- இனி எந்தன் உயிரும் உனதா…
விளையாட்டு மைதானத்தின் அருகிலிருந்த மரத்தடியில் வந்து அமர்ந்த ஆருஷிக்கு, ‘அவளுக்கு என்ன தெரியும் ஆதி பத்தி? எதுக்கு அவனப் பத்தி இஷ்டத்துக்குப் பேசுறா?’ என ஸ்ருஷ்டி மேல் கோபம் ஒருபுறம் வர, இன்னொரு புறம் காரணமே தெரியாமல் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.
“வெறும் ஒரு வருஷம் தான உன்ன விட்டுட்டு இருந்தேன். அதுக்குள்ள, உன் லைஃப்ல நா முக்கியமில்லாம போயிட்டேனா? சின்ன வயசுலருந்து எவ்ளோ சண்ட போட்டாலும், எந்த சந்தோஷமும், கஷ்டமும், கோபமும், பயமும் நமக்குள்ள தான முதல்ல ஷேர் பண்ணிப்போம். உன்ன விட்டு தூரமாப் போனதால, என்னை தூரமாவே தள்ளி நிறுத்திட்டியா ஆதி? நீ லவ் பண்ற விஷயத்த சொல்ற அளவுக்கு நா உனக்கு முக்கியமில்லையா? அந்த பொண்ணு விட்டுப் போன கஷ்டத்தக் கூட என்கிட்ட சொல்ல மாட்டேல்ல… நா அவ்ளோ தானா ஆதி உனக்கு? உனக்கு ஒரு கஷ்டம்னா கூட, நா உனக்காக இருக்க மாட்டேன்னு ஏண்டா நெனைச்ச?” என்று ஏதேதோ எண்ணங்களில் உழன்றவளுக்கு, உள்ளுக்குள் ஏதோ உடைவது போல் இருந்தது.
மூன்று மாதங்களுக்கு முன் ஒருநாள், கௌசல்யா, ஆருஷிக்கு அழைத்திருந்தார்.
“ஹாய் கௌசி, என்ன அதிசயம் நீயே கால் பண்ணிருக்க?” என ஆருஷி உற்சாகமாகக் கேட்க,
“எவ்ளோ தைரியம் இருந்தா என் ஃப்ரெண்ட பேர் சொல்லி கூப்டுவ…” என அவளின் தாய் தாரணி, செல்லக் கோபத்துடன் மிரட்ட,
“வாவ், தாரா நீயும் இருக்கியா? ரெண்டு பேரும் சேர்ந்து அழைச்சா ஏதோ முக்கியமான விஷயம் இருக்குன்னு நெனைக்கிறேன், சொல்லுங்க…” என்று கேட்டவளின் குரலில், குறும்பு போய் நிதானம் வந்திருந்தது.
கௌசல்யா, தாரணி இருவருக்கும் ஆருஷியிடம் பிடித்ததே இது தான். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவள் தான் அதிகம் குறும்பு செய்பவளாக, சேட்டைக்காரியாகத் தெரிவாள். ஆனால், உண்மையில் அருணைக் காட்டிலும் பொறுப்பானவள் ஆருஷி தான். அதனால் தான், ஆருஷி உள்ளூரிலேயே மேற்படிப்பினைத் தொடரட்டும் எனக் கூறிய அவள் தந்தை மாதவனிடம், இருவருமே வாதாடி, அவள் விருப்பத்திற்கேற்ப சென்னை செல்ல அனுமதி வாங்கினர்.
ஆருஷி அப்படி கேட்டதும், “அது வந்துடி, ப்ரித்வி கொஞ்ச நாளாவே என்னமோ மாதிரி இருக்கான், எதையோ பறிகுடுத்தவன் மாதிரியே நடந்துக்கிறான். சரியா சாப்பிடாம, தூங்காம கலங்கிப் போயிருக்கான். ஏதோ எங்களுக்காக கடனேன்னு சிரிக்கிறான். அவன இப்டி பாக்கவே என்னமோ மாதிரி, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எதுனாலும் அவன் உன்கிட்ட தான சொல்லுவான், அதான் ஏன் இப்டி இருக்கான்? என்னாச்சு, ஏதாச்சுன்னு உனக்கு ஏதாவது தெரியுமா? அதக் கேக்கலாம்னு தான்டி கூப்டேன்” எனக் கேட்டார் கௌசல்யா.
