மறுபுறம் ஆபிஸிற்கு கிளம்பிய சமுத்ரா தன் வண்டியை கிளப்பும் போது வயிற்றில் ஏதே அசௌகரியமாக உணர்ந்தாள்.
அதனை அலட்சியப்படுத்தியவள் வண்டியை ஓட்டிக்கொண்டு செல்ல பாதி வழியில் அந்த அசௌகரியம் வலியாக மாற அவளின் அந்தரங்க பகுதியிலும் ஏதோவொரு வித்தியாசத்தை உணர்ந்தாள் சமுத்ரா.
ஏதோ சரியில்லையென்று அவள் மூளை எச்சரிக்கை எழுப்ப உடனேயே வண்டியை ஒரு ஹாஸ்பிடலின் முன் நிறுத்தியவள் உள்ளே செல்லும் வழியில் கண்கள் இருட்ட அப்படியே மயங்கி சரிந்தாள்.
சமுத்ரா மீண்டும் கண்விழித்த போது அவள் மருத்துவமனை அறையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிய மெதுவாக எழ முயன்றவளை தடுத்தார் அவளுக்கு துணையாக இருந்த நர்ஸ்.
“மேடம் ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க. இருங்க டாக்டரை கூப்பிடுறேன்.” என்று அந்த நர்ஸ் வெளியே செல்ல முயல அவரை தடுத்து நிறுத்திய சமுத்ரா
“ஒரு நிமிஷம். எனக்கு என்னாச்சு? நான் எப்படி இங்க?” என்று விசாரிக்க
“நீங்க மயங்கி விழுந்துட்டீங்க மேடம். உங்க டீடெயில்ஸ் எதுவும் தெரியல. எமெர்ஜென்சினு ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் உங்களை அட்மிட் பண்ண சொன்னாங்க. இருங்க மேடம் மீதியை டாக்டரே வந்து சொல்லுவாங்க.” என்று அந்த நர்ஸ் மருத்துவரை அழைத்து வர வெளியே ஓடினார்.
சற்று நேரத்தில் மருத்துவரும் வர
“ஹௌ டூ யூ பீல் நௌ மிஸஸ்..” என்று அந்த மருத்துவர் இழுக்க
“சமுத்ரா. பைன் டாக்டர். எனக்கு என்னாச்சு?” என்று சமுத்ரா கேட்க
“உங்களுக்கு நீங்க கன்சீவ்வா இருக்க விஷயம் தெரியுமா?” என்று அந்த மருத்துவர் கேட்க அதிர்ந்துபோனாள் சமுத்ரா.
அந்த வார்த்தைகள் அவளை ஏதேதோ செய்ய அவளின் வார்த்தைகள் திக்கியது.
“டாக்டர் நீங்க நீங்க…” என்றவளது கண்கள் கலங்க சமுத்ராவிற்கு விஷயம் தெரியாது என்று புரிந்துகொண்ட மருத்துவர்
“யெஸ் யூ ஆர் 7 வீக்ஸ் ப்ரெக்னென்ட். பட் இப்போ நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க. குழந்தையும் ஸ்டேபலா இல்லை. நீங்க ரெஸ்ட்லஸ்ஸா இருக்கமாதிரி தெரியிது. அளவுக்கு அதிகமாக உங்களை ஸ்ட்ரெயின் பண்ணதோட விளைவு தான் இன்னைக்கு நடந்தது. இனி நீங்க ரொம்ப கவனமாக இருக்கனும். அதுவும் அடுத்த ஒரு மாசம் ரொம்ப கவனமாக இருக்கனும். மறுபடியும் இப்படி நடந்தா இந்த தடவை மாதிரி உங்க கருவை காப்பாத்த முடியாது. சோ கவனமாக இருங்க. உங்க வீட்டுக்கு தகவல் சொல்லி யாரையாவது வரச்சொல்லுங்க.” என்று மருத்துவர் கூற சில கணங்கள் யோசித்தவள்
“இப்போ என்கூட யாரும் இல்லை டாக்டர். நான் இப்போ தனியா தான் இருக்கேன். இனி கவனமாக இருந்துக்கிறேன்.”என்று சமுத்ரா கூற
“இந்த நேரத்துல யாராவது துணைக்கு இருந்தா நல்லது. முடிந்தா உங்க ஹஸ்பண்டையாவது வரச்சொல்லுங்க.” என்று மருத்துவராய் அவரும் சொல்ல
“ஐ கேன் மேனேஜ்.” என்று சமுத்ரா உறுதியாக கூற அதற்கு மேல் அந்த மருத்துவராலும் வற்புறுத்தமுடியவில்லை.
