Loading

வானம் – 30

“மணகோலத்துல பார்க்க வேண்டிய உன்னை இப்படி பொணமா பார்க்க வச்சுட்டியே டி” என தலையிலும் முகத்திலும் மாறிமாறி அடித்துக்கொண்டே வாணி அழ அனைவரின் கண்களிலும் நீர் கோர்த்தன.

நல்லசுந்தரமோ முற்றிலும் உடைந்துப் போயிருந்தார். ‘ஒற்றை மகளை இப்படி காவு கொடுக்கவா பாராட்டி சீராட்டி வளர்த்தேன்!’ என மனம் அழ இடிந்துப் போய் அமர்ந்திருந்தவரை கட்டிக்கொண்டு அழுதாள் சரயு.

“அவள எந்திரிச்சு வரச் சொல்லுங்க மாமா… அவள வர சொல்லுங்க மாமா. அவ இல்லாம எப்படி நான் இருப்பேன்!” என்றவளின் அழுகுரலில் அவரது கண்களில் நீர் தேங்க, அவளது தலையை தடவிக் கொடுத்தவரின் பார்வை முழுவதும் ரேவதியின் உடல் மேலேயே இருந்தது.

நேரம் செல்ல அங்கு அழுகுரல்கள் மட்டுமே ஒலிக்க பெரியவர் ஒருவர் நல்லசுந்தரத்தின் அருகே வந்து, “சாயந்திரத்துக்குள்ள நல்ல படியா அனுப்பி வைக்கணும் சுந்தரம். அவசரப்பட்டு வாழ்க்கைய முடிச்சுக்கிட்டாலும் அதுக்கு பண்ண வேண்டிய காரியத்த நம்ம சரியா செய்யணும்ல” என்றார்.

வெற்றுப் பார்வை பார்த்தவரை மேலும் ஏதோ கூற வர அவரைத் தடுத்திருந்தார் முத்துச்சாமி. “நீங்க ஆக வேண்டியத பாருங்க பெரியப்பா. எல்லாத்தையும் நான் கவனிச்சுக்கிறேன்” என பொறுப்புக்களை கையில் எடுத்தவரின் மனமும் பாரமாகியிருந்தது.

ரேவதியின் இறப்பைத் தொடர்ந்து அதற்கான காரணங்கள் வெளிவர தன் மனைவியின் போக்கிலே அனைத்தையும் விட்டதன் பலனை அறிந்தவருக்கு மனம் வலித்தது. அவருக்கு சரயுவும் ரேவதியும் வேறுவேறல்லவே!

என்னதான் வெளிப்படையாக பாசத்தை காட்டிடவில்லை என்றாலும் மனதளவில் இருவரையும் என்றுமே தனித்துப் பார்த்ததில்லை.

சலனமற்ற ரேவதியின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவர் கண்களை இறுக மூடி ஓரிரு நிமிடங்கள் தன்னை சமன்படுத்திக் கொண்டு மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களை பார்க்க சென்றார் முத்துச்சாமி.

இறுதி சடங்கிற்காக அனைத்தும் தயாராக ரேவதியை கட்டிக்கொண்டு அழுத பிரஷாந்தை கண்டவர்களுக்கு அவர்களின் காதலின் ஆழத்தை பறைசாற்றப்பட காலதாமதத்துடன் அவர்களின் காதல் அங்குள்ளவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இறுதி வரை போராடிப் பார்க்காமலே தனது வாழ்வை முடித்துக் கொண்டவளை எண்ணி வருத்தங்கள் மட்டுமே மிதமிஞ்சியது.

இதனை அனைத்தும் சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். அவனும் இப்படியொரு முடிவை எதிர்பார்த்திருக்கவில்லை. சரயுவின் வார்த்தைகள் மூலம் ரேவதியின் காதலை அறிந்தவனால் கண்டிப்பாக அவர்களின் திருமணம் நடந்தேறும் என்றே நினைத்திருந்தான். இருந்தும் சரயுவின் பயமே அவனை இங்கு வர வைத்திருந்தது.

சடங்குகள் அனைத்தும் முடிய ரேவதியின் உடல் தகனத்திற்கு எடுத்துச் செல்லப்பட அவளுடனே செல்ல முற்பட்ட சரயுவை கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டனர்.

இதோ மூன்று நாட்கள் உருண்டோடிவிட்டது. ஆனால் யாரின் முகத்திலும் பொலிவு காணப்படவில்லை. அவரவர் அவரவர் சோகத்தில் திளைத்திருக்க சரயுவும் சம்யுக்தாவும் அங்கிருந்து கிளம்பத் தயாராகினர்.

இந்த மூன்று நாட்களில் சரயுவின் இல்லத்தில் யாரும் யாரோடும் பேசிக்கொள்ள முற்படவில்லை. கோவைக்கு செல்ல தயாராகி வந்தவள் தனது அண்ணனின் அறைக்குச் சென்றாள்.

ரேவதியின் புகைப்படத்தை கட்டி அணைத்தவாறே சுவரோரம் சுருண்டு கிடந்தவனைக் கண்டு கண்களில் நீர் தளும்ப அவனது கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

அவனை இப்படியே விட்டுச் செல்ல மனமில்லை என்றாலும் அதிகமாய் விடைமுறை எடுக்கவும் முடியாத காரணத்தால் புறப்பட தயாராகிருந்தாள்.

“அண்ணா” என்றவளின் குரலில் காற்று தான் வெளியேறியது. “அவ ஏன் இப்படி பண்ணா குட்டிமா, என்னை விட்டு போக எப்படி டா அவளுக்கு மனசு வந்துச்சு!” என்றவனின் வார்த்தைகளில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அவனை அணைத்துக் கொண்டு அழுதவள் பின் தன்னை மீட்டுக்கொண்டு, “நா… நான் காலேஜ்க்கு போகணும் ண்ணா. ஏற்கெனவே நிறைய லீவு எடுத்துட்டேன். இனியும் எடுக்க முடியாது. நீ…” என இடைவெளி விட்டவள்,

“ரேவதி இப்போ நம்மோட இல்ல ண்ணா. இத ஏத்துக்க முடியல தான். ஆனா… என் அண்ணன் எனக்கு வேணும். நீ தைரியமா இருக்கணும் ண்ணா” என்றவளுக்கு மேலே வார்த்தைகள் வர மறுக்க கலங்கி நின்றாள்.

அவளது தலையை வருடி கொடுத்தவன், “போய்ட்டு வா குட்டிமா” என்க, அவளோ ஏதோ கூறவந்து பின் தடுமாற்றத்துடனே நிற்க, “அவள மாதிரி எந்த தப்பான முடிவும் நான் எடுக்க மாட்டேன் டா குட்டிமா” என்றவுடன் அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவளின் பயமும் அதுவாகவே இருக்க அதனை எப்படி தன் அண்ணனிடம் கூறுவது என்ற தயக்கத்திலே தான் நின்றிருந்தாள்.

அவனின் வார்த்தைகளில் சற்று நிம்மதி பிறக்க அங்கிருந்து கிளம்பினாள் சரயு. கிளம்பும் அவளது முகத்தையே தங்கம்மாள் பார்த்துக் கொண்டிருக்க மறந்தும் அவர்புறம் திரும்பாமலே கிளம்பினாள் அவள்.

“ஹெச் ஓ டி மேம்கிட்ட பேசி ஒரு வாரம் எக்ஸ்ட்ரா லீவு கேட்கலாமே டி. ஏன் இவ்வளவு அவசரமா இங்கிருந்து கிளம்பணும்? அண்ணா இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு துணைக்கு நீ இருக்கிறது எவ்வளவு ஆறுதலா இருக்கும்”.

பேருந்தில் இருக்கையை தேடி அமர்ந்தவுடனே இவ்வளவு நேரம் தன் மனதினுள் ஓடிய கேள்வியைக் கேட்டுவிட்டாள் சம்யுக்தா.

அவளது தோளில் சாய்ந்தவள் சில நொடிகள் மௌனத்திலே கழித்துப் பின், “என்னால அங்க இருக்க முடியல சம்யு. அம்மா முகத்த பார்க்கும்போதெல்லாம் என்னையும் மீறி கோபம் வெளிப்படுது. அத்தை, மாமா முகத்துல எப்படி முழிக்கிறது சம்யு… அவ இல்லாதத இன்னுமே ஏத்துக்க முடியல” என்றவளின் கண்ணீர் சம்யுக்தாவின் தோள்பட்டையை நனைத்தது.

தோழியின் மனநிலை புரிய அவளைத் தோளில் சாய்த்தவாறே தட்டிக் கொடுத்தாள். மூன்று நாட்களுக்காய் உறக்கமே இல்லாமல் இருந்தவள் சற்று கண்ணயர சம்யுக்தாவின் அலைப்பேசி ஒலித்தது.

அதனை எடுத்துப் பார்த்தவள் பின் சரயுவின் முகம் பார்க்க சீரான இடைவெளியில் மூச்சுக்காற்று வெளியேற உறக்கத்தில் இருந்தாள்.

அழைப்பை ஏற்று, “சொல்லுங்க சார்” என்றாள் சம்யுக்தா. “பஸ் ஏறியாச்சா மா?” என்றவனிடம், “ம்… வந்துட்டு இருக்கோம் சார்” என்றவள், சாலையோரம் கடந்த கடையின் பெயரின் கீழே தெரிந்த ஊர்பெயரைப் பார்த்து கூற, “அவ இப்போ எப்படி இருக்கா மா, சாப்ட்டாளா? அங்க கிளம்பும்போது எதுவும் பிரச்சினை இல்லயே” என்றவனின் குரலில் சோகம் இழையோடியது.

“இப்போ தான் கொஞ்சம் கண்ணசந்தா சார்” எனும்போது சரயு அசைவதுபோல் தோன்ற அலைப்பேசியை காதிலிருந்து சட்டென எடுத்தவள் பின் அவள் உறங்குவதை உறுதி செய்த பின்பே அலைப்பேசியை மீண்டும் காதில் ஒற்றினாள்.

“அவ எந்திரிச்சுட்டாளா மா” என்ற சித்தார்த்தின் வார்த்தைகள் கூறியது சம்யுக்தாவின் சில நிமிட மௌனத்தினை தான் அறிந்துக்கொண்டதாய்.

“இல்லங் சார்” என்றவள், மேலும் அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தவள் அழைப்பை துண்டித்தப்பின் அவளது நினைவுகள் பின்நோக்கி நகர்ந்தன.

திருமணத்திற்கு அவன் வந்ததே சம்யுக்தாவிற்கு தெரியாததால் ரேவதியின் இறுதி சடங்கின்போது தான் அவனைக் கண்டுக்கொண்டவளுக்கு அதிர்ச்சி மேலிட்டன. சரயுவிற்கு அவரின் வருகை தெரியுமா எனப் பார்க்க அவளோ சுற்றி நடப்பவைகளை அறியும் நிலையிலேயே இல்லாததால் அவளிடம் எதுவும் மேற்கொண்டு பேசவில்லை. சித்தார்த்தை மீண்டும் பார்க்க அவனின் பார்வை முழுவதும் சரயுவின் மேல்தான் படர்ந்திருந்தது.

அதன்பின் சரயுவை தேற்றுவதிலே கவனத்தைச் செலுத்தியதால் சித்தார்த் பற்றிய கேள்விகள் சற்று ஓரங்கட்டப்பட்டன.

ஆனால் அடுத்த நாளே சம்யுக்தாவை தொடர்பு கொண்டான் சித்தார்த். சரயுவின் உடல்நிலை பற்றிய கேள்விகளே அவனது வார்த்தைகள் தாங்கி நிற்க அங்கு நடப்பனவற்றை அவனிடம் தெரிவிப்பது இவளது வேலையாயிற்று. இதோ இன்றும் கூட அவர்கள் கோவைக்கு கிளம்பி விட்டார்களா என்பதை அறியவே அவன் சம்யுக்தாவை அழைத்திருந்தான்.

அவனின் செயல்கள் மூலம் சரயுவின் மேல் வைத்துள்ள அன்பு புலப்படவே சம்யுக்தாவின் அடிவயிற்றில் பயபந்து உருண்டோடியது. ஏற்கெனவே பிரஷாந்தின் காதலை அவளது தாய் ஏற்காததாலயே ரேவதி இப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்க இனி சரயுவின் காதல் விவகாரம் தெரிந்தால் என்ன நடக்கும் என யோசிக்கவே பயமளித்தது. கண்டிப்பாக சரயு தன் காதலில் பின்வாங்க மாட்டாள் என்று நினைத்தவளுக்கு அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராக வேண்டுமோ எனத் தோன்றியது.

இங்கு சித்தார்த்தோ ஷோபாவில் சாயந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். மூடிய இமைகளுக்குள் சரயுவின் அழுகைத் தோற்றம் படர, அவளை அவ்வாறு காண சகிக்காது கண்களை மேலும் இறுக மூட முயன்றான்.

கடந்த மூன்று நாட்களாய் தன் மகனின் தடுமாற்றங்களை கவனித்துக் கொண்டிருந்த கற்பகம்மாளுக்கு அவனின் மனவுணர்வுகள் புரிபடத் துவங்கின.

அன்று அதிகாலையிலேயே கிளம்பி நடு இரவில் வீடு வந்து சேர்ந்தவனின் முகம் அப்பட்டமாய் வேதனையைக் காட்டிக் கொடுத்தது. முந்தைய நாள் இரவில் உண்ட உணவு, அதன்பின் இரண்டு மூன்று முறை தேநீர் மட்டுமே அருந்தி இருந்தான். தானும் இருக்கிறேன் என வயிறு கூப்பாடு போட்டாலும் உண்ண மனமில்லாமல் குளித்துவிட்டு படுக்கைக்கு போனவனைத் தடுத்தது கற்பகம்மாளின் குரல்.

“வந்து சாப்ட்டு போய் படு கண்ணா. வெறும் வயித்தோட போய் படுத்தா தூக்கம் வராது கண்ணா” என்றவரிடம், “இல்ல மா. பசியில்ல, வரும்போது சாப்பிட்டுட்டு தான் வந்தேன்” என பொய்யுரைக்க, அவனின் பசியை அறியாதவளா அன்னை.

“பரவால்ல கண்ணா, அம்மாவுக்காக வந்து ரெண்டு இட்லியாச்சும் சாப்டு” என வற்புறுத்த மேலும் மறுக்க முடியாமல் உணவுண்ண அமர்ந்தான்.

அவன் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், “போன காரியம் என்னாச்சு கண்ணா? ஏன் முகம் இவ்ளோ வாடிப் போயிருக்கு. போன இடத்துல எதுவும் பிரச்சினையா கண்ணா?” என்றார்.

சரயுவின் இல்லத்தில் நடந்ததை மேலோட்டமாய் கூறியவனின் தலையை ஆதரவாய் கோதிவிட்டவர், “அந்த புள்ள தலைல இப்படி தான் போய் சேரணும்னு எழுதி இருந்தா நம்ம என்ன பண்றது கண்ணா. இந்த காலத்து புள்ளைங்க எதுக்கெடுத்தாலும் ரொம்ப அவசரப்படறாங்க. சரயு எப்படி இருக்கிறா கண்ணா?” என்றவர் தன் மகனின் முகம் பார்க்க அவன் முகமோ வேதனையில் சுருங்கியது.

மேலும் கேள்விகளால் துருவாமல், “சரி கண்ணா, போய் படு. பாப்பாவ உன் ரூம்ல தான் படுக்க வச்சுருக்கேன்” என்றவர் உணவுண்ண தட்டை கழுவ எடுத்துச் செல்ல தன் அறைக்குள் நுழைந்தான்.

மூன்று நாட்களும் அவளின் நினைவிலே உழன்றுக் கொண்டிருக்க ஷோபாவில் சாய்ந்திருந்தவனை உலுக்கியது இதழிகாவின் பிஞ்சு கரங்கள்.

