மறுபுறம் இந்திராணி அமராவதியிடம் எதையோ விசாரித்துக் கொண்டிருந்தார்.
“அண்ணி மாலதி கூப்பிட்டாளா?” என்று கேட்க
“ஆமா அண்ணி. ஏன் கேட்குறீங்க?” என்று அமராவதி கேட்க
“திடீர்னு சமுத்ரா எதுவும் சொல்லாமல் கிளம்பி போயிட்டா. பின்னாடியே போன ஷாத்விக்கும் கூப்பிடவே இல்லை அதான் மறுபடியும் ஏதாவது பிரச்சினையோன்னு கவலையாக இருக்கு.” என்று இந்திராணி கேட்க அமராவதியோ இப்போது சமுத்ராவை திட்டத்தொடங்கினார்.
“அவ மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கான்னு சத்தியமா தெரியல அண்ணி. ஏன்டா இந்த கல்யாணத்தை செய்து வச்சோம்னு இருக்கு. இவளால இப்போ ஷாத்விக்கும் நிம்மதியில்லாமல் இருக்கான். அடிச்சி திருத்துற வயசுல இருந்திருந்தா ஏதாவது செய்திருக்கலாம். ஆனா இப்போ அது கூட முடியல.” என்று அமராவதி எப்போதும் போல் புலம்ப
“அண்ணி இப்போ எதுக்கு அவளை வைறீங்க? இப்படி திடுதிடுப்புனு கிளம்புறான ஏதாவது காரணமில்லாமல் இருக்காது. இந்த கொஞ்சநாளாகவே சமுத்ரா எதுக்குமே முன்னாடி வரல. இரண்டு மூனு தடவை சின்னவங்க அனுப்பி தான் அவளை வரவச்சேன். அவ முகமும் நல்லா இல்லை.” என்று இந்திராணி சொல்ல
“என்ன இருந்தாலும் அவ புகுந்தவீடு இது. அது பத்திய நினைப்பே இல்லாமல் இப்படி கிளம்பிப்போறது சரியா? இப்படியே நீங்களும் அண்ணனும் பரிந்து பேசி தான் இப்போ அவ இப்படி நடந்துக்கிறா. ” என்று அமராவதி அங்கலாய்க்க
“அண்ணி சமுத்ரா பத்தி தெரிஞ்சும் நீங்களே இப்படி பேசலாமா? இதுவரைக்கும் அவ எதையாவது வாய் திறந்து சொல்லியிருக்காளா? கஷ்டமோ நஷ்டமோ தானே சமாளிக்கனும்னு நெனைக்கிறவ அவ. அவ ஷாத்விக்கை விரும்புனதை கூட நீங்க தெரிஞ்சிக்கலைனா நமக்கு தெரிஞ்சிருக்குமா? அப்படிபட்டவ அவ பிரச்சினையை எப்படி நம்ம கிட்ட சொல்லுவா? உங்க அண்ணா எப்பவும் சொல்லுற ஒரே விஷயம். சமுத்ராவை தனியா விட்டுடாதீங்கன்னு தான். இப்போ அவரும் இல்லைனு ஆன பிறகு அவளுக்கு அவ சுமையை இறக்கவைக்க யாரும் இல்லைனு அவ நெனைக்கக்கூடாது. அப்படி அவ நினைக்கத்தொடங்கிட்டானா அப்புறம் ஷாத்விக்கும் அவளும் எப்பவுமே சேர்ந்து வாழ முடியாது. எனக்கு ஷாத்விக் எவ்வளவு முக்கியமோ அதே அளவு சமுத்ராவும் முக்கியம். இரண்டு பேருக்கும் ஒருத்தர் மேல இன்னொருக்கு பாசமும் அதிகம். எல்லா பிரச்சினையும் சரியாகி அவங்க கூடிய சீக்கிரம் சேர்ந்து வாழ்வாங்ககிற நம்பிக்கை எனக்கு இருக்கு.” என்று இந்திராணி கூற அமராவதிக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
தன் அண்ணன் குடும்பமே தன் மகளிற்கு புகுந்த வீடாக அமைந்தது தன் மகள் ஏதோவொரு ஜென்மத்தில் செய்த புண்ணியமென்று நம்பினார் அமராவதி.
