Loading

தனது புற அழகு மற்றும் உடல்வாகைப் பார்த்து நகைத்துக் கிண்டல் செய்பவர்களுக்கு மத்தியில் தன்னுடைய ஆரோக்கியமாக மாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்த நிவேதிதாவை எண்ணிப் பார்த்தவளோ, தனக்கும் ஒரு ஆருயிர்த் தோழி கிடைத்து விட்டாள் என்று பெருமிதம் அடைந்தாள் யக்ஷித்ரா.

 

இப்படியாக நாட்கள் கழிந்து கொண்டிருந்த சமயத்தில் தான், ஒருநாள் தோழியின் சோகம் படிந்த கண்கள் மற்றும் வதனத்திற்கான காரணங்கள் என்ன என்பதைத் தானே முன் வந்து தோழியிடம் கேட்டு விட்டாள் நிவேதிதா.

 

அப்போது தான், தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் அவளிடம் விவரித்தாள் யக்ஷித்ரா.

 

அதற்குப் பிறகான நாட்களில் எல்லாம் அவளது உடல் மற்றும் மனநிலையில் அக்கறை எடுத்துக் கொள்ளத் தொடங்கினாள்.

 

அப்போதிருந்து, அவர்களது நட்பதிகாரம் இன்னும் வலுவாகியது.

 

அதிலிருந்து தான், அவர்களது பள்ளிக் காலங்களில் மட்டுமில்லாமல் இப்பொழுதும் கூட நல்ல தோழிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

 

இதையெல்லாம் எண்ணிப் பார்த்து முடித்தவளோ, தனது பயமும், பதட்டமும் வெகுவாக குறைந்திருப்பதை உணர்ந்தவளோ, அதற்குப் பிறகு, சிறிது நேரம் உறக்கத்தைத் தழுவினாள் நிவேதிதா.

 

அவள் கிளம்பியதில் இருந்து மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தாள் அவளுடைய உயிர்த் தோழி யக்ஷித்ரா.

 

அதைக் கண்டு,”அவங்க வர்ற வரைக்கும் நீ இப்படித் தானே ஆர்வத்தோட காத்துட்டு இருப்ப?” என்று மனைவியிடம் கேலியாக வினவினான் அற்புதன்.

 

“ஆமாம் ங்க‌. ஆர்வம் மட்டுமில்லை, அவ தனியாக வர்றதால் எனக்கு ரொம்ப பதட்டமாக இருக்கு!” என்று தன் உள்ளத்தில் இருப்பதை அவனிடம் உரைத்தாள் மனைவி.

 

“அவங்கப் பத்திரமாக வந்து சேர்ந்துருவாங்க யக்ஷூ. நீ கவலைப்படாதே! அதான், உனக்கு அப்பப்போ இன்ஃபார்ம் பண்ணிட்டு இருக்காங்களே? அப்பறம் என்ன?” எனவும்,

 

“ம்ஹ்ம். ஆமாங்க” என அவன் கூறியதை ஒப்புக் கொண்டு அமைதியாகி விட்டாள் யக்ஷித்ரா.

 

அடுத்த நாள் தனக்கு விடுமுறை என்பதால், அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமையும் விடுப்பு எடுத்துக் கொண்டான் அற்புதன்.

 

அவனது அலுவலகத்தில் அவனுக்குப் பணியின் நேரத்தை மாற்றியதில் இருந்து இப்போது வரை அவன் அதிகமாக விடுப்பு எடுத்துக் கொள்ளவே இல்லை. 

 

அதனால், அது வீணாகி விடக் கூடாது என்பதால் அன்றொரு நாள் அலுவலகத்திற்குச் செல்லாது வீட்டில் இருந்து கொண்டு, உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய மனைவியின் அருகில் அமர்ந்து அவள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும், வார்த்தைகளையும் உள்வாங்கிக் கொண்டிருக்கிறான் அற்புதன்.

 

“நீங்க ஏன் என் கூடச் சேர்ந்து முழிச்சிட்டு இருக்கீங்க? போய்த் தூங்குங்க” என்று அவனுக்கு அறிவுறுத்தினாள் யக்ஷித்ரா.