“ப்பா, சரயு எப்போ ப்பா வரும்?” என கடந்த மூன்று நாட்களாய் கேட்கும் அதே கேள்வியை இன்றும் தொணதொணத்தாள் இதழிகா.

தினமும் வீடியோ காலில் பேசுபவள் கடந்த மூன்று நாட்களாய் அதிலும் பேசாமல் இருக்கவும் தான் குழந்தை ஏக்கமாகிப் போனாள்.

தற்போது அவளின் நிலையில் தான் சித்தார்த்-ம் இருக்கவே, “இன்னிக்கு வந்துருவா இதழி மா. நேர்லயே பார்த்து இன்னிக்கு பேசுவோம்” என்க, “ஐய், சரயு வருதா ப்பா. ஜாலி ஜாலி” என குதித்துக் கொண்டே அவனிடமிருந்து இறங்கி ஓட அவர்களின் சம்பாஷணைகளைக் கேட்டுக்கொண்டே அவனருகே அமர்ந்தார் கற்பகம்மாள்.

“சித்து கண்ணா” என அவன் தோளைத் தொட, “அம்மா” என்றான். “உனக்கு சரயுவ பிடிச்சுருக்கா பா?” என நேரடியாய் வினவ, அவரின் கேள்வியில் சிறு அதிர்வோடு முழித்தவன், “ம்மா…” என்றவனுக்கு மேலும் வார்த்தைகள் வர மறுக்க,

“நான் தப்பான அர்த்தத்துல கேட்கல சாமி. இந்த மூணு நாளா நீ படற பாட்ட பார்த்து தான் இப்படி கேட்டேன். இதுநாள்வரைக்கும் குட்டிமா தான் சரயுவ பார்க்காம ஏங்கிப் போயிருக்கா. இப்போ அதே ஏக்கத்த உன் கண்ணுல பார்க்கிறேன் சாமி” என்றவரின் குரல் உடைந்திருந்தது.

அவருக்கும் அவனின் வாழ்க்கையை நினைத்த பயம் இருந்துக் கொண்டு தான் இருந்தது. மறுமணம் செய்துகொள் என்ற போதெல்லாம் தன் மகன் மறுத்துவிட, தங்களுக்குப் பின்னான அவனின் பற்றுகோல் யார் என்ற கேள்வி தான் மனதில் இந்நாள் வரை ஓடிக்கொண்டிருந்தது.

ஏற்கெனவே சரயுவின் வார்த்தைகள் மூலம் அவளின் நேசம் அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்க அதற்கான மகனின் எதிர்வினைகள் அக்குழப்பத்தில் கல்லெறிந்திருந்தது.

“தப்புனு புரியுது மா. ஆனா, சிலசமயம் என் மனச என்னால கட்டுப்படுத்த முடியல” என்றவனின் குரலில் முற்றிலும் உடைந்துபோனார் கற்பகம்மாள்.

“உன்னை நீயே ஏன் கண்ணா இப்படி தாழ்த்திக்கிற. இதுல தப்பென்ன இருக்கு?” என அவன் முகத்தைத் தன்பக்கம் திருப்ப,

“இல்ல மா. இது சரி வராது. அவ வாழ வேண்டியவ ம்மா, என்னால அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய கண்டிப்பா கொடுக்க முடியாது. இது சின்ன சலனம் தான், கண்டிப்பா என்னால இதுல இருந்து வெளிவர முடியும். இத்தோட இத விட்ருங்க மா” என்றவன் சட்டென எழுந்து செல்ல, தன் மகனின் உணர்வுப் போராட்டங்களைக் கண்டவரின் உள்ளம் பதறியது.

“கடவுளே, உனக்கு நான் என்ன குறை வச்சேன்! ஏன் இப்படி என் மகன சோதிக்கிற பா. அவன் வாழ்க்கைல மட்டும் ஏன் இத்தனை வேதனை?” என புலம்பியவர், ‘சிறு சலனம்னு ஒதுக்கி வைக்கிற அளவுக்கா உன் மனசுல சரயு இருக்கா கண்ணா? அர்த்த ராத்திரில அந்த புள்ளைக்காக இங்கிருந்து இருநூறு கிலோமீட்டர் தாண்டி அவள பார்க்க ஓடுனவன் தான நீ! அவளோட சோகம் உன்னை இந்தளவு வாட்டுதுனா அவ உன் மனசுல எந்தளவு இடம் பிடிச்சிருப்பா…’ என நினைத்தவர் தன் மகனுக்கு நல்லதொரு வாழ்வு அமைந்திட அந்த தாயுள்ளம் கடவுளிடம் பிராத்தனை வைத்தது.

தன் தாயை நேருக்குநேர் பார்க்க முடியாமல் கடைக்கு ஓடி வந்தவன், ‘என் உணர்வுகள மத்தவங்க கணிக்கிற அளவுக்கா நான் வீக்கா இருந்துருக்கிறேன்’ என நினைத்தவன், இனி எக்காரணம் கொண்டும் தன் மனதை திசைதிருப்பக் கூடாதென கடிவாளம் கட்ட முயன்று தன்னை வேலையில் திசைதிருப்பிக் கொண்டான்.

நான்கு மணி நேர பயணத்தில் விடுதியை அடைந்தவர்கள் தங்களது அறைக்குள் நுழைந்ததும் கட்டிலில் அப்படியே சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள் சரயு.

“ரெபிரஷ் ஆகிட்டு வரேன் டி” என சம்யுக்தா குளியலறைக்குள் புகுந்துக் கொள்ள அறையில் வேறு யாரும் இல்லாததால் தனித்திருந்தாள் சரயு.

மெல்ல பலகணி அருகே சென்றவள் திரைச்சீலையை விலக்க அவளது கண்ணில் பட்டது சித்தார்த்தின் இல்லம்.

வீட்டின் முன்புற காலி இடத்தில் சொப்பு சாமான்கள் வைத்து இதழிகா விளையாடிக் கொண்டிருக்க அவளைக் கண்டவுடன் தான் கடந்த மூன்று நாட்களாய் அவளுடன் பேசாதது ஞாபகத்தில் வர, வேகமாய் அங்கிருந்து கிளம்பியவள் அடுத்த சில நொடிகளில் சித்தார்த்தின் வீட்டினை அடைந்திருந்தாள்.

கதவு திறக்கப்படும் சப்தத்தில் திரும்பிப் பார்த்த இதழிகா சரயுவை கண்டவுடன் வேகமாய் ஓடிவர அவளை அள்ளி அணைத்திருந்தாள் சரயு.

“கியூட்டி” என அவளது இதழ்கள் முணுமுணுத்தவாறே இதழிகாவின் கன்னங்கள் முழுக்க முத்தங்களை பதித்திருந்தாள்.

சப்தம் கேட்டு வெளியே வந்த கற்பகம்மாள் தன் பேத்திக்கும் சரயுவிற்கும் இடையேயான உறவை கண்டு மனம் நெகிழ்ந்தது.

“வா மா சரயு, ஊர்ல இருந்து இப்ப தான் வந்தியா டா மா?” என்றவர் மேற்கொண்டு மேலும் துருவாமல் பேச்சைத் திசைமாற்றினார். “மூணு நாளா உன்கிட்ட பேசலனு இந்த குட்டி எங்கள போட்டு படுத்தி எடுத்துட்டா மா? பாவம் அவ அப்பன் தான். அவன தான் கேள்வியா கேட்டு திணறடிச்சுட்டா” என்க, அவரின் வார்த்தைகளில் சித்தார்த்தின் நினைவுகள் எழ அவளது கண்கள் அவனை வீட்டினுள் தேடிப் பார்த்து பின் அவனது வண்டியை தேடிப் பார்க்க அது அங்கு இல்லாமல் இருக்கவும் வெளியே சென்றிருப்பானோ என்றெண்ணிக் கொண்டே இதழிகாவிடம் சமாதானப்படலத்தை ஆரம்பித்தாள்.

அவளின் ஒவ்வொரு அசைவுகளும் அவளையே கவனித்துக்கொண்டிருந்த கற்பகம்மாளிற்கு அவளின் மனவுணர்வுகள் அச்சுபிசகாமல் எடுத்துரைக்க மனம் இலகுவாக உணர்ந்தது. தன் மகன் மற்றும் பேத்தியின் வாழ்வில் கண்டிப்பாக நல்லதொரு மாற்றம் நிகழும் என நினைத்தவரின் அகமும் முகமும் மலர, “இரு மா குடிக்க ஜூஸ் எடுத்துட்டு வரேன்” என்றவாறே அவளது மறுப்பிற்கு நேரம் ஒதுக்காமல் சமையலறைக்குள் புகுந்தார்.

அதேநேரம் வெளியே சித்தார்த்தின் வண்டி சப்தம் கேட்க, “அப்பா வந்துட்டாரு சரயு” என்றவாறே வேகமாய் வெளியே ஓடிவர, “கியூட்டி மெதுவா போங்க” என்றவாறே அவளைப் பின்தொடர்ந்து வந்தவள் அவனைக் கண்டு அப்படியே நின்று விட்டாள்.

தன்னை நோக்கி ஓடிவந்த இதழிகாவை தூக்கிக் கொண்டே, “இப்படி…” என அவன் ஆரம்பிப்பதற்குள், “இப்படி ஓடி வரக்கூடாதுனு எத்தன தடவ சொல்லி இருக்கேன் கியூட்டி, சொல் பேச்சு கேட்கவே மாட்டியா நீ!” என அவனைப் போலவே சரயு கூறவும் தந்தையும் மகளும் ஒருசேர அவளையே தான் பார்த்தனர்.

அவனின் பார்வையை உணர்ந்தவள், சமையலறைக்குள் எட்டிப் பார்த்து, “ஆன்ட்டி கொஞ்சம் வேல இருக்கு. திங்க்ஸ் எதுவும் எடுத்து வைக்காம வந்துட்டேன். போய்ட்டு வரேன் ஆன்ட்டி” என கிளம்ப எத்தனித்தவள், “அப்புறம் மீட் பண்ணலாம் கியூட்டி” என்றவாறே அவர்கள் இருவரையும் கடந்த செல்ல முயன்றவளை தடுத்தது சித்தார்த்தின் அழைப்பு.

“சரயு”

அவள் மனம் அவனின், “சரயு மா” என்ற அழைப்பிற்கு ஏங்கி தவித்திருக்க, அவனின் “சரயு” என்ற அழைப்பில் ஒட்டியிருந்த அந்நியம் அவள் மனதை வாட்ட, எதுவும் பேசாமல் அமைதியாக அப்படியே திரும்பாமல் நின்றுக் கொண்டாள். இதழிகாவை இறக்கி விட்டவன், “பாட்டி உன்னை கூப்பிடறாங்க இதழி மா. உள்ள போங்க” என்க, சரயுவிடம் டாடா காட்டிவிட்டு அவள் உள்ளே சென்றப்பின் வந்த சித்தார்த்தின் வார்த்தைகள் அவள் மனதை சுக்குநூறாக உடைத்தது.

“இனி, இங்க வர வேண்டாம் சரயு. இதழிமா கிட்டயும் கொஞ்சம் விலகியே இருக்கிறது நல்லதுனு தோணுது. புரிஞ்சுக்குவனு நினைக்கிறேன்” என்றவனை நேருக்குநேர் பார்க்க அவளின் முகம் அப்பட்டமாய் வலியை வெளிப்படுத்த அதனை எதிர்கொள்ள முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டவன் தன் உணர்வுகளையும் கட்டுப்படுத்த முற்பட்டான்.

வானம் – 31

அவளின் வலி நிறைந்த முகத்தை எதிர்நோக்க தைரியமில்லாது திரும்பிக் கொண்டவனின் மனம் என்னவோ அவளின் மறுப்பையும் கோபத்தையும் தான் எதிர்பார்த்தது.

ஆனால் பதில் வராமல் போகவும் திரும்பி பார்க்க அவளோ வெளியே சென்றுக் கொண்டிருந்தாள்.

அதற்குள் சமையலறையில் இருந்து கையில் பழச்சாறோடு வெளியே வந்த கற்பகம்மாள் அவனைக் கண்டு, “நீ எப்போ வந்த கண்ணா?” என்றவாறே, “சரயு எங்க போனா… ஜூஸ் போட்டுட்டு வர்றதுக்குள்ள கிளம்பிருச்சா?” என விழிகளால் தேட, “அவங்களுக்கு வேல இருக்குனு கிளம்பிப் போய்ட்டாங்க மா” என்றவனை, ‘அவளா போனாளா இல்ல நீ போக சொன்னியா!’ என்ற ரீதியில் பார்த்து வைத்த தன் தாயை எதிர்கொள்ள முடியாமல் வேகமாய் தன்னறைக்குச் சென்றான்.

தன் மகனின் மனநிலை புரிந்தாலும் ஒரு தாயாய் அவருக்கும் மகனின் வாழ்வை எண்ணிய ஏக்கம் உண்டே. அவனைப் போல அவரால் தன் ஏக்கங்களை மறைத்திட இயலவில்லை.

தன் மகனின் விருப்பத்தை அறிந்தவரின் சந்தோஷம் நீர்குமிழி போல் அதிக நேரம் நீடிக்கப்படாமல் உடனே காணாமல் போனதை நினைத்தவரால் பெருமூச்சு மட்டுமே விடமுடிந்தது. அதற்குள் இதழிகா ஏதோ கேட்கவும் மனதை திசைத்திருப்பி பேத்தியை சமாளிக்கத் தொடங்கினார்.

அறைக்குள் வந்தவனுக்கோ மனம் பாரமாகிப் போனது. ‘என்னைத் திட்டக்கூட உனக்கு மனசில்லயா சரயு?’ என ஒருபக்கம் மனம் வாட, ‘ஏற்கெனவே அவ ஒரு இழப்புல இருந்து இன்னும் மீளாம இருக்கா. அவக்கிட்ட ஏன் இப்படி நடந்துக்கிற’ என மறுபுறம் சாட, தன் நிலைப்பாட்டை அவனாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவளிடமிருந்து விலக நினைத்தாலும் மனம் மீண்டும் அவளிடமே செல்வதை உணர்ந்தவனுக்கு அவ்வளவு எளிதில் அவளிடமிருந்து விலகி இருக்க முடியாது எனப் புலப்பட்டாலும் கண்டிப்பாக விலகியே ஆக வேண்டுமென தீர்மானம் எடுத்துக் கொண்டான்.

கண்களை இறுக மூடியவனின் இமைகளுக்கிடையே சரயுவின் முகமே வலம்வர, தலையை உதறியவனின் கரங்கள் அனிச்சையாய் பலகணியை இறுகப் பற்றிக் கொண்டது.

அதேநேரம் பக்கத்து வீட்டின் உபயத்தால் அவனது காதைத் தீண்டிச் சென்றன இசை.

“உன்னைப் பார்க்க கூடாது
என கண்ணை மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய்
இமைகளின் இடையில் நீ நின்றாய்”

ஹரிஷ் ராகவேந்திராவின் குரல் உருகிக் கொண்டிருக்க அதற்கு இணையாய் அவனின் இதயமும் உருகிக் கொண்டிருந்தது.

தன் அறைக்குள் நுழைந்தவளை சம்யுக்தாவின் ஆர்பாட்டமான குரலே வரவேற்றது. “குளிக்கப் போன கேப்ல எங்க டி போன…” என உலுக்கியவளுக்கு பதிலளிக்காமல் மெத்தையில் பொத்தென அமர்ந்தவளின் இமைகள் நனைந்திருந்தன.

“ஹேய், அழுறியா சரயு!” என அவள் தோளைப் பற்றியபடி அவளருகே அமர்ந்த சம்யுக்தா, “நீ இப்போ சித்தார்த் சார் வீட்டுக்கு தான் போய்ட்டு வர்றியா?” என்றாள் தன் தோழியை அறிந்தவளாய்.