மறுபுறம் பல நாட்களுக்கு பிறகு உதய் மகிழினியை பார்க்க சென்றிருந்தான். சமுத்ரா ஊரிலிருந்து வந்துவிட்டதால் அவனது வேலைப்பளு சற்று மட்டுப்பட்டிருக்க இப்போது அவனின் நேர அட்டவணையில் ஓய்விற்கும் நேரமிருந்தது.
வேலையை முடித்துக்கொண்டு முனீஸ்வரன் வீட்டிற்கு வர அங்கு முனீஸ்வரன் தம்பதிகள் மட்டுமே இருந்தனர்.
மகிழினியை பற்றி விசாரிக்க அவள் இன்று சற்று தாமதமாக வருவதாக சொல்லிச்சென்றதை கூற சற்று நேரம் அவர்களோடு பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி தன் வீட்டிற்கு சென்றான்.
வீட்டிற்கு வந்தவனை அவனின் தந்தை
“என்னடா முடிவு பண்ணியிருக்க?” என்று கேட்க
“எதை பத்தி கேட்குறீங்கப்பா?”
“வேற எதை பத்தி… உன் கல்யாணத்தை பத்தி தான். இதோட நீ சொன்ன ஒரு மாசம் முடிஞ்சிடுச்சு. இன்னைக்கு நீ ஒரு முடிவு சொல்லலைனா இனி நான் கைகாட்டுற பொண்ணை தான் நீ கட்டிக்கனும்.” என்று அவரும் கூற உதய்யிற்கு தான் எரிச்சலாக இருந்தது.
பல நாட்களுக்கு பின் மகிழினியை பார்க்கச்சென்றவன் அவளை பார்க்கமுடியவில்லையே என்ற ஏமாற்றத்துடன் திரும்பியிருக்க இப்போது அவன் தந்தையின் பேச்சு கடுப்பாக இருந்தது. ஆனால் எதிர்த்து பேசினால் சண்டை மட்டும் மிஞ்சுமென்று அறிந்தவன் அமைதியாக இருந்தான்.
“என்னடா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ அமைதியாக இருந்தா என்ன அர்த்தம்?” என்று அவரும் குரலை உயர்த்த
“எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேணும்.” என்று உதய் சொல்ல
“இதுக்கு மேல என்னால எந்த டைமும் கொடுக்க முடியாது. அதது நடக்கவேண்டிய நேரத்துல நடந்தாகனும். எந்த காரணமும் இல்லாமல் நீ தள்ளிப்போடுறதை என்னால பார்த்துட்டு இருக்கமுடியாது.” என்று உதய்யின் தந்தை கூற
“நான் ஒரு பொண்ணை விரும்புறேன்.” என்று உதய் தன் மனதில் உள்ளதை சொல்ல
“அந்த பொண்ணு உன்னை விரும்புதா?” என்று உதய்யின் தந்தையும் கேட்க உதய்யிடம் பதிலில்லை.
“அந்த பொண்ணு யாரு?” என்று கேட்க மஹிழினியை பற்றி சொன்னான் உதய்.
“சீக்கிரம் பேசி ஒரு முடிவெடு.”என்று மட்டும் சொன்னவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
உதய்க்கு தான் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. மகிழினியிடம் எப்படி தன் மனதை தெரியப்படுத்துவதென்று உதய்க்கு புரியவில்லை. அவனுக்கு அவள் மீதுள்ள நேசம் அவளிடமும் உள்ளதா என்றே தெரியாத நிலையில் எப்படி அவளுக்கு இது பற்றி தெரியப்படுத்துவது என்று யோசித்தவனுக்கு எதுவும் பிடிபடவில்லை.
யோசனையோடு அமர்ந்திருந்தவனை அலைபேசியின் அழைப்பொலி கலைத்தது.
அலைபேசியை எடுத்து பார்த்தபோது அதில் மகிழினியின் பெயர் தெரிய தாமதிக்காது அழைப்பை எடுத்தான் உதய்.
