. நீயும், நானும் கொஞ்ச நாளாகப் பேசிக்காமல் இருந்திருந்தாலும் நான் அனுப்பிய ஒரே ஒரு மெசேஜ் அண்ட் நீ எனக்குப் பண்ணிய காலே போதும். நாம ரெண்டு பேரோட நட்பை எப்பவும் இழக்காமல் இருக்கலாம்ன்ற நம்பிக்கை எனக்கு வந்துருச்சு!” என்றுரைத்தாள் யக்ஷித்ரா.

 

அதை ஆமோதிக்கும் விதமாக மலர்வாகப் புன்னகையை உதிர்த்து விட்டு அவள் கொடுத்தப் பரிசுப் பொருட்களைத் தன் பயணப் பையினுள் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டாள் அவளது ஆருயிர்த் தோழி.

 

“நானும் உனக்குப்‌ பிடிச்ச ஒரு பொருளைத் தான் உனக்காக வாங்கிட்டு வந்திருக்கேன்!” என்று அவளிடம் சிரித்த முகத்துடன் கூறவும்,

 

அதைக் கேட்டவுடன்,”அப்படியா? எங்கே காட்டுப் பார்ப்போம்” எனத் தோழியிடம் வினவினாள் யக்ஷித்ரா.

 

உடனே தன்னுடைய பயணப் பையிலிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் தந்தாள் நிவேதிதா.

 

அதைப் பார்த்தவளுக்கு, அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. ஏனெனில், அவளும் தன்னைப் போலவே தனக்குப் பிடித்தமானப் பொருளைத் தனக்கான பரிசுப் பொருளை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாளே என்ற உவகை அவளது கண்களில் மிளிர்ந்தது.

 

அது வேறொன்றும் இல்லை, யக்ஷித்ராவிற்கு மிகவும் பிடித்தமான புத்தர் சிலையாகும்!

 

அவள் எப்பொழுதும் தான் சாந்தமாக இருப்பதை விரும்புவாள் என்பது அவளது தோழிக்குத் தெரியும். அதனால் தான், அவளுக்கு இந்தச் சிலையை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறாள் நிவேதிதா.

 

“ம்மா! யாது! இது எவ்வளவு அழகாக இருக்குப் பாருங்களேன்!” என்று அந்தச் சிலையைத் தன்னுடைய தாய் மற்றும் தங்கையிடமும் காட்டிப் பூரித்துப் போனாள் யக்ஷித்ரா.

 

“சூப்பராக இருக்கு ம்மா!” என்றார் மீனா.

 

அதை வாங்கிப் பார்த்து விட்டு,“இதைப் பார்க்கவே கியூட் ஆக இருக்கு!” என்று கூறி விட்டு அந்தச் சிலையைத் தமக்கையிடம் ஒப்படைத்தாள் யாதவி.

 

அதன் பிறகுத், தோழிகள் இருவரும் தாங்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்ட பரிசுப் பொருட்களைப் பற்றிய பாராட்டு வார்த்தைகளை மற்றவரிடம் பகிர்ந்து கொண்டனர்.

 

மாலை நேரம் ஆகி விட்டதை உணர்ந்ததும்,”நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துருச்சு யக்ஷி” என்று தன் தோழியிடம் அறிவித்தாள் நிவேதிதா.

 

“அதுக்குள்ளேயா?” என்று சொல்லி விட்டுக் கடிகாரத்தைப் பார்த்து, அவள் சொன்னது உண்மை தான் என்பதைப் புரிந்து கொண்டாள் யக்ஷித்ரா.

 

“ஆமாம். நான் போய் என்னோட லக்கேஜை எடுத்து வைக்கிறேன்” என்று அவர்கள் மூவரிடமும் உரைத்து விட்டு அறையினுள் வைத்திருந்த தனது பயணப் பையினுள் தன்னுடைய உடைமைகளை எடுத்து வைக்கத் தொடங்கியவளிடம்,

 

“இந்த டிஃபன் கேரியரில் சாப்பாடு இருக்கு ம்மா. வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கோ” என்ற தோழியின் தாயிடம்,

 

“எதுக்கு ம்மா எனக்காக இவ்வளவு சிரமப்பட்றீங்க?” என்று அவரிடம் குறைபட்டுக் கொண்டாள் நிவேதிதா.

 

“எனக்கு இது பெரிய வேலை இல்லை ம்மா. அதுவுமில்லாமல், பஸ்ஸில் டிராவல் பண்ற நேரத்தில் நீ என்ன வாங்கிச் சாப்பிட முடியும்? அப்படியே சாப்பிட்டாலும் அது கடைச் சாப்பாடாகத் தானே இருக்கும். அதனால் தான், நானே உனக்குச் சாப்பாடு கட்டித் தர நினைச்சேன். எடுத்துட்டுப் போடா ம்மா” என்று அவளிடம் பாசமாக கூறி அந்த உணவுப் பாத்திரத்தைக் கையோடு கொண்டு செல்ல ஒப்புக் கொள்ள வைத்து விட்டார் மீனா.

 

தனது தோழி ஊருக்குப் புறப்படும் நேரம் வந்து விட்டதால், தன் கணவனுக்குச் செல்பேசியில் அழைத்து அவனைத் தங்களது இல்லத்திற்கு வரச் சொன்னாள் யக்ஷித்ரா.

 

உடனே அவனும் தன்னுடைய பெற்றோரிடம் அறிவித்து விட்டு மனைவியின் வீட்டிற்குச் சென்று,”ஊருக்குக் கிளம்பியாச்சா ம்மா?” என்று அவளுடைய தோழியிடம் வினவினான் அற்புதன்.