“ஓகே. நான் ப்ரிஷ்க்ரிப்ஷன் எழுதி தாரேன். மறக்காமல் அதை பாலே பண்ணுங்க.” என்றவர் அவளுக்கு மேலும் சில அறிவுரைகளை வழங்கிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார்.
நர்ஸிடம் அவரின் போனை வாங்கிய சமுத்ரா உதய்க்கு அழைத்து ஆஸ்பிடல் பெயரை சொல்லி அங்கு வரச்சொன்னாள்.
நர்ஸ் வெளியே சென்றதும் சமுத்ராவின் உணர்வுகளோ ஆழியலையாய் ஆர்பரித்தது. தன் கையை மெதுவாக தன் வயிற்றின் மேல் வைத்தவளின் உள்ளத்துள் பல்வேறு மாற்றங்கள். அளவில்லா மகிழ்ச்சி வரமாய் கிடைத்ததை போல் உணர்ந்தாள் சமுத்ரா.
அவள் வருடும் போது கடுக்கனாய் இருக்கும் அந்த கரு அசைவதை போல் உணர்ந்தவளுக்கு உள்ளம் பூரித்துபோனது.
அனைத்தும் வெறுத்துப்போய் இருந்தவளுக்கு இந்த குழந்தையின் வரவு பெருத்த பலத்தை கொடுத்தது. அது அவளின் அழுத்தத்தை குறைக்க அதன் விளைவாக கண்ணீர் கசிந்து அவளை தேற்றியது.
“மாமா நீங்க எங்கேயும் போகல. இதோ என் வயித்துல தான் பத்திரமா இருக்கீங்க. மத்தவங்க சொன்ன மாதிரி என்னால நீங்க இறந்துபோகல. என்கூடவே இருக்கத்தான் நீங்க போனீங்க. இனி யாரும் என்னை எதுவும் பேசமுடியாது. யாரும் பேசமுடியாது.” என்று ஒரு நொடி அழுது தீர்த்தவள் தன் கண்களை துடைத்துக்கொண்டு
“நான் உங்களை பத்திரமா பார்த்துப்பேன் மாமா. இனி நீங்க எப்பவும் என்னைவிட்டு போகமாட்டீங்க. நான் போகவும் விடமாட்டேன்.” என்று பேசிக்கொண்டவளுக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி மட்டுமே பெருகி வழிந்தது.
சற்று நேரத்திலேயே உதய் அடித்து பிடித்து ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தான்.
சமுத்ரா போனில் எந்த விவரமும் சொல்லாததால் வந்ததும்
“என்னாச்சு சமுத்ரா? எதுக்கு ஆஸ்பிடல்ல இருக்க? மறுபடியும் உடம்புக்கு எதுவும் முடியலயா?” என்று உதய் பதட்டத்துடன் விசாரிக்க நடந்ததை சொன்ன சமுத்ரா தான் கருவுற்றிருப்பதை மட்டும் சொல்லவில்லை.
“டாக்டர் என்ன சொன்னாரு?” என்று கேட்க
“லேடிஸ் ப்ராப்ளம் தான் வேற ஏதும் இல்லை. கொஞ்சம் அன்பிட்டா இருக்கேன். சோ ஹெல்தியா சாப்பிட சொன்னாரு.” என்று கூற
“நீ இப்போலாம் உன்னை சரியா கவனிச்சிக்கிறதே இல்லை சமுத்ரா. பாரு அதோட ரிசல்ட் இங்க வந்து படுத்துக்கிற மாதிரி போச்சு. கொஞ்ச நாளைக்கு இந்த வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ வீட்டுல இருந்து நல்லா ரெஸ்ட் எடு.” என்று ஒரு நண்பனாய் உதய்யும் அறிவுரை சொல்ல சமுத்ராவே மனதினுள்
“நாம ப்ரெக்னென்ட்னு தெரிஞ்சா இவனே நம்மளை கட்டி போட்டு ரெஸ்ட் எடுக்க வச்சிருவான் போல”என்று கூறி சிரித்துக்கொண்டவள்
“நான் சரியா ரெஸ்ட் எடுக்குறேன் போதுமா?” என்று சமுத்ரா உறுதியளித்த பின்பு தான் அமைதியானான் உதய்.