அவளின் கேள்வியில் நனைந்த இமைகள் ஆச்சரியத்தோடு அவளை நோக்க, “இதென்ன பெரிய உலக ரகசியமா டி… கழுத கெட்டா குட்டிச் சுவரு, நீ வேறெங்க போய்ற போற… அதான் கேட்டேன்” என்றவளின் வார்த்தைகளில் கேலி இழையோடினாலும், “என்னாச்சு டி, சித்தார்த் சார பார்த்தியா?” என்றாள் சம்யுக்தா.

“ம்” என அவள் தலையாட, “என்னவாம் அவருக்கு… வழக்கம்போல என் புள்ளைட்ட இருந்து தள்ளியே இரு, என்னைய இப்படி முழுங்கிற மாதிரி பார்க்காதனு அட்வைஸ் மழ பொழிஞ்சாரா?” என்றவளின் குரலில் ஏகத்துக்கும் நக்கல் வழிந்தோடியது.

அவளின் நக்கலில் சரயுவின் இதழ்கள் சிறிதாய் மலர, “லொள்ளா டி உனக்கு” என செல்லமாய் முதுகில் அடி போட்டாள். “அப்புறம் வேறென்ன டி சொல்லி இருக்கப் போறாரு… இதையே தான மாத்தி மாத்தி உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காரு. சரி இப்போ என்ன சொன்னார் என்னருமை தோழியே!” என அவள் கழுத்தில் மாலையாய் தன் கரங்களைக் கோர்த்தபடி வினவினாள்.

அவன் கூறியதை அப்படியே வார்த்தைகள் மிகாமல் தன் தோழியிடம் ஒப்புவிக்க, “அவரோட சூழ்நிலைல இருந்து பார்க்கும்போது அவரோட வார்த்தைகளும் நியாயமானதா தான் இருக்கு” என்றவளின் வார்த்தைகளை சரயுவும் ஆமோதித்தாள்.

“ம்… அதுனால தான் நான் எதுவும் பேசாம வந்துட்டேன் சம்யு. அவர் மனசுல நான் இருக்கேங்கிறது எனக்கும் தெரியும், அது அவருக்கும் தெரியும். இருந்தும் என்கிட்ட விலக நினைக்கிறது என்னோட நல்லதுக்காகனு நினைக்கிறாரு. அதான் இப்படி எல்லாம் பண்றாரு” என அவனின் மனமறிந்தவளாய் கூற,

“அதான் என்ன காரணம்னு இவ்ளோ தெளிவா சொல்றீங்களே, அப்புறம் ஏன்ங்க மேடம் இமைகள் எல்லாம் நனைஞ்சுருக்கு” என அவளின் அழுத விழிகளை சுட்டிக் காட்டினாள் சம்யுக்தா.

“என்ன தான் நிதர்சனம் புரிஞ்சாலும் அவரோட வார்த்தைகள கேட்கும்போது என்னால முடியல சம்யு” என்றவளின் குரல் உடைந்திருந்தது.

கடந்த மூன்று நாட்களாய் வேறு சிந்தனையே இல்லாமல் ரேவதியின் இறப்பிலே உழன்றுக் கொண்டிருந்தவள் அவனைக் கண்ட ஓரிரு நிமிடங்களில் சுற்றம் மறந்து அவனைப் பற்றி மட்டுமே பேசும் அவளைக் கண்டு சம்யுக்தாவிற்கு வியப்பாக இருந்தது.

“அவர் மனசுல நான் தான் இருக்கேன்னு தெரிஞ்சுமே என்னால அவரோட நிராகரிப்ப கூட ஏத்துக்க முடியல. என் ரேவ் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பா… அவ கண்ணு முன்னாடியே பிரஷாந்த்க்கு கல்யாணம் முடிவாகி அது மணமேடை வரைக்கும் போய் அந்த நொடி அவ மனசு எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும்.

எவ்ளோ உடைஞ்சு போயிருந்தா எங்கள எல்லாம் விட்டுட்டு போக முடிவெடுத்திருப்பா… ரேவ்!” என கதறியவளை சமாதானப்படுத்தும் வழி அறியாமல் விழித்தாள் சம்யுக்தா.

‘இப்போ தான அவ அதெல்லாம் மறந்து கொஞ்சம் சகஜமாகிறானு நினைச்சேன். அடுத்த நிமிஷமே இப்படி உடைஞ்சு போறாளே!’ என நினைத்தவளால் தன் தோழியை தேற்றும் வழி அறிய முடியவில்லை.

அழுதழுது ஓய்ந்துப் போய் கட்டிலில் சரிந்தவளை நேராக படுத்து வைத்து அவளின் தலையை கோதிய வண்ணமே அவளருகே அமர்ந்துக் கொண்டாள் சம்யுக்தா.

சரயுவின் இதழ்களோ இன்னுமே, “ரேவ், ரேவ்…” என்றே முணுமுணுத்துக் கொண்டிருக்க அழுததன் விளைவு கண்கள் ஓய்வை நாடின. உறங்கும் தன் தோழியை பார்த்தவள் போர்வையை எடுத்து போர்த்தி விட்டு அறையின் விளக்குகளை அணைத்து பலகணியை சாற்றினாள்.

அவளை தொந்தரவு செய்ய வேண்டாமென அறைக்குள் இருந்த மற்றொரு பெண்ணிடமும் கேட்டுக் கொண்டு வெளியே வர அவர்களது வார்டன் சரயுவை அழைப்பதாக செய்தி வரவும் தானே சென்று அவரை பார்த்தாள்.

“வா மா சம்யுக்தா, சரயுவ வந்து என்னை பார்க்க சொல்லி ரம்யாகிட்ட சொல்லி அனுப்புனனே, எங்க சரயு?” என்றார் அவர்.

“இப்போ தான் மேம் அவ தூங்க ஆரம்பிச்சா. அதான் தொந்தரவு பண்ண வேண்டாம்னு நானே வந்து உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன்” என்றவளை ஏற இறங்க பார்த்தவர்,

“சரி, சரயு எந்திரிச்சோனே என்னை வந்து பார்க்க சொல்லு மா” என்றவர் தன் வேலையை கவனிக்கச் செல்ல, அவரைத் தடுத்தாள் சம்யுக்தா.

“என்னாச்சு மேம், எதுவும் இம்பார்ட்டண்ட்டா அவக்கிட்ட பேசணுமா?” என்க, ஓரிரு நிமிடங்கள் அமைதி காத்தவர் பின், “உனக்கு தெரியாதது ஒன்னுமில்ல. நம்ம ஹாஸ்டல் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் உனக்கும் தெரியும் தான சம்யுக்தா! இங்க ஏதாவது ஒரு பிரச்சினைனா உங்க பேரண்ட்ஸ்க்கு நான் தான் பதில் சொல்லி ஆகணும். உன் பிரண்ட் அந்த குழந்தைய காரணம்காட்டி அவங்க வீட்டுக்கு போறத இங்க எல்லாரும் தப்பா பேசறாங்க. உங்கள பத்தி எனக்கு தெரியும் மா. ஆனால், வயசுப்பொண்ணுங்க வேற, காலங்கெட்டு கெடக்கு. நாளபின்ன ஏதாச்சும் பிரச்சினை வந்தா நான் தான பொறுப்பு? அதான் வார்ன் பண்ணலாம்னு வர சொன்னேன். ஈவ்னிங்குள்ள என்னை வந்து பார்க்க சொல்லு” என்றவர் அவளிடம் மேலும் பேச்சை வளர்க்க விரும்பாதவராய் தன் வேலையை பார்க்கத் துவங்கினார்.

இது வானதியின் செயல் என்பதை புரிந்துக் கொண்டவள், சரயு தற்போது உள்ள சூழலுக்கு இது மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும் என நினைத்தாலும் அதனைத் தவிர்க்கும் வழி தெரியாது முழித்தாள் சம்யுக்தா.

இதமான காற்று தழுவிச் செல்ல அந்த மாலைநேர சுகந்தம் அவளை அள்ளி அணைத்துக்கொண்டது. கைகளை மார்பின் குறுக்கே கட்டியவண்ணம் சமீபத்தில் போடப்பட்டிருந்த அந்த தார் சாலையின் கருமை நிறத்தில் மனதை பறிகொடுத்தவளாய் அதனை வெறித்துக் கொண்டிருந்தாள் சரயு.

“திருநீறு கூட எடுக்காம அப்படியே வந்துட்ட… இந்தா திருநீறு எடுத்துக்கோ” என திரூநீற்றை நீட்டிய தன் தோழியிடம், “ப்ச், வேண்டாம் டி” என்றவள் மீண்டும் விட்ட பணியைத் தொடர, அவளோ மறுப்பை அசட்டையாய் புறந்தள்ளி அவளது பிறைநெற்றியில் தானே திருநீற்றை வைத்துவிட்டாள்.

உறக்கம் கலைந்து எழுந்தவளின் முகம் அழுததின் விளைவாய் பலூன் போல் உப்பியிருக்க அவளை அடம்பிடித்து கோவிலுக்கு அழைத்து வந்திருந்தாள் சம்யுக்தா.

கோவிலின் அமைதி அவள் மனதில் சிறிதளவேனும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவள் நினைத்திருக்க பலன் என்னவோ பூஜ்யமானது.

“சரி, வா கொஞ்சம் நேரம் உக்காந்துட்டு போகலாம்” என அவளின் பதிலை எதிர்பாராமல் கையைப் பிடித்து ஓரிடத்தில் அமர வைத்தாள்.

“இன்னிக்கு வார்டன் உன்னை கூப்ட்டாங்க சரயு” என மெல்ல விசயத்தை எடுத்துரைத்தவள், “அந்த வானதி தான் இப்படி பத்த வச்சுருக்கா” என வானதியின் மேல் உள்ள கோபத்தில் பற்களை நறநறவென நெரித்தாள் சம்யுக்தா.

“ப்ச், இதுக்கு எதுக்கு சம்யு அவ மேல கோபப்படற… விடு பார்த்துக்கலாம்” என்றவளை கேள்வியாய் நோக்கினாள்.

“என்ன டி இப்படி சொல்லிட்ட… இனி நீ சித்தார்த் சார் வீட்டுக்கே போகக்கூடாதுனு வார்டன் சொன்னாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல” என்றவளிடம், “அதான் அவரே வர வேண்டாம்னு சொல்லிட்டாரே” என்றவளை விநோதமாய் பார்த்து வைத்தாள் சம்யுக்தா.

“சரி, வா நேரமாச்சு போகலாம்” என தற்போது அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் சரயு. சரயுவின் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதே சம்யுக்தாவிற்கு குழப்பமாய் இருக்க அவளின் இழுப்பிற்கு உடன்பட்டு சென்றாள்.

விடுதிக்குள் நுழைந்தவுடனே நேராய் வார்டனின் அறைக்கே செல்லத் துவங்க சம்யுக்தாவின் விழிகளோ தன் தோழியை குழப்பத்தோடு பார்க்க அவளோ அதனைக் கண்டு கொள்ளாமல் அவர்முன் சென்று நின்றாள்.

“குட் ஈவ்னிங் மேம், நீங்க கூப்பிட்டப்போ நான் தூங்கிட்டு இருந்தேன் மேம். இவ இப்போ தான் சொன்னா… சொல்லுங்க மேம்” என்றாள் பவ்யமாய்.

“ஒன்னுமில்ல மா… நீ அந்த குழந்தைய பார்க்க அவங்க வீட்டுக்கு அடிக்கடி போறதா நம்ம புள்ளைங்க சொல்லி கேள்விப்பட்டேன். உன்னை தப்பு சொல்லல, ஆனா நாளபின்ன ஏதாச்சும் பிரச்சினை ஆச்சுனா நான் தான மா உங்க வீட்டுக்கு பதில் சொல்லணும். நீ நல்ல பொண்ணு தான், இருந்தாலும் காலம் கெட்டு கெடக்கே மா… அதப்பத்தி பேசத் தான் கூப்டேன் சரயு” என அவர் வார்த்தைகளில் சற்று மெருகூட்டி பேச,

“புரியுது மேம். இனி இதுமாதிரி நடக்காது, யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் உங்களுக்கு ஏற்பட விட மாட்டேன் மேம். தேங்க் யூ பார் யுவர் கன்செர்ன்” என இவளும் அவரைப் போலவே வார்த்தைகளைக் கோர்த்து புன்னகையுடனே பதிலளித்து அங்கிருந்து நகர்ந்தாள்.

வீடே மயான அமைதியாய் காணப்பட்டது. பிரஷாந்த் அவனின் அறையிலே முடங்கி கிடக்க, தங்கம்மாளோ பேருக்கு சமையல் என்ற ஒன்றை செய்து வைத்துவிட்டு மூலையில் அமர்ந்துகொள்ள, முத்துச்சாமிக்கோ மகனின் நிலையுணர்ந்து எதுவும் பேச முடியாமல் அமைதி காத்தார்.

ஆனால் அந்த அமைதி அவரின் மனையாளிடத்தில் மட்டும் கோபமாய் வெளிப்பட்டது. அவருக்கு இரவுணவை எடுத்து வந்து பரிமாற அவரோ தட்டில் கை வைக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

தான் பரிமாறிய பின்பும் கணவன் உணவுண்ணாததைக் கண்டு, “ஏங்க சாப்டலயா?” என அவர் முகம் பார்க்க, “ஏன் இப்படி பண்ண தங்கம்மா?” என்றவரின் வார்த்தைகளில் கோபம் படர்ந்திருந்தது.

“என்னங்க… என்ன… ப…ண்ணே…ன்” என திக்கித் திணறியவாறே கணவனின் முகம் காண, “ரேவதியும் நம்ம புள்ள தான மா” என்றவரின் வார்த்தை உடைந்துப் போயிருந்தன.

“இந்த பாவிமவ இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கலயே! சின்னஞ்சிறுசுக, வயசு கோளாறு, நாளபின்ன சரி ஆகிருவாங்கன்னு நினைச்சனே!” என தலையில் அடித்துக்கொண்டு அழத் தொடங்க, அவரை சற்றுநேரம் அழ விட்டார் முத்துச்சாமி.

இதோ இன்றுவரை நல்லசுந்தரமோ வாணியோ ஒற்றை வார்த்தையை கூட உதிர்க்கவில்லை. ஊரே ரேவதியின் மரணத்திற்கு தங்கம்மாள் தான் காரணம் எனக் கூறிக் கொண்டிருக்க அவர்களோ இவர்களுக்கு எதிராய் ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை. அதுவே முத்துச்சாமிக்கு குற்றவுணர்வை அதிகப்படுத்தி இருந்தது.

“ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை மச்சானோ இல்ல வாணியோ நம்மள பார்த்து கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது தங்கம்மா… நீ வீட்ட பார்த்துக்கிறங்கிற நம்பிக்கைல தான இவ்ளோ நாளா குடும்ப விசயங்கள்ள உன் முடிவ அப்படியே ஏத்துக்கிட்டேன். ஆனா… நான் ஒரு அப்பனா தோத்து நிக்கிறனே! போறப்போ என் மவ என்கிட்ட ஒத்த வார்த்தை பேசாம போறா… அவன் ரூமே கதினு அடைஞ்சு கிடக்கிறான். இப்படி இருக்கவா நான் இவ்ளோ கஷ்டப்பட்டு சொத்து சொகம் சேர்த்தேன்” என்றவரின் குரல் முற்றிலும் உடைந்துப் போயிருந்தது.

புடவை முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அழுத மனைவியை தேற்ற முற்படவில்லை. அப்படியே எழுந்து தோளில் துண்டை உதறிப் போட்டவர், “தோட்டத்துக்கு போறேன்” என்றவாறே அவர் கிளம்பிவிட, தங்கம்மாளோ செய்வதறியாது அழுகையோடே அமர்ந்திருந்தார்.