 

“உனக்கு அவங்க ஊருக்கு வந்து சேர்ந்தாச்சுன்ற மெசேஜ் வந்ததுக்கு அப்பறமாக நான் தூங்கப் போய்க்கிறேன். அது வரைக்கும், நான் உன் கூடத் தான் உட்கார்ந்து இருப்பேன்” என்று அவளிடம் கறாராக மொழிந்தான் அவளது மணாளன்.

 

“ஏங்க இப்படி பண்றீங்க?” என்று அவனிடம் கெஞ்சியவளிடம்,

 

“அப்போ நீயும் வந்து தூங்கு, உன் ஃப்ரண்ட் வரப் போற நேரத்தைக் கேட்டு அலாரம் வச்சு எழுந்திருச்சுக்கோ” என்று அவளுக்கு யோசனை சொன்னான் அற்புதன்.

 

அவன் தூங்காமல் விழித்திருப்பது இவளுக்கு உடன்பாடில்லை. அதனாலேயே, தன் கணவன் சொன்னதைப் போலச் செய்து விட்டுத், தானும் உறங்கினாள் யக்ஷித்ரா.

 

மறுநாள் விடியலின் போது, தனது பயணம் முடியும் தருவாயில், நித்திரைக் கலைந்து விழித்து, நேரத்தைப் பார்த்தாள் நிவேதிதா. 

 

அதில், அவளது ஊர் வருவதற்கு இன்னும் சில நாழிகைகள் இருந்தது. எனவே, தன்னுடைய உடைமைகளைத் தயாராக வைத்துக் கொண்டு, யாதவிக்குக் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து விட்டுக் காத்திருந்தாள்.

 

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவள் இறங்கப் போகும் நிறுத்தத்தின் பெயரைப் பேருந்து நடத்துனரின் வாயிலாக கேட்டவுடன், தனது பயணப் பையுடன் பேருந்திலிருந்து கீழே இறங்கினாள் நிவேதிதா.

 

தன் செல்பேசி ஒலிக்கவும், அது யாரென்று பார்த்து விட்டுக் காதில் வைத்து,”ஹலோ!” என்க,

 

“ஹலோ நிவி அக்கா” என்றவுடன்,

 

“ஹாங்! யாது! நான் பஸ் ஸ்டாண்டில் நின்னுட்டு இருக்கேன்” என்று அவளுக்குத் தெரிவித்தாள் நிவேதிதா.

 

“நானும் வீட்டிலிருந்து கிளம்பிட்டேன் க்கா. பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன்” என்றாள் யாதவி.

 

“ஓகே யாது. பார்த்து வா” என்று கூறி அழைப்பை வைத்து விட்டு, அவள் வருவதற்குள் அங்கேயிருந்த கடைக்குச் சென்று கொஞ்சமாக நொறுக்குத்தீனிகள் வாங்கிக் கொண்டாள் நிவேதிதா.

 

அந்த நேரத்தில், அங்கே யாதவியும் வந்து விட, இவளைப் பார்த்ததும்,”ஹாய் க்கா!” என்று அவளிடம் கூறிப் புன்னகைத்தாள்.

 

“ஹாய் யாது! நல்லா வளர்ந்துட்டியே!” 

 

“ஹாஹா! ஆட்டோவில் ஏறுங்க” எனறு கூறியவளோ, வீட்டிற்குச் செல்லும் வரை அவர்கள் இருவரும் நன்றாகப் பேசிக் கொண்டு வந்தார்கள்.

 

“இந்த வீடு தான் அண்ணா‌”என்கவும், அந்த ஆட்டோவை நிறுத்தப்பட்டதும், அதிலிருந்து இறங்கிவர்கள், தங்கள் பயணத்திற்கானப் பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டின் முன் வந்து அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தார்கள்.

 

சில மணித்துளிகளுக்குப் பின்னர், அந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டு,”ஹேய் நிவி ம்மா!” என்று அவளைப் பார்த்துப் புன்னகைத்தார் மீனா.

 

“ஹாய் ம்மா” என்று வெகு மாதங்கள் கழித்து அவரைப் பார்த்த மகிழ்ச்சி அவளது முகத்தில் தங்கு தடையின்றி வெளிப்பட்டது.