என்னவென்று சொல்லுவாள் அவள், சென்னை வந்த புதிதில் சில நாட்கள் நன்றாகவே ஃபோனில் சண்டையிட்டுக் கொண்டிருந்தவன், வெகுநாட்களாக கால் செய்வதே இல்லை. இவள் அழைப்பு விடுத்தாலும் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு வைத்து விடுவான். (அவனும் என்ன செய்வான் பாவம், காதலியோட கடலை வறுக்கவே நேரம் பத்தல). அதிலும் இந்த இரண்டு மாதங்கள், அழைப்பை ஏற்பது கூட இல்லை. (அவனே ஏன் என்னைப் பிரிந்தாய்னு சோக கீதம் வாசிச்சு சுத்திட்டு இருக்கான்).
தன்னை வேண்டுமென்றே தவிர்க்கிறானோ எனத் தோன்றினாலும், ‘ச்ச ச்ச இருக்காது. நமக்கு ப்ராஜெக்ட் குடுத்து சாவடிக்கிற மாதிரி, அவனையும் வச்சு செஞ்சுருப்பாய்ங்க. இல்லனா நம்ம கிட்ட வம்பிழுக்காம எங்க போய்டப்போறான், அந்த பொடிப் பய…’ என்று எண்ணியிருந்தவளுக்கு, இப்போது உண்மையிலேயே அவனுக்கு ஏதோ பிரச்சினை எனப் புரிந்தது.
எனவே ஆருஷி, “தாரா, எனக்கு சென்னைல சாப்பாடு ஒத்துக்கல, சோ, வந்து மதுரைக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணு…” என அசால்ட்டாகக் கூறினாள்.
“அடியே, உன்ன யாரும் இங்க வர சொல்லல…” என கௌசல்யா அதிர்ச்சியாகக் கூற,
“நோ கௌசி, உன் புள்ளைய தனியா விட்டா ஒண்ணும் சரிப்படாது. நா வந்தா தான் கரெக்டா இருக்கும். பாரு, ஒரு வருஷம் நா இல்ல, அதுக்குள்ள என்னமோ ஏழ்ரைய இழுத்து வச்சுருக்கான்… தாரா சீக்கிரம் உன் ஹப்பிய கூப்டுட்டு வந்து சேரு” என்று கூறிவிட்டாள்.
அதன் பிறகு தான் அவன் படிக்கும் கல்லூரிக்கே, அவள் வந்து சேர்ந்தாள். ப்ரித்வி சிறு விஷயத்திற்கும் அப்சட்டாகி விடும் சென்சிட்டிவ் டைப் என்பதால், பிரச்சினை பெரிதாக இருக்கும் என்றும், அதிலும் காதல் தோல்வியாக இருக்கும் என்றெல்லாம் ஆருஷி நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவன் காதலித்தான் என்ற எண்ணமே கசப்பாக இருக்க, அத்துடன் அவன் அவளிடம் சொல்லாமல் விட்டதும் சேர்ந்து, ரணமாய் வலித்தது. மனதும், புத்தியும் அவனைப் பற்றியே எண்ணி வாதம் செய்ய, குழப்பத்தில் கலங்கிப் போயிருந்தாள் ஆருஷி.
“அவன் லவ் பண்ணான்னா நமக்கு என்ன கஷ்டம்?” என மனம் கேட்க,
“அவன் சொல்லாம விட்ட கோபம் தான், மத்தபடி வேற என்ன கஷ்டம்?” என புத்தி கேட்டது.
“நோ, அவன் லவ் பண்றதும் கஷ்டம் தான்”
“அதுல உனக்கு என்ன?”
“எப்பவுமே அவன் என்கூட தான இருக்கான், லவ் பண்ண மட்டும் வேற ஒருத்திகிட்ட போயிருவானா?”