“உதய் வீட்டுல யாருக்கும் தெரியவேண்டாம். தெரிஞ்சா அநாவசியமா பயப்படுவாங்க.” என்று சமுத்ரா சொல்ல உதய்க்கும் அது சரியென்றுபட சம்மதித்தான் உதய்.
உதய் பில்லை கட்டிவிட்டு வர சமுத்ராவும் மருத்துவரை சந்தித்து ப்ரிஷ்க்ரிப்ஷனை பெற்றுக்கொண்டு உதய்யோடு வீட்டிற்கு கிளம்பினாள்.
வீட்டில் மாலதி விசாரித்ததற்கு மழுப்பலாக ஒரு பதிலை சொல்லிவிட்டு தன் அறைக்குள் அடைந்தவளுக்கு மனம் அத்தனை பரவசமாக இருந்தது.
அவளின் மனமோ குழந்தை பற்றி ஏதேதோ யோசிக்க மனம் பல சந்தேகங்களை எழுப்பியது. ஒரு கட்டத்தில் சந்தேகங்கள் மட்டுமே குவிந்துகிடக்க யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வதென்று யோசித்தவளுக்கு அவளின் அன்னையின் நினைவு வர உடனேயே அமராவதிக்கு அழைத்தாள். ஆனால் எப்படி கேட்பதென்று யோசித்தவளுக்கு ஒரு வழி கிடைக்க தன் அன்னைக்கு அழைத்தாள் சமுத்ரா.
அழைப்பை எடுத்ததும்
“என்னம்மா இந்த நேரத்துல கூப்பிட்ருக்க? ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்க
“அதெல்லாம் இல்ல. உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்க தான் கூப்பிட்டேன். என் ப்ரெண்டு ஒருத்தி ப்ரெக்னென்டா இருக்கா. இப்போ அவ துணைக்கு யாரும் இல்லை. அவ ரொம்ப வீக்கா இருக்கதா டாக்டர் சொல்லியிருக்காரு. அதான் இந்த மாதிரி நேரத்துல என்ன சாப்பிடனும்னு கேட்டா. அதை கேட்க தான் கூப்பிட்டேன்.” என்று சமுத்ரா சமார்த்தியமாக ஒரு காரணத்தை கூற அதனை அமராவதியும் அப்படியே நம்பிவிட்டார்.
“அச்சோ அந்த பொண்ணு துணைக்கும் ஆளில்லையா? எத்தனையாவது மாசம் இது?” என்று அமராவதி கேட்க
“இரண்டு மாசம்னு சொன்னா” என்று சமுத்ரா கூற
“இது மசக்கை மாசமாச்சே. அந்த பொண்ணு தனியா சமாளிச்சிடுமா?” என்று அக்கறையுடன் கேட்க
“மசக்கைனு மார்னிங் சிக்னெஸ்ஸையா சொல்லுறீங்க?” என்று சமுத்ரா கேட்க
“ஆமா இந்த நேரத்துல சிலருக்கு தலைசுத்தல், வாந்தி அதிகமாக இருக்கும். சிலருக்கு முதல் மூனு மாசம் இருக்கும். சிலருக்கு அடுத்த மூனு மாசம் இருக்கும். சிலருக்கு சுத்தமாகவே இருக்காது. அந்த பொண்ணுக்கு எப்படியோ தெரியல.” என்று அமராவதி கூற சற்று யோசித்த சமுத்ரா தனக்கு அப்படியொரு பிரச்சினையும் இல்லையென்பதை உணர்ந்து
“அவளுக்கு அப்படி எதுவும் இருக்கதா செல்லலை. அப்படி இருந்தா என்ன செய்றது?” என்று விசாரிக்க மருத்துவ குறிப்புகளாய் அடுக்கத்தொடங்கினார் அமராவதி.
இதை கேட்ட சமுத்ராவிற்கு மனதினுள்
“இன்னொருத்தர் பொண்ணுக்கே இவ்வளவு சொல்றாங்கனா நமக்குனு தெரிஞ்சா என்ன செய்வாங்க?” என்று யோசித்தவளுக்கு சற்று சிரிப்பாக இருந்தது.
அந்த உரையாடல் ஒருமணி நேரத்துக்கு மேலாக தொடர தான் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டிய அனைத்தையும் தெரிந்துகொண்டாள் சமுத்ரா.