 

“ஆமாம் ண்ணா” என்று அவனிடம் கூறிப் புன்னகைத்தாள் நிவேதிதா.

 

“சரிம்மா. இருங்க. ஆட்டோ பிடிச்சிட்டு வர்றேன். அதில் பஸ் ஸ்டாண்டுக்குப் போகலாம். நானும், உங்க ஃப்ரெண்ட்டும் பின்னாடியே ஃபாலோவ் செய்துட்டு வர்றோம்” என்று அவளுக்கு வலியுறுத்தி விட்டு ஆட்டோவை வரவழைத்தான் அற்புதன்.

 

“சரிங்க அண்ணா” என்றவளோ, மீனாவிடமும், யாதவியிடமும் விடைபெற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள் நிவேதிதா.

 

“ம்மா! நாங்க ரெண்டு பேரும் இவளை விட்டுட்டு வந்துடறோம்” என்று தானும் அவர்களிடம் அறிவித்து விட்டுத் தோழியை ஆட்டோவில் ஏற்றி விட்டுத் தன்னுடைய கணவனின் இருசக்கர வாகனத்தில் ஏறி அவனுடன் பயணம் செய்து பேருந்து நிலையத்தை அடைந்தாள் யக்ஷித்ரா.

 

அங்கே சென்றதும், ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்ட நிவேதிதாவோ, தன்னுடைய தோழி மற்றும் அவளது கணவனிடம்,”அப்போ நான் போயிட்டு வர்றேன்” என்று அவர்கள் இருவரிடமும் உரைக்க,

 

“ம்ம். அடுத்த தடவை உன்னையும், உன்னோட ஃபேமிலி மெம்பர்ஸையும் ரிசீவ் பண்ண வெயிட் செஞ்சிட்டு இருப்பேன்னு ஞாபகம் வச்சுக்கோ நிவி!” என்று அறிவுறுத்தி விட்டு அவளைப் பேருந்தில் ஏற்றி விட்டனர் யக்ஷித்ரா மற்றும் அற்புதன்.

 

“ஷூயர்!” என்று அவர்களுக்கு வாக்கு கொடுத்து விட்டு, அவர்களிடம் விடைபெற்றுப் பேருந்தில் பயணம் செய்யத் தொடங்கினாள் நிவேதிதா.

 

அவளை நல்லபடியாக ஊருக்கு அனுப்பி வைத்து விட்ட நிம்மதியுடன் அந்தக் கணவனும், மனைவியும் வீட்டிற்குச் சென்றார்கள்.

 

“என்னம்மா உன் ஃப்ரண்ட்டைப் பத்திரமாகப் பஸ் ஏத்தி விட்டுட்டு வந்தாச்சா?” என்று தன் மகளிடம் வினவினார் மீனா.

 

“ஆமாம் மா” என்று அவருக்குப் பதிலளித்தாள் அவரது மகள்.

 

“அத்தை! நாங்களும் அப்படியே கிளம்பவா? எனக்கு நாளைக்கு ஆஃபீஸ் இருக்கு” என்று தன் மாமியாரிடம் விண்ணப்பம் வைத்தான் அற்புதன்.

 

“சரிங்க மாப்பிள்ளை. நீங்க ரெண்டு பேரும் காஃபியாவது குடிச்சிட்டுப் போங்க” என்று தன் இளைய மகளின் உதவியுடன் அவர்களுக்காக அந்தச் சூடான பானத்தைத் தயாரித்துக் கொண்டு வந்து அவ்விருவருக்கும் கொடுத்தார் மீனா.

 

அதை வாங்கிப் பருகி முடித்தப் பின்னர் தான் அவர்கள் இருவரும் அங்கேயிருந்து வெளியேறி அற்புதனின் இல்லத்திற்குச் சென்று சேர்ந்தனர்.

 

“வா யக்ஷி” என்று சிரித்த முகத்துடன் மருமகளை வரவேற்றார் அகத்தினியன்.

 

அவரைப் பார்த்துப் புன்னகைத்தவளிடம்,”என்னம்மா அந்தப் பொண்ணு ஊருக்குக் கிளம்பிருச்சா?’ என்று அவளிடம் வினவினார் கீரவாஹினி.

 

“ஆமாம் அத்தை. நாங்க அவளைப் பஸ் ஏத்தி விட்டுட்டுத் தான் வந்தோம்” என்று அவரிடம் தெரிவித்தாள் யக்ஷித்ரா.

 

“அப்படியா சரி! நீங்கப் போய் ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு ரெண்டு பேருமே ஆஃபீஸூக்குப் போகனும்” என்று அவர்களது அறைக்கு அனுப்பி வைத்தார் அவளது மாமியார்.

 

அங்கோ தன் கணவனிடம்,”ஏங்க! எனக்கு நிவி ஒரு கிஃப்ட் கொடுத்திருக்கிறா! அதை உங்களுக்குக் காட்டவா?” என்று அவனிடம் உற்சாகத்துடன் வினவினாள் யக்ஷித்ரா.

 

“பார்றா! நீங்க ரெண்டு பேரும் சொல்லி வச்சா மாதிரி ஒருத்தருக்கொருத்தர் கொடுக்கிறதுக்குக் கிஃப்ட்ஸ் வாங்குனீங்க போலவே? சரி. அது என்னன்னுக் காமி” என்றான் அற்புதன்.

 

அவன் அவ்வாறு கூறியதும், தன்னுடைய கைப்பையில் இருந்து தன் தோழி கொடுத்தப் பரிசுப் பொருளை எடுத்து அவனிடம் தந்தாள் அவனது மனைவி.

 

           – தொடரும் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்