“பின்ன உன்னையே லவ் பண்ணனும்னு சொல்றியா?”
“பண்ணா என்ன தப்பு?”
“அப்போ நீ அவன லவ் பண்ற?”
“நா… நா எப்டி அவன லவ் பண்ண முடியும்?”
“அப்புறம் ஏன் அவன் காதலிச்சா உனக்கு வலிக்குது?”
“ஆமா, ஏன் வலிக்குது? அப்டினா… அப்டினா நா அவன லவ் பண்றேன்… யெஸ் ஐ லவ் ஹிம்…” என அறிந்தவளுக்குத் தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்றே புரியவில்லை.
ஆனாலும் மனதிற்குள் மகிழ்ச்சி கரைபுரண்டோட, “ஒரு வருஷம் அவன விட்டு வெலகி இருந்தாலும், அவன் கூட சண்டை போடுறதுக்காக ஏங்குனேனே… அவன் பேசாம இருக்கப்போ, பிஸியா இருப்பான்னு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கிட்டாலும், அப்போல்லாம் ஒரு வெறுமைய தான ஃபீல் பண்ணேன்… அவன் கஷ்டப்படுறான்னு தெரிஞ்சப்போ அவன் பக்கத்துல இருக்கணும்னு மனசு துடிச்சதே… திரும்ப இங்கயே வர்றோம்னு தெரிஞ்சப்போ, எல்லாத்தையும் விட அவனப் பாக்கப் போறோம்குற சந்தோஷம் தான அதிகமா இருந்துச்சு… அன்னிக்கு அவன் முகம் கொஞ்சமா சுருங்குறதக் கூட தாங்க முடியாம தான, அவன வெறுப்பேத்தி டைவர்ட் பண்ணேன்… எனக்காக அவன் கோபப்பட்டப்போ என்னன்னே தெரியாம அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சே… அப்போல்லாம் ஏன்னு யோசிக்கவே தோணல தான்…”
“டேம் இட், நா ஏன் இத இவ்ளோ லேட்டா புரிஞ்சுக்குறேன்… ஏதோ ஒன்னு, நா உன்ன லவ் பண்றேன் ஆதி… என்ன ஆனாலும் சரி, உன் வாழ்க்க பூராம் என்கிட்ட டார்ச்சர அனுபவிக்கணும்னு, உன் தலைல எழுதுனத நீயே நெனைச்சாலும் மாத்த முடியாது. ஃபர்ஸ்ட் உன்ன சோக மோட்ல இருந்து, நார்மல் மோடுக்கு மாத்துறேன். அப்புறம் நீ லவர் பாயா இருந்தாலும் சரி, டாம் அண்ட் ஜெர்ரியா சண்ட போட்டாலும் சரி. நீயா என் லவ்வ ஃபீல் பண்ற வர, உன்ன ஜாலியா லவ் பண்ணிட்டே இருக்கேன்… வாவ், லவ் பண்றது கூட நல்லா தான் இருக்கும் போல… ஐ லவ் யூடா எனிமி…” என மனதிற்குள்ளாகவே குதித்துக் கொண்டாள்.
“முதல்ல அந்த பொண்ணு என்ன ஆனான்னு தெரிஞ்சுக்கணும், அப்டியே அந்த ஃபோட்டோவ போஸ்ட் பண்ணி விட்டது யாருன்னும்…” என உற்சாகமாக எண்ணியவளுக்கு,
“ஒருவேள இன்னும் அவ, ஆதியவே நெனைச்சுட்டு இருந்தான்னா…” என்ற எண்ணம் தோன்றியதில், மொத்த உற்சாகமும் வடிந்து போனது.
“ஸப்போஸ் அப்டி இருந்தான்னா, இட்ஸ் ஓகே ஆதி. நா, உன் அளவுக்கு சென்சிடிவ் இல்ல. அதுனால, இத ஈசியா எடுத்துட்டுப் போயிருவேன். நீ அவள உண்மையா நேசிச்சுருக்க, அதுல குறுக்க வந்து நா குழப்பம் பண்ண மாட்டேன்…” என்று உறுதி எடுத்தவளுக்கு, தன்னில் இருந்து எதையோ பிரித்துச் செல்வது போல் வலித்தது.