“ஹலோ” என்று மறுபுறம் மகிழினியின் குரல்கேட்க
“சொல்லுங்க மகிழினி. வீட்டுக்கு வந்தாச்சா?” என்று உதய் கேட்க
“இன்னும் இல்லை உதய்”என்று மகிழினி கூற நேரத்தை பார்த்தான் உதய்.
“இன்னுமா இவென்ட் முடியல?”என்று உதய் சந்தேகமாக கேட்க
“இவென்ட் முடிஞ்சு அப்பவே கிளம்பிட்டேன்.ஆனா வர்ற வழியில வண்டி ரிப்பேராகி இடையில நின்றிருச்சு.” என்று மகிழினி கூற
“சரி லொகேஷனை சொல்லுங்க நான் உடனேயே கிளம்பி வரேன்” என்றவன் அவளிடம் விசாரித்தபடியே தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
உதய் அவள் சொன்ன இடத்திற்கு வர அங்கு அவளோடு இன்னும் மூவர் நின்றிக்கொண்டிருந்தனர்.
அது அவளோடு கூட வந்தவர்கள் என்று அறிந்துகொண்டவன் அவர்களுக்கு நன்றி கூறி அனுப்பிவைத்துவிட்டு மகிழினியை அழைத்துக்கொண்டு வண்டியை கிளப்பினான்.
வண்டியில் ஏறியதும்
“சாரி உதய். இந்த நேரத்தில் உங்களை தொந்தரவு செய்ததற்கு.” என்று மகிழினி மன்னிப்பு வேண்ட
“அதுக்கு என்ன? இதுவும் என்னோட கடமை தானே.” என்று உதய் ஒரு புன்னகையுடனேயே கூற
“இல்ல அது…” என்று மகிழினி இழுக்க
“மகிழினி நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.” என்று உதய் கூறி நிறுத்த மகிழினி அவனை கேள்வியாய் பார்த்தாள்.
“இதை இப்படி இந்த இடத்துல சொல்லுறது சரியா தப்பானு தெரியல. ஆனா இப்போ சொல்லனா இனி சொல்லவே முடியாமல் போயிடுமோனு பயமா இருக்கு.” என்று உதய் கூற மகிழினிக்கு தான் எதுவும் புரியவில்லை.
“என்ன விஷயம் உதய்?” என்று கேட்க காரை ஓரமாக நிறுத்தியவன் அவளை திரும்பி பார்த்து
“ஐயம் இன் லவ்” என்று மட்டும் சொன்னவன் அடுத்த வார்த்தைகளை முடிக்கவில்லை.
அந்த வார்த்தைகளை கேட்டு திகைத்த மகிழினியோ உதய்யை சிறு ஆர்வத்தோடு பார்க்க உதய்க்கோ வார்த்தைகளை எப்படி முடிப்பதென்று புரியவில்லை.
ஏதோவொரு வேகத்தில் சொல்லிவிடலாமென்று ஆரம்பித்தானே தவிரே மகிழினியின் பதிலை எதிர்கொள்ளும் தைரியம் அவனிடம் சுத்தமாக இல்லை.
சாதகமான பதில் வருமென்ற நம்பிக்கை இல்லாததால் அவனால் வார்த்தைகளை முடிக்கமுடியவில்லை.
“நிஜமாவா உதய்?” என்று மகிழினி அவனிடமிருந்து அடுத்த வார்த்தைகளை தெரிந்துகொள்ளும் நோக்குடன் கேட்க உதய்யோ ஆமென்று தலையை மட்டும் ஆட்டினான்.
“அவங்க யாருனு தெரிஞ்சிக்கலாமா?” என்று மகிழினி ஆர்வத்துடன் கேட்க அவளை திரும்பிபார்த்த உதய் நீ தானென்று சொல்லமுயன்ற நாவை அடக்கி
“சீக்கிரம் தெரிஞ்சிப்பீங்க.” என்று மட்டும் சொல்ல இப்போது மகிழினி முகத்திலிருந்த அனைத்து உற்சாகமும் எதிர்பார்ப்பும் வடிந்துபோனது.