 

நிவேதிதாவை வீட்டிற்குள் அனுமதித்து விட்டுத், தங்களது பரஸ்பர விசாரிப்புகளை முடித்தப் பின்னர், 

 

“யக்ஷிக்குக் கால் பண்ணிச் சொல்லனும் ம்மா” என்று அவரிடம் கூறினாள் நிவேதிதா.

 

“நான் அக்காவுக்கு இன்ஃபார்ம் பண்ணிடறேன் நிவி க்கா” என்று அவளிடம் தெரிவித்து விட்டாள் யாதவி.

 

அவளுக்குக் குடிக்கக் காஃபியா, தேநீரா? என்பதைக் கேட்டறிந்து கொண்டு,”அந்த ரூமுக்குப் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா ம்மா‌. நாம அப்பறம் பொறுமையாக உட்கார்ந்து பேசலாம்” என்று அவளை அனுப்பி வைத்து விட்டு,

 

அவள் சென்றதும்,”நான் போய்ப் பாலைச் சுட வைக்கிறேன் யாது. நிவி குளிச்சிட்டு வந்ததும் காலைச் சாப்பாட்டைப் பார்த்துக்கலாம்” என்று அவளிடம் கூறி விட்டு சமையலறைக்குப் போய் விட்டார் மீனா.

 

அந்த நேரத்தில், தனது தமக்கைக்குக் கைப்பேசி அழைப்பு விடுத்து,

 

“நிவி அக்காவை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன் யக்ஷி” என்று அவளிடம் அறிவித்தாள் யாதவி.

 

“சூப்பர்! எங்கேடா இன்னும் கால் வரலையேன்னுப் பார்த்தேன். இப்போ என்னப் பண்றா?” என்று அவளிடம் தன் தோழியைப் பற்றி விசாரித்தாள் யக்ஷித்ரா.

 

“இப்போ தான், ஃப்ரெஷ் ஆகப் போயிருக்காங்க. அவங்க வந்ததும் உனக்குக் கால் பண்ணச் சொல்றேன்” என்றாள் அவளது தங்கை.

 

“சரிடி. அவ வந்ததும் உடனே எல்லாம் ஃபோன் பண்ணச் சொல்ல வேணாம். சாப்பிட வச்சிட்டு அப்புறமாகப் பேசச் சொல்லு” என்றாள் யக்ஷித்ரா.

 

“ஓகே க்கா” என்றுரைத்து விட்டு அழைப்பைத் துண்டித்தாள் யாதவி.

 

அப்போது தேநீரைக் கலக்கி எடுத்துக் கொண்டு வந்த மீனாவோ,”யக்ஷி பேசினாளா?” என்று அவளிடம் விசாரித்தார்.

 

“ஆமாம் மா” என அவரிடம் விவரத்தைச் சொன்னாள் இளைய மகள்.

 

அதற்குள்ளாக, தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்த நிவேதிதாவிடம்,

 

“உன் ஃப்ரண்ட் தான் கால் செஞ்சா ம்மா” என்று அவளிடம் தகவலைச் சொல்லவும்,

 

“இதோ அவ கூட இப்போ பேசிடறேன் ம்மா” என்றவளைத் தடுத்து,

 

“நீங்கச் சாப்பிட்டதுக்கு அப்புறமாக ரிலாக்ஸ் ஆகிட்டுப் பேச சொன்னா அக்கா” என்று அவளிடம் கூறினாள் யாதவி.

 

“சரிம்மா” என்றவளோ, தேநீரை அருந்தத் தொடங்கினாள் நிவேதிதா.

 

அப்போது, அவளது விருப்ப உணவைப் பற்றிக் கேட்டார் மீனா.

 

“இட்லி இல்லைன்னா தோசையே போதும் மா. பஸ்ஸில் டிராவல் பண்ணிட்டு வந்ததால் எனக்கு வயிறு ஒரு மாதிரி இருக்கு” என்று அவருக்குப் பதிலளிக்கவும்,

 

“சரிம்மா. ரெண்டையும் செய்றேன். உனக்கு எது வேணுமோ, அதைச் சாப்பிடு” என்று அவளிடம் சொல்லி விட்டுச் சமையல் வேலையைப் பார்க்கச் சென்று விட,

 

அவர்களுக்காகத் தான் வாங்கி வந்திருந்த தின்பண்டங்களை எடுத்து யாதவியிடம் கொடுத்தாள் நிவேதிதா.