அமராவதி சில உணவு வகைகளை பட்டியலிட்டு மாலதியிடம் கூறி தயாரித்து அந்த தோழிக்கு எடுத்துசென்று கொடுக்கச்சொன்னார்.
இன்னும் சிலநேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவளுக்கு மனது அமைதியாக இருந்தது.
தன் அன்னையிடம் செய்தியை கூறாத போதிலும் அவருடன் உரையாடியது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.
இப்போது அவளுக்கு ஷாத்விக்கின் நினைவு வர மனம் தவித்தது. இந்த விஷயத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியவனிடம் விஷயத்தை சொல்லமுடியாத நிலையிலிருக்கும் தன்னிலை அவளுக்கு சற்று சலிப்பாக இருந்தது.
ஏதேதோ யோசித்தவளுக்கு ஷாத்விக்கின் குரலை கேட்க வேண்டுமென்று தோன்ற அவனுக்கு அழைத்தாள் சமுத்ரா.
நான்கு ரிங்கிற்கு பின் அழைப்பு எடுக்கப்பட
“ஹலோ மாமா” என்று சமுத்ரா அழைக்க மறுபுறம் அமைதி நிலவியது.
அவன் கோபம் புரிந்து போனை ஸ்பீக்கரில் போட்டவள் தன் வயிற்றினருகே வைத்தபடி
“உங்க புது பிசினஸிற்கான அட்வர்டைஸ்மென்ட் பத்தி கேட்டிருந்தீங்க. அது பத்தி டீடெயில்ஸ்
கொடுத்தீங்கனா வேலை ஆரம்பிச்சிடலாம்.” என்று வழமைக்கு மாறான மென்மையான குரலில் பேச ஷாத்விக்கிற்கு தான் பேசுவது சமுத்ராவா என்ற சந்தேகம் வந்தது.
காதிலிருந்து போனை எடுத்து பெயரை பார்த்து அவள்தானென்று உறுதி செய்தவன்
“நான் அனுப்பி வைக்கிறேன். கேட்குறேன்னு தப்பா நினைக்காத. நீ நல்லா தானே இருக்க?” என்று அவன் விசாரிக்க
“எனக்கு என்ன மாமா நான் நல்லா தான் இருக்கேன்.” என்றவளின் குரலில் அளவுக்கதிகமான உற்சாகமும் மகிழ்ச்சியும் இருந்ததை ஷாத்விக் உணர்ந்தான்.
அவள் பேச்சு அவனுக்கு குழப்பத்தை கொடுக்க
“நல்லா இருந்தா சரி தான். சரி நான் போனை வைக்கட்டுமா?” என்று ஷாத்விக் கேட்க
“மாமா ஒரு நிமிஷம்.” என்று அவள் தடுக்க
“சொல்லு.” என்று ஷாத்விக் கேட்க
“நீங்க சாப்பிட்டீங்களா?” என்று விசாரிக்க ஷாத்விக்கிற்கு நெஞ்சுவலி வராத குறைதான்.
“ஹே உண்மையை சொல்லு. நீ நல்லா தானே இருக்க? இல்லைனா சொல்லு நானே வந்து டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போறேன்.” என்ற ஷாத்விக் பதட்டமாக விசாரித்தான்.
அவனின் அந்த பதட்டத்திற்கும் காரணமிருந்தது.
அவன் அந்த வீட்டிலிருந்து வந்த பின் சமுத்ரா ஒருநாள் கூட அழைத்ததில்லை. இன்று அழைத்ததோடு சாப்பிட்டாயா என்று கேட்டால் அவனும் என்னதான் செய்வான்.
“எனக்கு எதுவும் இல்லை. பாவமேனு கேட்டா ரொம்ப தான். நான் போனை வைக்கிறேன்.” என்றவள் பட்டென்று அழைப்பை துண்டித்திவிட்டாள்.
“பார்த்தீங்களா பாப்பா உங்க அப்பாவை? பாசமா பேசுனா உடம்புக்கு முடியலையானு கேட்குறாரு.” என்று கண்திறக்காத கருவிடம் தன் கணவனை பற்றி புகார் அளித்துக்கொண்டிருந்தாள் சமுத்ரா.
மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இக்கதையின் எல்லா அத்தியாயமும் இருக்கும் லிங்க் வேண்டும் ஆசிரியரே. நன்றி