வானம் – 32

கணவனின் வார்த்தைகள் அவர் மனதை பதம்பார்த்திருக்க, கண்களில் நீர் கோர்க்க அமர்ந்திருந்தவரின் மனதில் ரம்யாவின் உருவம் நிழலாட, படக்கென நிமிர்ந்து அமர்ந்தார் தங்கம்மாள்.

‘அவளை எப்படி மறந்தேன்’ என மனம் கூப்பாடு போட்டது. மணமேடையில் அவள் அதிர்ந்து நின்ற முகமே அவர் மனக்கண் முன் வலம்வர, மனம் மிகுந்த பாரமாகிப் போனது.

தான் நம்பிக்கையூட்டியதாலயே அவள் இத்திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததும் நினைவில் வந்து செல்ல இனி அவளின் முகத்தில் எவ்வாறு முழிப்பேன் என்ற குற்றவுணர்வும் தலைதூக்கியது.

அவருடைய வறட்டு கௌரவத்தால் இன்று இரு பெண்களின் வாழ்க்கை கூறப்போடப் பட்டிருக்க இங்கு யாரை குற்றம் சொல்ல என விதி தன் வழியைப் பார்த்துச் சென்றது.

விடிந்தும் விடியாத அந்த காலைப்பொழுதில் ரம்யாவின் வீட்டு வாசலில் நின்றிருந்தார் தங்கம்மாள். எழுந்ததும் நேராய் அங்கு வந்துவிட்டவருக்கு அதற்குமேல் ஓரடி கூட எடுத்து வைக்க தெம்பில்லை. கல்லாய் சமைந்து நின்றவரை வாசல் தெளிக்க வந்த ரம்யாவின் தாயார் கண்ணில் பட,

“ஒருத்திய கொன்னு மேல அனுப்புனது பத்தாதுனு என் மவ உயிரையும் காவு வாங்க காலங்காத்தாலயே வந்துட்டீங்களா?” என்றவரின் வார்த்தைகளில் அனல் தெறித்தது.

“அதுவந்து சம்ப…ந்தி” என சம்பந்தியை மென்று முழுங்கியவர், “என்னை மன்னிச்சிருங்க… இப்படி அவ பண்ணிப்பான்னு நான் எதிர்பார்க்கல” என கரம்கூப்பினார் தங்கம்மாள்.

“என் மவ வாழ்க்கைய அழிச்சதும் இல்லாம எவ்ளோ திண்ணக்கம் இருந்தா என் வீட்டுக்கே வந்து இப்படி கண்ணீர் வடிப்ப… இங்க இருந்து நீயா போய்ட்டா நல்லது” என்றவரின் வார்த்தைகள் ஒருமைக்குத் தாவியிருந்தது.

அவரின் வார்த்தைகளில் கூனி குறுகினாலும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை அவர். “ஒரே ஒரு தடவ ரம்யாவ பார்த்து மன்னிப்பு கேட்டுகிறேன் துளசி” என்றவரை புழுவைப் பார்ப்பது போல் அசூயையாய் பார்த்தார் அவர்.

“மன்னிப்பா…” என்றவரின் வார்த்தைகளில் வலி மிகுந்திருக்க, “மன்னிக்க கூடிய காரியத்தையா நீ மறச்சு நடத்த பார்த்த? மவன் வாழ்க்கைனு கூட யோசிக்காம அண்ணன் மவளையே காவு கொடுத்துட்டு என் மவ வாழ்க்கையவும் சேர்த்து அழிக்க பார்த்துட்டியே!

பாவிமவ, உனக்கு என்ன பாவம் பண்ணோம் நாங்க! இதெல்லாம் நடக்காம இருந்து என் மவ கழுத்துல தாலி ஏறி இருந்தாலும் அவ சந்தோசமா தான் வாழ்ந்திருக்க முடியுமா? கண்ணீரு கம்பலையுமா அவ வாழ்றதுக்கு கண்ணாலம் கட்டாமயே எங்க மவளா சந்தோசமா இருந்தாலே போதும். தயவுசெஞ்சு இங்க இருந்து போய்ரு” என்றவரிடம் மேலும் பேச முடியாமல் அமைதியாய் அங்கிருந்து நகர, அவர் நின்ற இடத்தில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி கழுவினார் துளசி.

பின்னால் திரும்பிப் பார்க்காமலே அவரின் செயல் தங்கம்மாளிற்கு புரிபட மொத்தமாய் நொறுங்கிப் போனார். தளர்ந்த நடையுடன் தன் இல்லத்தை வந்தடைந்தவர் நேராய் தன் அண்ணனின் வீட்டை நோக்கிச் சென்றார்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறே சுவரில் சிரித்த முகமாய் புகைப்பட சட்டத்திற்குள் அடைபட்டிருந்த தன் மகளை கண்ணீர் தளும்ப பார்த்துக் கொண்டிருந்தார் நல்லசுந்தரம்.

தன் அண்ணனின் கோலம் கண்டு அவரின் காலில் விழுந்தவர், “இந்த பாவிய நீயாச்சும் மன்னிப்பியாண்ணா” என்றவர் காலைப் பிடித்துக் கொண்டு அழ, அவரிடம் எந்தவித எதிர்வினையும் தென்படவில்லை.

அவரின் சப்தத்தில் அறைக்குள் இருந்து எட்டிப் பார்த்த வாணி அறைக்கதவை பிடித்தவண்ணம் அங்கேயே நின்றுக் கொண்டார்.

தங்கம்மாள் ஏதேதோ சொல்லி மன்னிப்பு வேண்டியும் நல்லசுந்தரமோ அசைவற்று அமர்ந்திருக்க, “என் உயிரை கூட எடுத்துக்கோண்ணா… இப்படி பேசாம இருக்காதண்ணா” என்றும் அவர் அசைந்துக் கொடுக்காமல் இருக்க தளர்ந்த நடையோடு தன் இல்லம் நோக்கி புறப்பட்டவரை நல்லசுந்தரத்தின் வார்த்தைகள் தடுத்தன.

“மிச்சம் இருக்கிற அவன் உசுரையும் எடுத்துறாத தாயி” என்றவரின் வார்த்தைகளில் கண்ணாடித் துண்டைப் போல் உடைந்து சிதறினார் தங்கம்மாள்.

கடந்த சில நாட்களாய் வார்டனிடம் கூறியது போல் சித்தார்த்தின் இல்லம் உள்ள திசையை கூட பார்க்காமல் தன் வேலையை கவனித்துக் கொண்டிருந்தாள் சரயு.

ரேவதியின் நினைவுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள படிப்பிலும் வேலையிலும் கவனத்தை செலுத்த முயன்றாலும் அதனை எல்லாம் மீறி அவ்வப்போது கண்ணீர் நான் இருக்கிறேன் என காட்டிக் கொண்டது.

அவளின் தற்போதைய ஆறுதல் இதழிகா மட்டுமே என்பதுபோல் கடைக்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் உடன் இருத்திக் கொண்டாள்.

தன் தோழியின் நடவடிக்கைகளைக் கண்டு பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் அன்று கேள்விக் கணைகளால் வெடித்து விட்டாள் சம்யுக்தா.

இருவரும் கடையில் தான் வேலையில் இருக்க அன்று திங்கட்கிழமை என்பதால் வாடிக்கையாளர்களின் வரவு சற்று குறைவாகவே இருக்க தன் தோழியின் கரம் பற்றி ஓரமாய் அழைத்துச் சென்றவள்,

“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க டி… உன்னை பார்க்க பார்க்க எனக்கு பைத்தியம் பிடிச்சுரும் போல” என இரு கைகளாலும் தலையை அழுந்தப் பிடித்த வண்ணம் வினவ, அவளோ பதிலளிக்காமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சரயு” என மீண்டும் அழுத்தமாய் அழைக்க, “ப்ச், இப்போ உனக்கு என்ன பிரச்சினை சம்யு?” என்றவளை கண்கள் இடுங்கப் பார்த்தாள் சம்யுக்தா.

“அன்னிக்கு வார்டன்ட்ட நீ சித்தார்த் சார் வீட்டுக்கு இனி போக மாட்டேன்னு சொன்னப்போ எனக்கு உண்மையா உன்மேல நம்பிக்கை இல்ல. ஆனா, இப்போ நீ அங்க போறது இல்ல. சரி, நீ அவர்கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சுட்டியோனு நான் நினைச்சேன். ஆனா அதுக்கு எதிர்மாறா இங்க கடைக்கு வேலை வர்றப்ப எல்லாம் இதழிகா கூட முன்னை விட இப்போ அதிகமா குளோஸா இருக்க.

உன் மனசுல என்ன நினைச்சுட்டு இப்படி எல்லாம் பண்ற சரயு? உங்க ரெண்டு பேர் பிரச்சினைக்கு இடைல அந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு! நம்ம படிப்பு முடிய இன்னும் சில மாசம் தான் இருக்கு.

உனக்கே நல்லா தெரியும், ஒரு நாள் உன்னைப் பார்க்கலனா கூட இதழிகா ரொம்ப ஏங்கிப் போறா… இப்போ நீ அவக்கிட்ட காட்ற அன்பு நாளைக்கு இல்லனு ஆகும்போது அந்த பிஞ்சு மனசு தாங்குமா டி? எனக்குப் புரியுது, இப்போ நீ இருக்கிற சூழ்நிலைக்கு இதழிகாவோட அருகாண்மை உனக்கு தேவைப்படுதுனு. ஆனா… அது அந்த குழந்தைய உனக்காக ரொம்ப ஏங்க வச்சுரும் டி” என்றவளின் வார்த்தைகளில் இதழிகாவின் மீதுள்ள உண்மையான அக்கறை வெளிப்பட்டது.

தன் தோழியின் கேள்விகளுக்கு சிறு புன்னகை ஒன்றை பதிலாக்கியவள், “நீயே இவ்ளோ யோசிக்கும்போது நான் யோசிக்காம இருப்பனா சம்யு!” என்றவளின் வார்த்தைகளில், ‘இன்னுமா நீ என்னை புரிந்துக் கொள்ளவில்லை?’ என்ற கேள்வியும் தொக்கி நின்றது.

அதனை உணர்ந்தவளாய், “அது சரயு… எனக்குப் பயமா இருந்துச்சு டி” என வார்த்தைகளை தடுமாறிக் கோர்த்தாள் சம்யுக்தா.

தன் தோழியின் கரத்தை ஆதரவாய் பற்றிக் கொண்டவள், “நான் எல்லாம் யோசிச்சு, உணர்ந்து தான் பண்றேன் சம்யு. நீ கவலைப்படற மாதிரி எதுவும் நடக்காது. நடக்கவும் விட மாட்டேன்” என்றவள் அவளது கன்னத்தை மெல்லியதாய் தட்டிவிட்டு சென்றாள் சரயு.

தன் தோழியின் வார்த்தைகளில் தெரிந்த உறுதி அவள் ஏதோ முடிவெடுத்துவிட்டதாய் உணர்த்த அதற்குமேல் அவளிடம் என்ன பேசியும் பிரயோஜனமில்லை என்பதைப் புரிந்துக் கொண்டு அவள் வழியிலேயே பயணித்து தான் அவளின் எண்ணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என நினைத்தவள் அமைதியாய் அங்கிருந்து நகர்ந்தாள் சம்யுக்தா.

சரயுவின் செயல்பாடுகளால் சித்தார்த்திற்கு கூட சிறு குழப்பம் நேரிட்டிருந்தது. தான் கூறியதற்காகவா அவனின் இல்லத்திற்கு வருவதைத் தவிர்க்கிறாள் என்ற கேள்வியும் உடன் இதழிகாவோடு முன்னைவிட தற்போது அதிக நேரம் செலவழிப்பது குழப்பத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் அவளைப் பற்றி அவன் அறிந்துக் கொள்ள இதழிகா மட்டுமே பாலமாய் இருக்க அவர்கள் இருவரின் நெருக்கத்தையும் உடைக்க விரும்பவில்லை அவன்.

அவனின் மனம் தற்போதெல்லாம் அவனின் சொல்பேச்சு கேட்பதில்லை என்பதை உணர்ந்திருந்தான்.

தாய் பசுவைக் கண்டு ஓடிச்சென்று தஞ்சம் கொள்ளும் இளங்கன்றுக் குட்டியை போல் அவனின் மனம் இப்போதெல்லாம் அவனின் அனுமதி இல்லாமலே அவளிடம் தஞ்சம் கொள்ள முனைகின்றது.

ஏதோ கணக்கு வழக்கில் மூழ்கி இருந்தவனை இதழிகாவின் குரல் திசைதிருப்ப கணிணியில் இருந்து பார்வையை மீட்டெடுத்து குரல்வந்த திசையை நோக்கி கண்களை சுழலவிட்டான்.

இதழிகா தான் சரயுவிடம் தீவிரமாக ஏதோ விவாதம் செய்துக் கொண்டிருக்க அவளோ கண்டிப்பான முகபாவனையோடு ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள்.

அவள் ஊருக்குச் செல்வதற்கு முன் இருந்ததை விட பாதிக்கும் மேல் இளைத்திருந்தாள். கண்களைச் சுற்றியிருந்த கருவளையம் அவளின் தூக்கமின்மையை பறைசாற்றியது. என்னைக் கொஞ்சம் கவனி’ என்பது போல் தோள்பட்டை எலும்பு துருத்திக் கொண்டிருந்தது. அவள் அணிந்திருந்த எளிமையான காட்டன் சல்வார் அவளின் அழகை சற்றுக் கூட்டி காட்டி இருந்தாலும் அவளின் துக்கத்தை பறைசாட்டிய முகம் அதனை சற்றே ஒளித்து வைத்துக்கொண்டது.

சரயுவின் மேல் ஓரிரு நிமிடங்கள் அவனின் பார்வை படிய அதற்குள் அவளை முழுவதுமாய் ஸ்கேன் செய்திருந்தன அவனின் விழிகள்.

“ஆடி மாச காத்துல பறந்துப் போய்ருவா போல, என்னதான் சாப்டறாளோ! மொதல்ல ஒழுங்கா சாப்ட சொல்லணும்” என நினைத்தவனுக்கு அதனை செயலாற்ற வழியும் புலப்பட அவன் இதழ்கள் மந்தகாசமாய் புன்னகைத்தன.

“இதழி மா தான் உனக்கு சரியான ஆளு” என முணுமுணுத்தவன், ‘அவக்கிட்ட இருந்து விலக நினைக்கிற மொகரக்கட்டையா இது’ என வசைபாடிய மனசாட்சியை சற்றே ஓரம் தள்ளி தான் நினைத்ததை நிறைவேற்றும் வண்ணம் இதழிகாவை அழைத்தான்.

அதன்பின் நாட்கள் வேகமாய் விரைந்தோட, வழக்கம்போலவே மாற்றமில்லாமல் சரயுவின் வாழ்க்கை நகரத் தொடங்கின. அதோ, இதோ என கண்ணாமூச்சி ஆட்டம் காண்பித்த இறுதி செமஸ்டர் தேர்வுகளும் நெருங்கி இருந்தது.

இன்னும் நான்கு நாட்களில் தேர்வு என்பதால் ஸ்டடி ஹாலிடே’யில் இருந்தனர் தோழியர் இருவரும். படித்த களைப்பில் உறங்குவதாக சொல்லிக்கொண்டு தூக்கத்தின் பிடியில் இருக்கும் தன் தோழியைப் பார்த்து புன்னகைத்தாள் சரயு.

தங்கள் அறையின் பலகணி அருகே நாற்காலி ஒன்றை போட்டு அதில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தவளின் விழிகள் இரண்டும் பலகணி வாயிலாய் தெரிந்த சித்தார்த்தின் இல்லம் மேல் படர, “சித்” என அவளின் இதழ்கள் முணுமுணுத்தன.