 

“அச்சோ! ஏன் க்கா இப்படி?” என்று அவளிடம் கூறவும்,

 

“இதில் யக்ஷிக்குப் பிடிச்ச ஸ்நாக்ஸ் எல்லாம் இருக்கு ம்மா. உனக்கு என்னப் பிடிக்கும்ன்னு சொல்லு. அடுத்த தடவை வரும் போது வாங்கிட்டு வர்றேன்” என்று தன்னிடம் கேட்டவளிடம்,

 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் க்கா” என்று அவளிடம் கூறி விட்டாள் யாதவி.

 

அதன்பின், இட்லி மற்றும் தோசையைச் சுட்டு விட்டு நிவேதிதாவையும், தன் மகளையும் அழைத்து அவர்களுடன் இணைந்து உணவுண்டு முடித்தார் மீனா.

 

இங்கோ, தங்களது காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த யக்ஷித்ராவிடம்,”அந்தப் பொண்ணு வந்து ரொம்ப நேரமாச்சு. நீ காலங்கார்த்தாலேயே கிளம்பிப் போயிருப்பன்னு நினைச்சேன். ஆனால், இன்னும் ஃபோனில் தான் விசாரிச்சுட்டு இருக்கிற?” என்று தன் மருமகளிடம் வினவினார் கீரவாஹினி.

 

“நானும் அப்படி நினைச்சுத் தான் அலாரம் எல்லாம் வச்சு எழுந்தேன் அத்தை. ஆனால் அவ ஊருக்கு வந்து இறங்கினதும் குளிச்சு, சாப்பிட்டுக் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கனும்ல? அதான், நானும் அதுக்குள்ளே சாப்பிட்டுட்டுக் கிளம்பிப் போகலாம்னு இருக்கேன்” என்றுரைத்தாள் யக்ஷித்ரா.

 

“ஓஹ்! சரி” என்று அவளிடம் சொல்லி விட்டார் அவளது மாமியார்.

 

அதற்குப் பிறகு, அவளைச் செல்பேசி வழியாகத் தொடர்பு கொண்டு,”யக்ஷி!” என்று அவளிடம் குதூகலத்துடன் உரைத்த தோழியிடம்,

 

“ஹாய் நிவி! சாப்பிட்டியா?” என்று வினவினாள் யக்ஷித்ரா.

 

“ம்ம். இப்போ தான் ஆச்சு. சாப்பிட்டுட்டு வந்தால் தான், நான் உனக்குக் கால் பண்ணனும்ன்னுக் கண்டிஷன் போட்டியாம்?” என்று அவளிடம் குறும்புடன் கேட்டாள் நிவேதிதா.

 

“எஸ்!” என்று தானும் குறும்புக் கொப்பளிக்கப் பதில் சொன்னாள் அவளது தோழி.

 

“ஆஹான்! நீ என்னைப் பார்க்க எப்போ இங்கே வரப் போற?” என்று வினவியவளிடம்,

 

“இதோ வீட்டில் இருந்து புறப்படப் போறேன் நிவி. இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் அங்கே இருப்பேன்” என்று அவளுக்கு உறுதி அளித்தாள் யக்ஷித்ரா.

 

“சீக்கிரம் வா ம்மா” என்று அவளுக்கு வலியுறுத்தி விட்டு அழைப்பை வைத்தாள் நிவேதிதா.

 

தன்னுடைய தோழியைப் பார்ப்பதற்காக வேகவேகமாகத் தயாராகியவளை, நிதானமாகக் கிளம்புமாறு அறிவுரை வழங்கினார் கீரவாஹினி.

 

“நீ தானே மருமகளை அழைச்சிட்டுப் போய் அவங்க வீட்டில் விட்டுட்டு வரப் போற?” என்று தன் மகனிடம் வினவினார் அகத்தினியன்.

 

“ஆமாம் ப்பா. அவங்ககிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வாடா. உடனே கிளம்பி வந்துடாதே!” என்று அவனுக்கு அறிவுறுத்தினார் அவனது தந்தை.