மலரின் வார்த்தைகள் உதய் தன்னை விரும்புகிறானென்ற நம்பிக்கையை மகிழினிக்கு கொடுத்திருந்தது. ஆரம்பத்தில் உதய் மீது பெரிதாக எந்த உணர்வுகளுமில்லாத போதிலும் அவனுடன் பழகத்தொடங்கிய குறுகிய நாட்களில் அவனை அவளுக்கு பிடித்துபோனது. அது நட்பு என்று மட்டும் எண்ணியிருந்தவள் அவனை சந்திக்க முடியாத இந்த சில நாட்களில் அது காதல் என்று உணர்ந்துகொண்டாள்.
இன்றும் கூட அவள் கூட வந்தவர்கள் அவர்களோடு அவளை அழைத்து செல்லவதாக கூறியபோதிலும் உதய்யை சந்திப்பதற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டாள் மகிழினி.
இது எதுவும் தெரியாத உதய் தன் காதலுக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டான்.
அதற்கு பின் இருவருக்குமிடையில் எந்த பேச்சுவார்த்தையுமில்லாமல் போக அந்த பயணம் கனத்த அமைதியுடன் தொடர்ந்தது.
வீட்டில் மகிழினியை இறக்கிவிட்ட உதய் தலை அசைத்துவிட்டு வண்டியை கிளப்ப கார் சென்ற திசை வழியே பார்த்தாள் மகிழினி.
கார் அவளின் பார்வை வட்டத்திலிருந்து மறைய ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
மறுபுறம் சமுத்ரா மற்றும் ஷாத்விக்கின் விரிசலில் எந்தவித மாற்றமும் இல்லை.
ஷாத்விக் தனியறையொன்றை எடுத்து தங்கியிருந்தபடியே தன் புது வியாபாரத்துக்கான வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தான். புது வியாபாரத்துக்கான அனைத்து வேலைகளும் முடிந்ததும் தன் அன்னைக்கு அழைத்தான் ஷாத்விக்.
“ஹலோ அம்மா ஷாத்விக் பேசுறேன்.”
“சொல்லுடா நல்லா இருக்கியா? பொண்டாட்டியை பார்த்ததும் அம்மாவை மறந்துட்டியா?” என்று இந்திராணி கிண்டலாக கேட்க ஷாத்விக்கோ மனதினுள்
“ஆமா அப்படியே அவள பாத்துட்டாலும். இவங்க வேற இங்க நிலைமை தெரியாம ” புலம்பியவன்
“அதெல்லாம் இல்லை. வேலை விஷயமா வெளி வேலை கொஞ்சம் அதிகமா இருந்துச்சு. அதான் கூப்பிட முடியல. நீ நல்லா இருக்கியா? அத்தை நல்லா இருக்காங்களா? ” என்று விசாரிக்க
“நாங்க நல்லா இருக்கோம். என்ன விஷயம்?” என்று கேட்க
“அம்மா புது வியாபாரம் ஆரம்பிக்கிறதுக்கான எல்லா வேலையும் முடிஞ்சிது. நீ ஒரு நல்ல நாள் பார்த்து சொன்னா அன்னைக்கே புதுக்கடையை திறந்திடலாம்.” என்று கூற
“நான் ஜோசியர்ட்டா விசாரிச்சி தேதியை குறிச்சிட்டு சொல்றேன். நீயும் மருகளும் சந்தோஷமா தானே இருக்கீங்க?” என்று கேட்க
“என்ன திடீர்னு கேட்குறீங்க?” என்று ஷாத்விக் சந்தேகமாக கேட்க
“ஏன் நான் கேட்கக்கூடாதா? உன்னை பெத்தவளுக்கு அந்த உரிமை கூட இல்லையா?” என்று இந்திராணி கேட்க
“கேளுங்க கேளுங்க. நல்லா கேளுங்க. அதை உங்க மருமககிட்டயும் கேளுங்க. சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் பிறகு கூப்பிடுறேன்.”என்றவன் அழைப்பு துண்டித்துவிட்டு
“ஆளாளுக்கு நம்மளை உருட்டி மிரட்டி கெஞ்சுறாங்களே தவிர அவகிட்ட யாரும் பேசமாட்டேங்கிறாங்க.” என்று புலம்பியபடி கிளம்பினான்.