அவள் அன்று கூறியது போலவே அந்த வீட்டிற்கு இன்று வரை செல்லாமல் தான் இருந்தாள். ஆனால் அவளின் பார்வைகள் அந்த வீட்டையே தான் இந்த பலகணியின் உதவியால் தினமும் மொய்த்தன.

அவனிடம் கடைசியாய் அவனது இல்லத்தில் நின்று பேசியது தான். பேசியதா, இல்லை இல்லை அவன் பேசியதை இவள் கேட்டது தான். அதன்பின் இருவருமே நேரடியாய் பேசிக்கொள்ள முனையவில்லை.

ஆனால் இதழிகாவின் மூலம் ஒருவரைப் பற்றி மற்றொருவர் அறிந்துக் கொண்டு தான் இருந்தனர். அதை சம்பந்தப்பட்ட இருவருமே அறிந்தும் இருந்தது தான் அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தின் சிறப்பம்சம்.

கடினப்பட்டு அவனின் வீட்டின் மேல் இருந்த பார்வையை பிய்த்து எடுத்துக் கொண்டு பாடப்புத்தகத்தில் பதிய வைக்க முயலும் நேரம் அவளின் அலைப்பேசி அலறியது.

அதன் சப்தத்தில் சம்யுக்தாவின் தூக்கம் கலைந்துவிடும் என்றெண்ணி வேகமாய் அதனை சைலண்ட் மோடில் போட்டவள் திரையில் ஒளிர்ந்த பெயரைக் கண்டு சிறிதாய் கண்கள் விரிய, அழைப்பை ஏற்றாள்.

“அண்ணா!” என்றவளின் அழைப்பில் மறுமுனையில் சில விநாடிகள் நிசப்தம் நிலவி பின், “எப்படி இருக்க குட்டிமா” என்றது.

பிரஷாந்தின் குரலிலே அவனின் நிலை உணர்ந்தாள் அவனின் தமக்கை. “என்னண்ணா, இந்த நேரத்துல கூப்ட்ருக்க?” என தயங்கியே வந்தன வார்த்தைகள்.

“ஒன்னுமில்ல டா… தண்ணி பாய்ச்ச தோட்டத்துக்கு வந்தேன். உனக்கு ஸ்டடி ஹாலிடேனு ஞாபகம் வரவும் கூப்ட்டேன்” என்றவன், “சாப்டியா குட்டிமா?” என்றான் பிரஷாந்த்.

“நான் சாப்ட்டேன் ண்ணா. நீ ஒழுங்கா சாப்டுறியா? இல்ல வேல வேலனு தோட்டத்துலயே இருக்கியா?” என்றவளிள் குரலில் சிறு கோபம் எட்டிப் பார்த்தது.

“இப்ப ஒழுங்கா சாப்டறேன் குட்டிமா. நீ சொன்னத நான் செய்யாம இருப்பனா!” என்றவனின் வார்த்தைகளில் சரயுவின் மனம் பாரமானது.

ரேவதியின் இறப்பை தன்னாலயே அவ்வளவு எளிதில் கடந்து வர முடியாத சூழலில் தன் அண்ணனின் நிலையை உணர்ந்தானிருந்தாள். ஆனால் அதற்காக தன்னையே வருத்திக்கொண்டு உண்ணாமல் சதா சர்வகாலமும் அவளின் நினைவிலே இருந்த அண்ணனை அதட்டி உருட்டி மிரட்டி என தினமும் அவன் உண்பதை வீடியோ காலில் பார்த்தப் பின் தான் நிம்மதியானாள்.

சில நாட்களாய் தான் வீடியோ கால் நிறுத்தப்பட்டிருந்தது. அதுவும் தன் அண்ணன் ஓரளவு தன்னை சமன்படுத்திக்கொண்டான் என்பதை அறிந்த பிறகு தான்.

“எக்ஸாம் முடிஞ்சோனே இங்க ஊருக்கு வர்றியா குட்டிமா!” என்றவனின் குரலில் இருந்த உணர்வை அவளால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.

“என்னால முடியும்னு தோணல ண்ணா. போன வாரம் இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண ஸ்கூல்ல இருந்து நேத்து தான் அப்பாயிண்மெண்ட் ஆர்டர் வந்துருக்கு. எக்ஸாம் முடிஞ்சோனே வந்து ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க ண்ணா” என்றவள் மறைமுகமாய் தான் அங்கு வர விருப்பப்படவில்லை என்பதை உணர்த்தி இருந்தாள்.

அதற்குமேல் அவனும் அதனைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை. தினந்தினம் தன் தாயை பார்க்க நேரும் போதெல்லாம் ரேவதியின் முகம் நிழலாட அதில் இருந்து முற்றிலும் அவரிடமிருந்து விலகியே தான் இருக்கிறான்.

அவனது நாள் முழுவதும் தோட்டம், தண்ணீர் பாய்ச்சுதல், உழவோட்டுதல் என முற்றிலும் வேலை சம்பந்தப்பட்டதாகவே மாறிவிட சில நேரங்களின் இரவு கூட அங்கேயே அமைந்துவிட வீட்டிற்கு செல்வது அபூர்வமாக தான் இருந்தது.

அவன் இருக்கும் இடத்திற்கே நேரநேரத்திற்கு உணவைக் கொண்டு வந்து கொடுப்பது முத்துச்சாமியின் வேலையாயிற்று. அப்பா, மகன் உரையாடல் கூட முழுக்க முழுக்க வேலை, தோட்டம் சம்பந்தமாகவே இருந்தாலும் இப்போதெல்லாம் தன் மகனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு தான் வேலைகளை செய்கிறார்.

தன் தந்தையின் மாறுதல்கள் புரிந்தாலும் அதையும் அமைதியாகவே கடந்து செல்ல சரயுவோ ஊருக்கு வருவதை முற்றிலும் தவிர்த்திருந்தாள்.

தங்கம்மாளிடம் பேசுவதை அறவே நிறுத்தி இருக்க அவ்வப்போது அழைக்கும் தன் தந்தையிடம் நலவிசாரிப்புகளோடு நிறுத்திக் கொள்வாள். அவரும் அவளை ஊருக்கு அழைத்தாலும் ஏதோ ஒரு காரணம் கூறி மறுத்துவிட அவரும் அதன்பின் வற்புறுத்தவில்லை.

தன் அண்ணனிடம் பேசிவிட்டு வைத்தவள், மீண்டும் பாடத்தினுள் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்.

வீட்டினுள் நுழைந்த சித்தார்த் தன் மகளைத் தேட, “அவ தூங்கிட்டு இருக்கா கண்ணா” என்றவாறே தண்ணீரை நீட்டினார் கற்பகம்மாள்.

அதனை வாங்கிப் பருகியவன், “இதழிமா’வுக்கு ஸ்கூல்ல அட்மிஷனுக்கு கேட்டுட்டு வந்துருக்கேன் ம்மா. நாளைக்கு இதழிமா’வையும் கூட்டிட்டுப் போய் அட்மிஷன் போட்டுட்டு வந்தற்லாம்” என்றவன் வெயிலில் சென்று வந்ததால் ஏற்பட்ட அசதியின் காரணமாய் கைகளை மேலே தூக்கி தலைக்கு முட்டுக்கொடுத்து ஷோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.

“நான் சொன்ன ஸ்கூல்லயா கண்ணா” என அவர் விசாரிக்க, “ஆமா மா… நீங்க சொன்னீங்களேனு நானும் விசாரிச்சு பார்த்தேன். விசாரிச்ச வரைக்கும் அங்க கோட்சிங் நல்லா இருக்குனு சொல்றாங்க. ஸ்கூல் பஸ்ஸும் நம்ம தெரு வரைக்கும் வருது. வீட்டுக்கு முன்னாடியே ஏறிக்கலாம். பயமில்ல, அதான் அங்கேயே எல். கே. ஜி’க்கு அட்மிஷன் போட்றலாம்னு கேட்டுட்டு வந்தேன். போன வருஷமே சேர்த்துருக்கலாம். விட்டுட்டோம்” என்றான் சிறு வருத்தத்தோடு.

“அதுனால என்ன கண்ணா, இப்போதான் அவ கொஞ்சம் வெளியாட்கள கண்டா பயமில்லாம பழகுறா… இந்த கொஞ்ச நாள்ள அவகிட்ட நிறைய வித்தியாசம் ஏற்பட்டிருக்கில்ல” என்றவர்,

“எல்லாத்துக்கும் சரயுக்கு தான் நம்ம நன்றி சொல்லணும்” என்றவருக்கு அவள் சில மாதங்களாய் தங்களது வீட்டிற்கு வராதது வருத்தமாய் இருக்க அதனை தன் மகனிடமும் அவ்வபோது வெளிப்படுத்திக் கொண்டு தான் இருந்தார். ஆனால் அவனோ அதற்கு பதிலளிக்க மறுத்திருந்தான்.

“ஏன் கண்ணா சரயுவுக்கு இப்போ எக்ஸாம் ஆரம்பிக்க போகுதாமே! நம்ம குட்டிமா சொன்னா. இது கடைசி வருஷம்ல, படிப்பு முடிஞ்சோனே ஊருக்குப் போய்ரும்ல” என மெதுவாய் அவனின் மனதை அறிய முயன்றார்.

அவனுக்கும் அதை நினைத்து கவலை உண்டாகிருந்தது. ஆனால் அதனை லாவகமாய் மறைத்து, “அதுனால என்ன ம்மா, படிக்க வந்தாங்க. படிப்பு முடிஞ்சோனே கிளம்பி தான ஆகணும். எதிர்பார்த்த ஒன்னு தான” இதனால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்பதாய் உரைத்தவன் தன் அறைக்குச் செல்ல மகனின் முகத்தில் இருந்து அவரால் அவனின் உணர்வுகளை கண்டறிய முடியவில்லை.

வழக்கம்போல் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றார்.

அறைக்குள் வந்தவனோ உறங்கிக் கொண்டிருக்கும் மகளின் தலையை வருடிக் கொடுத்தான். “அவ இல்லாம நீ இருந்துருவியா இதழிமா” என அவன் இதழ்கள் முணுமுணுத்தன. அவன் மனமோ, ‘அவ இல்லாம நீ மட்டும் இருந்துருவியா சித்தார்த்’ என எதிர்கேள்வி கேட்டது. அவனிடம் பதிலில்லை.

அவளிடம் பேசாமல் இருந்தாலும் தன் கண்ணுக்கெட்டும் தொலைவில் அவள் இருப்பதே இத்தனை நாள் மனதிற்கு இதமாய் இருந்தது. ஆனால் இனி என்ற கேள்விக்கு அவனிடம் பதிலில்லாமல் போக உறங்கும் மகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வானம் – 33

இத்தோடு பதினோராவது தடவையாக அவளின் வாட்ஸ்அப் முகப்பு படத்தை பார்த்து விட்டான் சித்தார்த். ஆனால் இன்னுமே அது வெறுமையாய் காட்சியளிக்க, “சதிகாரி, வேணும்னே இப்படி பண்றா” என அவளை சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்தவனின் மனதில் கடைசியாய் அவளைப் பார்த்தது ஞாபகத்திற்கு வந்தது.

கல்லூரி கடைசி நாளில் அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என சம்யுக்தா தான் அவளை கடைக்கு இழுத்து வந்திருந்தாள். அவனிடம் முறையாய் விடைபெற்று தனது சம்பளப் பணத்தையும் பெற்றுக் கொண்டு சம்யுக்தா கிளம்பும் வரையிலும் உடன் இருந்தாலுமே அவனை நோக்கி அவள் ஒற்றை வார்த்தை உதிர்த்திடவில்லை.

அவளின் சம்பள பணத்தையும் அவன் எடுத்துக் கொடுக்க அமைதியாய் பெற்றுக்கொண்டாளே ஒழிய மறந்தும் அவனை நேருக்குநேர் பார்த்திடவில்லை. அவள் கிளம்பும் கடைசி நொடி வரைக்குமே சித்தார்த்தின் விழிகள் அவளை தான் பின்தொடர்ந்தன.

அதன்பின் இதோ ஒரு வாரம் உருண்டோடி இருந்தது. இந்த ஒரு வாரத்தை அவளை பார்க்காமல் நெட்டி தள்ளுவதற்குள் அவனுக்கு அப்பப்பா என்றிருந்தது. இதனிடையே அவனை கொஞ்சமே கொஞ்சம் உயிர்ப்போடு வைத்திருந்தது என்றால் அது அவளின் வாட்ஸ்அப் முகப்பு படம் தான். அவள் நினைவு வரும்போதெல்லாம் வாட்ஸ்அப்பில் உள்ள அவளது புகைப்படத்தை பார்த்தே சற்றே தேறிக் கொள்வான்.

ஆனால் இன்றோ அது வெறுமையாய் காட்சியளிக்க அதனைப் போலவே அவனது மனமும் வெறுமையாய் இருந்தது. தினமும் அவளது புகைப்படத்தைப் பார்த்தாலும் சேமித்து வைத்துக்கொள்ள மறந்திருந்த தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்ததோடு மட்டுமல்லாமல் அவளை அர்ச்சனை செய்யவும் தவறவில்லை.

அதே கடுப்பில் வீட்டிற்கு வந்தவன் தன் அன்னையிடம் மெதுவாக, “ஏம்மா இப்போலாம் இதழிமா சரயுவ பத்தி கேட்கிறாளா? ஒருநாள் பேசல அப்படினாலே ஏங்கிப் போயிருவாளே! ரொம்ப கஷ்டப்படறாளா மா” என்றான்.

அவனது முகத்தையே ஓரிரு நிமிடங்கள் கூர்ந்துப் பார்த்து விட்டு, “ரொம்ப தான் புள்ளைய பத்தின அக்கறை” என நொடித்துக்கொண்டவர் தன் வேலைகளைக் கவனிக்கச் செல்ல, ‘இப்போ நம்ம என்ன கேட்டோம் இவங்க என்ன பதில் சொல்லிட்டுப் போறாங்க’ என திருதிருவென முழித்தான் சித்தார்த்.

இதழிகா வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்க அவளைப் பார்த்தவாறே, “நான் என்ன கேட்டா நீங்க என்ன பதில் சொல்றீங்க ம்மா!” என்றான்.

“நான் என்னத்த டா சொல்றது? அந்த புள்ளை நமக்கு எவ்ளோ பண்ணிருக்கு. அத வீட்டுக்கு வர வேண்டாம்னு சொன்னதும் இல்லாம அது மனசையும் கஷ்டப்படுத்தி அனுப்பிட்ட. இப்போ படிப்பு முடிஞ்சு ஊருக்கே போய்ருச்சு. இனி அத பார்க்க முடியுமோ முடியாதோ!” என புலம்பியவர், “அவ இல்லாம குட்டிமா இருக்க மாட்டானு தெரியும் தான… இப்ப என்னவோ புதுசா கேட்கிறவன் மாதிரி கேட்கிறது” என தாடையை சிலுப்பிக் கொண்டார்.

மகனின் மேல் அளவுகடந்த கோபம் உள்ளுக்குள் கனன்று கொண்டு தான் இருந்தன. ஆனால் அதனை முழுதும் வெளிகாட்டிட முடியவில்லை அவரால்.

“பாவம் அந்த புள்ள… ஆண்டவா அதுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுத்துருப்பா. வர்றவன் அவள தங்கமா தாங்கணும். அது மனசுக்கேத்த படி வாழ்க்கை அமையணும்” என்ற வேண்டுதலோடு தன் பேத்தியை நோக்கிச் சென்றார் கற்பகம்மாள்.

தன் தாயின் கோபம் புரிந்தாலும் தான் கேட்டதற்கும் அவரின் பதிலுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்க முற்றிலும் குழம்பிப் போனான் சித்தார்த்.