💝
பாவனி இப்போது எங்கு, எப்படி இருப்பாள் என கண்டறிய வேண்டுமென்றால், அவளைப் பற்றிய குறைந்தபட்ச தகவலாவது தெரிய வேண்டும் என சுற்றித் திரிந்த ஆருஷிக்கு எதுவும் கிடைக்கவில்லை.
சாய்க்கும் அவளைப் பற்றி தெரியவில்லை, ஸ்ருஷ்டியிடம் கேட்கலாம் என்றால், அவள் வகுப்பினரோ களப்பயணம் என்ற பெயரில், தாவரங்களைத் தேடுகிறோம் என ஊரெங்கும் சென்று புல் பிடுங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒருநாள் கடவுளாகப் பார்த்து, ஆருஷிக்கு அந்த வாய்ப்பை அளித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் யூ.ஜி முடித்த மாணவ, மாணவியருக்கு இன்னும் சில மாதங்களில் கான்வகேஷன் வைப்பதாக இருந்தனர். அதற்கான ஆசிரியர்கள் அனைவரும், அம்மாணவர்களின் தரவுகளை சரிபார்ப்பதும், இல்லாத சில விவரங்களை பதிவு செய்வதுமாக இருந்தனர்.
விஸ்காம் டிப்பார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி கௌரி, வேலை பார்ப்பதென்றால் மூக்கால் அழும் பெண்மணி. அந்தத் துறை மாணவர்களை வைத்தே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஒருநாள் மாலையில் சாய் முன்னாள் பி.பி.ஏ மாணவர்களின் விவரங்களைக் கணினியில் அமர்ந்து சரிபார்த்துக் கொண்டிருக்க, வகுப்பு தொடங்கியதால் அவனை அழைக்க ஸ்டாஃப் ரூம் வந்தாள் ஆருஷி. அதற்குள் கௌரி அவளை அழைத்து, அவர் துறை மாணவர் விவரங்களை பதிவெண் வாரியாக ஒழுங்குபடுத்தித் தர சொல்ல, ஐயோவென அமர்ந்தாள் ஆருஷி.
அவள் அடுக்கிக் கொண்டே வரும்போது எதார்த்தமாக அதிலிருந்த பெயரை வாசித்தவளுக்கு, கத்தி குதிக்க வேண்டும்போல் இருந்தது. அது நிச்சயமாக பாவனி தான். அதிலிருந்த விவரங்களையும், பாவனியின் புகைப்படத்தையும் தன் செல்பேசியில், கௌரி அறியாமல், படம் பிடித்துக் கொண்டவள் சத்தமின்றி அங்கிருந்து நழுவினாள்.
வெளியில் வந்து, தெளிவாக பாவனியின் புகைப்படத்தைக் கண்டவளுக்கு, அவளை நிச்சயம் எங்கேயோ பார்த்திருக்கிறோம் எனத் தோன்றியது. அன்று மாலையில், சாயிடம் அவள் தானா என உறுதிப்படுத்தியவள், தன் தேடலை இன்னும் கொஞ்சம் முடுக்கினாள்.
அவள் மொபைல் எண்ணும் இப்போது செயல்பாட்டில் இல்லை எனக் காட்ட, அவளது முகவரியிலும் தற்போது யாரும் வசிக்கவில்லை எனக் கூறி விட்டனர். “ஐயோ ஆதி, உன் ஆளு என்னடா, என்னை இப்டி நல்லா சுத்தல்ல விடுறா? இப்டியே போய்கிட்டு இருந்துச்சுன்னு வச்சுக்கோயேன், அப்புறம் நானே உன்ன கரெக்ட் பண்ணிருவேன். அவ திரும்ப வந்தாலும் விட்டு குடுக்க மாட்டேன் பாரு…” என்று எண்ணிக் கொண்டவளுக்கு, அவன் தனக்குக் கிடைத்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி அவளைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வலுத்திருந்தது.
-தொடரும்…
-அதி… 💕
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.
Thankyou….