 

“சரிப்பா” என்றவனோ, 

 

”போகலாமா?” என்று தன் மனைவியிடம் கேட்டான் அற்புதன்.

 

“கிஃப்ட்ஸ்ஸை எடுத்துட்டு வந்துட்றேன் ங்க” என்று அவனிடம் கூறி விட்டு அறைக்குள் நுழைந்து, தான் தயாராக எடுத்து வைத்திருந்தப் பரிசுப் பொருட்களைத் தன்னுடைய பையினுள் அடைத்து விட்டு வெளியே வந்தாள் யக்ஷித்ரா.

 

தன் தாய், தந்தையிடம் சொல்லி விட்டு அவளை வண்டியில் ஏற்றிக் கொண்டு மனைவியின் பிறந்தகத்திற்குச் சென்றான் அற்புதன்.

 

அவர்கள் வந்திருந்த வாகனத்தை அதற்குரிய இடத்தில் நிறுத்திய சத்தம் வீட்டிற்குள் இருந்தவர்களுக்குக் கேட்டு விட்டது போலும்!

 

ஆகவே,”யக்ஷி வந்துட்டான்னு நினைக்கிறேன்” என்று இளையவர்களிடம் அறிவித்து விட்டுப் போய்க் கதவைத் திறந்து பார்த்தார் மீனா.

 

அங்கே வாசலில், அவரது மகளும், மருமகனும் இன்முகத்துடன் நின்றிருப்பதைப் பார்த்தவருக்கு மனம் நிறைந்து போனதால், அவர்களைத் தானும் முகமலர்ச்சியுடன் வரவேற்கும் விதமாக,

 

“வா யக்ஷி. வாங்க மாப்பிள்ளை!” என்று அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார் மீனா.

 

ஹாலில் அமர்ந்திருந்த நிவேதிதாவோ, தன் ஆருயிர்த் தோழியைப் பார்த்தவுடன், எதையும் யோசிக்காமல் அவளிடம் விரைந்து சென்று,”யக்ஷி!” என்று அவளைக் கட்டிக் கொண்டாள்.

 

“நிவி!” என்றவளுக்கும் மகிழ்ச்சியில் தொண்டை அடைத்து விட்டது.

 

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனங்களும் இளகியது.

 

அதனால், மற்ற மூவரும் அமைதியாக நின்று விட்டனர்.

 

சில மணித்துளிகளுக்குப் பின்னர், இரண்டு தோழிகளும் தங்களது நலன்களை விசாரித்து முடித்து மற்றவர்களைப் பார்த்து,”சாரி!” என்று மன்னிப்புக் கேட்டார்கள்.

 

“பரவாயில்லை‌ ம்மா. இரண்டு பேரும் உட்காருங்க” என்று அவளிடம் கூறி விட்டுத், தங்களுக்கான நாற்காலிகளில் அமர்ந்து கொண்டனர் யக்ஷித்ராவின் கணவன், தாய் மற்றும் தங்கை.

 

“உங்க வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க? உங்களோட ஹஸ்பெண்ட் என்னப் பண்றார்? உங்கப் பிள்ளைங்க எப்படி இருக்காங்க?” என்று தனது மனைவியின் வாயிலாக அவளது தோழியைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டாலும் ஒரு சம்பிரதாயத்திற்காக நிவேதிதாவிடம் இந்தக் கேள்விகளை முன் வைத்தான் அற்புதன்.

 

அவனுடைய வினாக்களுக்கானப் பதில்களைப் புன்னகை முகத்துடன் கூறி முடித்தாள் நிவேதிதா.

 

அவனும், தனது தமக்கையும் குடிப்பதற்கு இலகுவான பானங்களைக் கொண்டு வந்து கொடுத்து உபசரித்தாள் யாதவி.

 

அதை வாங்கித் துரிதமாகப் பருகி முடித்து விட்டுத், தன்னுடைய மனைவியை அருகில் அழைத்து,”நீ கிளம்பும் போது எனக்குக் கால் பண்ணு யக்ஷூ. நான் வந்து வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்று அவளிடம் சொல்லி விட்டு, அங்கே இருந்தவர்களிடம் விடைபெற்று விட்டு வெளியேறினான் அற்புதன்.

 

– தொடரும் 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்