இதழிகாவும் அவனிடம் சரயுவை பற்றி பேசிடவில்லை. அதற்கு மாறாக இன்னும் இரு வாரங்களில் தொடங்க இருக்கும் பள்ளிக்கூடத்தைப் பற்றியே பேச்சுகள் வலம்வர, புது பேக், ஷூ, பென்சில் என்றே அவளின் வார்த்தைகள் இருந்தன.

அவனுக்கு தான் பைத்தியம் பிடிப்பது போல் ஆனது. அவளை மறக்க தன்னை வேலையில் ஈடுபடுத்திக் கொள்ள முனைய அதன் விளைவால் அவன் வீட்டில் இருக்கும் நேரம் குறைவானது.

நாட்களும் அதன்போக்கில் நகர அன்று இதழிகா முதல் நாள் பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.

காலையில் இருந்தே பாட்டியும் பேத்தியும் அந்த வீட்டையே இரண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அலம்பல் தாங்காமல், “அம்மா, உங்க பேத்தி எல். கே. ஜி தான் படிக்கப் போறா, ஏதோ கலெக்டர் ஆகி முதல் நாள் வேலைக்கு போற மாதிரி இப்படி அலப்பறை பண்றீங்க” என்றிருந்தான் சித்தார்த்.

“நோ கலெக்டர், நான் போலீஸ் தான் ஆகுவேன்” என இடுப்பில் ஒரு கையும், அவனை நோக்கி ஒரு கையுமாய் பத்திரம் காட்டினாள் இதழிகா.

“ஓ கே, ஓ கே போலீஸ் மேடம்…” என அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், அவளுக்கு அறிவுரை வழங்க முற்பட, “அதெல்லாம் ஏற்கெனவே பாட்டி சொல்லிட்டாங்க ப்பா” என்றவள், “சரயு…” எனத் தொடங்கி வேகமாய் தன் பாட்டியை பார்த்தவள், பின் “மிஸ்ஸ இன்னும் காணமே பாட்டி” என்றாள்.

அவள் சரயு எனக் கூற வந்து பின் மாற்றியதைக் கண்டுகொண்டவன் தன் தாயைப் பார்க்க அவரோ, “ஏங்க அந்த லஞ்ச் பாக்ஸ உள்ளயே வச்சுட்டேன், அத பார்த்து எடுத்துட்டு வாங்க” என தன் கணவரை ஏவியவர்,

“பஸ் வர்ற நேரமாச்சு குட்டிமா, வா கிளம்பலாம்” என பேத்தியை வெளியே அழைத்து வந்தார் கற்பகம்மாள்.

நேரம் பார்த்தவன், “இந்நேரம் பஸ் வந்திருக்கணுமே” என்றவாறே மற்றதை புறம்தள்ளி மகளை பள்ளிக்கு அனுப்ப பள்ளி பேருந்து வருகிறதா என வாயிலிற்கு வந்து எட்டிப் பார்த்தவனின் விழிகள் அதிர்ந்தன.

விடுதியில் இருந்து அவனது இல்லம் நோக்கி தான் வந்துக் கொண்டிருந்தாள் சரயு. கருப்பு கரையிட்ட மஞ்சள் வண்ண காட்டன் புடவை பாந்தமாய் அவளது தேகத்தை தழுவியிருக்க அதற்கு பொருத்தமாய் கருப்பு வண்ணத்தில் தங்க நிற ஜரிகைகள் இழையோடியிருந்த அரைக்கை பிளவுஸ் அணிந்திருந்தாள்.

கிட்டத்தட்ட இருபது நாட்களுக்குப் பிறகான அவளது தரிசனத்தை கண்களுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தான் சித்தார்த்.

அவளது வலது கரத்தில் தொங்கிய தோள்பையும், இடது கரத்தில் வீற்றிருந்த நோட்டு புத்தகங்கள் மார்போடு சேர்த்து அணைத்திருத்த தோற்றமும் அவளின் பணியை பறைசாற்ற, திரும்பி தன் தாயையும் மகளையும் முறைக்க, அவர்களோ அவனைக் கண்டு கொண்டால் தானே!

“சரயு” என இதழிகா அவளிடம் தாவியிருக்க கற்பகம்மாளோ அவளுக்கு திருஷ்டி சுற்றிப் போட, அவளோ இதழ்களில் புன்னகை உறைய நின்றிருந்தாள்.

அதற்குள் பள்ளிப் பேருந்தும் வந்துவிட அவனின்புறம் திரும்பாலே இதழிகாவோடு வாகனத்தில் ஏறிக்கொண்டாள் சரயு.

பள்ளி வாகனம் கண்ணுக்கு மறையும் வரை நின்றிருந்தவர்கள் பின் வீட்டினுள் நுழைய முற்பட, “இவ்ளோ நாளா அவ இங்க தான் இருந்திருக்கா இல்லயா ம்மா!” என்றவனின் குரலில் அவனது உணர்வை உள்வாங்கிக் கொண்டவரால் உடனடியாக பதிலளிக்க முடியவில்லை.

“அதுவந்து கண்ணா…” என அவர் தடுமாற, அவரது பதிலை எதிர்பாக்காமல் வேகமாய் தனது வண்டியை உயிர்ப்பித்தவன் அதே வேகத்தில் சாலையில் பயணித்தான்.

தன் மகனின் கோபத்தைக் கண்டு நிலைகுனிந்து நின்ற தன் மனைவியின் தோள் தட்டியவர், “கவலப்படாத கற்பகம், ஒரு நல்லது நடக்கணும்னா இதெல்லாம் தாண்டி தான் வந்தாகணும்” என்க, கண்களில் துளிர்த்த நீரை துடைத்த வண்ணம் வீட்டினுள் சென்றார்.

அவள் இங்கு தான் இருந்திருக்கிறாள், அவள் தேர்ந்தெடுத்த பள்ளியில் தான் இதழிகாவை சேர்க்க வைத்திருக்கிறாள், இவையனைத்தும் தெரிந்துமே தன்னிடம் மறைத்துள்ளார்கள் என்ற கோபம் ஒருபுறம் கனன்றுக் கொண்டிருக்க, தன் அருகில் இருந்துமே தன்னை தவிக்கவிட்டு வேடிக்கைப் பார்த்துள்ளாள் என்ற கோபம் மறுபுறம். இரண்டும் இணைய அவனது வண்டியின் வேகம் தாறுமாறாக எகிறத் தொடங்கியிருந்தது.

அரைமணிநேர ஓட்டத்தில் கோபம் சற்றே மட்டுப்பட வண்டியின் வேகம் சற்றே குறையத் தொடங்கி பின் கடையை நோக்கி திருப்பினான்.

கடைக்கு வந்து தன் இருக்கையில் சாய்ந்து அமரும் வரையிலும் அவன் மனம் நிலையாய் இருக்கவில்லை. ஏதோ நினைவு வந்தவனாய் தனது அலைப்பேசியை இயக்கி வாட்ஸ்அப்பிற்கு சென்று அவளது எண்ணில் தெரிந்த முகப்புப் படத்தை பார்வையிட்டான்.

கடந்த இருபது தினங்களுக்கும் மேலாய் வெறுமையாய் காணப்பட்ட அவளின் முகப்பு படம், இன்று இதழிகாவை மடியில் அணைத்தவண்ணம் அமர்ந்திருந்த சரயுவின் தோற்றம் அவன் கண்முன் படர்ந்தது. அவர்கள் இருவரும் பள்ளி வாகனத்தில் அமர்ந்திருந்த தோற்றம் சற்று முன்னர் தான் அந்த புகைப்படம் எடுத்திருப்பதை பறைசாற்றியது.

அவளின் முகப்பு படத்தை ஒருநாள் அவன் பார்த்துக் கொண்டிருந்ததை இதழிகா பார்க்க நேரிட்டிருக்க, அதனை அப்போது கவனிக்கத் தவறியிருந்தான். ‘ஆக, தான் அவளது புகைப்படத்தை பார்ப்பது தெரிந்தே தான் இத்தனை நாள் அவள் வேண்டுமென்றே புகைப்படத்தை நீக்கி இருந்தது புலப்பட கண்களை இறுக மூடிக் கொண்டான்.

தான் முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என கூப்பாடு போட்டது. இருந்தும் மீண்டும் அவளது புகைப்படத்தை காணச் சொல்லி மனம் உந்த, அலைப்பேசியில் அவளது புகைப்படத்தை சற்றே பெரியதாக்கி அவளது முகத்தைக் கண்டவனின் உள்ளத்தில் இதுவரை இருந்த கோபம் கானல் நீராய் கரைந்துக் கொண்டிருந்தது.

அவளின் புகைப்படத்திலே மூழ்கியிருந்தவனை பாண்டியனின் குரல் திசைதிருப்பியது. “அண்ணா லோட் வந்திருக்கு” என்றவனிடம், “ம், வரேன் பாண்டியா” என்றவன் அலைப்பேசியை அவனது மேஜையின் மீதே வைத்துவிட்டு எழுந்தான்.

முதல் நாள் பள்ளி என்பதால் மாணவர்களின் அறிமுக உரையாடலுடனே வகுப்புகள் நகர்ந்து கொண்டிருக்க உணவு இடைவேளையில் தான் சற்று அமர நேரம் கிடைத்தது சரயுவிற்கு.

காலையில் தரிசித்த தன்னவனின் தோற்றம் மனதில் நிழலாட, “இப்பவும் கூட நீங்களா வந்து என்கிட்ட பேச மாட்டீங்கல்ல சித்” என குறைபட்டுக் கொண்டாள்.

‘இப்படியே உங்களை விட்டா அப்புறம் நேரா அறுபதாம் கல்யாணம் தான் பண்ண வேண்டி இருக்கும்’ என நினைத்தவள் அவனது எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

அழைப்பு அடித்து ஓயும் வரையும் அவன் எடுக்காமல் போக அவள் முகம் வாடியது. அதேநேரம் அவளைத் தேடி இதழிகா அங்கு வந்திருந்தாள். அவளிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு அவளது வகுப்பறையில் கொண்டு போய் விட்டுவிட்டு இவள் மீண்டும் ஆசிரியரின் அறைக்குள் நுழையவும் வகுப்புமணி அடிக்கவும் சரியாக இருந்தது.

அடுத்தாக வகுப்பு இருக்கவே அவசரமாய் தான் செல்ல வேண்டிய வகுப்பை நோக்கி நடந்தாள் சரயு.

வந்திறங்கிய மளிகைப் பொருட்களை சரி பார்த்துவிட்டு மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தவன் மணியை பார்க்க அதுவோ இரண்டென காட்டியது. அப்பொழுது தான் அலைப்பேசியை கவனித்தான் அவன்.

“இத இங்கயே வச்சுட்டு போய்ட்டமோ” என்றெண்ணியவாறே அதனைப் பார்க்க சரயுவின் அழைப்பை தவறிய அழைப்பாக காட்டியது.

“ஒரு வழியா மேடமுக்கு நம்ம ஞாபகம் வந்துருச்சு போல” என முணுமுணுத்தவனின் இதழ்கள் மந்தகாசமாய் புன்னகைத்தன.

ஆனால் நேரம் கடந்திருக்க, “லஞ்ச் டைம்ல கால் பண்ணிருப்பா போலயே! இப்போ கிளாஸ்ல இருந்தா என்ன பண்றது” என யோசித்தவன், “கூப்ட்டு பார்ப்போம்” எனக் கூறிக் கொண்டே அவளின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.

“விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

உன்னிடம் பார்கிறேன் நான் பார்கிறேன்
என் தாய்முகம் அன்பே…
உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன்
என்னாகுமோ இங்கே…

முதன் முதலாய் மயங்குகிறேன்
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்பு என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா…!”

சைந்தவியின் குரல் உருகிக் கொண்டிருந்தது. அழைப்பு ஒலி ஓய்ந்தும் கூட காதில் இருந்து அலைப்பேசியை எடுக்காமல் அப்படியே அமர்ந்திருந்தான் சித்தார்த்.

குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலியில் தான் அலைப்பேசியை எடுத்துப் பார்க்க சரயுவிடம் இருந்து தான் வந்திருந்தது.

Green Leaf Restaurant,
Saravanampatti,
Eve : 7.00

அவ்வளவு தான். அதற்குமேல் எவ்வித தகவல்களும் இல்லை. ஆனால் அதையே ஒரு நூறுமுறையேனும் மீண்டும் மீண்டும் வாசித்திருப்பான்.

இதழிகாவிற்கு 3. 30 க்கே பள்ளி முடிந்துவிடும் என்பதால் நான்கு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிட்டாள். அவளின் முதல் நாள் என்பதால் அந்த நேரம் சித்தார்த்ம் வீட்டில் தான் இருந்தான். இதழிகாவோடு சரயுவும் உடன் இறங்குவாள் என்றே தங்கள் வீட்டின் முன் வந்து நின்ற பள்ளி வாகனத்தைப் பார்க்க அவனது ஆசை நிராசையாகிப் போயிருந்தது.

பள்ளி பையை கூட கழற்றாமல் தன் பாட்டியிடம் ஆர்வமாய் கதையளந்துக் கொண்டிருந்தாள் அவள். “எங்க மிஸ் பேர் கீர்த்தனா பாட்டி, பாருங்க இன்னிக்கு எங்க எல்லாருக்கும் சாக்லேட் கொடுத்தாங்களே” என மிட்டாயை கையில் ஆட்டிக் கொண்டிருக்க,

“சரயு உங்க கூட வரலயா இதழிமா?” என ஒருவழியாய் நெடுநேரம் தொண்டைவரை போராடிக் கொண்டிருந்த கேள்வியை கேட்டுவிட்டான் சித்தார்த்.

“இல்ல ப்பா, சரயுவுக்கு வொர்க் இருக்காம்” என்றவள், உடைமாற்ற செல்ல மனதில் ஏனோ சிறு ஏமாற்றம் படர்ந்தது.

ஆரஞ்சும் நீலமும் நீயா நானா என ஆகாயத்தில் போட்டிப் போடத் தொடங்கி இருந்த அந்திமாலைப்பொழுது. இன்னும் பொழுது சாய்ந்திடவில்லை என்பதை பறைசாற்றியது வீதியில் படர்ந்திருந்த வெளிச்சம்.

சரியாக 6. 45 மணிக்கே அவள் கூறியிருந்த உணவகத்தை அடைந்திருந்தான் சித்தார்த். அவளை விட்டு விலக நினைத்தது அவன் தான். ஆனால் அவளின் விலகலால் தவிப்பவனும் அவனே.

ஒன்று மட்டும் அவன் மனம் உறுதி கொண்டது. அவளில்லாமல் தன் வாழ்க்கை இல்லை என்று. அதனால் தான் அவளுக்கு முன்பே வந்து அங்கு காத்திருந்தான்.

தான் கூறியது போல் சரியாக ஏழு மணிக்கு உணவகத்தினுள் நுழைந்தாள் சரயு. இரவுநேரம் என்பதால் உணவகத்தினுள் சீரியல் லைட்களில் வெளிச்சம் மிளிர்ந்துக் கொண்டிருந்தது.

தன் எதிரே வந்து அமர்ந்தவளை அவனது கண்கள் ஸ்கேன் செய்தன. வொய்ன் நிற சல்வாரும் அதே வண்ண துப்பட்டாவும் அணிந்திருந்தாள். மையிட்டிருந்த கருவிழிகள் இரண்டும் அவனைத் தான் பார்த்திருந்தது.

இதுவரை அவளின் கண்ணைப் பார்த்து மட்டுமே பழக்கப்பட்டிருக்க இன்று காலையில் தான் அவளை முழுதாய் அவனது கண்கள் அளவிட்டு இருந்தது. இதோ இப்போது ஆளை முழுங்கும் பார்வை பார்த்து வைக்க அவளின் நிலை தான் படுமோசமானது.

‘பார்வைக்கொன்னும் குறைச்சலில்ல. ஆனா வாயத் தொறந்தா மட்டும் என்னை விட்டு விலகியே இருனு சொல்றது’ என மனதினுள் அவனை கடிந்துக்கொண்டவளை தடையிட்டது சிப்பந்தியின் குரல்.

“மேம், ஆர்டர் ப்ளீஸ்” என மெனு கார்டோடு நின்றிருக்க, “இன்னொருத்தர் ஆன் தி வே, ஒரு டென் மினிட்ஸ் ப்ளீஸ்” என்றாள் சரயு. சிப்பந்தியும் தலையசைத்து, அவர்கள் இருவர் முன்னும் தண்ணீர் நிறைந்த டம்ளரை வைத்துவிட்டு அகன்றார்.

இன்னொருவர் யார்? என்ற கேள்வியும் எழுந்தாலும் அதனை வெளியே உரைக்காமல் அமைதி காத்தான் சித்தார்த். அவனின் அமைதியைக் கண்டு அவளே தொடங்கினாள்.

“கடைசி வரைக்கும் உங்க நிலைபாட்டுல இருந்து மாறவே மாட்டீங்கல்ல. இந்த கொஞ்ச நாள் இடைவெளி உங்கள மாத்தும். உங்க மனசுல உள்ளத வெளிப்படுத்துவீங்கனு நினைச்சேன். ஆனா…” என சற்று இடைவெளி விட்டவள்,

“உங்க பின்னாடியே வர்றதால என் காதல் உங்களுக்கு ரொம்ப கீழ்தரமா தெரியுதா சித்?” என்றவளின் குரலில் வேதனை படர்ந்திருந்தது.

இதுவரை நாள் அவனின் கேள்வி தான் அவளின் மனதை சுக்குநூறாய் உடைத்திருந்தது. ஆனால் இன்று அவளின் கேள்வியால் அவன் மனதை கத்தியால் கீறியது போல் துடிதுடித்துப் போனான்.

வானம் – 34

தன் கேள்வி அவனை கொன்று கூறுபோடும் என்று உணர்ந்துமே அவனின் மனதை வெளிகொணர வேறு வழியில்லாமல் அந்த கேள்வியைக் கேட்டுவிட்டவளுக்கு அவனின் வலி நிறைந்த முகத்தைக் காண தெம்பற்று பார்வையை வேறுபுறம் அலைபாய விட்டாள்.

ஊசி முள்ளாள் அவனது நெஞ்சைக் கிழித்துக் கூறுப் போட்டிருக்க, “உன் காதல என்னிக்குமே நான் தவறா நினைச்சது இல்ல சரயு. ஆனா…” என சற்று இடைவெளி விட்டவன், “அதுக்கு தகுதியானவன் நான் இல்லனு…” என முடிப்பதற்குள் அவளின் முறைப்பிற்கு ஆளானான் சித்தார்த்.

அவளது கண்டனப் பார்வையை எதிர்கொண்டவனின் இதயம் அவள்பால் சரிய, மெதுவாய் தன்னை சமன்படுத்திக் கொண்டு, “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் சரயு மா” என்றவனின் வார்த்தைகள் அவளின் இதயத்தினுள் தேனாய் இறங்க சிறு அதிர்வோடு அவனை நோக்கினாள்.

“ஆனா அதவிட உன் வாழ்க்கை எனக்கு முக்கியமாபட்டுச்சு” என்றவன், அவள் ஏதோ கூற வர கைநீட்டி தடுத்தவன், “ப்ளீஸ் சரயு, இடைல எதுவும் கேட்க வேண்டாமே” என அவன் இறைஞ்ச, அதற்கு சம்மதமாய் அவள் அமைதி காத்தாள்.

“நீ எப்போ என் மனசுல வந்தனு சரியா சொல்ல தெரியல. ஆனா, முதன்முதலா நீ இதழிமா கூட பழகும்போது உன்மேல ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டானது. அப்போ எனக்கு நீ இதழிமா மாதிரி இன்னொரு சின்ன பொண்ணா தான் தோணுச்சு.

நான் இதழிமா கிட்ட இருந்து விலக சொல்லியும் அதை ஏத்துக்காம இதழிமாவுக்காக அவள கடைக்கே வர வச்சப்போ, கொஞ்சம் அதிகபிரசங்கி தனமா தெரிஞ்சாலும் அதுல இதழிமா மேல நீ வைத்த அன்பும் அக்கறையும் எனக்கு புரிஞ்சததால மட்டும் தான் அமைதியா இருந்தேன்.

அதுக்கு அப்புறம்…” என சிறிது இடைவெளி விட்டு கண்களை இறுக மூடி அமர்ந்திருக்க அவனது இமைகளுக்கிடையே சரயு முதன்முதலாய் தனது விருப்பத்தை தெரிவித்தது நிழற்படமாய் படர்ந்தது.

அவனின் அமைதியிலேயே அவன் யோசிப்பது புரிய அவனின் மனதை முழுதாய் அறிய வேண்டி அமைதி காத்தாள் சரயு. அவனே தொடர்ந்தான்.

“நீ ஒவ்வொரு முறை என்னை நெருங்கி வரும் போதும் என்னை நான் இழக்க தொடங்குனது உண்மை. எங்கே அதை என்னை அறியாமலே உன்கிட்ட வெளிப்படுத்திருவனோனு பயந்து தான் உன்கிட்ட இருந்து விலக நினைச்சேன்.

அதுனால தான் என்கிட்ட இருந்து உன்னை மொத்தமா விலக்கி வைக்கணும்னு நினைச்சு உன் மனச காயப்படுத்திற மாதிரியான கேள்விகள கேட்டேன். இருந்தும் நீ விடாம முயற்சி பண்ணும்போது தோணும் சரயு மா, ஏன் என் வாழ்க்கைல நீ முன்னமே வரலனு!” என்றவனின் குரல் உள்ளிறங்கி இருந்தது.

அவனை புரிந்து கொண்டவளாய் மேஜையின் மீதிருந்த அவனது கரத்தை தனது கரங்களால் மெல்லியதாய் பற்றிக் கொண்டாள்.

“ஒவ்வொரு பொண்ணுக்குமே தன்னை காதலிக்கிறவன், கல்யாணம் பண்ணிக்கப் போறவன் தனக்கு மட்டுமே சொந்தம்னு எதிர்பார்க்கிறது இயல்பான ஒன்று. ஆனா, அது இல்லனு தெரிஞ்சும் நீ என்மேல வச்ச காதல்… அத என்னால விளக்கி சொல்ல முடியல சரயு!

நாலு வயசு குழந்தைக்கு தகப்பனா மட்டுமில்லாம இன்னொரு குழந்தைக்கு தகப்பனாக முடியாத என்னை…” என்றவனால் மேலும் தொடர முடியவில்லை.

அவனது கரங்கள் இறுகியது. அதனை மெதுவாய் வருடிவிட்டாள் அவள்.

“அவ… அவள உண்மையா மனசார ஏத்துக்கிட்டு தான் எங்க கல்யாண வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சேன்” என திடீரென கடந்த கால வாழ்க்கையை பற்றிப் பேசத் தொடங்க, என்னதான் அவனின் கடந்த காலத்தை அறிந்திருந்தாலும் அவனது வாய்மொழியால் கேட்கும் திராணி தனக்கில்லை என்பதை அவளின் உடல்மொழியே உரைத்தது.

ஆனால் அவனோ தன் மனதில் உள்ளதை கொட்டிவிடும் முனைப்பில் இருந்தான்.

“அவளோட தயக்கத்த புது இடம், புது மனிதர்கள்னு வழக்கமான ஒன்னா நினைச்சு தான் அவளுக்காக விலகியே இருந்தேன். அதுக்கு அப்புறம் அவ சம்மதத்தோட தான் கணவன் மனைவியா ரெண்டு பேரும் வாழ ஆரம்பிச்சோம். எங்களுக்குள்ள பெருசா காதல் மொழிகள் இல்ல தான். ஆனாலும் சராசரி இந்திய கணவன் மனைவியா தான் வாழ்ந்தோம். அந்த நேரத்துல தான் இதழிமா வந்தா” என்றவன் மீண்டும் இடைவெளி விட்டு தொடர்ந்தான்.

“அவ பிரசவத்தப்போ அவளோட வலிய என்னால வாங்கிக்க முடிஞ்சா பரவாயில்லயேனு நான் நினைக்கும்போது தான் டாக்டர் பெரிய இடி ஒன்ன என் தலைல இறக்கி வச்சாரு. இன்னொரு குழந்தை உண்டானா அது அவளோட உயிரயே பறிக்க வாய்ப்பிருக்குனு.

எனக்கு ரொம்ப ஆசை சரயு மா… நான் வீட்டுக்கு ஒத்தப் புள்ளையா போனதால, கூட விளையாட தம்பி, தங்கச்சி இல்லையேனு நிறைய நாள் ஏங்கி இருக்கேன். எனக்கு பெருசா நட்பு வட்டம்னு சொல்லக்கூட பிரண்ட்ஸ் இல்ல. ஆனா அந்த நிலை என் குழந்தைகளுக்கு வரக்கூடாது, மூணு குழந்தைகளாச்சும் வேணும்னு அவ்ளோ ஆசை” என்றவனின் கண்களில் இன்றும் அந்த ஆசை பிரதிபலித்தது.

ஒற்றைப் பிள்ளையாய் அவன் வளர்ந்த சூழல் புரிபட அவனை வலியோடு பார்த்தாள் அவள்.

“ஆனா அந்த நிமிஷம் அவ தான் எனக்கு முக்கியமா தெரிஞ்சா. அவ உயிரை பணயம் வச்சு இன்னொரு குழந்தைய எப்படி என்னால எதிர்பார்க்க முடியும்?” என்றவனின் குரல் முற்றிலும் உடைந்திருந்தது.

அவனை அணைத்துக் கொண்டு ஆதுரமாய் அவன் தலை வருட அவள் கரங்கள் பரபரக்க சுற்றுப்புறம் உணர்ந்து அமைதி காத்தாள்.

தன்னை சமன்படுத்திக் கொண்டதற்கு அடையாளமாய் அவனே பேச்சைத் தொடர்ந்தான்.

“ஏற்கெனவே வயித்த கிழிச்சு என் குழந்தைய இந்த உலகத்துக்கு கொண்டு வந்தவள மேலும் எப்படி கஷ்டப்படுத்துவேன்! அவளுக்காக தான் அப்படி ஒரு முடிவு எடுத்தேன். வாசெக்டமி!” என்றவன் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான்.

“ஆனா…” என்றவனால் மேலும் தொடர முடியவில்லை. முற்றிலும் உடைந்துப் போயிருந்தான்.

“துரோகத்தோட வலி இன்னும் இங்க ரணமா இருக்கு சரயு மா” என தன் நெஞ்சை தொட்டுக் காண்பித்தவன், “அந்த நேரம் ஏன் டா வாழ்றோம்னு இருந்துச்சு. சிலநேரம் மனசே விட்டுப் போய்ரும். சுத்தி உள்ளவங்களோட ஏளன பார்வையும், கேலிகளும் அப்படியே உயிர உடல்கூட்டுல இருந்து பிய்தெடுத்த மாதிரி வலிக்கும். அந்த நேரம் எல்லாம் என்னை உயிர்ப்போட வச்சு இருந்தது இதழிமா தான். அந்த பிஞ்சு முகத்த பார்த்து பார்த்து தான் என் வலிகள்ள இருந்து மெல்ல வெளிய வர முயற்சி செஞ்சேன்.

எனக்குனு வர்றவள காதலிக்கணும், திகட்ட திகட்ட ஒரு இன்பமான வாழ்க்கைய வாழணும்னு ஆயிரம் கனவு இருந்துச்சு. ஆனா அதெல்லாம் என் வாழ்க்கைல இல்லனு இருக்கும்போது தான் உன் காதல்ல என் உயிர் கொஞ்சம் துளிர் விட்டுச்சு” என்றவன் அவளது கண்களை நேராக பார்த்தான்.

“இது சுயநலமான முடிவுனு தெரியும், ஆனா என் வாழ்க்க முழுக்க எனக்கு நீ வேணும்னு மனசு கேட்குது சரயு மா!” என்றவன், “இப்பவும் நீ யோசிச்சு முடிவெடு டா. இதழிகா மேல உனக்கு இப்போ அளவுகடந்த அன்பு இருக்கலாம். ஆனா நாளைக்கு நமக்குனு ஒரு குழந்தை இல்லையேனு நீ நினைக்கிற சூழல் வந்துவிடக் கூடாது. அப்படி உன் மனசுல ஒரு எண்ணம் வந்துட்டா என்னாலயே என்னை மன்னிக்க முடியாது மா” என்றவனின் கண்கள் கலங்கி இருந்தன. தனது மனதை வெளிப்படுத்தியே இருந்தாலும் அவளை யோசித்தே முடிவெடு என்றவனை காதலாய் நோக்கினாள்.

அவனின் தயக்கத்திற்கான காரணமும் அவள் ஏற்கெனவே அறிந்த ஒன்று தான். இருந்தும் அவனின் வார்த்தைகளால் மீண்டுமொருமுறை கேட்க அவனுக்கு தன் மனதை புரிய வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பேசத் தொடங்கினாள்.

“எல்லாம் தெரிஞ்சு தான் உங்கள விருப்பறேன் சித். இப்ப இல்ல எப்பவும் கியூட்டி தான் என்னோட பொண்ணு. இத உங்கமேல உள்ள காதலால சொல்லல சித். அவ மேல உள்ள அன்பால சொல்றேன். எனக்கு இதுல பரிபூரண சம்மதம்” என்றவள்,

“இப்பவும் நானே கேட்கவும் தான உங்க காதல சொல்றீங்க. ஒருவேள படிப்பு முடிஞ்சோனே ஊருக்குப் போயிருந்தா என்னைத் தேடி வந்துருக்க மாட்டீங்கல்ல” என்றவளின் குற்றச்சாட்டில் அவனது இதழ்கள் மந்தகாசமாய் புன்னகைத்தன.

“எனக்கு பயமா இருக்கு சித், உங்கள பார்க்கணும் போல இருக்குனு சொன்ன ஒத்த வார்த்தைக்காக ராத்திரியோட ராத்திரியா உன்னை பார்க்க வந்தவன் மா நான். அப்படிப்பட்டவனால உன்னை விட்டு நிரந்தரமா பிரிஞ்சு இருக்க முடியுமா சொல்லு?” என எதிர்கேள்வி கேட்க,

அவனின் பதிலால் மனம் நிறைந்தாலும் முகம் பொய் கோபத்தை தாங்கி நின்றது.

அவளில் கோபத்தால் அவன் முகமெங்கும் சிரிப்பு வெடித்தது. “மேடம் என்னை தவிக்க விடறதுக்காக என்ன என்ன பிளான் பண்ணிருக்க! என் வீட்லயே எனக்குத் தெரியாம ரெண்டு கேரக்டர் ஆர்டிஸ்ட்ட உருவாக்கி இருக்க நீ” என தன் தாடியை தடவிக் கொடுத்தவனால் சிரிப்பை அடக்க இயலவில்லை.

“ஆனாலும் இதழிமா ஆக்டிங் சான்ஸே இல்ல!” என தன் மகளை நினைக்கையில் இன்னும் இதழ்கள் விரிந்தன.

அவனின் சிரிப்பை கண்கொட்டாமல் ரசித்தாள் அவள். “ம், என்ன பண்றது, எனக்கு வாய்ச்சது மங்கு மந்தாரமா இருந்தா இப்படிலாம் பிளான் பண்ண வேண்டியதா இருக்கே” என அவனுக்கு கேட்கும் வகையிலே அவள் முணுமுணுத்தாள்.

“டீச்சருக்கு கோபம் போல!” என்றவனின் பார்வையில் முகம் சிவந்தாள் சரயு. அவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவளால் இயல்பாய் இருக்க முடியாமல் தவிக்க அவளை திசைதிருப்பியது அலைப்பேசியின் ஒலி.

அதில் மின்னிய எண்ணைக் கண்டவள் அழைப்பை ஏற்று, “லொகேஷனுக்கு வந்துட்டியா?” என்றாள். மறுமுனையில் என்ன கூறினார்களோ அவள் வேகமாய் திரும்பி வாயிற்புறம் பார்க்க அங்கு ஒருவன் கையசைத்தான்.

அழைப்பு வந்ததில் இருந்தே அவளையே பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தின் மனதில் ‘அந்த இன்னொருவர் வருவதாக கூறி இருந்தாளே, அது யார்?’ என்ற கேள்வியோடு, ‘ஒருவேளை அவர்கள் தான் அழைத்ததா!’ என்ற யோசனையிலேயே அவளை பார்வையால் தொடர்ந்தவன், அவள் பார்வை செல்லும் திசையில் நின்றிருந்தவனைக் கண்டு மெல்லியதாய் அதிர்ந்தான்.

“பிரஷாந்த்” என அவன் இதழ்கள் முணுமுணுக்க அதற்குள் அவர்கள் அருகே வந்திருந்தான் அவன். சித்தார்த்ம் சரயுவும் எதிரெதிரே அமர்ந்திருந்ததால் சரயுவின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தவாறே, “சாரி, குட்டிமா ரொம்ப டிராபிக். ரொம்ப நேரம் காக்க வச்சுட்டனோ!” என மன்னிப்பு வேண்டினான்.

அவனின் திருமணத்திற்கு சென்றபோது பார்த்ததில் இருந்து தற்போது பாதி குறைந்துள்ளான் என்பதை உடனே கவனித்தவனுக்கு ரேவதியின் இறப்பும் அதனைத் தொடர்ந்து நினைவில் வர, தற்போது வரை இருந்த இலகுவான மனநிலை மாறி மனம் கனமானது.

“அண்ணா இது சித்… சித்தார்த்” என அவனை பிரஷாந்திடம் அறிமுகப்படுத்தவும் தான் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு சிநேகமாய் புன்னகைத்தான்.

தன்னைப் பற்றி தன் அண்ணனிடம் சொல்லி இருப்பாளோ என்ற எண்ணத்தில் அவளைப் பார்க்க, அவளோ அவனைத் தவிர்த்தவளாய், “சாப்பிட ஆர்டர் பண்ணலாமா ண்ணா?” என்றவள் சிப்பந்தியை அழைத்து மூவருக்குமான உணவை அவளே கூற, பிரஷாந்த் சித்தார்த்தை பார்த்தான்.

ஏற்கெனவே புகைப்படத்தில் அவனைப் பார்த்திருந்தாலும் நேரில் பார்க்கும்போது தன் தங்கைக்கு இவன் பொருத்தமானவனா என மனம் ஆராய்ந்தது.

தன்னைவிட அவன் மூத்தவனாக இருந்தாலும் அவன் முகத்தில் குடிகொண்டிருந்த மகிழ்ச்சி இரண்டு வயதைக் குறைத்துக் காட்டியது. தன் தங்கையின் தேர்வை மனதினுள் மெச்சிக்கொள்ள, பிரஷாந்த் பார்வையால் தன்னை அளவெடுப்பதை உணர்ந்தவனுக்கோ ஒருவித அவஸ்தை உண்டானது.

அதனை உணர்ந்துக் கொண்டவனாய், “என் தங்கச்சியோட தேர்வு சரியா தான் இருக்கு மச்சான்” என மச்சானை சற்று அழுத்தி உச்சரித்து தன் சம்மதத்தை வெளிபடுத்தினான் பிரஷாந்த்.

அவனின் வெளிப்படையான பேச்சில் அதிர்ந்தவன், “உங்களுக்கு…” என்றவன் அவனை எவ்வாறு அழைப்பது என தடுமாற, “பிரஷாந்த்னே கூப்பிடுங்க மச்சான்” என்றான் அவன்.

“பிரஷாந்த் அதுவந்து… உங்ககிட்ட… என்னைப் பத்தி…” என ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு தடுமாற, அதனைக் கண்ட சரயுவோ சிரிப்பை அடக்க பெரும்பாடுபட, அவளை செல்லமாய் முறைத்தவன் பிரஷாந்தை சற்று தடுமாற்றத்துடனே எதிர்கொண்டான்.

“உங்கள பத்தி எல்லாமே குட்டிமா சொன்னா மச்சான்” என்றவனின் அந்த ‘எல்லாமே’வில் சற்று அழுத்தம் கொடுத்து நீங்கள் தடுமாற வேண்டாம் என எடுத்துரைத்தான்.

தன்னைப் பற்றி முழுவதும் தெரிந்துமா அவன் சம்மதம் சொன்னான் என்ற கேள்வியோடு அவனைப் பார்க்க, “உங்க கேள்வி புரியுது மச்சான். முதல்ல எனக்கும் சின்ன குழப்பம் இருந்துச்சு, அவ வாழ்க்கைய நினைச்சு. ஆனா எனக்கு என் குட்டிமாவோட சந்தோசம் தான் ரொம்ப முக்கியம். அது உங்ககிட்ட தான் இருக்குனு அவ வார்த்தைகள் மூலமா புரிஞ்சுது. என் தவறால என் காதல் தான் கைகூடல” என்றவன் சிறிய இடைவெளி விட,

“சாரி பிரஷாந்த்” என்றான் சித்தார்த். அவனின் வலி நிறைந்த புன்னகையில் உடன் இருந்த இருவரின் மனமும் கனத்தது.

“ப்ச், உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லங்க மச்சான். நான் பண்ண தப்பால தான் அவ என்னை விட்டு மொத்தமா போய்ட்டா. காதல் கைவிட்டு போனா அது எந்தளவு வலிக்கும்னு அனுபவிச்சுக்கிட்டு இருக்கிறவன் நான். அதே வலிய என் தங்கச்சிக்கும் எப்படி கொடுக்க நினைப்பேன்!” என்றவனின் இறுதி வார்த்தைகளில் அவன் உடைந்திருந்தான்.

கனத்த அமைதி நிலவ, அதனைக் கலைத்தாள் சரயு. “அண்ணா” என அழுத்தமாய் அழைக்க அதில் சட்டென தன்னை மீட்டெடுத்துக் கொண்டான் பிரஷாந்த்.

அதன்பின் மூவரும் பொதுவானதாய் பேசத் தொடங்கினர். சூடாய் ஆவி பறக்க அவர்கள் முன் உணவு கொண்டு வந்து வைக்கப்பட அண்ணனும் தங்கையும் மாறிமாறி தங்களை வாரிக் கொண்டு உண்ணத் தொடங்க அதில் பார்வையாளராய் மாறிப் போனான் சித்தார்த்.

உண்டு முடித்திருக்க, “இங்க ஒரு வேலையா வந்தேன் மச்சான். அப்படியே உங்களையும் சந்திச்சு உங்க கல்யாண விசயமா பேசிட்டு போகலாம்னு வந்தேன்” என்றவன், தன் தங்கையின் தலையை வருடியவாறே, “வீட்ல கண்டிப்பா மொதல்ல ஏத்துக்க மாட்டாங்க தான். ஆனா அவங்க சம்மதம் கண்டிப்பா கிடைக்கும்” என்றவன், “உங்களுக்கு எப்போ சவுகரியப்படுதோ ஒரு நாள் ஊருக்கு வந்து அப்பாகிட்ட பேசுறீங்களா மச்சான்?” என்றான் பிரஷாந்த்.

இவை அனைத்தும் சரயுவின் ஏற்பாடு என்பது புரிய அவளைப் பார்த்தான். தான் காதலை சொல்வதற்கு முன்பே தன் அண்ணனை முன்னேற்பாடோடு வரவழைத்திருக்கிறாள் என நினைத்தவனால் உடனே திருமணத்தைப் பற்றி முடிவெடுக்க முடியவில்லை.

காதலை சொன்ன சில நிமிடங்களிலே திருமணம் பற்றிய பேச்சு வர அவனால் உடனே பதிலளிக்க முடியாமல் அமைதி காக்க அவனைப் புரிந்துக் கொண்டவளாய், “நாங்க பேசி முடிவு பண்ணிட்டு உன்கிட்ட சொல்றோம் ண்ணா” என்றவள் தன் அண்ணனைப் பார்த்து தயக்கத்தோடு, “வீட்ல சம்மதிப்பாங்களா ண்ணா?” என்றாள்.

ஏனோ தன் அண்ணனிடம் தடாலடியாய் தன் மனதை கவர்ந்தவனைப் பற்றி உரைத்தவளால் தன் பெற்றோரிடம் கூற தயக்கம் இருந்தன. அதனையும் தாண்டி அவர்கள் மறுத்தாலும் தன் முடிவில் மாற்றம் இல்லை என்றாலும் அவர்களின் முன்னிலையில் தங்கள் திருமணம் நடக்க வேண்டுமென நினைத்தாள் சரயு.

தன் தங்கையின் மனதை உணர்ந்தவனாய் அவளது தலையை வருடியவாறே, “அண்ணன் இருக்கேன்ல டா, கவலப்படாத” என ஆறுதலளித்தான்.

அதன்பின் அவன் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு கிளம்ப, இருவரும் கையசைத்து விடைகொடுத்தனர்.

“மேடமோட அடுத்த பிளான் என்ன?” என்றவனின் குரலில் அவனின் முகம் நோக்கியவளை குற்றம் சாட்டின அவனது கண்கள்.

“உங்க கிட்ட கேட்காம அண்ணாவ மீட் பண்ண வர சொன்னதுக்கு சாரி” என அவள் தலை தாழ்த்த, “ப்ச்” என்றவன் அவளது தாடையை ஒற்றை விரலால் நிமிர்த்தினான் சித்தார்த்.

அவளின் விழிகளுக்குள் தன் விழிகளை கலக்கியவிட்டவாறே, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவளது நெற்றியில் பட்டும்படாமல் தனது இதழ்களை ஒற்றி எடுத்தான்.

அவள் அதிர்ந்த விழியோடு அவனை நோக்க அவன் இதழ்களோ புன்னகையால் விரிந்தன. தனது கரங்களை சிகைக்குள் நுழைத்துக் கொண்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன், “கிளம்புலாமா” என்க, அவள் தலை தானாக ஆடியது.

அவளின் செயலில் அவன் மந்தகாசமாய் புன்னகைத்தவாறே தனது இருசக்கர வாகனத்தை உயிர்பித்தான். சில நொடிப் பயணமே என்றாலும் இருவருக்குமே அது பிடித்திருந்தது.

பட்டும் படாமலும் அவனது தோள் பற்றி இருந்தவளுக்கோ அவனின் அருகாண்மை பாடாய் படுத்தியது. விடுதியின் முன்வந்து அவன் வண்டியை நிறுத்த இறங்கிக் கொண்டவளின் மனமோ அவனுடனே பயணிக்க, சிறு தலையசைப்போடு விடைபெற்றவளை மனதினுள் நிறைத்துக் கொண்டு அங்கிருந்து தனது வீட்டை நோக்கிச் சென்றான்.

காந்திபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பிரஷாந்தின் மனமோ தங்கையை பார்த்ததன் அடையாளமாய் பூரித்திருந்தாலும் அவள் கடைசியாய் கேட்ட கேள்வியிலேயே சுழன்றுக் கொண்டிருந்தது.

“வீட்ல சம்மதிப்பாங்களா ண்ணா”

அவளது குரல் இன்னமும் காதருகே ஒலித்துக் கொண்டிருந்தது. அவனுக்கும் விடை தெரியவில்லை. தனது அலைபேசியின் முகப்பு பக்கத்தில் வீற்றிருந்த ரேவதியின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டான்.

“உன் விசயத்துல நான் பண்ண தப்ப கண்டிப்பா சரயு விசயத்துல நடக்க விட மாட்டேன் ரேவதி” என அவன் இதழ்கள் முணுமுணுத்துக் கொண்டன.

அதே நேரத்தில் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வர புருவங்கள் சுருங்க யோசனையோடே அழைப்பை ஏற்றான் பிரஷாந்த்.

“ஹலோ” என்றிட மறுமுனையில் சிறிது அமைதி நிலவி பின் பெண் குரல் ஒன்று, “ஹலோ” என்றது.

பெண் குரலில் குழப்பமானவன், “யார் நீங்க?” என்றான்.

“நான்… நான்… ரம்யா பேசறேன்” என பதட்டத்தோடு பதில் வர, “எந்த ரம்யா?” என கேட்க வந்தவன் பின் கேள்வியை தொண்டையிலே இருத்திக் கொண்டான்.

மௌனமாய் இருக்க, “அதுவந்து…” என தயங்கியவள், “உங்ககிட்ட சாரி கேட்க தான் கூப்ட்டேங்க. ரேவதியோட முடிவுக்கு நானும் ஒரு காரணம் தான்ற குற்றவுணர்ச்சி என்னை தினந்தினம் கொல்லுது” என சிறிது இடைவெளி விட்டவள்,

“நீங்க சொன்னதையும் மீறி உங்க அம்மா பேச்ச கேட்டு நான் சம்மதம் சொல்லாம இருந்திருந்தா இவ்ளோ நடந்திருக்காதுல்ல” என்றவளின் குரலில் குற்றவுணர்ச்சி மிகுந்திருந்தது.

அவனுக்கு அவளை குற்றம் சாட்ட விருப்பமில்லை. இருந்தும் அவளிடம் அதனை வெளிப்படுத்தவும் மனம் முனையவில்லை.

அவளே தொடர்ந்தாள். “எனக்கு கல்யாணம் முடிவாகிருக்கு” என்றவள், “உங்ககிட்ட மன்னிப்பு கேட்டாலாச்சும் என் குற்றவுணர்ச்சி குறையும்னு நினைச்சு தான் உங்கள கூப்ட்டேன். இந்த நேரத்துல தொந்தரவு பண்ணதுக்கு மன்னிச்சிருங்க” என்றாள்.

“உங்க கல்யாணத்துக்கு வாழ்த்துகள்” என்றவன் அதற்கு மேல் எதுவும் உரைத்திட விரும்பாமல் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

தன் காதலை பெற்றோரிடம் தெரிவிக்க திராணியற்று வேறொருவளோடு மணமேடை வரை சென்றதை நினைத்தே அவன் மனமே அவனை இன்னமும் மன்னித்திடவில்லை. இதில் ரம்யாவை மன்னித்திட தான் யார் என்ற கேள்வியே எழும்பியது.

தன்னை வேறு ஒருவளோடு மணமேடையில் பார்த்தவளுக்கு எவ்வளவு வலித்திருந்தால் தன் உயிரை விட்டிருப்பாள் என தினந்தினம் அவளை நினைக்கும்போதெல்லாம் ஏற்படும் வலி மனதில் விண்ணென்றது.

அவளின் இறப்புக்கு தனது கையாலாகாத தனம் தான் காரணம் என இத்தோடு ஆயிரம் முறையாவது தன்னையே குற்றவாளி கூண்டில் ஏற்றி இருந்தான்.

அவள் வருவாள் என்ற நம்பிக்கையிலே அவன் காத்திருந்தாலும் அவளுக்காக தான் காத்திருப்பதை அவளுக்குள் உணர்த்தாமல் விட்டுவிட்டோமே என்ற தவிப்பும் உடன் ஒட்டிக் கொண்டது.

‘உன்கிட்ட மன்னிப்பு கேட்க அருகதையற்றவன் ரேவதி நான்’ என நினைத்தவனின் பார்வை கார் கண்ணாடி வழியே தொலைவில் தெரிந்த வானத்தை வெறித்துக் கொண்டிருந்தது.

_தொடரும்

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்